Arts
15 நிமிட வாசிப்பு

என்ன செய்ய வேண்டும்?

November 3, 2023 | Ezhuna

 ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உருத்து என்பவை தொடர்பிலும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசவுள்ளது.

வடமாகாண கடற்பிரதேசம் வடமேற்கு மாகாண கடல் எல்லையிலிருந்து கிழக்கு மாகாண எல்லை வரை பரந்துள்ளது. இலங்கையின் எந்த மாகாணத்துக்கும் இல்லாத வகையில் பலதரப்பட்ட  தொழில்களைச் செய்வதற்கான வளங்களை கொண்டது வடமாகாணத்தின் கடற்பிரதேசம். பின்வருவன இன்றுள்ள வடமாகாணக் கடலில் வருவாய் தரக்கூடிய தொழிலாக இருப்பவை:

  1. ஆழ்கடல் மீன்பிடி 
  2. கரையோர மீன்பிடி 

ஆழ்கடல் மீன்பிடி 

போர் முடிவுற்ற காலத்தின் பின்பு ஆழ்கடல் மீன்பிடியை அபிவிருத்தி செய்ய அரசினால் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தனியார்களின் மூலதனத்தை பயன்படுத்தி செய்யப்பட்டது வெறும் திருத்தல் வேலைகள் மட்டுமே. நவீன மீன்பிடிக்குக்தக்கது போல தொழில்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. உதாரணமாக, வடக்கு மீனவர்கள் தற்போது பாவிக்கும் விசைப்படகுகள் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்து இரண்டு-சிலிண்டர் படகுகளாகும். இந்தப் படகுகளை வைத்துக்கொண்டு எவ்வாறு உலக அளவில் பாரிய மீன்பிடித் தளங்களில் ஒன்றான, இலங்கை மக்களுக்கே சொந்தமான, பேதுரு கண்டமேடையில் (Pedro Fishing  Banks) தொழில் செய்வது? இலங்கைக்கு உரித்தான கடல் எல்லைக்குள் காணப்படும் பேதுரு கண்டமேடைகள் தற்போது இந்தியர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. 1970-1985 வரையான காலத்தில், பேதுரு கண்டமேடை கடற்படுகைகள் இலங்கைத் தொழிலாளர்களில் கட்டுப்பாட்டில் இருந்ததே மாபெரும் அளவிலான மீன்களை வடக்கு மீனவர்கள் பிடிப்பதற்கு மிக முக்கிய காரணமாய் அமைந்தது.

தற்போது, இக் கடற்பிரதேசத்தில் இந்தியர்கள் செய்யும் கடற்கொள்ளையை நிறுத்துவது கடினமான விடயமாக மாறியிருக்கிறது. இதனை நிறுத்த, இலங்கை அரசும் அரசியல்வாதிகளும் பெரிய அளவில் முயற்சிகளை எடுக்கவில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தியாவின் ஏகாதிபத்திய போக்கு, அதன் பொருளாதார பலம், தொழில்நுட்ப அபிவிருத்தி என்பன இலங்கை தனது உரிமைகளை வடகடலில் நிலைநாட்ட முடியாமல் உள்ளமைக்கு காரணங்களாகின்றன. இலங்கை ஆழ்கடல் மீன்பிடிப் படையை (Deep Sea Fishing Fleet) கட்டியெழுப்புவதன் மூலம் மீண்டும் பேதுரு கண்டமேடை மீதான உரிமையையும், ஆதிக்கத்தையும் நிலைநாட்டக் கூடியவாறிருக்கும். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் இலங்கை தனது மிகச்சிறு பொருளாதார பலத்தைக்கொண்டு இதைச் செய்தது. 

