Arts
30 நிமிட வாசிப்பு

கடல் சார் உயிர்ப்பல்வகைமையும் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியும்

October 6, 2023 | Ezhuna

எமது சுற்றாடல் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இக் கூறுகளின் ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கமைந்த செயற்பாடுகளே சுற்றாடலின் நிலைபேறான அபிவிருத்தியில் பங்காற்றும். மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் சுற்றாடல் பற்றி சரிவர அறிந்துகொள்ளப்படுதலும் சிறப்பான வழிமுறைகளில் பயன்படுத்தலும் இக்கூறுகளை பேணிப்பாதுகாத்தலும் முக்கியமானவைகள். அந்த வகையில் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் உயிர்ப்பல்வகைமையின் பங்களிப்பு பற்றிய பயனுள்ள கருத்துகளை ‘வடக்கு–கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ எனும் இக் கட்டுரைத் தொடர் தாங்கிவருகின்றது.

கடல்சார் பல்வகைமை

மேற்பரப்பு நீர்நிலைகளில் ஒன்றான கடல், வடகிழக்கின் முக்கிய சொத்தாகும். பரந்துபட்ட பிரதேசமாக விரிந்து காணப்படும் இந் நீலநிறப் பிரதேசம் அநேக உயிர் இரகசியங்களை உள்ளடக்கியுள்ளது. இப்பிரதேசம் அறுகம்பே கரையிலிருந்து புத்தளம் வரை எம் பிரதேசவாசிகளால் கையாளப்பட்டுவருகிறது. பருவகாலங்களுக்கு அமைய மாறிமாறி வீசும் காற்றலைகளோடு கடலில் குறித்துக்காட்டப்படும் மாற்றங்கள் நிகழ்வதுண்டு. கடற்கரையோரம், கடற்கரையை அண்டிய பகுதி, தரவைக்கடல் மற்றும் ஆழ்கடல் பகுதி என்பன பல்வேறுவகைப்பட்ட சாகியத்தொகுதிகளை உள்ளடக்கியுள்ளன. இவை பற்றிய அறிவு தனித்தனியே ஆராய்தல் பொருத்தமானதாக கருதப்படுவதால் இப் பல்வகைமை முதலில் ஆராயப்படுகிறது.

கடல்நீர் தொடர்ந் தேர்ச்சியாக காணப்பட்டாலும் இலங்கையின் கடற்கரையோரங்களில் கடல் நீரின் உப்புத்தன்மை, அடியின் கீழுள்ளபாறை, அதில் காணப்படும் தாவரங்களின் வேறுபாடுகள், மீனினங்கள், முருகைக்கற்பாறைகள் (Corals) என்பனவற்றில் பல்வகைத்தன்மைஉண்டு. உயிரற்ற காரணிகளில் உள்ள வேறுபாடு கடல் நீரின் வேறுபாட்டைத் தீர்மானிப்பதுடன் அங்குவாழும் உயிரினங்களின் தன்மையிலும் வேறுபாட்டுக்கு வழிவகுக்கும். கடற்சாலைகள், கடற்கரையோரத் தாவரங்கள், கடலினுள் வாழும் அல்காக்கள் மற்றும் இன்னோரன்ன அநேக அறியப்படாத தாவர வகைகள் இப் பகுதிகளில் காணப்படும். பரவைக்கடலிலிருந்து ஆழ்கடல் வரை கிடைக்கப்பெறும் ஒளியின் அளவின் அடிப்படையில் தாவர வகைகளும் அத் தாவரங்களில் தங்கிவாழும் பிற உயிரினங்களும் அவற்றின் பரம்பலில் தனித்துவமான வேறுபாடுகளைக் காட்டிநிற்கின்றன. இப்பரம்பலில் ஏதோவொருவகையில் நாம் உட்கொள்ளும் மீனினங்களில் செல்வாக்குச் செலுத்தும் கடற்தாவரங்கள் நிறைய உண்டு. ஆனாலும் எமக்குப் பயனற்றதாக காணப்படும் தாவர மீனினவகைகளும் அச் சூழலின் நிலைபேறான தன்மைக்கு அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இப்பரம்பலில் காணப்படும் அனைத்தும் பிரயோசனமானவையாகவே கருதப்படவேண்டும். எனவே மனிதகுலத்திற்கு நேரடிப் பயன்தராதவற்றை அழித்துவிட்டு பிரயோசனமானவற்றை வளர்த்தெடுப்பது என்பது விஞ்ஞான ரீதியிலும்சரி, சூழலைப் பாதுகாப்பதிலும்சரி பயனற்றது என்றே சுட்டிக்காட்டப்படுகிறது. உணவுச்சங்கிலி தொழிற்பட, பயனற்றதாக கருதப்படும் உயிரினங்களும் அவசியம் என்பது இக் கருத்தை மேலும் வலுவூட்டுகிறது.

