Arts
13 நிமிட வாசிப்பு

இரு தலைமுறை இரு உலகம் : எதிர்நோக்கும் சவால்கள்

December 19, 2023 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது”
-திருக்குறள்-

சாலமன் பாப்பையா விளக்கம்: தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.

எமது அடுத்த தலைமுறையின் வாழ்க்கை, நாம் வாழ்ந்த வாழ்க்கையிலும் மிக வித்தியாசமானது. ஈழத்தில் வாழும் தமிழ்ச் சொந்தங்களானாலும் புலம்பெயர்ந்து வாழும் எம்மைப் போன்றவர்களானாலும், அவர்களது அடுத்த தலைமுறையுடன் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் ஏராளம். இதற்கு சுற்றுச் சூழலும் ஒரு காரணம். அத்தோடு இன்றைய தொலைத்தொடர்பு முன்னேற்றம், சமூக ஊடகத்தின் எளிதான அணுகல் என்பனவும் காரணங்கள் என்று கூறலாம். எனது முதலாவது நிறுவனம் உருவாக்கிய Voice Over IP தொழில்நுட்பம் உலகத்தில் எந்த மூலையில் இருப்பவர்களையும் இணைக்கும் ஓர் அடிப்படைத் தொழில்நுட்பமாக இருந்தது. அதனால் உருவான நன்மைகள் மிகவும் அதிகம் என்றாலும், அதனை பொறுப்பாக உபயோகிப்பது அவசியம்.

ஈழத்தில் வாழும் பெற்றோர்களும் அவர்கள் பிள்ளைகளும் ஒரே இடத்தில் பிறந்து வளர்ந்தாலும், அவர்களது பிள்ளைகளின் சமூக ஊடக நுழைவு, அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் இரு உலகங்களில் வாழ வழிசெய்துவிட்டது. அதனைத் தவிர்ப்பது சுலபம் இல்லை. அதனை முழுமையாகத் தவிர்த்தால், பிள்ளைகள் பல நல்ல விடயங்களை அறியும் வாய்ப்பு குறைக்கப்படலாம்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் பிறந்தது ஓர் இடம், பின் வளர்ந்தது இன்னோர் இடம். ஆனால் அவர்கள் பிள்ளைகளோ தமது பெற்றோருக்கு அந்நியமான சூழலில் பிறந்து வளர்கிறார்கள். பெற்றோர்கள் (என் தலைமுறை) இப்போதும் ஈழத்தில் பிறந்து வாழ்ந்த வாழ்வு நிலைப்படியே தமது பிள்ளைகளையும் வளர்க்க விரும்புகிறார்கள். அதனால் ஏற்படும் மன உளைச்சல்களையும் பிள்ளைகள் எதிர் நோக்கும் புதிய சவால்களையும் அறிய மறுக்கிறார்கள்.

இந்தக் கட்டுரையில், இது தொடர்பான எனது அவதானிப்புகளையும் அதை எவ்வாறு அனுசரித்து பிள்ளைகளை அவர்களது சமூகத்தின் முன்மாதிரியான குடிமகனாக ஆக்கலாம் என்றும் கூற முயல்கிறேன்.

வித்தியாசமான ஆரம்பப்புள்ளி: நாம் பிறந்து வளர்ந்த சூழ் நிலைகளுக்கும் சமூகத்தின் தற்போதைய சூழ்நிலைகளுக்கும் பாரிய வித்தியாசங்கள் உண்டு. ஈழத்தில், கடல் மற்றும் சில நிலவளங்களைத் தவிர இயற்கை வளங்கள் குறைவு. கல்வியில் உச்சத்திலிருக்கும் 5-10% வீதமான ஆட்களே பல்கலைக்கழகம் போக முடியும். மிகுந்த போட்டியின் மத்தியில் படித்தால் தான், பல்கலைக்கழகம் செல்லமுடியும். பண வசதி குறைந்தவர்கள் தனியார் பல்கலைக்கழகம் செல்வது கடினம். ஆனால் இன்றைய தலைமுறையின் உலகம் மாறியிருக்கின்றது. அவர்களால் பொறியியலாளர், வைத்தியர், கணக்காளர் மட்டுமன்றி பல தொழில்களிலும் பணிசெய்ய முடிகின்றது. இதனை அறிந்து, அவர்களது ஆர்வத்தையும் திறமையையும் புரிந்து, அவர்களுக்கு விருப்பமான தொழிலில் ஈடுபட அவர்களை ஊக்குவிப்பது எமது கடமை.

