Arts
16 நிமிட வாசிப்பு

இலங்கை – சீன ஒப்பந்தங்கள்

June 6, 2023 | Ezhuna

 ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உருத்து என்பவை தொடர்பிலும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசவுள்ளது.

ஒரு பக்கம் இந்தியக் கடற்கொள்ளை மக்களைப் பட்டினியில் வாட்ட, சீனத் திருடர்கள் இலங்கையின் வடமேற்குக் கரையின் வளங்களைக் கொள்ளையடிக்க உள்ளூர் அரசியல் சதிகாரர்களின் வழிகாட்டலுடன் வடக்கு மாகாணத்தை நோக்கி வந்தார்கள். இதைப் பற்றி பேசுவதற்கு முன்பு இலங்கைக்கும் – சீனாவுக்கும் இடையிலான அரசியல் – பொருளாதார வரலாற்றையும் அதன் உள்ளடக்கத்தையும் மேலோட்டமாகப் பார்ப்பது நல்லது.

சீன – இலங்கை உறவு ஆழமான, வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. உதாரணமாக கி. பி. 401 இல் சீன பௌத்த துறவிகள் இலங்கைக்கு வருகை தந்ததைச் சுட்டிக்காட்டலாம். 1950இல்   மாவோ சேதுங் இன் தலைமையிலான மக்கள் சீனக் குடியரசை அங்கீகரித்த முதல் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இதன் தொடர்ச்சியாக 1952 இல், சீனாவுடன் அரிசி மற்றும் இறப்பர் வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் விளைவாக அமெரிக்கா, இலங்கைக்கான அனைத்து உதவிகளையும் அப்போது இரத்து செய்தது.

1960 களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் – பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் முதல் பதவிக் காலத்தின் இறுதியில் அவர் வெளிநாட்டு வர்த்தகத்தை தேசிய மயப்படுத்திய காரணத்தினால், அமெரிக்காவும் பிரித்தானியாவும் இலங்கைக்கான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நிறுத்தின. இது, இலங்கை அரசாங்கம் சீனாவுடனும் ரஷ்யாவுடனும் நெருக்கமாகச் சாய்வதற்கு வழிவகுத்தது. 1963 இல் சீனாவும் இலங்கையும் வர்த்தகத்தை வளர்ப்பதற்கான வணிக – கடல்சார் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. இந்தியாவும் சில மேற்கு நாடுகளும், சீனா தனது கடற் படையின் இருப்பை தெற்காசிய – இந்து சமுத்திர பிராந்தியத்தில் விரிவுபடுத்தும் முயற்சியாக இந்த ஒப்பந்தங்களைக் கருதின.

1965 தேர்தல்களில் UNP கட்சியானது கடல்சார் ஒப்பந்தத்தையும், இலங்கையின் அரச வணிகத்தில் சீனா செலுத்திய செல்வாக்கையும் தேர்தலில் எதிர்ப்பு பிரசாரத்துக்கு பயன்படுத்தியது. UNP அதன் வெற்றிக்குப் பிறகு மேற்கத்திய சார்பு சாய்வை எடுத்துக் கொண்டது. 1967 இல் சீன மாவோயிஸ்ட் அரசுடனான எதிர்மறையான இராஜதந்திர நிலைப்பாட்டை இலங்கை கடைப்பிடித்தது.

1970 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 1971 இல் இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர ஆசனத்தை சீன மக்கள் குடியரசிற்கு வழங்கும் வரைவுத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது. இலங்கை அரசின் இந்த நிலைப்பாட்டையும், அதன் இடதுசாரி சொல்லாடல்களையும் கண்டு பூரித்துப்போன சீனப் பிரதமர் Zhou Enlai (சோ என் லாய்) அப்போது ஜே. வி. பி. யின் முதல் எழுச்சியை பிற்போக்குவாதிகளின் சதி என்று கண்டித்தார்.

