Arts
10 நிமிட வாசிப்பு

தமிழர் தொடர்பாக பலரும் அறிந்திருந்த 5 பிராமிக் கல்வெட்டுக்கள்

October 10, 2022 | Ezhuna

இலங்கைத் தமிழர்களுக்கு 2500 ஆண்டுகளுக்குக் குறையாத வரலாறு மற்றும் வழிபாட்டு பாரம்பரியம் உள்ளது. பண்டைய இலங்கைத் தமிழர் பற்றி இதுவரை பலரும் அறிந்திராத, இதுவரை வெளிச்சத்துக்கு வராத, அரிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக இலங்கையில் ‘பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர்’ எனும் இவ்வாய்வு அமைகிறது. இலங்கையில் வாழ்ந்த தமிழர் பற்றிய முக்கிய சான்றாக விளங்குவது 2300 ஆண்டுகளுக்கு முன்பு கற்குகைகளில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களாகும். இவ்வாறான ஐந்து பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் காணப்படுகின்றன. அந்த கல்வெட்டுக்களில் தமிழர்கள் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட விடயங்களை இக்கட்டுரைத்தொடர் வெளிப்படுத்துகின்றது. அத்தோடு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு வேலைத் திட்டத்தில், இலங்கையில் காணப்படும், 1500 பிராமிக் கல்வெட்டுகளை மீள்வாசிப்பு செய்ததன் பயனாக வெளிக்கொணரப்பட்ட பல்வேறு அம்சங்களை ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்துவதாகவும் இத்தொடர் அமைகிறது. இவ் ஆய்வில் தமிழர் பற்றி கூறும் மேலும் பல பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அத்துடன் சோழர் காலத்திற்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 600 சிங்களக் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து அவற்றிலும் தமிழர் பற்றிக் கூறப்பட்டுள்ள பல விபரங்கள் பற்றியும் இத்தொடர் கட்டுரை கூறுகிறது.

“தமெத”எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ள ஐந்து கல்வெட்டுக்களும் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம், வடமாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் பெரிய புளியங்குளம், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் குடுவில், மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுக்கள் பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் பொறிக்கப்பட்டவையாகும். 

தமிழர் எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ள இவ் ஐந்து கல்வெட்டுக்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் குடும்பத் தலைவன் பற்றிய அனுராதபுரம் கல்வெட்டு

அனுராதபுரம் புராதன நகரில் உள்ள அபயகிரி விகாரைப் பகுதியில் தமிழ் குடும்பத் தலைவன் பற்றிய ஒரு பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. அபயகிரி தூபியின் மேற்குப் பக்கத்தில் சுமார் 300 மீற்றர் தூரத்தில் சில கற்பாறைகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு பாறையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.  

படிக்கட்டு போன்ற ஆசனம்

பொ. ஆ. மு. 1ஆம், 2ஆம் நூற்றாண்டுகளில் அனுராதபுர நகரில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் வணிகர் குழுவொன்று இந்நகரத்தில் ஒரு முக்கிய கட்டிடமொன்றை அமைந்திருந்தது. வணிகக் குழுவினரின் அங்கத்தவர்கள் கூடி வர்த்தகம் சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து, கலந்துபேசி தீர்மானங்கள் எடுக்கும் ஒரு வர்த்தக அலுவலகமாக இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இக்கட்டிடம் இயற்கையாக இங்கு அமைந்திருந்த பாறையை நன்கு செதுக்கி அதை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 35 அடி நீளமும், தரை மட்டத்தில் இருந்து 10 அடி உயரமும் கொண்ட ஒரு பாறையில் மூன்று நிலைகளில் படிகள் செதுக்கப்பட்டுள்ளன. முதலாவது நிலையில் உள்ள பாறை தட்டையானது. தரை மட்டத்தில் இருந்து 3 அடி உயரமான இந்தப் பாறையில் 20 அடி நீளமும், 4 அடி அகலமும், இரண்டரை அடி உயரமும் கொண்ட கற்பாறை வெட்டி எடுக்கப்பட்டு சமதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தளத்தின் முன்பக்கம் சதுர வடிவிலும், பின்பக்கம் வட்ட வடிவிலும் கம்பங்கள் நடுவதற்காக 6 குழிகள் வெட்டப்பட்டுள்ளன. சமதளத்தின் பின்பக்கம் உள்ள சுவரில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நிலை சமதளம் வெட்டப்பட்டுள்ள பாறையில் இருந்து 3 அடி உயரத்தில் காணப்படுகிறது. இது சுமார் 10 அடி நீளமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட நீளமான படிக்கட்டு  போன்று ஆசனம்  செதுக்கப்பட்டுள்ளது. இது சிலர் அமர்வதற்காக அமைக்கப்பட்ட பகுதியாகும்.

