Arts
11 நிமிட வாசிப்பு

வேட்டையாடப்படும் வேடமொழி

June 8, 2023 | Ezhuna

இலங்கைத் தீவின்  பூர்வீக குடிகளாக சிங்களவர்களையும்  மற்றும் தமிழர்களையும்  அவர் தம் பேரினவாத சிந்தனையானது,  பல வரலாற்று புனைவுகளின் ஊடாக இற்றை வரை  தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால்  இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் வேடுவர் என்பதை எவரும் மறுக்கவியலாது. அதனடிப்படையில், கிழக்குக் கரையோரம் எங்கும் வாழும் இன்று தமிழை பேசு மொழியாகக் கொண்டுள்ள வேடுவர்களின் இருப்பியல் பற்றியும், அவர் தம் தேவை பற்றியும் ‘வேடர் மானிடவியல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் ஆய்வுப்பாங்கில் விவரிக்கின்றது. வேடுவர்களுக்கே உரித்தான அடையாளங்களை வெளிக்கொணர்வதாகவும், இதுவரை நாம் அறிந்திடாத வேடுவர் குணமாக்கல் சடங்குகள், இயற்கையுடன்  பின்னிப்பிணைந்த அவர்களின் வாழ்வியல், வேடுவர் மீதான ஆதிக்க சாதியினரின் பாகுபாடுகள் என்பன உள்ளிருந்து மரபு மீட்கும் நோக்கில் பிரதானமாகக் கண்டறியப்பட்டு, அவை தொடரின் ஊடாக முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் காலனிய எண்ண மேலாதிக்கத்துள் சிக்குண்டு அழிந்துகொண்டிருக்கும், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவர் தம் மானுட நகர்வுகள் முதலான பல அல்லோல கல்லோல நிலைமைகளும் இதில் விரிவாகப் பேசப்படுகின்றன.

மனித இனத்தின் தோற்றத்தில்  இருந்தே மொழியின் தோற்றத்தினையும் கருத்திற்கொள்ள முடியும். மனிதத் திரள்களின் தொடர்பாடல் ஊடகமாக மொழியானது ஆரம்பத்தில் இருந்து பயன்பட்டு வருகிறது. இது தொடக்கத்தில் சைகை, ஊமத்தில் இருந்து பின்னர் ஒலிவடிவம், எழுத்து வடிவம், பேச்சு வழக்கு, இலக்கண வழக்கு என்னும் படி நிலைகளை மனித வரலாற்றுப் போக்கின் அடிப்படையில் கண்டு கொண்டது. இவ்வாறான மொழியினை “ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்துதற்கு ஒரு கருவியாகக் கொள்ளும் ஒலித்தொகுதியே மொழி” என்பார் பாவாணர்.

பேசப்படுவதும், கேட்கப்படுவதுமே உண்மையான மொழி எனலாம் இருந்தும் எழுதப்படுவதும், படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படுதும் கூட மொழியாகும். இவைகளையன்றி வேறுவகை மொழி நிலைகளும் உண்டு. அதாவது எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவைகளும் மொழியே ஆகும் என்பர் அறிஞர்கள். எனவே மொழி என்பதை சைகை, ஊமம், பேச்சு, எழுத்து, எண்ணம் என்றும் பல நிலைகளில் அறியலாம். இதில் ஒலி வடிவான குறியீடுகளைக் கொண்டது பேச்சுமொழி; வரிவடிவான குறியீடுகளைக் கொண்டது எழுத்து மொழி என்று பொதுவாக வகைப்படுத்த முடியும். என்னதான் பேச்சு மொழியில் ஒலி வடிவம் இருந்தாலும் சரி அதில் சைகைகளின் ஆதிக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