அதிக வாய்ப்புகள்: நாம் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில், படித்து முடித்தபின், படிப்பிற்கான கூடுதலான வேலை வாய்ப்புகள் அரசாங்க நிறுவனங்களிலும் சில தனியார் நிறுவனங்களிலுமே இருந்தன. ஆனால் இன்று, வெளிநாடுகளில் வளர்வோருக்கு நல்ல சம்பளத்துடன் தனியார் நிறுவனங்களில் சிறந்த வேலைகள் கிடைக்கின்றன. ஈழத்திலும், நன்றாகப் படித்தவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கின்றது. இதனால், எமது அடுத்த தலைமுறைக்கு அறிவுரை கூறும்போது, எமது முன்னைய சூழலை கருத்தில் கொள்ளாது, அவர்களை இன்றைய நடைமுறைக்கேற்ப தொழில் செய்ய ஊக்குவிக்க வேண்டும். நான் இப்போது பல இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதல் செய்து வருகிறேன். அவர்களது யோசனைகளும் அவர்களது கனவுகளும் மிக வித்தியாசமானது. அவற்றை திறந்த மனத்துடன் கேட்டு, எமது அனுபவங்களை பகிர்வதன் மூலம், அவர்களை ஊக்குவிக்க முடியும்.

வாழ்க்கை அனுபவத்தை பகிர்தல்: ஈழத்திலென்றாலும் வெளிநாடுகளிலென்றாலும் எமது தலைமுறை, பல சிக்கலுக்குள் பிறந்து, போரைச் சந்தித்து, உயிர் பிழைத்து, அதன் பின் உழைத்து வளம் சேர்த்து, அடுத்த தலைமுறையை உண்டாக்கி வளர்த்து, தற்போதைய நிலைக்கு வர, பல தியாகங்களைச் செய்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்க்கைக் கதையை ஒரு பெரிய நூலாகவே எழுதலாம். ஐக்கிய அமெரிக்காவில் எனது கதையை மற்றவர்களுடன் பகிரும்போது எனது சக தொழிலாளர் ஆச்சரியப்படுவர். அப்படியான கடினமான சூழ்நிலையில் பிறந்து எப்படி இந்த நிலைக்கு வரக்கூடியதாக இருந்தது என்பார்கள். இப்படியான எமது வாழ்க்கை அனுபவங்களை எமது அடுத்த தலைமுறையுடன் பகிர்வது முக்கியம். ஆனால் பகிரும்போது கவனம் தேவை. நாம் அப்போது அனுபவித்த மாதிரி, இப்போதைய தலைமுறையும் பல கஷ்டங்களை எதிர்நோக்குகிறது. அவர்களது கஷ்டங்களை கொச்சைப்படுத்தாமல், எமது அனுபவங்களை அவர்களுடன் பகிர்வது அவசியம்.

மந்தை மனநிலையைக் குறைத்தல்: நான் மேலே கூறியதுபோல், இப்போது வாழ்வில் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு குழந்தைகளும் வெவ்வேறு துறைகளில் மிளிர வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. தொழில்நுட்பம் மிக வேகமாக மாறிக்கொண்டு இருக்கிறது. இதனால், மற்றவர்கள் பின்பற்றும் வழிதான், எனக்கும் சிறந்தது எனச் சிந்திப்பது சில நேரத்தில் நல்ல முடிவைக் கொடுக்காது. மந்தை மனநிலையக் குறைத்து பிள்ளைகளின் தனித்துவமான திறமையையும் அவர்களது குறிகோள்களையும் அறிந்து அவர்களது எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஊக்கம் கொடுப்பது முக்கியம்.