அதே போலவே, சர்வதேச அளவிலான ஒரு உதாரணத்தையும் கூற முடியும். சோவியத் யூனியன் இருந்த காலத்தில் அது நோர்வேயின் வடகடல் உரிமைகளை மதித்தது கிடையாது. அன்றிருந்த காலத்தில் உலகத்தின் பெரிய ஆழ்கடல் மீன்பிடி படையை (Deep Sea Fishing Fleet) சோவியத் யூனியன் வைத்திருந்தது. அத்துடன் பாரிய கடற்படையையும் நோர்வேயின் வடகடல் எல்லையில் நிறுத்தி வைத்திருந்தது. தனது பாரிய ஆழ்கடல் மீன்பிடி படையின் உதவியுடன் நோர்வேயின் வடகடலில் வளக்கொள்ளையை நிகழ்த்தியது. கடல் வளங்களை பங்கு போட்டு கொள்வதற்கான எந்தவித ஒப்பந்தங்களையும் செய்துகொள்ள சோவியத் மறுத்து வந்தது. இந்த நிலையில் 1970 இற்கு பின் வந்த காலத்தில் பொருளாதார வளர்ச்சியடைந்த நோர்வே முதலில் செய்த வேலை, தனது ஆழ்கடல் மீன்பிடி படையை அபிவிருத்தி செய்ததாகும். இதன் பின் சோவியத் யூனியன், கடலில் வளங்களைப் பங்கு போட்டுகொள்ளும் ஒப்பந்தத்தை செய்து கொள்ள உடன்பட்டது. அந்த ஒப்பந்தம் சோவியத் உடைவின் பின்னும் ரஷ்யாவினால் கடைப்பிடிக்கப்படுகிறது. 

கடலட்டை வளர்ப்பு போன்ற தொழில்களினால் கிடைக்கும் அந்நிய செலாவணியை விட, ஆழ்கடல் மீன்பிடி படையை அபிவிருத்தி செய்வதன் மூலம் பலமடங்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும். அத்துடன் கடற்கரை சமூகம் பரந்துபட்ட அளவிலான பொருளாதர வளர்ச்சியை அடைவதற்கும் இது வழிவகுக்கும். 

‘கருவண்டன்’ இறால் பிடிப்பு 

அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தொழில்களுள் வடக்கு கடல் படுக்கைகளில் காணப்படும் கருவண்டன் என்ற இறால் பிடிப்பு முக்கியமானது. சந்தையில் கிடைக்கும் வளர்ப்பு இறால்களை விட, அதிக சர்வதேச சந்தை மதிப்பு வாய்ந்த கருவண்டன்கள் இயற்கையாக கடலில் புளுத்துப் பெருகும். இலங்கைக் கடலில் காணப்படும் கருவண்டன் இறால்கள் இந்திய ரோலர்களினால் களவாடப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த இலகுவகை ரோலர்கள், வாரத்தில் மூன்று நாட்கள் கருவண்டனை பிடிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், உபயோகிக்கும் படகுகள், தொழில்நுட்பம் காரணமாக பெரிய வருவாயை எமது மீனவர்கள் பெற முடியாதுள்ளது.   

black tiger prawn

ஓடுகயிறு தொழில் மூலம் பிடிபடும் சூரை மீன்கள்

ஓடுகயிறு தொழில் மூலம் பிடிபடும் சூரை மீன்கள் சர்வதேச சந்தையில் மிகவும் விலை மதிப்புள்ளவை. பருத்தித்துறைக்கு வடக்காக உள்ள கடல் தொடக்கம் நாயாறு வரை செய்யக்கூடிய தொழில் இது. இன்று பருத்தித்துறை, மயிலிட்டி, வல்வெட்டித்துறை போன்ற கிராமங்களைச் சேர்ந்த சில படகுகளே இத்தொழிலில் ஈடுபடுகின்றன. இப்படகுகள்கூட கரைக்கு மிகவும் அண்மையிலான கடற்பிரதேசத்திலேயே தொழில் செய்யக் கூடியவை. மீன்பிடிக்கச் செல்லும் அதே நாளிலேயே கரைக்கு திரும்ப வேண்டிய நிலையில் உள்ளவை. இவை பிடிக்கும் மீன்கள் ஐஸ்கட்டிகளை போட்டு பழுதடையாமல் பாதுகாத்து வைக்கப்படுவதனால் உடனடியாகவே கரைக்கு திரும்ப வேண்டிய நிலையில் காணப்படுகின்றன. 

school of Tuna

இன்றுள்ள நவீன மீன்பிடிக்கு ஏற்ப இத்தொழில் செய்வதற்கு கடலில் பல நாட்கள் தங்கி தொழில் செய்வதற்கான குளிர்சாதன வசதிகளுடனான நவீன படகுகள் (Multi Day Fishing Boats – Vessels With Freezer Facilities) தேவைப்படுகின்றன. தென்னிலங்கை நிறுவனங்களுக்கும், தனியாருக்கும் சொந்தமான இந்தவகை படகுகள் சில வடக்கில் சூரை மீன்பிடித் தொழிலை செய்கின்றனர். ஆயினும், மேலதிகமாக சில நூறு படகுகள் தொழில் செய்வதற்கான கடற்பரப்பு எம்மிடம் உள்ளது. இதே நிலமை தென்னிலங்கை கடற்பரப்பிலும் காணப்படுகிறது. இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித்தரக்கூடிய சூரை மீன்கள் இன்று சீன, இந்திய நாடுகளினால் கொள்ளையிடப்படுகிறது. 

