Arts
26 நிமிட வாசிப்பு

தமிழ் காங்கிரஸ் X தமிழரசுக் கட்சி

October 6, 2022 | Ezhuna

இலங்கையில் அதிகாரத்துக்காகவும் அதனை தக்க வைப்பதற்காகவும் சிங்கள, தமிழ் தலைவர்களினால் அடையாள அரசியல் முன்னிலைப்படுத்தப்பட்டது. அது இனத்துவ அரசியலாக வளர்ச்சியடைந்து சிறுபான்மையினரின் உரிமைகளையும் அவர்களின் இருப்பையும் இல்லாதொழிக்கும் அரசியலாக உச்சம் பெற்றது.இதன் தொடர்ச்சி இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கு எவ்வாறு வழிவகுத்தது என்ற அடிப்படை காரணிகளை உள்ளார்ந்த ரீதியில் ஆய்வுசெய்ய ‘இலங்கையில் அடையாள அரசியல் – சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப்புரிதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் எத்தனிக்கின்றது. இதன்படி, அடையாள அரசியல் என்றால் என்ன என்ற  கோட்பாட்டுப் புரிதலை உண்டாக்கி, இலங்கையினுடைய அடையாள அரசியலின் வரலாற்றுப் போக்கினையும், தமிழ் தலைவர்களின் அணுகுமுறைகளையும் விமர்சன நிலையில் நோக்குவதற்கு இத்தொடர் முனைகிறது.

1950கள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் முக்கியத்துவம் மிக்க ஆண்டுகளாகும். 1948 இல் தமிழ் காங்கிரசிலிருந்து எஸ். ஜே. வி. செல்வநாயகம் பிரிந்து சென்று தமிழரசுக் கட்சியை ஆரம்பித்திருந்தாலும் 1950 களில் இருந்தே அவருடைய பிரசாரத்தினை தீவிரமாக முன்னெடுத்தார். இதேபோன்று 1951இல் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை உருவாக்கினார்.

இவ்வாறு இரு இனங்களின் இரு கட்சிகளுக்கிடையே பிளவு ஏற்பட்டதனால் தமிழ் காங்கிரஸ் எதிர் தமிழரசுக் கட்சி என்றும், ஐக்கிய தேசியக் கட்சி எதிர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றும் தங்களுக்கிடையிலான ஒரு போட்டி அரசியல் உருவாக்கப்பட்டது. இந்தப் போட்டி அரசியல் யார் அந்தந்த இன மக்களை வெற்றிகொண்டு தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறுகிறார்கள் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இதன் காரணமாக மக்களை அதிகம் உணர்ச்சிவசப்படுத்தக்கூடிய இனம், மதம், நாடு, மொழி, தேசியம் போன்ற அடையாளங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. நான்கு கட்சிகளுமே இவற்றைப் பாதுகாத்துப் பேணுவதாகக் கூறினாலும் யாரை நம்புவது என்பதே பிரச்சினையாக இருந்தது. இந்த நம்பிக்கையினைக் கட்டியெழுப்புவதற்காக போட்டிபோட்டுக் கொண்டு இனவாத செயற்திட்டங்களை முன்மொழிந்து மக்களுடைய இனவாத உணர்வைக் கூர்மைப்படுத்தினர்.

1951ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் முதலாவது மகாநாடு திருகோணமலையில் நடைபெற்றது. அம் மகாநாட்டில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத் தீர்மானங்கள் தமிழ் மக்களை கவரக்கூடியவகையிலும் உணர்ச்சியேற்றக் கூடியவகையிலும் தேர்தல் மைய அரசியலாகவே அமைந்திருந்தன. உதாரணத்திற்கு இரண்டாவது தீர்மானம் “இலங்கை சமஷ்டிக் கூட்டாட்சி அமைப்பு ஒன்றின் கீழ் ஒரு சுயாதீன மொழிவாரித் தமிழ் அரசை நிறுவுவதன் மூலம் தமது சுதந்திரத்தினைக் கோருமாறும் அச் சுதந்திரத்தை ஈட்டுவதற்குத் தளராது உழைக்குமாறும் இம்மாநாடு, இத் தீவகத்திலுள்ள தமிழ் பேசும் மக்களை அவர்களுடைய இனத்தினுடைய பெயராலும், அவர்களதும், அவர்களது குழந்தைகளினதும் தன்மானத்தின் பெயராலும் அழைக்கிறது” (மேற்கோள் த.சபாரெத்தினம்)

இங்கு இவர்களின் கோரிக்கைகளும் வார்த்தைப் பிரயோகங்களும் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணயக் கோரிக்கையினை அல்லாது அதன் பெயரில் தமிழ் அரசுப் பிரிவினையையே முக்கியப்படுத்துகின்றது.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக மாக்சிச லெனினியம் பின்வருமாறு கூறுகின்றது. “பூர்ஷூவா – ஜனநாயகப் புரட்சியானது ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்திலிருந்து பிரிந்து போவதில் முடியுமா அல்லது அதனுடன் சம அந்தஸ்து பெறுவதில் முடியுமா என்பதை முன்கூட்டியே யாரும் சொல்ல முடியாது, முடிவு இரண்டில் எதுவானாலும் தனது வர்க்கத்தின் அபிவிருத்திக்கு வழிசெய்வதுதான் பாட்டாளி வர்க்கத்துக்கு முக்கியமானது. பூர்ஷூவா வர்க்கத்துக்கோ, “தன்னுடைய சொந்த” தேசிய இனத்தின் குறிக்கோள்களைப் பாட்டாளி வர்க்கத்தின் குறிக்கோள்களுக்கு முந்தியதாக வைத்து இந்த அபிவிருத்தியைத் தடைசெய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம். எனவேதான் பாட்டாளி வர்க்கமானது எந்தத் தேசிய இனத்துக்கும் உத்தரவாதங்கள் அளிக்காமல், இன்னொரு தேசிய இனத்துக்குப் பாதகமான முறையில் எதையும் செய்வோம் என்று உறுதி கூறாமல், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்மறைக் கோரிக்கையுடன் மட்டும் தன்னை நிறுத்திக் கொள்கிறது.

