Arts
19 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – பகுதி 2

June 26, 2023 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

யாழ்ப்பாணத்தில் நூலக வளர்ச்சியில் நாவலரது காலப்பகுதியை கணிசமான கவன ஈரப்புக்கு உட்பட்டதாகக் கொள்ளலாம். நாவலர் வாழ்ந்த காலப் பின்னணியும் சமய இயக்கங்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பெருக்குவதற்கு உதவின. இக்காலத்தில் மக்களின் கல்வியை ஓங்கச் செய்வதற்கு சமய நிறுவனங்கள் சிறந்த சாதனங்களாக விளங்கின. பப்டிஸ்ட் மிஷன் (Baptist Mission), வெஸ்லியன் மிஷன், அமெரிக்கன் மிஷன் ஆகிய சமய நிறுவனங்களின் தொண்டர்கள் இக்காலத்தில் இலங்கைக்கு வந்து சமயப் பணியினை ஆற்றினார்கள். இக்காலத்தில் சமய நிறுவனங்களின் மூலமாகவே கல்வியை வளர்க்க வேண்டியது அவசியமாக இருந்தது. நாவலரும் அதே அடிப்படையில் ஏனைய சமய நிறுவனங்களைப் போலவே கல்வியைப் பரப்பும் எண்ணம் கொண்டு செயலாற்றினார். மக்களுக்கு ஏற்ற புத்தகங்களை எழுதி அவற்றை வெளியிட்டார். இவற்றைச் சேகரித்து வைப்பதற்காக அவரால் என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன என்பது திட்டமாகத் தெரியாவிட்டாலும், அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டார் என்பது அவரின் வரலாறு மூலமாக அறியக் கிடக்கிறது.

navalar

நாவலரது வரலாற்றை எழுதிய கனகரத்தின உபாத்தியாயர், ‘ஆறுமுகநாவலர் சரித்திரம்” என்ற தனது நூலில் ‘தமது வித்தியாசாலையிலே கல்வி கற்கும் பிள்ளைகளுக்குக் கருவி நூல் உணர்ச்சியும், சமய நூல் உணர்ச்சியும் ஆகிய இரண்டையும் ஊட்டத்தக்க புத்தகங்கள் இங்கிலாந்தில் இருந்தமையாயினும் இங்கிருந்த புத்தகங்கள் தானும் எழுத்துப் பிழை, சொற் பிழை, வசனப் பிழைகளே பொதிந்தவைகளாதலானும் அச்சிலும் ஏட்டுப் பிரதிகளிலும் உள்ளவைகளைத் தாம் பரிசோதித்தலும், புதிதாகச் சில நூல்களைச் செய்தலுமாகிய இரண்டினாலும் அப்பிள்ளைகளுக்குப் பயன் பெரிதும் சித்திக்கப் பண்ணலாமென்று அவைகளை அச்சிலிடுவித்தற்கு ஒரு அச்சியந்திரம் அவசியம் வேண்டுமென்று நினைத்து………“ என்றவாறு குறிப்பிட்டுச் செல்வது நாவலரது கல்விப் பணியினை எடுத்துக் காட்டுவதுடன் மட்டுமல்லாது நூல்களின் அவசியத்தை அவர் உணர்ந்து எவ்வாறு செயலாற்றினார் என்பதையும் புலப்படுத்தி நிற்கின்றது. (வே.கனகரத்தின உபாத்தியார், யாழ்ப்பாணம்: நாவலர் நூற்றாண்டு விழாச்சபை வெளியீடு, 1968. பக். 10).

யாழ்ப்பாணத்தில் நூலக வளர்ச்சி பற்றி திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் விரிவான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். இது 19.5.1976 அன்று இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தில் நடைபெற்ற தென்னாசியவியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது. பின்னர் இக்கட்டுரையின் திருத்தப்பட்ட பிரதி ‘நூலகவியல்” காலாண்டிதழில் 1986-1987 காலகட்டத்தில் மூன்று இதழ்களில் தொடராகவும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் இக்கட்டுரைத் தொடருக்கு உறுதுணையாக இருந்துள்ளது. (நன்றி: திருமதி மனோன்மணி சண்முகதாஸ்).