herd mentality

நடைமுறைப் பயன்பாடு: நாங்கள் எண்பதுகளில் அறிவியல் பாடங்களைப் படித்தபோது, அதன் நடைமுறை அறிவு எமக்குத் தெரியவில்லை. அந்தப் பாடங்களின் கோட்பாடுகளை சிறப்பாகத் தெரிந்து வைத்திருந்தாலும், அதன் நடைமுறை முற்றாக எமக்கு புரிந்ததில்லை. நான் ஹாட்லி கல்லூரியில் உயர்தரம் படித்தபோது, ஆபிரிக்காவில் கற்பித்துவிட்டு இலங்கை திரும்பியிருந்த ஆசிரியர் பத்மநாதன் எமக்கு பௌதீகவியல் கற்பித்தார். அவர் கணனியைப்பற்றி அறிந்து வந்திருந்தார். அவர் எனக்கும் சில மாணவர்களுக்கும் எப்படி binary இலக்கங்களை அடிப்படையாக வைத்து கணணிகளை உருவாக்குவது என்று சொல்லிக்கொடுத்தார். நான் கணணிப் பொறியியலாளராவதற்கு அந்த அடிப்படை அறிவு மிக உதவியாக இருந்தது.

தொண்டர் மனப்பான்மை: நான் ஆரம்பத்தில் கூறியது போல் எமது முன்னைய தலைமுறை உயிர்வாழ்தல், வாழ்க்கை நிலையை உயர்த்துதல் என்பவைகளைக் குறியாகக்கொண்டு வளர்ந்தது. சிரமதானம் எனும் செயற்பாட்டின் மூலம் எமது சமூகத்தோடு சேர்ந்து சமூகத்திற்குத் தேவையான விடயங்களைச் செய்தோம். அதன் மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கை மட்டுமன்றி இளைஞர்களின் தலைமைத்துவ திறமைகளையும் கூர்மைப்படுத்தினோம். ஆனால் தற்போதைய தலைமுறைக்கு அந்த அனுபவங்கள் கிடையாது. அவர்கள் சிரமப்பட நாம் விடுவதும் இல்லை. அப்படியான செயற்பாடுகளைச் செய்வதன் மூலம் மற்றவர்களின் கஷ்டங்களை புரிந்துகொள்ளலாம். தேவையான இடங்களில் தொண்டு செய்வதன் மூலம் பள்ளியில் கற்காத பல விடயங்களை கற்க முடியும். நான் சிறிய வயதில் குளங்களை புனரமைக்க உதவியதும், திருவிழாக் காலங்களில் கோவில்களை துப்புரவாக்கியதும், கிரிக்கெட் மற்றும் கைப்பந்தாட்ட மைதானங்களை உண்டாக்கியதும் இன்றும் மனதில் ஆனந்தமான நினைவுகளாக உள்ளன. 

பணத்தின் அருமை: ஈழத்தில் நாங்கள் பிறந்து வளர்ந்த பூமி மிக வரண்ட தேசம். மாரி கால மழையைத்தவிர வேறுமழை கிடைக்காது. மழை காலத்தில் வயலில் நெல் வளர்த்து தை மாதம் அறுவடை செய்வோம். அப்படி வரும் நெல்லை வருடம் முழுக்க வைத்து குடும்பத்துக்கு உணவு குடுப்போம். அரசாங்க அல்லது கூலி வேலையின் மூலம் வரும் பணத்தை சரியாகச் செலவுசெய்து வாழ்க்கையைச் சமாளிப்போம். இப்போது அந்த நிலை மாறிவிட்டது. ஆனாலும் பணத்தின் அருமையை புதிய தலைமுறை அறிய வேண்டும். நாம் எமது பிள்ளைகளை சிறிய வயதிலிருந்தே பணம் உழைக்கக்கூடிய வேலையை செய்ய வைப்பது அதற்கு ஒரு சிறந்த வழி. அதன் மூலம் தான் அவர்கள் பணம் சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் என்று அறிவார்கள். எனது பிள்ளைகள், தாங்கள் வேலை செய்து சம்பாதித்த பணத்தைச் சேமிக்க வங்கியில் கணக்குத் திறந்தார்கள் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