இது “செயல்பூர்வமானதாக” இல்லாமல் இருக்கலாம், ஆனால் சாத்தியமான தீர்வு அனைத்திலும் மிகவும் ஜனநாயகமான தீர்வு ஒன்றைப் பெறுவதற்கு இது ஒன்றுதான் நடைமுறையில் சிறந்த உத்தரவாதமளிக்கிறது. பாட்டாளி வர்க்கத்துக்கு அத்தகையதொரு உத்தரவாதம்தான் தேவை, ஆனால் எந்த ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்த பூர்ஷூவா வர்க்கத்துக்கும், மற்ற தேசிய இனங்களின் நிலைமை (அல்லது அவைகளுக்கு நேரக்கூடிய பிரதிகூலம்) எதுவாயிருப்பினும் தனது சொந்த நலன்களுக்கு வேண்டிய உத்தரவாதங்கள் மட்டும்தான் தேவை.” (வி.இ.லெனின்)

லெனினால் வரையறுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பதனை தமிழ் உயர் வாக்கத்தினரும் மத்திய வர்க்கத்தினரும் திரிவுபடுத்தி தமது தேர்தல் இலாபங்களுக்காக பிரிவினைவாத உணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு ‘தமிழ் அரசு’ என்கின்ற பதத்தினை வேண்டுமென்றே பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணத்தினால் சிங்களத் தலைவர்களும் தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கையினை பிரிவினைவாதக் கோரிக்கையாகவே புரிந்து கொண்டனர்.

“1952 ஆம் ஆண்டுத் தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழரசுக் கட்சிக்கு எதிரணியிலிருந்த ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள், தமிழரசுக் கட்சியினர், தமது கட்சிக்கு ஆங்கிலத்தில் சமஸ்டிக் கட்சி என்றும், தமிழில் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்றும் இரு வேறுபட்ட பெயர்களைச் சூட்டி, இரட்டை வேடமிடுகின்றனர் என நிறுவ முயன்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சி என்னும் பெயரில் உள்ள ‘அரசு’ என்ற சொல் தமிழில் ‘தனியரசு’ என அர்த்தப்படுமே அல்லாது, அதன் ஆங்கிலப் பெயர் குறிப்பது போன்று ‘சுயாட்சிப் பிரதேசம்’ அல்ல என எடுத்துரைத்தார்.

பொன்னம்பலம் அவர்கள், தமிழரை தமிழரசுக் கட்சி ஏமாற்றுவதாக சுமத்திய குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லும் வகையில் செல்வநாயகம் அவர்கள், தமிழரசுக் கட்சி என்பது, பூரண இறைமையைக் கொண்டதாகவோ அல்லது சுய ஆட்சியாகவோ, எப்படித்தான் இருந்தாலும், அது தமிழ்த் தேசத்தையே குறிக்கும் எனப் பதிலளித்ததுடன் தமிழரசுக் கட்சி என்பது கட்சியின் பெயரல்ல, அது கட்சியை விளக்கும் ஒரு பதம் எனவும் கூறினார்.” (மேற்கோள் முருகர் குணசிங்கம்) எஸ். ஜே. வி. அவர்கள் எவ்வளவு நேர்மையானவர் என்று கூறப்பட்டாலும் அவர் தேர்தல் மைய அரசியலைத் தவிர்க்கமுடியாதவராக இருந்துள்ளார் என்பதை அவருடைய பதில் எமக்குக் காட்டுகின்றது.

G.G

“இந்த வாதத்தைப் புறந்தள்ளிய பொன்னம்பலம் அவர்கள், ஏற்கனவே உள்ள உள்ளூராட்சி மன்றங்களை விட ஓரளவு அதிகாரம் கூடிய மாகாண சபையை மட்டுமே பெறுகின்ற தனது இலக்கை மறைத்துக் கொண்டு, தமிழரசுக் கட்சி, தமிழரை தன்னிடத்தில் கவர்ந்து கொள்வதற்காகவே, தனது பிரசாரத்தை தமிழ் அரசுக்கான பிரசாரம் என வேடம் புனைந்துள்ளது என மேலும் குற்றம் சுமத்தினார்.” (முருகர் குணசிங்கம்)

பொன்னம்பலம் அவர்கள் மேல் எவ்வளவு விமர்சனங்கள் இருந்த போதிலும் தமிழரசுக் கட்சியின் தேர்தல் மைய அரசியலை சரியாகக் கணிப்பிட்டுள்ளார் எனலாம். எஸ். ஜே. வி. அவர்களால் தொடங்கிவிடப்பட்ட மக்களை உசுப்பேற்றி அரசியல் இலாபம் தேடும் போக்கு இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருப்பதுடன், எவ்வித விமர்சனங்களுக்கும் அப்பால் தமிழரசுக் கட்சியினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் தேர்தல் கதாநாயகனாக எஸ். ஜே. வி. அவர்களே இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் தமிழர்களின் தேசிய உணர்வை அவர் கையாண்ட முறைமையினாலாகும்.

