Arts
17 நிமிட வாசிப்பு

காடும் காடுசார் பல்வகைமையும் – பகுதி 1

November 10, 2023 | Ezhuna

எமது சுற்றாடல் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இக் கூறுகளின் ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கமைந்த செயற்பாடுகளே சுற்றாடலின் நிலைபேறான அபிவிருத்தியில் பங்காற்றும். மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் சுற்றாடல் பற்றி சரிவர அறிந்துகொள்ளப்படுதலும் சிறப்பான வழிமுறைகளில் பயன்படுத்தலும் இக்கூறுகளை பேணிப்பாதுகாத்தலும் முக்கியமானவைகள். அந்த வகையில் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் உயிர்ப்பல்வகைமையின் பங்களிப்பு பற்றிய பயனுள்ள கருத்துகளை ‘வடக்கு–கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ எனும் இக் கட்டுரைத் தொடர் தாங்கிவருகின்றது.

கற்றது கைமண் அளவு கல்லாதது கடலளவு என்பதற்கு ஏற்ப கடல் பற்றிய எம் அறிவுக்கெட்டிய விபரங்கள் முதலாவது அத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளன. இவ் இரண்டாம் அத்தியாயம் காடும் காடுசார் உயிரியல் பல்வகைமை பற்றியும், அதனுடனான அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களையும் தாங்கிவருகின்றது. காடுசம்பந்தமான ஒரு பொதுஅறிமுகத்துடன் இவ் அத்தியாயத்தில் நுழைந்தால் மட்டுமே வடக்கு கிழக்கு காடுகள் பற்றிய ஓர் அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 world forest map

காடு அல்லது வனம் எனும் பதம் உலகில் பல்வேறு நாடுகளால் வெவ்வேறு விதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. வரைவிலக்கணங்களில் மரங்களின் அடர்த்தி, உயரம், அங்குள்ள பயன்பாடு, சட்டரீதியான வரையறை மற்றும் சுற்றாடல் சார்ந்த பங்களிப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. உலக விவசாய ஸ்தாபனத்தின் (FAO) வரைவிலக்கணத்தின்படி, அரை ஹெக்டயரைவிட அதிக பரப்பில், ஐந்து மீற்றருக்கு மேலான உயரமுடைய மரங்களையுடையதும் அம் மரங்களால் அப் பகுதியின் 10 வீதத்துக்கும் மேலான இடப்பரப்பை மூடும் வகையிலும் பரந்துகாணப்படும் பகுதி காடு ஆகும். இருப்பினும் விவசாயப் பகுதிகளுக்கோ அல்லது நகர்ப் பகுதிகளுக்கோ இவை பொருந்தாது. 2020 ஆம் ஆண்டின் உலக வனவளக் கணிப்பீடு, காடானது 4.06 பில்லியன் ஹெக்டயர் – அண்ணளவாக 40.6 மில்லியன் சதுர கிலோ மீட்டர் – வரையில் பரந்துள்ளதாகவும், நிலப்பரப்பின் 31 வீதத்தை உள்ளடக்கியுள்ளதாகவும் கூறுகிறது. காடுதான் உலகில் மிகப்பரந்துபட்ட சூழல்தொகுதி ஆகும். இப் பரந்துபட்ட பிரதேசத்தில் 45 சதவீதமான காடுகளே இடைவலயப்பகுதியில் பரந்துள்ளது.

காட்டிலிருந்தே அண்ணளவாக 75 வீதத்திற்கு மேற்பட்ட உயிர் சம்பந்தமான உற்பத்திப்பொருள்கள் கிடைக்கப்பெறுகிறது. இது 80 வீதமான உயிர்த்திணிவைக் (Biomass) கொடுக்கின்றது. இவ்வுயிர்த்திணிவானது ஏனைய பகுதிகளில் கிடைப்பதைவிட வித்தியாசமானது என்பதுடன் அவ்வவ் பகுதிகளின் கடல் மட்டத்திலிருக்கும் உயர்வு, மத்திய தரைக்கோட்டின் அமைவிடம், கிடைக்கப்பெறும் மழை வீழ்ச்சியின் அளவு, வெப்பநிலை என்பவற்றில் தங்கியுள்ளது. இப் பகுதிகளை சரியாகப் பேணிப் பாதுகாப்பதிலுள்ள முக்கியத்துவத்தை மனித சமுதாயம் அறியாமல் போனது விந்தையானது. ஆதிமனிதனின் வாழ்விடமான ஏதேன் தோட்டத்திலிருந்து (விவிலியம்) தற்காலம் மனிதர் வாழும் நிலப்பரப்புகள் காடாகவே இருந்துள்ளன. இக் காடே மனித சமுதாயத்துக்கு பிரயோசனமுள்ளது. மனிதனின் பெருக்கத்தோடு காடுகளின் பரம்பல் குறைந்துகொண்டு சென்றதே வரலாறு.

