Arts
12 நிமிட வாசிப்பு

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் : ஓர் அறிமுகம் – பகுதி 1

February 28, 2024 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

இலங்கைத் தமிழருக்கும், அவர்களின் வழிபாட்டுப் பாரம்பரியத்திற்கும் குறைந்தது 2500 வருட கால வரலாறு உள்ளது. இலங்கையின் பூர்வீகக் குடிகளான நாகர் நாகத்தையும், வேடர் முருகனையும், தமிழர் சிவனையும் வழிபட்டனர். இவ்வழிபாடுகள் இலங்கை வரலாற்றுக்கு முற்பட்ட பெருங்கற்கால மையங்களில் கிடைக்கப்பற்ற நாக, லிங்க, வேல் சின்னங்கள் ஆகியவற்றின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும் பண்டுகாபய மன்னன் காலத்தில் நாக, சிவ வழிபாடுகள் இருந்தமை பற்றிய விபரங்கள் பண்டைய பாளி நூல்களிலும்  குறிப்பிடப்பட்டுள்ளன. 

இவ்வரலாற்றுக்கு மேலும் முக்கிய சான்றாக விளங்குவது இலங்கையில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்களாகும். இக்கல்வெட்டுக்கள் பொ.ஆ.மு. 300 முதல் பொ.ஆ. 300 வரையான காலப்பகுதியில் பொறிக்கப்பட்டவையாகும். இலங்கையில் மொத்தமாக சுமார் 2500 பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் இதுவரை 2000 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை இயற்கையாக அமைந்துள்ள மலைக் குகைகளிலும், மலைப் பாறைகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன. 

இவற்றில் சுமார் 1000 கல்வெட்டுக்கள் ஆங்கிலேயர் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டவையாகும். ஆங்கிலேயர் காலத்தின் பின்பு, இன்று வரை மேலும் 1000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயத் தொல்பொருள் ஆய்வாளர்களான H.W. கொட்ரிங்டன், Dr. எட்வேர்ட் முல்லர் மற்றும் இலங்கை அறிஞர்களான பேராசிரியர் எஸ்.பரணவித்தான, மார்டின் விக்ரமசிங்க, மாலனி டயஸ் ஆகியோர் இக்கல்வெட்டுகளைக் கண்டுபிடித்ததோடு, அவற்றை நூல்களாகவும் வெளியிட்டனர். அண்மையில் பூஜ்ய எல்லாவல மேதானந்த தேரர் பிராமிக் கல்வெட்டுக்கள் சிலவற்றைக் கண்டுபிடித்து அவை பற்றிய விபரங்களை நூல்களில் எழுதியுள்ளார். இருப்பினும் மேலும் சுமார் 500 பிராமிக் கல்வெட்டுகள் இதுவரை பதிவு செய்யப்படாமல் காடுகளில் காணப்படுகின்றன. 

பண்டைய இலங்கையில் நாகர் 

பண்டைய இலங்கையின் பூர்வீகக் குடிகளாக இயக்கர், நாகர் மற்றும் வேடர் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களில் நாகர் பற்றிய அண்மைக்கால ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகும். நாகர் பற்றி அறிஞர்கள்  மேற்கொண்ட ஆய்வுகள் இலங்கை வரலாற்றில் பல புதிய விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. 

இற்றைக்கு 3000-2000 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய ஆதி இரும்புக் காலத்தில் இலங்கையில் வாழ்ந்த மக்களின் சவ அடக்க மையங்களில் காணப்படும் கல்லறைகள், ஈமத்தாழிகள் ஆகியவற்றில் தமிழ் மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இவை நாகரோடு தொடர்புபட்டவையாகும். இலங்கை முழுவதிலும், குறிப்பாக வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டம் ஆகியவற்றில் பெருந்தொகையான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இலங்கையில் இற்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது. இக்காலப் பகுதியில் ஆதி இரும்புக்கால பண்பாட்டை இலங்கை முழுவதும் பரப்பியவர்கள் நாகர் என்பதும், இவர்கள் தமிழ் மொழியைப் பேசியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி இலங்கையின் மூத்த பேராசிரியர் எஸ். பத்மநாதன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

“இலங்கையின் மூன்றில் ஒரு பாகத்திலே தமிழ் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும், தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கிவிட்டனர் என்றும் சொல்லக்கூடிய காலம் வந்துள்ளது. நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் என்பதாலும், ஆதி இரும்புக்காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் என்பதாலும் கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றுள்ளமை உய்த்துணரப்படுகிறது. தமிழ் மொழியின் தொன்மை பற்றி தமிழ் நாட்டு தொல்பொருட் சின்னங்களை ஆதாரமாகக் கொண்டு நிர்ணயிக்க முடியாதவற்றை இலங்கையில் கிடைக்கின்ற தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களின் அடிப்படையிலேயே சொல்ல முடிக்கின்றமை ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.”     

