Arts
13 நிமிட வாசிப்பு

ஈழத்துக் கீழைக்கரை – ஓர் வரைவிலக்கணம்

July 19, 2022 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

ஒரு வரலாறு என்பது எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பதை சென்ற தொடரில் பார்த்த நாம், அதன் வழியே கீழைக்கரை வரலாற்றை எழுதத் தொடங்குவோம் என்று கூறியவாறு, போன இதழில் விடைபெற்றிருந்தோம். ஆனால் வரலாறுக்குள் நுழைவதற்கு முன்னர், நம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட “கீழைக்கரை” என்ற சொல்லை மிகச்சரியாக வரையறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தத் தொடரில் கீழைக்கரையை வரலாற்றுப் பார்வையில் ஆராயப்போகும் நாம், அப்போது தான் ஆய்வுப்பரப்புக்குள் திருத்தமாக நின்றபடி நம் கருத்துக்களை முன்வைக்க இயலும்.

East Coast General Definition EP (1)

கீழை என்றால் கிழக்குத்திசை. சாதாரணமாக உங்களிடம் கேட்டால் கூட, ஈழத்துக் கீழைக்கரை என்பது கிழக்கிலங்கையைக் குறிக்கிறது என்றே சொல்வீர்கள். அப்படிப் பார்த்தால், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களும் இணைந்த  “கிழக்கு மாகாணம்” எனும் இலங்கையின் நிர்வாகப்பிரிவு தான் கீழைக்கரை (உரு 2.1). ஆனால் கீழைக்கரை என்ற வரையறையை உருவாக்குவது வெறும் புவியியல் அல்லது நிர்வாகப் பகுப்பு மட்டும் தானா?

இல்லை. குறித்த நிலப்பகுதியில் வாழும் இனக்குழுக்களின் வழக்காறுகள், அம்மண்ணின் உயிர்ப்பல்வகைமை, அவை இரண்டும் சேர்ந்து உருவாக்கும் அப்பகுதியின் பண்பாடு, அத்தனையும் இணைந்து தான் ஒரு விசேடமான ஆள்புலத்தைத் தீர்மானிக்கின்றன. இப்படிப் பார்க்கும் போது, கிழக்கிலங்கை தொடர்பாக  ஆய்வுலகில் இரண்டு வரையறைகள்  இருக்கின்றன. இந்த இரு வரையறைகளும் கிழக்கு மாகாணத்தை முற்றாக உள்ளடக்குகின்றனவா, அல்லது அவை ஒன்றோடொன்று இடைவெட்டி, அல்லது மேற்பொருந்தி, வேறேதும் நிலப்பரப்பைக் காட்டுகின்றனவா என்று நாம் பார்க்கவேண்டும். அந்த இரு வரையறைகளும் கிழக்கு மாகாணத்தைக் காட்டவில்லை என்றால், அவற்றை சற்று செம்மைப்படுத்தி மூன்றாவது திருத்தமான வரையறையொன்றை நாம் நமக்காக உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

சுவையான செய்தி என்னவென்றால், மேற்படி ஆய்வுலக வரையறைகளில், முதலாவது வரையறையை முன்வைத்தது உள்ளூர் ஆய்வாளர் தரப்பு. இரண்டாவதை முன்வைத்தது மேலைத்தேய ஆய்வாளர் தரப்பு.  உள்ளூர் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட முதலாவது வரையறையானது, கிழக்கு மாகாணத்தின் முதன்மை நகரங்களில் ஒன்றான மட்டக்களப்பை மையமாகக் கொண்டு, ஒரு பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட நிலப்பரப்பை இனங்காண்கிறது. இந்த இனங்காணல் சரி என மெய்ப்பிப்பதற்கு, அந்த நிலப்பரப்பு முழுவதும் பரவலாக வழக்கில் இருக்கும் மூன்று சான்றுகள் கிடைக்கின்றன.

