Arts
18 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 11

April 13, 2024 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

ஹண்டி ஞாபகார்த்த நூலகம் (பரி.யோவான் கல்லூரி)

1818 ஆம் ஆண்டு C M S Mission மதப் பணிக்காக இலங்கைக்கு வருகைதந்த வண. ஜோசப் நைட் (Rev. Joseph Knight) அவர்கள் நல்லூரில் வீடு ஒன்றைக் கொள்வனவு செய்து தனது மதக் கல்விப் பணியைத் தொடர்ந்த நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் பரி. யோவான் கல்லூரி (St. John’s College) உருவாகுவதற்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. 

வண. ஜோசப் நைட் அவர்கள் நல்லூர் ஆங்கில செமினரியை (Nallur English Seminary) மார்ச் 1823 இல் ஏழு மாணவர்களுடன் தனது நல்லூர் இல்லத்தில் தொடக்கி வைத்தார். விவிலிய நூல் வாசிப்பே அங்கு பிரதானமான பாடமாக இருந்தது. மேலதிகமாக மதச்சார்பற்ற பாடங்களும் அங்கு போதிக்கப்பட்டன. 

அடுத்த ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது. அவ்வாண்டு வண. வில்லியம் அட்லி (Rev. William Adley)  அவர்கள் இலங்கை வந்து வண. ஜோசப் நைட் உடன் செமினரியின் கல்விப் பணியில் இணைந்து கொண்டார். 1825 இல் செமினரியின் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டார். 1826 இல் மாணவர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது. 1839 இல் வண. வில்லியம் அட்லியின் துணைவியார் மரணமடைந்ததும் அவ்வாண்டே அவர் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். 1841 இல் அவர் இலங்கைக்குத் திரும்பி வந்தபோதும் பின்னாளில் கல்விப் பணிகளில் ஈடுபடவில்லை.

இக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு தொகுதி நூல்களுடன் சிறிய நூலகமொன்றும் போர்த்துக்கேயருடைய பழைய ஆலயமாக இருந்த ஒரு கட்டடத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்தது. பழைய தேவாலயம் 1859 இல் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் கட்டப்பட்டது. 1862 ஆம் ஆண்டு வண. ரொபர்ட் பர்கிற்றர் (Rev. Robert Pargiter) அவர்கள் புனருத்தாரணம் செய்து நூலகத்திற்கென ஒரு பெரிய மண்டபத்தையும் தாழ்வாரத்தையும் அக்கட்டடத்தில் ஒதுக்கினார். 

இந்நூலகத்தை மேம்படுத்துவதற்காக 1890 ஆம் ஆண்டு பாடசாலை நூலகக் குழுவொன்று (School Library Association) உருவாக்கப்பட்டது. 

1891 இல் தமது கல்வி நிலையத்துக்கு பரி. யோவான் கல்லூரி (St. John’s College) என்று பெயரிட்டனர். 

1899 ஒக்டோபர் 13 இல் பாடசாலையின் பிரதான மண்டபக் கூரை இடிந்து வீழ்ந்தது. இதனால் பாடசாலைக் கட்டடம் மீண்டும் சேதமடைய இக்காலகட்டத்தில் அதிபராக இருந்த வண. ஜாக்கொப் தொம்சன் (Rev. Jacob Thomson), தனது பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடம் மரங்களையும் கட்டடப் பொருட்களையும் அன்பளிப்பாகப் பெற்று கட்டடத்தை மேலும் திருத்தம் செய்தார். இக்காலத்தில் தலைமை ஆசிரியராக இருந்த வண. சீ.சீ. ஹண்டி (Rev. C.C.Handy) அவர்கள் நூலகத்திற்கு தனியானதொரு கட்டிடம் அவசியம் என்று உணர்ந்து இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். 

இக்கல்லூரியின் தலைமை ஆசிரியர் (1889-1908) பதவி வகித்தவரும் இக்கல்லூரியின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவருமான வண.சீ.சீ. ஹண்டி அவர்களின் ஞாபகார்த்தமாக  நூலகம் அமைப்பதற்காக 1908 ஆம் ஆண்டு நிதிக் குழுவொன்று அமைக்கப்பட்டது. இக் குழுவின் முயற்சியால் ரூபா 450.55 நிதி சேகரிக்கப்பட்டது. அத்துடன் வண.சீ.சீ. ஹண்டி குடும்பத்தினரும் மேலதிகமாக அன்பளிப்புகளை வழங்கினர். 