forest map srilanka

2010 ஆம் ஆண்டளவில் இலங்கை, 28.8 வீதம் காடாக இருந்துள்ளது. இது 1995 இல் 32.2 வீதத்தையும் 2019 இல் 16.5 வீத்தையும் எட்டியுள்ளமை இலங்கையில் அதிவேகமாக காடழிப்பு நிகழ்வதை எடுத்துக்காட்டுகிறது. இலங்கையில் 9 வீதமான காடுகளே கன்னிக் காடுகளாகும். இக் காடுகளே அதிகளவில் உயிரியல் பல்வகைமையைக் கொண்டுள்ளதாகவும் உலகில் மிகப்பெரிய காபன் சேமிப்பு இடமாகவும் அறியப்பட்டுள்ளது. இலங்கையின் காடுகள் 61 மில்லியன் மெற்றிக்தொன் அளவு காபனை உயிர்த்திணிவாகக் கொண்டிருந்தமை 2010 இல் நிரூபணமாகியுள்ளது. 1990 களிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் இலங்கை தனது காட்டுப்பகுதியில் 17.7 வீதத்தை இழந்ததன் மூலம் பாரிய சுற்றாடல் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது வருத்தத்திற்குரிய விடயம். இக்காலப் பகுதி வடக்கு கிழக்கு பகுதியின் யுத்த காலமாகும். வளமான காட்டை அழித்தொழிப்பதில் எம்மவரின் பங்கும் குறிப்பிடத்தக்களவு உள்ளது என்பது கசப்பான உண்மையாகவே சூழலியலாளர்களால் கருதப்படுகிறது.

ஆரம்பத்தில் இலங்கையின் நிலப்பரப்பில் 70 வீதமானது காடாக இருந்துள்ளமையும் இப்பரப்பு 16 வீதமாக குறைவடைந்தமையும் அண்மைக்காலத் தரவுகளால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. இலங்கையின் தேசிய சிவப்பு விபர தரவுகளின்படி, (National Red List) 253 நில வகைகளில் 243 வகையான வண்ணத்துப்பூச்சிகளும், 240 வகையான பறவைகளும் 211 வகையான ஊர்வனவும் 748 முள்ளந்தண்டு உடையவையும் 1472 வகையான முள்ளந்தண்டு அற்றவையும் இக்காட்டுப்பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

வடக்கு – கிழக்கு காடுகளும் உயிர்ப்பல்வகைமையும்

கடலிலுள்ள அநேக இரகசியங்கள் வெளிப்படாமலிருப்பது போல காடுகளிலும் அநேக உயிரியல் இரகசியங்கள் வெளிப்படாமலிருக்கின்றன. வடக்கு கிழக்கு காடுகளில் மண், மண்ணின் மேற்பரப்பு, அக்காடுகளுக்கு இடையிலுள்ள நீர்நிலைகள் ஆகியன அநேக உயிர்வாழ் அங்கிகளையும் உயிரற்ற உள்ளடக்கங்களையும் கொண்டுள்ளன. காட்டின் நிலப்பரப்பு காலாகாலமாக குழப்பப்படாத மண், மண்ணிலுள்ள நுண்ணங்கிகள், பூச்சி, புழு, அவற்றில் வாழும் உயிரினங்கள் என்பவற்றைக் கொண்டுள்ளது. வடக்கு கிழக்கு காடுகளில் அண்ணளவாக 44 வீதமான பரப்பு அடர்காடுகளாகும். இக் காடுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.

  1. உலர் காலநிலைக்காடுகள்
  2. வரள்நிலக் காடுகள்
  3. ஆற்றுக்கரையோர வரள்காடுகள்
  4. கரையோர உலர் காடுகள்
  5. கண்டல் காடுகள்  

வடக்கின் 5 மாவட்டங்களில் யாழ். மாவட்டம் ஒரு வீதமான காட்டையே உள்ளடக்கியுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டமே அதிகளவில் காடுகளைக் கொண்டுள்ள பிரதேசமாகும். மன்னார், வவுனியா, கிளிநொச்சி என்பனவும் முறையே பரப்பளவில் அதிகளவு காடுகளைக் கொண்டுள்ள பிரதேசங்களாக நிரற்படுத்தப்பட்டுள்ளன.

