Arts
7 நிமிட வாசிப்பு

மருத்துவர் ஜோன் ஸ்கடர்

June 28, 2022 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

இருநூறு வருடங்களுக்கு முன்னர் பண்டத்தரிப்பிலே மருத்துவர் ஸ்கடர் பணியாற்றிய மருந்தகம் (டிஸ்பென்சரி) பனைமரங்கள், நெல் வயல்கள் சூழ்ந்த பசுந்தரையில் அமைந்துள்ள தீவு போன்றே காட்சியளித்தது. நோயாளர்கள் வந்து செல்லும் சிகிச்சை நிலையமாக மட்டுமன்றி, அவர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெறும் மருத்துவமனையாகவும் ஸ்கடரது மருந்தகம் இயங்கியது.  ஸ்கடர் அதிகமானவர்களுக்குச் சிகிச்சையளிக்கவல்ல  பெரியதொரு மருத்துவமனையை நிறுவுவதற்கு விரும்பினார்.

ஜோன் ஸ்கடர்

திருமதி ஸ்கடர் தனது பிள்ளைகளுடன் அநாதரவான யாழ்ப்பாணத்துப் பிள்ளைகளுக்கும் (40 பிள்ளைகள்) தமது இல்லத்தில் அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கும் கல்விபுகட்டி வந்தார். ஸ்கடர் குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து வந்த பணிப்பெண் அமி இந்தப்பிள்ளைகளைப் பராமரிக்க ஆற்றிய பங்களிப்பு விலைமதிப்பிட முடியாதது. அமி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த முதல் ஆபிரிக்க அமெரிக்கராக  கருதப்படுகிறார்.

தொற்றுநோய்களுக்குரிய விசேட மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் தொற்று நோய் ஏற்பட்ட காலங்களில் நோயாளர்களைத் தனிமைப்படுத்தியும் உரிய முறையிற் பராமரித்துமே தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தியிருந்தனர். ஸ்கடருக்கு மருத்துவமனையிலே உதவியாக இருந்தவர் அவரது மனைவியான ஹரியற் வோட்டர்பரி ஸ்கடர். யாழ்ப்பாணத்தில் கொலரா நோய் பரவியபோது திருமதி ஸ்கடர் கணவனுடன் இணைந்து நோயாளிகளைப் பராமரிப்பதிலும் அவர்களைக் குளிப்பாட்டுவதிலும் இறந்தவர்களது சடலங்களைப் புதைப்பதிலும் பேருதவியாக இருந்தார். நோய்வாய்ப்பட்டவர்களது துன்பங்களைப் போக்குவதில் தங்களால் இயன்ற அனைத்தையும் இந்தத்தம்பதியினர் ஆற்றினர்.

மருத்துவர் ஸ்கடரது சத்திர சிகிச்சை பற்றிய குறிப்புக்கள்:

புதன்கிழமை, சனவரி 10 ஆம் திகதி – “இன்று காலை ஒருவருடைய உடலின்  ஒரு பக்கத்தில் வளர்ந்திருந்த கட்டியை சத்திர  சிகிச்சை செய்து அகற்றினேன். கிட்டத்தட்ட ஒரு அடி நீளமானதாக இருந்தது. நான் சத்திர சிகிச்சை செய்து அகற்றிய கட்டிகளில் இதுவே மிகப் பெரிதாக இருந்தது.”


மயக்கமருந்துகள், குருதி மாற்றீடு, நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் அறிமுகமாகாத அக்காலத்தில் அவர் மேற்கொண்ட ஒரு சத்திரசிகிச்சை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“12 வயதுச் சிறுமி ஒருவரது பின்புறம் வளர்ந்திருந்த 2 கட்டிகளை அகற்ற வேண்டியிருந்தது. 8 அங்குல ஆழமான கீறலை ஏற்படுத்தி சத்திரசிகிச்சை மேற்கொண்டபோதும் அந்தச்சிறுமி சத்திரசிகிச்சை நடைபெற்ற காலப்பகுதியில் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்.”

முறிந்த எலும்புகளைப் பொருத்துதல், காயங்களைக் குணப்படுத்துதல், கண்புரை அறுவைச் சிகிச்சை முதலான சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டமையை அவரது சத்திரசிகிச்சைக் குறிப்புக்கள் வாயிலாக அறிய முடிகிறது.  

“இன்று 70 வயதுடைய நபர் ஒருவருக்கு கண்புரை நோய்க்கான சத்திரசிகிச்சையை மேற்கொண்டேன். அவருக்கு மீண்டும் கண்பார்வை கிடைத்தது.”

