Arts
18 நிமிட வாசிப்பு

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு I

February 7, 2023 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

அது 1967ஆம் ஆண்டு. பேராசிரியர் சி.பத்மநாதன் யாழ்ப்பாண வைபவமாலை நூலைப் பதிப்பிப்பதற்காக அதன் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்தபோது இலண்டனிலுள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒரு சுவாரசியமான கையெழுத்துப் பிரதியொன்றைக் கண்டடைந்தார். அப்பிரதி “நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு” என்று பெயரிடப்பட்டிருந்தது. அப்பெயர் கொண்ட நூல் பற்றிய உரையாடல் எதுவும் அவருக்குத் தெரிந்தவரை ஈழத்துப் புலமைத்தளத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கவில்லை. எனவே அந்த மைப்பிரதியைக் கவனமாக ஆராய்ந்த அவர், அந்நூலை சிறு முன்னுரையுடன் 1976ஆம் ஆண்டு வெளியான அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் மட்டக்களப்பு மகாநாட்டு மலரில் “நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு” என்ற பெயரில் ஒரு ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டார் (பத்மநாதன் 1976:82-90).

அதுவரை தங்கள் வரலாற்றுநூலாக எஃப்.எக்`ச்.சி.நடராசாவால் “மட்டக்களப்பு மான்மியம்” என்ற பெயரில் பதிப்புக் கண்ட ஏட்டுச்சுவடியைக்  கூறிவந்த கிழக்கிலங்கை அறிஞர் சமூகம், நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டையும் தம் வரலாற்றுநூல் வரிசையில் இணைத்துக்கொண்டது (நடராசா, 1980:1-25). 1 எனினும் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் பெற்றுக்கொண்ட கவனத்தையும் விவாதத்தையும் நாடுகாட்டுப்பரவணிக் கல்வெட்டு பெற்றுக்கொள்ளவில்லை. அந்நூல் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளும் மிகக்குறைவாகவே கிடைக்கின்றன .

உண்மை என்னவென்றால், பேரா.பத்மநாதனின் கட்டுரைக்கு முன்னர், இற்றைக்கு சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே நாடுகாட்டுப் பரவணி கண்டறியப்பட்டு அதன் ஆங்கில மொழியாக்கமும் வெளியாகிவிட்டது. 1847 முதல் 1897 வரை இலங்கையில் பணியாற்றிய ஃகியூ நெவில் (Hugh Nevill) எனும் பிரித்தானிய அரச அதிகாரி, பல விதங்களிலும் இலங்கைப் புலமையாளர்களில் முக்கியமானவர்.  ‘கீழைத்தேயக் கற்கைகளுக்கான திராவிட ஆய்வேடு’ என்ற துணைத்தலைப்புடன் அவரால் வெளியிடப்பட்ட “தப்ர|பேனியன்” எனும் ஆய்வேடு இலங்கையின் புலமைத்தளத்தில் இன்றும் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றது. அந்த ஆய்வேட்டில் தான் நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டை ஆங்கிலத்தில் மொழியாக்கி “The Nadukadu Record” என்ற பெயரில் இரு கட்டுரைகளை வரைந்தார் நெவில் (1887a:128, 1887b:137-141).

18-ஆம்-நூற்றாண்டின்-இறுதியில்-மட்டக்களப்பு-மாவட்டம்

நெவிலின் கட்டுரைகள் விரிவான விளக்கக்குறிப்புகள் அடங்கியவை. நாடுகாட்டுப் பரவணி பற்றிய நினைவுகள் முற்றிலும் மறையாத காலத்தில் வாழ்ந்த அக்கால உள்ளூர் மக்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்ததால், நெவில் பதிவுசெய்திருக்கும் குறிப்புகளே நாடுகாட்டுப் பரவணியைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இன்று வழிசமைக்கின்றன.  நெவிலின் மொழியாக்கத்தை பத்மநாதனின் பதிப்போடு ஒப்பிட்டு வாசிக்கும் போது இன்றுவரை புரியாதிருந்த பல மர்மத்திரைகள் விலகுகின்றன. நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டின் வரலாற்று முக்கியத்துவமும் தெற்றெனப் புலப்படுகின்றது.

நாடுகாடு என்பது இன்றைய அம்பாறை மாவட்டம் இறக்காமம் கிராமத்தை மையமாகக் கொண்டு உகணை, அம்பாறை நகரம், மல்வத்தை உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கி வடக்கே நாதனை 2 (இன்றைய வெல்லாவெளி) வரை நீடித்த ஒரு பழங்கால நிருவாகப் பிரிவாகும். இன்றுள்ள அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவை மையமாகக் கொண்டிருந்த நாடுகாட்டில், அதே மாவட்டத்தின் சம்மாந்துறை, அம்பாறை, உகணை, தமனை, அக்கரைப்பற்று, நிந்தவூர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவு எல்லைப்பகுதியும் அடங்கியிருந்தன.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் இடச்சு ஆளுநராக இருந்த |சேகப் பேர்னாட்டின் குறிப்பில் வரும் “மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினொரு மாகாணங்களில்” நாடுகாடும் ஒன்றாகும்.3 1881ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பின் தனி “பற்று” பிரிவாக நீடித்த நாடுகாடு, 1891 முதல் சம்மாந்துறைப்பற்றின் ஒரு பாகமாக இணைக்கப்பட்டதோடு பின்னாளில் வேகம்பற்று, நிந்தவூர்ப்பற்று பகுதிகளுக்கும் தன் பாகங்களை இழந்து இன்று மறைந்தொழிந்துபோயிற்று.

