Arts
28 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 6

November 3, 2023 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முகாமையாளர் சபையில் எழுது வினைஞராயிருந்த வே. இளையதம்பி அவர்களின் மகன் வே.இ. பாக்கியநாதன் இளைஞராயிருந்த போதே இந்துக் கல்லூரியில் சிலமாதங்கள் ஆசிரியராகவும் இருந்தவர். இவர் தனது மேற்படிப்புக்காக கல்கத்தா சென்று பொருளியல், வர்த்தகம் முதலிய பாடங்கள் படித்துப் பட்டம் பெற்று மீண்டதும் கொழும்பில் வெஸ்லி கல்லூரியில் ஆசிரியரானார். வெஸ்லி கல்லூரியிருந்த காலத்தில் புல்பிறைற் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவுக்குச் சென்று அங்கே அற்லான்ரா பல்கலைக்கழகத்தில் நூலகத்துறையில் (M.Sc. in Library Science)  பட்டப் படிப்பையும் மேற்கொண்டு நாடு திரும்பியிருந்தார். பட்டப்படிப்பின் பின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற சந்தியாகோ நூலகத்தின் சிறுவர் பகுதியில் ஒரு வருட காலம் பணிபுரிந்து மேலதிக பயிற்சியும் பட்டமும் பெற்றவர்.

திரு. வே. இ.பாக்கியநாதன் இலங்கைக்கு மீண்டதும், வளர்ந்து வந்த யாழ்ப்பாண நூலகத்துக்கு வாய்ப்பான நூலகராகப் பணிபுரிய நியமிக்கப் பெற்றார். அவர் 28-8-1964 இல் பதவியேற்றதும் ஆரம்பகால நூலகராக 01.02.1947 முதல் பணியாற்றிவந்த கே.நாகரத்தினம், உதவியாளராயிருந்து முழு மனதோடு அவருக்கு ஒத்துழைப்பு நல்கினார். திரு. வே.இ.பாக்கியநாதன் தாம் மேற்கு நாடுகளில் பெற்ற பயிற்சி அநுபவங்களைக் கொண்டு யாழ்ப்பாண நூலகத்தை இலங்கையில் முதற் தரமானதாக உயர்த்துவதற்கு வெகுவாக முயற்சி செய்தார். நவீன நூலக நடைமுறைகளை படிப்படியாக அறிமுகம் செய்தார். 

பாக்கியநாதன் யாழ்ப்பாணப் பொது நூலகத்தை பொறுப்பேற்ற வேளை புதிய கட்டிடத்தின் அடித்தளம் மட்டுமே பூர்த்தியாகியிருந்தது. மாநகர சபை அதிகாரிகளுடனும் ஆணையாளர்களுடனும் அரசியல்வாதிகளுடனும் சுமுகமான தொடர்பை வைத்திருந்தமையால் யாழ்ப்பாண நூலக அபிவிருத்தி தொடர்பாக பல செயற்திட்டங்களை அவரால் காலக்கிரமத்தில் வெற்றிகரமாகச் செய்து முடிக்கக் கூடியதாகவிருந்தது. 

28.8.1964 அன்று  யாழ்ப்பாண நூலகத்தின் முழு நேர நூலகராக அவர் இணைந்தது முதல் 31.12.1968 இல் பலாலி கனிஷ்ட பல்கலைக்கழகத்து நூலகவியல் விரிவுரையாளராக இணைந்து கொள்ளும் வரையிலான அவரது காலப் பகுதியில் யாழ்ப்பாண நூலகம் பல வரலாற்று நிகழ்வுகளைக் கண்டது. அவற்றுள் மூன்றையாவது இங்கே குறிப்பிட்டாக வேண்டும். யாழ்ப்பாணப் பொது நூலக விரிவாக்கத்திட்டம் பற்றிய  அறிக்கையை நகரபிதா எஸ்.சி.மகாதேவா அவர்களுக்குச் சமர்ப்பித்து யாழ்ப்பாண நூலக அபிவிருத்தியை புதிய கண்ணோட்டத்தில் நோக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பாரிய மாற்றங்களை நூலக நிர்வாகத்தில் ஏற்படுத்த வழி செய்தமை முதன்மையானது. 

