Arts
9 நிமிட வாசிப்பு

ஓயாத வன்முறை அலைகள்

November 20, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1971 முதல் 1977 வரையிலான காலப்பகுதியில் மலையகத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட காடைத்தனம், வாழ்விடங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்தது. பசி, பட்டினி, பஞ்சம், உணவுப் பொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு போன்றன காரணமாக திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் அரசாங்கத்தின்மீது அவர்களுக்கு பெரும் வெறுப்பு உண்டாகியது. மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமன்றி முழு இலங்கை மக்களுமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பவிட வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தனர்.

1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவை தலைமையாகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, தாம் பதவிக்கு வந்தால் சகலருக்கும் சமமான, ஊழல்-முறைகேடுகள் அற்ற,  திறமையான, இன-மத-மொழி-கட்சி பேதமற்ற ‘தர்மிஷ்டர் சமூகம்’ ஒன்றை உருவாக்குவோம் என்று தேர்தல் உறுதிக் கோசமிட்டது. மேலும் ஒரு படி மேலே போய், தம்மை ஒரு சாதாரண ஜனநாயக கட்சி அல்லவென்றும் தமது கட்சியும் ஒரு சோசலிசக் கட்சியே என்றும் மார்தட்டிக் கொண்டது. எனினும், அவர்களது பசப்பு வார்த்தைகளால் கவரப்பட்ட ஏழை எளிய மக்கள் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு  பெரும்பான்மை ஓட்டுகளை அளித்தனர். அதன் விளைவாக ஐக்கிய தேசியக் கட்சி 6 இற்கு 5 சதவீத பெரும்பான்மை பெற்று 139 பாராளுமன்ற ஆசனங்களுடன் அமோக வெற்றி பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் வார்த்தைகள் எல்லாமே வெறும் ஜாலங்கள் என்பதும் அவர்கள் பசுத்தோல் போர்த்திய நரிகள் என்பதும் தேர்தல் முடிந்து சில காலத்திலேயே வெளிச்சமானது.

Amirthalingam

தாம் வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் அது தொடர்பில் ஒரு சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டு வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் தெற்கில் வாழ்கின்ற சிங்கள மக்களுக்கும் இடையில் காணப்படுகின்ற இன முரண்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் பரப்புரைகளால் தமிழ் மக்கள் ஏமாந்து போய்விடவில்லை என்பதை தமிழ் பிரதேசங்களின் தேர்தல் முடிவுகள் பறைசாற்றின. வடக்கு கிழக்கில், தமிழ் கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை சமஷ்டிக் கட்சி ஆகியன இணைந்து கூட்டாக ஏற்படுத்திக்கொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) தமிழ் மக்களின் வாக்குகளை ஒருசேரப் பெற்று 18 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றி இருந்தது. இதன் பிரகாரம், அக்கட்சியைச் சேர்ந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க் கட்சித் தலைவரானார். நுவரெலியா தொகுதியில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஒரு  பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றிருந்தார். இவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

வடக்கில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத விரக்தியால் தூண்டப்பட்ட தமிழ் இளைஞர்கள் அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு போராட்டக் குழுக்களாகச் செயல்படத் தொடங்கினர். 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டு விழா ஒன்றின்போது, கல்லூரி மாணவர்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலை மையமாகக்கொண்ட சம்பவம் ஒன்று சிங்கள-தமிழ் இனக் கலவரமாக மாற்றப்பட்டு நாடெங்கிலும் இன வன்முறையை தூண்டி  இனக்கலவரங்கள் வெடிக்க காரணமாகியது. இதனைத் தொடர்ந்து கண்டியிலும் மலையகத்திலும் அரசாங்கத்தின் அனுசரணையுடன் வன்முறைகள் அரங்கேறின. பௌத்த துறவிகளும் கூட ஒரு தூண்டுதல் சக்தியாக இருந்தனர்.

J.r

1977 ஆகஸ்ட் கலவரத்தால் கண்டி மாநகரம் முற்றாகவும், மலையகத்தின் பல நகரங்களும் பாதிக்கப்பட்டன. தமிழர்களின் பல்வேறு சொத்துக்கள், கடைகள், வீடுகள் என்பன தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. உயிர்கள் பறித்தெடுக்கப்பட்டன. இலங்கை ராணுவமும் போலீசும் இதனை பார்வையாளர்களைப் போல் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கலவரக்காரர்களை தடுக்க முயற்சிக்கவில்லை. இத்தகைய இனக்கலவரங்கள் மலையகம் எங்கும் 1978, 79, 80, 83 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இடம்பெற்றன. நிறைவேற்று அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, தமிழ் மக்கள் கோரிய தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பதற்கு பதிலாக “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்” என்று தமிழ் மக்களிடம் சவால் விடுத்தார். பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்கள், போக்கிடம் இன்றி, வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்குச் சென்று குடியேற முற்பட்டனர். அநேகமானோர் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் குடியேறினர். இவ்வாறு அகதிகளாகச் சென்றவர்கள், வடக்கு-கிழக்கு உள்நாட்டு யுத்தத்தினால் மேலும் பாதிக்கப்பட்டு, யுத்தத்தில் பங்கேற்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகினர். மலையக-இந்திய வம்சாவழி தமிழ் இனத்தைச் சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இறுதி யுத்தத்தின் போது பலியானார்கள் என்று உத்தியோகபூர்வமற்ற ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

1977 ஜூலை மாத பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும், தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றது. ஆயினும், அது இரண்டு வாரங்களுக்கு மட்டுமே நீடித்தது. பின்னர் இரு ஆதரவாளர்களது கவனமும் தமது கிராமங்களைச் சுற்றி வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களை நோக்கித் திரும்பியது. கண்டி மாவட்டத்திலும் தென் பிரதேசங்களைச் சேர்ந்த மலையக மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களை குறிவைத்தும் பரவலாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. நாடெங்கும் ஆங்காங்கே குறிப்பிட்ட அளவு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று சொத்துச் சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. 1977 ஆகஸ்ட் 13 சம்பவங்கள் பற்றியும் அதன் விளைவுகள், சேதங்கள், காரணங்கள் என்பவற்றை விசாரிப்பதற்காகவும் ஒரு தனிநபர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.சீ. சன்சோனி செயற்பட்டார்.

அந்த ஆணைக்குழு வெறுமனே ஒரு கண்துடைப்பாக இருந்தபோதும் அது சமர்ப்பித்த அறிக்கையில் இருந்து வன்முறைகள் இடம்பெற்ற காலம், தீ வைக்கப்பட்ட இடங்கள், சம்பவங்களின் விபரம், உடல் ரீதியான தாக்குதல்கள், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களை துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தச் சம்பவங்கள் அவ் அறிக்கையில் ‘இனரீதியான பயங்கரவாத வன்முறைகள்’ என்று வர்ணிக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், மேற்படி வன்முறைகளை வன்மையாக கண்டிப்பதுடன் இதற்கான முழுக் காரணத்தையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குறிப்பிட்டிருந்தது. கலவரங்களின்போது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இந்த நாட்டு அரசியல் தலைவர்கள் எவரும் இதனை கண்டிப்பதற்கு முன்வரவில்லை. இந்திய அரசாங்கம் கூட வாய் திறக்காது மௌனம் காத்துக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டு மக்கள் வெகுண்டெழுந்து பெரும் ஊர்வலங்களை நடத்திய பின்னரே இந்திய அரசாங்கம், இலங்கை அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கத் துணிந்தது. ஆனால் அதன் பின்னரும் வன்முறைகள் ஓயவில்லை.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4329 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)