Arts
9 நிமிட வாசிப்பு

சடுதி மரணங்களின் காலம்

October 22, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1970 களை அடுத்து வந்த அரை தசாப்த காலம் தோட்டத் தொழிலாளர் சமூகத்தை பேய் பிடித்து ஆட்டிய காலமாகவே இருந்தது. நூற்றுக்கணக்கானோர் பசி, பட்டினி காரணமாக ஆங்காங்கே செத்து மடிந்த போதும் அரசாங்கம் எதையுமே கண்டுகொள்ளாமல் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காதது போல் பாவனை செய்துவந்தது. அரசாங்கத்தின் பங்குதாரர்களாக ஒட்டிக்கொண்டு பதவியை கட்டிக்காத்துக் கொண்டிருந்தவர்களான இடதுசாரிக் கூட்டணியினரும் அரசாங்கத்தின் நிலையையே பிரதிபலித்தனர். 1975 ஆம் ஆண்டில் தோட்டப் பகுதி மக்களின் சுகாதார நிலைமை தொடர்பில் ஆய்வு ஒன்றை நிகழ்த்திய பெருந்தோட்ட பகுதிக்கான கூட்டுக் கமிட்டி செயலகம், அரசாங்கத்தின் இந்த அசமந்தப் போக்கை வன்மையாகக் கண்டித்தது.

இந்த ஆய்வு நடவடிக்கையில் முக்கிய ஆய்வாளராக இருந்து கடமையாற்றிய பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி. ப்ரையன் செனவிரத்ன பின்வருமாறு கருத்து தெரிவித்தார் : 

“குழந்தைகளும் முதியோர்களுமே பெரும்பாலும் ரத்த சோகைக்கும் மந்தபோசணை நிலைமைக்கும் உள்ளாக்கப்பட்டு இறுதியில் மரணத்தை எதிர் நோக்குகின்றார்கள். இந்த நிலைமைக்கு மிகப் பிரதான காரணம், உணவின்றி அரைகுறையான  புரதச்சத்து இல்லாத உணவை சாப்பிடுவதனாலாகும். அரசாங்கம் என்னதான் இந்த நாட்டில் இதுவரைக்கும் ஒரு பட்டினி சாவுகூட ஏற்படவில்லை என்று தனது உத்தியோகபூர்வ அறிக்கையில் கூறி தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், எனது ஆஸ்பத்திரி வாட்டில் அனுமதிக்கப்பட்ட பல நோயாளிகள் உயிரிழந்திருப்பதை என்னால் புள்ளி விபரங்களுடன் நிரூபிக்க முடியும். இவர்கள் மந்த போசணையாலும் இரத்த சோகையாலும் வயிறு பாதிக்கப்பட்டு பட்டினியின் அதி உச்ச பாதிப்புக்கு உட்பட்டு மரணத்தை தழுவிக் கொண்டுள்ளனர்.”

line kitchen

மேற்படி கலாநிதி டாக்டர் ப்ரையன் செனவிரத்ன அவர்களின் அறிக்கையை தோட்டத்துரைமார் சங்கமும் கூட ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அந்த சங்கத்தின் சுகாதார சேவைகள் நலத்திட்டத்தின் தலைவர் டாக்டர் சி.வி.ஆர். பெர்னாண்டோ ஏற்கனவே தோட்டப்புறங்களில் காணப்பட்ட இறப்பு வீதங்களை விட தற்போதைய இறப்பு வீதம், மந்த போசணை காரணமாக இரண்டு மடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றதென சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்த 1975 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான சங்கத்தின் செய்தி இதழ், செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அச் செய்தி, 1973 ஆம் ஆண்டை விட பெருந்தோட்ட பகுதி மரண வீதங்கள் 1974 ஆம் ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கின்றது என்பதைக் கூறுகிறது. இப்படி சடுதியாக மரணங்கள் அதிகரிப்பதற்கு இந்த பகுதியில் தொற்றுநோயோ வேறு எவ்வித இயற்கை அனர்த்தங்களோ ஏற்படவில்லை. அப்படியானால் இந்த அதிகரிப்புக்கு காரணம் பஞ்சமும் பட்டினியும், அது தொடர்பான நோய்களுமாகவே இருக்கவேண்டும் என்பது வெள்ளிடைமலை. மேற்படி அதிகரித்த மரணங்கள் சிறு பிள்ளைகள், குழந்தைகள், முதியோர்களிலேயே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது மிக வருத்தத்துக்குரிய விடயமாகும்.

