Arts
10 நிமிட வாசிப்பு

பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியர்களும், வெளிநாடுகளில் இந்திய சமூகங்களும் ஓர் ஒப்பீட்டுக் கண்ணோட்டம் – பகுதி 1

June 4, 2022 | Ezhuna

மலையக சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினைகளையும், தோட்ட தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்தியதாக ‘மலையகம் : சமூக – பொருளாதார அரசியல் பரிமாணங்கள்’ இந்தத்தொடர் அமைகின்றது. அத்தோடு இந்தத்தொடர் மலையத்தில் தேயிலை கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகள், தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும்  வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைக்கின்றது.

இந்தியர்கள் புலம்பெயர்ந்து சென்று வெளிநாடுகளில் குடியேறியமைக்கு நீண்டதொரு வரலாறு உண்டு. தென் கிழக்காசிய நாடுகளுடனும் கிழக்காபிரிக்க கரையோரப் பிரதேசங்களுடனுமான இந்திய கலாசார, வர்த்தக உறவுகள் கிறிஸ்து சகாப்தத்திற்கு முந்திய காலத்திலிருந்தே இடம்பெற்று வந்துள்ளதாகத் தெரிகின்றது. இந்தியாவிற்குள்ளேயே ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களினால் இவ்வித குடிப்பெயர்வுகள் காலப்போக்கில் அருகி வந்தன. எனினும், அளவிலும் பண்பிலும் வேறுப்பட்ட புதியதொரு குடிப்பெயர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இடம்பெற்றது. வரலாற்றின் முந்திய காலங்களில் குடிப்பெயர்ந்தோர் ஒரு மாபெரும் நாகரிகத்தினதும் மதத்தினதும் தூதுவர்களாகவும் விலையுயர்ந்த பண்டங்களின் வர்த்தகத்திலீடுப்பட்டோருமாகவிருக்க, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அந்நியருக்குச் சொந்தமான தோட்டங்களில் வியர்வை சிந்தி உழைக்கச் சென்ற கல்வியறிவிலாப் பாமர மக்களாவிருந்தனர் (Kondapi, C. 1951).

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக வெளிநாடு சென்ற இந்தியர்கள்

வெளிநாடுகளுக்கான மேற்படி இந்தியக் குடிப்பெயர்வானது கிழக்கே பிஜித்தீவுகள் வரையும், மேற்கே மேற்கிந்தியத் தீவுகள் வரையும், தெற்கே மொறிசியஸ் தீவுகள் வரையும் பரவிக்காணப்பட்டது. இலங்கை, பர்மா, மலேசியா, பிஜித்தீவுகள், மொறிசியஸ் தீவு, மேற்கிந்தியத் தீவுகள், கிழக்காபிரிக்க நாடுகள், தென்னாபிரிக்கா போன்றன அவர்கள் புலம் பெயர்ந்து சென்று குடியேறிய நாடுகளுட் சிலவாகும். 1834 ஆம் ஆண்டு பிரித்தானிய சாம்ராச்சியத்தில் அடிமை ஊழியம் ஒழிக்கப்பட்டதும், அதன்விளைவாக மேற்கிந்தியத் தீவுகளிலும் பிஜி, மொறிசியஸ் ஆகிய தீவுகளிலுமிருந்த கரும்புத்தோட்டங்களிலேற்பட்ட ஊழியத்துக்கான கடும் தட்டுப்பாடுமே இந்தியர்கள் பெருமளவிற் சென்று வெளிநாடுகளில் குடியேறியமைக்கான பிரதான காரணங்களாயிருந்தன. அடிமை ஊழியம் ஒழிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஊழியத் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு மேற்கிந்திய பெருந்தோட்டச் சொந்தக்காரர்கள் வறிய ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெள்ளையர்களை வேலைக்காரர்களாகக் கொண்டு செல்லுதல், கடன் ஒப்பந்த முறையில் (இது கீழே விளக்கப்பட்டுள்ளது) ஆபிரிக்கரையும் சீனரையும் தொழிலாளர்களாக வரவழைத்தல் போன்ற பல்வேறு மாற்று வழிகளை நாடினர். இவற்றுள் எதுவுமே, அடிமை ஊழியத்திற்குச் சிறந்த ஒரு மாற்றீடாக அமையத் தவறிய அதே வேளையில், ஊழியத்தட்டுப்பாடு பெருந்தோட்டங்களைத் தொடர்ந்தும் நடத்துவதற்கு பெரும் அச்சுறுத்தலாகவிருந்தது. இந்நிலையிலேயே மலிவான ஊழியத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தியா ஒரு மூலமாக மாற்றப்பட்டது. கடன் ஒப்பந்த முறையின்கீழ் கொண்டு செல்லப்பட்ட மலிவான இந்திய ஊழியத்தைப் பெருந்தோட்ட விவசாயத்தில் கையாளுவது மொறிசியஸ் தீவில் வெற்றியடைந்தமையினால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு தொலைதூர நாடுகளுக்கு தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களைப் பின் தொடர்ந்து வேறு பல இந்திய சமூகத்தினரும் சுய விருப்பின் பேரிலேயே குடி பெயர்ந்தனர்.