D.S

தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கைக்குள் காணப்பட்ட பலவீனமான தன்மையினைப் புரிந்து கொண்ட பிரதமர் டி. எஸ். சேனநாயக்க 1951 இல் யாழ்ப்பாணத்துக்குச் சென்று தனக்களிக்கப்பட்ட வரவேற்புபசாரத்தில் உரையாற்றும் போது, “சமஷ்டிக் கோரிக்கையைப் பிரிவினைக் கோரிக்கை என்று குறிப்பிட்டார். ஒன்றுபட்டால் அனைவருக்கும் வாழ்வு. ஒற்றுமை நீங்கின் யாவர்க்கும் தாழ்வு. எனவே நாம் ஒன்றுபட்டு வாழ்வோம் என்று முழங்கினார் டி. எஸ், அக்கூற்றை வரவேற்றார்கள் அங்கு குழுமியிருந்த தமிழ் மக்கள். தமிழரசுக் கோரிக்கையை பிரிவினைக் கோரிக்கையாக சிங்கள மக்களுக்குப் போதித்த முதலாவது தலைவர் டி. எஸ். அவர்கள்தான். டட்லி சேனநாயக்காவும், ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் அந்தப்பிரசாரத்தை தொடர்ந்து நடத்தினர். அதன் தாக்கம் இன்றும் சிங்கள மக்களிடம் காணப்படுகிறது” (த.சபாரெத்தினம்)

இவ்வாறு சிங்களத் தலைவர்கள் தமிழர்களுடைய நியாயமான கோரிக்கைகளை தவறாகக் புரிந்து கொள்வதற்கு அடியெடுத்துக் கொடுத்தவர்கள் தமிழ் உயர்வர்க்கத்தினரும் மத்திய வர்க்கத்தினருமாவர். தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கு சிங்கள மக்களின் வகிபாகம் தொடர்பாக எவ்வித பிரக்ஞையுமின்றி தமிழ் வாக்காளர்களை மட்டும் கவனத்தில் கொண்டு தமிழரசுக் கட்சியினர் செயற்பட்டனர்.

1952 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியினர் 2 ஆசனங்களை மாத்திரமே பெற்றனர். இவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் காங்கிரஸ் நான்கு பிரதிநிதிகளைப் பெற்றிருந்தது. தமிழர்களை ஐக்கியப்படுத்தி தமிழ்த் தேசிய உணர்வினை வளர்த்தெடுப்பதின் ஊடாகத்தான் அடுத்த தேர்தலில் வெற்றியடைய முடியும் என்பதை இந்தத்தோல்வியினால் எஸ். ஜே. வி. புரிந்து கொண்டார். இதற்காக அவர் மூன்றுவகையான செயற்திட்டங்களை முன்னெடுத்தார்.

  1. கூட்டங்களை ஒழுங்கு செய்து மக்களிடம் தமது கருத்தினை முன்வைப்பது
  2. கிராமங்கள் தோறும் கட்சிக் கிளைகளை ஆரம்பித்து தமிழ்த் தேசிய உணர்வினை ஊட்டுதல்.
  3. மக்களை நேரடி அரசியலில் ஈடுபடுத்துவது, அதாவது ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் போன்ற போராட்ட வடிவங்களை கைக்கொண்டு மக்களை ஈடுபடவைத்தல்.

மேலே சுட்டிக்காட்டப்பட்ட செயற்பாடுகள் காரணமாக 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி எட்டுத் தொகுதிகளில் வெற்றி பெற, தமிழ் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் மாத்திரமே வெற்றிபெற முடிந்தது. தமிழரசுக்கட்சியினது செயற்பாடுகளும் அவர்களது வெற்றியும் பௌத்த சிங்களத் தேசியவாதத்துக்கு எதிரான ஒன்றாகவே சிங்களத் தேசியவாதிகளினால் சிங்கள மக்களுக்கு ஊட்டப்பட்டு பௌத்த சிங்கள தேசியவாதம் மேலும் வலுப்பெற வழிவகுத்தது.

சிங்கள மக்களிடையே உருவான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் சிங்கள மக்களை தங்களுடைய வாக்காளர்களாக மாற்றும் கருவியாக பௌத்த சிங்கள உணர்வினை எடுத்துக் கொண்டன. இது போன்றே தமிழ் அரசுக் கட்சியும் தமிழ் மக்களை தங்களுடைய வாக்காளர்களாக மாற்றும் கருவியாக தமிழ் உணர்வை எடுத்துக் கொண்டது. இந்த இரு இனங்களின் தேர்தல் மைய அரசியல் போக்குகளின் காரணமாக பௌத்த சிங்கள உணர்வுக்கு எதிர் தமிழ் உணர்வு அல்லது தமிழ் உணர்வுக்கு எதிர் சிங்கள தேசிய உணர்வு எனும் இனவாதப் போக்கு வளர்க்கப்பட்டது. அதாவது சிங்கள இனவாதத்தைக் காட்டி தமிழ் இனவாதமும் தமிழ் இனவாதத்தைக் காட்டி சிங்கள இனவாதமும் வளர்க்கப்பட்டது.

முன்பு சுட்டிக்காட்டியது போல தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது எந்தவொரு தேசிய இனங்களின் உரிமைகளுக்கும் எதிரானது அல்ல என்கின்ற தத்துவார்த்தம் இலங்கையில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை விடயத்தில் தவறிப்போனதற்குக் காரணம் இந்தத் தேர்தல் மைய அரசியலேயாகும்.

சிங்களம் மட்டும் அரசகரும மொழியாதல்

ஆரம்பத்தில் சிங்களவர்களுக்குரிய வாய்ப்புக்களையும் உரிமைகளையும் பறிப்போர்களாக மலையாளிகள், போரா சமூகத்தவர், கரையோர முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்போரே காணப்பட்டனர். சிங்கள மத்தியதர வர்க்கத்தினரின் தாக்குதல்களுக்கு உள்ளானவர்களும் இவர்களேயாவர். சிங்களவர்கள் இலங்கைத் தமிழரை இந்த நாட்டின் பூர்வீக சமூகமாகவே பார்த்தனர். இதன் காரணத்தினாலத்தான் சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் அரசகரும மொழியாக இருக்க வேண்டும் என்பதில் சிங்களத் தேசியவாதிகளும், இடதுசாரிகளும் ஒருமித்த கருத்துடையவர்களாகவே இருந்திருக்கின்றனர்.