உலர் காலநிலைக்காடுகள் (Dry Monsoon Forest) 

முல்லைத்தீவு மாவட்டத்திலேயே இவ் வகைக் காடுகள் அதிக பரப்பில் காணப்படுகின்றன. வடக்கில் மொத்தமாக 0.67 மில்லியன் ஹெக்டயர் இவ்வகைக் காடுகளாகும். வரள் நிலத்தில் தாழ்நிலமாக கருதப்படும் இடங்களில் கடல் மட்டத்திலிருந்து அதிகளவு உயரமில்லாத இடங்களில் இவ்வகைக் காடுகள் பரந்துள்ளன. 30 மீற்றருக்கு மேற்பட்டு உயரமாக வளரும் மரங்கள் இக்காடுகளில் குறைவாகவே உள்ளன. தொடரில்லாத அங்குறு அமைப்பிலுள்ள மரங்களே (ஊசியிலை மரங்களைப் போல் அல்லாதவை) இக் காடுகளை ஆக்கிரமித்துள்ளன. பாலை (Manilkara), முதிரை (Chloroxylon) என இரு வகை சமுதாயங்களை இக் காடுகள் கொண்டுள்ளன. இவற்றுடன் இணைந்து வேறுபல மரங்களும் இக் காடுகளில் வளரும். இனங்களின் வேறுபாடானது வரள் நிலத்தில் உள்ள மண், நீர்ப்பரம்பலும் நீர் கிடைக்கப்பெறும் அளவும், மண்ணின் ஆழம் என்பவற்றிலேயே பெரிதும் தங்கியுள்ளது. இக் காரணிகளின் அடிப்படையிலேயே மரங்களின் பரம்பலும் அமைந்துள்ளது. வெளியாக காணப்படாத பட்சத்திலும், பாலை மரங்களின் வளர்ச்சி களிமண் பரப்பில் அதிகளவிலும், முதிரை மரங்களின் பரம்பல் மணற்பாங்கான நிலப்பரப்பில் அதிகளவிலும் வளர்வதிலிருந்து இது உறுதியாக்கப்பட்டுள்ளது. இக் காடுகளில் நெல்லி (Phyllanthus emblica), விளாம்பழம் (Feronia Limonia), பற்றையாக வளரும் பாவட்டை (Pavetta Species) மற்றும் கடுவநாவல் (Lantana Camara) என்பன அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் இவை ஆக்கிரமிப்பு களைகளாகும். இக்காடுகளில் அதிகளவு பெறுமதிமிக்க மரங்களைக் கொண்டுள்ளன.

வரள் நிலக் காடுகள் (Arid Zone Forest)

முன்பு முட்களும் பற்றைக்காடுகளும் என அழைக்கப்பட்டு வந்திருந்த  இந்த வகைக் காடுகள் தற்போது வரள் நிலக் காடுகள் என பெயர்மாற்றம் பெற்றிருக்கின்றன. மூன்று நிலை உயரங்களில் வளரும் மரங்களைக் கொண்டுள்ளமை இக் காடுகளின் தனித்துவமாகும். முதிரை, பாலை, வேம்பு என்பன இங்கு பரம்பி வாழும். உயரமான மரங்கள், மிகக் குறைவாகவும் ஆங்காங்கே பரம்பியும் வளரும். நில மட்டத்தில் வாழும் தாவரப் பரம்பலானது வரள் நிலத் தாவரங்களின் இசைவாக்கத்தைக் கொண்டிருக்கும். அதிகளவில் கற்றாளை வகைகளும் (Aloe Barbadensis), நாயுருவி வகைளும் (Asparagus)  இவ் வகைக் காட்டில் உள்ளடக்கப்படுகின்றன. அண்மைக் காலத்தின் காலநிலை மாற்றமானது இப் பகுதி மரங்களை பெரிதளவில் அழிவடையச் செய்வதால் இயற்கையாகவே இந்த வகைக்காடுகளின் பரம்பல் குறைவடைவது துரதிஷ்டமானது. அதிகளவு வரட்சியைத் தாங்கும் உயிரியல் பல்வகைமைகள் ஆபத்தில் சிக்கியுள்ளமையே இதற்கான காரணமாகும்.