1972 இல் பல கட்டுமான உதவிகள் உட்பட, வர்த்தகம் மற்றும் ஆயுத ஒப்பந்தங்கள் இரண்டு நாடுகளுக்கிடையிலும் கைச்சாத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட முன்பேயே, புரிந்துணர்வு அடிப்படையில் இலங்கையும் – சீனாவும் 1970 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை நடைமுறைப்படுத்த தொடங்கின. உதாரணமாக, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டப வேலைகள் 1970-இறுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. இக் கட்டுமான பணிகளின் செலவீனங்களுக்கு ஈடாக இலங்கையிலிருந்து சீனாவுக்கு அரிசி ஏற்றுமதியாகியது. ஆனாலும், பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபக் கட்டடம், சீன மக்களின் அன்பளிப்பென்றே வெளியில் கூறப்பட்டது.

1975 ஆம் ஆண்டளவில் சீனா இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதி இலக்காக இருந்தது. இலங்கை கிழக்காசியப் பெரும் பொருளாதாரத்துடன் மிகவும் நெருங்கிய உறவை வைத்திருந்ததானது, சர்வதேச அரசியலில் அப்போது மிக ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.

1977 ஆம் ஆண்டு, ஜே. ஆர். ஜெயவர்த்தனா அதிகாரத்துக்கு வந்த பின் இரு நாடுகளுக்கும் இடையிலான சமூகப் – பொருளாதார – வர்த்தக – அரசியல் உறவானது மங்கத் தொடங்கியது. 1990களில் இலங்கையுடன் வர்த்தகம் செய்த நாடுகளில் மிகவும் குறைந்த அளவு வர்த்தகத்தை செய்தது சீனா என்று கணிக்கப்பட்டது. ஆனாலும், 1991இல் இலங்கை வரலாற்றில் பெரிய அளவிலான ஆயுத இறக்குமதிக்கான ஒப்பந்தத்தை இலங்கை, சீனாவுடன் செய்து கொண்டது.

vannemei-shrimp-cultivation-program-in-Sri-Lanka

2004 இல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியானார். மஹிந்த ராஜபக்ச  ஜனாதிபதியான காலம் தொடக்கம், சீனாவுடனான பொருளாதார – அரசியல் நெருக்கப்பாட்டை வலுப்படுத்தும் ஒப்பந்தங்கள் பல கைச்சாத்திடப்பட்டன. அவ் ஒப்பந்தங்களில் ஒன்று இந்தக் கட்டுரையின் பேசுபொருளுக்கு அடிப்படையான சீனாவுடன் செய்து கொண்ட “தொழில்நுட்ப உதவியும், மீன் வளர்ப்பு மீன்பிடி அபிவிருத்திக்கான நிதி மூலதன முதலீடும்” என்ற ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசுக்கும் சீன முதலீட்டாளர்களுக்கும் பல இடைஞ்சல்கள் – தடைகள் இருந்தன. காரணம், இக்காலத்தில் வடக்கு கிழக்கின் கணிசமான பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. அல்லது அங்கு போர்ச் சூழல் காணப்பட்டது. அத்துடன், நோர்வே மற்றும் மேற்கு நாடுகளின் தலைமையிலான சமாதான முன்னெடுப்பு முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டும் இருந்தன. இதனால் வடக்கு கிழக்கில் சீன – கடல்சார் மூலதனத்தின் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

யாழ்.-அராலித்துறை-இறால்

தெற்கில், குளம் குட்டைகள் ஆறுகளில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்றப்பட்ட மீனினங்கள் விடப்பட்டன. மாகாண சபைகளின் ஊடாக உள்நாட்டு விவசாயிகள் பகுதிநேரத் தொழிலாக மீன் வளர்ப்புச் செய்வதை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மரபணு மாற்றப்பட்ட மீனினங்களின் குஞ்சுகள் இலங்கையில் சீனத் தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்யப்பட்டன. திலாப்பியா, கெளுத்தி, பாலமீன் மற்றும் இரண்டு இறால் வகைகள் இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்டன. இலங்கையில் ஏற்கனவே இந்த வகை மீன் மற்றும் இறால் இனங்கள் இயற்கையாகவே காணப்பட்டன.