1901இல்-வரையப்பட்ட-பிரித்தானிய-வரைபடத்தில்-அன்றைய-மட்டக்களப்பு-நாடுகாடு

துட்டகாமணி மன்னன் காலத்து தீகவாபி விகாரம், அனுராதபுர மற்றும் பொலனறுவைக் கால மன்னர்களின் கல்வெட்டுகள் கிடைக்கின்ற கொன்றைவட்டுவான் குளம், மல்வத்தை, அம்பாறை நகர் முதலிய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் நாடுகாட்டு எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கின்றன. மகாவம்சத்தில் தீகவாபிமண்டலம் என்று குறிப்பிடப்படும் நிருவாக அலகும் இந்த நாடுகாட்டையே மையமாகக்கொண்டிருந்தது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே சனப்புழக்கம் கொண்ட நாடாக நீடித்து பிற்காலத்தில் கைவிடப்பட்டு காடடர்ந்துபோனதால் “நாடுகாடு” என்ற விசித்திரமான பெயர் இப்பகுதிக்கு ஏற்பட்டிருக்கவேண்டும்.  

நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டானது, சீதாவாக்கையிலிருந்து இங்கு குடியேறிய சிங்கள அரசகுடும்பங்கள் சிலவற்றின் பின்னணியில் வெவ்வேறு தமிழ், மு`ச்லீம் சமூகங்கள் மூலம் நாடுகாட்டுப் பகுதியில் புதிய குடியிருப்புகள் உருவானதையும், அக்காலத்தில் நிகழ்ந்த சில குறிப்பிடத்தக்க விவசாய, பண்பாட்டு, சமூகவியல் நிகழ்வுகளையும் விவரிக்கின்றது. இறுதியில் சிங்களக் குடும்பங்களில் முதன்மை இடம் வகித்த இரா|சபக்^ச முதலியார் என்பவர் பேராதனை அப்பு என்பவனால் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட குழப்பத்தில் அங்கிருந்த எல்லாக் குடிசனங்களும் தங்களுக்குள் மோதி அழிந்து போனதையும், இனி நாடுகாட்டில் யாரும் குடியிருக்கக்கூடாது என்று கண்டியரசன் ஆணையிட்டதையும் கூறி அந்நூல் முடிவடைகின்றது.  

நாடுகாட்டுப்பரவணிக் கல்வெட்டு, முழுக்க முழுக்க மட்டக்களப்பு வட்டார வழக்கில் எழுதப்பட்டுள்ளது. அதன் மூலவடிவம் சிங்களத்தில் இருந்ததாகவும்,  மொழிபெயர்க்கப்பட்டு வழங்கிவரும் இந்தக் தமிழ் வடிவத்தை தான் திருக்கோவில் ஆலயத்தின் பரம்பரை நிருவாகிகளிடம் பெற்றுக்கொண்டதாகவும், நெவில் எழுதியிருக்கிறார் (Nevill 1887b:137).

நாடுகாட்டுப் பரவணியின் இன்றைய வடிவத்தைப் படிக்கும் போது, சரளமாக சிங்களம் வாசிக்கத் தெரிந்த ஒருவர் அதன் மூலநூலிலிருந்து மொழிபெயர்த்து பேச்சுத்தமிழில் சொல்லச்சொல்ல, அதை ஏட்டில் இன்னொருவர் எழுதியிருக்கிறார் என்று உணரமுடிகின்றது. நாடுகாட்டுப் பரவணியின் மூலச்சிங்கள நூல் விரிவானது என்றும் அதன் சிறுபாகமே இவ்வாறு மொழியாக்கப்பட்டுள்ளதென்றும் சொல்லப்படுவதைக் கொண்டு4, நாடுகாட்டுப் பகுதியைச் சேர்ந்த அல்லது அப்பகுதி மீது ஏதோ ஒரு காரணத்தால் ஆர்வம் கொண்ட ஒருவர், சிங்களத்தில் அப்பகுதியின் வரலாறு கிடைப்பதாக அறிந்து இதை மொழிபெயர்க்க முனைந்தார் என்று ஊகிக்கலாம்.

நாடுகாட்டுப்பரவணி, ஒரு சுவையான நூல். “இரா|சபக்^ச முதலியார்” என்ற சிங்களக் குடிமகனே அந்நூலின் நாயகன். இந்நூல் விவரிக்கும் சகல சம்பவங்களும் அவரது வாழ்க்கைக்குறிப்புகளூடாகவே சொல்லப்படுகின்றது. கால மயக்கம் ஏற்படும் இடங்களை சரியாகப் புரிந்துகொண்டால், இந்நூல் கூறும் பெரும்பாலான சம்பவங்கள் வரலாற்றுண்மை கொண்டவை என்ற முடிவுக்கே நம்மால் வரமுடிகின்றது.

தமிழ்க்கணிப்பு அறுபதாண்டு வட்டத்தில் பதினோராவது “ஈசுர வருசத்தில்” நாடுகாட்டுக்கு சிங்களக்குடும்பங்கள் குடியேறுகின்றன. ஈசுர வருசம் என்பதற்கு சாத்தியமான ஆண்டுகளை ஆராய்ந்த நெவில், குறிப்பிட்ட வருடம் பொபி 1397ஆக இருக்கலாம் என்று ஊகிக்கிறார். புளியந்தீவில் உலுவிசி எனும் பறங்கியர் வாழ்வது பற்றிய குறிப்பு இக்கல்வெட்டில் காணப்படுவதாலும், வேறு சான்றுகளைக் கொண்டும் சி.பத்மநாதன் அது பதினாறு, அல்லது பதினேழாம் நூற்றாண்டு நூல் என்கிறார்.

கண்டியரசன் சேனாசம்மத விக்கிரமபாகுவின் கடலாதெனியக் கல்வெட்டின் மூலம் கண்டி அரசுக்கு கீழைக்கரையோடு 1477இலேயே உறவு நிலவியமை உறுதியாகின்றது (Codrington 1994:13-15). “சீதாவாக்கை நகரியிலிருந்து” சிங்களக்குடிகள் வந்ததாக ஆரம்பிக்கும் நாடுகாட்டுப்பரவணியின் பின்பாகத்தில், சீதாவாக்கைக்குப் பதில் “கண்டி நகரி” வருகின்றது. ஆக, சிங்கள அரசியல் பலம் சீதாவாக்கையிலிருந்து கண்டிக்குக் கைமாறிய பதினாறாம் நூற்றாண்டு காலப்பகுதியில் பரவணிக்கல்வெட்டு பாடப்பட்டிருக்கவேண்டும். நெவில் ஊகிக்கும் ஆண்டிற்கு (1397) சுமார் நூற்றிருபது ஆண்டுகளுக்குப் பின்பு தான் சீதாவாக்கை அரசே தோன்றுகின்றது என்பதால், இந்நூல் விவரிக்கும் சம்பவங்களும் காலக்கணிப்பும் உண்மையாயின் இந்நூலுக்குச் சாத்தியமான காலகட்டம், 1517 அல்லது 1557ஆம் ஆண்டாகவே இருக்கவியலும். எனவே பத்மநாதனின் ஊகத்தையே நாம் சரி என்று கொள்ளமுடியும்.

