Arts
11 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண அரசு தோன்ற முன்னர் வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழ் இராசதானி இருந்ததை உறுதிப்படுத்தும் குருந்தன்குள ஆலய அழிபாடுகள்

April 11, 2023 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

இலங்கையில் வரலாற்றுப் பழமை வாய்ந்த பிராந்தியங்களில் வன்னிப்பிராந்தியமும் ஒன்றாகும். பிரித்தானியர் ஆட்சியில் இந்தப்பிராந்தியத்தில் அரச அதிகாரிகளாகக் கடமையாற்றிய லுயிஸ், பாக்கர் போன்ற அறிஞர்கள் தமது நிர்வாக நடவடிக்கைகளின் போது கண்டறிந்த,   அழிவடைந்து காணப்பட்ட அரச மாளிகைகள், ஆலயங்கள், வழிபாட்டுச் சின்னங்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் கல்வெட்டுக்கள், நாணயங்கள் முதலான வரலாற்றுச் சின்னங்கள் உள்ள இடங்களைக்  கட்டுரைகள், நூல்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். அவற்றுள் செட்டிகுளம், கட்டுக்கரைக்குளம், பனங்காமம், அரசபுரம், கனகராயன்குளம், குருந்தலூர், குருந்தன் குளம் முதலான இடங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இருந்த போதிலும் இவ்விடங்களில்  பெரும்பாலானவை பிற்காலத்தில் மக்கள் குடியிருப்புக்கள் அற்ற பெருங்காடுகளாக மாறியிருப்பதால் அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் வெளியே தெரியவரவில்லை. வேட்டையில் ஈடுபடுவோர், மரம் வெட்டுவோர், மண் அகழ்வோர் இவ்விடங்களில் காணப்பட்ட பழமையான கட்டட எச்சங்கள் பற்றி அவ்வப்போது பொதுமக்களிடையே தெரிவித்துவந்திருந்தாலும் அவ்விடங்களுக்கு தொல்லியல், வரலாற்று ஆர்வலர்கள் சென்ற பார்வையிடுவதில் பல இடர்பாடுகள் காணப்படுகின்றன.

kurunthankulam

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டிலிருந்து எமது பல்கலைக்கழக தொல்லியல் சிறப்புக்கலை மாணவர்கள் மேற்குறிப்பிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் காணப்படும் தொல்லியற் சான்றாதாரங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர். அவற்றுள் மாந்தை மேற்கில் உள்ள தொல்லியற் சின்னங்களை 2017 ஆம் ஆண்டு ஆவணப்படுத்திய தொல்லியல் மாணவன் திரு. தர்மிகனால் குருந்தன்குளப்பகுதியில் அழிவடைந்த ஆலயஅழிபாடு முக்கிய மரபுரிமைச் சின்னமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  அவ்விடத்திற்குச் சென்ற எமது பல்கலைக்கழக  மொழிபெயர்ப்புக் கற்கை நெறி மாணவர்களும் இவ்வாலய அழிபாடுகள் பற்றிய புகைப்படங்களை எமது துறை ஆசிரியர் திரு. கிரிகரனுக்கு அனுப்பியிருந்தனர். அவ்வாலய அழிபாடு காணப்பட்ட இடம் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் பாளி சிங்கள மொழியில் குருந்தி என அழைக்கப்பட்ட இடம். இது தமிழரிடையே புழக்கத்திலிருந்து வரும்   குருந்தன்குளம்  என்பதை உறுதிப்படுத்திய நாம் அவ்விடத்திற்கு தொல்லியல் ஆசிரியர் திரு. கிரிகரன், தொல்லியல் மாணவர்களான திரு. கஜிந்தன், திரு. வைகுந்தவாசன் ஆகியோருடன் சென்று பார்வையிட்டோம்.