உலகில் மொழிகள்

சுமார் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் உலகளவில் பேசப்படுகின்றன. இதில் 2000க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை 1000 க்கும் குறைவானது. 150-200 மொழிகள் மட்டுமே 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களால் பேசப்படுகின்றன. அவ்வகையில் ஆசியா, ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய கண்டங்களில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மொழிகள் பல மொழியினங்களில் அடங்கும். திராவிட மொழியினம், ஆரிய மொழியினம், முண்டா மொழியினம் என்பவை இந்தியாவில் வழக்கில் உள்ளவை. கிரேக்கம், இலத்தீன், ஜேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், வெல்ஷ் ஆகிய ஐரோப்பிய மொழிகளும் ஆரிய மொழியினத்தைச் சார்ந்தனவாகவே கருதப்படுகின்றன. அத்துடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, பிராகுவி போன்ற மொழிகள் திராவிட மொழியினத்தைச் சார்ந்தவையாகவேப் பார்க்கப்படுகின்றன. சீனமொழி, திபேத்திய மொழி, பர்மிய மொழி, சயாம் மொழி ஆகியவை ஓரினத்தைச் சேர்ந்தவை. ரஷ்யாவிலும் துருக்கியிலும் வழங்கும் மொழிகள் சிந்திய மொழிகளாகும். அரேபியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் வழங்கும் மொழிகள் செமிட்டிக் மொழிகளாகும்.  இதுபோல தான் இலங்கையின் ஆதிக்குடிகளான வேட்டுவ மக்களின் மொழியானது கிரியோல் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததொன்றாகக் கருதப்படுகிறது.

vedas-2

நமது மனதின் உள்ளே, ஏதாவது ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதும் மொழியின் ஒரு நிலை ஆகும். பலர் சேர்ந்து ஓர் இனமாக வாழ்கிறார்கள் என்பதற்கு அவர்களின் நிறமோ, பழக்கவழக்கங்களோ காரணமில்லை. மாறாக அவர்கள் ஒரே மொழியைப் பேசுவோராக இருப்பது தான் காரணமாகும் என்பர் மொழியியலாளர்கள். எனவே மொழி என்பது ஓர் இனத்தின் அக புற அடையாளம் எனலாம். இதனடிப்படையில் தான் மொழி என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு விடயமாகின்றது. தற்போது இலங்கையில் வாழும் ஆதிக்குடிகளின் வாழ்க்கை முறையானது சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையிலிருந்து மாறுபட்டதைப் போன்று அவர்களது மொழியும் மாறுபட்டதாகவே காணப்படுகின்றது.

வேட்டுவ மொழி

உலகின் நெடுகிலும் தொல்குடிகள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். அவ்வகையில் இலங்கையில் வாழும் தொல்குடிகளாக வேடர்கள் கொள்ளப்படுகின்ற அதேவேளை, அவர்களின் மொழியாக வேட மொழியானது கருதப்படுகின்றது. வேட்டுவ மொழியானது இலங்கை உள்நாட்டு வேட மக்களால் பயன்படுத்தப்படும் மொழியாகும். எனினும் கரையோர வேடர் சமூகங்கள் இம்மொழியை அவர்களது சடங்கார்ந்த நடவடிக்கைகள் மற்றும் தொழில் நடைமுறைகளில் தமது முன்னோர்களை மன்றாடல் (ஆனாச்சினை) முதலான நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தி வருகின்றன. இதனை பார்ப்பனியப் பார்வையில் சொன்னால் தேவபாஷை எனலாம்.  

உதாரணமாக வேடர் வழிபாட்டு அழைப்புப் பாடல் ஒன்று “இந்தா பெடியப்பா வடபலவலோ நொதியம; பலோ ஆயியே…… நாயோ… நாகனம; மாயா கன்டா பெடியாப்பா கமகமளு பனுவனளு ஏக; மந்த்ரயே ரயனமோ ரயனமல் ஏ….கமந்த் வெல்லாயன் வெல்லம்பாளன் வெரிகடிகத; தோ உஸட சாயனட உன்னும் பாணன் கட்டாங்கரியோ ஓ….கமர்தரயோ தயங் …” (பாடல்)  என்றவாறு அமைகின்றது.