ஆறுமுக நாவலரின் காலப் பகுதியில் கிறிஸ்தவ சமய இயக்கங்களும் இத்தகையதொரு நூற் பாதுகாப்பினைச் செய்ய முற்பட்டிருக்கின்றன என அறிய முடிகின்றது. 1816 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவிலிருந்து முதன் முதலாக மிஷனரிமார் யாழ்ப்பாணத்திற்கு வந்தனர். தெல்லிப்பழை, உடுவில், வட்டுக்கோட்டை, மானிப்பாய், பண்டத்தரிப்பு ஆகிய இடங்களில் தமது சமய ஸ்தாபனங்களை அவர்கள் நிறுவினர். 1832 ஆம் ஆண்டில் ‘யாழ்ப்பாணம் சுவிசேஷ சங்கம்” என ஒரு சங்கத்தையும் அவர்கள் நிறுவி அதன் மூலமாக மிஷன் தாபனங்களுக்கு அப்பாற்பட்ட கிராமங்களிலும் கிறிஸ்துவ சமயத்தைப் பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத் தீவுகளான வேலணை, சரவணை, நெடுந்தீவு போன்ற இடங்களிலே பாடசாலைகளை நிறுவினர். மாணவர்களுக்கு இலவசமாக நூல்களை வழங்கிக் கல்வியைப் பரப்பினர். இந்நூல்களின் பிரதிகள் அவர்களது பாடசாலைகளிலே வைக்கப்பட்டிருந்தன. சங்கானை, உடுத்துறை போன்ற இடங்களிலும் திருச்சபைகள் நிறுவப்பட்டுக் கல்விப் போதனைகளும் மதப் பரம்பலும் நடைபெற்று வந்தன. மேலதிகமாக இவர்கள் தமிழ் இலக்கியத்தையும் இந்து சமயத்தையும் சைவ சித்தாந்தம் முதலானவற்றையும் கற்றுத் தமது ஆராய்ச்சிகளின் பெறுபேற்றை வெளியிட்டும் வந்தனர். தமது தேவாலயங்களிலே மக்களுக்கு மதப் போதனைகளை விரிவுரைகள் மூலம் செய்து வந்தனர். மதம் சம்பந்தமான புத்தகங்கள் பிற மொழியிலே இருந்தமையால் அவற்றினைப் படிப்பது எல்லோருக்கும் சுலபமான காரியமாக இருக்கவில்லை. இதனால் கல்வி கற்றோர் போதனை மூலமே இதனைச் செய்து வந்தனர். மத குருமார் புத்தகங்களைத் தேவாலயங்களிலே வைத்திருந்திருக்கக் கூடும். இதனால் இக்காலத்தில் தேவாலயங்கள் தான் உசாத்துணை நூலகங்கள் போல் விளங்கியிருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. இதன் பின்புலத்திலேயே பௌத்த மடாலயங்களிலும், சைவக் கோவில்களின் கருவூலங்களிலும் ஏடுகள் பாதுகாத்து வந்தமையையும் பொருத்திப் பார்ப்பது சுவாரஸ்யமானது.

பொது மக்களிடையே இதனால் வாசிக்கும் பழக்கம் இருந்திருக்க முடியாது. மத சம்பந்தமான விரிவுரைகளையும் கதாசங்கிதைகளையும் கேட்கும் பழக்கமே அந்நாளில் இருந்திருக்கலாம். இதனால் இக்காலத்தில் நூலகங்கள் தோன்றுவதற்கு ஏற்ற காரணிகள் இருந்தபோதும் பெருகிய நூல்கள் இல்லாமையால் இவற்றின் தேவை ஏற்படவில்லை. இதற்குக் காரணமாக அச்சியந்திரமின்மையையும் குறிப்பிடலாம். நூல்கள் அச்சியந்திரத்தின் வருகையால் நாட்டிலே பெருக்கமடைந்த பின்னர் மக்களிடையே இவ்வாறு கேட்கின்ற பழக்கம் மாறித் தாமே நூல்களை வாசிக்கின்ற பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். நாவலர் கூட ஆரம்பத்தில் தமது சொற்பொழிவுகள், மேடைப் பேச்சுக்கள் மூலமே கருத்துக்களை மக்களிடையே பரப்பியதை இங்கு குறிப்பிடலாம்.

19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சைவ சமயமும் கிறிஸ்தவ சமயமும் தத்தமது வளர்ச்சியிலே முதிர்ந்த நிலை அடைந்தபோது கல்வி நிலையில் ஏற்பட்ட மாற்றங்களாலும் பத்திரிகைத் துறை என்னும் புதிய துறையின் வளர்ச்சியாலும் மக்களிடையே மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. 1841இல் “உதயதாரகை” என்னும் பத்திரிகையும் 1889ல் “இந்துசாதனம்” என்னும் பத்திரிகையும் குறிப்பாக மக்களுக்குப் பல்வேறு விடயங்களைப் பற்றிய அறிவினைச் செய்திகளாக ஊட்டத்தொடங்கின. இவை சமயக் கருத்துக்களையும் பொது விஷயங்களையும் பிரசுரித்தன. இந்தப்பத்திரிகைகளைப் பொதுமக்கள் சென்று படிப்பதற்காகப் படிப்பறைகள் அல்லது புத்தகசாலைகள் அமைக்கப்பட்டன.