1913 ஆம் ஆண்டு  வண.சீ.சீ. ஹண்டி அவர்களின் சகோதரரான கலாநிதி ஜே.எம். ஹண்டி (Dr. J.M.Handy) அவர்களால் தனது சொந்தச் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட Handy Memorial Library கல்லூரி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் 500 இற்கும் அதிகமான நூல்களையும் அவர் தான் வாழ்ந்து வந்த சிங்கப்பூரிலிருந்து ஹண்டி ஞாபகார்த்த நூலகத்திற்கென அனுப்பிவைத்திருந்தார். 

அன்றாட சமூக வாழ்வின் ஏற்ற இறக்கங்களுடன் ஹண்டி ஞாபகார்த்த நூலகம் தன் தொடர் இருப்புக்காகப் போராடியே வந்துள்ளது. இந்த நூலகத்தின் காலக்கிரம வளர்ச்சி பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை அதிகளவில் காண முடியவில்லை.

st.jhon's

1980 களின் பின்னாளில் போர்ச் சூழல் காரணமாக யாழ்ப்பாண நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஷெல் வீச்சு, குண்டுவீச்சுத் தாக்குதல்களால் பல கட்டிடங்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளின் போது பரி. யோவான் கல்லூரியும் அதன் நூலகமும் பாதிப்படைந்தன என அறியமுடிகின்றது. நூல்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுசெய்யும் நோக்கில், செப்டெம்பர் 1996 இல் 430 நூல்களை ஏசியா பவுண்டேஷன் நிறுவனம் அன்பளிப்பாக வழங்கியிருந்தது. 

எட்டு ஆண்டுகளாக செயலிழந்திருந்த சிறுவர் நூலகப் பகுதி 2003 ஜுன் 16 அன்று மீளத் திறந்து வைக்கப்பட்டது. 

இவ்வாறான வரலாற்றைக் கொண்ட நூலகமானது தற்போது சுமார் 20,000 நூல்களை தன்னகத்தே கொண்டு வளர்ச்சிபெற்றுக் காணப்படுகின்றது. 

யாழ்ப்பாணத்தில் ஏட்டுப் பிரதிகளின் வரலாறு

அச்சியந்திரத்தின் அறிமுகம் ஜேர்மனியரான ஜோஹனஸ் கூட்டன்பேர்க் (Johannes Gutenberg 1400-1468) அவர்களால் 1455 இல் கூட்டன்பேர்க் விவிலியத்தின் (Gutenberg Bible) அச்சுப்பதிப்புடன் ஆரம்பமாகியது. அதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே எகிப்தியர்கள் நைல்நதி தீரத்தில் பப்பைரஸ் புற்களைக் கொண்டு பத்திரிகைத்தாள் (பப்பைரஸ்) உற்பத்தித் தொழில்நுட்பத்தை கண்டறிந்திருந்தார்கள். சீனர்களும் அச்சுக்கலையை அறிந்துவைத்திருந்தார்கள். இத்தகைய பல நூல்கள் அண்மையில் திபெத்திய மடாலயங்களில் கண்டெடுக்கப்பட்டதை இத்தொடரின் முதல் பதிவில் தெரிவித்திருக்கிறேன். 

gutenberg

ஜோஹனஸ் கூட்டன்பேர்க் பிறப்பதற்கு முன்னரே நாணற் புல்லைக் காயவைத்து செய்யப்பட்ட தட்டுகள், மட்பாண்டங்கள், ஆட்டுத்தோல், மாட்டுக் கன்றுத் தோல், கற்பலகைகள், என்பவற்றின் வழியாக தென்னாசிய முன்னோர்கள் தமது தகவல்களை அடுத்த தலைமுறையினருக்குப் பதிவுசெய்து கடத்தி வந்துள்ளார்கள். 