“1944 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா, சிங்களம் ‘சில வருடகாலத்துள்’ அரசகரும மொழியாக்கப்பட வேண்டும் எனப் பிரேரித்தார். இதனுடன் தமிழ்மொழியும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் எனப் பிரேரணை திருத்தப்பட்டு ஆதரவாக 27 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பெற்றது.”

1944 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா பின்வருமாறு கூறினார், “இவ்விரு மொழிகளும் அரசகரும மொழியாகக் கொள்வதில் எனக்கு எத்தகைய தனிப்பட்ட எதிர்ப்பும் கிடையாது. இதனால் எத்தகைய தீங்கோ, அபாயமோ, இடர்பாடோ ஏற்படும் என்று நான் கருதவில்லை.”

1951 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா யூ. என். பியிலிருந்து பிரிந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவியபோது மொழிப் பிரச்சினையில் செயலாற்ற யூ. என். பி தாமதம் செய்கிறது எனக் குற்றஞ்சாட்டினார்.

அன்னாரின் முதற் கட்சி அறிக்கை பின்வருமாறு கூறியது, “சிங்களத்தையும் தமிழையும் உடனடியாக அரசகரும மொழிகளாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் இந்நாட்டு மக்கள் தமது சொந்த நாட்டிலேயே அந்நியராக இருக்கும் நிலை ஒழியும். இது சிங்களம் மூலமும் தமிழ் மூலமும் கல்வி கற்றோர் இன்று வாழ்க்கையின் கடைநிலையில் இருப்பதற்கும் முடிவு கட்டலாம்” (குமாரி ஜயவர்த்தன) என்றார்.

இவ்வாறு எல்லாத் தலைவர்களும் சிங்களத்தையும் தமிழையும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொண்டு அவற்றை அரசகரும மொழிகளாக அமுல்படுத்த வேண்டும் என்ற நிலையிலிருந்தவர்கள் தமிழை ஒதுக்கி தனிச் சிங்களம் மட்டுமே என்ற நிலைக்கு எவ்வாறு வந்தார்கள் என்று நோக்குதல் வேண்டும்.

“இங்கு ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். பல நாடுகளில் சிறுபான்மையினர் தம் மொழி உரிமைகளை அல்லது மற்ற உரிமைகளை பெரும்பான்மையிலிருந்து பாதுகாக்கப் போராடுவது வழக்கம். ஆனால் இலங்கையில் ஒரு சிறுபான்மை தன்னை ஆபத்துக்குள்ளாக்கும் என்று அஞ்சி ஒரு பெரும்பான்மை அதன் மொழியைப் பாதுகாக்கப் போராட்டம் நடத்தியது. இந்தச் சிக்கலான பிரச்சினையை நாம் புரிந்துகொள்ள நாம் சிங்களப் பெரும்பான்மை ஏன் ஒரு சிறுபான்மை போல் நடந்து கொண்டது என்பதற்கான பிரத்தியேக காரணங்களை ஆராய வேண்டும்.” (என்.சண்முகதாசன்)

1822 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் 42 அமெரிக்க மிசன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 1823 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் செமினறி ஆங்கிலப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதுவே ஆசியாவில் முதலாவது ஆங்கிலப் பாடசாலை எனக் கூறப்படுகின்றது. இதில் ஆங்கிலம், தமிழ், கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளும் கணிதம், புவியியல், வரலாறு, தத்துவவியல் ஆகிய பாடங்களும் ஒரு பல்கலைக்கழகத்தின் தரமுடையதாக கற்பிக்கப்பட்டதுடன் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிப்பதற்கான வசதிகளும் இருந்தன. 1920 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 65 ஆங்கிலப் பாடசாலைகள் இருந்தன. அவற்றில் 10 முதல்தர கல்லூரிப் பாடசாலைகளாகும். யாழ்ப்பாணத்தில் இருந்த 426 தமிழ் பாடசாலைகளில் கூட தரமான ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது.

இலங்கையில் வேறு எங்கும் இல்லாதளவுக்கு யாழ்ப்பாணத்தில் கல்விவாய்ப்பு இருந்ததன் காரணத்தினால் பிரித்தானியரின் நிர்வாக மொழியான ஆங்கிலத்தில் கடமையாற்றக் கூடியவர்களாகவும் அந்தக் கடமையின் நிமித்தம் இலங்கையின் எந்தப்பாகத்திலும் சென்று பணிப்புரியக் கூடியவர்களாகவும் யாழ்ப்பாணத்து மத்தியதரவர்க்கத்தினர் இருந்தனர். இந்த மத்திய வர்க்கத்துக்குள் யாழ்ப்பாண சமூக அமைப்பின் உயர்நிலைச் சாதியினரே இருந்தனர். தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கான கல்வி வாய்ப்புக்கள் 1960 ஆண்டுக்குப் பின்கூட மறுக்கப்பட்டு வந்திருப்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