இவ்வாலய அழிபாடு  வெள்ளாங்குள பிரதான வீதியிலிருந்து தென்மேற்காக 13 கிலோமீற்றர் தொலைவில் குருந்தன் குளக்கட்டிற்கு தென்மேற்காக  உள்ளது. பிரதான வீதியிலிருந்து ஆணைக்கட்டுவரை பெருங்காடாக இருப்பதினால் மிகுந்த அச்சத்துடனேயே பயணிக்க வேண்டும். ஆயினும் ஆலயம் அமைந்த பிரதேசத்தில் ஏறத்தாழ 100 ஏக்கர் நிலப்பரப்பு வயல் வெளியாகக் காணப்படுகிறது. இவ்வயல் நிலம் ஒல்லாந்தர் ஆட்சியில் வைரவப்பிள்ளை உடையாருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. அந்தக்காணி நன்கொடையாக வழங்கப்பட்ட காலத்திலேயே இவ்வாலயம் அழிவடைந்த நிலையில் இருந்துள்ளது. தற்போது அருணாசலம் உடையாரின் எட்டாவது தலைமுறையினர் துணிச்சலுடன் இவ்வயற்காணியில் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயினும் அழிவடைந்த ஆலயம் மீளுருவாக்கம் செய்யப்பட்டு பராமரிக்கப்படவில்லை. அழிபாடுகளிடையே காணப்பட்ட சில சமயச் சின்னங்கள் அங்கு சென்று வரும் ஒரு சிலரால்  வழிபடப்பட்டு வருவதாகத் தெரிகின்றது. 1830 களில் கர்ப்பக்கிரகத்திற்கு மேல் விமானம் இருந்த இடத்தில் மட்டும் ஓடுகளைப் பயன்படுத்தி தட்டையான கூரை போடப்பட்டதற்கான  ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஏறத்தாழ 31 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்ட இவ்வாலயம் கர்ப்பக்கிரகம் (5 x 5அடி), அந்தராளம் (5 x 7அடி), முன்மண்டபம் (16 x 15அடி), பலீடம் என்பவற்றைக் கொண்டிருந்ததற்கான அழிபாடுகளை அடையாளம் காணமுடிந்தது. இவ்வாலயச் சுவர்கள் ஏறத்தாழ ஒன்றரை அடி  தடிப்புடையன. சிறிய விமானம், முன் மண்டபம் முற்றாகச் சிதைவடைந்து அவற்றின் எச்சங்கள் ஆலயத்தைச் சுற்றிவர குவியலாகவும், சிதறுண்டும் காணப்படுகின்றன. இவ்வாதாரங்கள் இவ்வாலயம் பெரிதாகக் கட்டப்பட்டிருந்ததை  உறுதிப்படுத்துகின்றன.

இவ்வாலய வழிபாட்டில் இருந்திருக்கக்கூடிய சிலைகள், சிற்பங்கள், சமயச் சின்னங்கள் என்பவற்றை  உறுதிப்படுத்தும் சான்றுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. தற்போது உடைந்த நிலையில் கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகரது செப்புத் திருமேனி இவ்வாலயக் காலத்திற்கு உரியதாகக் கூறப்படுகின்றது. ஆயினும் அதன் காலத்தை உறுதிப்படுத்தக் கூடிய சாசனப் பதிவுகள் எவற்றையும் செப்புத் திருமேனியில்  காணமுடியவில்லை. ஆயினும் ஆலயத்திற்கு வெளியே காணப்படுகின்ற எலி வாகனமும், பலிபீடத்தின் கட்டட எச்சங்களும இவ்வாலயத்தின் தோற்றகாலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. தற்போது ஆலய முன்வாசல் பகுதியில் வைக்கப்பட்டிருக்கு நாகக் கல் சிற்பம் இவ்வாலயத்தின் பழமையை எடுத்துக்காட்டும் முக்கிய சான்றாகக் காணப்படுகின்றது. சதுரமாகச் வடிவமைக்கப்பட்ட கருங்கல்லில் நாக பாம்பின் உருவம் செதுக்கப்பட்டு அதன் மேல் பகுதியில் ஆவுடையுடன் கூடிய சிவலிங்கத்தின் சிற்பம் இடம் பெற்றிருப்பது முக்கியமான அம்சமாகும். கர்ப்பக்கிரகத்துடன் இணைந்த கோமுகியின் பிரனாள அமைப்பும், கலைமரபும் இவ்வாலயத்தின் தொன்மையைக் காட்டுகின்றன.

