Arts
26 நிமிட வாசிப்பு

உரிமைகள் மறுக்கப்படுதலும் வறுமையும்

January 24, 2023 | Ezhuna

மலையக சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினைகளையும், தோட்ட தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்தியதாக ‘மலையகம் : சமூக – பொருளாதார அரசியல் பரிமாணங்கள்’ இந்தத்தொடர் அமைகின்றது. அத்தோடு இந்தத்தொடர் மலையத்தில் தேயிலை கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகள், தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும்  வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைக்கின்றது.

பெருந்தோட்ட மக்களின் வறுமைநிலை

இலங்கைவாழ் இந்தியத்தமிழர்களுள் பெரும்பாலானோர் (60 – 65 வீதமானோர்) இன்றும் பெருந்தோட்டங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். எஞ்சியோர் நாட்டின் சில பிரதேசங்களில் செறிவாகவும், வேறுசிலவற்றில் பரவலாகவும் வாழுகின்றனர். தோட்டங்களுக்கு வெளியே வாழும் இவர்களைப் பின்வரும் ஆறு பிரிவுகளுக்குள் அடக்கலாம்:

  1. பெரியதும் சிறியதுமான வர்த்தகர்கள்
  2. அரச – தனியார் துறைத்தாபனங்களில் தொழில்புரிவோர்
  3. தொழில்சார் வல்லுநர்கள்
  4. அண்மைக்காலங்களில் தோட்டங்களைவிட்டு வெளியேறி கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் சில்லறைக்கடைகள், சிற்றுண்டிச்சாலைகள், உல்லாசப்பயண விடுதிகள் போன்றவற்றில் சிற்றூழியர்களாக வேலைசெய்வோர்
  5. நகர சுத்திகரிப்பு, வீட்டுவேலை போன்ற கீழ்மட்டத்தொழில் புரிவோர்
  6. சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோரை தோட்டங்களுக்கு வெளியே வாழும் பிரிவினராகக் கருதலாம்.

தோட்டங்களுக்கு வெளியே வாழும் இவர்களைப்பற்றிய நம்பகமான தரவுகள் மிக அரிதாகவே கிடைக்கக்கூடியதாக உள்ளது. மேலும் தோட்டங்களை விட்டு வெளியேறிய பலர் தமது பெற்றோர், மற்றும் நெருங்கிய உறவினர்கள் வாழும் தோட்டங்களிலேயே தமது வாக்குரிமையைப் பதிவுசெய்து கொண்டுள்ளதால் உத்தியோகபூர்வ சனத்தொகைக் கணிப்பீடுகளில் அவர்களும் தோட்டப்புறமக்களாகவே கணிக்கப்படுகின்றனர். இந்தச்சிறு கட்டுரையானது பெருந்தோட்டங்களில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களிடையே நிலவிவரும் வறுமைநிலை பற்றி ஆராயமுயலுகின்றது.

இலங்கைவாழ் இந்தியத் தமிழர்கள்

1946 இல் இந்நாட்டின் மொத்த சனத்தொகையில் 11.7 வீதமாக இருந்த இந்தியத்தமிழரின் சனத்தொகைப்பங்கு (DCS, 1946) 1981 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணிப்பீட்டில் 5.7 வீதம் என்றும் (DCS 1981), 2001ஆம் ஆண்டு சனத்தொகைக் கணிப்பீட்டில் 5.1 வீதமென்றும் காட்டப்பட்டுள்ளது. 2001 இல் தோட்ட அல்லது பெருந்தோட்ட மக்களின் சனத்தொகை 900,173 என்றும், அதில் 82.4 வீதமானோர் தமிழர்கள் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது (DCS 2001). இதே திணைக்களத்தின் 2011ஆம் ஆண்டிற்கான சனத்தொகைக் கணிப்பீட்டில் இந்திய வம்சாவழித் தமிழர் 872,323 பேர் என்றும், இது நாட்டின் மொத்த சனத்தொகையில் அண்ணளவாக 4.7 வீதமெனவும் காட்டப்பட்டுள்ளது (DCS 2011). இலங்கைவாழ் இந்தியத்தமிழர்களுள் ஒரு பகுதியினரே தோட்டத்தமிழர்கள் என்பதால் மேலே இறுதியாகக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அவர்களது பங்கு இதிலும் பார்க்கக் குறைவாகவே இருக்கும் என்பது கண்கூடு. மேற்படி சனத்தொகைக் கணிப்பீட்டுப் புள்ளிவிபரங்கள் மொத்த சனத்தொகையில் அவர்களது பங்கு தொடர்ந்துவந்த ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்து வந்துள்ளமையைக் காட்டுகின்றன. இவ்வீழ்ச்சிக்குப் பங்களித்த காரணிகளுள் பின்வருவன முக்கியமானவையாகும்:

i. இந்தியத்தமிழர்களுள் ஒரு பகுதியினர் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் கீழ் இந்தியாவிற்கு குடிப்பெயர்ந்து சென்றமை

Ii. சனத்தொகைக் கணிப்பீட்டில் இந்தியத்தமிழர்கள் பலர் தம்மை இலங்கைத்தமிழர்களாக பதிவு செய்துகொள்கின்றமை அல்லது சனத்தொகைக் கணிப்பீட்டாளர்கள் அவர்களது இனஅடையாளத்தை இலங்கைத்தமிழரென பிழையாகப் பதிவுசெய்தல். சுமார் 2 இலட்சம் பேர் இவ்வாறு தம்மை இலங்கைத் தமிழரென பதிவு செய்துகொண்டதாக 1981 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணிப்பீட்டு அறிக்கை குறிப்பிடுகின்றது. இது இக்காலப்பகுதியில் இலங்கையில் வாழ்ந்த இந்தியத்தமிழரின் மொத்த சனத்தொகையில் 25.0 வீதமாகும். இதையும் கவனத்தில் எடுப்போமாயின், 1981ஆம் ஆண்டு கணிப்பீட்டின்போது இந்தியத்தமிழரின் எண்ணிக்கை 1,238,800 ஆகவும், அவர்களது சனத்தொகைப்பங்கு 6.6 வீதமாகவும் இருந்திருக்கும். இந்தியத்தமிழரின் சனத்தொகையில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்த இக்காலப்பகுதியில் அவர்களது சமூக வகுப்புச்சேர்க்கை, சமூக அந்தஸ்து என்பவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவந்தன.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று, உத்தியோகபூர்வ சனத்தொகைக் கணிப்பீட்டில் இலங்கைவாழ் இந்தியரின் சனத்தொகைப்பங்கு படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதை மேற்படி புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. எனினும், இது பற்றிய ஆய்வினை மேற்கொண்ட இதே சமூகத்தைச் சேர்ந்த கல்விமான்கள் சிலர் இந்த உத்தியோகபூர்வ கணிப்பீடுகள் பற்றி அதிருப்தி வெளியிட்டுள்ளதோடு, இந்த நாட்டினது மொத்த சனத்தொகையில் 6.3 வீதத்திற்கும் சற்று அதிகமானோர் இச்சமூகத்தைச் சேர்ந்தவர்களென அறுதியிட்டுக் கூறுகின்றனர் (Chandrabose, 2001).