1921ம் ஆண்டு 20 வயதுக்கு மேற்பட்ட மொத்த சிங்களவர் 790,954 பேரில் 987 பேரே அரச வேலைவாய்ப்பைப் பெற்றிருக்க அதே ஆண்டு 20 வயதுக்கு மேற்பட்ட மொத்தத் தமிழர்கள் 139,361 பேரில் 684 பேர் அரச வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தனர். இது தமிழர்களின் சனத்தொகை விகிதாசாரத்திலும் பார்க்க அதிகூடிய எண்ணிக்கையாகும். இந்த ஆங்கிலம் கற்ற வர்க்கத்தினரே உயர் நிர்வாகப் பதவிகளை வகித்ததோடு ஏனைய பதவிகளில் ஆட்சேர்ப்பிலும் அவர்களுடைய செல்வாக்கே காணப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பின்பும் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தின் காரணமாக சிங்கள மொழி மூலம் கற்விகற்ற சிங்கள அறிவுஜீவிகள் கௌரவமான பதவிகளில் ஓரங்கட்டப்படுவதனால் பாதிப்புக்குள்ளானார்கள். இதனால் அவர்கள் சிங்களம் மட்டும் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அப்போதுதான் அவர்களால் அரச சேவைகளில் இணைந்து கௌரவமான தொழில்களையும் நல்ல வருமானத்தினையும் பெறலாம் என்று எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்பு சாதாரண சிங்கள தொழிலாளர்களிடத்திலும் விவசாயிகளிடத்திலும் உருவாகவில்லை. அவர்கள் இன்னும் இலவசக் கல்வியின் பயனைப் பெற்றவர்களாக மேற்கிளம்பவில்லை. இதே நிலைதான் கிழக்கு மாகாணத்திலும் வடமாகாணத்தில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களிடத்திலும் இருந்த நிலைமையாகும்.

எனவே சாதாரண சிங்களத் தொழிலாளரும் சரி, தமிழ்த் தொழிலாளரும் சரி ஒரு மொழியை மற்றவர் ஒதுக்குவதற்கான தேவையுடையவர்களாக இருக்கவில்லை. ஆனால் இவ்விரு இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய பிள்ளைகள் கல்வி கற்கும் தாய்மொழியில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுமாக இருந்தால் அதன் மூலம் தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வருவர் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டிருக்கிறது. இந்த எதிர்பார்ப்புக் காரணமாக தங்கள் தாய்மொழிக்கான ஆதரவினை அவர்கள் வழங்கியிருந்தனர். இந்த ஆதரவுத் தளத்தினை கட்டியெழுப்பவதில் நான்கு வகையான குட்டி பூர்ஷூவாக்கள் செல்வாக்குச் செலுத்தியதாக குமாரி ஜயவர்த்தன சுட்டிக்காட்டுகின்றார்.

அந்தவகையில்,

  1. ஆசிரியர்கள்: சிங்கள ஆசிரியர்கள் பலரைப் பேட்டி கண்ட ஹவாட் றிக்கின்ஸ் அவர்களுடைய கருத்தின் பிரகாரம் “சிங்களம் அரசகரும மொழியாக்கப்படின் தற்போதைய வசதியீனங்களில் பல மறைந்து விடும். ஆங்கிலம் அரசகரும மொழியாக இருக்கும் வேளை அதற்கு வழங்கப்பட்ட அந்தஸ்து அனைத்தும் சிங்கள மொழிக்கும் சிங்கள ஆசிரியர்களுக்கும் கிடைக்கும். அவர்கள் சிங்கள மொழியிலும் கலாசாரத்திலும் உயர்ந்தவர்கள், அவர்களது திறமை அரசின் அங்கீகாரம் பெறின், அவர்களும் அந்தஸ்த்தில் உயர்வர், சிங்களம் அரசகரும மொழியானால் சம்பள வேறுபாடு, கல்வி வசதிகள், தொழில் வாய்ப்புக்கள் ஆகியன ஆங்கிலம் பேசும் உயர் வகுப்பினருக்கு மாத்திரம் உரித்தாக மாட்டாது. ஆங்கிலத்தின் இடத்துக்கு சிங்களம் முன்னேற்றப்படின் பெருந்தொகையான அரச பதவிகள் கிராமத்தில் கற்கும் மாணவர்களுக்கு உடனடியாகக் கிடைக்கும்” (மேற்கோள், குமாரி ஜயவர்த்தனா) என நம்பினார்கள்.
  2. மாணவரும் இளைஞரும்: சிங்கள மொழிமூலம் கல்விகற்று ஆங்கில ஆதிக்கத்தினால் ஓரங்கட்டப்பட்டு வேலையற்றிருந்த இளைஞர்களும் இலவசக் கல்வியினூடான வாய்ப்பைப் பயன்படுத்தி சிங்கள மொழிமூலம் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்களும் ‘சிங்களம் மட்டும்’ அமுல்படுத்தப்படுமாயின் தங்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என நம்பியதால் சிங்களம் மட்டும் கொள்கையை தீவிரமாக ஆதரித்தனர்.
  3. ஆயுர்வேத வைத்தியர்கள்: சிங்களப் பண்பாட்டில் ஆயுர்வேத வைத்தியத்திற்கும் அதனைச் செய்கின்ற வைத்தியர்களுக்கும் மதிப்பும் மரியாதையும் இருந்தன. ஆங்கிலக் கல்வியும் ஆங்கில மருத்துவமும் அவர்களுடைய அந்தஸ்தைக் குறைத்தன. சிங்களம் அரசகரும மொழியாக அமையப்பெற்றால் தங்களுடைய பாரம்பரிய வைத்தியமும் சிங்கள பண்பாடும் உயிர்ப்புப் பெறும் என நம்பினர். இதனால் சிங்கள மொழிக் கொள்கையை வலியுறுத்தினர்.
  4. புத்த மதகுருமார்: இவர்கள் சிங்களம் மூலம் கல்வி கற்று பண்டைய சிங்கள இலக்கியங்களையும் பாளி மொழியையும் படித்திருந்ததோடு இவர்களே சிங்கள பண்பாட்டின் காவலர்கள் எனும் ஒரு எண்ணப்பதிவும் சிங்கள மக்களிடம் உண்டு. இவர்கள் ஆங்கிலம் பேசும் நிர்வாக அதிகாரிகளினால் ஓரங்கட்டப்பட்டனர். சிங்களம் அரசகரும மொழியாக வரும் பட்சத்தில் தாங்கள் இழந்த பாரம்பரியத்தினை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சிங்கள மொழிக்கொள்கையை தீவிரமாக முன்னெடுத்தனர்.