இவ்வாலயம் அமைந்துள்ள பகுதியில் கருங்கற்கள் போதிய அளவு காணப்படுகின்ற போதும் இவ்வாலயம் முழுக்க முழுக்க செங்கல், வெள்ளைக்கல், சுதை, சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் இலங்கையில் ஆகம மரபில் ஆலயங்கள் கட்டப்பட்டதன் தொடக்க காலத்தை நினைவுபடுத்துவதாக உள்ளன. இவ்வாலயக் கட்டுமானத்தில் உபானம் முதல் உத்திரம் வரை பின்பற்றப்பட்டிருக்கும் ஆகம மரபு புராதன ஆலய அமைப்பை நினைவுபடுத்துகின்றன. கர்ப்பக்கிரகம், அந்தராளம், முன்மண்டபம் என்பவற்றில் உள்ள அரைத்தூண்கள் ஒன்றரைத் தடிப்பில் சுதைகொண்டு செதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் அலங்காரத்தில் இடம்பெற்றிருக்கும் போதிகை, வீரகண்டம், பலகை, பத்மம் என்பன திராவிடக்கலை மரபின் ஆரம்ப வளர்ச்சி நிலையை எடுத்துக்காட்டுகின்றன. கர்ப்பக்கிரகத்துடன் இணைந்த கோமுகி சுவருக்கு வெளியே இரண்டு அடி நீளத்திற்கு நீண்டு, ஒரு அடி நீளத்திற்கு நிலத்தை நோக்கி வளைந்து காணப்படுகின்றது. வெள்ளைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்தக்கோமுகியின் வடிவம், தொழில் நுட்பத் திறன் என்பன இவ்வாலயக் கட்டுமானத்தில் பின்பற்றப்படடிருக்கக் கூடிய கலைமரபை அடையாளம் காண உதவுகின்றது. இவ்வாலயத்தின் கட்டடக்கலைமரபு தமிழகத்தில் பல்லவர், சோழர்,பாண்டியர் காலத்தில் தோன்றி வளர்ந்த கலை மரபுகள் பலவற்றைப் பிரதிபலித்து நின்றாலும் சில அம்சங்கள் இலங்கைக்குரிய தனித்துவமான அம்சமாகவும் காணப்படுகின்றன. உதாரணமாக ஆலய முன் முகப்பின் வடிவம் மேற்பகுதியில் ஏழரை அடி அகலத்தில் சற்சதுரமாக கட்டப்பட்டு, முகப்பின் நடுமையத்தில்  அதன் அகலம் வளைந்த நிலையில் அதிகரித்து கீழ் முகப்பில் அதன் அகலம் பத்தரை அடி அகலத்தில் சதுரமாக கட்டப்பட்டிருப்பதைக் குறிப்பிடலாம்.

kurunthankulam_1

இவ்விடத்தில் இவ்வாலயத்தின் கலைமரபு, தொன்மை பற்றி ஆய்வு செய்த முன்னாள் தமிழகத் தொல்லியற் திணைக்கள சிரேஷ்ட கல்வெட்டறிஞர் கலாநிதி இராஜகோபால் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்: “அதிட்டானம், பித்தி முதலான கட்டுமான அமைப்புக்களும், அபிஷேத் தீர்த்தம் வெளிவர கல்லால் அமைக்கப்பட்டுள்ள பிரனாள அமைப்பும் தொன்மைக் கோயில் அமைப்பைக் காட்டுகின்றன. கருவறை, அர்த்த மண்டபம், வெளிமண்டப அமைப்புக்களும் முறையான வழிபாட்டிலில் இருந்த கோயில் என்பதைக் காட்டுகின்றன. குளம் என்ற பின்னொட்டுச் சொல்லுடன் ஊர்ப் பெயர் உள்ளமை விளைநிலங்களும், உழுகுடிகளும்  இருந்தமைக்கும் செழிப்புக் காரணமாக வழிபாடு, விழாக்கள் பொருட்டு தொன்மையான ஆலயம் அமைவதற்கும் நல்ல சான்றாகும்”.

குருந்தன் குளத்தின் வரலாற்றுப் பின்னணி

குருந்தம் என்பது ஒரு வகை மரத்தைக் குறிக்கும் பெயராகும். வன்னியின் பல  இடப்பெயர்கள் மரத்தை  அடிப்படையாகக் கொண்டு தோன்றியதற்கு ஆதாரங்கள் உண்டு. இதற்கு மருதம்குளம், பூவரசம்குளம், ஆலங்குளம் முதலான இடப்பெயர்களைக் குறிப்பிடலாம். இதனால் குருந்தன்குளம் என்ற பெயரின் தோற்றம் குருந்த மரத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதெனக் கூறமுடியும். பாளி, சிங்கள மொழியில் அவற்றின் மொழிக்கு ஏற்ப இவ்விடம் குருந்தி என அழைக்கப்படுகின்றது. சூளவம்சம் என்ற பாளி இலக்கியம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழர்கள் வாழ்ந்த இடமாக இக்குருந்தி மாவட்டத்தைக் குறிப்பிடுகின்றது. பேராசிரியர் சுதர்சன் செனிவரட்னா இலங்கையில் குளத்தை மையப்படுத்திய கிராமக் குடியிருப்புக்கள் தோன்றுவதற்கு தென்னிந்தியாவிலிருந்து பரவிய பெருங்கற்காலப் பண்பாடே காரணம் எனக் கூறுகின்றார்.

