Arts
5 நிமிட வாசிப்பு

பிலிப் டி ஒலிவேராவும் யாழ்ப்பாண நகரமும்

February 11, 2021 | Ezhuna

யாழ் நகரம் அதன் வரலாற்றுக் காலத்தில், அதன் நிர்வாக எல்லைகளுக்கும் அப்பால் பரந்துள்ள பிரதேசங்கள் தொடர்பிலும் பல்வேறு பொருளாதார, அரசியல், நிர்வாக, பண்பாட்டு வகிபாகங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாண நகர வரலாறு, அதன் மரபுரிமை சார் அம்சங்கள், ஐரோப்பியர் ஆட்சியில் யாழ். நகரின் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களின் திரட்டுகள் என்பனவற்றை உரிய ஆதாரங்களோடு ‘யாழ்ப்பாண நகரம் 400’ என்ற இத்தொடர் முன்வைக்கின்றது. 400 ஆண்டுகால யாழ்ப்பாணத்தின் வரலாறு, பண்பாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சார்ந்த கட்டுரைகளை இத்தொடர் கொண்டமைந்துள்ளது.

1618 – 1622 காலப் பகுதியில் இலங்கையில் இருந்த போர்த்துக்கேயப் பகுதிகளுக்கான ஆளுனராகப் பதவி வகித்தவன் கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோஞ்ஞா (Constantino de Sá de Noronha) என்பவன். இலங்கையில் போர்த்துக்கேயரின் நலன்களை விரிவாக்குவதில் இவன் தீவிரமாக இருந்தான். இவனது திட்டங்களின் ஒரு பகுதியாக யாழ்ப்பாண இராச்சியத்துக்கு அனுப்பப்பட்டவனே பிலிப் டி ஒலிவேரா. யாழ்ப்பாண அரசனிடமிருந்து வரவேண்டியவற்றை அறவிடுவதற்காக என்ற போர்வையில் வந்தாலும், யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றுவதற்கும் அரசனைக் கைது செய்வதற்குமான எல்லா வசதிகளுடனுமே ஒலிவேரா வந்திருந்தான். ஒலிவேரா நல்லூரைத் தாக்கியதற்கான முழுப்பொறுப்பையும் யாழ்ப்பாண அரசன் மீது சுமத்துவதற்கே போர்த்துக்கேய யாழ்ப்பாண வரலாற்று எழுத்தாளர்கள் முயன்றிருக்கின்றனர். இது எதிர்பார்க்கக்கூடியதே. ஆனால், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண அரசனைப் பொறிக்குள் சிக்க வைத்தனர் என்றும் நம்புவதற்கு இடமுண்டு.

1619 இல் நல்லூர் கைப்பற்றப்பட்டிருந்தும், 1621 இலேயே எதிர்ப்புக்கள் முற்றாக இல்லாத நிலை ஏற்பட்டது. யாழ்ப்பாண இராச்சியப் பகுதிகளை நிர்வாகிக்கும் பொறுப்பும் ஒலிவேராவுக்கே வழங்கப்பட்டது. தலைமையிடத்தை நல்லூரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மாற்றியது, போர்த்துக்கேயரின் யாழ்ப்பாணக் கோட்டை அமைக்கப்பட்டது, அக்காலப் புதுமை மாதா தேவாலம் கட்டி முடிக்கப்பட்டது என்பவற்றுடன், யாழ்ப்பாண நகரத்தின் உருவாக்கமும், ஒலிவேராவின் நிர்வாகத்தின் கீழேயே இடம்பெற்றன.

ஒலிவேரா கட்டிய யாழ்ப்பாணக் கோட்டை

யாழ்ப்பாண வரலாறு தொடர்பாக எழுதிய போர்த்துக்கேய எழுத்தாளர்கள், குறிப்பாக மதகுருமார், போரின்போது ஒலிவேரா காட்டிய வீரத்தையும், அவனது நிர்வாகத் திறமையையும், மனிதாபிமானச் செயற்பாடுகளையும் மிகவும் புகழ்ந்துள்ளனர். வீரம், துணிவு, போர்களின்போது வாளைக் கையாளும் விதம் என்பவற்றுக்காக ஒலிவேரா, “வாளின் கடவுள்” என அழைக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாண இராச்சியம் தொடர்பாகப் போர்த்துக்கேய மதகுருமாரின் ஏறத்தாழ 75 ஆண்டுகாலக் கனவை நனவாக்கியவன் ஒலிவேராவே என்பதால் அவர்கள் அவ்வாறு அவனைப் புகழ்வதில் வியப்பேதும் இல்லை. யாழ்ப்பாண மக்கள் ஒலிவேராவை “பிலிப்பு ராஜா” என அழைத்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  எனினும், அக்கால உள்ளூர் மக்களின் உணர்வுகளையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தக்கூடிய சான்றுகள் எதுவும் இல்லாததால் இவர்களுடைய கூற்றுக்களைப் பக்கச் சார்பின்றி ஆராய்வதற்கு வழியில்லை. போர்த்துக்கேயரால் பெரிய கோயில் என அழைக்கப்பட்ட கந்தசுவாமி கோயில் உட்பட நல்லூரில் இருந்த சைவக் கோயில்கள் அனைத்தையும், யாழ்ப்பாணப் பகுதியில் இருந்த 500க்கு மேற்பட்ட சைவக் கோயில்களையும் அழித்ததற்குப் பொறுப்பானவன் என்ற வகையில் பெரும்பாலான உள்ளூர் மக்களிடம் அவனைப் பற்றிய நல்ல கருத்து இருந்திருக்கும் என்று கூற முடியாது.