கருங்கற்பாறைகள் அற்ற, யாழ்ப்பாணத்தில் எமது முன்னோர்களுக்கு கைவரப்பெற்றது பனை ஓலைச் சுவடிகளாகும். இன்று புத்தகப் பதிப்பும், விற்பனையும் ஒரு தொழில்துறையாக வளர்ந்துள்ளதைப் போலவே அன்றும் ஏட்டுப் பிரதிகளை உருவாக்குவதும், சந்தைப்படுத்துவதும் ஒரு குடிசைக் கைத்தொழிலாக வழக்கிலிருந்துள்ளது. பனந்தொழில் வல்லுநர்கள், கொல்லர்கள், தச்சர்கள், ஏடு எழுதுவோர் ஆகியோர் இத்தொழிலின் பங்காளிகளாயிருந்தனர். 

பனையோலைகளை வெட்டி அவற்றின் நார் பிரித்து, அளவாக நறுக்கி, களங்கமற்ற ஏடுகளாக்கி, துளையிட்டு, பதப்படுத்தி வழங்கும் பணியை பனந்தொழில் வல்லுநர்கள் மேற்கொண்டனர். இது அக்காலத்தில் லாபகரமான வர்த்தகமாகவும் இருந்துள்ளது. ஏடெழுதும் எழுத்தாணிகளைச் செய்வதற்கு கொல்லர்கள் பயிற்சி பெற்றிருந்தனர். எழுத்தாணிகளின் கைவினைத் தரத்திற்கேற்பவும், பயன்படுத்தப்பட்ட உலோகத்திற்கேற்பவும் பல்வேறு விலைகள் எழுத்தாணிகளுக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. ஒரு முனையில் கத்தியுடன் இணைக்கப்பட்ட எழுத்தாணிகளின் விலை அதிகமாக இருந்துள்ளன. தச்சுத் தொழிலாளர்கள் ஏடுகளுக்கான சட்டகங்களை (சட்டப் பலகைகளை) கலை நுணுக்கத்துடன் உருவாக்குவதில் திறமைபெற்றிருந்தார்கள். 

‘யாழ்ப்பாணத்தில் ஏட்டுப் பிரதிகளின் தோற்றமும் பயன்பாடும்’ என்ற தலைப்பில் கலாநிதி எஸ். ஜெபநேசன் அவர்களால் எழுதப்பட்ட விரிவான கட்டுரையொன்று யாழ்ப்பாணத்தில் பயன்பாட்டிலிருந்த ஏட்டுச் சுவடிக் கலாச்சாரம் பற்றி சுவையான பல தகவல்களை எமக்கு வழங்குகின்றது (நன்றி: கருத்தூண் சிறப்பு மலர் 2005-2015: பக்கம் 88-94).

‘ஏடுசாத்துதல்’ என்ற மரபு பற்றி அவர் பின்வருமாறு அக் கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

“ஏடு சாத்துதல் என்பது தொகுக்கப்பட்ட ஏட்டுச் சுவடியில் இருந்து ஒருவர் ஓலையொன்றைத் தெரிந்து வாசித்தலாகும். பெரும்பாலும் மகாபாரத ஏட்டுப் பிரதியே ஏடு சாத்துதலுக்குப் பயன்படுத்தப்பட்ட சுவடியாகும். உதாரணமாக ஒருவர் தேர்ந்து எடுத்த சுவடியில் பாஞ்சாலி துகிலுரிதல் பற்றிய செய்தி வந்தால் அவருக்குக் கெட்டகாலம் என்றும், அர்ச்சுனனுடைய பெருவெற்றி பற்றிய செய்தி வந்தால் அவருக்கு நல்ல காலம் வருகின்றது என்றும் நம்பி வந்தார்கள்”.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மத மாற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தவென யாழ்ப்பாணம் வந்த மேலைநாட்டு மிசனரிகளின் மதத்தொண்டர்கள் ஓலைச் சுவடிகளையே தமது மதப்பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினார்கள் என்பதை அறியமுடிகின்றது. கிறிஸ்தவ வேதாகமத்திலுள்ள வசனங்களை ஓலைகளில் எழுதி, அவற்றைக் காவிக்கொண்டு குதிரைகளில் சென்று பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வழக்கம் அன்றைய யாழ்ப்பாணத்தில் இருந்து வந்துள்ளது. 