  1. மட்டக்களப்புப் பேச்சுத்தமிழ் வட்டார வழக்கு (ஒண்ணா, மறுகா, கிறுகி முதலிய சொற்கள்),
  2. நாட்டார் வழிபாடுகள் (கண்ணகி வழிபாடு, குளிர்த்திச்சடங்கு, அம்மாளுக்குச் செய்தல், குமார தெய்வ வழிபாடு, வில்லைகட்டிச் சடங்கு முதலியன),
  3. நாட்டார் கலையாடல்கள் (கொம்புமுறி, போர்த்தேங்காய், கவிகள், வசந்தனாடல், மழைப்பாடல் முதலியன) ஆகிய மூன்றும் அவை (கந்தையா 1964: 1-22).

இந்த வரையறையின் படி பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட நிலப்பரப்பானது, 1961 வரை வடக்கே வெருகலாற்றிலிருந்து தெற்கே குமுக்கனாறு வரை விளங்கிய பழைய மட்டக்களப்பு மாவட்டம் ஆகும். அது இன்றைய அம்பாறை மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்தது.  காலனித்துவ காலம் வரை மட்டக்களப்பின் தலைநகராக விளங்கிய சம்மாந்துறை, அதன் ஆட்சியாளரின் பிரதான வழிபாட்டு தெய்வமாக இருந்த சித்திரவேலாயுதசுவாமி (முருகன்) கோவில் கொண்ட தலமான திருக்கோவில், மட்டக்களப்பின் முதன்மையான ஆளுமையாக முன்வைக்கப்படும் விபுலானந்த அடிகள் பிறந்த காரைதீவு என்பன இன்றைய அம்பாறை மாவட்டத்திலேயே அடங்குகின்றன (உரு 2.2).

Batticaloa Based Definition of Unique Cultural

இந்தத் தனித்துவமான நிலப்பரப்பைக் குறிக்க,  “மட்டக்களப்புத் தமிழகம்” (கந்தையா, 1964), “மட்டக்களப்புத் தேசம்” (கந்தையா 1983:15-28; கோபால் 2011, 2016), “மட்டக்களப்பு மாநிலம்” (கணபதிப்பிள்ளை 1980:26; செல்வராசகோபால் & கனகசபாபதி 2005), “மட்டக்களப்புப் பிரதேசம்” (மௌனகுரு 1998:73-125) முதலிய இன்னோரன்ன சொல்லாடல்கள் தமிழ்ப் புலமைத்தளத்தில் புழங்கி வந்திருக்கின்றன. இதே பொருள்கோடலில் அரசியல் ஆவணங்களிலும் பொது ஊடகங்களிலும் “மட்டு. அம்பாறை” என்ற சொற்சுருக்கம் பயன்படலாயிற்று. ஆக, இந்த மட்டக்களப்பு மைய வரையறையின் படி, கீழைக்கரை என்பது, முழுக் கிழக்கு மாகாணத்தையும் குறிக்காது, இன்றைய மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை மாத்திரம் குறிக்கும்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் கிழக்கு மாகாணத்தில் விரிவான சமூகவியல் மானுடவியல் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படலாயின. இந்த ஆய்வுகளை மேற்கொண்ட ஐரோப்பிய ஆய்வாளர்களின் ஆய்வுகளின் வழியே உருவான இரண்டாவது வரையறை தான் “இலங்கையின் கிழக்குக்கரை”  (ஈ`ச்|ட் கோ`ச்|ட் ஒஃப் |ச்ரீ லங்கா) (East Coast of Sri Lanka).  இந்தக் கலைச்சொல்லை முன்வைத்தவர்களில் இருவர் முக்கியமானவர்கள். |டெனி`ச் |பி. மெ_க்|கில்வ்றே (Dennis B. McGilvray, 1982, 2008) மற்றும்  மார்க் பி. வி|டேகர் (Mark P. Whitaker, 1999).