இது இப்படியிருக்க, திரு.பெர்னாட் சொய்ஸா அவர்களை தலைவராகக் கொண்டு செயல்பட்ட முகவர் இல்லங்கள் மற்றும் தரகர் நிறுவனங்களுக்கான ஆணைக்குழு அதன் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது : 

” இலங்கை முழுவதற்குமான தேசிய ரீதியிலான புள்ளிவிபரங்களின்படி பொதுவான இறப்பு வீதம் மற்றும் தாய் சேய் இறப்பு வீதங்கள் ஒப்பீட்டளவில் தோட்டப் பிரதேசங்களில் மிக அதிகமானதாகவே காணப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது. இதற்கு முக்கிய காரணமாக இவர்களுக்கான ஊதியம் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகக் காணப்படுகின்றமை, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, உணவுப் பண்டங்களின் பற்றாக்குறை முதலானவை காணப்படுகின்றன. இவர்கள் மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்டு ஜீவனம் நடத்த முடியாதபடி படுகுழியில் தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறலாம். மறுபுறத்தில் முதலாளிமார் சம்மேளனமானது தமது உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக, எந்த விதத்திலும் தொழிலாளரின் ஊதியத்தை கூட்டிக்கொடுக்க விடாப்பிடியாக மறுத்து வருகிறார்கள். இவர்களுக்கான ஊதிய அதிகரிப்பு, உணவுப் பண்டங்களின் கிடைக்கும் தன்மை என்பன தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிரான போதுமான அழுத்தங்களை தொழிற்சங்கங்கள் கொண்டுவரத் தவறிவிட்டன என்ற குற்றச்சாட்டும், தொழிலாளர்கள் அனைவரையும் தோட்டங்களுக்குள் சிறைப்பிடித்து அவர்களை இறுக்கிக் கட்டிப் போட்டு ஒரு ஏகாதிபத்திய அடக்குமுறைக்குள் வைத்திருப்பதும், அவர்களது நிராதரவு நிலைக்குக் காரணமாகும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். “

Upcountry Women

இத்தகையதொரு மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து விடுபட தொழிற்சங்கள் மிகவும் பிரயத்தனப்பட்டன. அதன் பிரகாரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் 13 தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுக்க முஸ்தீபுகளை மேற்கொண்டன. ஏற்கனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1966 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபா 180 மாதச் சம்பளமாக கொடுக்க வேண்டுமென ஒரு கோரிக்கையை அரசாங்கத்திடம் முன் வைத்திருந்தது. எனினும் அதனை வென்றெடுக்கப் போதுமான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. எனவே அந்தக் கோரிக்கை எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்த இடத்திலேயே அப்படியே வைக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த கோரிக்கையுடன் சேர்த்து மேலும் சில கோரிக்கைகளை இணைத்து 10 நாள் வேலை நிறுத்தம் ஒன்றை அறிவித்தனர்.

அவர்களின் கோரிக்கைகளின் பிரகாரம்,

1 ) 180 ரூபா மாதச் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

2 ) ரப்பர் தொழிலாளர்களான ஆண்  –  பெண்களுக்கு இடையிலான வேதன முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும்.

3 ) சேவைக் காலம் முடிவுறுத்தப்படும் போது சேவை செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு மாதத்துக்கான வேதனம் பணிக் கொடையாக வழங்கப்படவேண்டும்.

4 ) மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கான ஒன்று கூடும் சுதந்திரம், நீக்கப்பட வேண்டும்.

5 ) அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு புள்ளிக்கேற்ப வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும்.

6 ) ஆரம்பத்தில் இருந்தது போலவே கூப்பன் மட்டும் ரேஷன் பண்டங்களின் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.

7 )  மாவு மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்.

8 ) தோட்டங்கள் சுவீகரிக்கப்படும் போது தோட்டச் சேவையாளர்கள் இடமாற்றம் செய்யப்படலாகாது.

மேற்படி வேலைநிறுத்தப் போராட்டம் 1973 டிசம்பர் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பெருந்தோட்டத் துறை சார்ந்த தொழிற்சங்கங்களைத் தவிர, நகர்ப்புறத்து வியாபாரத் துறைசார்ந்த தொழிற்சங்கங்கள், பொதுசேவைத் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கள் என்பனவும் அரசாங்கத்துக்கு ஆதரவான தொழிற்சங்கங்களும் கூட பங்குபற்றின.

இந்த வேலை நிறுத்தத்தை ஏற்பாடு செய்திருந்த பெருந்தோட்ட தொழிற்சங்கங்ளுக்கான கூட்டுக் கமிட்டி வெளியிட்டிருந்த துண்டுப் பிரசுரத்தில் பின்வரும் அறிவித்தல் செய்யப்பட்டிருந்தது : 

” இன்றைய தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவர்களை நிரந்தரமான பிச்சைக்காரர்களாக  ஆக்கவே போதுமானதாக உள்ளது. அவர்கள் வறியவர்களிலும் வறியவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தம் உயிரை கட்டிப்பிடித்து தக்க வைத்துக் கொள்வதற்காக பெரும் வாழ்க்கை போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. அவர்களுக்கு மாதச் சம்பளம் என்ற ஒன்று இல்லாது இருப்பதுடன் மாதாந்தம் வழங்கப்பட வேண்டிய வேலை நாட்களும் குறைக்கப்படுகின்றன. அவர்கள், வேலையில் கிடைக்கும் சொற்ப நாட்களுக்கான கூலிகளை வைத்துக்கொண்டு முழு மாதத்தையும் ஓட்டவேண்டி இருக்கிறது. இந்த இறுதிக் கட்டத்திலாவது அவர்களது கோரிக்கை கவனிக்கப்படாது விட்டால் பெரும் போராட்டங்கள் வெடிப்பதை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.”

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4303 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)