பரவணிக் கல்வெட்டின் கதாநாயகனான இராசபக்ச முதலியாரது “பள்ளகொம்பை அதிகார வம்சத்தின்” பெண்கள், அரசகுலக் குழந்தைகளுக்குப் பாலூட்டும் கௌரவத்தைப் பெற்றிருந்தார்கள். அந்த வம்சத்தில் வந்த நிலமையிறாளையின் (nilamē rāḷa, நிலமே றாள) மனைவி கிரியெத்தனா என்பவள் சோனககுலப் பிரதானியான “ஓவத்தை முகாந்திரம்” தன் குழந்தையோடு விளையாடியதால் கோபங்கொண்டு குழந்தையையே தூக்கியெறிந்து கொன்று குடும்பத்தோடு நாடுகாடு வந்து சேர்கிறாள்.

சோனகப்பிரதானி குழந்தையோடு விளையாடியதற்காக சிங்களச்சீமாட்டி ஏன் குழந்தையைக் கொல்லவேண்டும்? ஒன்று அவர்களிடம் அக்காலத்தில் சாதியம் இறுக்கமாக நிலவியதால் தீண்டாமை வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கவேண்டும். இரண்டு, கண்டி அரசில் சோனகர்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்குப் பெற ஆரம்பித்தபோது, கண்டிச்சிங்கள உயர்குலத்தார் அவர்கள் மீதான தங்கள் காழ்ப்பைப் பதிவுசெய்ய முயன்றிருக்கிறார்கள். எது எப்படியோ, குழந்தையைக் கொன்ற பின்னர் அந்தப்பெண்ணின் குடும்பத்தார் அரசனின் கோபத்துக்காளாகி நாடுகடத்தப்பட்டு இங்கு வந்திருக்கிறார்கள் என்றே முடிவுசெய்யலாம். (காதர், 1997:28). அரண்மனையில் முக்கியமான இடம் வகித்த சோனகருக்கு இழைக்கப்பட்ட அவமானத்துக்குக் கழுவாயாக இவ்வாறு அவர்கள் மன்னனால் தண்டிக்கப்பட்டிருக்கலாம்.

அப்படிப் புலம்பெயர்ந்த நிலைமையிறாளையின் குடும்பத்தவர்கள், நாடுகாட்டின் தளவில் என்ற இடத்தில் குடியேறுகிறார்கள். தளவில் என்ற ஊர், இன்றைய அம்பாறை “கல்மடு” ஊருக்குத் தென்மேற்கே அமைந்திருந்ததாக இடச்சு வரைபடம் ஒன்று காண்பிக்கிறது. அங்கு மூவாங்கல் (சிங்களம்: முவாம்:|கல, muvāṁgala) என்றோர் பழங்கிராமம் காணப்படுகின்றது. தளவில் அந்தப்பகுதியிலேயே அமைந்திருக்கக்கூடும்.

தளவில் குடியேற்றத்தின்போது, நிலமையிறாளையின் குடும்பத்தோடு அக்குடும்பத்தின் பணியாளரும் வருகிறார்கள். பணியாளரை “அடியாள்” என்கின்றது பரவணிக் கல்வெட்டு. சலவைத்தொழிலாளர், நகைத்தொழிலாளர், மற்றும் சிங்கள வீட்டு ஊழியச் சமூகங்களான சங்கரவர், ஒலியர், கின்னரர் (குண்ணறையர்) ஆகியோர் அடங்கியதே அக்கால நிலப்பிரபு ஒருவரின் குடும்பம். இதில் சங்கரவர் என்பது பதநீர் வடித்து சர்க்கரை தயாரிக்கும் “வகும்புறா” எனும் சிங்கள சமூகம் என்கிறார் நெவில். கின்னரர் பாய் இழைக்கும் சமூகம். ஒலியர் சிங்கள நிலக்கிழார்களின் வீடுகளில் சிற்றூழியம் செய்யும் குலத்தவர் ஆனால் நிலக்கிழாரின் இல்லத்தில் சிற்றூழியம் செய்வது அவர்களின் கடமை. 

தளவில்லில் குடியேறி முப்பதாண்டுகளுக்குப் பின் கிரியெத்தனாவின் மகனான இராசபக்ச முதலியார், குடும்பத்துடன் இறக்காமத்துக்குக் குடிபெயர்கிறார். இன்று முக்குவ சமூகத்தின் உட்பிரிவாகக் கருதப்படும் கோப்பிகுடி எனும் சமூகம் நாடுகாட்டுப்பகுதியில் இக்காலத்தில் குடியேறுகின்றார்கள். அக்கம்பக்கமிருந்த மட்டக்களப்புத் தமிழ் மற்றும் சோனக மக்களும் தொடர்ச்சியாக வந்து குடியேறியிருக்கிறார்கள். பரவணிக்கல்வெட்டைக் கூர்ந்து கவனித்தால், இராசபக்ச முதலியாரின் குடும்பம் தளவில்லுக்கு குடிவந்தபோதே இங்கு பல போடிமார் குடியேறி சேனைப்பயிர்ச்செய்கை செய்துவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது தெரியவருகிறது.