தொழிலாளர் புலம்பெயர்ந்து சென்று குடியேறிய கிழக்காபிரிக்க நாடுகள், தெற்கு-தென்கிழக்காசிய நாடுகள் என்பன உட்பட்ட வேறுபல நாடுகளிலும் இந்திய வர்த்தகர்களும் சென்று குடியேறினர். ஒழுங்குப்படுத்தப்படாத சில குடிப்பெயர்வுகளும் இடம்பெற்றன. (பஞ்சாபியர் கனடாவிற் சென்று குடியேறியமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.) சட்ட நிபுணர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள் போன்றோரும் அவர்களைத் தொடர்ந்து சென்றனர். காலனித்துவ அரசாங்கங்கள் சில இந்தியரை எழுதுவினைஞராகவும், போலிஸ் உத்தியோகஸ்தர்களாகவும் வரவழைத்தன. கிழக்காபிரிக்க இராணுவத்திலும் உள்ளுர் பாதுகாப்பு படைகளிலும் இந்தியப் படைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. பர்மாவில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட இந்திய இராணுவப்படைகள் கையாளப்பட்டன. பர்மிய நிர்வாக சேவையிலும் இந்தியர் சேர்த்துக் கொள்ளப்பட்டு, படிப்படியாக அங்கு இன அடிப்படையிலான பிரதிநிதித்துவமும் அறிமுகமானது. மேலே கூறியோரை விட இந்திய உயர் சாதியினர் சிலரும் தமது வாழ்க்கை நிலையை முன்னேற்றிக் கொள்ளும் நோக்குடன் குடிப்பெயர்ந்தனர்.

1810 ஆம் ஆண்டிலேயே முதன்முதலாக தனியார் முகவர்கள் ஒழுங்குப்படுத்திய முறையில் இலங்கைக்கு இந்தியத் தொழிலாளரைக் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து 1836 முதல் மொறிசியசுக்கும் 1838 முதல் மேற்கிந்தியத் தீவுகளுக்கும்  (தாழ்நில பர்மா இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர்)  1880 முதல் பர்மாவிற்கும், 1870 முதல் பிஜித் தீவுகளுக்கும் அவர்கள் பெருமளவில் கொண்டு செல்லப்பட்டனர் (Arasarathnam, S. 1970). ஆபிரிக்க  மேற்கு கரையோர பிரதேசங்கள் அடிமை ஊழியத்திற்கு ஊற்றாக விளங்கியது போன்று இந்தியா கடன் ஒப்பந்த முறையிலான ஊதியத்திற்குப் பிரதான மூலமாக மாற்றப்பட்டது.  எனவே, மூன்றாம் உலகநாடுகளில் இன்று காணப்படும் புலம்பெயர்ந்த இந்திய சமூகங்கள் கடந்த இரு நூற்றாண்டு கால பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் ஒரு நேரடி விளைவெனலாம். எனினும், பிரித்தானியரது வருகைக்கு முன்னரே இலங்கை, பர்மா, மலேயா போன்ற நாடுகளில் இந்தியர் குடியேறி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் இந்திய குடியேறிகள்

இந்தியரின் குடிபெயர்வினையும் பல்வேறு நாடுகளில் அவர்கள் குடியேறிய வரலாற்று முறையினையும் அடிப்படையாகக் கொண்டு குடிப்பெயர்வை ஜெயின் ஐந்து வகைகளாகப் பிரிக்கின்றார் (Jain. C. P. 1982).

1.     கடன் ஒப்பந்த முறையிலான குடிபெயர்வு.

மேற்கிந்திய தீவுகள், பிஜித்தீவுகள், மொறிசியஸ் என்பவற்றுக்கான குடிப்பெயர்வுகள்.

2.     கங்காணி/ மேஸ்திரி முறையின் கீழான குடிப்பெயர்வு.

இலங்கை, மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கான குடிப்பெயர்வு.

3.     சகாராவுக்குத் தெற்கேயுள்ள ஆபிரிக்க நாடுகளுக்கான குடிப்பெயர்வு.

இது பெரும்பாலும் வணிகக் குலத்தவரின் அல்லது வகுப்பினரின் குடிப்பெயர்வாக இருந்தது.

4.     தன்னிச்சையான குடிப்பெயர்வு.

ஐரோப்பிய, வடஅமெரிக்க வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான குடிப்பெயர்வு.

5.     மேற்காசிய நாடுகளுக்கான அண்மைக்கால குடிப்பெயர்வு.

இப்பல்வேறு வகைப்பட்ட இந்தியக் குடிப்பெயர்வுகளுள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இடம்பெற்ற முதல் மூன்று வகையான குடிப்பெயர்வுகளுமே இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. கடைசி இரண்டும் சமகால நிகழ்வுகளாகும்.