இலங்கை வேடுவர்களைப் பற்றி முதலில் எழுதியவராக ரைக்லோப் வான் கொன்ச் (1663–1675) என்பவர் கொள்ளப்படுகின்றார். இவர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் இலங்கைக்கான பணிப்பாளர் நாயகமாக பணிபுரிந்துள்ளார். அவர் வேட்டுவ மொழியானது தமிழ் மொழியிலும் பார்க்க சிங்கள மொழிக்கு நெருக்கமுடையதாக காணப்பட்டதாகக் கூறியுள்ளார். 1681ஆம் ஆண்டு கண்டி ராஜ்யத்தில் கைதியாக இருந்த ரொபர்ட் நொக்ஸ் என்ற ஆங்கிலேயர் வேட்டுவ மக்கள் தமது மொழியுடன்  சிங்கள மொழியையும் கலந்து  பயன்படுத்தினர் என்றார். 1686 ஆம் ஆண்டில் போர்த்துகீய துறவி பெர்னாண்டோ டி குயெரொஸ் வேடுவர்களைப் பற்றி எழுதிய தொகுப்பில் கூறியதாவது “வேடுவ மொழி இலங்கையில் உள்ள வேறு மொழிகளில் இருந்து வேறுபட்டது” என்பதாகும். எனினும் ஜோன் டேவிஸ் 1831ஆம் ஆண்டு வேடுவர்கள் பேசிய மொழியில் உள்ள பெரும்பான்மையான சொற்களைச் சிங்கள மக்கள் தமது மொழியுடன் இணைத்து விட்டனர் என்றார். ஆனால் 1848ஆம் ஆண்டு சார்லஸ் ப்ரிதம் கூறுகையில் வேடுவ மக்கள் தங்களிடையில் வேட மொழியைப் பாவித்தனர் இருந்தும் வெளி மக்களிடம் சிங்களம் போன்ற ஓர் மொழித்தன்மையைப் பாவித்தனர் என்றார்.

இலங்கையில் சேவையாற்றிய ஆங்கில அரசு ஊழியர் ஹுக்ஹ் நேவிள்ளே என்பவரே வேடுவ மொழியை ஒரு முறையான திட்டமிடலின் கீழ்  ஆராய்வதற்கு முதலில் முயற்சி எடுத்தார் எனக்கருதப்படுகிறது. அவர் ‘தி டேபிரோபனியன்’ என்ற சஞ்சிகையில் பண்டைய இலங்கையைப் பற்றி அனைத்து விடயங்களையும் எழுதினார். அதன்படி சொற்பிறப்பியல் மூலம் அவர் ஊகித்துக் கூறியது யாதெனில் வேடுவ மொழியானது பண்டைய சிங்கள மொழியின் ஒரு பிரிவாகக் கருதப்படும் ‘ஹெல’  எனும் பிரிவுக்குள் அடங்கும் என்பதாகும். இது வெறும் ஊகம் மட்டுமே தான்.

இது இவ்வாறு இருக்கையில் இலங்கையில் வேடர்களின் மொழி பற்றியதான முறையான ஆய்வு ஒன்று 1959ஆம் மேற்கொள்ளப்பட்டது. அதன்  போது இம்மொழியானது தம்பனவில் உள்ள பழைய மொழிகளுக்கு மட்டுப்பட்டதாகக் கருதப்பட்டது. வேடுவ மொழியின் தாய்மொழி அறியப்படவில்லை. ஆனால் சிங்களத்தின் தாய்மொழியானது இந்திய – ஆரிய மொழிக்குடும்பங்களில் இருந்து வந்ததாகக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே ஒலியியல் ஆய்வு மூலம்  வேடுவ மொழி சிங்கள மொழியின் சாயலோடு அதன் ஒலியியல், உருப்பியல் அடிப்படையில் வேறுபட்டதாகவே காணப்படுகின்றது என்பது தான்  நிரூபிக்கப்பட்ட ஒரு ஆய்வு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் மொழியியலாளர்கள் வேடுவ மொழியானது சிங்களத்தின் பேச்சு வழக்கு மொழியா அல்லது வேறு ஓர் இன மொழியா என்று ஐயப்பட்டனர். பின்னைய காலங்களின் தான் அவ்வையமானது தீர்க்கப்பட்டு, வேட்டுவ மொழியானது கிரியோல் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததொன்றென்று முடிவு காணப்பட்டது. இதனடிப்படையில் மொழியியலாளர்கள் கூறுவதைப் போன்று வேட்டுவ மொழியானது சிங்கள மொழியின் சாயலுடன் காணப்படுகின்றதே அன்றி அது சிங்கள மொழி அல்ல. மேலும் இவ்வேடுவ மொழி ஒலியியல் மற்றும் உருப்பணியியல் அடிப்படையில் வேறுப்பட்டதாகவே காணப்படுகின்றது. வேட்டுவ மொழிச் சொற்களில் அளவுகள் எதுவுமில்லை. பெரும்பாலும் குறியீடுகளாகவே சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