இயற்கை சார்ந்த மீன் மற்றும் இறால் இனங்கள் வளர்ச்சியடைந்து சந்தைக்குத் தயாராவதை விட, மரபணு மாற்றப்பட்ட இனங்கள் மிகக் குறுகிய காலத்தில் சந்தைக்குத் தயாராகக் கூடியவையாக இருந்தன. உதாரணமாக, இயற்கையான திலாப்பியா என்ற ஜப்பான் மீன் இனம், ஒரு கிலோ நிறையை அடைய குறைந்தது இரண்டு-மூன்று வருடங்களாகும். ஆனால், ஆறு மாதங்களுக்கு உட்பட்ட காலத்திலேயே சீன மரபணு மாற்றப்பட்ட திலாப்பியா ஒரு கிலோ எடையைத் தாண்டிவிடும், சந்தைக்கும் தயாராகிவிடும்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மீன் குஞ்சுகள் சில மாதங்களிலேயே பெரு வளர்ச்சியைக் கண்டு சந்தைக்கு வரக்கூடியவை. யுத்த முடிவின் பின், வடக்கு மாகாணத்தில் – குறிப்பாக வன்னிப் பிரதேசத்தில் காணப்படும் விவசாயக் குளங்கள் அனைத்திலும் இராணுவ உதவியுடன் இவ்வகை மீன்கள், இறால்கள் விடப்பட்டன.

உள்நாட்டு நன்னீர் மீன் வளர்ப்பு பெரிய அளவில் இலாபம் தரும் தொழிலாக இன்றுவரை உருவாகவில்லை. குளங்கள் மற்றும் விவசாய நீர்நிலைகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சி, மீன் வளர்ப்பில் நிரந்தரமில்லாத தன்மையை உருவாக்குகிறது. சீனாவின் மரபணு தொழில்நுட்பத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மீனினங்கள் இலங்கையின் காலநிலைக்கு பெரும்பாலும் தாக்குப் பிடிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன. தப்பிப்பிழைக்கும் இவ்வகை மீன்களுக்கு உள்ளூர்ச் சந்தையில் பெரிய அளவில் (Demand) கேள்வி கிடையாது. கடல் மீன்களையே பெரிதும் தமது உணவாக உட்கொள்ள விரும்பும் இலங்கையர்கள், அவை கிடைக்காத சந்தர்ப்பத்திலேயே நன்னீர் வளர்ப்பு மீன்களை வாங்குகிறார்கள். அதுவும் இவை கடல் மீன்களுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு விகித விலைக்கு விற்கப்படுகின்றன. இந்தக் காரணங்களினால் நன்னீர் மீன் வளர்ப்பு செய்த விவசாயிகளுக்கு அவர்களின் உழைப்பிக்கேற்ற வருமானம் கிடைக்கவில்லை.

ஒட்டுமொத்தமான மீன்பிடி பொருளாதாரத்தில் இதுவரை இவ்வகை மீன் வளர்ப்பு பெரிய பங்கு அளிக்கவில்லை. அதேவேளை, சிறு அளவில் சில குடும்பங்களில் பொருளாதாரத் தேவைக்கும், வறுமைப்பட்ட மக்களின் உணவுக்காகவும் மலிவாக வாங்கக்கூடிய மீன்களாக நன்னீர் வளர்ப்பு மீன்கள் இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

கந்தகாடு-இராணுவ-பண்ணையில்-அலங்கார-மற்றும்-நன்னீர்-மீன்-வளர்ப்பு-திட்டம்-2

சீன உதவியுடன் அறிமுகப்படுத்த இறால் வளர்ப்பு  2018 க்கு பின்னான காலத்தில் ஓரளவு வருவாயைத் தரும் தொழிலாக இருக்கிறது. இறால் வளர்ப்பானது கணிசமான அளவு முதலீடு தேவைப்படும் தொழிலாக இருப்பதனால் அரசியல் அதிகாரத்தோடு நெருக்கம் கொண்டவர்கள் மற்றும் மூலதன வளம் கொண்டவர்களால் மட்டுமே அது செய்யப்படுகிறது.