நாம், முன்பே பார்த்தது போல, காலனிய காலத்திலிருந்தே “இலங்கையின் கிழக்குக்கரை” கிழக்கு மாகாணத்தை சாதாரணமாகக் குறிப்பிடப் பயன்பட்டு வந்த சொல் தான். ஆனால் அதை சமூகவியல் ரீதியில் வரையறுக்கப்பட்ட கலைச்சொல்லாக முன்வைக்கவேண்டிய தேவை ஐரோப்பிய அறிஞர்களுக்கு ஏற்பட்டிருந்தது. கிழக்கு மாகாணத்துக்குள்ளே மட்டக்களப்பு மைய பண்பாட்டு அடையாளமொன்றை உள்ளூர்த் தமிழ் அறிஞர்கள் ஏற்கனவே முன்வைப்பதை மேலைத்தேய அறிஞர்கள் அறிந்திருந்தனரெனினும், தமிழ் அறிஞர்கள் ஊன்றிக் கவனிக்கத் தவறிய, அல்லது மேலோட்டமாக மட்டும் தொட்டுச் சென்ற முக்கியமான இரு பண்பாட்டு அம்சங்களை “இலங்கையின் கிழக்குக் கரை”யில் அவர்கள் அடையாளம் கண்டார்கள்.  

முதலாவது, பொதுத் தமிழ்ப் பண்பாட்டுக்கோளத்துக்குப் புறநடையாக பிராமணரோ வேளாளரோ அல்லாத சமூகங்கள் (அதாவது, முக்குவர், சீர்பாதர், திமிலர் சமூகங்கள்) இங்கு சாதிய அதிகார அடுக்கில் மேலே நீடித்து வந்திருக்கின்றன. இரண்டாவது, இங்கு பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர் மற்றும் சோனகர் (1) ஆகிய இரு இனக்குழுமங்களிடம் மட்டும் இன்று அவதானிக்க முடிகின்ற தாய்வழிக் குல அடையாளங்களான “குடிகள்” .(Whitaker 1999:14-17; McGilvray 2008:40-44; Gaasbeek 2010:87). குடிகள் என்பவை, குலங்களின் அல்லது சாதிகளின் உட்பிரிவுகள். இவற்றையே தமிழகத்தில் “கோத்திரங்கள்” என்று அழைக்கிறார்கள். ஆனால் “கிழக்குக்கரை”யின் தனித்துவம், கேரளத்து மருமக்கட்தாயம் போல, இவை தாய்வழியில் தான் கடத்தப்படும் என்பது. சைவக் கோவில்களின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாயுள்ள வண்ணக்கர், கணக்குப்பிள்ளை போன்ற பதவிகளும், பள்ளிவாசல்களின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாயுள்ள மரைக்காயர் பதவிகளும் குடிமுறைமையை அடிப்படையாக வைத்தே இன்றும் தெரிவு செய்யப்படுகின்றன.

இந்த இரு சமூகவியல் கூறுகளைக் கடைப்பிடிக்கும் தமிழ் மற்றும் சோனக இனக்குழுக்கள் வதிகின்ற  புவியியல் பிராந்தியத்தையே மெ_க்|கில்வ்றே “இலங்கையின் கிழக்குக்கரை” என்று குறிப்பாக வரையறுக்கின்றார் (McGilvray 2008:44). அந்தக் கிழக்குக்கரை வடக்கே மூதூர் கொட்டியாற்றுக்குடாவிலிருந்து தெற்கே பொத்துவில் அறுகங்குடா வரை எல்லைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்தக் குடிமரபைக் கடைப்பிடிக்காத சிங்களவர்களையும், கிறிஸ்தவர்ளையும் தவிர்க்கவேண்டி நேர்ந்ததால்(2),  நீளவாக்கில் கிழக்குக்கரை 150 கிமீ இற்கும் மேலாக நீண்டிருந்தாலும், அகலவாக்கில் அதிகபட்சம் 40 கிமீ உம் (மட்டுநகர் – ஈரலைக்குளம்), குறைந்தபட்சம் 8 கிமீ உம் (இலங்கைத்துறை முகத்துவாரம் – சேறுநுவரை) மாத்திரமே சுருங்கியுள்ள  ஒரு மிக ஒடுங்கிய நிலப்பட்டி(3)  தான் (உரு. 2.3.). 