இரண்டாவது, யாழ்ப்பாணத்தில் நான்காம் குறுக்குத் தெருவில் அதுவரை இயங்கி வந்த அமெரிக்க தகவல் நிலையம் மூடப்பட்டு அங்கிருந்த நூல்கள் தளபாடங்கள் ஆகியவை கண்டியிலிருந்த அமெரிக்க தகவல் நிலையத்துடன் இணைக்கப்படவிருந்த வேளை, தன் அயராத உழைப்பாலும் விஷேட ஆணையாளர் திரு.மாணிக்கவாசகரின் ஒத்துழைப்புடனும் அமெரிக்க தகவல் நிலையத்தின் பெறுமதிமிக்க உசாத்துணை நூல்களின் சேகரிப்பையும், நவீன தளபாடங்களையும் கண்டிக் கிளைக்கு எடுத்துச் செல்லவிடாமல் யாழ்ப்பாணப் பொது நூலகத்துடன் இணைக்க வழி செய்தமை. நூலகர் பாக்கியநாதன் மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனத்தால் நூல்கள் மாத்திரமன்றி நவீன தளபாடங்கள், படச்சுருள்கள், படங் காட்டும் கருவி, குழாய் விளக்குகள் முதலிய சாதனங்களும் பொதுசன நூலகத்துக்கு இலவசமாக வந்து சேர்ந்தன. அமெரிக்கத் தகவல் நூலகத்தில் பணிபுரிந்த அநுபவம் மிக்க இரு இளைஞர்களின் சேவையும் அமெரிக்க தகவல் நிலைய நூலக ஒருங்கிணைப்போடு யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திற்கு வந்து சேர்ந்தமை பெரு வாய்ப்பாயிற்று. 

மூன்றாவதாகக் குறிப்பிடத்தகுந்தது, தனது சந்தியாகோ சிறுவர் நூலக அனுபவங்களை பிரயோகிக்கும் வகையில் சிறுவர் நூலகப்பிரிவு ஒன்றை யாழ்ப்பாணத்துப் பொது சனநூலகத்தில் உருவாக்க வழி செய்தமையாகும். செனட்டரும் உள்ளூராட்சி அமைச்சருமான திரு.மு.திருச்செல்வம் அவர்கள் பொதுசன நூலகத்தின் சிறுவர் பகுதியைத் திறந்து வைத்தார். பின்னாளில் யுனெஸ்கோ நிபுணரான செல்வி இவான்ஸ் இச்சிறுவர் நூலகத்தைப் பற்றிய தன் கருத்தை அறிக்கையாக்குகையில் இலங்கையிலேயே மிகச் சிறந்த சிறுவர் நூலகமாக அதைக் குறிப்பிட்டிருந்தார். 

நூலகர் திரு.வே.இ. பாக்கியநாதன் நூல்களோடு நூல்களாய் பழைய பனையோலை ஏடுகளையும் தேடிப் பாதுகாத்துப் பயன்படுத்த முயன்றார். பாக்கியநாதன் பனை ஓலை ஏடுகளிற் கொண்ட பசி தீருமளவில் முன்னாள் உள்ளூராட்சி மந்திரியார் உயர்திரு மு. திருச்செல்வம் அவர்கள் ஒத்துழைப்பு நல்கினார். அவரது உதவியால் சித்த வைத்திய வாகட ஏடுகள் பல யாழ்ப்பாண நூலகத்துக்குக் கிடைத்தன.

வே.இ.பாக்கியநாதன் நூலகராக இருந்த காலகட்டத்தில் வட்டுக்கோட்டை எம்.பியாக இருந்தவரும், கூட்டுறவாளரும், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபருமாகிய திரு. வீரசிங்கம் அவர்கள் தமது மரண சாசனத்தில் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திற்கு பத்தாயிரம் ரூபா சாட்டுதல் செய்திருந்தமையால் நூலகத்துக்கு ரூபா பத்தாயிரம் நிதி கிடைத்தது. அவரை கௌரவித்து நினைவு கூரும் முகமாக அன்னாரின் உருவப்படம் நூலகத்தில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபராக அந்நாளில் சேவையாற்றிய திரு.பேராயிரவர் தலைமையில் படத்திறப்பு விழா நூலகத்தில் இடம்பெற்றது.