அடிமை ஊழியம் ஒழிக்கப்பட்ட பின்னர் கடன் ஒப்பந்த முறையின் கீழ்க்கொண்டு செல்லப்பட்ட தொழிலாளரின் வழித்தோன்றல்களே மேற்கிந்தியத் தீவுகள், பிஜி,  மொறிசியஸ் போன்ற நாடுகளில் இன்று காணப்படும் இந்தியச் சமூகங்களாகும். கடன் ஒப்பந்த காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர் தொழிலாளர்கள் தொடர்ந்தும்  அந்நாடுகளில் வசிப்பதற்கான சில விதிகளையும் இக் கடன் ஒப்பந்தங்கள் கொண்டிருந்தன (Gillion, K. C. 1962). மேற்கிந்தியத் தீவுகள், பிஜி, மொறிஸியஸ் போன்ற தூர நாடுகளுக்கான குடிப்பெயர்வில் ஒப்பந்தக்காலம் முடிவுற்ற பின்னர் அவர்களை இலவசமாக தாய் நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதற்கு அல்லது அந்நாடுகளிலேயே அவர்கள் குடியேறுவதை  ஊக்குவிப்பதற்கு  சில விதிகள் காணப்பட்டதோடு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவ்விதிகள் பின்பற்றப்பட்டன. அதாவது, அந்நாடுகளிலேயே அவர்கள் குடியேறுவதற்கு ஊக்குவிக்கப்பட்டனர். தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளைப் பொறுத்தவரை, கடன் ஒப்பந்த முறை, கங்காணி/மேஸ்திரி முறை, தன்னிச்சையான குடிப்பெயர்வு போன்ற மேலே குறிப்பிட்ட எல்லா வகைக் குடிப்பெயர்வுகளுமே இடம்பெற்றன.

மலேசியாவில் புகையிரத பணியில் தொழிலாளர்கள்

இந்தியக் குடிப்பெயர்வுகளைப் பல்வேறு கட்டங்களாகப் பிரித்தும் நோக்கலாம். ஆரம்பத்தில் அது தனிப்பட்டோரால் ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும், அது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால், 1839 ஆம் ஆண்டு அவ்விதக் குடிப்பெயர்வை இந்திய அரசாங்கம் தடை செய்தது. அடுத்த கட்டத்தில், குடிப்பெயர்வை அரசாங்கம் கட்டுப்படுத்தத் தொடங்கிற்று. தொழிலாளர் தேவையாகவிருந்த நாடுகளுக்கு இந்தியர் குடிப்பெயர்ந்து செல்வதற்குப் பொருளாதார ரீதியிலான எவ்வித தடைகளும் இருப்பதாக இந்திய அரசாங்கம் கருதாத போதும் அவ்வாறு குடிப்பெயர்ந்து செல்வோருக்கு சில காப்பீடுகள் இருக்க வேண்டுமென அது கருதிற்று. அவ்வித காப்பீடுகள் இருப்பதாகக் கருதிய சந்தர்ப்பங்களில் மட்டுமே அந்தக் குடிப்பெயர்வை அனுமதித்தது. அரசாங்கத்தினது இந்த அணுகுமுறை பரோபகார ரீதியான சார்பிலாத்தன்மை என வர்ணிக்கப்படுகிறது (Arasarathnam, op. cit).

மலேசியா தோட்டத் தொழிலாளர்கள்

குடிப்பெயர்வு தொடர்பான இந்திய உளப்பாங்கு

(i). இந்திய அரசாங்கத்தின் உளப்பாங்கு:

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்குட்பட்ட நாடுகளில் இந்தியர் பெருமளவாகச் சென்று குடியேறிய இக்காலப்பகுதியில், இந்திய காலனித்துவ அரசாங்கம் அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து (அவ்வப்போது) அக்கறைக் காட்டி வந்தது (Tinker, H 1976). வேறு நாடுகளுக்கு இந்தியத் தொழிலாளரைக் கொண்டு செல்வதற்கு இலங்கை ஒரு பாலமாகக் கையாளப்பட மாட்டாது என்ற உறுதி மொழியின் பேரில் இந்தியத் தொழிலாளர் இலங்கைக்குக்  கொண்டு வரப்படுவது அனுமதிக்கப்பட்டது. புலம் பெயர்வோரது நலன்களைப் பாதுகாப்பதற்கு பல ஒப்பந்தங்களும் செய்துக்கொள்ளப்பட்டன. இவ் ஒப்பந்தங்கள் மீறப்பட்ட சந்தர்ப்பங்களில் அரசாங்கம் தற்காலிகமாக குடியேற்றத்தை நிறுத்தியது. இருந்தும் கூட, பல சந்தர்ப்பங்களில் அவை மீறப்படுவதை இந்திய அரசாங்கத்தினால் தடை செய்ய முடியவில்லை.

