Arts
20 நிமிட வாசிப்பு

கீழைக்கரைக்கான வேறு தொன்மச் சான்றுகள் I

September 25, 2023 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

கீழைக்கரைக்கான வரலாற்றுச் சான்றுகளில், உள்ளூர்க் குடிகளிடையே நீடித்து வரும் தொன்மங்கள் முக்கியமானவை. சமகாலத்தில் எழுத்தாதாரங்களுக்கு மேலதிகமாக தொன்மங்கள், வாய்மொழிக்கதைகள், நாட்டார் பாடல்களை சரித்திர ஆதாரமாகக் கருதவேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பொறிப்புச் சான்றுகளோ எழுத்துச் சான்றுகளோ இல்லாத சமூகங்களுக்கிடையே நீடித்து வரும் கர்ண பரம்பரைக் கதைகளை நன்கு ஆராய்ந்து அவற்றுக்கான வரலாற்றுச்சான்றாக முன்வைக்கமுடியும் என்பதே நவீன வரலாற்றுவரைவியல்.

அந்தவகையில் கீழைக்கரைக்கான தொன்மச் சான்றுகளாக  ஊர்சார் வரலாறுகள், சமூகங்கள் சார் தொன்மங்கள், வழிபாட்டுப் பாடல்கள் என்பவற்றைக் கொள்ளமுடியும். இந்த அத்தியாயத்தில் ஊர்சார் தொன்மங்கள், சமூகங்கள் சார் தொன்மங்களைப் பார்க்கலாம்.

1.ஊர் சார் தொன்மங்கள்

கீழைக்கரையின் தொன்மைவாய்ந்த ஊர்களிலெல்லாம் அவற்றின் தோற்றம், குடியேற்றம் பற்றிய பல்வேறு கர்ணபரம்பரைக் கதைகள் நிலவுகின்றன. ஏராளமான ஊர்கள் இதுவரை தங்கள் ஊர் வரலாற்றை ஆவணப்படுத்தவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயம். அக்கரைப்பற்று (சலீம், 1990), கொக்கட்டிச்சோலை (திருநாவுக்கரசு, 1998), தம்பிலுவில் (நவநாயகமூர்த்தி 1999, துலாஞ்சனன், 2020), ஆரையம்பதி (ஆரையம்பதி கந்தசுவாமி கோவில் பரிபாலனசபை 1999: 59 – 97),  கல்முனை (காதிர், 2001), மருதமுனை (^சரீபுத்தீன 2009), கல்குடா (|சுனைதீன், 2009), வெல்லாவெளி (கோபால், 2012), இறக்காமம் (சுலைமான், 2015) முதலிய ஊர்கள் தமக்கே உரிய நிறைகுறைகளுடன் தமது ஊர்சார் தொன்மங்களை பெருமளவு ஆவணப்படுத்தியுள்ளன. அவற்றை முறையாக ஆய்வுக்குட்படுத்தும் போது ஏராளமான வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஊர்சார் தொன்மங்களில் களுதாவளை ஊரின் தோற்றத்தைச் சொல்லும் களுதேவாலயக் கல்வெட்டு மட்டும் வேறுபட்டது. மட்டுக்களப்புப் பூர்வ சரித்திரத்தின் பின்னணியில், இன்று கிடைக்கும் ஊர்சார் கல்வெட்டு இலக்கியம் அது ஒன்றே. எனவே அதை மட்டும் சற்று விரிவாக இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

களுதேவாலயக் கல்வெட்டு:

இது மட்டக்களப்பின் களுதாவளை ஊரையும் அங்குள்ள களுதாவளைப் பிள்ளையார் கோவிலின் தோற்றத்தையும் பாடும் நூல். கையெழுத்துப் பிரதியாகக் கிடைத்த இந்நூல், பேரா.சி.பத்மநாதனால் அச்சில் பதிக்கப்பட்டது (பத்மநாதன், 1994: 166 – 184). ஆனால் இதன் தோற்றம் தெரியவில்லை. வசனநடை கலந்த செய்யுளாக எழுதப்பட்டுள்ள இந்நூல் முற்றிலும் செய்யுள் யாப்பிலக்கணங்களுக்கமைய எழுதப்படவில்லை. செல்லரித்ததாலோ எழுதியவரின் பயிற்சிக் குறைவாலோ ஆங்காங்கே பொருளற்ற சொற்கள் இப்பதிப்பில் கிடைத்தாலும், நூலின் காலத்தைக் கண்டறியத்தக்க மொழிநடையோ வட்டாரவழக்குச் சொற்களோ அங்கு இடம்பெறவில்லை.

Kazhuthavalai pillayar

களுதேவாலயக் கல்வெட்டு இரண்டு வடிவங்களில் அங்கு பதிக்கப்பட்டிருக்கிறது. முதல் வடிவத்திலுள்ள எல்லா வரிகளும் இரண்டாவது வடிவத்திலும் இடம்பெறும் போது, இரண்டாவது வடிவத்தில் வேறு சில விடயங்கள் மேலதிகமாக இடம்பெற்றுள்ளன.

இந்நூல் கோணேசர் கல்வெட்டின் காப்புச் செய்யுளோடு தொடங்குவதால், களுதேவாலயக் கல்வெட்டு, அந்நூலை மாதிரியாகக் கொண்டே பிற்காலத்தில் எழுந்திருக்கவேண்டும் என்பார் பேரா.சி.பத்மநாதன். மக்கட்பெயராக இந்நூலில் வரும் றம் வண்டா, லூத்து வண்டா முதலியவை சிங்கள அல்லது வேடமொழிப் பெயர்கள். லூத்து என்பது போர்த்துக்கேயர் காலத்துக்குப் பின் இலங்கைக்கு அறிமுகமான  “லூர்து” (Lourdes) என்ற ஆட்பெயரை ஒத்தவாறு தென்படுகின்றது. எனவே இக்காரணிகளையும் மொழிநடையின் நவீனத்தன்மையையும் வைத்து தோராயமாக இந்நூல் 1700 – 1900 ஆம் ஆண்டுகளுக்கிடையே தோன்றியது என்று கொள்ளலாம்.

கொக்கட்டிச்சோலையிலிருந்து கதிர்காம யாத்திரை சென்ற சங்கமக்குருக்களும் பண்டாரப்பிள்ளை ஒருவரும் களுவை என்ற இடத்தில் வெற்றிலைச் சடங்கு இடம்பெறுவதையும் அருகில் அவரை மரத்தடியில் நாகப்புற்றொன்று இருப்பதையும் கண்டு அந்த இடத்தில் இரவு தங்குகிறார்கள். மறுநாள் காலை வழக்கப்படி தங்கள் இலிங்கபூசை செய்த அவர்கள் தவறுதலாக இலிங்கத்தை தரையில் வைத்ததால் அது பூவோடு மறைந்துபோயிற்று.

அது காணாமல் போயிற்று என்று வருந்திய அவர்கள் யாத்திரையைத் தொடரும் போது கல்லாறு கரையாவெளி கூனடிப் பிள்ளையாரிடம் முறையிட்டுச் செல்கிறார்கள். யாத்திரையை முடிந்து திரும்பிவரும் போது பூவும் இலிங்கமும் அவர்கள் கண்ணுக்குப் புலப்படுகிறது. இங்கு இனி சிவன் பிள்ளையாராக அருள்பாலிப்பார் என்று நினைந்து வணங்கி இருவரும் கொக்கட்டிச்சோலை திரும்புகிறார்கள். அப்போது களுவையில் வசித்த றம் வண்டா, லூத்து வண்டா, பழுகமைக் களுவாஞ்சி, என்போர் அங்கு வாழ்ந்த வேளாளர், முக்குவர், சலவைத்தொழிலர், வள்ளுவர் ஆகிய சமூகங்களுடன் இணைந்து கோவில் அமைக்கிறார்கள்.