இராமநாதன் கனிஷ்ட பல்கலைக்கழகம் பலாலியில் திறக்கப்பட்ட போது 31.12.1968 இல் நூலகர் பாக்கியநாதன் அங்கு விரிவுரையாளராகக் கடமையேற்றுச் சென்றுவிட்ட நிலையில் நூலக உதவியாளராகவிருந்த திரு க.நாகரட்ணம் அவர்கள் மீண்டும் 01.01.1969 முதல் 31.12.1970 வரை பதில் நூலகராகப் பணியாற்றினார். அவரது காலகட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட  நூல் அன்பளிப்புக்களில் குறிப்பிடத்தக்கவை கோப்பாய் கோமான் திரு.வன்னியசிங்கம் அவர்களுடையதும் தொழிற்சங்கவாதி திரு. நித்தியானந்தம் அவர்களுடையதுமாகும். நூல்களுடன் அலுமாரிகளும் பொது நூலகத்திற்குக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

திரு. க. நாகரட்ணம் அவர்கள் 31.12.1970 அன்று ஓய்வுபெற்றதன் பின்னர் பட்டதாரியான செல்வி. செல்வலட்சுமி நவரத்தினம் என்பவர் 01.01.1971 இல் நூலகப் பொறுப்பாளராகப் பதவியேற்றார். நூலகர் செல்வலட்சுமி அவர்களுக்குத் திருமணமானதும் சிலகாலங்களின் பின்னர் பதவியிலிருந்து விலகிக்கொண்டதும், திரு அருளானந்தம் அவர்கள் தற்காலிக நூலகராக பணியாற்றிவந்தார். அவ் வேளையில் கலைப் பட்டதாரியான (B.A) திரு.எஸ்.எஸ்.சபாரத்தினம் அவர்கள் யாழ். பொதுசன நூலகத்தின் நூலகரானார்.

அவ்வேளையில் யாழ்ப்பாண மாநகர முதல்வராக பணியாற்றி வந்தவர் திரு.அல்பிரட் துரையப்பா அவர்கள். இவரது பதவிக்காலம் மூன்று தடவைகள் நிகழ்ந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 11.8.1958 முதல் 27.06.1960 வரை முதலாம் கட்டத்திலும், 31.03.1966 முதல் 28.05.1966 வரையிலும் இரண்டாம் கட்டத்திலும்,  22.04.1971 முதல் 27.07.1975 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்படும்வரை மூன்றாவது கட்டத்திலும் இவர் யாழ்ப்பாண நகரபிதாவாக சேவையாற்றியுள்ளார். 

யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் தொடர்ச்சியாக நூலகர்கள் சிறிதுகால இடைவெளியில் விலகிச்செல்வதால் நூலகக் கட்டிட வேலை உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வது சிரமமாக இருந்த காரணத்தினால், மேயர் அல்பிரட் துரையப்பாவின் ஆலோசனையின் பேரில் மாநகரசபையின் அங்கீகாரத்துடன் ‘நூலக ஆலோசகர்’ என்ற பதவியொன்று புதிதாக உருவாக்கப்பட்டது. 

திருநெல்வேலி, பரமேஸ்வராக் கல்லூரியின் அதிபராகவிருந்து அண்மைக் காலத்தில் இளைப்பாறியிருந்த திரு. சி.சிவபாதசுந்தரம் அவர்களை நூலக ஆலோசகர் பதவியில் அமர்த்தியிருந்தார். அவ்வேளை உதவி நூலகராகவிருந்த எஸ்.எஸ்.சபாரட்ணம் அவர்கள் திரு. சி.சிவபாதசுந்தரம் அவர்களின் மேற்பார்வையில் நூலகப் பணியை ஆற்றிவந்தார். யாழ்ப்பாண மாநகரசபையின் நூலகராகப் பணியாற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகுதி, தரம் ஒன்றில் (Grade I) உள்ள நூலக சேவையாளருக்கே உரித்தானது. இது தரம் 3 இல் தம் பணியைத் தொடங்கும் உள்ளூராட்சி நூலகர்களிடையே உயர்ந்தவொரு தரம். அந்தத் தகுதியில் ஒரு நூலகரைத் தேடிக்கொண்டிருந்த வேளையிலேயே, அத்தரத்தினை எட்டாத குறைந்த தரத்தில் பணியாற்றியவர்களை வைத்து நூலகசேவைகளை தமக்கெட்டிய வகையில் மாநகரசபையினர் வழங்கி வந்தார்கள். 

இவ்வேளையில் திரு. சபாரத்தினம் அவர்கள் தொழில்நுட்பக் கல்லூரி நூலகராகப் பதவியேற்றுச் சென்றுவிட்டார். இந்நிலையிலேயே உள்ளூராட்சி சேவைகள் திணைக்களத்தினரால் யாழ் மாநகர பொது நூலகத்தின் பிரதம நூலகருக்கான பதவி வெற்றிடம் அரச வர்த்தமானியில் 1973 இல் விளம்பரம் செய்யப்பட்டது. திருமதி.ரூபவதி நடராஜா அவர்கள் இந்தப் பதவிக்கான நேர்முகப் பரீட்சையில் தேர்வுசெய்யப்பட்டு, 10.01.1974 இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் தரம் 1 நூலகராகக் கடமையேற்றார். 