நாடுகாட்டின் பிரதான தொழிலாக கால்நடை வளர்ப்பும் சேனைப்பயிர்ச்செய்கையுமே நீடித்துவந்திருக்கிறது. இந்நிலையில் இராசபக்ச முதலியாரின் ஒரு அடியான், மாடு மேய்க்கும் போது பொழுதுபோக்காக நெல் விதைத்து நாடுகாட்டில் விவசாயத்தை அறிமுகப்படுத்துகிறான். நாடுகாட்டின் அருகே குடியிருந்த பல போடிமாரும் நாடுகாட்டுப் பகுதியில் காடு வெட்டி புதிய வயல்களை உருவாக்குகிறார்கள். இதற்கு வேடர்களின் உதவியும் கிடைக்கிறது. நாடுகாட்டு நெற்செய்கை, பெரும் விளைச்சலைத் தரத்தொடங்கியதால், மட்டக்களப்பின் வன்னிய அரசர்களும் அங்கு வேளாண்மை செய்கிறார்கள். இராசபக்ச முதலியாரை நாயகனாகப் பாடும் பரவணிக் கல்வெட்டு, வன்னியர்களுக்கு இராசபக்ச முதலியாரே வேடர்களைக் கொண்டு காடுதிருத்திக் கொடுத்ததாகப் புகழ்கிறது.

அதற்குப்பிறகு நாடுகாட்டில் சோனகக் குடியேற்றம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு சமூகத்திலும் ஏழு உட்பிரிவுகளே காணப்படும் என்ற மட்டக்களப்பு மரபுப்படி, சோனகரிலும் ஏழுகுடிச் சோனகரே குறிப்பிடப்படுகின்றனர். அவர்களில் பொன்னாச்சி குடியைச் சேர்ந்த அவக்கன் (அபூபக்கர்) கண்டி மகாராசனின்  அன்புக்குப் பாத்திரமாகி சுங்கத்துறையில் வயற்காணி பெறுகின்றான். அவன் பட்டிப்பளையிலிருந்து5  பருத்திமூட்டையில் இரும்பு மறைத்து எடுத்துச் சென்று மட்டக்களப்பு வன்னியர்களுக்குக் கொடுத்து அவர்களிடமும் அணுக்கன்வெளி வயற்காணி பெறுகின்றான்.

வணிகச் சமூகமாக இருந்த சோனகர்கள், விவசாயத்துக்குள் நுழைந்ததை இச்செய்திகள் மூலம் ஊகிக்கமுடிகின்றது. ஆனால் அவக்கன் வன்னிய இராசாக்களுக்காக இரும்பை “ஒளிச்சுக்கொண்டு” எடுத்துவரும் வரிகள் மூலம் மட்டுக்களப்பு வன்னியர்களுக்கு (ஆயுதங்களுக்கான?) இரும்பு கிடைக்கக்கூடாது என்று எண்ணிய ஒரு எதிர் அரசியல் சக்தி அப்போது நாடுகாட்டில் அல்லது கண்டியில் வசித்திருக்கக்கூடும். நாம் இந்நூலின் காலமாக ஊகிக்கும் பதினேழாம் நூற்றாண்டு இலங்கையில் கண்டி – போர்த்துக்கேயர் ஆகிய இரு தரப்பினரிடையே அதிகார மோதல் இடம்பெற்றுவந்த காலகட்டம் என்பதை இங்கு நாம் ஒப்புநோக்கவேண்டும்.

அவக்கன் பற்றி, பத்மநாதனின் பிரதியில் கிடைக்காத முக்கியமான வரி ஒன்று நெவிலின் பிரதியில் கிடைக்கிறது. கண்டி மகாராசா அவக்கனுக்கு சுங்கத்துறையில்  காணி கொடுத்தபின்னர் அவரோடு வந்த “இரட்டை வரிசை முதலியார் அவக்கனுக்குத் திருக்கோவிலில் ஒரு திருவேட்டைப்பானை 6 கொடுத்தார்” அதென்ன திருவேட்டைப்பானை?

கொக்கட்டிச்சோலையில் வேட்டைத்திருவிழா முடிந்தபின் “பங்குகூறல் அல்லது திருப்படைக்களஞ்சியம்” என்றழைக்கப்பட்ட பாடலைப் பாடி, குறித்த தேசத்துக்கோவிலின் நிலப்பரப்புக்குட்பட்ட எல்லா சமூகத்தவரையும் அழைத்து குடுக்கை(யில் பிரசாதம் வைத்துக்) கொடுத்துக் கௌரவிப்பது வழக்கமாக இருந்தது. கொக்கட்டிச்சோலை போல இன்னொரு திருப்படைக்கோவிலாக விளங்கிய திருக்கோவிலிலும் 1955 வரை இவ்வழமை நிலவியதை மானுடவியலாளர் நூர் யால்மன் பதிவுசெய்கிறார். அதன் படி, வெவ்வேறு சமூகங்களை (குடிகளை) உரிய வரிசைப்படி அழைத்து குடித்தலைவருக்கு குருக்கள் ‘உபயம்’ என்று அழைக்கப்பட்ட கோவில் பிரசாதத்தை வழங்கி வைத்தார். இதற்கு “குடி கூறிடல்” அல்லது “குடுக்கை கூறல்” என்ற பெயர் இருந்தது (Yalman, 1967:326-27). இன்று திருக்கோவிலிலில் குடுக்கை கூறல் தொடர்பான எவ்வித நினைவும் எஞ்சவில்லை. எனினும் குடுக்கைகூறலோடு ஒப்பிடக்கூடிய “வட்டா கூறல்” எனும் வழக்கம் அக்கோவிலின் அருகே தம்பிலுவில் கண்ணகி அம்மன் சடங்கு முடிந்தபின்னர் இன்றும் இடம்பெற்று வருகிறது.