வடக்கு கடல்சார் பல்வகைமை

கடற்கரையோர பல்வகைமை

இப்பகுதிகளில் அநேக பிரதேசங்களில் குடியிருப்புகள் உண்டு. மழைநீரைச் சேமித்து நன்னீர் நிலத்தடி நீராக வழங்கும் பிரதேசங்களில் இக்குடியிருப்புகள் அதிகம் காணப்படும். அவற்றோடு அண்டிய விவசாயம், தென்னைமரச் செய்கை, ஆடுவளர்ப்பு என்பன கடல்சார்பற்ற வருமானம் ஈட்டும் துறைகளாகும். அத்துடன் நாவல் மரக்காடுகள், சிறுபற்றைகள் மற்றும் விறகுக்கு பயன்படுத்தப்படும் வகை வகையான சிறு பற்றைக்காடுகள் என்பன காணப்படும். கடற்கரையோரத்தில் (Beaches) அழகு நிறைந்த மணல்வெளிகள்  பெரிதளவில் உண்டு. காரைநகர் கரையோரத்தில் காணப்படும் கசூரினா கடற்கரை  குறித்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்றாகும். பனை மரங்களோடு ஒட்டிய கசூரினா மரங்களின் பரம்பல் ஏனைய தாவரங்களின் குறைவான வளர்ச்சிக்கு காரணமாகும். அதனோடு ஒட்டிய கீரிமலைப் பிரதேசம் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த பகுதிகளை, தலங்களை கொண்டுள்ளது. நிலாவரைக் கிணற்றிலிருந்து தொடர்புபட்டிருக்கும் இக்கடற்பகுதியில் நன்னீர் கலக்கும் கேணியொன்று உள்ளது. எம்மவர்களின் மதச்சடங்குகளுடன் அதிகளவில் இப்பிரதேசம் தொடர்புபடுகிறது. அதனோடு ஒட்டிய பகுதி ஜம்புகோளப்பட்டினமாகும். இப்பகுதியில் வந்திறங்கிய அசோகச்சக்கரவர்த்தியின் சகோதரியான சங்கமித்த, அரசமரக்கிளையொன்று கொண்டுவந்தார் என்பது ஐதீகம். காங்கேசன்துறையில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம், பருத்தித்துறையில் அமைந்துள்ள இயற்கைத்துறைமுகம், கற்கோளம் கடற்கரை, தாளையடி, முல்லைத்தீவு, நிலாவெளி, பாசிக்குடா மற்றும் அறுகம்பே என்பன பொழுதுபோக்கு நிறைந்த கடற்கரைகளாகும். இப்பகுதிகளில் வெவ்வேறு உயிர்ப்பல்வகைமைகள் காணப்படுகின்றன.  பனைமரங்கள், நாவற்காடுகள், கயூ மரங்கள், கடல்மாங்காய், கொய்யாப் பற்றைகள், இராவணன் மீசை, வாசனை வீசும் தாளைச் செடிகள் போன்றன பல்வகைமையைக் காட்டிநிற்கும் தாவர வகைகளுக்குச் சில உதாரணம்.

biobab tree

தலைமன்னாரை ஒட்டிய மன்னார் கடற்கரையில் அல்லிராணிக்கோட்டை, ஊர்காவற்துறையில் அமைந்துள்ள பூதத்தம்பி கோட்டை, பூநகரியில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டை, இயக்கச்சியில் அமைந்துள்ள குவேனியின் வாசல்தலம், திருமலையிலுள்ள ஒல்லாந்தர் கோட்டை, பண்ணைக்கடற்கரையில் அமைந்துள்ள மற்றுமொரு ஒல்லாந்தர் கோட்டை, மட்டக்களப்பில் அமைந்துள்ள இன்னொரு கோட்டை என்பன இப்பிரதேசத்தின் தந்திரோபாய முக்கியத்துவத்தைக் காட்டிநிற்கின்றன. மன்னார் பள்ளிமுனையில் இருக்கும் பெருக்கமரம், அதோடு ஒட்டிய தள்ளாடிப்பகுதியில் பரந்துகாணப்படும் மூலிகை வகைகள் என்பன கடற்கரையோரத்தின் பொருளாதார முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறு பரந்துபட்ட இந்தக் கடற்பரப்பில் பயன்தரும் அபிவிருத்தி வருமானம் காணப்படுவது கண்கூடு.

கண்டல்நிலமும் பல்வகைமையும்

கடற்கரையை அண்டிய நீரேந்து பகுதிகளில் அவ்வப்போது கடல்நீரும் கலந்துவிடுவதுண்டு. இவ்வகை நீர் உவர்நீர் தொகுதியாக (Brackish) வரையறுக்கப்படும். அதிக நன்னீர் பிடிப்புள்ள பிரதேசங்கள் கண்டல் நிலங்களாகவும் அதிக உவர்த்தன்மையுள்ள பிரதேசங்கள் கடல் நீரேரிகளாகவும் பிரித்தறியப்படும். இவ்விரு பகுதிகளும் வெவ்வேறு உயிர்ப்பல்வகைமைகளை உள்ளடக்குகிறது. உப்பாறு கடல்நீரேரி, தொண்டமனாறு கடல்நீரேரி, யாழ்ப்பாணக் கடல்நீரேரி, சுண்டிக்குள கடல்நீரேரி, சாலை கடல் நீரேரி, நாயாறு ஏரி, கொக்கிளாய் ஏரி என்பன வடகரையிலிருள்ள பிரதான கடல்நீரேரிகளாகும்.

mangrove

உப்பாறில் உள்ள சேற்று மற்றும் உப்புநீர் நிலத்தடிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு பெரிதளவில் வந்து சேரும் யாத்திரீகப் பறவைகள் உண்டு. இவற்றில் பிளமிங்கோ (Flamingos), அன்னப்பறவைகள், எருத்துவாலன் போன்றன முக்கியமானவைகள். இப்பறவைகள் பெருமளவு எண்ணிக்கையாக வருவதுண்டு. சரசாலை மற்றும் புத்தூரை அண்டிய பகுதிகளில் அவிசீனியா, பனை, தென்னை, புல்வெளி, நெற்பயிர்கள் மற்றும் மரக்கறி பயிர்வகைகளும் உண்டு. நன்னீர் செறிவு அதிகரித்து காணப்படுவதே இப்பகுதியின் இவ்வகை பயிர்ப்பரம்பலிற்கு காரணமாகின்றது. 