modern fishing boat

ஆழ்கடல் ஒட்டு மீன்பிடி 

மேற்கூறிய இருவகை தொழில்களும் தேசிய வருமானத்துக்காக டொலர்களை – அந்நிய செலாவணிகளைத் தரக்கூடிய ஏற்றுமதி சார்ந்த மீன்பிடிகளாகும். இலங்கையின் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய தொழில்களையும் வடக்கின் ஆழ்கடலில் செய்யமுடியும். பாக்கு நீரிணையுடன் பிணைந்திருக்கும் பேதுரு மீன்பிடித் தளமானது பெரிய அளவிலான ஒட்டு மீன் (Pelagic Fish) வளத்தைக் கொண்டது. ஒட்டு மீன்கள் என்பவை பருவகாலத்தில், குறிப்பாக வாடைக்காற்று வீசும் காலத்தில், வடக்கின் கடற்பிரதேசத்துக்குள் வருபவை. இந்த மீன்களைப் பிடிக்க பலவகை வலைத் தொழில்கள் செய்யப்படுகின்றன. இன்று, சிறு கண்ணாடி இழைப்படகுகளையே எமது மீனவர்கள் பயன்படுத்துகின்றார்கள். இவை அதிகபட்சம் கரையிலிருந்து 10 km இற்கும் குறைவான பகுதியிலேயே மீன் பிடிக்கின்றன.

இப் படகுகள் மீன்கள் அதிகமாக காணப்படும் பேதுரு கண்டமேடையின் உள்ளே பிரவேசிப்பதில்லை. அதன் விழிப்பு பிரதேசத்திலேயே தொழில் செய்கின்றன. பேதுரு கண்டமேடையின் ஒட்டு மீன் வளத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனில் நவீனமயப்படுத்தப்பட்ட மீன்பிடிக் கலங்களும், புதிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட தொழில் முறையும் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். வீழ்ச்சி அடைந்துள்ள கரையோர மீன்பிடியை நம்பி வாழும் மீனவர்களுக்கு மானிய உதவிகளுடன், பலர் சேர்ந்து படகுகள், உபகரணங்களை கொள்வனவு செய்யும் முறைமையும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அல்லது மீனவர் கூட்டுறவு (Co-operative) முறைமையின் ஊடாக உபகரணங்களைக் கொள்வனவு செய்து, கூட்டாகத் தொழில் செய்யும் முறை மறுபடியும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மேற்கூறிய இரு முறைமைகளும் மீனவ சமூகத்தில் 1980 இன் நடுப்பகுதி வரை காணப்பட்டது. இவ்வகை கூட்டு முயற்சிகளை அறிமுகம் செய்வதன் மூலம் ஒவ்வொரு மீனவனும் நன்மை அடையலாம். இதனால், தேசிய வருமானத்துக்கான பங்களிப்பு உயர்வதுடன், இலங்கை மக்களின் புரதச்சத்து தேவையும் நிவர்த்தி செய்யப்படும். 

கரையோர மீன்பிடி

கரையோர இறால் பிடிப்பு மற்றும் வெள்ளை நண்டு பிடிப்பு 

வடமாகாணத்தின் எல்லா கரைகளிலும் வெள்ளை நண்டு பெருகிக் கிடக்கிறது. யாழ்ப்பாண குடாநாட்டுப் பகுதியில் பூநகரி தொடக்கம் வடக்கு நோக்கி யாழ் நகரத்தின் கரையோரம் ஈறாக, நாவாந்துறை, அராலி, தம்பாட்டி மற்றும் புங்குடுதீவு மடத்துவெளி வரை கருவண்டன் இறால்கள் களக்கடலில் பிடிக்கப்படுகிறது. இந்த வகை நண்டும் இறாலும் ஏற்கனவே பலகாலமாக இந்த கடற்பிரதேசங்களில் காணப்பட்டாலும், கடந்த 30 வருடங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றம், கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட  மாற்றங்கள் காரணமாக முட்டைகளாகவும், குஞ்சுகளாகவும் கரைக்கு வந்து வளர்ச்சி அடைபவை. வெள்ளை நண்டின் வரத்துப் பற்றி இத்தொகுப்பில் உள்ள பிறிதொரு கட்டுரையில் விபரித்துள்ளேன். அதேபோலவே, இறால் முட்டைகளும் குஞ்சுகளும் நீரோட்டத்தில் கரைக்கு வருகின்றன. 