எனவே திருக்கோவிலிலும் வேட்டைத்திருவிழாவில் பங்கு கூறி குடுக்கை அல்லது பானை வழங்கும் மரபு நிலவியது உறுதியாகிறது. ஆக, கண்டிராசனோடு வந்த ஒரு முதலியாரால் அவக்கனுக்குக் கொடுக்கப்பட்ட திருவேட்டைப்பானையானது, புதிதாகக் குடிவந்த அவக்கன் உள்ளிட்ட சோனகக்குடியினர் உத்தியோகபூர்வமாக திருக்கோவிலுக்குரிய “தேசத்திற்கு/நிலப்பரப்புக்கு” உட்பட்ட உள்ளூர்க் குடிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டதன் அடையாளமாகும்.

இடையே, பத்தினி வழிபாட்டின் அறிமுகம் சொல்லப்படுகின்றது. மதுரைக்குப்  போய் பத்தினியை7 வழிபட்டுவந்த சின்னத்தம்பிப்போடி என்பவருக்கு அம்மன் கனவில் வந்து சொன்னதன்படி, போகொடை என்ற இடத்திலிருந்து8  அம்மனது சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டு சிங்களப்பத்ததியின் படி இறக்காமம் கோவில்மேடு எனுமிடத்தில் வழிபாடு செய்யப்படுகின்றது. பல நாட்களின் பின்னர் இராசபக்ச முதலியார் காலத்தில் அந்த வம்சம் சந்ததியின்றி மறைகிறது. அங்கிருந்தவர்கள் அம்மனை இரவோடிரவாக அக்கரைப்பற்று பட்டிமேட்டுக்குக் கொண்டு சென்று கோவில் அமைக்கிறார்கள். தன் அனுமதி இல்லாமல் கோவிலை அங்கு கொண்டுசென்றதால் கோபிக்கும் இராசபக்ச முதலியார் காரைதீவில் அம்மனுக்குப் புதியகோவில் அமைக்கிறார். அக்கோவிலை அமைப்பதில் காரைக்காட்டு வேளாள குலத்தைச் சேர்ந்த கருணாகரக் கட்டாடி என்பவர் உதவிசெய்கிறார்.

காரைக்காட்டு வேளாளர் என்ற பெயருக்கும் காரைதீவு என்ற ஊர்ப்பெயருக்குமுள்ள தொடர்பைச் சிந்திக்கவேண்டும். இடச்சு வரைபடங்களின் படி, 1690களிலேயே காரைதீவுக்கு  அப்பெயர் இருக்கிறது. காரைக்காட்டு வேளாளர் என்போர் வேளாளர் குலத்தின் ஒரு உட்பிரிவினர். இச்சமூகத்தவர் மட்டக்களப்பில் வசித்ததை பூர்வசரித்திரம் சொல்கின்றது.9 பரவணிக்கல்வெட்டு கூறுவதன் படி, காரைக்காட்டு வேளாளர் அல்லது கார்காத்த வேளாளர், அவறாணை என்ற ஊரில் வசித்துவந்தார்கள். அவறாணை முன்பு “சிதம்பரகாமம்” என்று அழைக்கப்பட்டதையும் அதே நூல் சொல்கின்றது. அந்தக்கிராமம் இன்றைய அம்பாறை வளத்தாப்பிட்டிக்கு அருகே அவறாணை என்ற பெயரில்  ஒரு வயல்வெளியாகக் காட்சியளிக்கிறது.

சின்னத்தம்பிப்போடியின் மகள் கந்தி என்பவள் மழுவெடுத்த செட்டி குலத்தவனை மணந்து பெற்ற பரம்பரையினரே கோவில்மேட்டுக் கோவிலைப் பராமரித்து வந்தார்கள். அவ்வம்சம் சந்ததியின்றி மறைந்தபோது இறக்காமக் கோவிலை பட்டிமேட்டுக்கு இடம்பெயர்த்ததற்கான காரணம் பரவணிக்கல்வெட்டில் தெளிவாக இல்லை.

அதற்கு அந்தக்கால அரசியல் காரணங்கள் பின்னணியில் இருக்கக்கூடும். இராசபக்ச முதலியார் ஏட்டிக்குப்போட்டியாக காரைதீவு கோவிலை அமைப்பதால், மழுவெடுத்த செட்டி குலத்தார் அவரோடு முரண்பட்டே அங்கிருந்து இடம்பெயர்ந்திருக்கவேண்டும். அம்மனை அவர்கள் இரகசியமாக “இராக்கொண்டு” (இரவில் கொண்டுபோய்) கோவில் அமைப்பதும் இங்கு நம் கவனத்தை ஈர்க்கிறது.  “மழுவெடுத்த செட்டி” என்ற பெயரை ஒத்த “மழவராயன்” என்ற குலத்தாரே இன்று பட்டிநகர் கண்ணகியம்மன் கோவிலைப் பரிபாலிக்கிறார்கள்.  அவர்களுக்கு “பட்டிமோட்டார்” என்ற செல்லப்பெயரும் உண்டு.  

பதினெட்டாம் நூற்றாண்டளவில் பட்டிமேட்டுக் கோவில் மீது பாடப்பட்ட “பொற்புறா வந்த காவியம்” பரவணிக்கல்வெட்டு சொல்லும் தகவலோடு இணைத்துப் பார்க்கத்தக்கது. அதன்படி, சீதாவாக்கை மன்னனுக்கு பொற்புறா வடிவில் அருள்புரியும் நாகமங்கலை அம்மன், அவன் தலைநகரில் கொஞ்சநாள் கோவில் கொண்டிருந்து பின்னர் தனக்குப் பொருத்தமான அடியவர்களைத் தேடி ஊர்வலம் சென்று தம்பிலுவில், இறக்காமம் வெருகங்குடாவெளி, காரைதீவு, பட்டிநகர் ஆகிய இடங்களில் கோவில்கொள்கிறாள். அம்மனுக்குப் பூசைபுரிவதற்காக மழவராயர் அல்லது மழுவரசர் குலத்தில் தோன்றிய மங்கலப்போடி என்பவர் அம்மனை ஊர்வலம் கொண்டுசென்ற பெண்ணை மணக்கிறார் (கணபதிப்பிள்ளை 1971:99-104). இந்தக்கதைக்கும் ‘மழுவெடுத்த செட்டி’ கதைக்கும் உள்ள உறவை ஒப்பிடவேண்டும். கோவில்மேடே பொற்புறாவந்த காவியம் பாடுகின்ற வெருகங்குடாவெளி ஆகக்கூடும்.