East Coast Based

கரையோரமாக 150 கிமீ தாண்டி மதம், இனம், மொழி என்பவற்றில் பண்பாட்டு ஒற்றுமையைக் காண்பிக்கக்கூடிய ஒரு சமூகக்கொத்தணி, அகலப்பரப்பில் 5 தொடக்கம் 40 கிமீ நகர்ந்ததும் மதம், இனம், மொழி என்பவற்றில் முற்றிலும் மாறுபட்ட, சிங்கள பௌத்த சமூகமாக மாறிவிடுகின்றது. ஐரோப்பிய சமூகவியல் அறிஞர்கள் முன்வைத்த “கிழக்குக்கரை” வரையறையானது, இவ்வாறு உள்ளூர் அறிஞர்களின் “மட்டக்களப்பு மைய” வரையறையின் அடுத்தகட்ட முன்னகர்வாக அமைந்து விடுகின்றது.

இந்த இரு வரையறைகளும் தமக்கேயுரிய நிறை குறைகளைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக மட்டக்களப்பு மைய உள்ளூர்த் தரப்பின் வரையறையிலுள்ள பிரதானமான நிறை என்பது, அவ்வரையறை வரலாற்றுணர்வு, நாட்டாரியல், புவியியல், அரசியல், மொழியியல், பண்பாட்டியல்  உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கோட்பாடுகளைப் பிரயோகித்து கட்டமைக்கப்பட்டுள்ளமையாகும்.  எனவே தான், ஐரோப்பிய நவீன ஆய்வுக்கருவிகளையும் எடுகோள்களையும் பயன்படுத்தாமலேயே அந்நிலத்தில் நீடித்த பண்பாட்டு ஒருமைப்பாட்டை அவ்வரையறையின் முன்மொழிவாளர்களால் மிக எளிதாக அடையாளம் காண இயன்றிருக்கிறது.

இந்த வரையறையிலுள்ள முதன்மையான குறை, அது இன்றைக்கு ஒரு தேய்வழக்காகிவிட்டது என்பதே. ஏனெனில் இன்று மட்டக்களப்பு என்ற சொல் பிரதானமாக இரண்டு அர்த்தங்களிலேயே பொருள் கொள்ளப்படுகிறது. முதலாவது, காலனித்துவ காலத்தில் கிழக்கிலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றாக வளர்ச்சி கண்ட மட்டுநகர் அமைந்திருக்கும் புளியந்தீவு. இரண்டாவது புளியந்தீவைத் தலைநகராகக் கொண்டு வடக்கே வெருகலாற்றிலிருந்து தெற்கே பெரியகல்லாறு வரை நிர்வாக ரீதியில் மட்டக்களப்பு மாவட்டமாக வரையறை செய்யப்படும் நிலப்பரப்பு.

இதைத் தவிர இன்று மட்டக்களப்பு எனும் சொல், வேறு சுகாதார, கல்வி, நீதி, நிர்வாக, தேர்தல் நிலப்பிரிவுகளைக் குறிப்பிடுவதற்காக பலவாறு பொருள் சிதைந்து அர்த்தம் சுருங்கி விட்டது. எனவே புதிதாகத் தோன்றிவிட்ட அம்பாரை மாவட்டம், திருக்கோணமலை மாவட்டத்தின் தென் அந்தம் என்பன அடங்கிவிடும் இந்த வரையறைக்கு மட்டக்களப்பையும் தாண்டி, வேறொரு சொல்லை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனலாம். 