naayuruvi

ஆற்றுக்கரையோர உலர் வலயக் காடுகள்

ஆற்றோரங்களை அண்டிய பகுதிகளிலும் ஆற்றுக் கரையோரங்களில் நீர் பரம்பக்கூடிய இடங்களிலும் இவ் வகைக் காடுகள் பரந்துள்ளன. இக் காடுகளில் மருதமரம் (Terminalia arjuna), இலுப்பை (Madhuca Longifolia), இன்னும் சிலவும் அதிகமாகக் காணப்படும். இவ் வகைக்காடுகள் வட பிராந்தியத்தில் மிகக் குறைவாக காணப்படுதல் இப்பிரதேசத்தில் ஆறுகளின் குறைவான எண்ணிக்கையை எடுத்துக்காட்டுகிறது. மன்னாரை அண்டிய பகுதிகளில் அண்ணளவாக 568 ஹெக்டயர் நிலப்பரப்பில் இவ்வகைக் காடுகள் பரம்பலடைந்துள்ளன. வட மாநிலம் எந்தவொரு நிரந்தரமான ஆற்றையும் கொண்டிருக்கவில்லை. சில சிற்றாறுகளே காணப்படுகின்றன. இந்தச் சிற்றாறுகளில் வருடம் பூராகவும் நீரோட்டம் காணப்படுவதில்லை. மிகச் சொற்ப அளவிலேயே இவ் ஆற்றோரங்களில் தாவரங்களின் பரம்பல் காணப்படுகின்றன. அக்கராயன் ஆறு, அருவியாறு, கனகராயன் ஆறு, கோடாரிக்கல்லு ஆறு, மண்டைக்கல் ஆறு, நாயாறு, நெத்தலி ஆறு, பாலி ஆறு, வல்லவராயன்கட்டு ஆறு, பறங்கி ஆறு, பேயாறு, பிரமந்தலால் ஆறு, தேராவில் ஆறு என்பன இச் சிற்றாறுகளாகும். யாழ். மாவட்டத்தில், கந்தரோடைக் குளத்திலிருந்து அராலியைச் சென்றடையும் மிகச் சிறிய வாய்க்காலான வழுக்கையாறு ஆறுகளில்லா பற்றாக்குறையைத் தீர்க்கிறது. கரையோர மரங்களைக் கொண்டிருக்காத இவ் ஆறு, பல்வகைக் காடுகளை ஊடறுத்துச் செல்வதும், அதன் உயிரியல் பல்வகைமையின் முக்கியத்துவமும் பின்னர் ஆராயப்படும்.

maruthamaram

கண்டல் காடுகள் பற்றிய விளக்கம் முதலாவது பகுதியில் சொல்லப்பட்டிருப்பினும் இங்கு மீண்டும் காடுகள் பற்றிய அறிவுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் பிரயோசனமானது. மன்னார் மாவட்டத்திலுள்ள கள்ளியடி, இலுப்பைக் கடவை, மூன்றாம்பிட்டி போன்ற பகுதிகளில் சீவகமுளைத்தலைக் காட்டும் ரைசோபோரா (Rhizophora Mucronate) மற்றும் சுவாச வேர்களைக் கொண்ட அவிசீனியா போன்ற தாவர இனங்களைக் கொண்டிருக்கும் கண்டல் காடுகள் காணப்படுகின்றன. இவை மரமாகக் கருதப்படாவிட்டாலும் 3,4 மீற்றர் உயரத்தில் வளரக்கூடியவை. 

கிழக்கு மாகாண காடுகள்

வடக்கை போலவே கிழக்கு மாகாணத்திலும் காடுகள் பரந்துள்ளன. கரையோரக் காடுகள், கண்டல் காடுகள் போன்ற வகைக் காடுகள் பெரிதும் காணப்படுகின்றன. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளில் அண்ணளவாக 8000 ஏக்கருக்கு மேற்பட்ட இவ் வகைக் கண்டல் கரையோரக்காடுகள் காணப்படுகின்றன. மொத்த நிலப்பரப்பில் கண்டல் காடுகள் அண்ணளவாக 3 இல் ஒரு பகுதியாக உள்ளது. கண்டல் காடுகள் மரங்களை மட்டுமல்ல  கண்டல் பகுதியிலுள்ள நீரில் வாழும் உயிரினங்களை உள்ளடக்கியுள்ளது. கிளிரு, நான்கு – ஐந்து வகை நண்டுகள், இறால், சேற்று மட்டி, முதலை போன்ற 65 இற்கு மேற்பட்ட இனங்களின் பல்வகைமை இப் பகுதிகளில் பரந்திருக்கின்றது. நாசிவான்தீவு, வாகரை, மட்டக்களி மற்றும் கின்னியா போன்ற பகுதிகளில் இக் கண்டல் காடுகளில் அநேகமானவை  சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது. இப் பகுதிகளில் சில வனத்திணைக்களத்திற்கு சொந்தமாக இல்லாதிருப்பதால் பெரிதும் பேணப்படுவதில்லை.