இலங்கையின் பெருந்தோட்டச் சமூகம்

தேயிலை-தோட்டங்களுக்கருகாமையில்-காணப்படும்-குடியிருப்புகள்

இலங்கையின் பெருந்தோட்டச் சமூகமானது நிறைவேற்றப்படாத பல மனிதத்தேவைகளையும், தரங்குன்றிய ஒரு வாழ்க்கைமுறையையும் கொண்டதாக சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இங்கு வாழ்ந்து வந்துள்ளது. நாட்டின் ஏனைய சமூகங்களிலிருந்து இச்சமூகத்தை தனிமைப்படுத்திவைத்த பல்வேறு வரலாற்றுரீதியான காரணங்களினாலேயே அது இந்தநிலைக்கு தள்ளப்பட்டது எனக்கூறின் அது மிகையாகாது. பல பெருந்தோட்டங்கள் நாட்டின் பிரதான தெருவமைப்புகளிலிருந்து தொலைதூரங்களில் மலைப்பாங்கான பிரதேசங்களில் அமைந்துள்ளதால் அங்கு வாழ்ந்துவரும் மக்கள் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டனர். வணிக அமைப்புக்களாக இருக்கும் இத்தோட்டங்களில் பெருமளவு தொழிலாளரும் அவர்களது குடும்பத்தாரும் வாழ்ந்துவரும் நிலையில் தோட்டங்களுக்குத் தேவையான தொழிலாளரின் கிரமமான வேலைவருகையை உறுதி செய்துகொள்வதற்காக தோட்டமுகாமைகள் தோட்ட எல்லைகளுக்குள்ளேயே அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின. எனவே, ஒவ்வொரு தோட்டமுகாமையும் தத்தமது தொழிலாளர்களுக்கு லயன்அறை வடிவிலான இருப்பிடவசதிகளையும், வாழ்க்கைக்குத் தேவையான வேறுபல அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தன. இந்த வசதிகள் பெரிதும் தரங்குன்றியனவாக இருந்தன என்பதை இங்கு சுட்டிக்காட்டாது விடமுடியாது. மேற்படி வசதிகளைச் செய்து கொடுப்பதன் மூலம் தோட்டமுகாமையாளர் இந்தமக்களது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைத் தமது நேரடிக்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக்கூடியதாக இருந்தது. பல தசாப்தங்களாக நீடித்துவந்த இவ்வித வாழ்க்கைமுறையின் காரணமாக தமது வாழ்க்கைத்தேவைகள் பலவற்றிற்கு இந்தமக்கள் தோட்டமுகாமையிலேயே தங்கியிருக்கும் ஒரு மனப்பாங்கை வளர்த்துக்கொண்டனர். இது ஏனைய சமூகங்களிலிருந்து அவர்களது தனிமைப்படுத்தலை மேலும் உறுதிப்படுத்துவதாக இருந்தது. அத்துடன், இவ்வித தனிமைப்படுத்தலும் தோட்டமுகாமையில் தங்கியிருக்கும் மனப்பாங்கும் இம்மக்கள் தம்மை முழுமையான ஒரு சமூகமாக வளர்த்துக்கொள்வதற்கு பெரும் தடையாக இருந்தன. அவர்களிடையே மிகமோசமான சமூக – கலாசார நிலையொன்று உருவாகுவதற்கும் அதுவே காரணமாயிற்று. மேலும், அவர்களது அரசியல் – பொருளாதார வறுமைநிலை காரணமாக நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் நாட்டில் ஏற்பட்டு வந்த சமூக-பொருளாதார அபிவிருத்தியின் ஒரு சில நன்மைகளை மட்டுமே அவர்கள் அனுபவிக்கக்கூடியதாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. பெருந்தோட்ட சமூகத்தின் வரலாற்றுரீதியான தனிமைப்படுத்தலானது 1949ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழி மக்களது குடியுரிமைச்சட்டத்தின் மூலம் அவர்களது குடியுரிமை பறிக்கப்பட்டபோது முழுமையடைந்தது. குடியுரிமை பறிக்கப்பட்டதால் அடுத்து வந்த நான்கு தசாப்தங்களுக்கு அவர்கள் தமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் அரசியல் அதிகாரத்தைப்பகிர்ந்து கொள்ளும் உரிமையையும் இழந்தனர். இதனால் தமது சொந்த விவகாரங்களிற் கூட தீர்மானங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போயிற்று. எண்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அவர்களுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கப்படும்வரை இந்தநிலை நீடித்துவந்தது.

இலங்கையில் வறுமையினது போக்குகள்

இலங்கையைப் பொறுத்தவரை, வறுமையானது கிராமியத்துறைசார்ந்த ஒரு பிரச்சினையாகவே கருதப்படுகின்றது. வறியமக்களுள் சுமார் 80 வீதமானோர் கிராமப்புறங்களில் வாழ்ந்துவருவதே இதற்கான காரணமாகும். கிராமப்புறங்களில் சிறுதுண்டுக்காணிகளில் விவசாயம் செய்துவரும் சிறுநில விவசாயிகளும் (இவர்களுக்கு விவசாயம் தவிர்ந்த வேறு வருமான மூலங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன), விவசாயத்தொழிலாளரும், பெரும்பாலான தோட்டத்தொழிலாளரும், மீனவசமூகத்தைச் சேர்ந்தவர்களுமே இந்த நாட்டின் வறியமக்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 1990 இற்கும் 2002 இற்குமிடையே தேசியமட்டத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்வோரின் எண்ணிக்கை 22 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது. தேசியமட்டத்தில் வறுமை வீழ்ச்சியடைந்தமைக்கு மாறாக இதேகாலப்பகுதியில் தோட்டத்தொழிலாளரிடையே அது 20.5 வீதத்திலிருந்து 38.4 வீதமாக 46 வீதத்தால் அதிகரித்தது. இந்த அதிகரிப்பின் பெரும்பகுதி 1990 இற்கும் 1995 / 96 இற்கும் இடையிலேயே ஏற்பட்டதுடன், 1995/96 இற்கும் 2002 இற்குமிடையே அது 9.1 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது. தோட்டத்துறை மக்களிடையே இந்தக் காலப்பகுதியில் வறிய குடும்பங்களின் எண்ணிக்கையும் 7.8 வீதத்தால் அதிகரித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புள்ளி விபரங்கள் சில கீழே உள்ள அட்டவணைகளில் காட்டப்பட்டுள்ளன (HIES, 2002). 2002 இற்கும் 2012/13 இற்குமிடையே தோட்டமக்களது வறுமைநிலையானது 10.9 வீதமாக 63.7 வீதத்தாலும், வறிய குடும்பங்களின் எண்ணிக்கை 73.3 வீதத்தாலும் வீழ்ச்சியடைந்தமையை பிந்திய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன (HIES, 2012/13). அவர்களது வறுமைநிலையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இப்பாரிய வீழ்ச்சி பற்றி நியாயமான ஐயப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய சமூகமான தோட்டமக்களிடையே மிகவும் குறுகிய காலத்தில் வறுமைநிலையில் இவ்வித பாரிய வீழ்ச்சி எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தோட்டத்துறை சேர்ந்த வீட்டுத்துறையினரை கீழ் நோக்கித்தள்ளுவதில் இரு காரணிகள் முன்னிலை வகிக்கின்றன.