வரிப்பத்தான்சேனைப்-பெரிய-பள்ளிவாசல்-இன்றைய-தோற்றம்

இராசபக்ச முதலியாரால் என்றென்றும் காரைதீவு அம்மனுக்கென வழங்கப்பட்ட கோவில்மேடு கட்டாடியாவெளி வயற்காணிகள், நெவிலின் காலத்திலேயே காடடர்ந்து மறைந்துவிட்டன. அவற்றை பிரித்தானிய அரசு திருத்தி முடிக்குரிய காணிகளாக பிரகடனப்படுத்தியிருந்தது. அங்கு கண்ணகிக்குக் கோவில் அமைந்திருந்த கோவில்மேடு, தன் காலத்திலும் பத்தினித்தெய்வத்துக்குப் பிடித்தமான வம்மி மரங்கள் அடர்ந்ததாகக் காணப்படுவதை நெவில் பதிவுசெய்துள்ளார்.  

கண்டி அரசனுக்கும் இப்பகுதி தமிழ் – சிங்கள – மு`ச்லிம் மக்களுக்கும் நிலவிய நெருக்கமும் பல இடங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றது. வலிப்பத்தான்சேனை, பைக்கிருகசேனை ஆகிய இடங்களில் அமைந்திருந்த இ`ச்லாமியப் பள்ளிவாசல்களுக்கு கண்டி மன்னன் கொடுத்த நிபந்தங்கள், மானியங்கள் இந்நூலில் விபரிக்கப்படுகின்றன. பைக்கிருகசேனை என்பது பக்கிரிச்சேனை. காரைதீவில் அமைந்திருந்த அந்தப்பள்ளிவாசல் இன்று மறைந்துவிட்டது.

நக்கை-விசாரம்-என்று-அழைக்கப்பட்ட-தீகவாபி-விகாரம்

அதேபோல், நக்கை விசாரம் என்று இந்நூலில் கூறப்படும் இன்றைய தீகவாபி விகாரம், தமிழர் சிங்களவர் வாழ்ந்த பல கிராமங்கள் இணைந்த நிலமானிய முறைப் பொருளாதாரத்தின் கீழ் செயற்பட்டு வந்ததும் கூறப்படுகின்றது. திருக்கோவிலுக்குப் பரிவட்டம் வெளுப்பதற்கான சலவைத்தொழிலாளரையும் இராசபக்ச முதலியாரிடம் மட்டுக்களப்பு வன்னியர்கள் கோரிப்பெற்றுக்கொள்கிறார்கள்.

பரவணிக் கல்வெட்டின் நாயகனான இராசபக்ச முதலியாரின் இறப்பும் அதன்பின் நிகழும் சம்பவங்களும் சற்று மிகைப்படுத்திச் சொல்லப்படுகின்றன. இராசபக்ச முதலியாரை பேராதனை அப்பு என்பவன் பேய்களை ஏவிக் கொல்கிறான். இராசபக்ச முதலியார் கொல்லப்பட்டதை நாதனை வில்லைகட்டிச் சடங்கு முடியும்போது அறியும் இராசகுலத் தெய்வம் சீற்றம் கொள்கிறது. யானை வடிவெடுத்து வயல்களை அழித்துச் சேதம் புரியும் அத்தெய்வம், வயலில் காவலில் இருந்த பேராதனை அப்புவைக் காலால் இடறிக்கொல்கிறது. அந்த யானையைப் பிடிக்கச் செல்லும் மட்டக்களப்பு வன்னியமாரினதும் நாடுகாட்டு முதலிமாரினதும் படைகள் தங்களுக்குள் மோதி மடிந்துபோகின்றன. அதனால் இனி நாடுகாட்டில் யாரும் குடியிருக்கக்கூடாது என்று ஆணையிட்டு கண்டி மன்னன் மரத்தில் சாசனம் பொறிக்கிறான்.

ஆனால், நெவிலின் வாசிப்பால் அவிழும் மர்மமுடிச்சுகள், இதை ஒரு மாயமந்திரக்கதையாக அன்றி இயல்பான வரலாற்றுச் சம்பவமாகவே அதை விளங்கிக்கொள்ள வழிவகுக்கின்றன. இந்நூல் முழுவதும் வரும் பேய்கள் சுவாரசியமானவை. திருக்கோவில் பகுதியில் தனது காலத்தில் குறைந்த  எண்ணிக்கையில் வசித்துக்கொண்டிருந்த சாலியர் குலத்தவர் தான் இங்கு வரும் பேய்கள் என்று இனங்காண்கிறார் நெவில்., சாலியர் தங்களை “பெ||பெகார” (pebhekāra) அல்லது “பேசக்கார”   என்று அழைத்துக்கொண்டார்கள்.

சாலியர் என்பது நெசவாளர் சமூகம்.  சோழர் காலத்தில் இவர்கள் பட்டுவணிகராக இருந்ததும், கடலோடி வணிகக் குழுவாக விளங்கியதும் கல்வெட்டுக்களிலிருந்து தெரிகின்றது.  சாலியர் அன்றைய மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏராளமான கிராமங்களில் பரவலாக வாழ்ந்ததையும், தொடர்ச்சியான மணவுறவுகளால் அவர்கள் எண்ணிக்கையில் குறைந்துபோவதையும், சில இடங்களில் வேளாளராக மாறுவதையும் நெவில் பதிவுசெய்துள்ளார் (1887b:137). மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் நூலில் சாலியர் குறிப்பிடப்படாவிடினும் ஏனைய நெசவாளர் – வணிக சமூகங்களான சேணியர், கைக்கோளர் பற்றிய குறிப்புக் கிடைக்கிறது.