இயற்கை சார்ந்த பார்வையில் (Ecological Perspective) இவ்வகை மீன் மற்றும் இறால் வளர்ப்பை சற்று ஆராய்வோமெனில், இலங்கையின் இயற்கை சார்ந்த உள்நாட்டு மீனினங்களுடன், சீனாவிலிருந்து இருந்து கொண்டுவரப்பட்ட மீனினங்கள் உயிரியல் கலப்பு ஏற்படுவதனால், அவை அழிந்து போகும் நிலையில் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எமது இயற்கை சார்ந்த மீனினங்கள் பற்றிய ஆய்வுகளும், அவைகளின் இன்றைய நிலை பற்றிய எந்த வகைத் தரவும் இலங்கை அரசின் மீன்பிடி ஆய்வு நிறுவனங்களில் கிடையாது. அதேபோலவே, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த மீன் குஞ்சுகள் மற்றும் இறால் குஞ்சுகளின் உற்பத்தியானது எந்த வகையான நோய்களை – நோய்த் தொற்றுக்களை உள்ளடக்கி உள்ளன, அவை எவ்வாறு இலங்கையில் உள்ள இனங்களைப் பாதிக்கும் அல்லது பாதித்திருக்கின்றன என்பது பற்றிய ஆய்வையும் இதுவரை எவரும் செய்யவில்லை.

சீனா இலங்கையின் கடல் வளத்தைக் குறிவைத்தமைக்கான மூன்று காரணிகள்  :

இலங்கை அரசுடன், சீனா செய்துகொண்ட கடல் உணவு சார்ந்த ஒப்பந்தங்களை பொறுத்தளவில், சீன அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் மூன்று விடயங்களை நிறைவேற்றி கொள்வதில் அதிக கவனம் காட்டின – காட்டுகின்றன.

  • கடல் விவசாயத்துக்கான புதிய கடல் பிரதேசத்தின் தேவை அதிகரிப்பை ஈடுகட்டல். தமது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை பரீட்சிக்கும் புதிய களத் தேவையை பூர்த்தி செய்தல்.
  • இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனது பாதுகாப்புக்கான வலையமைப்பை உறுதிப்படுத்துதல் – கட்டமைத்தல்.
  • மீன்பிடி கப்பற்படையின் திறன் அதிகரிப்பு (Increase of the Fishing Fleet’s Capacity) காரணமாக தேவைப்பட்ட கடல் பிரதேசத்தையும், உட்கட்டமைப்பையும் பெற்றுக்கொள்ளல்.

சீன அரசும் அதன் தனியார் நிறுவனங்களும் மேற்படி மூன்று விடயங்களில் கவனத்தைச் செலுத்துவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. முதல் விடயத்துக்கான காரணம், காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட விளைவுகளினாலும், கடலுணவு உற்பத்தி / கடலுணவு விவசாயம் என்பவற்றில் ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாத நோய்கள், மற்றும் மாசடைவு. மற்றைய காரணம், சீனாவின் உள்நாட்டு கடல் விவசாயம் பாரிய பாதிப்பை 2005 இல் இருந்து சந்தித்து வருகிறது. அந்தச் சரிவை நிமிர்த்த வெளிநாடுகளில் புதிய கடல் பிரதேசம் அதற்கு தேவைப்படுகிறது. இதில், உள்நாடு தவிர்ந்த வேறு வகையான காலநிலையை கொண்ட கடல் விவசாய களத்தில் (சீன எல்லைக்கு வெளியில்) கடலுணவு விவசாயம் சார்ந்து, தன்னால் உருவாக்கப்பட்ட புதிய விஞ்ஞான “கண்டுபிடிப்புகளை” பரீட்சிக்கும் தேவையும் உள்ளடங்கும்.