அட்டவணை-1

ஏனைய துறைகளைச் சேர்ந்த மக்களோடு ஒப்பீட்டு ரீதியில் இலங்கையின் பெருந்தோட்ட மக்களே ஆகக்கூடிய வறுமைநிலையில் வாழ்கின்றனர் என்பதை மேற்படி புள்ளிவிபரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. உலகவங்கியின் அண்மைக்கால ஆய்வொன்று நாட்டில் தமிழ்மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களிலேயே மக்கள் வறுமையின் உச்சப்பிடியில் சிக்கி இருப்பதாகக் கூறுகின்றது (WB: February, 2016). போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களையும், மத்திய மாகாணத்தில் தோட்டமக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தையும், அதேபோன்று, ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தையும் அது குறிப்பிடுகின்றது. ஏனைய மாவட்டங்களில் 40 வீதமாக இருக்கும் 25 வயதுக்குக் குறைந்தோரின் பங்கு மேலேகூறிய தோட்டமக்கள் செறிந்துவாழும் இரு மாவட்டங்களிலும் 47 வீதமாக உள்ளது. தோட்டப்புற இளைஞர்களுக்கிடையிலும் படித்த பெண்களுக்கிடையிலும் உயர்ந்த வேலையின்மை காணப்படுகின்றது. மேலும் இம்மாவட்டங்களில் தாய் மரணவிகிதம் உயர்வாக இருக்கும் அதேவேளையில், 5.0 வயதிற்குக் குறைந்த பிள்ளைகளிடையே எடைகுறைவும், குழந்தை பெறுகின்ற வயதிலுள்ள பெண்களில் 1/3 பங்கினரிடையே மந்தபோஷணையும் காணப்படுகின்றது.

அட்டவணை-2

ஏனைய துறைகளோடு ஒப்பீட்டு ரீதியில் தோட்டத்துறையிலேயே மாதாந்த வீட்டுத்துறை செலவீடு ரூபா 29,379 குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது. நகர – கிராமியத்துறைகளில் இது முறையே ரூபா 58,930 ஆகவும், ரூபா 38,274 ஆகவும் உள்ளது. அதேவேளையில், மொத்த வீட்டுத்துறைச் செலவீட்டில் உணவு, பானங்கள் என்பவற்றிற்கான செலவீட்டின் பங்கு தோட்டத்துறையில் 48 வீதமாகவும், நகர – கிராமியத்துறைகளில் முறையே 30.7 வீதமாகவும், 39 வீதமாகவும் உள்ளது. மொத்த வீட்டுத்துறை செலவீட்டில் உணவிற்கான செலவீட்டின் பங்கு மறைமுகமாக ஒரு சமூகத்தின் அபிவிருத்தியைப் பிரதிபலிக்கும் எனக்கூறப்படுகின்றது. வீட்டுத்துறைச் செலவீட்டில் உணவு, பானங்கள் என்பவற்றிற்கான செலவீட்டின் பங்கு உயர்வாக இருக்குமாயின் அது அபிவிருத்தியில் அச்சமூகம் குறைந்த மட்டத்தில் உள்ளமையைக் குறிக்கும். உதாரணமாக, குறைந்த வீட்டுத்துறை வருமானத்தைக் கொண்ட தோட்டத்துறையில் உணவு, பானங்கள் என்பவற்றிற்கான செலவீட்டின் பங்கு உயர்வாக இருப்பதால் வாழ்க்கைத்தரத்தை நிர்ணயிக்கும் வீட்டுவசதி, கல்வி, போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம் போன்றவற்றிற்கான செலவீனங்கள் குறைவாக (52.0%) உள்ளன. நகர – கிராமியத்துறைகளில் வீட்டுத்துறைச் செலவீட்டில் வீட்டுவசதி, கல்வி, போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம் போன்றவற்றிற்கான செலவீட்டின் பங்கு முறையே 69.3 வீதமாகவும், 61 வீதமாகவும் உயர்ந்த மட்டத்தில் உள்ளது. மேலும், மொத்த வீட்டுத்துறை செலவீட்டில் உணவிற்கான செலவீட்டின் பங்கு உயர்வாக இருப்பதால் உணவுப் பண்டங்களின் விலைகள் உயரும்போது, வருமானம் அதற்கேற்ப அதிகரிக்கத்தவறுமாயின், அது அவர்களது வாழ்க்கைச் செலவையும் ஏற்கனவே கீழ்மட்டத்தில் இருக்கும் வாழ்க்கைத் தரத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.