இந்தியரது குடிப்பெயர்வைப் பொறுத்தவரை, இந்திய ஆட்சியாளர் இரு குரல்களில் பேசியதாகக் கூறப்படுகின்றது. ஒன்று இந்திய அரசாங்கத்தின் குரலாகும். இது உண்மை நிலையுடன் தொடர்பற்றதாக இருந்த போதும், இந்திய தேசிய உணர்வுகளை நன்கு உணர்ந்ததாகவிருந்தது மற்றது, லண்டனில் இருந்த பிரித்தானிய அரசியலினதும் அரசாங்கத்தினதும் நலன்களைப் பிரதானமாகக் கொண்ட இந்திய செயலகத்தின் (India Office at the Witehall) குரலாகும்.

பல சந்தர்ப்பங்களில் இவை இரண்டும் ஒன்றோடொன்று முரண்பட்டனவாக இருந்தன. இந்தியச் செயலகமானது பிரித்தானிய பேரரசுவாத நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. மறுப்பக்கத்தில், இந்திய அரசாங்கமானது குடியேற்றக் கொள்கை பற்றியும் இந்தியர்கள் வெளிநாடுகளில் நடத்தப்படும் முறை பற்றியும் கண்டனம் செலுத்திய, இந்திய மக்களின் உணர்வுகளை புறக்கணிக்க முடியாத நிலையிலிருந்தது. எனினும், பிரித்தானிய பேரரசினது நலன்களை முக்கியமாக கருதிய காலனித்துவ செயலகம் தான் சரியென எண்ணியதையே செய்தது.

(ii). மக்களது உளப்பாங்கு

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பெருமளவு குடிப்பெயர்வு ஏற்பட்ட போதும், பல்வேறு காரணங்களினால் இந்திய மக்களிடையே அது பிரசித்தம் பெற்று இருக்கவில்லை. கடல் கடந்த பயணங்கள் மதம் சார்ந்த காரணங்களால் சில சாதியினரால் வரவேற்கப்படவில்லை (Sha . P. 1970). மேலும், சாதி, மதம் வேறு சமூக ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றைக் கவனத்திற்கொள்ளாது முகாம்களிலும், கப்பல்களிலும் புலம்பெயர்ந்த நாட்டு குடியிருப்புக்களிலும் அவர்கள் ஒருவரோடொருவர் கலக்கப்பட்டமை இந்திய உயர்சாதியினரின் வெறுப்புக்குள்ளானது. ஆரம்பகாலங்களில் இவ்வித எதிர்ப்புக்கள் எதுவித நடைமுறைத் தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் 1930 ஆம் ஆண்டுகளில் எல்லாவித குடிப்பெயர்வுகளுக்குமே நடைமுறை எதிர்ப்புக்கள் தோன்றின. குடிப்பெயர்வு தொடர்பாக அரசாங்கத்தினது உளப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தின. தலையிடாக் கொள்கை, பொருளாதார தாராண்மைவாதம் போன்றவற்றிற்கெதிராக சவால்கள் விடப்பட்டன. பல குடியேற்ற நாடுகளில்  புலம்பெயர்ந்து சென்று குடியேறிய தொழிலாளர் அனுபவித்த பாதகமான நிலைமைகளும் இதற்குப் பங்களித்தன. மேற்படி காரணங்களினால் 1916 தொடக்கம் குடிப்பெயர்வு தொடர்பான அரசாங்கக் கொள்கைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. 

1.     கடன் ஒப்பந்த முறை 1916இல் நீக்கப்பட்டது.

2.     அரசாங்க உதவியுடன் கூடிய ஏனைய வகைக் குடிப்பெயர்வுகள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளுவதற்கு 1922ஆம் ஆண்டு இந்திய குடியகல்வுச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

3.     குடிப்பெயர்வு தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுவதற்காக குடிப்பெயர்வு நிலையியற் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

4.     1938இல் எல்லாவிதக் குடிப்பெயர்வுகளுமே தடைசெய்யப்பட்டன.

5.     புலம் பெயர்ந்த தொழிலாளரின் நலன்களைக் கவனிக்கவெனப் பல நாடுகளில் இந்திய அரசாங்க முகவர்கள் (Indian Agents) நியமிக்கப்பட்டனர்.

குடிப்பெயர்வுக்கான காரணங்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவிடம்பெற்ற பல்வேறு மாற்றங்களின் மோசமான தாக்கத்தினை அனுபவித்த தென்னிந்தியாவே பிரித்தானியாவினது குடியேற்ற நாடுகளுக்கு பெருமளவான விவசாயத்தொழிலாளரை நிரம்பல் செய்யும் மூலமாகவிருந்தது.