தொடர்ந்து வேளாளரின் பூர்விகம் கந்தபாணத்துறை (திருக்கோவில்) என்பதும், அவர்களதும் முக்குவர்களதும் சமூக உட்பிரிவுகளான குடிகள், வம்சங்கள் பற்றியும் கூறப்படுகிறது. இந்த சமூகங்களுக்கு மேலதிகமாக வலைகட்டி வேடுவர்கள், சங்கமக்குருக்கள், சோழிய வேளாளர், பண்டாரப்பிள்ளை, செட்டிகள் முதலிய சமூகங்களும் களுதாவளை மற்றும் அதன் அயலூர்களான களுவாஞ்சிக்குடி, செட்டிபாளையம் என்பவற்றில் வசித்ததும், அவர்கள் நெற்செய்கை செய்த வயற்பகுதிகள், சிவன் கோவிலை சுண்ணாம்பு பூசித் திருத்தியமை, களுதாவளையில் கொம்புமுறி விளையாட்டை விளையாடியமை என்பன பற்றியும் விவரிக்கப்படுகின்றது.

இரண்டாவது கல்வெட்டில் உள்ள மேலதிக வரிகளில், சாய்ந்தமருது, சேனைக்குடி, நாகமுனை, எருவில், மகிழூர் ஊர்களிலிருந்து “குகன் மரபார்” வந்ததும் அவர்கள் தனித்தனிச் சமூகங்களாக வசித்ததும், போரதீவு நாதனைப் பகுதிகளிலிருந்து வந்த வேடர்கள் குடியேறியதும் சொல்லப்படுகிறது.  கிரான்குளத்தைச் சேர்ந்த அனுமார் என்பவர் கண்டன்குடி வேளாளருடன் சேர்ந்து செட்டிபாளையத்தில் ஏழு ஊர்களுக்குப் [1] பொதுவாக கண்ணகிக்கு ஆலயம் அமைத்ததும் களுவை இட்டலிங்கத்தை வணங்கிய சித்திர பூபால வன்னிமை அதைப் பிள்ளையாராக வழிபடுமாறு கூறியதும், கோவில் கடமைக்கென கலிங்க குல அதிபதி பல சமூகங்களை நியமித்ததும், மண்டபத்தடியில் சடங்குகளைச் செய்தல் பற்றியும் விளக்கப்படுகின்றது.

வெற்றிலைச் சடங்கு என்பது காடுகளில் அலையும் குழுமாடுகளைப் பிடித்து வளர்ப்புமாடுகளாக மாற்றுவோர் செய்யும் “வில்லைகட்டி” எனும் சடங்கு. அதில் வேடர்களின் பங்கும் இருந்தது. கோவிலுக்கு வடக்கே வலைகட்டி வேடுவர்கள் [2] வசிப்பது சொல்லப்படுவதாலும்,  வில்லைகட்டிச் சடங்குக்குப் புகழ்பெற்ற நாதனையிலிருந்து (இன்றைய வெல்லாவெளி) வேடுவர்கள் இங்கு குடியேறியமை சொல்லப்படுவதாலும்  வில்லைகட்டிச் சடங்கில் வழிபடப்படும் “வதனன்” என்ற தெய்வப்பெயர் இந்நூலின் பிற்பாகத்தில் ஆட்பெயராக வருவதாலும் இதை உறுதிப்படுத்த முடிகின்றது. றம் வண்டா, லூத்து வண்டா முதலிய ஆட்பெயர்களை சிங்களம் அல்ல; வேடப்பெயர்களே என்று கொண்டால் இவ்வூகம் மேலும் உறுதிசெய்யப்படுகிறது. அவ்விடத்துக்கு வேடுவர்கள் தமது மொழியில் இட்ட “களுதேவாலே” (களு – கருத்த;  கருநிறத் தெய்வத்தின் தேவாலயம்)  என்ற பெயரே பின்னாளில் களுதாவளை ஆகியிருக்கலாம்.