சாகரம் தாண்டி சவால்களை எதிர்கொண்டு ஆற்றிய தொண்டு


வட அமெரிக்காவிருந்து பாய்மரப்படகில் உயிரைப் பணயம் வைத்து, பல மாதங்கள் பயணஞ் செய்து, பல்லாயிரம் மைல் கடந்து, ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று பிற இனத்தவர்கள் மத்தியில் பணியாற்றிய மிசனரித் தொண்டர்கள் இறைவன் மீது கொண்ட பக்தி விசுவாசத்தாலும் கிறிஸ்துவினது போதனைகள், சிலுவைப்பாடுகளால் திடவைராக்கியம் பூண்டு அன்பின் நிமித்தம் பல்வேறு துன்பங்களைத் தாங்கிக் கொண்டார்கள்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டம் பெற்று அனைத்து வசதிகளும் நிறைந்த நகரத்தை விட்டு, பெற்றோரை உடன்பிறந்தோரைப் பிரிந்து, எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு, சுகாதாரத்தில் பின்தங்கியிருந்த ஆசியநாட்டுக்கு வருகை தந்து சேவையாற்றிய அமெரிக்க மருத்துவ மிசனரியினரது பணி போற்றுதற்குரியது.

மருத்துவர் ஸ்கடர், திருமதி ஸ்கடர்

மருத்துவர் ஸ்கடர், திருமதி ஸ்கடர் மற்றும் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சோதனைகளையும் துன்பங்களையும் இறையன்பின் நிமித்தம் எதிர்கொண்டனர். மருத்துவர் ஸ்கடர் பண்டத்தரிப்பில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளுக்கும் தீவுகளுக்கும் மருந்துகளையும் சத்திரசிகிச்சை உபகரணங்களையும் தம்முடன் எடுத்துச் சென்று நோய்களைக் குணப்படுத்தினார்.  நவீன போக்குவரத்து சாதனங்கள் எவையுமே அறிமுகமாகாத காலத்தில், பாதைகள் அமைக்கப்படாத இடங்களுக்கு குதிரை வண்டியிலும் நடந்து சென்றுமே சிகிச்சையளித்தார்.

உடலில் ஏற்படும் நோய்க்கு சிகிச்சை அளித்து ஒரு மனிதனைக் குணப்படுத்துவதே ஆகவும் சிறந்த ஆன்மிகப் பணியெனவும் அதுவே ஆன்மாவை உலகத் துன்பத்திலிருந்து விடுவிக்கும் எனவும் ஸ்கடர் நம்பினார்.

 

தமிழ்நாட்டில் வேலூரில் தடம் பதித்த ஸ்கடர் தலைமுறையினர்

பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி அமெரிக்க மிசனரிகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அமெரிக்க மிசனரி சபையினர் மருத்துவர் ஸ்கடரை இந்தியாவுக்குச் சென்று பணியாற்றுமாறு கேட்டனர். 16 வருடங்களுக்கு மேல் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய ஸ்கடர் 1836 இல் தமிழ்நாட்டுக்குச் சென்று மருத்துவ மிசன் பணியை ஆற்றினார். இந்தியாவின் முதல் மருத்துவமிசன் மருத்துவர் என்ற சிறப்பையும் ஸ்கடேரே பெற்றார். அவர் தமிழ்நாட்டிலுள்ள சிந்தாதிரிப்பேட்டையில் தன்னுடைய இல்லத்தை அமைத்துப் பணியாற்றினார்.

1842-1846 காலப்பகுதியில் அமெரிக்காவில் சிறிது காலம் தங்கியிருந்து பின்னர் தமிழகம் திரும்பி 1847 முதல் 1849 வரை 2 ஆண்டுகள் மதுரையில் மருத்துவப் பணியாற்றினார். 1849 முதல் தன்னுடைய பணியை சென்னையில்(மற்றாஸ்) இறை அழைப்பு வரும் வரை தொடர்ந்தார்.  உடல் நலக்குறைவு காரணமாக தென்னாபிரிக்காவுக்குப் பயணமானார்.

மேலைத்தேச மருத்துவத்தின் உன்னதத்தை உலகுக்கு அறிமுகப்படுத்த, யாழ்ப்பாண தேசத்துக்கு வந்த ஜோன் ஸ்கடர் என்ற அமெரிக்க மிசனரி மருத்துவர் – அன்புப் பணியாளர், 1855 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13 ஆம் திகதி தென்னாபிரிக்காவின் நன்னம்பிக்கை முனையில் உள்ள உவின்பேர்க் என்ற இடத்தில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

ஸ்கடரது 7 ஆண்பிள்ளைகளும், 2 பெண் பிள்ளைகளும் இந்தியாவில் மிசன் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். ஆண்பிள்ளைகளில் ஐவர் அமெரிக்காவுக்குச் சென்று மருத்துவத்துறையில் பட்டம் பெற்று மருத்துவ மிசனரிகளாக இந்தியாவுக்கு மீளவந்து பணியாற்றினர்.  ஸ்கடரது 15 பேரப்பிள்ளைகளும் மிசன் பணியில் இணைந்து கொண்டனர். மருத்துவர் ஜோன் ஸ்கடர் வம்சத்தின் 4 தலைமுறைறைச் சேர்ந்த 42 பேர் இந்தியாவில் அமெரிக்க மிசனுக்காகத் தொண்டாற்றினார்கள்.