இந்தியாவில் நிலவிய பொருளாதார நிலைமைகளுக்கேற்ப குடிப்பெயர்வு தளம்பியது. இயற்கை அனர்த்தங்களாலேற்படும் பஞ்சம், அல்லது கிட்டிய பஞ்சங்கள் பொருளாதாரத்தின் மீது கொண்டிருந்த தாக்கங்களே இவ்வித தளம்பல்களை ஏற்படுத்தின. சிறு நில விவசாய வகுப்பின் கீழ் மட்டத்திலிருந்தோரும் சமூக பொருளாதார ரீதியாகத் தாழ்த்தப்பட்ட பிரிவினருமே குடிப்பெயர்ந்தனர். குடிப்பெயர்ந்தோரிற் பெரும்பாலானோர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த இந்துக்களாவர். இவர்கள் தாம் வாழ்ந்த கிராமங்களில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்தனர். நிலச்சுவாந்தர்களிடமிருந்து தாம் வாங்கிய கடன்களை அடைக்க முடியாத நிலையில் அவர்களோடு இறுகப்பிணைக்கப்பட்டிருந்த இவர்கள், குடிப்பெயர்வை தமக்குக் கிடைக்கும் விடுதலையாகக் கருதினர். சமூகரீதியான நசுக்கல்களும் மானியச் சுரண்டல்களும் இவர்களது குடிப்பெயர்வைப் பெரிதும் தூண்டின. பிரித்தானிய காணிக்கொள்கையினால் உருவாக்கப்பட்ட காணியற்ற விவசாயத் தொழிலாளரும், கட்டற்ற இறக்குமதிகளின் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாது முறிவடைந்த இந்திய கிராமிய கைத்தொழில்களினின்று வெளியேற்றப்பட்ட தொழிலாளருமே இவ்வித குடிப்பெயர்வுக்குத் தயாராகவிருந்தனர். சனத்தொகை அதிகரிப்பு, விவசாயத்துறையிலேற்பட்ட உற்பத்தி திறன் வீழ்ச்சி, அடிக்கடி ஏற்பட்டு வந்த பஞ்சங்கள், வேதனங்களின் வீழ்ச்சிப் போக்கு, தானியங்களின் விலையேற்றம் போன்ற பல்வேறு காரணிகளின் இடைத் தாக்கங்களினால் காணியற்ற இவ்விவசாயத் தொழிலாளர் வகுப்பினர், தீராத வறுமை, கடன் பளு, பட்டினி நிலை என்பவற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.  

குடிபெயர்வு முறைகள்

(1) கடன் ஒப்பந்த முறை

இந்த முறையின் கீழ் தொழிலாளரைத் திரட்டும் ஒரு முகவர் அவர்களை வேலைக்கமர்த்த தயாராகவிருக்கும் தொழில் வழங்குனரின் வேண்டுகோளின் பேரில் இந்தியக் கிராமப்புறங்களிலிருந்து தனது இடைத்தரகர்களினூடாகத் தொழிலாளரைத் திரட்டுவர். கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதும் இவர்கள் கடன் ஒப்பந்தத்திற்குட்பட்டோராகக் கருதப்பட்டனர். ஒப்பந்தம் மூன்று தொடக்கம் ஐந்து வருடங்களுக்குச் செல்லுப்படியானது. இக்காலப் பகுதியில் அவர்கள் தமது தொழில் வழங்குனரை மாற்றிக்கொள்ளவோ, தொழிலை மாற்றிக்கொள்ளவோ உரிமை இருக்கவில்லை. வேதனங்களை நிர்ணயிப்பதில் அவர்களைக் கொண்டு செல்வதற்கேற்பட்ட செலவுகளும் கவனத்திற்கொள்ளப்பட்டன.

கடன் ஒப்பந்த முறையானது அடிமை ஊழியமுறையாகவோ, கட்டற்ற ஊழியமுறையாகவோ இராது. இவையிரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்றாகவிருந்தது (Saha, 1970). அடிமை ஊழியத்திற்கு ஒரு மாற்றீடாகவிருந்த அது, தொழிலாளருக்கு வரையறுக்கப்பட்ட சில காப்பீடுகளையும் கொண்டிருந்தது. ஒப்பந்தக்காலப்பகுதியின் பின்னர் தொழிலாளர் ஒப்பந்தத்தினின்றும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விரும்பினால் மீண்டும் தம்மைப் பிணைத்துக்கொள்ளலாம். கடன் ஒப்பந்த நிபந்தனைகள் பிரித்தானிய- இந்திய அரசாங்கத்தின் சட்ட மூலங்களில்  காணப்பட்டன. இந்நிபந்தனைகள் கடன் ஒப்பந்த முறையின் கீழ் தொழிலாளரைத் திரட்டுவதில் காணப்பட்ட துஷ்பிரயோகங்களைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தன. அதேவேளையில், பிரித்தானிய குடியேற்ற நாடுகளிற் செயற்பட்ட பிரித்தானிய நிறுவனங்களுக்குத் தேவையான ஊழிய நிரம்பலை உறுதிப்படுத்துவதும் அவற்றின் நோக்கமாகவிருந்தது (Wesmpermas, 1986).

(2) கங்காணி மேஸ்திரி முறை

இந்த முறையின் கீழ் தொழிலாளரைத் திரட்டுதல், அவர்களைத் தொழிலிலமர்த்துதல், வேதனங்களைச் செலுத்துதல், அவர்களை விலக்குதல் என்பன தென்னிந்தியாவில் மேஸ்திரி என்றும் அழைக்கப்பட்ட ஊழிய ஒப்பந்தக்காரரின் பொறுப்பாகவிருந்தது (de Silva, K , M. 1968).