பேராதனை அப்புவை இராசபக்ச முதலியாருக்கு எதிரான அரசவம்சத்தைச் சேர்ந்த ஒருவன் என்று நெவில் ஊகிக்கிறார்.  அப்போது இலங்கை அரசியலில் பெரும் முரணாக விளங்கிய கண்டி – ஐரோப்பிய மோதலுக்கும் கீழைக்கரையில் விளங்கிய இந்த ஆட்சியுரிமை முரண்பாட்டிற்கும் தொடர்பு இருந்திருக்கக்கூடும். இதுபற்றி தெளிவான குறிப்புகள் கிடைக்கவில்லை. பரவணிக்கல்வெட்டில் கிடைக்கும் குறிப்பின்படி, இராசபக்ச முதலியாருக்கு ஆதரவாக மட்டக்களப்பு வன்னியரும்,  எதிர்த்தரப்பு பேராதனை அப்புவின் ஆதரவாளர்களில் சாலியரும் இருந்திருக்கிறார்கள்.  

நாதனை-நாச்சிமார்-கல்லடி-பிள்ளையார்-கோவில்-வெல்லாவெளி.

இராசபக்ச முதலியாரை பேராதனை அப்புவின் ஏவலில் சாலியர்கள் கொன்றபோது, அவர் இடத்துக்கு பேராதனை அப்பு வருவதை விரும்பாத நாடுகாட்டின் முதலிமாரும் மட்டக்களப்பு வன்னியரும் பேராதனை அப்புவையும் கொல்வதாக மந்திராலோசனை செய்திருக்கிறார்கள். இது பெரும்பாலும் வன்னியரும் பொதுமக்களும் கூடுகின்ற நாதனை  நாச்சிமார் கல்லடி பிள்ளையார் கோவில் வில்லைகட்டிச் சடங்கு 10 விழாவில் இடம்பெற்றிருக்கவேண்டும்.

அதை உளவறிந்த பேராதனை அப்புவின் சாலிய ஒற்றனொருவன் அவனிடம் இச்செய்தியைச் சொல்லியிருக்கிறான். தனக்கெதிரானோரை முன்கூட்டி நீங்களே கொல்லுங்கள் என்று சொன்ன பேராதனை அப்பு, வயற்காவலில் சென்று தூங்கும்போது மதயானை தாக்கி மாண்டுபோனான். அவன் இறந்ததை, இராசபக்ச முதலியாரின் ஆதரவாளர்கள், நாதனை இராசகுலத்துத் தெய்வம் (பிள்ளையார்) கொடுத்த தண்டனை என்று நம்பினார்கள்.  மறுதலையாக சாலியர்கள் அதை இராசபக்ச முதலியாரின் ஆதரவாளர்களின் சதி என்று கொண்டிருக்கக்கூடும். எனவே பேராதனை அப்பு சொன்னதுபோல அவர்கள் ஒரு கலகத்துக்கு திட்டமிட்டிருக்கிறார்கள்.  

மதயானை வயல்களுக்கும் பெரும் சேதம் விளைவித்ததால், அந்த யானையைக் கொல்ல பல ஊரவர்கள் ஒன்றுகூடிச் சென்றிருக்கிறார்கள். சாலியர் திட்டமிட்ட கலவரத்தை அப்போது கட்டவிழ்க்க, “நாடுகாட்டுச் சனங்கள் தங்களுக்கு மாறிமாறி அடிபட்டுச் செத்துப்போனார்கள். அந்தப்பேய் செய்த காரியத்தாலே பட்டார்கள்”.