இதனால், சீன நிறுவனங்கள் இலங்கை கடல் உணவு விவசாய உற்பத்தியை, இலங்கையில் புத்தளம் தொடக்கம், தீவுப்பகுதி வரையான இலங்கையின் வட – மேற்கு கரைகளில் கடல் அட்டைப் பண்ணைகளை உருவாக்குவதற்கு தகுந்த பிரதேசமாக தேர்வு செய்தார்கள். இதனுடன் இணைந்த செயற்பாடாக, கிழக்கில் வாகரை பிரதேசத்தில் அட்டை வளர்ப்பு, குழுவாய் நண்டு வளர்ப்பு மற்றும் பிரதானமாக, இறால் வளர்ப்பு மேற்கொள்வதையும் விரும்பினார்கள்.

புதிய மரபணு மாற்றப்பட்ட இறால், மற்றும் கடலட்டை வகைகள் இலங்கையின் காலநிலைச் சூழலில் எவ்வாறு பலன் தருகின்றன, அவை எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவை என்று கண்டடைவதற்கும் உகந்த பிரதேசமாக இலங்கையின் கரைகளைக் கருதினார்கள். ஒப்பீட்டளவில், வடக்கு – கிழக்கின் கடற் பிரதேசமானது மிகவும் குறைந்த அளவிலான மாசடைவை கொண்டதென்பதும் சீனர்களின் விருப்பத்திற்கு முக்கிய காரணமாகும்.

இந்துசமுத்திரக் கடல் பிராந்தியமானது இன்று உலகில் வர்த்தகத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான கடல் கப்பல் பாதைகளைக் கொண்டது. குறிப்பாக இலங்கையின் அதிவிசேட பொருளாதார கடல் பிரதேசம் மற்றும் அதன் கடல் எல்லைக்குட்பட்ட கடலூடாகவே பெருமளவிலான கப்பற் போக்குவரத்தும் நடைபெறுகிறது. இலங்கையின் கடற்பரப்பே சீனா உட்பட கிழக்கு நாடுகளின் ஐரோப்பிய, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான கடல் வர்த்தகப் பாதையாகத் திகழ்கிறது.                                                                                                                                                                                                                                                                                                                           உலக வர்த்தகத்தில் இன்று ஆதிக்கத்தை வைத்திருக்கும் நாடுகளில் உச்சத்திலிருக்கும் சீனா இந்தக் கடற்பிரதேசத்தில் தனது வர்த்தக இருப்பை காத்துக்கொள்ள முயற்சிப்பது இயற்கையானதே. இந்தப் பின்னணியில் இலங்கை – சீன ஒப்பந்தமானது சீனாவின் பாதுகாப்பு அபிலாஷைகளுக்கு ஏதுவாக விளங்கியது – விளங்குகின்றது.

இந்து சமுத்திரத்தில் சீனா மீன் பிடிப்பதற்கு மட்டுமல்லாமல் – தனது பாதுகாப்பு சார்ந்த விடயங்களுக்கும் தனது மீன்பிடிக் கப்பற்படையை (Fishing Fleet) பயன்படுத்தி வருகிறது. இந்தப்பிரதேசத்தில், மீன்பிடிக்கும் சீன மீன்பிடிக் கப்பல்கள் ஒவ்வொன்றும் சீனாவின் பாதுகாப்புக் கட்டமைப்புக்கு உட்பட்டவையாகும். இதன் மூலம், சீனா தனது இராணுவ – கடற்படைக் கப்பல்களை பெரிய அளவில் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள முடிகிறது. இராணுவ – கடற்படைக் கப்பல்களை இந்தப்பிரதேசத்தில் பெரும்பாலும் தவிர்ப்பதானது, அநாவசியமாக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் பாதுகாப்பு சார்ந்த முரண்பாடுகளை சீனா குறைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

சீன அரசு இலங்கைக் கடற்பிரதேசத்தில் தனது பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் கரிசனை செலுத்தும் அதேவேளை, சீன மீன் உணவு உற்பத்தி நிறுவனங்களைப் பொறுத்தளவில் இலங்கையின் கடல் வளம் அவைக்கு முக்கியமானதாகும். இலங்கையின் விசேட பொருளாதார கடல் பிரதேசமானது கணிசமான அளவு மீன் வளத்தைக் கொண்டது. இலங்கை தனக்குச் சொந்தமான கடற்பரப்பின் கடல் வளத்தை முற்றுமுழுதாக அனுபவித்து கொள்வதற்கான பொருளாதார, தொழில்நுட்ப, மற்றும் இயந்திரக் கட்டமைப்புக்களை என்றுமே கொண்டிருக்கவில்லை.