2500 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இரண்டு நாக இராச்சியங்கள் இருந்தமை பற்றி இலங்கையில் எழுதப்பட்ட பாளி  நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை, வட இலங்கையில் இருந்த நாக தீபம் எனும் இராச்சியமும், மேற்கிலங்கையில் இருந்த கல்யாணி இராச்சியமும் ஆகும். புத்தர் இலங்கைக்கு வந்ததாக மகாவம்சம் கூறும் காலப் பகுதியில் நாகதீபத்தை மகோதரன், சூலோதரன் ஆகிய இரு மன்னர்களும், கல்யாணியை மணியக்கிரன் எனும் மன்னனும் ஆட்சி செய்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இவர்கள் மூவரும் நாக மன்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. களனி விகாரையில் காணப்படும் மணியக்கிரனின் சிற்பத்தில் அவனின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் காணப்படுகின்றமை அவன் நாக மன்னன் என்பதை மேலும் உறுதி செய்கிறது. 

Image 1

இலங்கையில் பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட காலப் பகுதியில் நாக எனும் பெயரில் 10 இற்கும் மேற்பட்ட மன்னர்கள் இலங்கையை ஆட்சி செய்து வந்தமை பற்றி மகாவம்சம் குறிப்பிடுகிறது. இவர்களில் காலத்தால் முற்பட்டவன் மூத்தசிவனின் மகனும், தேவநம்பிய தீசனின் தம்பியுமான மகாநாகன் என்பவன் ஆவான். அனுராதபுர இராச்சியத்தில் இருந்து தப்பிச் சென்று இலங்கையின் தென்பகுதியில் மாகமை எனும் இராச்சியத்தை தோற்றுவித்தவனும் இவனே. இவன் நாக வழிபாடு அல்லது சிவ வழிபாடு செய்தவன் என்பதும், பின்பு பெளத்த நெறியைக் கடைப்பிடித்தவன் என்பதும் பிராமிக் கல்வெட்டுகள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவன் பொ.ஆ.மு. 307-267 காலப்பகுதியில் மாகமை இராச்சியத்தை ஆட்சி செய்தான். 

இக்காலகட்டத்தின் பின் அதாவது பொ.ஆ.மு 109 முதல் பொ.ஆ 246 வரையான காலப்பகுதியில் நாக எனும் பெயர் கொண்ட 10 மன்னர்கள் இலங்கையை ஆட்சி செய்தனர். அவர்கள் கல்லாட்ட நாகன், சோர நாகன், மகாதாத்திக மகாநாகன், இள நாகன், மகால்லக நாகன், சூள நாகன், குட்ட நாகன், ஸ்ரீ நாகன், அபய நாகன், 2 ஆம் ஸ்ரீ நாகன் ஆகியோராவார். 

பண்டைய இலங்கையில் ஆட்சி புரிந்த நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதனை பேராசிரியர் எஸ். பத்மநாதன் தனது நூலில் விளக்கியுள்ளார். இள நாகன், கல்லாட்ட நாகன், சோர நாகன் ஆகிய மன்னர்கள் பற்றி அவர் குறிப்பிட்டுள்ள விபரங்கள் இக்கூற்றை உறுதி செய்கின்றன. 

மேலும் தென்னிலங்கையில் வாழ்ந்த நாகரின் மொழி வழக்கிலே தமிழும், பிராகிருதமும் கலந்துள்ளமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், வட இலங்கையில் வாழ்ந்த நாகரைப் போலத் தென்னிலங்கையில் வாழ்ந்த நாகரும் தமிழ் மொழி பேசினார்கள் என்பதும், அரச உருவாக்கத்தில் அவர்களும் பங்கு கொண்டார்கள் என்பதும் உணரப்படுவதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். 

பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர் மற்றும் நாக வழிபாடு பற்றிய ஓர் அறிமுகம்  

இலங்கையில் உள்ள கற்குகைகளிலும், மலைப் பாறைகளிலும் காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்களில் நாக எனும் பெயர் பொறிக்கப்பட்ட சுமார் 100 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 

Image 2

இக்கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் தனது நூலில் பின்வருமாறு கூறியுள்ளார். 

“இலக்கியங்கள் குறிக்கும் நாக வழிபாடு பற்றிய கருத்தினை உறுதி செய்வனவாக ஈழத்தின் பழைய கல்வெட்டுக்களாகிய பிராமிக் கல்வெட்டுகள் கூறும் செய்திகள் அமைந்துள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்டவை” 

பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களின் குறிப்பின்படி பிராமிக் கல்வெட்டுக்களில் காணப்படும் நாக என்ற பெயரைக் கொண்டவர்கள் நாக வழிபாடு செய்தவர்கள் என்பது உறுதியாகிறது. 

இக்கல்வெட்டுகள் இலங்கை முழுவதிலும் பரந்து காணப்படுவதால் நாக வழிபாடு செய்தோர் இலங்கை முழுவதிலும் இவ்வழிபாடுகளைப் போற்றி வழிபட்டுள்ளனர் எனத் தெரிகிறது. இலங்கையில் பண்டைய காலம் முதல் இன்றுவரை நாக வழிபாடுகளைக் கடைப்பிடிப்போர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முதலாவது தலைநகரான அனுராதபுர நகரில் யக்ஷ வழிபாடு அதிகளவில் காணப்பட்டது போல் நாக வழிபாடும் பரவலாக இருந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன.

Image 3

பெளத்த சமயம் இலங்கையில் பரவிய காலத்தில் அனுராதபுர நகரில் பல நாகராஜர் கோயில்கள் இருந்துள்ளன. ஜேதவனாராம பகுதியில் பல நாகராஜன் மற்றும் நாகினி சிற்பங்கள் காணப்படுகின்றமை மூலம் இக்கூற்று உறுதியாகின்றது. இவற்றில் நாகராஜர் மற்றும் நாகினி ஆகிய தெய்வங்கள் ஐந்து தலை நாகத்தின் கீழ் நின்று கொண்டிருப்பது போன்ற சிற்பங்களே அதிகளவில் காணப்படுகின்றன.  

அபயகிரி விகாரைப் பகுதியிலும் நாக வழிபாடு நிலவியமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. இங்கும் பல நாகராஜர் சிற்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அனுராதபுரத்தின் வடக்குப் பகுதியில் நாக வழிபாடு சிறப்புடன் விளங்கியதாக நூல்கள் கூறுகின்றன. அபயகிரி விகாரை வளாகம் அனுராதபுரத்தின் வடக்குப் பகுதியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Image 4

தமிழ் நாட்டில் மொத்தமாக 31 இடங்களில் 93 பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு கல்வெட்டிலேனும் நாக எனும் பெயர் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வழிபாட்டுப் பாரம்பரியத்தில் காலத்தால் முற்பட்டவர்கள் இலங்கை மக்கள் எனக் கூறுவதற்கு இலங்கையில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்கள் மிக முக்கிய சான்றுகளாக விளங்குகின்றன. பேராசிரியர் எஸ். பத்மநாதனின் பின்வரும் குறிப்பும் இக்ககூற்றை சார்ந்து நிற்கிறது.  

Image 5

“தமிழ் மொழியின் தொன்மை பற்றி தமிழ் நாட்டு தொல்பொருட் சின்னங்களை ஆதாரமாகக் கொண்டு நிர்ணயிக்க முடியாதவற்றை இலங்கையில் கிடைக்கின்ற தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களின் அடிப்படையிலேயே சொல்ல முடிக்கின்றமை ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.” 

இனிவரும் கட்டுரையில் இலங்கையில் நாக எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றிய விபரங்களையும் அவை தொடர்பான வரலாற்று விடயங்களையும் மாவட்ட அடிப்படையில் விரிவாகப் பார்க்கலாம். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7878 பார்வைகள்

About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (11)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)