தாய்மொழியாக்கமும் வேடுவ மொழியும்

தாய்மொழியாக்கம் என்பது ஒரு மொழி அதைத் தாய்மொழியாகப் பேசுவோரைப் பெறும் வழிமுறையைக் குறிக்கின்றது. பெரியவர்களால் இரண்டாவது மொழியாகப் பேசப்படும் ஒரு மொழி அவர்களின் பிள்ளைகளுக்குத் தாய்மொழி ஆகும்போது இது நடைபெறுகின்றது. தாய்மொழியாக்கம், மொழியியலாளர்களுக்கும், கிரியோல் மொழிகள் தொடர்பான ஆய்வாளருக்கும் ஆர்வத்துக்கு உரிய ஒரு விடயம் ஆகும். குறிப்பாக இரண்டாவது மொழி ஒரு பிட்யினாக இருப்பின் (பிட்யின் என்பது பொது மொழியொன்றைக் கொண்டிராத இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் தம்மிடையே தொடர்பு கொள்வதற்காக உருவாக்கப்படும் எளிமையான ஒரு மொழியைக் குறிக்கும்). அது சிறப்புக் கவனம் பெறுகிறது.

இந்த நிலையில் தான் இன்றைய காலத்தில் தீவின் நெடுகிலும் வாழும் வேட்டுவ மக்களிடம் புழக்கத்தில் உள்ள அவர்தம் மொழியினை நோக்க வேண்டியுள்ளது. காலமாற்றம், ஆரிய மற்றும் ஐரோப்பிய காலனியவாக்கம்,  சுதேச அரசுகளின் குடியேற்றத் திட்டங்கள் (கல்லோயா மற்றும் மகாவலித் திட்டங்கள்), வாழ்வாதார இழப்பு முதலான காரணங்களினால் வேடர்கள் தமக்கு வாலாயமான பூர்வ நிலங்களை விட்டு நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டனர். இதன் விளைவாக நாட்டின் வந்தேறு குடிகளான தமிழர் மற்றும் சிங்களவர்களுடன் விரும்பியோ விரும்பாமலோ கலப்புற வேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக முகிழ்ந்த திருமணம், தொழில்முறை முதலான உறவாடல்களே வேட்டுவ மொழியின் தாய்மொழியாக்கத்தில்  செல்வாக்குச் செலுத்தி இன்றைய நிலைக்கு இட்டுச்சென்றுள்ளன.

பல காரணிகளால் நிலை குலைக்கப்பட்ட வேட்டுவ மக்கள் சிங்களவர்களுடன் அண்டி வாழ்ந்ததால் சிங்கள மொழியினையும், தமிழருடன் அண்டி வாழ்ந்ததால் தமிழ் மொழியினையும் தமது தாய்மொழியாக இன்றைய நிலையில் ஏற்றுக்கொண்டு வாழ்ந்துவருகின்றனர். இந்த மாற்றமானது கடந்த மூன்று தலைமுறையினருக்கு இடைப்பட்ட காலத்தில் தான் மிகவும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையானது கிழக்கிலங்கைக் கடலோர வேடர்களையே வெகுவாகப் பாதித்துள்ளது என்றும் கருதமுடியும். இவர்களில் பெரும்பாலானோர் சிங்களம் மற்றும் வேட மொழியினைக் கலந்த ஒரு கலப்புற்ற போக்கில் தமது நாளாந்த உரையாடலை மேற்கொண்டு வருகின்றனர்.

