Arts
7 நிமிட வாசிப்பு

அரங்கேற்றப்பட்ட கபடநாடகம்

March 2, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டில் இந்திய வம்சாவழி தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத சிந்தனை 1918 களிலேயே தோன்ற ஆரம்பித்து விட்டது. ஆரம்பத்தில் அது ஒரு பொருளாதார ரீதியான பொறாமையாக இருந்தது. ஏற்றுமதி – இறக்குமதி தொழிலை மையமாகக் கொண்ட ஒரு பொருளாதாரத்தின் எழுச்சி காரணமாக கொழும்பு மாநகரம் சனத்தொகைப் பெருக்கம் அடைந்து பெரும் பொருளாதார மையமாக வளர்ச்சி அடைந்தது. கொழும்பு துறைமுகம்,  ரயில்வே திணைக்களம், அச்சுக் கூடங்கள், தபால் தந்தி திணைக்களம் மற்றும் மொத்த மற்றும் சில்லறை கடைகள் கொழும்பு புறக்கோட்டையில் பெருக்கம் அடைந்திருந்தன. ஆரம்பத்தில் 10 காசு 12 காசுக்கு கோப்பித் தோட்டங்களில் கூலி வேலை செய்ய மறுத்த சிங்களவர்கள் அதிக பண வருவாய் கிடைக்கிறது என்று தெரிந்ததும் ஏனைய தொழில்களில் ஈடுபட முன்வந்தனர். துறைமுகங்களிலும் ரயில்வேயிலும் அச்சுக் கூடங்களிலும் ஏனைய போக்குவரத்து துறைகளிலும் பொதுப்பணித்துறைகளிலும் அவர்கள் தொழிலில் ஈடுபடுவது அதிகரித்தது.

தேயிலைத்-தோட்டத்தொழிலாளிகள்-1

1918 களைத் தொடர்ந்து நாட்டில் சற்று பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது முதலில் வேலை இழந்தவர்கள் சிங்களவர்களாகவே காணப்பட்டனர். மாதாந்த நாளாந்த வருமானங்களை இழந்த அவர்கள் அப்போதைய தொழிற்சங்க தலைவராக இருந்த ஏ. ஈ. குணசிங்க என்பவரின் தலைமையின்கீழ் ஒன்றிணைந்து பொதுவாக இந்தியத் தமிழர்களுக்கு எதிராகவும் குறிப்பாக மலையாளிகளை நாட்டை விட்டு வெளியேறும்படியும் கோஷமிட்டனர். பணிப் பகிஷ்கரிப்புகளையும் மேற்கொண்டனர். இதுதொடர்பான நெருக்கடிநிலை முற்றிய போது சட்டசபையில் இவர்களை வெளியேற்ற தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. சுமார் 20 ஆயிரம் மலையாளிகள் வரை நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்திலிருந்து இந்திய தொழிலாளர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு விரிசலும், போட்டி பொறாமையும், பனிப் போரும் ஆரம்பமானது. இத்தகைய நிலைமையில் தான் ஏ. ஈ. குணசிங்க என்ற தொழிற்சங்கத் தலைவருடன் இணைந்து செயலாற்றி பல போராட்டங்களில்  பங்குகொண்ட கோ. நடேசய்யர் அவர்கள் ஏ. ஈ. குணசிங்கவுடன் அவரது இனவாத கொள்கையில் முரண்பட்டு அவரது தொழிற்சங்கத்தில் இருந்து பிரிந்து மலையகத்தில் தொழிற்சங்கம் ஆரம்பிப்பதற்காக அட்டன் நோக்கிச் சென்றார்.

ஏ. ஈ. குணசிங்கா

1930 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து வந்த உலக பொருளாதார பெருமந்த காலம் (World Economic Depression) இந்த நிலைமையில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. கொழும்பின் வர்த்தகமும் பொதுவாக நாட்டின் சகல விதமான வர்த்தக நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன.  உற்பத்திப் பொருட்களும் அவற்றுக்கான விலைகளும் கடும் வீழ்ச்சி அடைந்தன. நாட்டில் பஞ்சமும் பட்டினியும் ஏற்பட்டது. இருந்தாலும் தேயிலை பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கள தொழிலாளர்களும் விவசாயிகளுமாகவே இருந்தார்கள். இந்த நிலைமையை வெள்ளைக்காரர்களும் இந்திய வம்சாவழி தமிழர்களும் சேர்ந்து தமக்கு எதிராக ஏற்படுத்திய சூழ்ச்சியாகவே சிங்களவர்கள் கருதினார்கள்.