களுதாவளையில் ஆரம்பத்தில் வெற்றிலைச் சடங்கு செய்யப்பட்டு வந்த இடத்தில் பின்னாளில் சங்கமக்குருமார் மற்றும் பண்டாரப்பிள்ளை என்போரின் தலையீட்டில் சிவாலயம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதாக இக்கல்வெட்டு சொல்லும் “இட்டலிங்கம் மறைந்த” தொன்மத்தை வாசிக்கமுடியும். சங்கமக்குருக்கள் கீழைக்கரையின் பண்டைய நெறியான வீரசைவத்தின் குருமார் ஆவர். “ஐயர் என்பது சோழிய வேளாளரில் இ`ச்டலிங்கதாரிகள்” என்ற கல்வெட்டு வாசகமும் நம் கவனத்தை ஈர்க்கிறது. கழுத்தில் இலிங்கத்தை அணிந்துகொள்வதும், பூசைநேரங்களில் அதைக் கையில் ஏந்தி “இட்டலிங்க பூசை” செய்துவிட்டு மீண்டும் கழுத்தில் அணிந்துகொள்வது வீரசைவ வழக்கம். இட்டலிங்கத்தை தரையில் வைப்பது ஆகாது என்ற நம்பிக்கையின் வழியே இலிங்கம் பூவோடு மறைந்த கதை தோன்றியிருக்கலாம்.

களுதாவளையில் குடிசனமும் வழிபாடும் பெருகி களுதாவளைச் சிவன் கோவில் மேல்நிலையாக்கப்பட்டு ஆகமவிதிக்குள் உள்ளீர்க்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அதை விரும்பாத சிலரின் எதிர்ப்பால் இக்கோவில் பிள்ளையார் கோவிலாக மாற்றப்பட்டிருக்கிறது என்று ஊகிக்கமுடிகின்றது. வன்னிமையே இட்டலிங்கத்தை வந்து பார்த்து “பிள்ளையார் கோவிலிது அதுவாக சிவபிரானைப் பணியும்”  படி கூறினார் என்று கல்வெட்டு கூறுவதன் மூலமும், அதைத் தொடர்ந்து உடனடியாக சைவ மேல்நிலையாக்கம் சார்ந்து இயங்கக்கூடிய குருவும் ஐயரும் (முறையே வீரசைவ சங்கமக்குருக்கள், சோழிய வேளாளர்) அவர்களது மேலாதிக்கத்தை எதிர்த்திருக்கக்கூடிய ஏனைய வேளாளர், முக்குவர், வேடர் சமூகங்களும் கோவில் கடமைகளில் சமரசமாக இயங்குமாறு கோரும் வரிகள் வருவதாலும் [3], சிவாகம விதிகளுக்கு அப்பாற்பட்ட “ மண்டபத்தடி சடங்கு நடாத்திவரும் நேரம் தவறாதீர்கள்” என்று கல்வெட்டு வலியுறுத்துவதாலும் இதை ஊகிக்க முடிகின்றது.  அல்லது அருகிலேயே தேசத்துக் கோவிலான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் அமைந்திருக்கையில் பக்கத்தில் புதிதாக இன்னொரு சிவாலயம் அமையத் தேவையில்லை என்றும்  அவர்கள் நினைத்திருக்கலாம்.