எனவே இங்கு தமிழ் இனத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியினாலன்றி, தமிழர்கள் கொண்டிருக்கும் ஆங்கிலத் திறன் காரணமாக தங்களுக்குரிய வேலைவாய்ப்புக்கள் மறுக்கப்படுவதாக உணர்ந்த சிங்கள மத்தியவர்க்கத்தினர் ஆங்கிலம் இருந்த இடத்தில் சிங்களத்தைக் கொண்டு வருவதன் மூலம் அந்த வேலைவாய்ப்புக்களை தாம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு தமது பண்பாட்டையும் பாரம்பரியங்களையும் கட்டியெழுப்ப முடியும் என்று நினைத்தனர்.

எந்த ஒரு தேசிய இனத்தின் அடையாளமாகவும் அந்த தேசிய இனத்தின் உயிர்ப்பின் மையமாகவும் மொழி இருக்கின்றது. சிங்கள மக்கள் தங்கள் மொழி மீது கொண்டுள்ள நியாயமான அக்கறையினை அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிக்கான ஆதரவுத் தளமாக கையாளத் தொடங்கின. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, யூ. என். பியிலிருந்து 1951இல் பிரிந்தவுடன் தனது முதலாவது அறிக்கையிலே மொழிப் பிரச்சினையில் செயலாற்ற யூ. என். பி தாமதம் செய்கிறது என குற்றஞ்சாட்டி தனக்கான ஆதரவுத் தளத்தினை கட்டியெழுப்ப வேண்டியவராக இருந்தார். இதற்கு ஏற்றாற் போல் இடைக்காலப் பிரதமராக இருந்த சேர். ஜோன் கொத்தலாவல யாழ்ப்பாணத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புபசாரத்தில் மகிழ்ச்சியடைந்து அரசியல் சட்டத்தில் சிங்கள மொழி, தமிழ் மொழி ஆகியவற்றுக்கு சம அந்தஸ்து அளிக்கும் வண்ணம் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார். இதற்கு சிங்களவர்களிடத்திலிருந்து வெளிப்பட்ட எதிர்ப்புணர்வைக் கண்டு தனது வெற்றிவாய்ப்பு பறிபோய்விடும் என அஞ்சிய கொத்தலாவல அவர்கள், யூ. என். பியின் களனிய மகாநாட்டைக் நடாத்தி அதில் சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக இருக்கும் என்ற அறிவிப்பை செய்தார்.

இதன் மூலம் சிங்கள மக்களை தனது எதிராளியான கொத்தலாவல தன்வசமாக்கிவிடக் கூடும் என உணர்ந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 24 மணி நேரத்தில் சிங்களத்தை அரசகரும மொழியாக்குவேன் என மிகத் தீவிரமான அறிவிப்பினை விடுத்தார். சிங்கள மக்களைப் பொறுத்தவரை தங்களுடைய வாக்குப் பலத்தினால் இரண்டு தலைவர்களையும் தங்களுடைய கோரிக்கைக்கு சார்பானவர்களாக ஆக்கியிருந்தார்கள்.

சிங்கள மக்களிடத்தில் 1956 ஆம் ஆண்டு தேர்தலின் மையப்பொருளாக சிங்களம் மட்டும் என்பதே இருந்தது. இதனை ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, புரட்சிவாத சமசமாசக் கட்சி, சமசமாஜக் கட்சி போன்ற கட்சிகள் மிகக் காரசாரமாக முன்னெடுத்தன. லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பன சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து என்ற கொள்கையினைக் கடைப்பிடித்து பிரசாரங்களை முன்னெடுத்தன. இவ்வாறு சமஅந்தஸ்துப் பேசிய பல கூட்டங்கள் சிங்கள பேரினவாதிகளால் குழப்பப்பட்ட போதும் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தங்கள் கொள்கைகளில் இருந்து பின்வாங்கவில்லை என்பதை தமிழர்கள் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

மேற்படி கட்சியினரின் கூட்டங்கள் சிங்களத் தீவிரவாதிகளினால் குழப்பப்பட்ட போதிலும் கலாநிதி என். எம். பெரேரா சிங்களமும் தமிழும் சம அந்தஸ்துடைய மொழிகளாக இருக்க வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்து பின்வருமாறு உரையாற்றினார். “இன்று பிரபலமான கருத்தாகிய சிங்களம் மட்டும் என்பதை ஆதரிப்பது எனக்கும் எனது கட்சி அங்கத்தவர்களுக்கும் எளிதாக இருக்கும். மற்றவர்களைப் போல் நாமும் வீரபுருஷர்களாக போற்றப்பட்டிருப்போம். ஆனால் நாம் தொடர்ந்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இந்நிலைப்பாடு மிகவும் சரியானது எனக் கருதியதால் நாம் அதிலிருந்து மாறவில்லை. இன்றுவரை அதனையே கைக்கொண்டுள்ளோம். இது மற்றவர்களின் எதிர்ப்பை பெருமளவில் பெற்றபோதும் இந்தக் கருத்து சரியானது என்பதில் நான் மிகவும் உறுதியாக உள்ளேன். இவ்வாறு கூறுவதால் அரசியல் பதவியில் சில காலம் நாம் இல்லாமல் போவதற்கு வழிவகுத்தாலும் எஸ். எஸ். எஸ். பி. அங்கத்தினராகிய நாம் அவற்றை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.” (மேற்கோள். குமாரி ஜயவர்த்தன) என எந்தவித தேர்தல் இலாபங்களையும் கருதாது சிறுபான்மையினர் உரிமை விடயத்தில் மிக உறுதியாக இருந்துள்ளனர்.