flamingoes

தொண்டமனாறு கடல்நீரேரியானது அதிகளவு ஆழமற்று சுமார் 45 கிலோமீற்றர் வரை தீபகற்பத்துக்குள் பரவிநிற்கிறது. கடலலையில் ஏற்படும் மாற்றங்களால் இப் பகுதி ஓரளவு உப்புத்தன்மையை கொண்டுள்ளது. இங்கும் கண்டல் நிலத் தாவரங்கள் பெருமளவில் காணப்படுகின்றன. கடல்நீரின் அடியில் காணப்படும் புற்றரை இப் பகுதியின் சிறப்பம்சமாகும். அத்துடன் கரையோரங்களில் அக்கேஷியா (Acacia) எனப்படும் அவரை இனத் தாவரங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண நீரேரியானது அதிகளவில் மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இந்நீரேரியிலும் 3000 இற்கு மேற்பட்ட வெவ்வேறு இனப்பறவைகள் கூட்டம் கூட்டமாக யாத்திரீகம் செய்கின்றன. சுண்டிக்குள கடல்நீரேரியானது மிகவும் பிரசித்தி வாய்ந்தது. ஆணையிறவை அண்டிய நன்னீர் வரத்துகள் இப்பகுதியை நிரப்பும். இக் கடல் நீரேரியில் இறால் பெருக்கம் அதிகமாகக் காணப்படும். இதையொட்டிய கடல் நீரேரி ஒன்று மன்னாாரில் அருவியாற்றுப் பகுதியிலும் உண்டு. சுண்டிக்குளமானது பறவைகள் சரணாலயம் என அறியப்பட்டுள்ளது. நாயாறு மற்றும் கொக்கிளாய் நீரேரிகள் அதிகளவில் இறால் பரம்பலுக்கும் நீர்ப்பிடிப்புக்கும் வழிவகுகிக்கிறது. கொடுவாய், சாரை, பாலை, திலாப்பியா போன்ற மீன்வகைகள் இக்கடல்நீர் ஏரிகளில் அதிகளவில் காணப்படுவதுடன் இறால் மற்றும் சேற்று நண்டுகள் என்பன இப்பகுதியில் வாழும் மக்களுக்கு அதிக நன்மை தருகின்றன.

கடலினுள் உயிர்ப்பல்வகைமை

மிதக்கும் தாவரங்கள், கடலின் மேற்பரப்பில் வேரூன்றி வாழும் தாவரங்கள், அல்காக்கள், பச்சையமுள்ள மற்றும் பச்சையமற்ற தாவரங்கள் என்பன கடலினுள் காணப்படும் தாவரப் பல்வகைமையில் உள்ளடங்கும். இவை பருவங்களுக்கு ஏற்றபடி பரம்பலில் வேறுபாடுகளைக் காட்டிநிற்கின்றன. ஒளிபடும் அளவு, கடலினுள் நிலவும்  காற்றுத் திசைகளின் அசைவு என்பன இத் தாவரங்களின் பல்வகைமையில் பெரும் செல்வாக்கு செலுத்தும் காரணிகளாகும். இவற்றின் பரம்பலும், இறப்புகளும், அசைவுகளும் கடல்மேற்பரப்பில் நிறவேறுபாடுகளைத் தோற்றுவிப்பதுமுண்டு. சூரிய ஒளி படாமலேயே உணவைத் தொகுக்கும் கடல்வாழ் பக்டீரிய இனங்களும் அறியப்பட்டுள்ளன. உப்பு நீரினுள் வாழக்கூடிய பிரிகையடைய வைக்கும் நுண்ணங்கித் தொகுதிகளும் அநேகம் உண்டு.

கடலில் வாழ்ந்து வாழ்க்கை வட்டத்தை முடித்துக்கொள்ளும் அல்லது கடல் அலைகளால் வாழ்விடங்கள் மாற்றப்படும் தாவரங்களில் கடற்சாதாளை ஒன்றாகும். கடற்கரைகளில் காற்றலைகளுடன் கலந்துவரும் கடற்சாதாளை மிகவும் பயனுள்ள ஒன்றாகும். இச் சாதாளையில் அயடீன் மற்றும் பிற மூலகங்கள் காணப்படுகின்றன. இவற்றின் பயன்பாட்டை கடற்கரையோரத்திலுள்ள பயிர்ச்செய்கை வழிமுறைகளுக்கு சாதகமாக்கலாம். கடல் அல்காக்களும் பயன்மிக்கவை. அவற்றிலிருந்து ஜெலற்றின்கள் உருவாக்கப்படுகின்றன. கடற் களைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு, மருந்தாகவும் உரமாகவும் பயன்படுகின்றன.

மிகச்சிறிய நெத்தலி வகையிலிருந்து மிகப்பெரிய சுறாக்கள் வரை மீனினங்கள் பரந்துபட்டு காணப்படுகின்றன. பெரிய மீனினப் பரம்பலில், ஒவ்வொரு பிரதேசங்களிலும் வெவ்வேறு மீன் வகைகள் பிரபல்யமாக உள்ளன. காற்றின் திசை, நீரோட்டத்தின் தன்மை, கடற்தாவரங்களின் பரம்பல் என்பன இம் மீனினங்களில் மட்டுமல்லாது ஒரே மீனினத்தின் வேறுபட்ட காலங்களில் பிடிபடும் அளவிலும், சுவையிலும் பருமனிலும் பெரும்செல்வாக்கு செலுத்துவது கண்கூடு. திருகோணமலை கடற்பரப்பில் பிடிபடும் சூரை வகை மீன்கள் அதிக சுவையுள்ளதும் பருமனுள்ளதும் ஆகும். வடமராட்சிக் கிழக்கு கடற்பரப்பில் பிடிபடும் சூவாப் பாறை, கும்பிளா, சின்னொட்டிப்பாறை என்பவை பிடிபடும் அளவிலும் சுவையிலும் தனித்தன்மை வாய்ந்தவை.