அட்டவணை-3

இலங்கையில் வறுமையை ஏற்படுத்தும் காரணிகள்

இலங்கையில் வறுமையை ஏற்படுத்தும் காரணிகளாகப் பின்வருவன இனங்காணப்பட்டுள்ளன:

  1. சமூக-பொருளாதார உட்கட்டமைப்புகளில் காணப்படும் குறைபாடுகளும் அவற்றின் போதாத தன்மையும்
  2. போதிய வேலை வாய்புகள் இல்லாமை (இது குறிப்பாக, இளைஞர்களிடையே வேலையின்மையை ஏற்படுத்துகின்றது.)
  3. சமூகத்தின் பல்வேறு குழுவினர்கள் பொதுச்சேவைகளின் நன்மையைப் பெற முடியாதுள்ளமை (பெருந்தோட்டத்தொழிலாளர், பொதுவசதிகள் குறைவாக உள்ள எல்லைப்புறக்கிராமங்களில் வாழும் மக்கள், போரினால் பாதிக்கப்பட்டு தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளிலும், அகதிமுகாம்களிலும் தஞ்சம் புகுந்துள்ளோர் என்போரை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.)
  4. தரங்குன்றிய கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை சேவைகள் என்பன காணப்படுதல் (நாட்டில் ஏனைய துறைகளிலும் பார்க்க தோட்டப்புறங்களிலேயே மேலே குறிப்பிட்ட வசதிகள் குறைவாகவும், தரங்குன்றியனவாகவும் உள்ளன. எனவே, தோட்டப்புற மக்களே இதனால் ஆகக்கூடிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடையே உயர்ந்த வறுமைநிலை காணப்படுவதற்கு இவை கணிசமானளவு பங்களிக்கின்றன)
  5. நாட்டில் வறுமை நிலையைக் குறைப்பதில் அரசாங்கத்தின் பொதுநலச்சேவைகளும், சமூகநலன் திட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு காரணங்களினால் தோட்டப்புறமக்கள் இவற்றின் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியாததனாலேயே அவர்களிடையே வறுமைநிலை உயர்ந்து காணப்படுகின்றது. குறைவான வீட்டுத்துறை வருமானம் காரணமாக தோட்டத்துறையில் சமுர்த்தித் திட்டத்தின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வோரது விகிதாசாரம் உயர்வாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கலாம். ஆனால் இவர்களுள் 7 வீதமான மக்கள் மட்டுமே அரசாங்க வறுமை ஒழிப்புத் திட்டமான சமுர்த்தித்திட்டத்தின் நன்மைகளைப் பெறக்கூடியதாக உள்ளமையை இங்கு குறிப்பிடலாம். கிராம – நகரத்துறைகளில் இது முறையே 30.3 வீதமாகவும், 10.0 வீதமாகவும் உள்ளது (HIES, 2002).

சமுர்த்தி உதவித்திட்டத்தில் வறுமைநிலையினை மதிப்பீடு செய்வதற்கு மாதாந்தக் குடும்ப வருமானம் என்ற ஒரேயொரு காரணியே கவனத்தில் கொள்ளப்படுகின்றது. வறுமையின் தன்மையானது சிக்கல் நிறைந்தது என்பதால் அதனை வருமானம் / நுகர்வு என்ற தனியொரு மாதிரியினைக் கையாண்டு அளவிடுதல் வறுமையோடு தொடர்புபட்ட முக்கிய சில விடயங்களை கவனத்தில் எடுப்பதில் தோல்வியடைகின்றது. வறுமையை விளங்கிக்கொள்வதில் வருமானம் / நுகர்வு மையக்கருத்தாக இருந்தபோதிலும், வறுமையின் ஏனைய அம்சங்களான சுகநலன், கல்வி, தனிமனித இயல்புகள் என்பனவும் முக்கியம் வாய்ந்தனவாகும். வருமானத்தின் போதுமான தன்மை என்ற குறுகிய கருத்தில்கூட தோட்டமக்களிடையே வறுமையின் தாக்கம் அதிகரித்தது.

பல்வேறு காரணிகளால் தோட்டமக்களின் வறுமைநிலையை மதிப்பீடு செய்வதற்கு வருமானத்தை மட்டும் போதுமானதொரு காரணியாகக் கருதமுடியாதுள்ளது. ஏனெனில், அவர்களது வறுமையானது வருமானம் சார்ந்த ஒரு வறுமையாக மட்டுமன்றி, தமது மனித அபிவிருத்தியை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்புகள் இல்லாததால் ஏற்படும் ஒரு வறுமையாகவும் உள்ளது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். பொருளியல் நூல்களில் இது “பொருளாதாரம் சாராத வறுமை” (Non – Economic Poverty) என்றும், “மானுடம் சார்ந்த வறுமை” (Human Poverty) என்றும் கூறப்படுகின்றது. வறுமையை நிர்ணயிப்பதில் பொருள்சார்ந்த காரணிகளோடு பொருள்சாராத காரணிகள் சிலவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தவகையில் மனிதனது அடிப்படைத்தேவைகளை இரு வேறு பிரிவுகளுக்குள் அடக்கலாம்: அவற்றுள் முதலாவது, மக்கள் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதனவாக இருக்கும் போதுமான அளவு உணவு, தேவையான போசாக்கு, சுகாதார-மருத்துவ-இருப்பிடவசதிகள், தூயகுடிநீர் வசதி, பாதுகாப்பான எரிபொருட்களின் கிடைக்குந்தன்மை போன்றவற்றை உள்ளடக்கும். இவை மனிதனது அடிப்படை பௌதீகத் தேவைகள் என்றும், மற்றையது, மனிதனது சமூக – கலாசார தேவைகள் என்றும் கூறப்படும். சமூக – கலாசாரத் தேவைகளைத் தொட்டுணரமுடியாத தேவைகளென்றும் கூறுவர். ஆரம்பக்கல்விக்கான வசதிகள் உட்பட ஒருவனுக்கு அரசியலில் பங்குபற்றுவதற்கான வாய்புகள் இருப்பதோடு, மனித சுதந்திரங்கள், சமூகப்பாதுகாப்பு, சுயகௌரவம், சிறந்த வேலை நிலைமைகளை அனுபவிப்பதற்கான உத்தரவாதம் என்பனவும் காணப்படுவது இதிலடங்கும்.