இவர்கள் தோட்ட உரிமையாளரால் இதற்கென விசேடமாக அமர்த்தப்பட்டவர்களாகவோ அல்லது தாமாக இதில் ஈடுபட்டவர்களாகவோ இருந்தனர். தொழிலாளரைத் தெரிவு செய்வதில் இவர்கள் கவனமாகச் செயற்படுவர் என்பதாலும், சமூகத்திற்கு நன்கு அறிமுகமானவர்களாக இருப்பதாலும், தொழிலாளர் விரும்பியே குடிப்பெயர்வுக்கு முன் வருவர் என்பதாலும், கடன் ஒப்பந்த முறையில் காணப்பட்ட பலவந்தம், கண்மூடித்தனமான தொழிலாளர் திரட்டல் போன்ற குறைப்பாடுகளை இது நீக்கிவிடுமென்று எதிர்பார்க்கப்பட்டது (Arasarathnam, op.cit)

உண்மையான தொழில் வழங்குநருக்கும் தொழிலாளருக்குமிடையிலான உறவுகள் நேரடியானவையாக இருக்கவில்லை. கங்காணி அல்லது மேஸ்திரிமாரே இவ்விரு சாராருக்குமிடையே ஊடகமாகச் செயற்பட்டனர் (Chakravarthi, 1991)

வெளிநாடுகளில் குடியேறியோரின் நிலைமை

குடிப்பெயர்விற்காக தொழிலாளர் திரட்டப்பட்ட காலந்தொட்டு, முகாம்களிலும் கப்பல்களிலும், குடியேறிய நாடுகளிலும் அவர்களது நிலைமை மிக மோசமாக இருந்தது. சரக்குகளோடு சரக்காக அவர்களும் கப்பல்களில் ஏற்றப்பட்டனர்.

அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொழிலின் தன்மை, வேதனங்கள், சுகாதார-இருப்பிட வசதிகள் என்பன தொடர்பான நிபந்தனைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டனவாகவிருந்ததோடு, தோட்ட முகாமையாளரால் அவை ஒரு தலைப்பட்சமாக மீறப்பட்டும் வந்தன. உதாரணமாக, மேற்கிந்தியத் தீவுகளில் இந் நிபந்தனைகள் தொழிலினது இயல்பு, வேதனங்கள், பங்கீட்டு உணவு, வீட்டு வசதி, மருத்துவ வசதி போன்றவற்றை அடக்கியிருந்தபோதும் அவை திட்டவட்டமானவையாக இருக்கவில்லை நடைமுறையில் அவை தோட்ட முகாமையாளரின் தயவிலேயே தங்கியிருந்தன. அத்துடன் தொழிலாளர் பல்வேறு உடல் ரீதியான தண்டனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர் (Klass, 1961). உதாரணமாக மொறிசியஸில் 1867க்கும் 1872க்குமிடையே 50 இந்தியத் தொழிலாளர்கள் கசைடியினால் மண்ணீரல் சிதறி மரணமடைந்ததாக ஒரு ஆணைக்குழு கூறுகின்றது (Tinker, 1974). இந்தியப் பெருந்தோட்டங்களில் பல தொழிலாளர் கசையடியினால் இறந்ததாகவும் இவ்வித குற்றச் செயல்களுக்கான தண்டனைகள் வெறுமனே தண்டப்பணம் செலுத்துவதாகவே இருந்ததாகவும் கூறப்படுகின்றது (Moldrich, 1986). மலேசியாவில் ஒரு தொழிலாளி மனிதக் கழிவை உண்ணுமாறு பலவந்தப்படுத்தப்பட்டதால் அவன் வயிற்றோட்டத்தினால் மரணமானான். அதனைவிசாரித்த வைத்தியர் அவன் உண்ட மலத்தில் தொற்று நோய்க்கிருமிகள் இருந்ததாக நிரூபிக்க முடியவில்லை எனத் தீர்ப்புக் கூறினார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஒரு தொழிலாளி பட்டினி போடப்பட்டதால் தனது எஜமானனின் குதிரை லாயத்தில் மரணமடைந்தான். இது பொலிஸ் நிலையத்திலிருந்து 50 யார் தூரத்திலேயே இருந்ததாகக் கூறப்படுகின்றது (Salter, 1977). மோர்ட்டன் கிளாஸ் என்பவர் இத்தொழிலாளரது நிலை, இதற்குச் சற்று முன்னர், விடுவிக்கப்பட்ட உண்மையான ஒரு அடிமையின் நிலையை ஒத்ததாக இருந்ததாகவும், இவை இரண்டிற்குமிடையே ஒரேயொரு வேறுபாடு மட்டுமே காணப்பட்டதாகவும் கூறுகிறார் (Morton op.cit).  அடிமைத்துவம் ஒருவனது வாழ்நாள் முழுவதற்கும், கடன் ஒப்பந்த முறையானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுப்படியானதாகவிருந்ததுமே இந்த வேறுபாடாகும்.