இடைத்தரக் காடுகள்

பற்றைக் காட்டிலிருந்து பெருமரங்களின் எல்லை ஆரம்பிக்கும் பகுதி இப் பெயரால் அழைக்கப்படுகின்றது. இவ் வகைக் காடுகளை வரையறுப்பதில் தெளிவற்ற தன்மைகள் உள்ளன. இருப்பினும் இவ்வகைக் காடுகளில் வேம்பு, அன்னமுன்னா, பனை, எருக்கலை, இலந்தை மற்றும் பாலை என்பன காணப்படும். இப் பகுதிகளில் மக்கள் குடியேறுவது இலகுவானதால் இக் காடுகளின் பரம்பல் சற்றுக்குறைவாகவே உள்ளது. 1978 ஆம் ஆண்டின் போது ஏற்பட்ட புயலுடன் கூடிய சுனாமியாலும் இப்பகுதி பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றது. வேம்பு, மா போன்றன மீண்டும் வளர்ந்திருந்தாலும், கயூவின் பரம்பல் முன்பைவிட குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது.

கரையோரக் காடுகள்

இக் காடுகள் ஓரளவு ஸ்திரத் தன்மையை எட்டியுள்ளது என்றாலும் மாற்றத்திற்குள்ளாகும் கரையோரத்தின் காலநிலை காரணமாக இக் காடுகள் அடிக்கடி பாதிப்பைச் சந்திக்கலாம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இப் பகுதியில் காணப்படும் மண்மேடுகள், தரைத்தோற்றம் என்பன இக் கரையோரக் காடுகளுக்கு வெளிக்காடுகள் அல்லது முட்காடுகள் அல்லது வரள் நிலப் பச்சைக் காடுகள் எனப் பல்வேறுவகையான பெயர்களை பெற்றுக்கொடுக்கிறது. பானமவின் தென்பகுதியில் இவ்வகைக் காடுகள் அதிகம் காணப்படுகின்றன. இக் காடுகளிலும் பாலை வீரை, வேம்பு, என்பன செறிந்து காணப்படுகின்றன. ஓரளவு புற்தரைகள் காணப்படுவதால் கோவேறு கழுதைகளின் பரம்பலையும் கொண்டிருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து சற்று உயரமான பகுதியான இறக்கக்கண்டி போன்ற பகுதியிலுள்ள காடுகளில் மரபுரீதியாக தேனெடுக்கும் தொழில் நடைபெறுகின்றது. இதுபற்றி கீழ்வரும் பகுதிகளில் விபரமாக காணமுடியும். செங்கமான் கண்டி, கதிரவெளிப் பகுதிகளில் சிறு குன்றுகளிலும் கூட இவ் வகைக் காடுகள் காணப்படுகின்றன. காட்டுப்பகுதிகளிலுள்ள விலங்குகள் பற்றிய பரம்பல் பின்னர் ஆராயப்படுமாயினும் சிறுத்தை, கரடி, யானை, மான், மரை என்பனவற்றை இக்காட்டில் வாழும் விலங்குகளாக இங்கே குறிப்பிடலாம். இங்கும்  சுனாமித் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

அடர்காடுகள்

அம்பாறையின் தெற்குப் பகுதி, ஹபரணை, மணலாற்றுத் தொடர் என்பன கிழக்கு கரையோரக் காடுகளின் அடர்பகுதிகளாகும். பல்வகைமை நிறைந்த இக்காட்டைப் பற்றி பின்னரும் ஆராயப்படவுள்ளதால், இங்கே குறிப்பாக மட்டும் சொல்லப்படுகின்றது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5538 பார்வைகள்

About the Author

சி. ஜேம்சன் அரசகேசரி

விவசாய விஞ்ஞானியும் சூழலியலாளருமான கலாநிதி.சி.ஜேம்சன் அரசகேசரி அவர்கள் விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் முன்னைநாள் மேலதிக பணிப்பாளர் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான இவர் விவசாயத்துறையில் மூன்று தசாப்தங்களாக பயனுள்ள பங்காற்றி வருவதுடன் மிளகாய், வெங்காயம், நிலக்கடலை, குரக்கன் மற்றும் மா போன்ற பயிர்களில் புதிய வகைகளைக் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயம் சம்பந்தப்பட்ட அநேக பிரச்சினைகளின் தீர்வுகளுக்கு வழிவகுத்துள்ள அரசகேசரி அவர்கள், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் விவசாய மற்றும் சுற்றாடல் சம்பந்தப்பட்ட கருத்திட்டங்களுக்கு ஆலோசகராகவுள்ளதுடன் சமூக சேவையாளராகவும் திகழ்கிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)