‘We are now in want of Tamil testaments for those under our care, and are now committing portions of Scripture written upon Ola’ (Missionary Herald, February 1818: p.90)

இந்தியாவில் 1577 இல் அச்சு வடிவில் நூல்கள் வெளிவரத் தொடங்கிவிட்ட போதிலும், சாமானிய பொதுமக்கள் மத்தியில் அச்சியந்திரம் அவ்வேளையில் பிரபல்யமடையவில்லை. ஆங்கிலேய காலனித்துவவாதிகள் தமிழ்நாட்டை ஆட்சிசெய்யத் தொடங்கியதும் தாங்கள் மாத்திரம் அச்சியந்திரத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஆனால் 1835 ஆம் ஆண்டுதான் அனைத்து மக்களும் அச்சியந்திரத்தைப் பயன்படுத்தி நூல்களை உருவாக்கலாம் என்று அனுமதி வழங்கினார்கள். 

யாழ்ப்பாணத்தில்  அச்சகங்களின் பயன்பாடு தொடர்பான வரலாறு தமிழகத்திலிருந்து சற்றே வேறுபட்டது. இலங்கையை தமது காலனித்துவப் பிடிக்குள் கொண்டவந்த ஆங்கிலேயர்கள் அங்கிருந்த அமெரிக்க மிஷனரிகளின் சமயப் பணிக்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்தனர். 1820 இல் அவர்களது கொள்கையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அப்போது தேசாதிபதியாகப் பதவியேற்று வந்திருந்த எட்வேர்ட் பாண்ஸ் அவர்களின் நிர்வாகக் காலத்தில் தான், 1820 இல் கண்டி – கொழும்பு தரைப் போக்குவரத்துக்கான வீதி அமைக்கப்பட்டது. 1821 இல் அம்பேபுஸ்ஸவிலிருந்து இவர் ஒவ்வொரு மாகாணத்தின் தலைநகரங்களையும் இணைக்கத் திட்டமிட்டிருந்தார். ஏனோ அவர் அமெரிக்க மிஷனரிகள் தொடர்பாக நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. 

1820 இல் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய அமெரிக்க மிஷனரிமாருக்கு அவர்களுடைய தாய்நாட்டிலிருந்து ஒரு அச்சு இயந்திரம் வந்து சேர்ந்தது. இதனைக் கொண்டுவந்தவர் ஜேம்ஸ் கரற் என்ற அமெரிக்க அச்சகராவார். ஆனால் அமெரிக்க மிஷனரிமார் அச்சகமொன்றை நடத்துவதற்கான அனுமதியை எட்வேர்ட் பாண்ஸ் வழங்கவில்லை. வேறு வழியின்றி அந்த அச்சியந்திரம் நல்லூரில் இருந்த ஆங்கிலேய திருச்சபைத் தொண்டர்களுக்கு விற்கப்பட்டது. 1834 இல் நிலைமை மாறியது. பிரித்தானிய அரசு, அமெரிக்கர்களும் அச்சியந்திரத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கியது. அதன் பின்னர் 1834 இல் அமெரிக்க மிஷனரியினர் தமது முதலாவது அச்சகத்தை மானிப்பாயில் நிறுவினார்கள். இதன் நிறுவுநர் ஈஸ்மன் மைனர் ஆவார். இதுவே யாழ்ப்பாணத்தில் தோன்றிய முதலாவது அச்சகமாகும். அச்சகம் செயற்படத் தொடங்கியதும் ஏடுகள் அச்சுவாகனமேறி நூலின் பிரதிகள் அதிகரித்து, தனிப்பிரதியின் விலைகள் குறைவடையலாயின. 

மயிலை சீனி. வெங்கடசாமி அவர்கள் 1962 இல் வெளியிட்ட ‘பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்’ என்ற நூலிலே (பக்கம் 94) பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

“அச்சுப் புத்தகங்கள் வந்தவுடனே ஏட்டுச் சுவடிகள் மறைந்துவிடவில்லை. 19 ஆம் நூற்றாண்டிலே ஏட்டுச் சுவடிகளும் அச்சுப் புத்தகங்களும் இரண்டுமே வழக்கத்தில் இருந்து வந்தன. பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெல்ல மெல்ல ஏட்டுச் சுவடிகள் மறைந்து அச்சுப் புத்தகங்கள் நிலைபெற்றன”.