வறுமைக்கு இரண்டு முக்கிய கூறுகள் உள்ளதாக பிரயன் நோலானும் ( Brain Nolan) கிறிஸ்டோபர் வெலனும் ( Christopher Welan) கூறுவது இங்கு நினைவுகூரத்தக்கது. இவற்றுள் முதலாவது சமூகச் செயற்பாடுகளில் பங்கேற்பதற்கு ஒருவனுக்கு போதிய பொருள்சார்ந்ததும் சமூக – கலாசாரம் சார்ந்ததுமான சாதனங்கள் வரையறுக்கப்பட்டதாக அல்லது பற்றாக்குறையாகக் காணப்படுவதால் ஏற்படும் வறுமையாகும். சாதனங்கள் போதுமான அளவு இல்லாததால் ஏற்படும் வறுமையை அளவிடுவதற்கு வருமானம் ஒரு முக்கிய அளவையீடாக கையாளப்படுவது நியாயமானதே. இதற்கு சமாந்தரமாக வருமானம்சாராத வேறு பல காரணிகளும் வறுமைக்குக் காரணமாக உள்ளன. தரமான கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வசதி-வாய்ப்புகள் இல்லாதிருத்தல் அல்லது அவை போதுமானவையாக இல்லாதிருத்தல், உடல்நலக் குறைபாடுகளும் அவற்றிற்கான சுகாதார – மருத்துவ வசதிகளை போதுமான அளவிற்கு பெற்றுக்கொள்ள இயலாமையும், போதிய வீட்டுவசதியின்மை, ஊழியச்சந்தையில் பங்குபற்ற முடியாதநிலை காணப்படுதல் போன்றவற்றை இங்குக் குறிப்பிடலாம். வறுமையை ஏற்படுத்துவதில் சாதனங்கள்சார்ந்த காரணிகளிலும் பார்க்க இவை பரந்த தாக்கத்தைக் கொண்டனவாகும். வறுமையைப்பற்றி ஆராய்வதில் இப்பொழுது ஐரோப்பிய நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் சோவியத் யூனியனிலும் கூட மேலே குறிப்பிட்ட வருமானம்சாராத காரணிகள் பரவலாகக் கையாளப்படுவதாக பிரயன் நோலானும் கிறிஸ்டோபர் வெலனும் கூறுகின்றனர். வறுமை மட்டத்தினை அளவிடுவதற்கு சாதனங்கள் மையக்கூறுகளாக இருந்தபோதும், மேலே குறிப்பிட்ட நிதிசாராத விடயங்களும் பெரிதும் பங்களிக்கின்றன என்ற கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றேயாகும்.

ஒரு சமூகத்தினது வறுமை மட்டத்தினை அளவிடுவதற்கு அச்சமூகத்தினது வாழ்வாதாரங்கள், வருமானம், வாழ்க்கை நிலைமைகள், சேவைகளின் வழங்களும் அச் சேவைகளின் நன்மைகளை மக்கள் அடைந்து கொள்வதற்கான வாய்ப்புக்களும், நிர்வாகக் கட்டமைப்பு போன்றனவும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இந்த அனைத்து மாறிகளினது அடிப்படையிலுமே பெருந்தோட்டச்சமூகம் ஒரு வறியசமூகமாகும். எனவே தோட்டமக்களது வறுமையை அளவிடுவதற்கு மாதாந்த வருமானத்திற்கு அப்பாற்சென்று வேறு பல அம்சங்களையும் கவனத்திற்கொள்ள வேண்டும் (UN, 1995). ஆனால், சமுர்த்தி உதவியானது மாதாந்த குடும்பவருமானம் என்ற ஒரேயொரு காரணியை மட்டும் அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படுகின்றது. தோட்டத்துறையைச் சேர்ந்த குடும்பங்களுட் பெரும்பாலானவை சமுர்த்தி உதவியைப்பெற முடியாமைக்கு இதுவே முக்கிய காரணமாகும்.

தோட்டத் தமிழ்மக்களிடையே வறுமைநிலை

காட்மோர்-தோட்டத்தின்-லயன்-அறைகள்

வறுமையினது தன்மை சிக்கல் நிறைந்ததாக இருப்பதால் அதனை வருமானம்/நுகர்வு என்ற தனியொரு மாறியினைக்கொண்டு அளவிடுவது அதன் முக்கிய சில பண்புகளை கவனத்தில் எடுக்கத்தவறுகின்றது. கல்வியில் பின்தங்கி இருக்கும் தோட்டத்தொழிலாளரின் வறுமைநிலைக்கு பல்வேறு காரணிகள் பங்களிக்கின்றன. இவையனைத்தையுமே இந்தச்சிறு கட்டுரையில் விரிவாக ஆராய்வது இயலாத காரியமாகும். எனவே, முக்கிய காரணிகள் சில மட்டுமே இங்கு சுருக்கமாக ஆராயப்பட்டுள்ளன:

  • தனிநபர் ஒருவருக்கோ, ஒரு குடும்பத்திற்கோ ஆகக்குறைந்த சீவனமட்டத்திலாவது வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு அவர்களது வருமானம் போதாதிருக்கும் நிலையிலேயே அவர்கள் வறுமைநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தோட்டத்தொழிலாளரது நாளாந்த வேதனங்கள் குறைவானவை என்பதை இங்கு வலியுறுத்திக் கூறத்தேவையில்லை. தோட்டத் தொழிலாளர்கள் தமது உடல்உழைப்பை நாளாந்த வேதனத்திற்கு விற்பவர்களாவர். அவர்களது நாளாந்த வேதனங்கள் முழுஅடிப்படையிலும் சார்புஅடிப்படையிலும் குறைவானவையாகும். அவர்களது மாதாந்தவருமானம் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் வேலைநாட்களின் அடிப்படையிலும், அவ்வாறு வேலை வழங்கப்படும் நாட்களில் உண்மையிலேயே அவர்கள் வேலைக்கு சமுகமளிக்கும் நாட்களின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படும். இவை இரண்டுமே மாதத்திற்கு மாதம் தளம்புவதால் அவர்களது மாதாந்த வருமானம் உறுதியற்றதாக இருக்கும். எனினும், ஒரு குடும்பத்தில் ஒன்றிற்கு மேற்பட்டோர் தோட்டங்களிலேயே வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதால் அவர்களது குடும்பவருமானம் ஓரளவு உயர்வாக இருக்கின்றது. நாட்டின் ஏனைய துறைகளைச் சார்ந்தோரின் குடும்பவருமானங்களோடு ஒப்பீட்டுரீதியில் இது குறைவாக இருந்தபோதும், வருமானத்தின் அடிப்படையில் அவர்கள் முழு வறுமைநிலையில் (Absolute Poverty) இல்லையெனப் பல ஆய்வுகள் காட்டுகின்றன. வருமானத்தின் அடிப்படையில் அவர்களிடையே வறுமை குறைவாக இருப்பதற்கு அவர்களது சுகநலனை மேம்படுத்தும் எவ்வித விசேடஏற்பாடுகளோ, பாதுகாப்பு வலையமைப்புகளோ காரணமாக இராது, கிரமமான, வருமானத்தைத்தரும் தோட்டத்துறை வேலைவாய்ப்புகளே காரணமாக உள்ளன என்பதை இங்கு வலியுறுத்திக் கூறவேண்டியது அவசியமாகும். இம்மக்கள் வாழுகின்ற கஷ்டமான இயற்கைச்சூழல், வேலைநிலைமைகள் என்பன காரணமாக அவர்களுக்கு அதிக சக்தி தேவைப்படுகின்றது என்பது வருமானக் கணிப்பீடுகளில் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்பதும், வாழ்க்கைத்தரத்தைப் பொறுத்தமட்டில் தோட்டத்துறையே மிகமோசமான நிலையில் உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கன.
கேகாலை-தோத்தல்ஓயா-தோட்டப்பாதை
  • வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள், சாதனங்கள், என்பன கிடைக்கக்கூடியதாக இருத்தல், வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுதல் என்பன ஒருபுறம் இருக்க அவ்வாறு கிடைக்கும் சாதனங்களையும் வாய்ப்புகளையும் கையாண்டு வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கு மக்களிடம் எவ்வித இயலுமைகளும் ஆற்றல்களும் (Capabilities) உள்ளன என்பது முக்கியமானதாகும். ஒரு தனிமனிதனின் இயலுமைகளையும் ஆற்றல்களையும் அவன் வாழுகின்ற சமூகச்சூழல், இயற்கைச்சூழல், அவனது தனிமனிதப்பண்புகள் (கல்வியறிவு, சிந்தனாசக்தி, செயலாற்றல்) என்பனவே நிர்ணயிப்பதாகக் கூறப்படுகின்றது. முன்னேற்றத்திற்கான பல்வேறு வாய்ப்புகள் காணப்பட்டாலும் ஒரு தனிமனிதன் தான் வாழுகின்ற சமூகச்சூழல், இயற்கைச்சூழல் என்பன காரணமாக அவ்வாய்ப்புகளைப் பயன்படுத்தி அவற்றின் நன்மைகளைப் பெறமுடியாதநிலை காணப்படலாம். உதாரணமாக, தோட்டங்கள் தெருவமைப்புக்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாலும், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததாலும், மொழிப்பிரச்சினைகளினாலும் (பெரும்பாலான தோட்டத்தமிழ் மக்கள் தமிழ்மொழியில் மட்டுமே பரிச்சயமானவர்களாவர்), தோட்டங்களில் தொழில்புரிவது ஏனையோரால் சமூகரீதியாக கௌரவமான ஒரு தொழிலாக ஏற்றுக் கொள்ளப்படாததனாலும் கல்வி, சுகாதாரம், மருத்துவம் என்பவற்றிற்கான வசதிகள் ஓரளவு கிடைக்கக் கூடியதாக இருந்துங்கூட, அவற்றைப் பயன்படுத்தி அவற்றின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதில் தோட்டத்தொழிலாளர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். அவர்களிடையே இறப்பு விகிதங்கள் உயர்வாக இருப்பதற்கும், கல்வியடைவுகள் குறைவாக இருப்பதற்கும் இவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அத்துடன், குடும்பச்சூழலும் அவர்கள் வாழுகின்ற சமூகச்சூழலும் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளன. தோட்டச்சூழலானது நாட்டில் இடம்பெறும் அபிவிருத்திச் செய்முறையினின்றும் அவர்களை தனிமைப்படுத்துகின்றது. பெற்றோரின் வறுமைநிலையும் கல்வியறிவின்மையும் பிள்ளைகளின் கல்வியைப் பாதிக்கின்றன. பல்கலைக்கழக அனுமதி பெற்ற மலையக மாணவர்கள் சிலர் கடந்த காலங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்ளாமல் விட்டதற்கும், வேறு சிலர் அதனை இடைநடுவில் கைவிட்டதற்கும் பெற்றோரின் வறுமைநிலை காரணமாக இருந்துள்ளது. மேலும், சமூகச்சூழல் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பதில்லை. ஓரளவு கல்விகற்ற தோட்டஇளைஞர்களுக்கு வேலைவாய்புகள் இல்லாது இருப்பது ஏனையோர் சிறந்த கல்விஅடைவுகளைப் பெறுவதற்கு தூண்டுகோல் அளிக்கத் தவறுகின்றது. சிறந்த கல்வியை பெற்றுக்கொள்வதில் வடக்கு-கிழக்கைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களிடையே காணப்படும் போட்டிமனப்பான்மையும் ஆர்வமும் மலையக இளைஞர்-யுவதிகளிடையே இல்லாதிருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். மேலே கூறிய அனைத்துமே அவர்களது இயலுமைகளைப் பாதிப்பதன் மூலம் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதோடு, அவர்களது வறுமைநிலைக்கும் பங்களிக்கின்றன.
கேகாலை-தோத்தல்ஓயா-தோட்டத்தின்-லயன்-அறைகள்
  • மனிதஉரிமைகள் மீறப்படும்போது அது மக்களிடையே உற்பத்திக் காரணிகளை பெற்றுக்கொள்ள முடியாதநிலை, அதனாலேற்படும் குறைந்தமட்ட வருமானம், கல்வியையும் சுகாதார சேவைகளையும் முறையாக பெற்றுக்கொள்ள முடியாதநிலை போன்றன பல்வேறுபட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தி வறுமையைத் தோற்றுவிக்கின்றன. 1948 ஆம் ஆண்டு முதல் தோட்டத்தொழிலாளர் உட்பட இலங்கைவாழ் இந்தியத்தமிழருக்கு இந்நாட்டில் குடியுரிமை மறுக்கப்பட்டிருந்தமை அவர்களது முன்னேற்றத்தைப் பெரிதும் பாதித்தது. வாக்குரிமை, கல்வி, தொழில் என்பவற்றுக்கான வாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்தல், காணியுரிமை என்பவற்றைப் பாதிப்பதன் மூலம் இது அவர்களது முன்னேற்றத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. வரலாற்றுரீதியாக அந்தமக்களிடையே காணப்பட்டு வந்த வறுமைநிலை தொடர்ந்தும் நீடிப்பதற்கு இது முக்கிய பங்களித்தது எனலாம்.
  • வறுமையை வரைவிலக்கணப்படுத்துவதற்கும் அதனை அளவிடுவதற்கும் அது சம்பந்தமான ஆக்கங்களில் பல்வேறு அணுகுமுறைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் அண்மைக்காலத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் ஒன்று பொருளியலில் நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளியல் அறிஞர் அமார்த்யா சென் (Amartiya Sen) அவர்களின் “இயலுமை ஆற்றல்”அணுகுமுறையாகும் (Capabilities Approach). ஒருவனிடம் இருக்கும் இயலுமை ஆற்றலே அவனது வறுமைநிலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாகும் என அது கூறுகின்றது. இயலுமை ஆற்றல் ஒருவனுக்கு இருக்குமாயின் அவன் தான் விரும்பும் ஒரு வாழ்க்கைமுறையினை அமைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இவ்வித ஆற்றல் இல்லாதோரே வறுமைநிலைக்கு உள்ளாகின்றனர். நல்ல போசாக்கினைப் பெற்றுக்கொள்தல், உடுப்பதற்குத் தேவையான ஆடைகளும் இருப்பிடவசதிகளும் இருத்தல், தவிர்க்கக்கூடிய மரணங்களை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருத்தல், ஒருவன் அறிவுள்ளவனாகவும், இனப்பெருக்க ஆற்றல் உள்ளவனாகவும் இருத்தல், ஒருவனுக்குத் தனிமனித பாதுகாப்பு இருப்பதோடு, சமூகவாழ்க்கையில் சுதந்திரமாகவும் முனைப்புடனும் பங்குபற்றும் வாய்ப்பு இருத்தல் போன்றனவே ஒருவனது இயலுமை ஆற்றலை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாகும். சிறந்த வாழ்க்கைமுறை ஒன்றினை அமைத்துக் கொள்வதற்கு ஆகக்குறைந்த அளவிலாவது இவை இல்லாதிருப்பின் ஒருவன் வறுமைநிலைக்குத் தள்ளப்படுவான் என இது கூறுகின்றது. இப்படியானதொரு நிலைமையிலேயே தோட்டத்தமிழ்மக்கள் வாழுகின்றனர்.
  • ஐக்கிய நாடுகள் தாபனத்தின் அறிக்கையொன்று (1995) வறுமையைப் பின்வருமாறு விளக்குகின்றது “வறுமையானது பல்பரிமாணங்களைக் கொண்ட ஒன்றாகும். நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைத்தரத்தினை உறுதிசெய்து கொள்வதற்குப் போதுமான வருமானமும் உற்பத்தித்திறன் கொண்ட சாதனங்களும் இல்லாதிருத்தல், பசியும் போசாக்கின்மையும் காணப்படுதல், கல்வியையும் வேறு அடிப்படைத்தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியாதநிலை காணப்படுதல், நோய்வாய்ப்படுதலும் அதனாலேற்படும் உயிரிழப்பும், வீடின்மை அல்லது போதுமான இருப்பிட வசதியின்மை, பாதுகாப்பற்ற சூழல் காணப்படுதல் போன்றவற்றோடு சமூகரீதியான பாரபட்சங்களுக்கு உள்ளாதல், அல்லது ஒதுக்கிவைக்கப்படுதல்” என்பனவும் வறுமையை ஏற்படுத்தும் காரணிகளென அது கூறுகின்றது. ஒரு சமூகத்தின் கணிசமான பகுதியினர் வசதியற்ற நிலைக்குத் தள்ளப்படுதல், சமூக வாழ்க்கையில் அவர்கள் பங்கு பற்றமுடியாத நிலையினை ஏற்படுத்தல் என்பன சமூகரீதியாக ஒதுக்கி வைக்கப்படுதலைக் குறிக்கும். தோட்டத்தமிழ் மக்கள் இந்நாட்டில் காலடி பதித்த காலந்தொட்டே இவற்றின் மோசமான தாக்கத்திற்கு உட்பட்டு வந்துள்ளனர். ஒரு சமூகம் ஒதுக்கி வைக்கப்படுவது சமூக-பொருளாதார-அரசியல் போன்ற பல்வேறு மட்டங்களில் ஏற்படலாம். தோட்டமக்களைப் பொறுத்தவரை இந்த எல்லாமட்டங்களிலுமே அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.