சனத்தொகையும் வேடமொழியும்

BalangodaMan

இலங்கையில் ஐம்பதாயிரம் முதல் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பலாங்கொடை மனிதர் என்ற மனித குலத்தில் இருந்தே இலங்கை வேடர்கள் தோன்றியதாக மானுடவியலாளரும் மற்றும் இயற்கை ஆர்வலருமான கலாநிதி ரிச்சர்ட் லியோனல் ஸ்பிட்டல்  (1881-1969),  அவர்கள் “வைல்ட் சிலோன்”  என்ற தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அன்று தொடக்கம் இன்று வரை வாழ்ந்து வருகின்ற பூர்வகுடி மக்களின் சனத்தொகை பற்றி  அரசாங்கம் எடுத்த குடிசன மதிப்பீட்டின் படி 1911ஆம் ஆண்டில் இலங்கையில் தூய வேடர்களாக எல்லாமாக 5,300 வேடுவர்கள் இருந்தார்கள். இந்தத் தொகை 1946ஆம் ஆண்டில் 2,400 ஆக குறைந்தது.  கி.பி. 1939 ஆண்டில் வேடுவர்கள் மலேரியா நோயினாலும், இன்புளுவென்சா காய்ச்சலினாலும் பாதிக்கப்பட்டு அவர்களில் பலர் மரணித்தார்கள். இதுவே சனத்தொகை வீழ்ச்சிக்கான காரணமாக அமைந்தது. பின்னர் 1953ல் 803 பேராகவும், 1963ஆம் ஆண்டில் 400 பேர் மட்டுமே இலங்கையில் இருந்ததாக கணிப்புகள் கூறுகின்றன. ஆயினும் இன்று சிங்கள, தமிழ் கலப்பை உடைய 40,000 வேடுவர்கள் இலங்கையின் நெடுகிலும் வாழ்ந்து வருவதாக அரசாங்க மதிப்பீடுகள் கூறுகின்றன.

இவ்வாறான குடிக்கணிப்பின் போது வேடர்கள் தம்மை சிங்களவர்களாகவும், தமிழர்களாகவும் அடையாளம் காட்டிக் கொள்கின்றமையே இவ்வெண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது எனக்கொள்ள இடமுண்டு. குறிப்பாக கிழக்கு, ஊவா, மத்திய பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற வேடர் பரம்பரையினர் சிங்களவர்களாகவும், தமிழர்களாகவும் காணப்படுகின்றனர். சிங்கள மொழியினைப் பேசும் வேடர்களுக்கு அரசாங்கம் அண்மைக்காலங்களில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றமையால் தேசிய நீரோட்டத்துடன் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்பேசும் கரையோர  வேடர்கள் கிழக்கு மாகாணத்தில் ஆங்காங்கே சிறியளவில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரம் மற்றும் மதமாற்றம் முதலான நடவடிக்கைகளினால் தம்மை வேடர்கள் எனக்கூற பின் நிற்பதும், மதமாற்றப்பட்டவர்கள் தமது எஞ்சிய இருப்புக்காரணியான சடங்காசாரங்களினை மறுப்பது, மறப்பது முதலான நடவடிக்கைகளும் கூட வேடமொழியின் அழிவுக்குப் பெரும்  காரணமாக அமைகின்றன.

மேற்கூறப்பட்டதான பல காரணிகளினை நாம் வேடமொழியானது வேட்டையாடப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணமாகக் காண முடியும். இலங்கையின் பூர்வகுடிகளையும் அவர்தம், மொழிகளையும் பல புறக்காரணிகளும் பலவாறும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தாலும் சரி, கொண்டு வர எத்தனித்தாலும் சரி வேடரின் சடங்கு நடவடிக்கைகளும், அவர்களின் முன்னோர்களுடன் இணைந்த குணமாக்கல் முறைகளும் இருக்கும் வரைக்கும் வேடமொழியினை முற்றாக அழித்துவிட எவராலும் முடியாது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10686 பார்வைகள்

About the Author

கமலநாதன் பத்திநாதன்

கமலநாதன் பத்திநாதன் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறையில் நாடகமும் அரங்கியலும் கற்கைநெறியில் இளமானி சிறப்புப்பட்டம் பெற்றவர். கிழக்கிலங்கையின் பூர்வ குடிகளான வேடர் சமூகத்தைச் சேர்ந்த இவர் இலங்கையில் தமிழ் பேசும் வேட்டுவ மக்கள் சார்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார். அவ்வகையில் ‘வேடர் மானிடவியல்’ எனும் விடயத்தின் கீழ் பல ஆய்வுக் கட்டுரைகளை தொடரச்சியாக வெளியிட்டு வருகின்றார்.

மேலும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நாளிதழ்கள், சஞ்சிகைகளில் வேடர் சமூகத்தின் சமயம், வரலாறு, தமிழ் இலக்கியம், பண்பாட்டு ஆய்வு சார்ந்த கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள பத்திநாதன் தற்பொழுது இலங்கை நூலக நிறுவனத்தில் கள ஆய்வாளராகக் கடமையாற்றுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)