யாழ்ப்பாணத்தில் மக்கள் அதிகமாகப் பயன்படுத்திய ஏட்டுப் பிரதி கந்தபுராணமாகும். மகாபாரதம், சோதிட நூல்கள், சித்த வைத்திய நூல்கள், பஞ்சாங்கம் என்பனவற்றையும் ஏட்டுப் பிரதிகளாகப் படித்தும் பாதுகாத்தும் வந்துள்ளனர். ஆனால் அச்சிடப்பெற்ற நூல்கள் ஓலைச் சுவடிகளைவிட மிகவும் குறைந்த விலையிலேயே பலராலும் வாங்கக்கூடியதாக இருந்துள்ளது. 1835 ஆம் ஆண்டிற்கு முன்பு பத்துப் பவுணுக்கு (150 ரூபா) விலைக்கு வாங்கப்பட்ட ‘சதுரகராதி’ என்ற ஏட்டுச் சுவடி அச்சுவாகனம் ஏறிய பின்னர் அச்சுப்புத்தக வடிவில் இரண்டு ரூபாவுக்கு விற்கப்பட்டதாக அறிய முடிகின்றது. 

கலாநிதி எஸ். ஜெபநேசன் தனது கட்டுரையில் ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

“யாழ்ப்பாணத்திலே ஏட்டுச் சுவடிகளின் விலை எவ்வாறு இருந்தது என்பதனை ஈ.கே. ஜேசுதாசன் என்னும் மதகுரு தாம் எழுதிய ‘ரி.பி.ஹண்ட் என்பவரின் வாழ்க்கை வரலாறு’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். பிள்ளைகள் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் தகப்பனார் தம் காதுகளிலிருந்த ஒரு சோடி கடுக்கனை கழற்றி விற்று ஒரு ‘பாரத ஏடு’ வாங்கிக் கொடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார். திண்ணைப் பள்ளிக்கூடங்களை நடாத்திய உபாத்தியாயர்களும் ஏட்டுச் சுவடிகளை உருவாக்கி மாணவர்களுக்கு விற்றதாகத் தெரிகின்றது. ஏடுகளை உருவாக்குவதும் விற்பதும் சில குடும்பங்களின் பரம்பரைத் தொழிலாகவும் இருந்தது. ஓரறிஞர் பயன்படுத்திய ஏடுகளை அவருடைய அந்தியேட்டியின் போது தண்ணீரில் அல்லது கடலில் ஓடவிடுவது மரபாக இருந்தது”.

மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் ஏட்டுப் பிரதிகள் சம்பந்தமான விடயத்தில் தமிழகத்தில் சில குடும்பத்தினர் செய்த வேலைகளையும் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். 

“புலவர் பரம்பரையில் வந்தவர்கள் எல்லோரும் புலவர் அல்லர். அந்தப் பரம்பரையில் கல்வியருமையறியாத பதர்களும் இருந்தனர். இவர்கள் நூல்களின் பெருமையறியாமலும் பழுதான அருமை நூல்களைப் பிரதி எழுதி வைக்காமலும் இருந்தனர். அன்றியும் பதினெட்டாம் பெருக்கில் தம் வீட்டு ஏடுகளைக் கொண்டுபோய் வெள்ளத்தில் போடுகின்ற வழக்கமும் இவர்களிடம் இருந்தது. சிதைந்துபோன ஏட்டுச் சுவடிகளை, அவற்றின் அருமை தெரியாமல் அடுப்பில் போட்டு நெருப்பில் இட்டுக் கொழுத்தியவர்களும் உண்டு. இவ்வாறு அழிந்துபோன நூல்கள் பல. அக்காலத்தில் அச்சியந்திரம் இருந்து பழைய நூல்கள் அச்சிடப்பட்டிருந்தால் பல நூல்கள் அழிந்திராமலும் உயிர் பெற்றிருக்கும்.”