சமூக ஊடகங்களும் கட்டுப்பாடும்: முன்னைய காலத்தில், செய்திகள் ஊருக்கு வந்துசேர மாதங்கள் வருடங்கள் ஆகும். அமெரிக்காவிலிருந்த ஹிப்பி வாழ்முறை அறுபதுகளில் ஆரம்பித்திருந்தாலும் அது ஈழம் வந்துசேர எழுபதுகள் ஆனது. எண்பதுகளில் தொலைக்காட்சி வந்ததால் செய்திகள் கொஞ்சம் வேகமாக வரத்தொடங்கியது. ஆனால் இப்போது முழு உலகமுமே சகல செய்திகளையும் ஒரே நேரத்தில் அறிந்துவிடுகிறது. அதனால் பல நன்மைகள் இருந்தாலும் சில குறைகளும் இருக்கவே செய்கிறது. உலகத்தில் எல்லோரும் அறிவை ஒரே மட்டத்தில் அடைந்து அதற்கேற்ப வாழ்க்கையை தயார் செய்யலாம் என்பது ஒரு நன்மை. ஆயினும் சில செய்திகள், தகவல்கள் மன அழுத்தத்தை கொண்டுவர சாத்தியமுண்டு. முற்றாக சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு கொடுக்காமல் பிள்ளைகளோடு மனம் திறந்து கதைப்பதன் மூலம் அவர்களை எதிர்கால உலகத்திற்கு தயார் செய்ய முடியும்.

students using smartphones

நான் மேலே கூறிய விடயங்கள் ஈழத்தில் வாழும் எமது மக்களுக்கு மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் வாழும் எமது மக்களுக்கும் பொருந்தும். ஈழத்தில் வாழும் முன்னைய தலைமுறை பிறந்து வளர்ந்தது ஒரே இடம். அவர்களது பிள்ளைகளும் அதே பூமியிலேயே பிறந்து வளர்கிறார்கள். ஆனால், நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தால் உலகமே அவர்களது கையில் ஸ்மார்ட் தொலைபேசி வடிவில் உள்ளது. இதனால் முன்னைய தலைமுறையின் எதிர்பார்ப்புகளுக்கும் இன்றைய தலைமுறைகளின் நோக்கங்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 

grand pa and grandchildren

அதேபோல் புலம்பெயர்ந்த எமது மக்கள் சிறிய வயதில் வாழ்ந்த சமூக சூழ்நிலைகளும் அவர்களது பிள்ளைகள் வாழும் சூழ்நிலைகளும் வித்தியாசமானவை. வெளிநாடுகளில் தொழில்நுட்பம் மட்டுமன்றி அவர்கள் வாழும் சமூகங்களுமே வித்தியாசமானது. அதனால் முன்னைய தலைமுறையினர் இரு உலகங்களுக்குமிடையில் வாழ சிரமப்படுகின்றனர். தமது பிள்ளைகளையும் பழைய வாழ்க்கை நெறியுடன் வளர்க்க முயல்கின்றனர். இது பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்குகின்றது. இரு தலைமுறைகளும் அனுபவிக்கும் சவால்களை ஆராய்ந்து, அதைப்பற்றி வெளிப்படையாகக் கதைத்து, எமது அடுத்த தலைமுறையை நாம் கட்டிய அடித்தளத்திலிருந்து மேலே செல்ல வைப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு. இதற்கு நான் இங்கே உரையாடிய சில விடயங்கள் உதவுமென்று நினைக்கிறேன். இதனை மற்றவர்களுக்கு மட்டுமன்றி எனக்கும் ஓர் அறிவுரையாக எடுத்துக் கொள்கின்றேன்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8918 பார்வைகள்

About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)