திருமதி.ரூபவதி நடராஜாவின் காலம்

தனது ஆரம்பக் கல்வியை நாவலப்பிட்டி சென். அன்ட்ரூஸ் கல்லூரியிலும் 1958 இலிருந்து 1963 வரை சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் சேர்ந்து, தனது உயர்கல்வியையும் பெற்றுக்கொண்டார். அங்கிருந்து பட்டப்படிப்பைத் தொடர, பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய இவர், 1963 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் கலைப்பீடத்தில் இணைந்து கலைமாணிப் பட்டத்தினை 1966 இல் பெற்றுக்கொண்டார். 

நூலகராகப் பணியேற்ற திருமதி ரூபவதி நடராஜாவும் நூலக ஆலோசகர் திரு. சி.சிவபாதசுந்தரம் அவர்களின் மேற்பார்வையின் கீழேயே பணியாற்ற வேண்டியிருந்தது. குழப்பகரமானதொரு நிர்வாகக் கட்டமைப்பில் திருமதி நடராஜாவினால் திருப்தியுடன் சுதந்திரமாக அங்கு பணியாற்றுவது கடினமாக இருந்தது. இதன் காரணமாக, குறுகிய கால யாழ்ப்பாணப் பொது நூலக சேவையின் பின் 1975 இல் கொழும்புப் பொது நூலகத்திற்கு தற்காலிக இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார். அங்கு தமிழ்ப் பகுதிக்கான உதவி நூலகராகப் பதவியேற்றார். 

Rubavathy Nadarajah

இவ்வாண்டில் (20.12.1975) தான் யாழ்ப்பாணப் பொதுசன நூலக முன்வளவில், பிதா T.M.F. லோங் அடிகளாருக்கு சிலையொன்றும் நிறுவப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நகரசபை நூலகக் கட்டிடமொன்றை நிறுவத் தீர்மானித்த 1950 களில், ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம்செய்து யாழ்ப்பாணத்தில் பொது நூலக கட்டிடத்திற்காக ஆரம்பகாலத்தில் நிதி சேகரித்து உதவியதுடன் நூலகத்தின் உருவாக்கத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் இவராவார். சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் திரட்டிய நிதியைக்கொண்டு உருவாக்கப்பட்ட இச்சிலையை டாக்டர் ஜே.பீ.சீ. பிலிப் ஜே.பீ அவர்களின் தலைமையில், அன்றைய யாழ்ப்பாண அரசாங்க அதிபரான திரு. அன்ரன் அல்பிரட் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 

1977 இல் இலங்கையின் தென்பகுதியில் மீண்டும் சிங்களவர்களின் தமிழ் இனவழிப்பு என்ற தீ மூண்டபொழுது, குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்துக்கு திரும்பவேண்டிய சூழ்நிலை திருமதி ரூபவதிக்கு ஏற்பட்டது. அவரை யாழ்ப்பாணப் பொது நூலகமே மீணடும் அரவணைக்கத் தயாராக இருந்தது. இப்பொழுது திரு. சிவபாதசுந்தரம் அவர்கள் நூலக ஆலோசகர் பதவியிலிருந்து இளைப்பாறிவிட்டிருந்தார். விஷேட ஆணையாளராக சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள்; 12.08.1975 முதல் பணியாற்றத் தொடங்கியிருந்தனர். மேயர் அல்பிரட் துரையப்பாவின் மரணத்தின் பின்னர் மேயர் பதவி வெற்றிடமாகவேயிருந்தது. (பின்னாளில் திரு. இராசா விஸ்வநாதன் மேயர் பதவியில் 01.06.1979 இல் அமர்த்தப்பட்டார். இவரது பணிக்காலம் 31.05.1983 வரை தொடர்ந்தது.)