மயிலை சீனி வெங்கடசாமி அவர்களின் தமிழக அனுபவத்தில் எழுந்த ஆதங்கம் இன்றைய காலகட்டத்தில் வாழும் ஈழத்தவரின் கதைகளைக் கேட்கும் பொழுதெல்லாம் எனக்கும் ஏற்படுவதுண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமது ஏட்டுப் பிரதியை மீள எழுதிப் பாதுகாக்க பெரும் பணச்செலவு ஏற்படும் என்ற நிலையில் பாதுகாக்கத் தவறியுமிருக்கலாம். ஆனால் அச்சு ஊடகம் வளர்ச்சியடைந்திருக்கும் இந்த 21 ஆம் நூற்றாண்டில்கூட தமது நூல்களின் பிரதிகளை யாழ்ப்பாண மாவட்ட பிரதான நூலகங்களிலுள்ள சுவடிக் காப்பகப் பிரிவுகளிலோ, மின்வருடல் முறையில் பாதுகாத்து ஆவணப்படுத்திவைக்கும் நூலக இணையத்திலோ, லண்டனில் நான் பாதுகாத்துவரும் ஆவணக் காப்பகத்திலோ தாம் வெளியிடும் நூலின் ஒரு பிரதியை வழங்கிப் பாதுகாத்து வைக்கும் எண்ணம் இன்றைய எழுத்தாளர்களுக்கோ, ஆசிரிய வெளியீட்டாளர்களுக்கோ இல்லையே என்பதே எனது கவலையாகும். 

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய மற்றுமொரு சூழலையும் கலாநிதி எஸ். ஜெபநேசன் குறிப்பிடுகின்றார். 

“மேலைநாட்டு மதத் தொண்டர்களும் தமிழ் ஏட்டுச் சுவடிகளைப் பெற்று, படிப்பதிலும், பேணிப் பாதுகாப்பதிலும் ஆர்வமுடையவர்களாக இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏடுகளை விற்பதற்குத் தமிழ் மக்கள் விரும்பவில்லை. வட்டுக்கோட்டையில் பணியாற்றிய டானியல் புலவர் என்ற அமெரிக்கத் தொண்டர் தாம் கந்தபுராண ஏடொன்றினை ஒரு தமிழ் அறிஞரிடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும், அவரும் அதனை தாம் அவருக்கு விற்றதனைத் தெரியப்படுத்த வேண்டாம் எனக் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார். எனினும் மேலை நாட்டுத் தொண்டர்கள் சிறிது சிறிதாக பல தமிழ் ஏட்டுச் சுவடிகளைப் பெற்றுக்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மதத் தொண்டர்கள் தமது அறிவை வளர்த்துக்கொள்ள 1821 ஆம் ஆண்டிலேயே ஒரு தமிழ்க் கழகத்தை நல்லூரில் அமைத்திருந்தனர். இந்தக் கழகத்தில் கூட்டங்கள் மாதம் இருமுறை நடைபெற்றன. இங்கு ஒரு நூல் நிலையமும் இருந்தது. இந்த நூல் நிலையத்தில் தமிழ் ஏட்டுச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வந்தனவெனத் தெரிகின்றது (Winslow Mision, Missionary Hereald, 1831: p.6)”.

கலாநிதி ஜெபநேசன் மேலும் இது பற்றிக் குறிப்பிடுகின்றார். 

“யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய அமெரிக்க மதத் தொண்டர்கள் இங்கு காணப்பட்ட ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து ஒரு சம்பூரணமான பட்டியலை வெளியிட்டனர். இந்தப் பட்டியலில் 137 ஏட்டுச் சுவடிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இந்த நூல் 1839 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாகத் தெரிகின்றது. இதனை 1820 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த லீவை ஸ்போல்டிங் என்ற தொண்டரே தொகுத்து முடித்தார் எனத் தெரிகின்றது. இப் பட்டியலில் குறிப்பிடப்படாத வேறு பல ஏட்டுச் சுவடிகளும் இங்கு இருந்திருக்கலாம். அவற்றை யாரும் தொகுத்து வெளியிட்டதாகத் தெரியவில்லை. இந்தப் பட்டியலைப் பார்க்கின்ற பொழுது ஏட்டுப் பிரதிகளை எழுதுகின்றவர்கள் பல பிழைகளை விட்டிருப்பதாகத் தென்படுகின்றது. அவை பிரதி செய்தவர்களது பிழையா அல்லது அப் பட்டியல்களைத் தொகுத்த அமெரிக்கர்களது பிழையா என்பது புரியவில்லை. 