இடதுசாரிகளினுடைய சனநாயகக் நிலையினால் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருந்த இனவாதத்தினை வெற்றிகொள்ள முடியாமல் போய்விட்டது. 1956 ஆம் ஆண்டு தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தலைமை தாங்கிய மக்கள் ஐக்கிய முன்னணி என்ற மகாஜன எக்சத் பெரமுன (எம். ஈ. பி) 51 இடங்களையும் இடது சாரிகள் 17 இடங்களையும் யூ. என். பி 08 இடங்களையும் பெற்றன.

சிங்கள தேசிய உணர்வுக்கு எதிராக தமிழ்த் தேசிய உணர்வை முன்வைத்து தேர்தலில் நின்ற எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையிலான தமிழ் அரசுக் கட்சியினர் 08 இடங்களையும் ஜி. ஜி. பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்க் காங்கிரஸ் ஒரு இடத்தினையும் பெற்றன.

சிங்கள மொழியின் அமுலாக்கமே தேர்தலின் மையப் பொருளாக இருந்ததன் காரணத்தினால் பண்டாரநாயக்கா தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் மசோதா தனிச் சிங்களச் சட்டமூலமாகவே இருந்தது. இம்மசோதாவை சமர்ப்பித்து உரையாற்றிய பண்டாரநாயக்கா ஆங்கிலத்தைப் பயன்படுத்தியதனால் ஏற்பட்ட தீய விளைவுகளைச் சுட்டிக்காட்டியதோடு மொழியின் சம அந்தஸ்தினை சிங்கள மக்கள் தங்களுடைய மொழியின் தொடர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கும் எனவும் அது சிங்கள மொழியின் அழிவுக்குக் காரணமாகும் எனவும் எண்ணினர் எனக் குறிப்பிட்டார்.

அனில் முனசிங்கா “எஸ். எஸ். எஸ். பியும் வேறு புரட்சிகரக் கட்சிகளும் இவ்வகுப்புவாதத்திற்கு எதிராகப் போராடும். எந்தச் சூழ்நிலையிலும் இனவாதத்தை நாம் ஆதரிக்கோம். இத்தீவில் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரே விதமான உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக நாம் போராட வேண்டும்” (மேற்கோள் குமாரி ஜயவர்தன) என்றார். இது போன்றே முக்கிய இடதுசாரித் தலைவர்களான லெஸ்லி குணவர்த்தன, கொல்வின் ஆர். டி. சில்வா போன்றவர்கள் தனிச் சிங்களச் சட்டம் இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு விரும்பத்தகாத எதிர்வினைகளை ஏற்படுத்தும் என அரசாங்கத்தை எச்சரிக்கை செய்யத் தவறவில்லை.

தமிழ்த் தலைவர்களோ எந்தவித திட்டங்களுமின்றி தமிழர்களை உணர்ச்சி வசப்படுத்தக் கூடியதும் சிங்களவர்களை கோபமேற்படுத்தக் கூடியதுமான வாதங்களை முன்வைத்தனர். உதாரணமாக “சி.சுந்தரலிங்கம் அவர்கள் சிங்களம் மட்டும் மசோதாவை மிகவும் கடுமையாக எதிர்த்தார். சிங்களம் மட்டும் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டால் தமிழர் தமக்கெனத் தனியான அரசை அமைக்கின்ற நிலை ஏற்படும் என நாடாளுமன்ற விவாதத்தின் போது எச்சரிக்கை செய்தார். ஜி. ஜி. பொன்னம்பலமும் அதே கருத்தையே தெரிவித்தார்.” (முருகர் குணசிங்கம்)

தமிழ்த் தலைவர்களின் உணர்ச்சிகரப் பேச்சுக்களையோ அல்லது இடதுசாரிகளின் யதார்த்தமான எச்சரிக்கைகளையோ பொருட்படுத்தாத எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா மசோதாவை வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றில் சமர்ப்பித்தார். இதன்போது ஆதரவாக 66 வாக்குகளும் எதிராக 29 வாக்குகளும் கிடைத்தன. எதிராக வாக்களித்த கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சி, எஸ். எஸ். எஸ். பி, தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என்பனவாகும். சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து யூ. என். பியும் ஆதரித்து வாக்களித்தது. நாட்டின் தேசியக் கொள்ளை தொடர்பாக எப்போதும் எதிரும் புதிருமாக இருக்கும் இந்த இருபெரும் கட்சிகளும் சிறுபான்மையினரை அடக்கி சிங்களப் பேரினவாதத்தினை வளர்த்தல் எனும் விடயத்தில் அக்கறையுடன் ஒன்று சேர்ந்தன. இந்தப் பேரினவாதக் கூட்டுடன் முஸ்லிம் சிறுபான்மையினராகிய சி. ஏ. எஸ். மரிக்கார், ராசிக் பரீட் ஆகிய இருவரும் தங்களுடைய நலனுக்காக தமிழ் மொழிக்கும் சிறுபான்மையினருக்கும் துரோகமிழைத்து ஆதரவாக வாக்களித்தனர்.