நாளாந்த வேதனங்கள் ஏறக்குறைய எல்லாக் குடியேற்றங்களிலுமே ஒரே சீராக குறைந்த மட்டத்திலிருந்தன. 1922ஆம் ஆண்டு இந்திய குடியகல்வு சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே அவை ஓரளவு உயர்த்தப்பட்டன. தொழிலாளரது குடியிருப்புக்கள் அடிப்படை வசதிகளற்றனவாகவிருந்ததோடு, பல்வேறு சமூகக் கேடுகளுக்கும் அவை காரணமாகவிருந்தன. சுகாதார மருத்துவ வசதிகள் இன்மை தொடர்சியானதொரு பிரச்சினையாக இருந்தது. இதனால், குடியேற்றவாசிகளிடையே மரணவிகிதமும் மிகவும் உயர்வாக இருந்தது.

கடனொப்பந்த முறையில் தொழிலாளரைத் திரட்டிய ஆரம்ப காலங்களில், குடியேறியவர்களிடையே ஆண்-பெண் விகிதாசாரம் சமமற்றதாக இருந்தமை ஆரம்பகால குடிப்பெயர்வு கொள்கையில் காணப்பட்ட முக்கியமானதொரு குறைபாடாகவிருந்தது. 1843க்கும் 1850க்கும் இடையே இலங்கைக்கு வந்த ஆண் தொழிலாளரின் எண்ணிக்கை 9737 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 38ஆகவும் இருந்தமை இதனைத் தெளிவுப்படுத்துகின்றது. எனினும், காலப்போக்கில் இச்சமமின்மை திருத்தப்பட்டது (Moldrich, op.cit).

தாம் குடியேறிய நாடுகளில் இந்தியர் பல்வேறு வகையிலான வரையறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். குடியேற்ற நாடுகளுக்குள் இந்தியர்களின் தடையற்ற பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை 1921ஆம் ஆண்டு பேரரசு மகாநாடு அங்கீகரித்தது. இதனைத் தொடர்ந்து, இந்நாடுகளில் வசித்த இந்தியர்கள் கட்டாயமாக பதிவுசெய்யப்பட்டதோடு, ஏனைய சமூகங்களுக்கு இல்லாத மொழி, சொத்து, தொடர்பான நிபந்தனைக்கும் உட்படுத்தப்பட்டனர். மேலும், குடிவரவு, குடிப்பெயர்வு என்பவற்றுக்கு உயர்ந்த வைப்புக்களை செலுத்துமாறு அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். கள்ளக்குடியேற்றம் (தென்னாபிரிக்க), இந்தியப்பொருளாதார ஊடுருவல் (பர்மா, இலங்கை) என்பவற்றைத் தடுப்பதற்காகவே இவ்வித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தென்னாபிரிக்காவிலும் கென்யாவிலும் இந்தியரின் காணி உடமை, குடியிருப்பு என்பவற்றின் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தென்னாபிரிக்காவில் இந்தியருக்கென ஒதுக்கப்பட்ட பிரதேசங்களிலேயே அவர்கள் வாழ வேண்டும் என்றும் கெனியாவில் உயர்நிலங்களை அவர்கள் கொள்வனவு செய்ய முடியாதென்றும் (இவை ஐரோப்பியருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன) விதிக்கப்பட்டன. பிஜித்தீவின் தனியார் காணிகளைக் கொள்வனவு செய்வது தடை செய்யப்பட்டது. இதே போன்ற வரையறைகள் ஏனைய நாடுகளிலும் இருந்தன.

சில நாடுகளில் இந்தியருக்கு வர்த்தகத்தில் ஈடுப்படும் உரிமை வழங்கப்படவில்லை. தொழில் ரீதியாக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதால் உள்ளூர் மக்களால் நிராகரிக்கப்பட்ட தொழில்கள் மட்டுமே அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டன.