‘ஆசாரக்கொலை’, ‘திறிகடகம்’, ‘நாகபாச படலம்’, ‘கலிங்கத்துப் பறணி’, ‘கும்பகர்ணபல்லம்’, ‘சம்மதைப்பிள்ளைத் திருநாயம்’, ‘நற்கீரர் சிந்தாமணி’, ‘சம்மந்தமூர்த்தி புராணம்’, ‘உரிச்சுவடி கியக்கணக்கு’, ‘சமதம்’, ‘அமரகோசம் அமான’ என்பவை இதில் காணப்படும் பிழைகளுக்கு உதாரணங்களாகும். 

சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றுமே நூலாசிரியருக்கு கிடைக்கவில்லை. ‘தத்துவ விளக்கம்’ என ஒரு நூலைக் குறிப்பிட்டுள்ளார். இது ‘தத்துவக் கட்டளையாக’ இருந்திருக்கலாம். சங்க இலக்கியங்கள் பற்றி ஒரு குறிப்புமே இல்லை. இந்தப் பட்டியல் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட ஏட்டுச் சுவடிகளை அறிந்துகொள்வதற்கு ஓரளவு துணைபுரிகின்றது.” 

1823 இல் தொடங்கப்பட்ட வட்டுக்கோட்டைச் செமினரி (Batticotta Seminary) 1855 இல் மூடப்பட்டது. மூடப்படுவதற்காக வட்டுக்கோட்டை அமெரிக்கன் சிலோன் மிஷன் முன்வைத்த காரணம் “இந் நிறுவனம் இந்துக்களை மதமாற்றம் செய்து கிறிஸ்தவராக்குவதில் பின்னடைவைக் கண்டுள்ளது” என்பதாகும். இதற்கு அக்காலத்தில் நிலவிய ஆறுமுக நாவலர் அவர்களின் புத்தெழுச்சி இயக்கம் பெருமளவிற்கு காரணமாயமைந்ததாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

thamotharampillai

வட்டுக்கோட்டைச் செமினரியில் நீண்டகாலமாக இருந்த ஏட்டுச் சுவடிச்சாலையே பதிப்புச் செம்மல் சி.வை. தாமோதரம்பிள்ளையை உருவாக்கியதென்று கொள்ளலாம். சி.வை.தாமோதரம்பிள்ளை 1844 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைச் செமினரியில் சேர்ந்து ஆறு வருடங்கள் அறிவியல் துறையில் பயிற்சி பெற்றவர். அதன் பின்னர் 1852 இல் கோப்பாயில் போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார். அமெரிக்க மிசனரிமார் படித்துப் பாதுகாத்து வைத்த ஏட்டுச் சுவடிகளை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும் என்ற ஆவலை அவரது உள்ளத்தில் தோற்றுவித்தது வட்டுக்கோட்டைச் செமினரியே. 1857 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலிரண்டு பட்டதாரிகளாக சி.வை. தாமோதரம்பிள்ளையும் அவருடைய ஆசிரியர் கரொல் விசுவநாதபிள்ளையும் சிறப்புப் பெற்றனர். சி.வை.தா. அவர்கள் சென்னையில் மெதடிஸ்ட் மதப்பிரசாரகர் பீற்றர் பெர்சிவல் நடத்திய ‘தினவர்த்தமானி’யின் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் புதுக்கோட்டை நீதவானாக பதவியேற்றார். இக்காலகட்டத்தில் தான் அவர் ஏட்டுச் சுவடிகளை அச்சுவாகனமேற்றி புத்தகங்களுக்கு புதுவாழ்வினை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்தார். 