இதனை நியாயப்படுத்தும் வகையில் கொழும்பிலிருந்த சகல ஏற்றுமதி இறக்குமதி  வர்த்தக நடவடிக்கைகளும், தனியார் துறை நிறுவனங்களும், அரசாங்க காரியாலயங்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள்,  ஊழியர்கள், எல்லா இடங்களிலுமே இந்தியர்களே  இருந்தனர். இவற்றைத் தவிர கள்ளுத் தவறணைகள், சாராயத் தவறணைகள், சாப்பாட்டுக் கடைகள் என்பவை மலையாளிகளின் கைகளில் இருந்தன. இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிய ஏ. ஈ. குணசிங்க போன்றவர்கள் இந்தியத் தமிழர்களுக்கு எதிராக பெரும் துவேச பிரச்சாரங்களை செய்தார்கள். மலையாளிகளை  “கொச்சியான” என்று கொச்சைப்படுத்தி பிரச்சாரம் செய்தார்கள். இந்த நிலைமைகளுக்கு மத்தியிலேயே இந்தியாவின் பிரதமரான ஜவஹர்லால் நேரு இலங்கைக்கு விஜயம் செய்து அரசாங்க மட்டத்தில் சில அழுத்தங்களை ஏற்படுத்த முனைந்தார். எனினும் அவர் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் கொண்டுவந்து ஒட்டுமொத்தமாக அதன் இறைமைக்கு பாதிப்பு ஏற்படுத்த அவர் முற்படவில்லை. அது தனது ராஜதந்திர கொள்கைக்கு விரோதமானது என்று அவர் கருதினார். எனினும் அவர் கொழும்பில் இயங்கிய சகல சங்கங்களையும் இணைத்து இலங்கை இந்திய காங்கிரஸ் என்ற ஒரு பலமான அமைப்பை உருவாக்கியது ஒரு சாதகமான காய் நகர்த்தலாக அமைந்தது.

இவற்றினால் எல்லாம் ஒன்று திரண்ட ஒரு பாதகமான குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கக்கத்தான் செய்தது. அதற்குக் காரணம் 1947 ஆம் ஆண்டு பழைய சோல்பரி அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இடம்பெற்ற பொதுத் தேர்தலும் அதன் பெறுபேறுகளும் ஆகும். இந்த தேர்தலின்போது அப்போதுதான் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலின்போது மொத்த ஆசனங்களான தொண்ணூற்று ஐந்து ஆசனங்களில் நாற்பத்தி இரண்டு ஆசனங்களை மட்டுமே பெற்று சிறு கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசாங்கமொன்றையே அமைக்கக் கூடியதாக இருந்தது. இந்தக் கட்சிக்கு அப்போது இனவாத தலைவர்களாக உருவாகியிருந்த டி. எஸ். சேனாநாயக்க, ஜே. எல். கொத்தலாவல, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆகியோரே தலைமை வகித்தனர். அவர்களில் டி. எஸ். சேனாநாயக்க பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். இதேசமயம் இடதுசாரி கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, போல்ஷெவிக் மற்றும் லெனினிசக் கட்சி ஆகியன இணைந்து கலாநிதி என். எம். பெரேரா தலைமையில் எதிர்க்கட்சியை அமைத்தனர். இவைகள் முறையே 10, 3, 5, ஆகிய ஆசனங்களை பெற்றிருந்தன. சமசமாஜ கட்சிக்கு கலாநிதி என். எம். பெரேராவும் போல்ஷெவிக் லெனினிய கட்சிக்கு கொல்வின் ஆர். டி. சில்வாவும் தலைமை தாங்கினர்.