பிற்கால நூலாகத் தோன்றினாலும் கீழைக்கரையில் தெற்கே பாணமை முதல் கொக்கட்டிச்சோலை வரையான ஊர்களுக்கிடையே இருந்த இடையறாத் தொடர்பு களுதேவாலயக் கல்வெட்டில் பதிவாகியுள்ளது. கந்தபாணத்துறை (திருக்கோவில்), சாய்ந்தமருது, நாதனை, பாணமை முதலிய ஊர்களின் சமூகவியல் முக்கியத்துவமும் இக்கல்வெட்டில் பதிவாகிறது. சாதியம் புரையோடிப்போன தமிழ் மரபுக்கு மாறின்றி சமூகங்களை இணைத்து தேசத்துக்கோவில்கள் உருவாகிக் கொண்டிருந்த  கீழைக்கரை வரலாற்றில், அடுத்தகட்டமாக ஊர்களை இணைத்து செட்டிபாளையம் கோவிலை உருவாக்க முயன்ற சமூக முன்னகர்வு பதிவாகியுள்ள முதல் நூல் களுதேவாலயக் கல்வெட்டு தான். அந்த வகையில் சமூகவியல் ஆய்வுகளுக்கு மேலும் பயன்படக்கூடிய அரிய நூலாக இந்நூலை அடையாளப்படுத்தமுடியும்.

2.சமூகங்கள் சார் தொன்மங்கள்

கீழைக்கரையில் முக்குவர், வேளாளர், கரையார், சீர்பாதர், விசுவப்பிரமகுலத்தார், பண்டாரப்பிள்ளை, செங்குந்தர், சலவைத்தொழிலர், நாவிதர், வள்ளுவர் முதலானோர் பிரதானமான சமூகங்கள். இந்தச் சமூகங்களிடையே தமது வருகை, குடியேற்றம், பரம்பல் பற்றிய பல்வேறு செவிவழிக்கதைகள் நீடித்துவருகின்றன. இலங்கையின் முப்பெரும் இனங்களுள் ஒன்றாக அடையாளப்படுத்தப்படும் சோனகரும் [4] தமது சமூகம் சார்ந்து பல்வேறு தொன்மங்களை பாடல்களாகவும் கதைகளாகவும் சேமித்து வைத்திருக்கின்றனர். இவை அத்தனையும் முறைப்படி ஆவணப்படுத்தப்படவில்லை. எனவே நூலுருப்பெற்றுள்ள முக்குவர், சீர்பாதர், சோனகர் ஆகிய மூன்று சமுகங்களின் தொன்மங்களை மாத்திரம் இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்:

முக்குவர் தொன்மங்கள்:

மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கல்வெட்டுப்பாடல்களும் உரைநடைகளும் மட்டக்களப்பு முக்குவர் சமூகத்தின் மேலாதிக்கத்தைக் கூறுகின்றன. அவற்றையும் மீறியே அந்நூல் தொன்மங்களின் தொகுப்பாக கீழைக்கரை வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுக்கொள்கின்றது. பூர்வ சரித்திரத்தில் இடம்பெறாத முக்குவர் தொடர்பான கல்வெட்டுகள் இன்னும் அச்சுவாகனம் ஏறாமல் பல கிடைக்கின்றன. அவற்றில் சில, 2000 ஆம் ஆண்டு ஞா.சிவசண்முகம் அவர்கள் வெளியிட்ட நூலில் பதிக்கப்பட்டுள்ளன. சிவசண்முகத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ள கல்வெட்டுப் பாடல்களில் குகன்முறை அகவல், திருக்கோவில் பாடல், வள்ளுவர் சுடலைப்பாடல் என்பன குறிப்பிடத்தக்கவை.

குகன்முறை அகவலில் திருமாலின் வம்சத்திலுதித்த முக்குகர்கள் பலநாடுகளை ஆண்டு இலங்கைக்கு வந்து பட்டாணிகளின் துணையுடன் குடியமர்ந்ததும் திமிலரை எதிர்த்து வென்றதும், திருக்கோவில் – கொக்கட்டிச்சோலை ஆகிய பதிகளை வணங்கியதும் கண்டி அரசனால் வன்னிமைப்பட்டம் வழங்கப்பட்டதும்  குறிப்பிடப்பட்டுள்ளது (சிவசண்முகம் 2000, 02,03).