மாசியிலிருந்து சித்திரை வரை மாதகல் கடற்பரப்பில் பிடிபடும் முரல் மீன்கள் சுவையுடையவை. பொன்னாலைக் கடற்பரப்பில் பிடிபடும் திரளிவகை மீன்களும் கற்பிட்டிப் பகுதியில் பிடிபடும் கொய் மீன்களும் அதிக கேள்வியுடையன.முல்லைத்தீவுப் பகுதியில் பெருகும் இறால் வகைகளும் பூநகரி கடற்பரப்பில் பரந்துபிடிபடும் நண்டு வகைகளும் அதிக இலாபமீட்டும் கடற்றொழில் ஆகும். இதுபோன்ற தரவுகளில் தேர்ச்சியடைந்து ஒரு பிரதேசத்தில் பிடிபடும் மீன்களை சரியாக வகைப்படுத்தி, பதப்படுத்தி, பல்வேறுவகைப்பட்ட பகுதிகளுக்குப் பகிர்ந்தளிப்பதன் மூலமாக கடற்றொழில் அதிக வருவாயை தரவழியுண்டு. கடல்சார்ந்த பல்வகைத் தன்மையில் மிகமுக்கியமாக குறிக்கப்படவேண்டிய பிரதேசம் மன்னார் வளைகுடா ஆகும். மன்னார் வளைகுடாவின் கடல்சார் உயிர்ப்பல்வகைமை பிரசித்திபெற்றது. தலைமன்னாரிலிருந்து வங்காலை வரை, இலுப்பைக் கடவையிலிருந்து சங்குப்பிட்டிவரை பல்வேறுவகை மீனினங்கள் பிடிபடுவது, குறித்துச் சொல்லப்பட வேண்டிய விடயமாகும். இவ் வளைகுடாவின் பூகோள அமைப்பு, காற்றின் திசைக்கேற்ப வருடம் முழுவதும் மீன் பிடிபடும் தன்மையை சாதகமாக்குகிறது. அதிகளவில் பிடிபடும் மீன்களை கருவாடாக்கி பேணிப்பாதுகாக்கும் காலநிலையும் (வெப்பம்,காற்று) இப்பிரதேசத்தில் காணப்படுவது மீன்பிடி அபிவிருத்திக்கு முக்கியமானது. 

ஓடுகளைக் கொண்டு ஓடித்திரிந்து வாழும் உயிரினங்கள் கடலடியில் காணப்படும். இறால், மட்டி, சிங்கறால், நீலக்காலி, பெருநண்டு, கணவாய், ஓட்டுக்கணவாய், ஊசிக்கணவாய் ஆகிய இவ்வகை கிறஸ்றேஸியாக்கள் கடலினுள் காணப்படும். இனம்பெருகும் காலங்களில் அதிக சுவைகொண்டிருக்கும் இவ்வகை உயிரினங்கள் பெரிதளவில் அகப்படுவதால் கடற்தொழிலாளர்கள் அதிக லாபம் ஈட்டுவர்.

மன்னார் வளைகுடா, மீனினங்களின் உயிர்ப்பல்வகைமைக்கு முத்தாப்பாய் திகழும் (hot spot) கடற்பரப்பாகும். இப் பகுதிகளில் சரட்டை, கட்டாப்பாறை, விளைமீன் என்பன அதிகளவில் பிடிபடுவதுண்டு. வடகீழ் கடற்கரைகளில் ஏற்படும் பருவப்பெயர்ச்சிக் காலங்களின் மாற்றம், சில காலங்களில் வேறெங்கும் இல்லாத பெருந்தொகையான மீன்வகைகளை இப்பிரதேசத்துக்கு கொண்டு வருவதுண்டு. இப்பிரதேசம் கடலை  அண்டிய உயிர்ப்பல்வகைமையின் பெருக்கத்திற்கு பங்காற்றுவது தெளிவாக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவிலேயே அதிகளவில் காற்று வீசும் பகுதி ஆணையிறவிலிருந்து கிளாலியூடாக தனங்களப்பைச் சென்றடையும் கடற்பகுதி என கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியின் காற்றாலை விசிறிகள் மின்னுற்பத்திக்கு உதவுகிறது. இதையொட்டிய பிரதேசத்தில் உப்பளம் அமைத்தலும் உப்புற்பத்தியை அதிகரிக்க உதவும். இதேபோன்ற ஒரு பகுதியே கற்பிட்டி கடற்பரப்பிலும் காணப்படுகிறது.

கிழக்கு கடல்சார் பல்வகைமை

கரையோர பல்வகைமை 

கிழக்கு கரையோரமாக பரந்திருக்கும் கடற்பரப்பில் உள்ள உயிரியல் பல்வகைமையையும் அறிந்துகொள்வது பிரதானமானது ஆகும். அண்மைக்கால தரவுகளின்படி, நாட்டின் மொத்த கண்டல் நில உயிர்பல்வகைமைகளில் 33 வீதமும், உப்புசார் நீர்ப்பரப்புகளில் 20 வீதமும் 5 வீத மண் மேடுகளும் 30 வீத கடற்கரையோரங்களும் 25 வீத நன்னீர் ஏரிகளும் கிழக்கு கரையோரமாக காணப்படுகிறது. இக் கரையோரப் பகுதிகள் சூழலியல் சார்பான முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. வடகரையோரம் போன்று அல்லாது இக் கடற்பரப்பானது தனித்துவமாக விளங்குகிறது. இங்கு குடாக்கடல்கள் அதிகமாயுள்ளன. கல்முனை, கல்குடா, வாகரை மற்றும் கோமாரி என்பன ஆழமான கடற்கரைகளாகும். இங்கு முருகைக்கற்பாறைகள், கடற்களைகள் மற்றும் கடற்கரைப் புல்வெளிகள் அதிகமாக காணப்படுகின்றன. 