இதேபோல், ஐரோப்பிய அறிஞர்களின் கிழக்குக்கரை என்ற வரையறையின் முக்கியமான நிறை, அது சமூகவியலின் படி பரிபூரணமான வரையறையாக இருப்பதாகும். திருக்கோணமலை மாவட்டத்தின் கொட்டியாறுப் பற்று தவிர்ந்த ஏனைய பகுதிகளையும், அம்பாரை மாவட்டத்தில் சிங்களவர் வசிக்கும் ஏனைய பிரதேசங்களையும் இந்த வரையறை நாசுக்காகத் தவிர்த்துவிடுகின்றது. ஏனெனில், தங்கள் “கிழக்குக்கரை”யில் மேலைத்தேய அறிஞர்கள் கண்டுகொண்ட தனித்துவமான இரு பண்பாட்டுக்கூறுகளை திருக்கோணமலையின் கொட்டியாற்றுப்பற்று தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தெளிவாக அவதானிக்கமுடியவில்லை. அதேபோல், தமிழரிடமும் சோனகரிடமும் மாத்திரம் அவர்கள் அவதானிக்க முடிந்த குடிமரபு “கிழக்குக் கரை”யைச் சூழ்ந்து வசித்த சிங்களவரிடம் நிலவவில்லை.

ஆனால், ஐரோப்பியரின் கிழக்குக்கரை வரையறையிலுள்ள குறை, அது முழுக்க முழுக்க நடைமுறை சமூகவியல் பார்வையை மட்டுமே முன்வைக்கிறது என்பது தான். அவ்வரையறை இறந்த காலத்தைக் கருத்திலெடுக்காமல் முற்றுமுழுதாக சமகாலத் தன்மையோடே இருக்கிறது.

பழைய குடியிருப்புகளாக இருந்து இன்று கைவிடப்பட்டு காடான பகுதிகள் பற்றியோ, காடாக இருந்து இன்று புதிய குடியிருப்புகளாகிவிட்ட நிலங்களைப் பற்றியோ “கிழக்குக்கரை” வரையறை அக்கறைப்படவில்லை. தமிழரையும் சோனகரையும் மாத்திரம் முன்னிறுத்தும் இவ்வரையறை கிழக்குக்கரையின் முக்கியமான இனக்குழுக்களில் ஒருவராகத் திகழ்ந்து, இன்று மறைந்துவிட்ட அல்லது அருகிப்போய் விட்ட “கரையோர வேடர்கள்” அல்லது “தமிழ் வேடர்கள்” பற்றியும் மௌனம் சாதிக்கிறது. “கிழக்குக்கரை”யில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பண்பாட்டுப் பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கும் கிறித்தவர்களிடம் குடிமரபு இல்லாததால், அவர்களை “நீங்கள் இந்தப் பண்பாட்டு அலகின் அங்கமல்ல” என்று நிராகரிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் அறுகங்குடாவுக்குத் தெற்கே உள்ள பாணகைப்பற்றின் (இன்றைய பெயர் பாணமை, பாணமைப்பற்று) சிங்களவர்களைத் தவிர்ப்பதன் மூலம், அவர்களுக்கும் கிழக்குக்கரைத் தமிழருக்குமுள்ள கொண்டும் கொடுத்துமான உறவை முற்றாக மறுதலித்து விடுகிறது. 

“கிழக்குக்கரை” என்ற வரையறையிலிருந்து சமூகவியல் ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்ட பாணகைப்பற்று அல்லது அம்பாரை மாவட்டத்தின் தென் அந்தம், மேலைத்தேய ஆய்வாளர்கள் தயங்குமளவுக்கு அப்படி ஒன்றும் மூடிய பண்பாட்டு அலகாக நீடிக்கவில்லை. பாணகையின் பத்தினி வழிபாடு, சிங்களப் பொதுப் பத்தினி வழிபாட்டை விட, கீழைக்கரையின் தமிழ்க் கண்ணகை வழிபாட்டுடனேயே நெருக்கமாக இருப்பது ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது (Obeyesekere 1987:591). கண்டி அரசு காலத்தில் அடிக்கடி கண்டிக்கு எதிராக கிளர்ச்சி செய்த பாணகைப்பற்றுச் சிங்களவர், அடைக்கலம் தேடி மட்டக்களப்பில் தஞ்சம் புகுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது வரலாற்றுக் குறிப்புகளிலும் தெரிகிறது.