தம்பிலுவில் ஆறுமுகதேசிகர் என்பவர் நூலாசிரியருக்கு வழங்கிய திருக்கோவில் பாடலில் மட்டக்களப்பில் வந்திறங்கிய ஏழு முக்குவர்,  திமிலரை வென்று நாடுநகரம் உண்டாக்கி, “இந்தியா” எனும் நகருக்குச் சென்று, ஊரூராய்ச் சென்று குடிகளை அழைத்து வந்ததாகவும், மாளுவர்  கலிங்கர் நாட்டு மல்லிகார்ச்சுனக் குருக்களை அழைத்து வந்து ஆலயக்கடமைகளை முறைசெய்து செப்பேட்டில் பதிந்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது (சிவசண்முகம், 2000:05). பூர்வ சரித்திரத்தில் இடம்பெற்ற வேறுசில கல்வெட்டுப் பாடல்களிலும் “இந்தியா” என்ற பிற்காலப் பெயர் இடம்பெற்றுள்ளதை ஒப்பிட்டு இந்தப் பாடலும் அந்தக் கல்வெட்டுகளின் காலத்துக்குச் சமனானது (பெரும்பாலும் 19ஆம் நூற்றாண்டுக்குப் பின்) எனலாம். எனினும் இக்கல்வெட்டு கூறும் முக்குவரின் குடியேற்ற இடங்கள், திமிலரோடான முரண் என்பன கவனிக்கத்தக்கவை.

வள்ளுவர் சுடலைப் பாடல், இறந்த முக்குவர் சமூகத்தவர் ஒருவரின் சடலம் புதைக்கப்படமுன்னர் சுடலையில் வள்ளுவர் சமூகத் தலைவரால் பாடப்படுவதாகும். இதில் தொண்டைமண்டல வரிசைப்படி சோழன் முன்னிலையில் நன்மை தீமை வரிசைகள் பகிர்ந்தளிக்கப்பட்ட காராளர் முதலான பதினெண் குடிகளில் சிலர் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன (சிவசண்முகம், 2000:134-35).

இவை தவிர, ஏட்டுப்பிரதியாக்க கிடைத்த “குடிமக்கள் வரவு” எனும் ஏட்டுச்சுவடியில் முக்குவர் வரலாறு தொடர்பான பல தகவல்கள் கிடைக்கின்றன. மேலே குறிப்பிட்ட “குகன்முறை அகவல்” பாடலும் அதே சுவடியில் கிடைத்திருக்கின்றது. குவரோ`ச், பால்டிய`ச் (Queiroz, Baldaeus) முதலிய ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களும் முக்குவர் சார்ந்த அக்காலத் தொன்மங்கள் சிலவற்றை எழுத்தில் பதிவுசெய்திருக்கிறார்கள்.

சீர்பாதர் தொன்மங்கள்:

மட்டக்களப்பில் தனித்துவமாக வாழும் சமூகங்களில் சீர்பாதர் குறிப்பிடத்தக்கோர். சீர்பாததேவி எனும் சோழ இளவரசி வழி வந்தவர்களாகச் சொல்லிக்கொள்ளும் இச்சமூகத்தவர்கள் பற்றிய தொன்மங்கள் சில அருள் செல்வநாயகம் அவர்களின் 1982 வெளியான நூலில் பதிவாகியுள்ளது. இதில் துறைநீலாவணைச் செப்பேடு, வீரமுனைச் செப்பேடு, திருக்கோணமலைச் செப்பேடு, திருக்கோவிற்செப்பேடு, கொக்கட்டிச்சோலைச் செப்பேடு, என்பன பதிப்பிக்கப்பட்டுள்ளன.

temple

கல்லில் வெட்டாத போதும், சில பாடல்கள் “கல்வெட்டு” என்று அழைக்கப்பட்டது போலவே, நூலாசிரியர் செப்பேடு என்ற பதத்தையும் பயன்படுத்துகிறார் என்று கொள்ளவேண்டியிருக்கிறது. இந்தப் பாடல்கள் குறித்த ஊர்களில் செப்பேட்டில் எழுதி வைக்கப்பட்டிருந்தன என்று சொல்லப்பட்டாலும் அவை உண்மையில் செப்பேடுகளாகக் கிடைத்ததாகத் தகவலில்லை. இவற்றில் துறைநீலாவணைச் செப்பேடு ஏற்கனவே எம்.டி.ராகவன் அவர்களால் 1953 இல் ஆங்கில மொழியாக்கத்துடன் அச்சில் பதிப்பிக்கப்பட்டுள்ளது (Raghavan, 1953: 187 – 193).