திருகோணமலை கடற்பரப்பில் திமிங்கலங்களும் டொல்பின்களும் அவ்வப்போது தென்படுகின்றன. 5 தொடக்கம் 15 மீற்றர் ஆழத்தில் தோண்டியெடுக்கப்பட்ட மாதிரிகள் பல்வகை கடல் அட்டைகளின் பரம்பல் திருகோணமலை கடற்பரப்பில் உள்ளமையை எடுத்துக்காட்டுகின்றது. பெரிய கறுப்புக் கடலட்டை (Holothuria Nobilis) பெரிய மண்ணிறக் கடலட்டை (Holothuria Scabra) மற்றும் சிறிய வெள்ளை-கறுப்பு நிறமுள்ளவை (Actinopyga Mauritiana) என்பன கண்டறியப்பட்டுள்ளன. மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதிகளிலும் இவை தென்படுகின்றன. ஏப்ரலிலிருந்து ஜூலை வரை புல்மோட்டை, கல்குடா, பானம ஆகிய பகுதிகளில் முருகைக்கற்பாறைகளுக்கு இடையில் சிங்க இறால் (Lobster) அதிகமாக பிடிபடுகின்றது. சிப்பிகளுக்காக முகமூடியணிந்து கீழே சுழியோடுவதும் இங்கு வழக்கத்திலுள்ளது. 

ஆழமான நீலக் கடற்கரைகளில் அதிகளவு மீன்கள் பிடிபடுகின்றன. கெலவெல்லா, சூரை போன்றன அவற்றுள் சில. கடற்களைகள் பாய்விரித்தது போன்று தோற்றத்தை அளிக்கும் பல்வகை அல்காக்கள், பாறைகளிலும் அதிகளவு சூரியஒளி படும் இடங்களிலும் காணப்படுகின்றன. கிழக்கு கரையானது மண்ணிற அல்காக்களுக்கு பிரபல்யமானது. உதாரணமாக Sargassum எனும் மண்ணிற அல்காவானது கிண்ணியா கடற்பரப்பில் அண்ணளவாக 50 ஆயிரம் கிலோ கிராம் அளவில் வருடமொன்றுக்கு பெறக்கூடியதாக உள்ளது. Caulerpa, Ulva, Halimeva, Enteromorpha மற்றும் Codium எனும் பச்சை நிற அல்காக்கள் பெரிதளவில் காணப்படுகின்றன. Padina என அழைக்கப்படும் பச்சை நிற அல்கா பாசிக்குடாவிற்கு தனித்துவமான நிறத்தைக் கொடுக்கிறது. சுனாமியின் தாக்கம் இவ் அல்காக்களின் பரம்பலில் கணிசமானளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. 

கடற்புற்கள் (Sea grasses)

கடற்கரையை அண்டிய கடல்மேற்பரப்பில் நீண்டு நெடுத்துவளரும் புல் போன்ற தாவரங்கள் காணப்படுகிறது. உலகில் காணப்படும் 50 வகையான இவ்வகைக் கடற்புற்களில் இலங்கையில் 7 வகை கண்டறியப்பட்டுள்ளது. கோணேஸ்வரக் கோவிலை அண்டிய பகுதிகளில் இவை அதிகமாகத் தென்படுகின்றன. கிழக்கு கடற்கரையானது இலங்கையின் மொத்த உயிர்ப் பல்வகைமையில் 60 தொடக்கம் 80 வீதமான கடற்புற்களின் பல்வகைமையைக் கொண்டிருக்கின்றது.

கிழக்குக்கரையின் அழகான கற்பாறைகள் (Coastal coral reefs) 

Flagella எனப்படும் சவுக்கு போன்ற தாவரங்களின் வாழ்விடமாகத் திகழும் கற்பாறைகள், அந்த தாவரங்கள் இறந்தவுடன், சிறிய துளைகள் போன்ற அமைப்புடன் வெவ்வேறு வடிவத்தை அடைகின்றன. விசேடமாக கடல் உணவுச் சங்கிலியில் இவை பெரும்பங்காற்றுகின்றன. திருகோணமலைக் கடற்பரப்பில் காணப்படும் புறாமலையில் அதிகளவில் இக் கற்பாறை காணப்படும். வெவ்வேறு நிறங்களையுடைய தாவரச் செறிவுகள் இத் துளைகளில் வாழ்வதால் பல வர்ணங்களை உண்டாக்கும் மிக அழகான கடல் அடியைத் தோற்றுவிக்கின்றது. புறாமலையை அண்டிய பகுதிகளில் நிறமுள்ள மீன்களின் பரம்பலும் சிறிய சுறாக்களின் வருகையும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் வரவேற்று பெரும் இலாபமீட்டும் சுற்றுலாத் துறைகளில் ஒன்றாகும். 

pigeon island

கடற்கரை (Beach)

கிழக்குக் கரையின் 8 கிலோ மீற்றர் நீளத்தில் 6 மில்லியன் தொன் கனிய மணல் காணப்படுகின்றது. இதில் 72 வீத லிமொனைட் 10 வீத Zircon, 8 வீத Rutile, 0.3 வீத Monazite என்பன காணப்படுவதால் இப் பிரதேசம் உலகிலேயே செறிவான கனிய மணலாக கருதப்படுகின்றது. புல்மோட்டை, திருகோணமலையை அண்டிய பகுதிகளிலேயே இவ்வகை மணல்கள் செறிவாகக் காணப்படுகின்றது. நண்டு, இறால், கணவாய், சிறிய பறவைகள் என்பன இக் கடல் வெளிகளில் காணப்படுவதால் சுற்றுலாத்துறை நன்கு வளர்ந்துள்ளது. வாகரை, வெருகல், கோமாரிக்  கடற்கரைகளில் பெரிதளவில் கடலாமைகள் காணப்படுகின்றன. இவை அழிந்துவரும் இனமாகையால், கடல் மேற்பரப்பில் இவ்வகை ஆமைகள் இடும் முட்டைகளைப் பார்க்கவும், பொரிக்கும் குஞ்சுகளை கடலில் விடவும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். 

மண்மேடுகள் 

பொத்துவில், பானம மற்றும் அம்பாறைக் கடற்பரப்பில் பெரிதளவில் மண் மேடுகள் காணப்படுகின்றன. அண்ணளவாக 25 மீற்றர் உயரத்துக்கும் 500 மீற்றர் அகலத்துக்கும் இவ்வகை மண்மேடுகள் இயற்கையாக அமைந்துள்ளன. வட கடற்பரப்பிலும், உதாரணமாக மணல்காடு மற்றும் கௌதாரிமுனைப் பகுதிகளிலும் இவ்வகை மண்மேடுகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துவருகின்றன.