பாணகைப் பகுதியில் இன்று முக்கியமான வழிபாட்டுத் தலமாக வளர்ச்சி கண்டிருக்கும் உகந்தமலை முருகன் கோவில், குமுக்கனாற்றின் கரையில் இன்று கைவிடப்பட்டுள்ள பூமுனைக் கிராமம், என்பன அப்பிராந்தியத்துக்கும் கீழைக்கரைக்குமான உறவை இன்றும் நியாயப்படுத்தப் போதுமானவை. இனமுரண்பாட்டுக் காலத்துக்கு முன்னர், ஏன், சில ஆண்டுகளுக்கு முன்வரை கூட, பாணகைச் சிங்களவருடன் கீழைக்கரைத் தமிழர் திருமண உறவை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள்.(4)

ஆக, ஆய்வுலகிலுள்ள இரு வரையறைகளுமே இன்றைய “கிழக்கு மாகாணம்” எனும் நிர்வாகப்பிரிவை முற்றுமுழுதாக அடக்கவில்லை என்பது நமக்குத் தெரியவருகிறது. ஆனால், அதிலுள்ள பண்பாட்டுத் தனித்துவமான நிலப்பரப்பை முழுமையாக இனங்காண முடியாமல், அவ்விரு வரையறுகளுமே சற்று தடுமாறுகின்றன என்பதையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. எனவே,  நாம் இந்த இரு வரையறைகளிலுமுள்ள குறைகளை பூரணப்படுத்தி மீள் வரைவிலக்கணப்படுத்தித் தான் புதிய “கீழைக்கரை”யை அடையாளம் காணமுடியும்.

Kandiah Batticaloa
உரு 2.4 “ஈழத்துக் கீழைக்கரை” வரையறையை நெருங்கிவரும் வீ.சி. கந்தையாவின் மட்டக்களப்புத் தமிழகம் வரைபடம்.

அதன்படி, “கொட்டியாற்றுக்குடாவுக்கும் குமுக்கனாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில், பிரதானமாக தமிழ் பேசும் சமூகங்களாலானதும்,  தாய்வழிக் குடிமரபைப் பின்பற்றும் சைவ மற்றும் இ`ச்லாமிய பண்பாட்டு நுண்பிராந்தியங்களால் ஆனதும், கிறித்தவர்களதும் வேடர்களதும் பண்பாட்டுப் பங்களிப்பால் செழுமையூட்டப்பட்டதும்,   அவ்வப்போதான சிங்களவர்களது ஊடாட்டத்தைக் கொண்டதுமான ஊர்களின் கொத்தணிகள் அடங்கும் நிலப்பரப்பு  “ஈழத்துக் கீழைக்கரை” ஆகும்.”

உண்மையில், மேற்படி மட்டக்களப்பு மைய மற்றும் கிழக்குக்கரை சார்ந்த இரு வரையறைகளையும் முன்வைத்த அறிஞர்களில் பலர், தங்கள் வரைவிலக்கணத்தின் போதாமையை உணர்ந்து கொண்டு, ஓரிரு இடங்களில் நம் புதிய வரையறையை நெருங்கித் தான் வந்திருக்கிறார்கள்.