எனினும் குறிப்பாக இந்தக்காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் நூலகங்களின் வளர்ச்சி எவ்வாறிருந்ததென்பதை நாம் தெளிவாக ஆதாரங்கள் மூலம் அறிய முடியாமலிருக்கிறது. சமய வரலாற்றினையும் கல்வி வளர்ச்சியினையும் ஆதாரமாகக் கொண்டு அதன் வளர்ச்சியை ஓரளவுக்கு கட்டமைக்க முடிகிறது. தனிப்பட்ட முறையிலே ஒவ்வொருவரும் தத்தம் வீடுகளில் நூல்களைச் சேகரித்து வைத்திருந்தனரென்பதற்கு ஆதாரங்கள் உண்டு.

வட்டுக்கோட்டை செமினரி நூலகமும் டானியல் பூவர் நூலகமும்

jaffna-college

பாடசாலைகளிலும் கூட முற்காலங்களில் இத்தகைய நூல் நிலையங்கள் இருந்ததாக அறிய முடியவில்லை. முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் 1823 இல் நிறுவப்பட்ட வட்டுக்கோட்டை செமினரியில் ஒரு சிறு நூலகம், செமினரியின் மாணாக்கர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் நோக்கில் உருவாக்கப்பட்டிருந்தது. போதிய அளவில் இந்துக்களை கிறிஸ்தவ மதத்துக்குச் சேர்ப்பதில் வட்டுக்கோட்டை செமினரியினரால் போதிய அக்கறை காட்டப்படவில்லை என்ற காரணத்தால் வட்டுக்கோட்டை செமினரி 1855 இல் மூடப்பட்டது. இருப்பினும் வட்டுக்கோட்டை செமினரியின் பழைய மாணவர்கள் (Alumni) இணைந்து 1871 இல் ‘யாழ்ப்பாணக் கல்லூரி” என்ற பெயரில் அதனை மீளக்கட்டி எழுப்பினர். செமினரியிலிருந்து தோற்றம் பெற்ற யாழ்ப்பாணக் கல்லூரியினால் இந்த செமினரி நூலகமும் 2000 நூல்களுடன் பின்னாளில் 1867இல் உள்ளீர்க்கப்பட்டது.

‘இந்த செமினரி மூடப்பட்டதும் இந்த நூல்கள் புதிதாக ஆரம்பிக்கப் பெற்ற யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வழங்கப்பட்டன. அமெரிக்க மிஷன் அச்சிட்ட நூல்களில் சில மறைந்துவிட்டன. எனினும் பெரும்பாலான நூல்களை இப்போது உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி நூல்நிலையத்தில் காணலாம்…….. “ (அம்பலவாணன். ‘ஈழத்து இணையற்ற நூல்நிலையம்”. ஸ்ரீலங்கா, மார்ச் 1958: ப.27).

denial

ஆசியாவின் முதலாவது பாடசாலை நூலகமாகக் கருதப்படும் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம், இன்றைய வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்டதாகும். Undergraduate Library என பரவலாக அறியப்பட்டிருந்த இக் கல்லூரி நூலகமானது 1958 ஆம் ஆண்டில் 25000 நூல்களுடன் காணப்பட்டதாக அறியமுடிகின்றது. சிறிய அறையில் காணப்பட்ட நூலகம் படிப்படியாக விரிவடைந்து, கல்லூரியின் கேர்ணல் ஒல்கொட் ஞாபகார்த்த கட்டடத்தினை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் அளவிற்கு விரிவடைந்து சென்றது. யாழ்ப்பாணக் கல்லூரியில் ஜோன் பிக்னெல் அவர்களின் காலம் நூலகத்தின் பொற்காலமாகும். இவர் தனது அரிய நூற்சேகரிப்பை நூலகத்திற்கு வழங்கியதுடன் பல்வேறு அறிஞர்களின் தனிப்பட்ட சேகரிப்புகளையும் நூலகத்திற்குப் பெற்றுக்கொடுப்பதில் முன்நின்று உழைத்தார். (தகவல்: யாழ்ப்பாணக் கல்லூரி டானியல் பூவர் நூலகம்: யாழ்ப்பாணக் கல்லூரி ஒரு நோக்கு, கிருபாமலர் உலகராஜா-தொகுப்பாசிரியர், 2023).