2009 போர் முடிவிற்குப் பின்வந்த காலம் தொடக்கம் இன்றுவரை சில இலட்சங்கள் முதலிட்டுச் (வள்ளம் + வலைகள்) செய்யக்கூடிய நண்டுத் தொழிலும் இறால் பிடியும் பல்லாயிரம் மீன்வர்களினால் செய்யப்படும் தொழில்களாக இருந்து வருகின்றன. எந்த விதக் கட்டுப்பாடும் இல்லாமல் இவை பிடிக்கப்படுகின்றன. பிடித்த வரையும் இலாபம் என்ற சிந்தனையின் அடிப்படையில் மீனவர்கள் இந்த இரு கடல்படு திரவியங்களையும் கையாளுகிறார்கள். மிகவும் சிறிய குஞ்சு இறால்களும், குருக்கான் நண்டுகளும் பிடிக்கப்படுகின்றன.

இவை இரண்டும், வாடைக்காற்று வீசும் கார்த்திகை தொடக்கம் பங்குனி வரையான காலத்தில் குஞ்சுகளாகவும் முட்டைகளாகவும் நீரோட்டத்தின் உதவியுடன் வடக்கின் கடலை வந்து சேர்கின்றன. இவை வளர்ந்து பெருக்கும் காலம் பங்குனி தொடக்கம் மார்கழி வரையான காலம். குறைந்தது ஆறு மாதங்களாவது இவை வளர்ச்சியடையத் தேவை. ஆனால், இவை வளர வளர சில மாதங்களிலேயே பிடிக்கப்படுகின்றன. ஆறுமாத காலத்தில் 100 கிராம் அளவுக்கு வளரக் கூடிய நண்டுகளை முட்டுக்கண் தங்கூசி வலைகளைக் கொண்டு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்திலேயே பிடித்து விடுகின்றனர். தமது அன்றாடச் சீவியத்துக்கு கிடைத்தால் போதும் என்ற இந்தப் போக்கு, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பெருமளவு வருமானத்தை இழக்கச்  செய்கிறது. 

இந்த நிலையை மாற்ற அரசும் மீனவ சமூகமும் சேர்ந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உதாரணமாக, சித்திரை மாதம் தொடக்கம் மார்கழி வரையான காலத்தில் நண்டு பிடிக்கும் தொழிலை நிறுத்தி வைக்க வேண்டும். நிறுத்தப்படும் காலத்தில் நண்டு பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவிகளை அரசும் – மீனவ சமூகமும் இணைந்து வழங்க ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். நண்டுபிடித் தொழில் நிறுத்தப்படும் காலத்தில், வருமானத்துக்காக மாற்றுத் தொழில்களைச் செய்வதற்கான பயிற்சிகள், வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். 

இதே போலவே, கரைகளில் இறால்கூடு மற்றும் களங்கண்டிகள் வைத்து இறால் பிடிப்பவர்களுக்கும் சித்திரை தொடக்கம் புரட்டாதி வரையான காலம் வரையும் தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்படல் வேண்டும். குஞ்சு இறால்கள் வளர்ந்து, குறைந்தது 25 கிராம் அளவிலாவது வரும்வரை, இத்தடை இருக்க வேண்டும். நண்டு பிடிக்கும் தொழிலாளிகளுக்கு ஏற்பாடு செய்வது போலவே இவர்களுக்கும் மாற்று வருமானம் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதனால், 6-9 மாதங்கள் தொழிற்தடை செய்யப்படுவதனால் ஏற்படும் நன்மையை மீனவர்கள் உணர்ந்து கொள்வார்கள். தடைநீங்கி தொழில் அனுமதிக்கப்படும் ஆறு மாதங்களில் வருமானத்தின் உயர்வை அவர்களே சுயமாகக் கண்டடைவார்கள். காலப்போக்கில் மானியங்களிலும், அரச உதவிகளிலும் தங்கிச் சீவிக்கும் நிலையிலிருந்து வெளிவர முடியும். 