உதாரணமாக, பண்டிதர் வீ.சீ.கந்தையா (1964:ii-iii), தன் “மட்டக்களப்புத் தமிழகம்” வரைபடத்தில் கொட்டியாற்றுக்குடா முதல் குமுக்கனாறு வரையான நிலப்பரப்பையே நிழற்றிக் காட்டியுள்ளார் (உரு 2.4). மெ_க்|கில்வ்றேயும் கா`ச்|பீக்கும் தங்கள் கிழக்குக்கரையை  “மூதூர் முதல் பாணகை வரை” என்று எல்லை வகுத்திருக்கிறார்கள் (Gaasbeek 2010:87). வெல்லவூர்க் கோபால் (2016:15) ஒருபடி மேலே சென்று, தான் வரையறுக்கும் மட்டக்களப்புத் தேசமானது, வடக்கே திருக்கோணேச்சரம் முதல் தெற்கே கதிர்காமம் வரையான பகுதி என்று வரைவிலக்கணப்படுத்த முயல்கிறார். உள்ளூர் அறிஞர்களைப் பொறுத்தவரை, சில இடங்களில் இனம் சார்ந்த பக்கச்சார்பு தென்படினும் மரபான பார்வைக்கு வெளியே சென்றும் பண்பாட்டு ஒருமைப்பாட்டை அடையாளப்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்பதை இதன்மூலம் நாம் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

அடிக்குறிப்புகள்

(1). அரச ஆவணங்களில் இலங்கைச்சோனகர் (ச்ரீ லங்கன் மூர்ஸ், Sri Lankan Moors) என்று குறிப்பிடப்படும் தேசிய இனத்தவர்கள், தமது மத அடையாளத்தை முன்னிலைப்படுத்த்தி இ`ச்லாமியர் என்று தம்மை அடையாளப்படுத்துவதையே இன்று அதிகம் விரும்புகின்றனர். இன்று அவர்களிடையே அருகிவருகின்ற பாரம்பரிய நடைமுறைகள் – வழக்காறுகள் அன்றாடத்தில் இ`ச்லாமிய சமய வரையறைக்கும் வெளியே செல்வதால், “இலங்கைச் சோனகர்” என்ற உத்தியோகபூர்வ இன அடையாளத்தையே இத்தொடர் முழுவதும் இக்கட்டுரையாசிரியன் பயன்படுத்த விரும்புகிறான்.

(2). எவ்வாறாயினும் இந்த மேலைத்தேய அறிஞர்களே பல இடங்களில் சுட்டிக்காட்டி இருப்பது போல, சீர்திருத்த இச்லாமியக் கருத்துக்களின் பரவலாக்கம் காரணமாக கீழைக்கரையின் சோனகர்களும், ஐரோப்பிய மையச் சிந்தனை கொண்ட நவீன உலகமயமாக்கல் கொள்கைகளால் கவரப்பட்டுள்ள கீழைக்கரையின் தமிழர்களும் கூட  இந்தப் பண்பாட்டுப்புலத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கின்றனர் என்பதே இக்கட்டுரையாளனின் இன்றைய அவதானிப்பு.

(3). மெ_க்|கில்வ்றே தன் நூலில் இன்றுள்ள தமிழ் – சோனகக் கிராமங்களை கருத்தில் கொண்டு மிகமிக ஒடுங்கிய நிலப்பரப்பையே கிழக்குக்கரை என்று காண்பிக்கிறார் (2008:27). இங்கு இணைக்கப்பட்டுள்ள உரு 2.3ஆனது,  அவ்வரைபடத்தை சற்று இற்றைப்படுத்தி (update) வரையப்பட்ட  உரு ஆகும்.