பின்னாளில் 1974இல் யாழ்ப்பாணக் கல்லூரி வளாகத்தின் நுழைவாயிலையொட்டி நவீன நூலகக் கட்டடமொன்றுக்கான அடிக்கல் நாட்டப்பெற்று, 1980இல் அது கட்டி முடிக்கப்பட்டு ‘டானியல் பூவர் ஞாபகார்த்த நூலகம்” என்ற பெயரும் அக்கட்டடத்துக்கு சூட்டப்பட்டது. இந்த நூலகக் கட்டடம் திரு. ராஜன் கதிர்காமர் அவர்கள் கல்லூரி அதிபராக இருந்த காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்லூரியின் முதலாவது அதிபரும் கல்லூரியின் வளர்ச்சிக்கு அத்திபாரமாக இருந்தவருமான டாக்டர் டானியல் பூவரின் (27.06 1789 – 03.02.1855) நினைவாக North Eastern hill University of India என்ற இந்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ சந்திரன் தேவநேசன் அவர்களால் 31.05.1980 இல் (யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்படுவதற்கு சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னதாக) திறந்து வைக்கப்பட்டது.

இதே பெயரில் தமிழ்நாட்டில் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் ஏற்கனவே ஒரு நூலகம் கட்டப்பட்டு 28.6.1915 முதல் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கான நிதியுதவியை டானியல் பூவரின் பேர்த்தியான சாமுவேல் ஏ.மோர்மான் அவர்கள் அமெரிக்க மிஷனுக்கு வழங்கியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணக் கல்லூரி நூலகர்களான அமரர் கே.செல்லையா, அமரர் ஆர்.எஸ்.தம்பையா ஆகியோரின் தீவிர கரிசனையின் காரணமாகவும் அர்ப்பணிப்பு மிக்க சேவைகளின் பெறுபேறாகவும் இந்நூலகம் ஆரம்ப காலங்களில் சிறப்புற வளர்த்துச் செல்லப்பட்டது. 1974இல் நூலகர் ஆர்.எஸ்.தம்பையா அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதில் நூலகராகப் பதவியேற்றுச் சென்ற பின்னர் இன்றளவில் தரம் மிக்கதொரு நூலகரை இக்கல்லூரி வளர்த்தெடுக்கத் தவறிவிட்டமை வேதனைக்குரியதாகும்.

denial library

ஆரம்பகால யாழ்ப்பாணக் கல்லூரியின் நூலக சேவையின் வரலாற்றின் சிறப்பான விளைபயிர்களாக சீ.டபிள்யூ. தாமோதரம்பிள்ளை, ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ள, நெவின்ஸ் சிதம்பரப்பிள்ள, வைமன் கதிரவேற்பிள்ள, எட்வேட்ஸ் கனகசபைப் பிள்ளை, T. P.ஹண்ட், கறோல் விசுவநாதபிள்ளை ஆகியோரைக் குறிப்பிடலாம். எழுத்துலகில் ஒரு காலத்தில் கோலோச்சியவர்கள் இவர்கள். இவர்களின் அறிவுத்தேட்டத்தின் பின்புலமாக இருந்த யாழ்ப்பாணக் கல்லூரி நூலகத்தின் சேவைப்பரப்பின் விஸ்தாரத்தினை இப்பிரமுகர்களின் பல்துறைச் செயற்பாடுகளே நிரூபிக்கப் போதுமானவை.