நாவல் மரம், வேம்பு, எருக்கலை போன்றனவற்றுடன் வளர்ந்துநிற்கும் பனைமரங்கள் இவ்வகை மண்மேடுகளை அழியாமல் பாதுகாப்பதுடன் குறிப்பிட்ட வகைப் பறவைகளின் வருகையும் இப் பிரதேசத்தில் நிகழ்வது வழக்கம். சுனாமி இம் மண்மேடுகளை அழித்ததும் பதிவாகியுள்ளது.

உப்புத் தரவைகள்

கடற்கரையை அண்டிய சில பிரதேசங்கள் தாழ்நிலமாக இருப்பதால் உப்புச்செறிந்த உவர் நீர்நிலைகள் அங்கு காணப்படுகின்றன. அதிக வெப்பநிலையில் நீர் ஆவியாவதால் அப் பிரதேசங்கள்  உவர் நிலமாவதுடன் சில வேளைகளில் உப்புப் படிதலும் ஏற்படும். மட்டக்களப்பு திருகோணமலைப் பகுதிகளில் காணப்படும் இவ் வகை உப்புசார் நிலங்களில் Salicornia, Artcrocnelum போன்ற தாவரங்கள் வளருகின்றன. தம்பலகாமம், சத்துருகொண்டான், வாகரை போன்ற பகுதிகளில் இவை அதிகம் உள்ளன. 

Salicornia

கண்டல் நிலப் பல்வகைமை

விசேடித்த தன்மைகளைக் கொண்ட இக் கண்டல் நிலப் பரப்பானது வடக்கைப் போன்று கிழக்கிலும் பெரிதளவில் பரம்பி நிற்கிறது. இவை கடல் நீரேரிகளுடன் நெருங்கி காணப்படும் உப்புத் தன்மை குறைந்த நீர்ப்பரப்பாகையால் இங்கு வளரும் தாவரங்களுக்கு அடியில் கடல்நீரேரியில் வளரும் அநேக மீன்களுக்கு இது இனப்பெருக்கம் செய்யும் இடமாக (Breeding Nurseries and Hatcheries) அமைவது தனித்துவமானது. அண்ணளவாக 50 தொடக்கம் 75 வகையான உயிரினங்கள் இக் கண்டல் நிலங்களில் காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது. கிழக்கு கரையில் காணப்படும் இக் கண்டல் நிலமானது நாட்டின் 35 சதவீதத்தை உள்ளடக்குகிறது. கெளிரு, சுங்காண், நான்கு ஐந்துவகையான சிறுநண்டுகள், இறால், சேற்று சிங்க இறால் எனும் மீனினங்கள் அதிகளவில் இங்கு பிடிபடும். முதலைகள், கண்டல் பாம்புகள் என்பனவும் அவ்வப்போது தென்படுகின்றன. இவ்வகை கண்டல் நிலமானது சுற்றாடலின் பாதுகாவலாளி என அழைக்கப்படுவது பொருத்தமானது. ஏனெனில், உயிர்ப்பல்வகைமைகளை தகாத மற்றும் ஒவ்வாத சூழ்நிலைகளிலும் பேணிப்பாதுகாத்து வைப்பதில் இது முக்கியம் வாய்ந்தது. 

கடற்கரையோர சிறுகாடுகள்

கடற்கரையை ஒட்டி, சற்று உள்நுழையும் போது சிறிய காட்டுப் பகுதிகளும் தென்படுவது வழக்கம். வேம்பு, அன்னமுன்னா, பனை, எருக்கலை, நாவல், பாலை போன்றன கிழக்குகரையில் பிரபல்யமானவை. 1978 ஆம் ஆண்டில் வீசிய சூறாவளி மற்றும் 2004 இல் ஏற்பட்ட சுனாமி என்பன இக் கரையோர தாவரப்பரம்பலை தாக்கியழித்தது ஞாபகப்படுத்தப்படவேண்டிய ஒன்றே.

கடற்கரையை அண்டிய விவசாய நிலங்கள்

இப் பிரதேசங்களில் உப்புத் தரவைகள், உவர் நிலங்கள், கடல்வெளிகள் என்பன காணப்பட்டாலும் அவ்வப்போது விவசாய நிலங்களும் தென்படும். இவ் விவசாயமானது கடற்கரை விவசாயம் என குறித்துச் சொல்லப்படுகிறது. தென்னை, மரமுந்திரிகை, சவுக்கு, பனை போன்ற பெருமரங்களும் வெங்காயம், மிளகாய், கத்தரி, வெற்றிலை மற்றும் சிறு சிறு பிரதேசங்களில் நெற்செய்கையும் கிழக்கு கரையோர கடற்பரப்பு விவசாயப் பயிர்களாக இருக்கின்றன.