கண்டி மாநகர் ஆளும் உக்கிரசிங்கன் – மாருதப்புரவீகவல்லியின் மகனான வாலசிங்கன், குமாராங்குசச் சோழனின் மகளான சீர்பாத தேவியை மணந்தபின்னர், திருவொற்றியூர், பெருந்துறை, காட்டுமாவடி ஊர்களைச் சேர்ந்த சோழப் பரிவாரங்களுடன் சிந்து யாத்திரை (கடல் பயணம்) மேற்கொள்ளும் போது,  திருக்கோணேச்சரமருகே கப்பல் நகராமல் நின்றுவிடுகிறது. வாலசிங்கன்  கட்டளைப்படி கடலில் சுழியோடி ஆராய்ந்தபோது, அங்கு பிள்ளையார் சிலையொன்று கிடைக்கிறது. “கப்பல் கரைதட்டும் இடத்தில் இவருக்கோர் கோவில் அமைப்பேன்” என்று சீர்பாத தேவி வேண்ட, கப்பல் ஓடி மட்டக்களப்பு வாவியுள் நுழைந்து வீரமுனையில் தரைதட்டுகிறது. அங்கு சிந்து யாத்திரையில் கிடைத்த பிள்ளையார் “சிந்தாத்திரைப் பிள்ளையார்” என்ற பெயரில் கோவில் கொள்கிறார். சீர்பாத தேவியுடன் வந்த பல்வேறு சமூகங்கள் அதன் பின்னர், “சீர்பாத குலம்” எனும் ஒரே பெயரைப் பெறுகிறார்கள். இதுவே வீரமுனை மற்றும் திருக்கோவில் செப்பேடுகளில் கூறப்படும் வரலாற்றின் சுருக்கம்.

திருக்கோணமலைச் செப்பேடு, கட்டுமாவடி, பெருந்துறை, திருவெற்றியூர் என்ற இடங்களைச் சேர்ந்த பலர் அரசியின் பெயர் பெற்று சீர்பாத குலமானார்கள் என்கின்றது. கொக்கட்டிச்சோலைச் செப்பேட்டில் சீர்பாத குலத்தவரின் உட்பிரிவுகளான குடிகளின் பெயர்கள் சொல்லப்படுகிறது.

இந்தச் செப்பேட்டுப் பாடல்கள் எக்காலத்தில் எழுதப்பட்டன, யார் மூலமாகப் பெறப்பட்டன என்ற தகவலை அருள் செல்வநாயகம் தன் நூலில் குறிப்பிடவில்லை.  துறைநீலாவணைச் செப்பேட்டில் இந்தியா, கண்டி நகர் ஆகிய சொற்கள் இடம்பெறுகின்றன. ஏனைய செப்பேடுகளில் வாலசிங்கன் கண்டியின் அரசன் என்றே சொல்லப்பட, கண்டி என்பது யாழ்ப்பாணத்தில் இருந்த “கதிரைநகர் அரசு” என்கிறார் அருள் செல்வநாயகம். எனவே இவற்றின் காலத்தையும் 18, 19ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