இலங்கையின் வடபுலத்தில் எழுத்தறிவின்றி இருந்த பலரை எழுத்தறிவுள்ள பிரஜைகளாக மாற்றிய பெருமை யாழ்ப்பாணக் கல்லூரியைச்சார்ந்ததாகும். ஆரம்ப காலத்தில் வண. டானியல் பூவர் இக்கல்லூரியின் அதிபராகவிருந்தார். அவரது காலத்தில் கல்விசார் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே ஒரு தொகை நூல்களுடனான நூலகத்தையும் யாழ்ப்பாணக் கல்லூரி தன்னகத்தே கொண்டிருந்தது. 1826ஆம் ஆண்டு புதிதாக ‘Ottley hall” என்ற பெயரில் புதிய கட்டடமொன்று நிறுவப்பட்டபொழுது நூலகத்திற்கென மேல் மாடியில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. அவ்வேளையில் இந்நூலகத்தில் 600 நூல்கள் வரையில் காணப்பட்டன. இதில் அநேகமானவை அமெரிக்க மிஷன் வழங்கிய நூல்களாகும். 1875ஆம் ஆண்டுப் பகுதியில் 4000 நூல்களாக இந்நூற்றொகை வளர்ச்சிகண்டிருந்தது. 1908இல் வண. ஜீ.ஜீ.பிரவுண் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டதன் பின்னர் 1910ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்கானதொரு நிறுவனம் ‘ஆசிரியர் நிறுவகம்” (Teacher’s Institute) என்ற பெயரில் தென்னிந்தியத் திருச்சபையினரால் நிறுவப்பட்டது. இதே காலத்தில் இந்நிறுவகத்தின் செயற்பாட்டுக்கென இக்கல்லூரிக்கு வருகை தந்த அமெரிக்கப் பேராசிரியரான கலாநிதி எச். சி. யோர்க் அவர்கள் கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான நல்ல நூல்களை இந்நூலகத்தில் இணைத்ததுடன் இந்நூலகத்தின் நூல்கள் அனைத்தையும் தூவி தசாம்சப் பகுப்பாக்கத் திட்டத்திற்கு (Dewey Decimal Classification) அமைவாக மீளப் பகுப்பாக்கம் செய்து ஒழுங்குபடுத்தினார். இக்காலத்தில் நூலகத்திற்கென பிரித்தானிய கலைக்களஞ்சியம் தொகுதிகள் (Encyclopedia Britannica) மற்றும் The Historians’ History of the World என்ற உசாத்துணை நூல்களின் தொகுதிகள் என்பனவும் வந்து சேர்ந்தன.

“அக்காலத்தில் இதற்கு ஒப்பான ஓர் ஆங்கில வித்தியாசாலை யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல இந்தியாவிலும் இல்லை. ஆசியாக் கண்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாம் பெரிய ஆங்கில வித்தியாசாலை இதுவாம். இச்சாத்திரச் சாலையிலே மேலைத்தேச வித்தியா கழகங்களிலே கற்பிக்கப் படுகின்ற கணித சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம், ககோள சாஸ்திரம், பூகோள சாஸ்திரம், இலக்கண நூல்கள், இலக்கிய நூல்கள் ஆகியவற்றுடன் தமிழ் இலக்கண இலக்கியங்களும், சம்ஸ்கிருதம், கிரேக்கம், எபிரேய, ஆதியாம் பாஷைகளும், படிப்பிக்கப்பட்டன” என்று மெஸ். க. வேலுப்பிள்ளை அவர்கள் தான் எழுதிய “யாழ்ப்பாண வைபவ கௌமுதி” என்ற நூலில் குறிப்பிடுகிறார். (யாழ்ப்பாணம்: ஜயசிறீ சாரதாடேந்திரசாலை, 1918. ப. 278).

இதிலிருந்து அக்கல்லூரியின் கல்வித்தரத்தை உணரக் கூடியதாக இருக்கின்றது. இயற்கை அழிவுகள், போர் அழிவுகள், பாரிய இடப்பெயர்வுகள் ஆகியவற்றால் யாழ்ப்பாணக் குடாநாட்டு நூலகங்கள் பாதிக்கப்பட்ட வேளையில் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகத்தின் நூல்களும் பாதுகாப்புக் கரணங்களுக்காக எடுத்துச் செல்லப்பட்டு, மானிப்பாய் மெமோரியல் வைத்தியசாலையில் சிலகாலம் வைக்கப்பட்டு மீண்டும் சில அரிய நூல்களின் இழப்புகளுடன் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகத்திற்கே மீளவும் எடுத்து வரப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம் எதிர்கொண்ட பாரிய சவால்

1972 இல் இலங்கை சுதந்திரக் கட்சி வெற்றிபெற்று சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமரான பின்னர் 1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகமொன்றை நிறுவினார். அது இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் என அழைக்கப்பட்டது. அதற்கெனப் புதிதாகக் கட்டடம் எதனையும் கட்டி பல்கலைக்கழக வளாகத்தை அங்கே உருவாக்காமல், யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே வெற்றிகரமாக இயங்கிவந்த இரு பாரிய கல்வி நிறுவனங்களை கையகப் படுத்தினார்கள். சிறீமாவின் திட்டத்திற்குப் பலிக்கடாவானவை திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியுமேயாகும்.

வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி வளவிலமைந்துள்ள வெளிவாரிப் பட்டப்படிப்புகள் அலகினையும் (Undergraduate Section) 1921 ஆம் ஆண்டு ஓகஸ்து மாதம் சேர். பொன்னம்பலம் இராமநாதனால் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டிருந்த பரமேசுவராக் கல்லூரியையும் இணைப்பதன் மூலம் 01.08.1974 அன்று இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் நிறுவப்பட்டது. கலாநிதி க. கைலாசபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் விஞ்ஞான பீடம், மனிதப் பண்பியற் பீடம் என்பவற்றுடன் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண வளாகத்தின் முதல் போதனைசார் ஊழியர்களாக 1974 செப்டெம்பர் 01 ஆம் திகதியன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பணியாற்றிய சில ஆசிரியர்களும் நூலக அலுவலர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

யாழ்ப்பாணக் கல்லூரி வெளிநிலைப் பட்டப்படிப்புகள் அலகின் நூலக வளங்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திற்குள் உள்வாங்கப்பட்ட வேளை யாழ்ப்பாணக் கல்லூரியின் நூலகர் ஆர்.எஸ்.தம்பையாவும் யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்து நீங்கி, பல்கலைக்கழக பதில் நூலகர் பதவியை பெற்றுக்கொண்டார். ஆரம்ப காலத்தில், பரமேஸ்வராக் கல்லூரியில் தற்காலிகமாக ஒரு கட்டடத்தில் மனிதப் பண்பியல் பீடத்திற்கான நூலகமும், வட்டுக்கோட்டையில் அறிவியல் பீட நூலகமும் ஆரம்பிக்கப்பட்டன. பல்கலைக்கழக கல்வித் தகுதி அடிப்படையில் அவருக்கு பதில் நூலகர் தரத்திலேயே பணியாற்ற முடிந்தது. அங்கு அவர் 1974-1981 காலகட்டத்தில் பணியாற்றி பல்கலைக்கழக நூலகமொன்றின் ஆரம்பக்கட்டமைப்பினை வெற்றிகரமாகச் செய்துமுடித்தார்.

இவரது காலத்திலேயே யாழ். பல்கலைக்கழக நூலகம் விஞ்ஞான பீடத்திற்கும் கலைப்பீடத்திற்கும் நடுவில் பார்வதி பரமேஸ்வரன் ஆலயத்திற்கு தென்மேற்கில் இராமநாதன் வீதியை நோக்கி அமைந்த இடத்தில் 1980 ஆம் ஆண்டில் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 2000 ஆம் ஆண்டளவில் 67,718 சதுர அடிகள் கொண்ட சதுர நிலப்பரப்பில் கட்டி முடிக்கப்பட்டது. நவீன நூலகக் கட்டடத்தில் சேவையாற்றும் வாய்ப்பினை ஆர். எஸ். தம்பையா அவர்கள் பெற்றிராத போதிலும், வரையறுக்கப்பட்ட நிதி, ஊழியர் வசதிகளுடன் ஒரு பல்கலைக்கழகத்திற்கான அறிவியல் சேர்க்கையை உள்ளடக்கிய ஆரம்பகட்ட, அடிப்படைக் கட்டமைப்பினை அவர் வெற்றிகரமாக ஏற்படுத்தியிருந்தார்.

பரமேஸ்வராக் கல்லூரியில் சேர் பொன். இராமநாதன் அவர்களின் நூலகத்தில் இருந்த அரிய நூல்களையும் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம் கொண்டிருந்த 30,000 வரையிலான நூல்களையும் மேலும் பருவ இதழ்கள், அரச ஆவணங்கள், சிறு பிரசுரங்கள் போன்றவற்றையும் கொண்டு யாழ் வளாகம் தன் நூலகச் சேர்க்கைகளைக் கட்டியெழுப்பத் தொடங்கியது. நூலக சேர்க்கையையும் தளபாட வசதியையும் படிப்படியாக வளர்த்துச் சென்று பின்னாளில் பிரதம நூலகராகப் பதவியேற்ற சி.முருகவேள் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து அவர் விலகிக் கொண்டார். அவர் பல்கலைக்கழகத்தில் இணையும் வேளை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் நூலகச் சேர்க்கைகளின் பெரும்பகுதியை பல்கலைக்கழகம் உள்ளீர்த்துக் கொண்டதால், யாழ்ப்பாணக் கல்லூரி நிர்வாகம் அவற்றைத் திரும்பிப் பெற இலங்கை அரசாங்கத்துடன் நீண்டகாலம் போராடி 1980இல் தமது நூற்சேர்க்கையின் ஒரு சிறு பகுதியை மட்டும் மீளப்பெற்றுக்கொண்டது. இக்காலகட்டத்தில் திரு ஆர். எஸ். தம்பையா அவர்கள் யாழ்ப்பாணக் கல்லூரியின் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வந்ததை அவரது நூலகவியல்துறைப் பிரிவின் மாணவர்களாகப் பயின்றுவந்த அவ்வேளையில் அவர் எம்மிடம் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தார். ஆக, யாழ்ப்பாணத்தின் நூலக வரலாற்றில், குறிப்பாக யாழ்ப்பாணக் கல்லூரியின் வரலாற்றில், வரலாற்று முக்கியத்துவமான அரிய நூலகச் சேர்க்கையின் சாரத்தை கபளீகரம் செய்து ஒரு பல்கலைக்கழக நூலகத்தின் உருவாக்கத் திட்டமிட்டு செயற்படுத்தியதன் மூலம் நீண்டதொரு வரலாற்றுப் பின்புலம் கொண்ட யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், பரமேஸ்வரா கல்லூரிக்கும் ஈடுசெய்யவியலாத இழப்பினை சிறிமாவின் அரசு கனகச்சிதமாகச் செய்து முடித்துவிட்டது. இன்று வரை அந்த இழப்பு மீள ஈடுசெய்ய முடியாதவையே.