அபிவிருத்தியில் கடல்சார் பல்வகைமை

கனிமங்களிலிருந்து கடல்சார் பல்வகைமைகள் வரை இக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது. இவற்றோடு இணைந்த அபிவிருத்திகள் பற்றிய பார்வையொன்றும் பதிவாக்கப்படவேண்டும். அவ்வகையில் காங்கேசன்துறை கடற்பரப்பில் தோண்டப்படும் முருகைக்கல்லானது சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதான மூலப்பொருளாக அமைந்தது சகலரும் அறிவர். இப்பிரதேசத்தின் தனித்துவம், நாட்டின் அபிவிருத்தியில், விசேடமாக வடக்கின் அபிவிருத்தியில் பாரிய பங்காற்றியது. இக் கடற்கரை கப்பற்போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்திருப்பது பெரும் வரப்பிரசாதம். அண்டிய கடற்பரப்பான கசூரினா கடற்கரை மற்றும் கீரிமலை போன்ற பிரதேசங்கள் சுற்றுலாத்துறையில் அங்கம் வகிக்கிறது. கற்பிட்டி கடற்பரப்பில் இறால் வளர்ப்பு அதிக இலாபம் ஈட்டும் அபிவிருத்தி முனைப்பாகும். மன்னார் வளைடா, பூநகரி கடற்பரப்பு, பண்ணை, பொன்னாலை போன்ற பிரதேசங்களில் அதிகளவு பல்வகைமை காணப்படுவதால் மீன், இறால், ஏற்றுமதி செய்யப்படும் நண்டு, விலையுயர்ந்த கருவாடு போன்றன வருவாயைத் தருவனவாக அமைகின்றன. கிளாலிக் கடற்பரப்பில் அமைந்துள்ள பாரிய காற்றாலைகள் கணிசமான அளவு மின்னுற்பத்தியைச் செய்கின்றன. ஆணையிறவில் உப்பளத் தொழிற்சாலை மற்றும் புதுப்பிக்கப்படக்கூடிய இரசாயனத் தொழிற்சாலை என்பன பெரும் அபிவிருத்திப்போக்கில் பங்களிக்கின்றன. சுண்டிக்குள கடல் நீரேரியானது பறவைகளின் சரணாலயமாக கருதப்படுகிறது. இச் சுண்டிக்குள சரணாலயமானது காலநிலை வேறுபாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பறவையினங்களின் சரணாலயம் ஆகும். இந்தியா, நேபால், பாகிஸ்தான் மற்றும் சைபீரியா போன்ற தூரத்தொலைவிலுள்ள நாடுகளிலிருந்தும் விதம் விதமான பறவைகள் வந்து தங்கி இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. இக்காலப் பகுதியில் பறவையினங்களை அவதானிப்பதற்கு (Bird watching) பல்வேறு நாடுகளிலிருந்து உல்லாசப் பிரயாணிகளும் ஆராட்சியாளர்களும் கூட வருவதுண்டு.

முல்லைத்தீவு கடற்பரப்பில் விளையும் இறால் வகைகள் அதிக இலாபமீட்டுவன. புல்மோட்டைக் கடற்பரப்பின் இல்மனைட் பரம்பல் செறிவான கனிய மணல் பிரதேசத்திற்கு உதாரணமாகும். நிலாவெளி மற்றும் திருகோணமலைக் கடற்பரப்பின் கடற்கரையோரம் சுற்றுலாத் துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. திருக்கோணேஸ்வரத்துக்கு அருகில் திமிங்கலம், டொல்பின் அவதானிப்பும் புறாமலையின் Coral reef, பன்நிற மீன்களின் பரம்பல் என்பனவும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. வடக்கு-கிழக்கு கடற்பரப்பில் காணப்படும் கடலட்டை, ஏற்றுமதி வருவாயை ஈட்டித்தரவல்லது. இப்பிரதேசங்களில் காணப்படும் பரந்துபட்ட கடற்களைகள் விவசாய அபிவிருத்தியில் ஈடுபடுத்தப்படக் கூடியதுடன் கடற்களைப் பண்ணை அமைப்பதன் ஊடாக ஏற்றுமதிக்கும் வழிவகுக்கின்றது. 

கடற்கரையோர விவசாயம், கடற்கரையோர பெருமரங்கள் என்பனவும் உணவு உற்பத்தியிலும் விறகு போன்ற எரிபொருள் உற்பத்தியிலும் வருவாயைப் பெற்றுத் தருகின்றது. கற்பிட்டி, தலைமன்னார், காங்கேசன்துறை, மயிலிட்டி, பருத்தித்துறை, முல்லைத்தீவு, திருக்கோணேஸ்வரம் போன்ற பகுதிகளில் ஆழ்கடல் கப்பற்போக்குவரத்து மேற்கொள்ளக்கூடிய வகையில் இயற்கையாகவே அமைந்துள்ள, மெருகூட்டிக் கட்டப்பட்டிருக்கும் துறைமுகங்களும் கணிசமான பங்களிப்பை அபிவிருத்தியில் செலுத்துகின்றது. பரந்து செறிவாக வளர்ந்தோங்கி நிற்கும் பனைமரங்களும் வடக்கு-கிழக்கின் தனித்துவமான அபிவிருத்தியில் பங்காற்றுகின்றன. கடற்கரை, கண்டல் நிலம், உப்புத்தரவை, கடற்கரையோரக் காடுகள் சிறுபற்றைகள், கடற்கரை விவசாயம் என்பனவும் கடற்கரையோர மக்களின் அன்றாட வாழ்வின் அபிவிருத்திக்கு ஓர் ஆணித்தரமான அடித்தளமாகும். இதுபோன்ற அதிக செறிவுள்ள வருவாயீட்டும் வளங்களை சீராக ஒருங்கமைத்து சரியான திட்டமிடலுடனும் பொருத்தமான கருத்திட்டங்களுடனும் செயற்படுத்தினால் இவற்றை மேலும் விரிவாக்க முடியும். 

கடல்சார் பல்வகைமை எதிர்கொள்ளும் அச்சுறுத்தலும் பாதுகாப்பு வழிமுறைகளும்

பாய்மரக்கப்பல், பாய்மரப்படகு, வள்ளங்கள், தெப்பங்கள் என்பனவற்றை பயன்படுத்தும் காலத்திலிருந்து இயந்திரப் படகுகளும் கப்பல்களும் பயன்படும் காலத்திற்கு வந்துள்ளோம். பொருள்களின் பரிமாற்றம் கப்பற்போக்குவரத்தில் தங்கியுள்ளது. இப் பரிமாற்றம் இன்றியமையாத ஒன்றாகும். இப் போக்குவரத்துக்கு பயன்படும் எரிபொருளும் பிளாஸ்டிக் கழிவுகளும் கடலில் நஞ்சாக்கலை ஏற்படுத்துகிறது. கடல்சார் விபத்துகள், எண்ணெய்க்கசிவுகள் போன்றன சுவாசத்துக்காக மேற்பரப்பை நாடும் உயிரினங்களை அழிந்துவிடுகின்றன. மேற்பரப்பில் தங்கிநிற்கும் கரிய நிறப்பொருள்கள் ஒளி உட்புகுதலை தடுப்பதால் கடல்வாழ் தாவரங்களின் பெருக்கத்துக்கு பெரும்பாதிப்பு ஏற்படுகின்றது. கடலில் ஏற்படும் மனித, மீனினங்களின் இறப்புகள் உயிர்ப்பல்வகைமையில் பாதகத்தை விளைவிக்கும். 