அதேசமயம் இலங்கை இந்திய காங்கிரஸ் மற்றும் அதன் தொழிற்சங்க கிளையும் இணைந்து அவர்கள் போட்டியிட்ட 8 ஆசனங்களில் 7 ஆசனங்களில் வெற்றி பெற்றிருந்தனர். அவர்கள் முறையே  எஸ். தொண்டமான், சி. வி. வேலுப்பிள்ளை, எஸ். எம். சுப்பையா, டி. ராமானுஜம், கே. குமாரவேலு, கே. ராஜலிங்கம் மற்றும் ஜி. ஆர். மோத்தா ஆகியோர் ஆவர். விரைவிலேயே ஜி. ஆர். மோத்தா காலமானதைத் தொடர்ந்து அவருடைய ஆசனத்துக்கு ஏ. அசீஸ் தெரிவானார். எனினும் மேற்படி தேர்தலில் இவர்கள் இலங்கை இந்திய காங்கிரஸ் போட்டியிடாத ஆசனங்களில் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றிபெறச் செய்தனர் என்பது பலரும் அறிந்த உண்மையாகும். இந்த விடயம் ஐக்கிய தேசிய கட்சியினர் மத்தியிலும் அதன் தலைவர்கள் மத்தியிலும் மிகுந்த ஆத்திரத்தையும் பய உணர்வையும் ஏற்படுத்தியிருந்தன. இவர்கள் முன்பு இலங்கை  தேசிய காங்கிரஸ் என்ற கட்சியில் இருக்கும்போதே 1930 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சர்வஜன வாக்குரிமை வழங்கும் கோரிக்கைக்கு பலமான எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இப்போது அதே வாக்குரிமையைப் பயன்படுத்தி இந்திய வம்சாவழி தொழிலாளர் வர்க்கமும் அவர்களது கட்சியான இலங்கை இந்திய காங்கிரஸும் இடதுசாரிகளுடன் சேர்ந்து தம்மை தேர்தலில் தோற்கடிக்க முயற்சித்தனர் என்பதை அவர்களால் சகிக்க முடியாத அளவுக்கு பேருண்மையாக, பூதாகரமாக எழுந்தது. அப்போதே அவர்கள் இந்தியத் தமிழர்களின் வாக்குரிமைகளை பறித்துவிடுவது என மனதுக்குள் கருதிக்கொண்டனர்.

டி.எஸ்.சேனாநாயக்க

இத்தகைய ஒரு நிலைமையில்தான் 1948ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் இலங்கை பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற்று ஒரு சுதந்திர நாடானது. ஆப்பு இழுத்து மாட்டிக்கொண்ட குரங்கு அதிலிருந்து விடுபட்டதைப்போல் மகிழ்ச்சி அடைந்து துள்ளிக் குதித்த இந்த நாட்டின் முதலாளித்துவ வர்க்கமும் மேட்டுக்குடியினரும் உடனடியாக செயலில் இறங்கி அதிகரித்து வந்த இடதுசாரிகளின் பலத்தையும்,  இந்திய வம்சாவழி பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தொழிற்சங்க எழுச்சியையும் ஒடுக்கிவிட வேண்டும் என்பதற்காகவும்,  இனிமேலும் இந்த நாட்டில் இந்திய அரசாங்கத்தின் தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காகவும் பிரஜாவுரிமை பறிப்பு சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டார்கள்.

இந்த சட்டமியற்றும் நடவடிக்கைகள் மூன்று கட்டங்களில் இடம்பெற்றன.         

1.இலங்கைப் பிரஜாவுரிமை சட்டம், 1948
2.இந்தியா – பாகிஸ்தான் வதிவிட  (பிரஜாவுரிமை) சட்டம்,1949
3.பாராளுமன்ற தேர்தலுக்கான திருத்தச்சட்டம், 1949

இதில் முதலாவது சட்டமான பிரஜாவுரிமை சட்டத்தை 1948 ஆகஸ்ட் மாதம்  பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரை நிகழ்த்தும் போது அன்றைய பிரதமர் டி. எஸ். சேனாநாயக்க பின்வருமாறு தெரிவித்தார் :-

“இது ஒரு மிக எளிமையான சட்டம். இன்று இந்த  நாட்டின் மக்கள் யார் என இனம் கண்டு அவர்கள் வேறு நாட்டின் பிரஜைகள் இல்லாதபட்சத்தில் அவர்களுக்கு குடியுரிமையை வழங்குவதற்கான சட்டமே இது. இன்று நமது நாட்டு மக்களின் பிரஜாவுரிமையை உறுதிசெய்துகொள்ள வேண்டியதன் தேவை ஒன்று மிக அவசியமாக ஏற்பட்டுள்ளது. ஏனையோர் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க தம்மை பதிவு பிரஜைகளாக பதிவு செய்து கொள்ளலாம்.” (ஹன்சார்ட, 19, ஆகஸ்ட், 1948)

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9022 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)