நூல்களின் பெருக்குக் காலம்

இருபதாம் நூற்றண்டின் ஆரம்பகட்டத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் பெருந்தொகையான நூல்கள் வந்து சேர்வதற்கு அக்காலத்தில் புத்தகங்களை அச்சடிப்பதற்கு தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மிஷனரிமார்களின் மூலம் அச்சியந்திரங்கள் அறிமுகமாகி இருந்ததும் ஒரு காரணமாகும். இம்மிஷனரிமார்கள் தாமே புத்தகங்களை அச்சடித்துப் பரப்பினர். “இவ்விதக் கல்வி விருத்திக்கு உதவியாய் அமெரிக்க மிஷனரிமார் அச்சியந்திரசாலை ஒன்றை ஸ்தாபிக்க 1820இல் ஓர் அச்சியந்திரத்தை அமெரிக்காவில் இருந்தும் அதற்கு வேண்டிய எழுத்துக்கள் ஆகியவற்றை கல்கத்தாவிலிருந்தும் வருவித்தனர். இதுவே யாழ்ப்பாணத்தில் தாபிக்கப்பட்ட முதல் அச்சியந்திரமாம்…..“ (யாழ்ப்பாண வைபவ கௌமுதி. பக். 279-280) என்று யாழ்ப்பாண கௌமுதியில் கூறப்பட்டிருக்கும் செய்தி இதனை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

அச்சியந்திரம் இருந்தமையால் வெளிநாட்டில் இருக்கின்ற நூல்களையும் இங்கு அச்சடிப்பதற்கு உதவியாக இருந்ததினால் நூல்களின் பெருக்கமும் இக் காலத்தில் ஏற்படத் தொடங்கியிருந்தது. அவ்வாறு நூல்கள் பெருகும்போது அவற்றை ஓரிடத்திலே சேகரித்து வைக்கும் முகமாகப் பல புத்தகசாலைகளும் மிஷனரி பாடசாலைகளில் நிறுவப்பட்டன. இதனால் யாழ்ப்பாணக் கல்லூரி நூல் நிலையத்தைப் பின்பற்றி ஏனைய மிஷனரிமார்களால் ஸ்தாபிக்கப்பட்ட கல்லூரிகளிலும் நூல்நிலையங்கள் வளரத் தொடங்கின.

மேலும், இக்காலத்தில் குடாநாட்டின் ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சியும் இதனை உறுதிப்படுத்தி நிற்கிறது. “வட்டுக்கோட்டை செமினரி யாழ்ப்பாணத்திலே ஆங்கிலத் தமிழ்க் கல்வி விருத்திக்கு விஷேட சாதனமாயும் அரசாட்சி உத்தியோகத்தர் பலரைப் பயிற்றிய வித்தியாசாலையாயும், யாழ்ப்பாணத்துக்குச் செல்வ சம்பத்து, சீர்திருத்தம், சனசங்கத் தேர்ச்சி, முதலியவற்றுக்கு மூலகாரணமாயும் மிஷனரிமாரே ஊழியத்திற்குப் பலரைப் பழக்கி விட்ட விஷேச ஸ்தாபனமாகவும் விளங்கியது” என யாழ்ப்பாண வைபவகௌமுதி (பக். 289) குறிப்பிடுகின்றது. இதனால் இதுவே யாழ்ப்பாணத்தின் நூலக வளர்ச்சியினையும் குறிப்பிட்ட ஒரு படிமுறை வளர்ச்சியில் அமைத்து விட்டதெனலாம். கல்விச் சீர்த்திருத்தத்திற்கும் நூல்களைப் பெருக்குவதற்கும் உதவியது போல யாழ்ப்பாணத்தில் நூலகப் பண்பு ஒன்று மீண்டும் உருவாகுவதற்கு இதுவும் ஒரு காரணமாகின்றது.