ஆனால், கடல் சார்ந்த அனைத்து வகைத் தொழிலையும் செய்யக் கூடிய நவீன கட்டமைப்பைக் கொண்ட சீன மீன்பிடி நிறுவனங்களைப் பொறுத்தவரை, குறைந்த செலவில் பெரும் இலாபத்தை ஈட்டித் தருவதற்கான, பாரிய கடல் மீன் வளங்களை தன்னகத்தே கொண்டுள்ள இலங்கையின் கடல் பிரதேசமானது அவர்களுக்கு ஓர் அரிய வரப்பிரசாதமாகும். இலங்கையின் அதிவிசேட பொருளாதார கடல் எல்லைப் பிரதேசத்தில் சீன தனியார் மீன்பிடிக் கப்பல்கள் மீன் பிடிப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் 2006 ஆம் ஆண்டு வழங்கியது. சீன நிறுவனங்கள் அவ்வாண்டின் இறுதியில் இருந்து இலங்கைக் கடலில் வளக் கொள்ளையில் ஈடுபட தொடங்கின.

தற்போது, இலங்கையின் ஊடகங்களோ அல்லது அரசியல்வாதிகளோ எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத – கண்டு கொள்ளாத நிலையில், இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கையில் வைத்துக் கொண்டு சீனா பாரிய கடல்வளக் கொள்ளையை இலங்கைக் கடற்பரப்பில் நடத்திக் கொண்டிருக்கிறது.

உலகச் சந்தையில் அதியுச்ச கேள்வியில் இருக்கும் சூரைமீன் இனங்கள் சீனக் கப்பல்களால் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பல இலட்சம் தொன் சூடை, சாளை, நெத்தலி மற்றும் சிறுவகை மீனினங்கள் சீன மீன்பிடி றோலர்களினால் அள்ளப்படுகின்றன. இவை, மீன் வளர்ப்புக்கான மற்றும் பிராணிகளின் வளர்ப்புக்கு உபயோகிக்கும் தீவனம் மற்றும் மீன் எண்ணெய் உற்பத்தி போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இலங்கைக்கு இதனால் எந்தப் பெரிய இலாபமும் கிடைப்பதில்லை.

தற்போது, அம்பாந்தோட்டையில் உள்ள துறைமுகம் சீனக் கட்டுப்பாட்டில் இயங்குவதால் சீனக் கப்பல்களின் மீன்பிடிச் செயற்பாடுகள் பற்றியோ, அவர்களால் பிடிக்கப்படும் மீன் வகைகள், அவற்றின் தொகைகள் பற்றியோ எந்தக் கணக்கும் இலங்கையிடம் கிடையாது. இலங்கைக் கடல் எல்லைக்குள் நடக்கும் சீனாவின் வளக் கொள்ளையைக் கட்டுப்படுத்தவோ அல்லது கண்காணிக்கவோ இலங்கையிடம் எந்தவிதமான தொழில்நுட்ப மற்றும் சாதனங்களும் கிடையாது.

இலங்கையில் விசேட பொருளாதாரக் கடற்பிராந்திய எல்லைக்குள் மீன்பிடிக்கும் அனுமதியை இலகுவாகத் தனதாக்கிய சீன நிறுவனங்களுக்கு, இலங்கையின் வட – மேற்குக்கரையில் அட்டை வளர்ப்பு திட்டத்தை நிறைவேற்றுவது இலகுவான காரியமாக இருக்கவில்லை. காரணம் வடக்கில் நிலவிய போர் சூழல் ஆகும். ஆனால் கிழக்கில், இறால் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட சீன நிறுவனங்களுக்கு, சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையில் கிழக்கு மாகாணம் கொண்டுவரப்பட்ட பின் (2008) அனுமதி வழங்கப்பட்டது.