வட்டுக்கோட்டைச் செமினரி (Batticotta Seminary) 1855 இல் மூடப்பட்டபோதும் அங்கிருந்த அரிய சுவடிகளின் நூலகம் பாதுகாக்கப்பட்டு, பின்னாளில் அதே இடத்தில் 1872 இல் யாழ்ப்பாணக் கல்லூரி உருவாக்கப்பட்ட வேளையில் கல்லூரி நூலகத்தில் அதற்கான புதிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டது. 

jaffna colleage

பின்னாளில் வட்டுக்கோட்டை நூலகம் கல்வியாளர்களால் ஆசியாவின் சிறந்த கல்லூரி நூலகம் என்று போற்றப்பெற்றது. இக்கல்லூரி நூலகத்தில் ஆரம்பம் முதல் 1963 வரை திரு.கே. செல்லையாவும், 1963 முதல் 1974 வரை, அதாவது, இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிப் பிரிவையும், கல்லூரி நூலகத்தையும் சுவீகரிக்கும் வரை, திரு.ஆர்.எஸ். தம்பையாவும் இந்நூலகத்தை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வந்தனர். அதன் பின்னர் இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம் உருவானதன் பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம் யாழ்ப்பாண வளாக நூற்சேர்க்கையுடன் கலக்கப்பட்டது. 

இந்த நிகழ்வுகளை யாழ்ப்பாணக் கல்லூரியின் ‘உள்வீட்டுப் பிள்ளையாக’ இருந்த கலாநிதி எஸ். ஜெபநேசன் அவர்கள் கனத்த உள்ளத்துடன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

“1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிப் பிரிவு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் அமைப்பதற்காகச் சுவீகரிக்கப்பட்டது. இந்த நூல்நிலையத்தில் இருந்த அனைத்து நூல்களும் திருநெல்வேலியில் இருந்த பல்கலைக்கழக வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அப்படி எடுத்துச் செல்லப்பட்டபோது வழியில் மாயமாய் மறைந்தவை சில. திரு.ஆர்.எஸ். தம்பையாவும் யாழ்ப்பாண வளாகத்தின் உத்தியோகத்தரானார். இதன் பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரி இயக்குநர் சபை தமது நூல்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டது. 1974 ஆம் ஆண்டு சுவீகரிப்பு விதியின்படி அசையும் சொத்துக்கள் சுவீகரிக்கப்பட முடியாது என்று அற்றோனி ஜெனரல் (Attorney General) அறிவித்தார். ஆனாலும் நூல்கள் உடனடியாக வட்டுக்கோட்டைக்குத் திரும்பவில்லை. 

திரு.ஆர்.எஸ். தம்பையாவின் பதவியை உறுதி செய்ய நேர்முகப் பரீட்சை நடைபெற்றது. அப்பரீட்சையின் பின் திரு.ஆர்.எஸ். தம்பையா நிரந்தர நூலகராக நியமனம் செய்யப்படவில்லை. திரு.இ. முருகவேள் நிரந்தர நூலகராக நியமிக்கப்பட்டார். இவருடைய உத்தரவின் பேரில் யாழ்ப்பாணக் கல்லூரி நூல்கள் திரும்பவும் வட்டுக்கோட்டைக்கு அனுப்பப்பட்டன. 

1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையில் உள்நாட்டுப்போர் உத்வேகமடைந்தது. 1991 இல் இலங்கை இராணுவம் வட்டுக்கோட்டையைக் கைப்பற்றிவிடும் ஆபத்து தென்பட்டது. எமது நூல்கள் வட்டுக்கோட்டையிலிருந்து மானிப்பாய் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மீண்டும் நூல்களின் இடப்பெயர்வினால் வழியில் நூல்கள் மாயமாய் மறைந்தன. 1994 இல் மானிப்பாயிலிருந்து மீண்டும் வட்டுக்கோட்டைக்கு நூல்கள் வந்த சேர்ந்தன. மீண்டும் வழியில் பல இழப்புகள் நேர்ந்தன. ஆசியாவின் மிகச் சிறந்த கல்லூரி நூலகம் தொடர்ந்து செயற்படுகின்றது. ஆனால் இன்று அதன் வரலாறு கண்ணீர்க் காவியம்.”

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5252 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)