எதிர்காலம் கடலை நம்பி  மட்டுமல்ல

மீனவ சமூகங்கள் கடலை நம்பி மட்டும் இருக்கும் நிலையிலிருத்து வெளிவர வேண்டும். 80 களின் நடுப்பகுதி வரை கல்வி சார்ந்த உத்தியோகங்களில் பணி செய்யும் நிலைமை வளர்ந்து வந்தது. போரின் காரணமாக கல்வி, அது சார்ந்த பணிகளில் ஈடுபடும் தொகை, மீனவ சமூகங்களில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. மீன்பிடி சார்ந்த அரச மற்றும் தனியார் நிறுவனப் பணிகளில்  அதிகமாகப் பணி செய்த மீனவ சமூகத்தவரின் தொகையிலும்கூட வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

கல்வி மற்றும் அது சார்ந்த பணிகளில் பங்கெடுக்கும் தொகையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை ஒரு சமூகமாக நாம் முன்னெடுக்க வேண்டும். கடல் சார்ந்த சமூகங்களில் A/L வரை படித்துவிட்டு கடற் தொழிலில் ஈடுபடும் இளைஞர்தொகை அதிகமாகக்  காணப்படுகின்றது. இவர்களுக்கு நவீன மீன்பிடி முறைகளை கற்கையாக கற்பிப்பதன் மூலம்,  இயற்கைக்குச் சிநேகமான பல மாற்று மீன்பிடி முறைகளை அறிமுகம் செய்யலாம். 

மீனவ சமூகங்களில் படித்த, கடல்சார்ந்த அனுபவம் கொண்டவர்களின் கல்வித் தகமைகளுக்கு ஏற்ப கடல் சார்ந்த அரச பணிகளில் குறைந்தது 50% ஆவது வழங்கப்பட வேண்டும். இன்று, அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்களுக்கே பணிகள் வழக்கப்படுகின்றன. மீனை அருவருப்பாகவும், கடலை குப்பைத் தொட்டியாகவும், துடக்காகவும் பார்க்கும் ஒருவர் கடல் சார்ந்த அரசபணிகளில் ஈடுபடுவதற்கும் – கடல்சார்ந்து வாழும் சமூகப் பின்னணியை கொண்ட, அதன்மீது உளவியல் ரீதியான நெருக்கமும் அன்பும் இருக்கும் ஒருவர் இப்பணிகளில் ஈடுபடுவதற்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இது விவசாயத்துறைக்கும் பொருந்தும்.

கடல், விவசாய சமூகப் பின்னணிகளிலிருந்து வருபவர்களை இத்தொழில்கள் சார்ந்த அரச பணிகளின் அமர்த்துவது இன்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள முறைமையாக இருக்கிறது. வெறும் கல்வியை அடிப்படையாகக்கொண்ட அறிவை விட, மேலதிகமாக இவர்களுக்கிருக்கும் அத் தொழில்கள் சார்ந்த அனுபவ அறிவும், கலாச்சரப் புரிதலும், சமூகப் பொருளாதார அனுபவப் பார்வையும் இப்பணிகளை இலகுவாகவும், சரியான முறையிலும் நிறைவேற்ற உதவியாகவிருக்கும். கடல் சார்ந்து சீவிக்கும் மக்கள் சமூகம், கடல் பொருளாதாரத்தில் மட்டுமே தங்கி இருக்கும் நிலையிலிருந்து, பல் பொருளாதார சீவியம் நடத்தும் மக்கள் சமூகமாக மாற்றப்படல் வேண்டும்.


ஒலிவடிவில் கேட்க

7982 பார்வைகள்

About the Author

மரியநாயகம் நியூட்டன்

சமூக ஆய்வாளர் மரியநாயகம் நியூட்டன் அவர்கள் 14 வயதில் ஈழத்திலிருந்து நோர்வே நாட்டுக்கு புலம்பெயர்ந்தவர். The Arctic University of Norway and NORD University Bodø, Norway பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர் இன்று வரை இலங்கையின் அரசியல், சமூக விடயங்கள் சார்ந்து பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். நோர்வே மாநில மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அரசியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)