பிரஜா உரிமைச் சட்டத்திலும் சரி, சிங்கள மொழிச் சட்டத்திலும் சரி பெரும்பான்மையினம் இன்னொரு சிறுபான்மையினத்தின் உரிமைகளை நாடாளுமன்ற சனநாயகம் எனும் போர்வையில் அடக்கி ஒடுக்குவதற்கான கருவியாக எடுத்துக்கொண்டது. இது சனநாயக மீறலே தவிர சனநாயகம் அல்ல. இந்த சனநாயக மீறலை தமிழ்த் தலைவர்கள் பிரித்தானிய அரசிடம் அல்லது அவர்கள் குறிப்பிடுகின்ற சர்வதேசத்திடம் சரியான முறையில், முன்வைக்கத் தவறி எந்தவிதமான எதிர்காலத் திட்டங்களுமற்ற உணர்ச்சிகரமான அரசியலையே செய்தார்கள்.

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின் உருவான கட்சி அரசியல் காரணமாக மத்தியதர சிங்களமக்களை பௌத்த சிங்கள அடிப்படைவாதத்துக்கு உள்ளாக்கி வளர்த்தெடுப்பதில் முனைப்புடன் செயற்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி, யூ. என். பி போன்ற இருபெரும் முதலாளித்துவக் கட்சிகள், இடதுசாரித் தலைவர்களான பிலிப் குணவர்த்தனா போன்றவர்களையே பௌத்த சிங்கள அடிப்படைவாதத்துக்குள் உள்ளிளுப்பதில் வெற்றி கண்டிருந்தன. அப்போதிருந்த முதலாளித்துவ சிங்களக் கட்சித் தலைவர்களில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கைக்கு சமஷ்டி அரசியலமைப்பே பொருத்தமானது என்றும் சிங்களத்துக்கும் தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் கூறிவந்தவர். சிங்கள இனவாத வளர்ச்சியை தனது அரசியல் வெற்றிக்காக பயன்படுத்தியதனால் சிறுபான்மையினர் தொடர்பாக தான் கொண்டிருந்த கொள்கையினை அவர் விட்டிருந்தாலும் சிங்களவர்களுடைய கோரிக்கை நியாயமற்றது என்பதை விளங்கிக் கொண்டவராகவே இருந்தார். இதனை அவருடைய பின்வரும் உரை எடுத்துக்காட்டுகின்றது. “சிங்களவரில் பெரும்பான்மையினர் இதனை மிகத் தீர்க்கமாக வேண்டுகின்றனர் என்பது ஒரு உண்மையாகும். அவர்களது கோரிக்கை நியாயமானதா? என்பது வேறொரு பிரச்சினையாகும்.” (மேற்கோள் குமாரி ஜயவர்தன) என்றார். இது போன்று சிங்கள மொழி தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மகாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் சட்டமூலத்தை தயாரிக்கும் போது, சிங்கள மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் அதேவேளை தமிழ் மக்களின் அபிலாசைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதோடு இலங்கையில் வாழும் எல்லா இன மக்களும் அரசாங்கத்துடன் தமது தாய் மொழியில் தொடர்பு கொள்வதற்கான வசதிகளும் செய்யப்படுதல் வேண்டும் என ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்த சிங்களத் தலைவர்களினதும் சிங்கள சமூகத்தினதும் அகபுறநிலை அரசியலின் மாறுநிலையை தமிழ் தலைவர்கள் கவனத்தில் கொண்டு தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தமிழ் மக்களிடத்தில் தாம் வீரபுருஷர்களாகவும், கதாநாயகர்களாகவும் இருப்பதற்கான அரசியலையே மேற்கொண்டனர்.

தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற கட்டடத்தின் படிகளில் சத்தியாக்கிரகம் நடத்துவது என்ற தமிழ் அரசுக் கட்சியின் தீர்மானத்தை அரசு அடக்கும் எனத் தெரிந்திருந்த போது, “உதுக்கெல்லாம் பயப்படுகிறதா? செய்வதைச் செய்யட்டும் நாங்கள் எமது முடிவை மாற்றக் கூடாது” என்றனர். அக்கருத்தை தந்தை செல்வா ஆதரித்தார்.” (த.சபாரெத்தினம்)

தமிழ் மக்களுக்காக நாடாளுமன்றம் சென்றவர்கள் பெரும்பான்மை எனும் எண்ணிக்கையினை வைத்துக் கொண்டு பிரஜா உரிமை தொடக்கம் மொழி வரைக்கும் சிறுபான்மையினராகிய தமிழரை பொருட்படுத்தாத பௌத்த சிங்களப் பேரினவாத அரசில் ஒரு அங்கமாக நாம் இனி இருக்கப்போவதில்லை என்று தங்களுடைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை தூக்கியெறிந்து தமிழர்களுக்குச் சார்பான சிங்களச் சக்திகளுடன் ஒன்றிணைந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சிறுபான்மையினருடன் சேர்ந்து ஒரு அகிம்சைப் போராட்டத்துக்குச் செல்வதற்கு இவர்கள் விரும்பவில்லை. அதற்குக் காரணம் தங்களுடைய பதவியையும் சுகபோகங்களையும் அந்தஸ்தினையும் இழக்கவிரும்பாததோடு தமது வீரபுருஷ நிலையினையும் தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டி அடுத்த முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் சந்தர்ப்பமும் இல்லாமல் போகும் என்பதினாலாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

14157 பார்வைகள்

About the Author

சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்

கலாநிதி சு. சிவரெத்தினம் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுண்கலையில் இளமாணிப் பட்டத்தையும் முது தத்துவமாணிப்பட்டத்தையும் பெற்றவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் கலைவரலாற்றில் கலாநிதிப் பட்டம் பெற்று, தற்போது சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கட்புல தொழில்நுட்பக் கலைகள் துறையின் தலைவராகப் பணிபுரிகின்றார்.

கலைவரலாற்றில் மட்டுமன்றி நாடகம், இலக்கியம், அரசியல், சமூகவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)