இக்காலகட்டத்தில் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் கிழக்கு மாகாணசபை இயங்கிய போது, சுற்றுலா அபிவிருத்தி என்ற பெயரில் கடற்கரை சார்ந்த நிலங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் கடற்கரை சார் நிலங்கள் மஹிந்த ராஜபக்ச அரசுக்கும் அவர் குடும்பத்துக்கும் தேவையானவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுத்தது சிவனேசத்துரை சந்திரகாந்தனின் ஆட்சி. தேனெடுத்தவன் புறங்கையை நக்கியதுபோல சில நூறு ஏக்கர்களை தனது பினாமிகளுக்கும் உரித்தாக்கினார் சிவனேசத்துரை சந்திரகாந்தன். இறால் வளர்ப்பு செய்ய 2000 ஏக்கர் கடல் – களப்பு சார் உவர் நிலத்தை சீன நிறுவனங்களுக்கு வழங்க முன்வந்தது சிவனேசத்துரை சந்திரகாந்தனின் மாகாணசபை. அன்றிருந்த அரசியல் மற்றும் போர் சூழல் காரணமாக அந்த நிறுவனங்கள் கிழக்கிற்கு போக விரும்பவில்லை.

2022 இன் இறுதிப்பகுதியில் ரணில் – ராஜபக்ச அரசின் பிரதிநிதியாக கிழக்கை  ஆண்ட சிவனேசத்துரை சந்திரகாந்தன், தனக்கு நெருக்கமான 40 நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சீன நிறுவனங்களினால் கைவிடப்பட்ட 2000 ஏக்கர் நிலத்தை இறால் வளர்ப்பிற்கும் பிரித்து கொடுத்துள்ளார். இதை பற்றிய விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில், 2022, கார்த்திகை 21 அன்று நடந்தபோது எந்தவித உருப்படியான பதிலையும் சிவனேசத்துரை சந்திரகாந்தனால் கொடுக்க முடியவில்லை. கிழக்கில் கடலும் – கடல் சார்ந்த நிலமும் இவ்வாறு கொள்ளையிடப்படுவது பற்றியோ – அந்நிலத்தின் உரித்தாளர்களான வறுமையில் வாடும் மக்கள் சார்ந்தோ எவரும் பெரிதாக எமது சமூக அரசியல் தளத்தில் பேசுவதில்லை.

மக்கள் ஆங்காங்கே சிறு சிறு போராட்டங்களைச் செய்த வண்ணம்தான் இருக்கிறார்கள். கிழக்கில் நடக்கும் இந்த கடல் – நில வளக்  கொள்ளைகள் பற்றி சரியான ஆய்வுகளும், தகவல்களும் மிகவும் குறைந்ததாகவே காணப்படுகின்றன. இக்குறையைப் போக்கி, கிழக்கில் நடைபெறும் கடல் – நில வளக் கொள்ளைகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த, இயற்கை வளம் மற்றும் மக்களின் நல்வாழ்வு சார்ந்து இயங்கும் சக்திகள் முன்வர வேண்டும்.

2022 ஆம் ஆண்டின் பின்னர்  கிழக்கில் நடைமுறைப்படுத்தப்படும் இறால் வளர்ப்பு திட்டங்களில் சீன நிறுவனங்கள் தொழில்நுட்பம் வழங்குதல் மற்றும் இறால்களை வாங்கி ஏற்றுமதி செய்து சந்தைப்படுத்துவது போன்ற பாத்திரத்தை வகிக்கிறார்கள்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

15678 பார்வைகள்

About the Author

மரியநாயகம் நியூட்டன்

சமூக ஆய்வாளர் மரியநாயகம் நியூட்டன் அவர்கள் 14 வயதில் ஈழத்திலிருந்து நோர்வே நாட்டுக்கு புலம்பெயர்ந்தவர். The Arctic University of Norway and NORD University Bodø, Norway பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர் இன்று வரை இலங்கையின் அரசியல், சமூக விடயங்கள் சார்ந்து பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். நோர்வே மாநில மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அரசியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)