(4). அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள, இக்கட்டுரையாளனின் பிறந்தகமான தம்பிலுவில், பாணகை ஊடாக, கீழைக்கரை தொடர்பான சமூகவியல் ஆய்வுகளுக்கான கதவைத் திறந்துவிட்ட கிராமமாகும்.  பாணகைக் கிராமத்தை ஆராயவந்த நூர் யால்மன் எனும் துருக்கிய சமூகவியலாளர், அவ்வூரில் மணமுடித்திருந்த தம்பிலுவிலைச் சேர்ந்த ஒருவர் மூலம் கேட்டறிந்து கீழைக்கரைத் தமிழரின் சமூகவியல் பற்றி சில குறிப்புகளை எழுதியிருந்தார் (Yalman 1967:310-328).  கிழக்கிலங்கை ஆய்வுலகில் முக்கியமான பதிவுகளைச் செய்த லெஸ்டர் ஹெய்ட், டெனிஸ் மெக்கில்வ்றே ஆகிய இரு ஆய்வாளர்களும் தம்பிலுவில் கிராமம் பற்றிய நூர் யால்மனின் குறிப்பின் மூலமே கீழைக்கரைச் சமூகம் பற்றிய ஆய்வுப்பாதையில் காலடி எடுத்து வைத்தார்கள். ஒரே குடும்பத்திலேயே தமிழரும் சிங்களவரும் காணப்படுவதால், “ஐம்பதுக்கு ஐம்பது” என்று சக கீழைக்கரைத் தமிழரால் நகையாடப்படும் பாணகை கிராமத்தவர்கள் நெடுநாளாகவே அம்பாரை மாவட்டத் தமிழ்க் கிராமங்களுடன் மணவுறவு வைத்திருந்தார்கள். 2000களின் ஆரம்பத்திலும் கூட,  தன் கிராமத்தைச் சேர்ந்த பலர் பாணகைப்பற்றைச் சேர்ந்த பாணகை, இலகுகலை (பழைய பெயர்: இலட்சக்கல்) கிராமங்களுக்கு மணமுடித்துச் சென்றதை கட்டுரையாளன் இவ்விடத்தில் நினைவுகூர விரும்புகிறான்.  

உசாத்துணைகள்

  1. கணபதிப்பிள்ளை, கே. (1980). மட்டக்களப்பு மாநிலத்தின் பழைய புவியியல் வரலாறும், இடப்பெயர்களும். மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும் (பதிப்பாசிரியர்: வீ.சீ.கந்தையா). மட்டக்களப்பு: இந்து வாலிபர் முன்னணி.
  2. கந்தையா, வீ.சீ. (1964). மட்டக்களப்புத் தமிழகம். குரும்பசிட்டி, யாழ்ப்பாணம்: ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம்.
  3. ____________. (1983). மட்டக்களப்புச் சைவக் கோவில்கள், மட்டக்களப்பு : கூடல்.
  4. கோபால், வெ. (2011). மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம், மட்டக்களப்பு: மனுவேதா.
  5. ____________. (2016). மட்டக்களப்புத் தேசம்: வரலாறும் வழக்காறும். கொழும்பு: சேமமடு பதிப்பகம்.
  6. செல்வராசகோபால், க.தா., கனகசபாபதி, எ`ச்.பி. (2005) மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள், சென்னை: மித்ர பதிப்பகம்.
  7. மௌனகுரு. சி. (1998). மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள். மட்டக்களப்பு: விபுலம்.
  8. Gaasbeek, T. (2010). Bridging Troubled Waters? : Everyday Inter-ethnic Interaction in a content of Violent Conflict in Kottiyarpattu, Trincomalee, Sri Lanka (Doctoral Thesis, Wageningen University & Research, Netherlands). Retrieved from https://www.researchgate.net
  9. Hiatt, L.R. (1973). “The Pattini Cult of Ceylon : a Tamil Perspective”. Social Compass. 20 (2): 231–249.
  10. McGilvray, D.B. (Ed.) (1982). “Caste Ideology and Caste Interaction”, Vol. 9, Cambridge Papers in Social Anthropology, Vol. 9, Cambridge (England): Cambridge University Press.
  11. _________________(2008). Crucible of Conflict: Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka, Durham NC (USA): Duke University Press.
  12. Obeyesekere, G. (1987). The Cult of the Goddess Pattini. Delhi: Motilal Banarsidass.
  13. Whitaker, M.P. (1999). Amiable Incoherence :  Manipulating Histories and Modernities in a Batticaloa Tamil Hindu Temple, Amsterdam (Netherlands): VU University Press.
  14. Yalman, N. (1967). Under the Bo Tree: Studies in Caste, Kinship and Marriage in the Interior of Ceylon. Berkeley CA (USA): University of California Press.

குறிப்பு : இத்தொடரில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9477 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)