கலிங்கமாகன் இலங்கையில் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னனாகப் பாளி, சிங்கள இலக்கியங்கள் கூறினாலும் அவன் யார்? எந்த வம்சத்தைச் சேர்ந்தவன்? அவனது பூர்வீகம் எங்கிருந்தது? அவனுக்கும்  இலங்கை அரசவம்சங்களுக்கும் இடையிலான உறவு என்ன? போன்ற கேள்விகளுக்கான விடைகள் இன்றுவரை கண்டறியப்படவில்லை. மேலும் அவன் ஆட்சியில் வெளியிடப்பட்டதாகக் கூறக்கூடிய கல்வெட்டுக்களோ, நாணயங்களோ, அவனது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட ஆலயங்களோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இவனது ஆதிக்கம் பொலநறுவையிலும், வடஇலங்கையிலும் இருந்ததெனக் கூறுவதற்கு அப்பால் அவன் வரலாற்றையும், வரலாற்றுச் சாதனைகளையும் கூறமுடியாதிருக்கிறது.

kurunthankulam-3

கலிங்கமாகனது அரசு வடஇலங்கையில் இருந்தபோது சந்திரபானு என்னும் சாவக இளவரசன் தம்பதெனிய அரசு மீது படையெடுத்து இரண்டாம் பராக்கிரமபாகுவிடம் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது (இந்திரபாலா இளங்கதிர் 21 மலர் :22).  ஆயினும் இவன் கலிங்கமாகனிடம் அடைக்கலம் பெற்றோ அல்லது அவன் ஆதரவைப் பெற்றோ கலிங்கமாகனின் பின்னர் வடஇலங்கையில் ஆட்சி செய்ததாகக் தெரிகிறது (மேற்படி:33). சூளவம்சம் இவன் சிங்கள அரசுக்கு எதிராகப் படையெடுக்க முன்னர் தென்னிந்தியாவிலிருந்து சோழ, பாண்டியப்படைகளுடன் மாதோட்டத்தில் வந்திறங்கி  பதி, குருந்தி (குருந்தலூர்) மாவட்டங்களில் உள்ள மக்களை தன்னுடன் இணைத்துக் கொண்டதாகக் கூறுகிறது. இவன் இரண்டாவது தடவை தம்பதெனிய அரசு மீது படையெடுத்த போது வடஇலங்கையின் மன்னனாக இருந்தே படையெடுத்திருக்கலாம் என்பதற்கு தென்னிந்தியக் கல்வெட்டு ஒன்றில் ஆதாரம் காணப்படுகிறது. இது பற்றி தென்னிந்தியாவில் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1262 ஆம் ஆண்டுக்குரிய குடுமியாமலைக் கல்வெட்டு பின்வருமாறு கூறுகிறது:

இந்தக்கல்வெட்டில் கூறப்பட்ட வரலாற்றுச் செய்திகளின் முக்கியத்துவத்தைப் பேராசிரியர் பத்மநாதன் பின்வருமாறு கூறுகிறார்:

  • வீரபாண்டியன் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று, அங்குள்ள அரசனொருவனைப் போரிலே  கொன்றான்.
  • போரில் மாண்ட மன்னனின் அரச சின்னங்களான அரியாசனம்,  முடி, வாள், கொடி, குடை முதலானவற்றையும் சீனவடம், நாகத்தோடு முதலான பெறுமதி மிக்க அணிகலன்களையும் அவனது படையிலுள்ள யானை, குதிரைகளையும் பாண்டியரின் படை கைப்பற்றிவிட்டது.
  • வீரபாண்டியன் தானடைந்த வெற்றியின் அடையாளமாக இணைக்கயல்களின் உருவங்களை திருகோணமலையிலும் திரிகூடகிரியிலும் பொறித்தான்.
  • திருகோணமலையிலே பாண்டியரசன் தங்கியிருந்த சமயத்தில் முன்பு அடங்காது, பகைமை கொண்டு போர் புரிந்த சாவகனின் மைந்தன் பணிந்து வேண்டிக் கொண்டதால், தந்தையினுடைய இராச்சியம் மகனுக்குரியமையாகும் என்பது அரசியல்நெறி என்ற உணர்வினால் அவனுக்கு வீரபாண்டியன் ஆட்சியதிகாரம் வழங்கினான். அவனுக்கு அரசருக்குரிய சின்னமான வீரக்கழலினை அணிந்து, அவனை யானை மேல் ஏற்றி, ஊர்வலம் செய்வித்து அதன் பின்பு அவனுடைய ஊருக்குச் செல்லுமாறு அனுப்பினான்.
  • வீரபாண்டியன் போர் முடிந்த பின் செய்த ஏற்பாடு திருகோணமலையிலே நடைபெற்றது என்று சாசனக் குறிப்பால் உணரப்படும். அந்நாட்களிலே திருகோணமலை சாவக மன்னனின் தலைநகராக அமைந்திருத்தல் கூடும்.
  • இலங்கை அரசன்  ஒருவனிடமிருந்து வீரபாண்டியன் ஆனைகளைத் திறையாகப் பெற்றான். அவன் இரண்டாம் பராக்கிரமபாகுவாதல் வேண்டும் என்பது ஒரு ஊகமாகும்.