i). அந்தமக்கள் இவ்வாறு ஒதுக்கிவைக்கப்பட்டமை அவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்குப் போதுமான வருமானத்தையும் மூலதன சாதனங்களையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையினை ஏற்படுத்திற்று

ii). அவர்களுக்கு அடிப்படைச்சேவைகள் கிடைக்காத நிலையையோ அல்லது கிடைக்கும் சேவைகள் தரங்குன்றியனவாக உள்ள நிலையையோ அது ஏற்படுத்திற்று

iii). பொதுச்சேவைகளின் நன்மைகள் போதிய அளவிற்கு அவர்களைச் சென்றடையவில்லை

iv). அரசாங்கத் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அரசியல் அனுசரணையும் அவர்களுக்குக் கிடைக்காது போயிற்று. மேலும், இனம், பிறந்தஇடம் என்பவற்றின் அடிப்படையில் அவர்களுக்கெதிராக பாரபட்சம் காட்டப்படுவதாகவும் கூறப்படுகின்றது

ஆரம்பக் காலந்தொட்டே தோட்டத்தமிழ் மக்கள் போதுமான வருமானம் இன்மை, தமது தனிமனித இயலுமைகளையும் ஆற்றல்களையும் மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பின்மை, மனிதஉரிமைகள் மறுக்கப்படுதல், தனிமைப்படுத்தப்படுதலும் ஒதுக்கி வைக்கப்படுதலும் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்தனர். ஏனைய சமூகங்களிலிருந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதோடு, உள்ளூராட்சியில் பங்குபற்றுவதினின்றும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். சுதந்திரத்திற்கு முந்திய காலப்பகுதியில் வேற்றுநாடொன்றிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்ற வகையில் உள்ளூராட்சியில் பங்குபற்றும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் அவர்களது குடியுரிமை பறிக்கப்பட்டதன் மூலம் உள்ளூராட்சியிலும் மத்திய அரசிலும் பங்குபற்றும் உரிமையை அவர்கள் இழக்க நேரிட்டது. குடியுரிமை நீக்கப்பட்டமை அவர்களது தனிமைப்படுத்தலுக்கு மேலும் வலுவூட்டியதோடு, தனிமைப்படுத்தலும் பூரணத்துவம் பெற்றது.

1987ஆம் ஆண்டு பிரதேசபைச் சட்டத்தின்கீழ் அரசநிர்வாகம் பிரதேச மட்டங்களுக்கு பன்முகப்படுத்தப்பட்டுள்ள நிலையிலுங்கூட, இம்மக்கள் உள்ளூராட்சியில் பங்கேற்க முடியாதநிலையும் அதன் நன்மைகளை அனுபவிக்க முடியாதநிலையும் காணப்பட்டது. மேலே கூறியவாறு சமூகவாழ்க்கையில் பங்குபற்றுவதினின்றும் பல்வேறுவழிகளில் அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுப்பட்டனர். 2014ஆம் ஆண்டு பிரதேசசபை திருத்தச் சட்டத்தின் பின்னரே இதில் மாற்றம் ஏற்பட்டது. சில விடயங்களில் அவர்கள் இன்றும் ஒதுக்கி வைக்கப்பட்டே வருகின்றனர். மேற்படிக் காரணங்களினால் நாட்டின் ஏனைய சமூகங்களோடு ஒப்பீட்டுரீதியில் அவர்கள் பின்தங்கிய நிலையிலுள்ளனர்.