இந்தியரது அரசியற் பிரதிநிதித்துவம்

இந்தியர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற இக்காலப் பகுதியில் ஒரு சில நாடுகளில் மட்டுமே தேர்தல் முறை காணப்பட்டது. இந்நாடுகளிலுங் கூட, வாக்குரிமை அங்கு வசித்த வெள்ளையரது ஏகபோக உரிமையாகவிருந்தது. உதாரணமாக, மொறிசியஸின் மொத்த சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்தியராக இருந்த போதும், ஒரு வீதத்திற்கும் குறைவான இந்தியருக்கே வாக்குரிமை இருந்தது. 1937ஆம் ஆண்டிற்கு முன்னரே இந்தியருக்கு அங்கு வாக்குரிமையிருந்த போதும், சட்டசபையில் ஒரேயொரு இந்தியப் பிரதிநிதியே இருந்தார். இந்த ஆண்டில் இது இரண்டாக அதிகரிக்கப்பட்டது. எனினும், நாட்டினது நிர்வாக சபையில் இந்தியப் பிரதிநிதித்துவத்திற்காக இந்திய சமூகத்தினர் பொதுவாகவே இன ரீதியான பிரதிநிதித்துவத்தையே கோரிவந்த போதும், அது காலனித்துவ செயலகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பலவீனமானதும், ஒழுங்குபடுத்தப்படாததுமான இந்திய சமூகத்தினருக்கு இன ரீதியான பிரதிநிதித்துவம் சாதகமாகவிருக்கும் சந்தர்ப்பங்களில் அது ஊக்குவிக்கப்படக் கூடாது என்பதும், இந்தியர் பெருந்தொகையினராகவும், ஒழுங்குபடுத்தப்பட்டும், அரசியல் அதிகாரத்திற்குப் போட்டி போடக்கூடிய தகுதியும் பெற்றிருக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களை இனரீதியான தேர்தற் தொகுதிகளில் ஒதுக்கித் தனிமைப்படுத்துவதும் காலனித்துவச் செயலகத்தின் கொள்கையாக விருந்ததென டிங்கர் கூறுகிறார் (Tinker, op.cit). 1930 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியான போராட்டங்களினூடாக இந்தியர் தமக்கென ஓரளவு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டனர். எனினும், இந்நாடுகளில் காணப்பட்ட அவர்களது எண்ணிக்கையோடு சார்பளவில் இது குறைவாகவே இருந்தது. தொடர்ந்து வந்த காலப்பகுதியில் இந்நாடுகள் சுதந்திரம் பெற்றமை இந்தியரது நிலைமையில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, சில நாடுகளில் அவர்கள் ஏற்கனவே தாம் பெற்றிருந்த குடியுரிமையையும் இழக்க நேரிட்டது. (உதாரணம் பர்மாவும் இலங்கையும்) பர்மிய குடியுரிமையைப் பெறுவதற்கு ஒரு இந்தியன் 1942க்கு முன்னர் தொடர்ந்து பத்து வருடங்கள் அல்லது 1948ற்கு முன்னருள்ள 10 வருடங்களில் தொடர்ந்து 8 வருடங்களாவது பர்மாவில் வசித்திருக்க வேண்டுமென விதிக்கப்பட்டது. இவ்விதிகளுக்கமைய 140,000 இந்தியர் மட்டுமே பர்மிய குடியுரிமைக்கு விண்ணப்பித்தனர். இதில் ஒரு மிகச்சிறிய தொகையினருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டது. எனவே பெருந்தொகையான இந்தியர் தமது தொழில்களைக் கைவிட்டுத் தாயகம் திரும்பினர்.

இலங்கையில் 1931ல் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்ட போது, வாக்குரிமைக்கு விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளின் கீழும், சுமார் 100,000 இந்தியர் வாக்குரிமை பெற்றதுடன் தமது சார்பாக சட்ட சபைக்கு இரு பிரதிநிதிகளைத் தெரிவு செய்யவும் முடிந்தது. இந்நாட்டினது சட்டசபையில் இந்தியரது அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஆரம்பத்தை இது குறித்தது. 1939ல் சுமார் 225,000 பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். ஆனால், நாடு சுதந்திரமடைந்த பின்னர் கொண்டு வரப்பட்ட குடியுரிமைச்சட்டம் மிக இறுக்கமானதாகவும், இந்தியரின் குடியுரிமையைக் கட்டுப்படுத்துவதாகவும் இருந்தது. எவ்வித ஐயப்பாட்டிற்கும் இடமில்லாத சுதேசிகள் அல்லாதோரும், வதிவு, பொருளாதார ஆதாரம், குடும்ப வாழ்க்கை என்பவற்றின் அடிப்படையில் இலங்கையில் தமது நிரந்தரமான குடியிருப்பை நிரூபிக்க முடியாதோரும் இக்குடியுரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கி வைக்கப்பட்டனர் (Lalitkumar, 1977). தொடர்ந்து கொண்டு வரப்பட்ட இந்திய, பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டத்தின் கீழ்  (1949) குடியுரிமைக்கு விண்ணப்பித்த 825,000 பேரில் 134,188 பேருக்கு மட்டுமே 1964ஆம் ஆண்டுவரை வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. எஞ்சியோரது குடியுரிமை இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கிடையே பிரச்சினைக்குரிய ஒரு விடயமாக மாறியது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6383 பார்வைகள்

About the Author

முத்துவடிவு சின்னத்தம்பி

முத்துவடிவு சின்னத்தம்பி அவர்கள் 1965ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்று அதே பீடத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகினார். 1969இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணிப் பட்டத்தைப்பெற்றார்.

1993ஆம் ஆண்டு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற முத்துவடிவு சின்னத்தம்பி 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை அலங்கரித்த மலையகத்தின் முதலாவது பேராசிரியர் என்ற சிறப்புக்குரியவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)