வளைகுடாவில் காற்றின் திசையினால் ஒதுங்கும் மீன்களை பிடிப்பதற்கு படையெடுக்கும் அயல்நாட்டு கடற்தொழிலாளர்கள் எம் பிரதேச மீன்களை வாரிக்கொண்டு போதலால் இப்பகுதி உயிர்ப்பல்வகைமையின் நிலை கேள்விக்குள்ளாக்குகின்றது. இவை மட்டுமல்லாது கடற்கரையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைள் மண்ணரிப்பை தூண்டுவதோடு கடற்கரை உயிர்பல்வகைமையை சேதப்படுத்துகின்றன. வரையறையற்ற மணல் அகழ்வு மற்றும் பேணிப்பாதுகாக்கப்படாத உவர்நீர் தடுப்பு அணைகள் என்பனவும் இப்பிரதேசங்களின் பல்வகைமையில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளாகும். அத்துடன் கைத்தொழில் கழிவுகள், அழிவடையாத பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள், விவசாய நச்சுப்பொருள்களின் வெற்றுப்பாத்திரங்கள் என்பன கடற்கரையை வந்தடைவதைக் காண்கின்றோம். இவற்றிற்கும் சரியான மீள்சுழற்சிப் பொறிமுறையொன்று கண்டடையப்பட வேண்டும். முறையாக கட்டப்படாத உப்புநீர் தடுப்பணைகள் மறுசீரமைக்கப்பட்டு, நீளம் மற்றும் உயரங்களை அதிகரித்து, உட்புறமுள்ள விவசாய நிலங்களை உவரடையாமல் செய்வதும் ஏற்ற பொறிமுறையாகும்.

கடற்கரையோரத்தில் காணப்படும் தாவரவகைகளில் பெரும்பகுதியானவை கரையோரப் பகுதிகளில் மண்ணரிப்பைத் தடுப்பதில் பங்காற்றுகின்றன. அவை கடற்கரையோர ஏனைய விலங்குகளுக்கு உணவாகவும் பரிமாறப்படுகிறது. இத் தாவரவகைகளின் பரம்பலானது பறவைகளுக்கு தங்கும் இடத்தைத் தருகின்றது. ஆகையால் கடற்கரையோரப் பாதுகாப்பில், விசேடமாக தாவரங்களில் கவனம் செலுத்தப்படவேண்டும். முறையற்ற, வரையறையில்லாத கரையோர நிலங்களின் பயன்பாடு, தாவரங்களை அழிவடையச் செய்துவதும் உண்டு. ஒரு சாகியத்தின் சமநிலையானது ஒரு உயிருள்ள அங்கியினால், அவ் அங்கியின் அழிவினால் பெரிதளவில் செல்வாக்குச் செலுத்தப்படுவது வரலாற்று உண்மை. ஆகவே கடற்கரையோர அபிவிருத்தியில் உயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்பு பிரதானமாக கருதப்படவேண்டிய ஒன்று.

இவைமட்டுமல்லாது அவ்வப்போது ஏற்படும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் கடலோடு ஒட்டிய உயிரற்ற மற்றும் உயிர்ப் பல்வகைமையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை பற்றிய பூரண அறிவும் முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மீள்சுழற்சிக்குரிய நடவடிக்கைகளும் இவ்வகைப் பாதிப்பைத் தடுப்பதிலும் அவற்றிலிருந்து மீண்டுகொள்வதற்கும் வழிவகுக்கும்.

கடற்கரையோர மண்ணரிப்பையும் நீர்நிலைகள் மற்றும் அதனோடு ஒட்டிய உயிர்வாழ் சாகியங்களின் சமநிலைகளை சரியாகப் பேணிப்பாதுகாப்பதில் கரையோர மரநடுகை முக்கியமானது. கசூரினா (சவுக்கு), வேம்பு, பனை, நாவல், பாலை, அவிசீனியா போன்ற தாவர இனங்கள் இக் கரையோர மரநடுகைக்கு மிகவும் பொருத்தமுடையதாகும். கடலும் கடல்சார் பகுதிகளிலும் உள்ள குறித்துக் காட்டப்பட்ட பல்வகைமைகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தி உயிர்ப்பல்வகைமையை பேணிப்பாதுகாப்பதோடு வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் பங்காற்ற வழிசெய்வோம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8346 பார்வைகள்

About the Author

சி. ஜேம்சன் அரசகேசரி

விவசாய விஞ்ஞானியும் சூழலியலாளருமான கலாநிதி.சி.ஜேம்சன் அரசகேசரி அவர்கள் விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் முன்னைநாள் மேலதிக பணிப்பாளர் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான இவர் விவசாயத்துறையில் மூன்று தசாப்தங்களாக பயனுள்ள பங்காற்றி வருவதுடன் மிளகாய், வெங்காயம், நிலக்கடலை, குரக்கன் மற்றும் மா போன்ற பயிர்களில் புதிய வகைகளைக் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயம் சம்பந்தப்பட்ட அநேக பிரச்சினைகளின் தீர்வுகளுக்கு வழிவகுத்துள்ள அரசகேசரி அவர்கள், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் விவசாய மற்றும் சுற்றாடல் சம்பந்தப்பட்ட கருத்திட்டங்களுக்கு ஆலோசகராகவுள்ளதுடன் சமூக சேவையாளராகவும் திகழ்கிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)