திருமதி.நடராஜா அவர்கள் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் மீண்டும் பணியை ஏற்றிருந்த வேளையில் அனுபவ முதிர்ச்சிபெற்ற ஒரு நூலகராக அவர் மாறியிருந்தார். கொழும்புப் பொது நூலகத்தில் ஈஸ்வரி கொறயாவின் வழிகாட்டல்களினால் பெற்றிருந்த நூலக அனுபவங்களும், மேலதிகமாகச் சேர்த்துக்கொண்ட நூலகவியல் துறைசார் கல்வி அறிவும் அவருக்குக் கைகொடுத்தன. வியத்தகு ஆளுமையுடன் அந்த நூலகத்தின் நூலக ஆளணியைக் கட்டுக்கோப்புக்குள் கொண்டுவந்து சிறந்ததொரு வளர்ச்சிப் பாதையில் நூலகத்தைப் பயணிக்கவைத்தார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக யாழ்ப்பாண நூலகம் வளர்ச்சிபெற்றது.

இந்நிலையிலேயே யாழ்ப்பாண நூலகம் 1981 இன் மே மாதம் 31 ஆம் திகதி பின்னிரவில் அரச கூலிப்படையினரால் தீவைக்கப்பட்டது. 97 ஆயிரம் புத்தகங்களும் தளபாடங்களும் ஒரு சில மணிநேரத்தில் எரிந்து சாம்பலாகக் கூடுமா என்ன? மே 31 பின்னிரவில் தொடங்கி, ஜுன் மாதம் 1 ஆம் திகதியும் சுற்றாடலில் பிரகடனப்படுத்தப்படாத ஊரடங்கை துப்பாக்கி முனையில் பிறப்பித்துவிட்டு, மாநகரசபையின் தீயணைப்புப் படையினரையும் நுழையவிடாது ஒட்டுமொத்த நூலகத்தையும் எரித்துச் சாம்பலாக்கிய பின்னர், அந்தச் செய்தியே குடாநாட்டைவிட்டு உடனடியாகப் பரவாதவாறு மறுநாள் ஜுன் 1 ஆம் திகதி யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கிவந்த ஒரேயொரு பத்திரிகை நிறுவனமான ‘ஈழநாடு’ அலுவலக அச்சியந்திரங்களையும் தீமூட்டி எரித்துவிட்டே அந்தக் கயவர்கள் அங்கிருந்து விலகிச்சென்றார்கள்.

burnt library

நூலகம் எரிகின்றபோது, அதன் தீச்சுவாலையை தனது சென்.பற்றிக்ஸ் குடியிருப்பின் ஜன்னல் வழியாக அவதானித்த சென் பற்றிக் கல்லூரி ஆசிரியரும், பன்மொழிப் புலவரும், யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் நீண்டகால பயனாளியுமான சங். பிதா கலாநிதி தாவீது அடிகள் அவர்கள் மன உளைச்சலுடன் (தும்பளை தாவீது அடிகளார் எனவும், Rev. Dr. H.S. David எனவும் அறியப்பட்டவர்) 31.05.1981 இரவு தனது தனியறையில் படுக்கைக்குப் போனவர், மறுநாள் உயிருடன் எழுந்திருக்கவேயில்லை. இவர் மரணித்த நாட்களில் நிலவிய ஊரடங்குச் சட்டம், பொலிஸ் அராஜக நிலைமை ஆகியவற்றால் அவரது இறந்த தினம் பற்றிய சர்ச்சை இன்றும் தீர்வுபெறாமல் உள்ளது. இதற்குக் காரணம், இவரது மரண அத்தாட்சிப் பத்திரத்தில் இவரது மரணம் 02.06.1981 என்று தவறுதலாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது. இத்திகதியே இவரது சேமக்காலைக் கல்வெட்டிலும் பதியப்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மதகுருக்களை நல்லடக்கம் செய்யும் அந்த சேமக்காலையில் உள்ள மூவரது கல்வெட்டில் முதலாவதாகப் பொறிக்கப்பட்டுள்ள தனிநாயகம் அடிகளின் மரணத் திகதி 01.19.1980 (மரணித்த தினம்: 01.09.1980) என்று கவனயீனமாகப் பொறிக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவரது தும்பளை இல்லத்தில் வாழும் நெருங்கிய உறவினரான மோஸஸ் என்ற ஆசிரியரின் கருத்துப்படி சங். பிதா கலாநிதி தாவீது அடிகளின் உயிரற்ற உடலத்தை 01.06.1981 காலை அவரை எழுப்பச் சென்ற சென். பற்றிக்ஸ் விடுதி ஊழியரே கண்டறிந்தார் எனவும், 2 ஆம் திகதி மிகுந்த சிரமங்களுக்கிடையே தான் அவரது இறுதிக் கிரியைகளை அவசர அவசரமாக நடத்தியதாகவும் என்னிடம் குறிப்பிட்டார். மேலும் தாவீது அடிகளாரின் மருமகனான லோரன்ஸ் எம்.பிலிப்னேரி (Lawrence M.Philip Neri) அவர்கள் கல்லூரி ஆண்டு மலரில் Father and Son என்ற தலைப்பிலான தனது குறிப்பின் இறுதியில் “He continued his research until he passed away suddenly on the night of 31st May 1981, the same night the Jaffna Library was burned down” எனத் தெளிவாக எழுதியுள்ளார். தாவீது அடிகளாரின் மரணத்தின் போது வாழ்ந்தவர்கள் முதுமை காரணமாக மறைந்து போகும் முன்னர் அவரது மறைவின் சரியான திகதி உரியவர்களால் மீளாய்வுசெய்து திருத்தப்படவேண்டும். 