அடிக்குறிப்புகள்

  1. அம்பாறை மாவட்ட மு`ச்லிம்களின் வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு இந்நூல் பயன்பட்டிருக்கிறது (காதர், 1997:27-29). இதையடுத்து கிடைக்கும் வேறு இரு அறிமுகக்கட்டுரைகள் (மைங்கணான் 2018.07.29:15, 2018.08.06:11) தவிர, பரவணிக் கல்வெட்டு பற்றி பிற்காலக் கட்டுரைகள் பெரிதாக வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.
  2. நெவிலின் குறிப்பின் படி (1887a:128), நாடுகாட்டின் சிங்களப்பெயரே நாதனை அல்லது நாதெணிய (நா|தெனிய – nādeṇiya, நாகமரப் பள்ளத்தாக்கு). நாதனை வன்னியன் மட்டக்களப்பு வன்னியர்களில் தலையாயவன் என்ற தொன்மம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிலவியது. இடச்சு வரைபடங்களின் படி, நாதனைப்பிரதேசம் இன்றைய நவகிரியாற்றுக்கும் நாமலோயாவுக்கும் (ஆந்தலோயா, தமிழ்ப்பெயர் மூங்கிலாறு) இடையே ஆரம்பித்து மேற்கே பெரும்வனப்பகுதியை உள்ளடக்கியிருந்தது. அண்மைக்காலம் வரை நாதனையில் புகழ்பெற்றிருந்த வில்லைகட்டிச் சடங்கு பற்றிய குறிப்பொன்றும் நாடுகாட்டுப்பரவணியில் வருவதை இங்கு நாம் ஊன்றிநோக்கலாம்.
  3. மட்டக்களப்பின் 11 “மாகாணங்கள்” – 1. ஏறாவூர், 2. மண்முனை, 3. எருவில், 4. போரதீவு, 5. கரைவாகு, 6. சம்மாந்துறை, 7. அக்கரைப்பற்று எனும் முக்குவர் ஆட்சிக்குட்பட்ட ஏழு பற்றுக்கள், தெற்கே இருந்த 8. பாணமை, மேற்கே இருந்த 9. நாடுகாடு (நாதனை உட்பட), வடக்கே இருந்த 10. கோறளை மற்றும் 11. கரவெட்டி (McGilvray, 2008:66).
  4. தகவல்: எழுத்தாளர் முஹமட் சாக்கீர். சிங்கள ஆய்வாளர்கள் சிலரோடு கலந்துரையாடியபோது இத்தகவலைத் தனக்கு அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்.
  5. சிங்களம்: பட்டிப்பொல, paṭṭipola. இக்கிராமம் கல்லோயா நதிக்கரையில் அமைந்திருந்ததால் அந்நதிக்கு பட்டிப்பளையாறு என்ற பெயர் ஏற்பட்டிருந்தது. இந்தப் பட்டிப்பளையும் இன்று கொக்கட்டிச்சோலைக்கு அருகே உள்ள பட்டிப்பளைக் கிராமமும், நுவரெலியாவுக்குத் தெற்கேயுள்ள பட்டிப்பொலவும் வேறுவேறு இடங்கள்.
  6. After that Rata Varusai Muthaliyar gave Awakan one Thiru-vedai-panai at Thiru Kowil (Nevill, 1887b:139)
  7. இந்நூலில் வரும் “மதுரை” என்ற குறிப்பை தென்னகத்தில் இருந்த “மதுரை நாடு” அல்லது “மதுரை அரசு” என்று வாசிக்கமுடிவது ஆர்வமூட்டுகிறது. மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்திலேயே அந்நகரின் மீனாட்சி புகழ்பெற்ற தெய்வமாக வளர்ந்ததையும், பழைய நாடுகாட்டுப்பகுதியான நிந்தவூர் மாட்டுப்பளையில் பழைமைவாய்ந்த மீனாட்சியம்மன் கோவிலொன்று அமைந்திருப்பதையும் இங்கு இணைத்துச் சிந்திக்கலாம். தமிழகத்தில் இன்று பத்தினி வழிபாடு மறைந்துவிட்டபோதிலும் அங்கிருந்த பழைய கண்ணகி கோவில்களில் ஒன்றான செல்லத்தம்மன் கோவில் மதுரையில் தான் அமைந்திருக்கிறது..
  8. “போகொட” என்றோரிடம் விந்தனைக்காட்டில் முன்பு அமைந்திருந்தது (இடச்சு வரைபடங்களிலிருந்து).
  9. “புத்தூரார் மருங்கூரார் வீரச்சோலை புகழ் காரைக்காட்டாரும் கோங்கு ஐந்தும்”, வேளாளர் பிரிவுகள். (கமலநாதன் & கமலநாதன் 2005:91).
  10. வெல்லாவெளி நாதனையில் இன்றுள்ள கல்லடிப்பிள்ளையார் கோவிலும் சுவாதியம்மன் கோவிலும் ஒரு காலத்தில் மட்டக்களப்பின் அதிகார வர்க்கங்கள் ஒன்றுகூடுகின்ற இடங்களாக இருந்தன. அங்கு இடம்பெற்றுவந்த காட்டுமாடுகளைப் பிடிக்கும் வதனமார் தெய்வத்துக்கான வில்லைகட்டிச் சடங்கு பிரசித்தி பெற்ற ஒன்று. பார்க்க: மகேஸ்வரலிங்கம் 2008:123-129

உசாத்துணைகள்:

  1. கமலநாதன், சா. இ. கமலநாதன், கமலா. (2005). மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், கொழும்பு – சென்னை:குமரன் புத்தக இல்லம்.
  2. கணபதிப்பிள்ளை, சி. (1971). மகாமாரித் திவ்விய கரணி, யாழ்ப்பாணம்: விவேகானந்த அச்சகம்.
  3. காதர், எம்.எல்.ஏ. (1997). வரலாற்றுப் பாரம்பரியம், எ`ச்.எச்.எம்.|செமில் (பதிப்பு)இல், அம்பாறை மாவட்ட மு`ச்லிம்கள், கொழும்பு: மு`ச்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
  4. சலீம், ஏ.ஆர்.எம். (1990). அக்கரைப்பற்று வரலாறு. அக்கரைப்பற்று: ஃகிரா பப்ளிகேசன்`ச்.
  5. நடராசா, எஃப்.எக்`ச்.சி. (1980). மட்டக்களப்பு வரலாற்றுச் சுருக்கம், எஃப்.எக்`ச்.சி.நடராசா (பதிப்பு)இல், “மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும்”, மட்டக்களப்பு: இந்து வாலிபர் முன்னணி.
  6. பத்திநாதன், க. (2022). கடலோர வேட்டுவ சமூகங்களுள் காணப்படும் குடிவழமைகள். எழுநா, https://ezhunaonline.com/இலிருந்து மீள்விக்கப்பட்டது.
  7. பத்மநாதன், சி. (1976). நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு. மட்டக்களப்பு மகாநாடு நினைவு மலர், மட்டக்களப்பு: அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற மட்டக்களப்பு மகாநாட்டு அமைப்புக்குழு. பப. 82-90.
  8. மைங்கணான், ம. (2018.07.29). “அரசமானியம் பெற்ற பள்ளிவாசல், விகாரை ஊழியம் செய்த தமிழர்”, அரங்கம், இதழ் 19, ப.15.
  9. மகேஸ்வரலிங்கம், க. (2008). நாதனை வில்லைகட்டிச் சடங்கு. க. இரகுபரன் (பதி) “மட்டக்களப்பு: வாழ்வும் வழிபாடும்” நூலில், கொழும்பு: தமிழ்ச்சங்கம்.
  10. மைங்கணான், ம. (2018.08.06). “பட்டிமேட்டு அம்மன், பாழடைந்த நாடுகாடு”, அரங்கம், இதழ் 20, ப. 11.
  11. Codrington, H.W. (1994). The Gadaladeniya Inscription of Senasammata Vikramabahu. in Codrington, H.W., & Paranavitane, S. (eds.) Epigraphia Zeylanica, Volume 4, pp. 8-15.
  12. Nevill, H. (1887a). “Nadukadu Record”. Taprobanian (August 1887), pp. 128.
  13. Nevill, H. (1887b). “Nadukadu Record”. Taprobanin (October 1887), pp. 137-141.
  14. Sessional Papers XV, (1959). Report of the Delimitation Commission, Colombo: Government Publications Bureau.
  15. Yalman, Nur, (1967). Under the Bo Tree : Studies in caste, kinship, and marriage in the interior of Ceylon. Berkeley : University of California Press.

ஒலிவடிவில் கேட்க

12090 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)