மருத்துவர் ஜோன் ஸ்கடரது 13 ஆவது மழலை யாழ்ப்பாணத்திலுள்ள சாவகச்சேரி என்ற இடத்தில் 1836 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 29 ஆம் திகதி பிறந்தது. இவரது பெயரும் ஜோன் ஸ்கடர் (இளையவர்) என்பதாகும். இவரும் மருத்துவரே.  இவர் இலவ்ரா போட்டர் (சோபியா) உவில்ட் என்ற பெண்மணியைத் திருமணஞ் செய்தார். இவர்களுக்குப் பிறந்த தவப்புதல்வியே ஐடா ஸ்கடர்.

ஐடா ஸ்கடர் என்ற இளம் பெண்ணுடைய வாழ்வை மாற்றிய நாள்

இளவயது ஐடா ஸ்கடர் இந்தியாவில் காணப்பட்ட வறுமை, சுகாதார வசதியின்மை, மக்களிடம் காணப்பட்ட அறியாமை, நாகரிகமின்மை முதலானவற்றைக் கண்டு வெறுப்புற்றிருந்தார். இதனால்  திருமணம் செய்து மகிழ்ச்சியான வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்பி அமெரிக்கா சென்றார்.

ஐடா ஸ்கடர்

ஒருநாள் ஐடாவுக்கு தந்தையார்  ஜோன் ஸ்கடரிடம் (இளையவர் ) இருந்து ஒரு கடிதம் வந்தது. தாயார் இலவ்ரா இந்தியாவில் உடல் நலக்குறைவுடன் இருக்கும் செய்தியை அறிந்து தென் இந்தியாவுக்கு உடனே திரும்பினார்.

ஐடா ஸ்கடர் தாயாருக்கு  பணிவிடை செய்துவந்த நாள்களில் ஒருநாள் மாலைப்பொழுது கையிலே விளக்குடன் ஒரு பிராமணர் இவர்களது வீட்டுக்கு வந்து வீட்டுக் கதவைத் தட்டினார். ஐடா வெளியே வந்து பார்த்தார். 14 வயது நிரம்பிய தனது மனைவி பிரசவ வேதனையால் துன்பப்படுவதாகவும் உடனே வந்து உதவுமாறும் ஐடாவிடம் இரந்து மன்றாடினார். ஐடா தான் மருத்துவர் இல்லையென்றும் தனது தந்தையார் தான் மருத்துவர் என்றும் அவரை அழைத்துவருவதாகவும் கூற, அந்த  இந்தியர் தாங்கள் அந்நிய தேசத்து ஆண்கள் பிரசவம் பார்க்க அனுமதிப்பதில்லை என்று கூறி ஆற்றோணாத் துயருடன் திரும்பினார்.

அடுத்து ஒரு முகம்மதியர் வந்து தனது மனைவி பிரசவவேதனையால் இறந்து கொண்டிருப்பதாகவும் ஐடாவை உதவுமாறும் இரந்து நின்றார். ஐடா தந்தையை அழைத்துவர உள்ளே செல்ல அதற்கு அம்முகம்மதியர் இசுலாமியப் பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்லும் போது புர்கா அணிந்து செல்வதாகவும் ஆண்களை ஒருபோதுமே பிரசவம் பார்க்க அனுமதிக்க முடியாது என்றும் கூறித் துயருடன் அழுதவாறு திரும்பிச் சென்றார்.

அன்றைய நாள் மூன்றாவதாக இரவு வேளை ஓர் இந்துக் குடியானவர் வந்து தனது மனைவியின் பிரசவத்துக்கு உதவுமாறு ஐடாவிடம் கை கூப்பி இரந்து வேண்டுகிறார். நீங்கள் உதவாவிட்டால் மனைவி இறந்து விடுவார் என்று தொழுதார். ஐடா தந்தையார் மருத்துவர் ஜோன் ஸ்கடரை அழைத்துவரச் உள்ளே செல்ல அவரும் மறுத்து விட்டார்.

அன்று இரவு முழுவதும் ஐடா துன்பத்திலே துவண்டார். அடுத்தநாள் தூரத்திலே கேட்ட பறையொலி அவர் காதுகளில் பலநாட்களாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.

(தொடரும்)


ஒலிவடிவில் கேட்க

2743 பார்வைகள்

About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)