1895ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் இந்நூலக வளர்ச்சியிலே இன்னொரு முன்னேற்றத்தினைக் காணக்கூடியதாக இருக்கின்றது. பள்ளிக்கூடங்களின் பெருக்கத்தினாலும் கல்வித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியினாலும் இது ஏற்பட்டது. பாடசாலைகளிலே புத்தகங்களை ஓரிடத்தில் ஒழுங்காக வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மாணவர்கள் தமது அறிவினைப் பெருக்குவதற்கு வாசிக்கும் பழக்கத்தினை மேற்கொள்ளத் தொடங்கினர். இதுவரை நிலவி வந்த பிரசங்க மரபு மாறி, தாமே விடயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் புத்தகங்களை நாடிச் செல்கின்ற நிலைமையை ஏற்படுத்தியது. இதனால் பாடசாலைகளிலே படிப்படியாக சிறிய நூலகங்கள் வளரத் தொடங்கின.

9.5.1895 “உதயதாரகை” பத்திரிகையில் பாடசாலை நூலக விருத்தி பற்றிய சுவாரஸ்யமான செய்தியொன்று காணப்படுகின்றது. “கோப்பாய் வித்தியாசாலையார் புத்தகசாலை ஒன்றுக்கு அடியிடக் காண்பது சந்தோட கருமம். பிள்ளைகள் துண்டு கொண்டு பணம் தண்டலிற் திரிகின்றனர். வீட்டுக்கு வீடு ஒவ்வொரு புத்தகசாலை இருந்தாலோ என்றும் ஆசை என் மனதில் நெடுங்காலம் குடி கொண்டது. வாய்ச்சியளி இல்லாத தபதியும், கலப்பை நுகமில்லாத வேளாளனும் புத்தகமில்லாத ஆசிரியனும் ஒருவருக்கொருவர் சமம். பாடசாலையோட்டம் முடிந்தால் புத்தகங்கள் ஓட்டம் தொடங்கும். வேலை கிடைத்தால் புத்தகம் நஞ்சாகும். ஒரு விஷயத்தின் பேரில் யோசிக்க வேண்டுமானால் கற்றாருமருமை. புத்தகமுமருமை. பாடசாலைகளோடு புத்தகசாலை இருத்தலவசியம். பிறரும் தெண்டிப்பாராக.” என்று அச்செய்தி விரிகின்றது.

இச் செய்தி அக்காலத்துப் பொதுமக்களிடையே புத்தக சாலைகளின் தேவையை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. மாணவர்கள் பாடசாலையிலிருந்து புத்தகசாலை பற்றிய துண்டுப் பிரசுரங்களுடன் பணம் சேகரித்தமையால் போதுமான நிதி வசதியில்லாதிருந்தமையும் இப்புத்தகசாலைகளின் வளர்ச்சியைத் தடைப்படுத்தியிருப்பதும் புலனாகின்றது. இந்நிலை அடுத்த வருடத்தில் இன்னும் தீவிரமடைந்தது.

“இப்படியோர் புத்தகசாலை இருக்கிறதாக அறியாதவர்கள் இருப்பார்களானால் அவர்கள் இதனால் உண்டு பண்ணக் கூடிய நன்மைகள் எத்துணையின என்பதைப் பார்க்கும் படி இதனை ஒரு நாளாயினும் தரிசிப்பார்களாக. அநேக சிறந்த புத்தகங்களும் இலங்கைப் புதினப் பத்திரிகைகளும் ஆங்கிலோ பத்திரங்களில் விசேசித்த சிலருக்கும் இதைச் சேர்ந்தோருக்கும் எல்லையற்ற இலாபத்தை உண்டு பண்ணி வருகின்றன.” என ஒரு செய்தி “உதயதாரகை” பத்திரிகையின் 6.2.1896 ஆம் திகதிப் பதிப்பில் காணப்படுவது, அக்காலத்தில் இருந்த யாழ்ப்பாணப் புத்தகசாலை பற்றிய குறிப்பாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7904 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (13)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)