தோட்டமக்களின் சமூக – பொருளாதார நிலையைப்பற்றி ஆராய்வதற்கென 1992ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் பின்வரும் விடயங்களில் அவர்கள் பின்தங்கி இருப்பதாகக் கூறுகின்றது:

  • குடியுரிமை
  • தொழில் வாய்ப்புகள்
  • கல்வி
  • தொழிற்பயிற்சி
  • வீட்டுவசதியும் சுகாதாரமும்
  • சமூகநலன் பேணல்
  • மின்சார வசதி
  • தொடர்பாடல் வசதிகள்
  • சமூக-கலாச்சார மேம்பாடு
  • விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றிற்கான வசதிகள்

பிரதான தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகள்

காணிப்பங்கீட்டில் அவர்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாரபட்சங்கள், தனிமனிதரதும் சமூகத்தினதும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் என்பவற்றையும் இதில் நாம் சேர்த்துக் கொள்ளலாம். தேயிலைத்தோட்டங்களில் காலத்திற்குக்காலம் எல்லைக்காணிகள் சுவீகரிக்கப்பட்டு குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் தோட்டமக்களுக்கு காணித்துண்டுகள் வழங்கப்படுவதில்லை. மேலும் தோட்டக்காணிகளிருந்து தோட்டமக்களை அப்புறப்படுத்தி வேறு தேவைகளுக்காக அந்தக்காணிகள் சுவீகரிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களும் உண்டு. இவ்வித நடவடிக்கைகளும் அவர்களது வறுமைநிலையினை மோசமடையச் செய்கின்றன. 1977ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தமக்கள் உடல்ரீதியான தாக்குதல்களுக்கும் உட்பட்டு வந்துள்ளனர். இவ்வாறான தாக்குதலை நடத்துவோருக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. நாட்டின் தென்பகுதியில் இவ்வித தாக்குதல்கள் இன்றும் இடம்பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

தகவல், தொடர்பாடல் என்பன சார்ந்த தொழில்நுட்பப் புரட்சியினால் துரிதமாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் நாட்டின் ஏனைய சமூகங்கள் அவற்றின் நன்மைகளைப் பெற்று தாமும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் தோட்டமக்களை இவை இன்னும் சென்றடையவில்லை. இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் செயற்பாடுகளின் கீழ் இவ்விடைவெளியைப் போக்குவதற்கு மிக நீண்டகாலம் தேவைப்படலாம். உதாரணமாக, கல்வியில் பின்தங்கி இருக்கும் தோட்டமக்கள் ஆரம்பக்கல்வியிலாவது முன்னேற்றமடைவதற்கு சுமார் இரு தசாப்தங்கள் தேவைப்பட்டன. பாடசாலைகளுக்கு பிள்ளைகளைச்சேர்த்தல், ஆரம்பக்கல்வியை நிறைவுசெய்தல் என்பவற்றில் இன்று அவர்களிடையே கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இடைநிலைக் கல்வியிலும் மூன்றாம் நிலைக்கல்வியிலும் இந்த நிலையை அடைவதற்கு மேலும் பல தசாப்தங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்நிலையில் கருத்தடையில் மட்டுமே பெருந்தோட்டச் சமூகம் ஏனைய சமூகங்களிலும் பார்க்க முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் விளைவுகளை இச்சமூகம் இன்னும் சில ஆண்டுகளில் உணரக்கூடியதாகவிருக்கும்.

பெருந்தோட்டங்களோடு அவர்களைப் பிணைக்கும், வதியும் ஊழியமுறையானது அவர்களிடையே தாம் ஒரு ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகம் என்ற உணர்வினை ஏற்படுத்துகின்றது (WB, 2004). தோட்டச் சமூகத்தினை நாட்டின் தேசிய நீரோட்டத்தோடு இணைத்துக் கொள்வதற்கான சிறந்தவழி இந்த வதியும் ஊழியமுறையினின்று அவர்களை விடுவிப்பதேயாகும். அத்துடன் இம்மக்களுக்கு கல்வி, தொழில்வாய்ப்புகள் என்பவற்றில் ஏதோ ஒரு விதத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவதும் இன்றியமையாதது. இதனை உறுதிசெய்துகொள்வது மலையகத் தலைமைகளின் தலையாய கடமையும் தவிர்க்கமுடியாத பொறுப்புமாகும்.

References


• Amartya, Sen. (1999). Development as Freedom. New York: Oxford University
Press.
• Brian Nolan., and Christopher W}elan. (2010). Using Non-Monetary Deprivation Indicators to Analyses Poverty and Social Exclusion: Lessons from Europe. Journal of Policy Analysis and Management. 27 (2): 305.
• Chandrabose, A.S. (2001). இலங்கையின் இனப்பரம்பல்: கூட்டாட்சி பரிமாணங்களும் இலங்கை சிறுபான்மையிரும். கொழும்பு: சமூக நிலைமாற்ற நிறுவனம்; (FCT), pp. 83-.115.
• Population and Housing Survey, (1946, 1981, 2001, 2011). Colombo: DCS.
• Consumer Finance Survey and Socio-Economic Statistics, (2004). Colombo: DCS.
• Household Income-Expenditure Survey Report, (1995/6, 2002, 2009 and
2012/13). Colombo: DCS.
• Sri Lanka, Presidential Commission to Investigate the Socio-Statistical of the Plantation
Tamil Community, 1992.
• United Nations, (1995). Report of the World Summit on Social Development. Washington. UN.
• World Bank Group. (2005 Dec). Moving out of Poverty in the Estate Sector in Sri Lanka: Understanding Growth and Freedom from the bottom up. Colombo: Sri Lanka.
• Wolrd Bank. (2016 Feb). Sri Lanka Poverty Assessment, Press Release.

குறிப்பு : 2015 இற்கு முன் எடுக்க்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்ட ஆய்வு.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11622 பார்வைகள்

About the Author

முத்துவடிவு சின்னத்தம்பி

முத்துவடிவு சின்னத்தம்பி அவர்கள் 1965ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்று அதே பீடத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகினார். 1969இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணிப் பட்டத்தைப்பெற்றார்.

1993ஆம் ஆண்டு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற முத்துவடிவு சின்னத்தம்பி 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை அலங்கரித்த மலையகத்தின் முதலாவது பேராசிரியர் என்ற சிறப்புக்குரியவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)