மூன்றாவது நிலை இரண்டாவது நிலையின் வலது பக்கத்தில் சுமார் 4 அடி உயரத்தில் காணப்படுகிறது. இது சுமார் 15 அடி நீளம் கொண்ட படிக்கட்டு போல் ஆசனம் செதுக்கப்பட்டுள்ளது. இதுவும் சிலர் அமர்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. 

கம்பங்கள் நாட்டப்படுவதற்காக பாறையில் தோண்டப்பட்டுள்ள சதுர வடிவான குழிகள்

பாறையின் அடி முதல் உச்சி வரை இரண்டு பக்கங்களிலும், நடுப்பகுதியிலும் கம்பங்கள் நடுவதற்காக சதுர வடிவில் 15 குழிகள் வெட்டப்பட்டுள்ளன. பாறையின் உச்சியில் உள்ள மேற்பரப்பு இயற்கையிலேயே கரடு முரடான சமதளமாக அமைந்துள்ளது.   

இப்பாறையின் மீது கம்பங்கள் நடப்பட்டு கூரை அமைக்கப்பட்டிருந்தது. இக்கூரை பிற்காலத்தில் அழிந்து போயுள்ளது. இருப்பினும் அடித்தளமான பாறை இன்றும் நல்ல நிலையில் காணப்படுகின்றது.

செதுக்கப்பட்ட பாறையில் உள்ள இப்படிக்கட்டுக்கள் வணிக அதிகாரிகளினதும், அங்கத்தவர்களினதும் ஆசனங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு அதிகாரிக்கும் தனித்தனி ஆசனங்கள் நிரந்தரமாகவே அமைக்கப்பட்டுள்ளன. இப்படிக்கட்டுகளில் அமரவேண்டிய அதிகாரிகளின் பெயர்கள் பாறைப் படிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுக்களுக்கு கீழே பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டு ஒரு தமிழ்க் குடும்பத் தலைவன் பற்றியதாகும்.

இக்கல்வெட்டின் வாசகம் பின்வருமாறு, “இல்லுப் பரதஹி  தமெத சமனே கரிடே தமெத கஹபதிக்கன பசதெ சகச அசன நசடச அசன க.. .. .. திசஹ அசன .. .. .. அசன குபிர சுஜதஹ நவிக கரவஹ அசன” என்பதாகும்.

தமிழ் குடும்பத் தலைவனின் மடம் பற்றி குறிப்பிடும் அனுராதபுர கல்வெட்டு

இதை பேராசிரியர் பரணவிதான “The Terrace of the Tamil house holders caused to be made by the Tamil Samana of Ilubarata The seat of Saga The seat of Nasata The seat of Ka…Tissa The seat of Kubira Sujata The seat of Karava the mariner” என மொழி பெயர்த்துள்ளார்.

இது “இல்லு பரதனான தமிழன் சமன மூலம் அமைக்கப்பட்ட தமிழ் குடும்பத் தலைவனின் மடம். சகவின் ஆசனம், நசடவின் ஆசனம், க…திசனின் ஆசனம், .. .. ..ஆசனம், குபிர சுஜாதாவின் ஆசனம், கப்பலோட்டி கரவனின் ஆசனம்  எனப் பொருள்படுகிறது. இக்கல்வெட்டு Inscriptions of Ceylon-Volume-1 எனும் நூலில் 94 வது கல்வெட்டாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

        இக்கல்வெட்டில் இரண்டு இடங்களில் தமிழர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “தமிழன் சமனன்” என முதலாவதாகவும், “தமிழ் குடும்பத் தலைவன்” என இரண்டாவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் கட்டிடம் அதி முக்கியத்துவம் வாய்ந்த தமிழர்களின் பாரம்பரியச் சின்னமாகும்.

        இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட காலங்களில் தமிழர்களால் அமைக்கப்பட்ட கட்டிடத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை தமிழ் நாட்டில் கூடக் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் அது இலங்கையில் கிடைத்துள்ளபடியால் இது அதி முக்கியத்துவம் வாய்ந்த தமிழர்களின் கட்டிடமாகக் கருதப்படுகிறது. மேலும் இலங்கையிலுள்ள தமிழர் பாரம்பரியச் சின்னங்களில் மிகப்புராதன சின்னமாகவும் இது கருதப்படுகின்றது. இதன் மூலம் அனுராதபுர நகரில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் தமிழர்  வாழ்ந்தது பற்றி ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

14118 பார்வைகள்

About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)