யாழ் நூலக எரிப்பின் பின்னர் மன உளைச்சலுக்குள்ளான அனைவரையும் தேற்றி எடுத்து, தாய்மையின் அரவணைப்புடன் அவர்கள் அனைவரையும்  ஒருமுகப்படுத்தி மீண்டும் நூலகப் பயணத்தைத் தொடர்ந்தார் திருமதி ரூபவதி நடராசா அவர்கள். அக்கால கட்டத்தில் நூலக ஊழியர்கள் 23 பேர் வரையில் பொது நூலகத்தில் பணியாற்றியிருந்தனர். அவர்கள் அனைவரினதும் அயராத உழைப்பின் பயனாக, பீனிக்ஸ் பறவையென நூலகம் சாம்பல் மேட்டிலிருந்து புத்துயிர் பெற்றெழுந்தது. 

selvarajah book

இந்த நூலகத் தகனம் பின்னாளில் முழு நாட்டையுமே அடுத்த 30 ஆண்டுகள் தமிழ் இளைஞர்களின் எழுச்சிமிக்க இன விடுதலைப் போராட்டம் என்ற தீச்சுவாலைக்குள் தள்ளியிருந்தது. யாழ்ப்பாண நூலக எரிப்பு பற்றிய விரிவான தகவல்கள் நூலியலாளர் என்.செல்வராஜா எழுதி 2023 இல் வெளியிட்ட யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு, Rising from the Ashes ஆகிய இரு நூல்களிலும் விரிவாகக் காணப்படுகின்றது. 

நூலக எரிப்பின் பின்பு சில காலத்தில் சுதாரித்துக்கொண்ட எம்மவர்கள்  நூலக சேவையை படிப்படியாகக் கட்டமைக்கலானார்கள். சிறிது காலம் மாநகரசபையின் கட்டிடத்தின் ஒரு சிறு பகுதியில் பத்திரிகை வாசிப்புப் பகுதி மட்டும் இயங்கியது.

எரிந்துபோன யாழ். நூலகத்தை மீளக் கட்டியெழுப்புதல் வேண்டும் என்கிற ஒரே எண்ணம் யாழ்ப்பாண மக்களையெல்லாம் ஒன்றுபடுத்தியது. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் அரச உதவியாக வழங்கிய இருபது லட்சம் ரூபா நிதியுதவிப் பணத்துடன் (யாழ். அரசாங்க அதிபர் பரிந்துரைத்த ஒரு கோடி ரூபா நஷ்ட ஈடு என்றுமே வழங்கப்படவில்லை.) இந்நூலகத்தின் புனர் நிர்மாணப் பணி ஆரம்பிக்கப் பெற்றது. 

பொது நூலகத்திற்கென கட்டிடக் கலைஞர் நரசிம்மன் தயாரித்துத் தந்த மாதிரிப்படத்தின் படி, ஒரு சிறு பகுதியே நூலகம் எரியுண்ட வேளை கட்டிமுடிக்கப்பட்டிருந்தது. 1984 இல் மீள் புனரமைக்கப்பட்ட வேளையில் அதே மாதிரிக் கட்டிட வரைபடத்தின் படி, மேலதிகமாக ஒரு பகுதியையும் சேர்த்து எரிக்கப்பட்ட நூலகத்திலேயே மீள்கட்டுமானப்பணி ஆரம்பிக்கப் பெற்றது.