இந்தக்கல்வெட்டில் இருந்து 13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி அளவில் இலங்கையில் இரு அரசுகள் இருந்ததையும், சாவக மன்னன் படையெடுப்பிற்கு அஞ்சிய சிங்கள அரசின் அமைச்சன் ஒருவன் பாண்டிய மன்னனிடம் உதவி கேட்டதன் பேரில் வடஇலங்கைமீது படையெடுத்த பாண்டியரின் படைகள் ,அடிபணிந்து திறை வழங்க  சாவக மன்னனைப் பணித்த போது, அதற்கு அவன் மறுத்ததால் அவனின்  மைந்தனை ஆட்சியில் அமர்த்தினர் என்ற உண்மை தெரிகிறது.  இந்தக்கல்வெட்டு சாவக மன்னனின் மைந்தனை ஆட்சியில் அமர்த்தியதாகக் கூறிய போதும் அவனது பெயரைக் குறிப்பிடவில்லை. இருப்பினும் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட இராசதானி தோன்றுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வெளியே சாவகன் அவனின் மைந்தன் ஆகியோரின் அரசு இருந்தமை தெரிகிறது. இவ்வரசின் மையம் அல்லது தலைநகர் எந்த இடத்தில் இருந்ததெனப் பாளி, சிங்கள இலக்கியங்கள் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மாறாகக் கலிங்கமாகனது படைகள் நிலைகொண்டிருந்த பெரும்பாலான இடங்களே சாவக மன்னனின் ஆதிக்கம் நிலவிய இடங்களாகக் குறிப்பிடுகின்றன. இவ்விடங்களுக்கு இடையிலான ஒற்றுமைகள்  கலிங்கமாகனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த சாவக மன்னன் கலிங்கமாகனின் ஆதரவுடன் அல்லது அவனிடம் அடைக்கலம் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கலாம் என்ற பேராசிரியர் இந்திரபாலா கூறும் கருத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

14ஆம் நூற்றாண்டுக்குரிய “திரிசிங்கள கடயம்பொத்” என்ற நூலில் இருந்து சாவகனின் அரசு யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், திருகோணமலையிலும் ஏற்பட்டிருந்ததை அறியமுடிகிறது. இந்த இராச்சியத்தின் எல்லையிலே தமிழ்ச் சாசனங்கள் நாட்டப்பட்டிருந்ததாகவும் இந்நூல் மேலும் கூறுகிறது. பேராசிரியர் பத்மநாதன் யாழ்ப்பாணத்தில் சாகவனது ஆட்சி ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கு இங்கு புழக்கத்திலிருக்கும் சாவன்கோட்டை, சாவாங்கோட்டை, சாவகச்சேரி முதலான இடப்பெயர்களை ஆதாரமாகக் காட்டுகிறார் (பத்மநாதன் 1992:32). பாளி, சிங்கள இலக்கியங்களில் சாவக மன்னர்களது ஆதிக்கம் நிலவிய இடங்களில்  சில திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்டங்களில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும் பெரும்பாலான இடங்கள் வன்னிப்பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் ஆதிக்க மையம் வன்னிப்பிராந்தியத்தில் இருந்ததாகச் சிந்திக்க இடமுண்டு. அவ்வாறு கருதுவதற்கு வேறும் சில ஆதாரங்கள் காணப்படுகின்றன.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8099 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (18)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)