அநாதைகள், வசதியற்றவர்கள் போன்றோரைப் பராமரிப்பதற்கான “மிசரிக்கோடியா” என்னும் கருணை நிறுவனத்தைத் தனது சொந்தப் பணத்தில் அமைத்துப் பேணியதற்காகவும் வைத்தியசாலையை அமைத்ததற்காகவும் ஒலிவேரா புகழப்படுவது உண்டு. ஆனாலும், இது படையினருக்கும், போர்த்துக்கேயக் குடியேறிகளுக்குமன்றி, உள்ளூர் மக்களுக்குப் பயன்பட்டதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை.

ஒலிவேரா சொந்த செலவில் கட்டிய ‘மிசரிக்கோடியா’ எனப்படும் கருணை இல்லம்

கத்தோலிக்க மதம் யாழ்ப்பாணத்தில் பரவுவதற்குத் தொடக்க காலத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்தவன் என்பதாலும், அம்மதத்தின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தவன் என்பதாலும், யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்க மக்கள் இன்றும் ஒலிவேரா மீது மதிப்பு வைத்திருப்பர் எனலாம். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய பிரான்சிஸ்கன் சபை, டொமினிக்கன் சபை, யேசு சபை ஆகிய கத்தோலிக்க மதப் பிரசார அமைப்புக்களுக்கு, ஒலிவேரா யாழ்ப்பாண நகரத்தில் வசதிகளைச் செய்து கொடுத்திருந்தான். 1614 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுப் பின்னர் போர்த்துக்கேயக் கோட்டைக்குள் அடங்கிய புதுமை மாதா தேவாலயத்தைக் கட்டி முடிப்பதற்கும், அதன் விரிவாக்கத்துக்கும் ஒலிவேரா செய்த உதவிகள் பற்றிக் குவைரோஸ் பாதிரியார் தனது நூலில் உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிவேராவின் மனிதாபிமானச் செயற்பாடுகளுக்கு, 1627 பெப்ரவரி 20 ஆம் தேதி யாழ்ப்பாணத்தைத் தாக்கிய பாரிய சூறாவளியின் போது அவன் செயற்பட்ட விதத்தைக் குவைரோஸ் போன்றோர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுவர். புயலினாலும், கடல் உட்புகுந்ததாலும், வீடுகளை இழந்த நகர மக்கள் கோட்டைக்குள் இருந்த புனித மாதா தேவாலயத்தில் தஞ்சம் அடைந்தபோது, தன் நலம் பாராது அவர்களுக்கு உதவிகளைச் செய்ததாகக் கூறப்படுகின்றது. ஒலிவேரா ஒரு தீவிர கத்தோலிக்க மதப் பற்றாளனாகவே இருந்துள்ளான். புயலினால் தேவாலயக் கூரையோடுகள் பறந்துவிட, ஒலிவேரா தனது மாளிகையின் ஓடுகளைக் கழற்றித் தேவாலயக் கூரையைத் திருத்தியதாகக் குவைரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

புயலின் போதும் அதன் பின்னரும் கடுமையாக உழைக்கவேண்டி இருந்ததனாற் போலும், நோய்வாய்ப்பட்ட ஒலிவேரா 1627 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தான். அவனுடைய உடல் புதுமை மாதா தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஓராண்டுக்குப் பின்னர் ஒலிவேராவின் மனைவியும், உறவினர்களும் அவனுடைய எலும்புகளை அங்கிருந்து கொழும்புக்கு எடுத்துச்சென்று அங்குள்ள புனித பிரான்சிஸ் மடத்தில் வைப்பதற்கு முயன்றபோதும் யாழ்ப்பாணத்தில் இருந்த மத குருமார் அதற்கு உடன்படவில்லை. பின்னர் ஒலிவேராவின் எலும்புகள் ஒரு சாடியில் இடப்பட்டு புதுமை மாதா தேவாலயத்தின் சிற்றாலயச் சுவரில் வைத்துக் கட்டப்பட்டது. அதன் மேல் பொருத்தப்பட்ட கற்பலகையில் பின்வரும் வாசகங்கள் பொறிக்கப்பட்டன.

“இந்த இராச்சியத்தைக் கைப்பற்றியவனும், அங்குள்ள எல்லாத் தேவாலயங்களையும் கட்டியவனும், கப்பித்தான்-மேஜரும், இராச்சியத்தின் ஆளுனனுமான பிலிப் டி ஒலிவேராவின் கல்லறை. மூன்று அரசர்களை வெற்றிகொண்டு இந்த இராச்சியத்தை அவன் ஆட்சி செய்தான். 1627 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாள், இவனது 53 ஆவது வயதில் மரணம் ஏற்பட்டது. இவன் இந்த இராச்சியத்தைவிட்டு அமைதியுடன் அவனது கர்த்தரிடத்தும், அரசனிடத்தும் சென்றான்.”

இந்தக் கல்லறையும் அதில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்களும், 1658 இல் இடம்பெற்ற ஒல்லாந்தரின் தாக்குதலின்போதோ அல்லது ஒல்லாந்தர், புதிய கோட்டை கட்டும்போது பழைய புனித மாதா கோயிலை இடித்தபோதோ அழிந்திருக்கலாம். யாழ்ப்பாண நகரத்தைத் தோற்றுவித்த ஒலிவேராவின் எலும்பு எச்சங்கள் யாழ்ப்பாண நகர மண்ணுடனேயே கலந்துவிட்டிருக்கும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4836 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (18)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)