இப்பணிக்காக பொறியியலாளர் திரு ந. நடேசன் அவர்கள் முழுநேரப் பணியாளராக நியமிக்கப்பெற்று அதற்கான வேலைகளும் துரித கதியில் செயற்படுத்தப் பெற்றது. புனரமைக்கப் பெற்ற நூலகம் மீண்டும் பொது சன உபயோகத்துக்காக 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் நாள் அ.அமிர்தலிங்கத்தினால் திறந்து வைக்கப்பெற்றது.

மீண்டும் இன விடுதலைப் போர்க்காலத்தின்போது, யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்த இராணுவத்தினரின் ஷெல் வீச்சுக்கு இலக்காகி யாழ். மாநகரசபையும் நூலகமும் சேதம் அடைந்து அழிந்து போனதால் நல்லூரில் உள்ள யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான கல்யாண மண்டபத்தில் (இதுவே பின்னர் இந்து விடுதியாக மாறியது) யாழ். பொதுசன நூலகமும் குடியேறியது.

சில காலத்தின் பின்னர் யாழ். நகரில் தொடர்ந்து இடம்பெற்ற போர்க்கால நெருக்கடிகளின் காரணமாக நூலகர் திருமதி. ரூபவதி நடராஜாவும் யாழ்.மாநகரசபை மேலதிகாரிகளும் கூடி ஆராய்ந்த பின் கிளை நூலகங்கள் திறக்கப்பட்டன. அங்கு பிரதான நூலகத்தின் நூல்சேர்க்கைகள் பகிர்ந்து வழங்கப்பட்டன. போதிய முன்னெச்சரிக்கையற்ற இந்தத் தீர்மானம் பொதுநூலகத்தின் கணிசமான நூற்றொகையை இல்லாமல் செய்துவிட்டமை சோக வரலாறாகும். 

1977 முதல் 1987 ஆம் ஆண்டு இறுதி வரையிலான இலங்கையின் வரலாற்று முக்கியத்துவமான பத்தாண்டு காலத்திற்கு திருமதி ரூபவதி நடராஜா அவர்களின் சேவை யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்குக் கிட்டியிருந்தது. உள்ளூராட்சி சேவை நூலகர்களின் அதி உயர் தரமான சுப்ரா கிரேட் (Supragrade) நூலகராக இவர் 1987 இல் தரமுயர்த்தப்பட்டார். யாழ்ப்பாணப் பொது நூலக வரலாற்றில் அதுவரை காலமும் இந்த உயர்தரத்தை எட்டிய முதலாமவர் இவரே என்று கருதுகின்றேன். 

யாழ். பொதுசன நூலகர் திருமதி நடராஜா அவர்கள் 1987 இல் ஓய்வு பெற்றதினால் பதில் நூலகராக திருமதி மங்கையர்க்கரசி நித்தியானந்தன் நியமிக்கப்பட்டார். அவர் 1988 இல் மாற்றலாகிச் சென்றதனால் செல்வி.சுலோசனா இரகுநாதன், திரு.கே.இ.பாக்கியநாதன் ஆகியோர் 1988-1989 காலகட்டத்தில் பதில் நூலகராக நியமனம் பெற்றார்கள். இறுதியில் செல்வி.சுலோசனா ரகுநாதன் நூலகர் பதவியை குறுகிய காலத்திற்கு (01.04.1990 – 30.09.1990) பொறுப்பேற்றிருந்தார். இக்காலகட்டம் நூலகத்தின் தொடர் இடப்பெயர்வுகளுக்கான காலமாக அமைந்தது. ஷெல் வீச்சிலிருந்து பாதுகாப்புக் கருதி பல்வேறு இடங்களுக்கும் நூலகம் நகரவேண்டியிருந்தது. 

வி.எஸ்.தனபாலசிங்கத்தின் காலம்

அதன் பின்னர் திருகோணமலை நகரசபை நூலகத்தின் பிரதம நூலகராக இருந்த திரு. சபாரத்தினம் தனபாலசிங்கம் அவர்கள் யாழ்.பொதுசன நூலக பிரதம நூலகராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அன்று தொடக்கம் இன்று வரை இக்கட்டான காலகட்டங்களில் இவரே நூலகக் கடமைகளை ஆற்றிவருகிறார். எத்தனையோ இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் நூலகத்தின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் கடுமையாக உழைத்துக்கொண்டு மிகவும் துணிச்சலான நூலகராக சக ஊழியர்களுடன் நிர்வாகத்தை நடத்திச் செல்கின்றார்.

V.S. Thanabalasingam

இவர் யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இப்பிரதேசத்தில் பரம்பரையாக வாழ்ந்த குடும்பங்களில் ஒன்றான வேலுப்பிள்ளை சபாரத்தினத்தினம் – பூமணி (பாக்கியம்) தம்பதியினருக்கு 16.7.1949 அன்று பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும், பரியோவான் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டவர். 

யாழ் பல்தொழில் நுட்பக் கல்லுரியில் ஆங்கில மொழி மூல சுருக்கெழுத்து தட்டெழுத்துப் பயிற்சியைப் பெற்ற இவர், யாழ் கூட்டுறவுக் கல்லூரியில்  கூட்டுறவு முகாமைத்துவப் பயிற்சியையும் பெற்றிருந்தார். ஆரம்பத்தில்  நல்லூர் விவசாய உற்பத்தி நிலையத்தில் தற்காலிக இலிகிதராக பணியாற்றிய இவர், இலங்கை நூலகச் சங்கத்தின் நூலகவியலும் தகவல் விஞ்ஞானமும் கற்கை நெறியில்  1972 ஆம் ஆண்டில் இணைந்து அக்கற்கை நெறியின் முதலாம் பகுதியில் சித்தியடைந்தார். அதன் பயனாக இலங்கை உள்ளூராட்சி நூலகர் சேவைக்கு 01.01.1978 ஆம் திகதி நியமனம் பெற்று திருகோணமலை மாவட்ட, நிலாவெளி கிராம சபை பொது நூலகத்தில் நூலகராகப் பதவியேற்றார். அக்கற்கை நெறியைக் தொடர்ந்து பயின்று இலங்கை நூலகச் சங்கத்தின் டிப்ளோமா பரீட்சையை முடித்தார். 

இவரது நூலகச் செயற்பாட்டின் பயனாக 1978 ஆம் வருடம் நிலாவெளி கிராம சபை பொது நூலகம் திருக்கோணமலை மாவட்டத்தின் மாதிரி (Model) நூலகமாகவும்  தெரிவுசெய்யப்பட்டதுடன், நூலகர் தனபாலசிங்கம், பிராந்தியத்தின் சிறந்த நூலகராகவும் திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரால் தெரிவு செய்யப்பட்டார்.

இவரது முயற்சியையும் சேவைத் திறமையையும் அவதானித்த  திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. B.A.J. காசிநாதர், இவரை 01.07.1979 முதல் திருகோணமலை நகர சபைப் பொது நூலகராக இடமாற்றம் செய்திருந்தார். 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருகோணமலை பொது நூலகம் காலனித்துவகால ஆவணங்கள், நூல்களின் இருப்பிடமாகப் பெயர் பெற்றிருந்தது. மிகவும் பழமை வாய்ந்த திருகோணமலைப் பொது நூலகத்திற்கு, நீண்ட காலத்திற்கு முன்னரே ஒரு புதிய கட்டிடம் நிர்மாணிக்க ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. நூலகர் தனபாலசிங்கத்தின் பதவியேற்புடன், கட்டிடம் 1981 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. புதிய கட்டிடத்தில் நவீன முறையில் நூலகத்தை ஒழுங்குபடுத்தி திருகோணமலை மாவட்டத்தில் சிறந்த நூலகமாகத் தொழிற்பட வழிவகுத்த பெருமையும் தனபாலசிங்கத்துக்குரியது. 

இந்நிலையில் இந்திய இராணுவம் இலங்கையில் கால்பதித்து, வடக்கு – கிழக்கை சமாதானப் படை என்ற பெயரில் ஆக்கிரமித்திருந்த வேளை, அவ்வாண்டு இறுதியில் திருமதி ரூபவதி நடராஜா யாழ்ப்பாணப் பொது நூலகத்திலிருந்து பணிஓய்வு பெற்று வெளியேறியிருந்தார். அவரது இடத்தினை தற்காலிகமாக 1988 ஜனவரி முதல், செல்வி சுலோசனா ரகுநாதன் அவர்கள் பொறுப்பேற்றிருந்தார். அவருக்கு உதவியாக, கலாநிதி வே.இ.பாக்கியநாதன் அவர்கள் நூலக ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். திருகோணமலையில் நீண்டகாலம் பணியாற்றியிருந்த திரு. வி.எஸ்.தனபாலசிங்கம் அவர்கள், 1990 ஜனவரி மாதம் தொடக்கம் யாழ் மாநகர சபைப் பொது நூலகத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்தார். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5499 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)