ஆனால், சீர்பாத தேவி வீரமுனையில் குடியேறிய தொன்மத்தில் சில வரலாற்றம்சங்கள் காணப்படுவதை மறுக்கமுடியவில்லை. சீர்பாத குலத்தாரின் குடியேற்றம் பழைய மட்டுக்களப்பு நகரான சம்மாந்துறைக்கு அண்மையில் வீரமுனையில் இடம்பெற்றதையும், கோணேச்சரத்தில் கிடைத்த பிள்ளையார் சிலையை அங்கு நிறுவி அவர்கள் ஆலயம் அமைத்ததையும் உண்மையான சரித்திரத் தகவல்களாகக் கொள்ளலாம். சீர்பாதரின் பூர்விகமாகச் சொல்லப்படும் திருவொற்றியூர் (சென்னை), பெருந்துறை (கடலூர்), கட்டுமாவடி (நாகப்பட்டினம்) என்பன கடற்கரையை அண்டிய சோழமண்டல ஊர்கள் என்பதால் அங்கிருந்து கப்பலில் வந்த மக்களே வீரமுனையில் குடியேறினர் என்ற தகவல் உண்மையானதாக இருக்கக்கூடும். 

அடிக்குறிப்புகள்

  1. ஏழூர்களும் பெயர் சொல்வேன் கிரான்குளம் குருக்கள்மடம் செட்டிபாளையம் மான்காடு தேற்றாத்தீவு குடியிருப்பு களுதாவளை பழுகாமம்” என்கின்றது கல்வெட்டு. இதில் கூறப்படுவது உண்மையில் எட்டு ஊர்களாகும். தேற்றாத்தீவு, தேற்றாத்தீவுக் குடியிருப்பு ஆகிய இரு ஊர்களும் ஒரு ஊராகக் கருதப்பட்டதா என்பது தெரியவில்லை. கோவில் மரபுரைகளின் படி, ஒன்பதாவதாக அம்பிளாந்துறை ஊருக்கும் செட்டிபாளையம் கண்ணகி கோவிலில் முன்பு சடங்கு உரிமை இருந்திருக்கிறது. இன்று அம்பிளாந்துறை, பழுகாமம் ஊர்கள் இக்கோவிலில் சடங்கு செய்யும் வழமை இல்லை என்பதால், ஏழூர் என்ற எண்ணிக்கை சரியாகப் பொருந்துகிறது.
  2. வலைகட்டி வேடுவர்கள் வேட்டைக்கும் மேலதிகமாக மீன்பிடித்து வாழ்ந்திருக்கலாம். ஆனால் இந்த வலைகட்டி என்ற பெயர் “வில்லைகட்டி” என்ற சொல்லை ஒத்துவருவது தற்செயல் என்று எண்ணமுடியவில்லை.
  3. …….இத்தகைமை ஆலயத்தில் குருமார்கள் [….] லிங்கத் தவறிநின்ற குருமாரும் சோழிய வேளாளரான பெரியபிள்ளை பண்டாரம் இன்னோரால் பூசை முன்னம் நடத்தவேண்டும் இல்லத்தான் தகராறு [………] இனம்பிரிய […..] இயம்பினனே. பூசைமுறை பெத்தாக்கிழவி என இட்ட பெயர்கொண்ட கண்டன்குடி சருகுபிலி குடி வலைக்கட்டு வேடர் சட்டிகுடி நால்வருமாய் நடாத்தி வரும் வேளையிலே…..” – பத்மநாதன், 1994:182.
  4. இத்தொடரில் முன்பே குறிப்பிடப்பட்டதன்படி, அரச ஆவணங்களில் இலங்கைச்சோனகர் (^^ச்ரீ லங்கன் மூர்ஸ், Sri Lankan Moors) என்று குறிப்பிடப்படும் தேசிய இனத்தவர்கள், தமது மத அடையாளத்தை முன்னிலைப்படுத்த்தி இ`ச்லாமியர் என்று தம்மை அடையாளப்படுத்துவதையே இன்று அதிகம் விரும்புகின்றனர். இன்று அவர்களிடையே அருகிவருகின்ற பாரம்பரிய நடைமுறைகள் – வழக்காறுகள் அன்றாடத்தில் இ`ச்லாமிய சமய வரையறைக்கும் வெளியே செல்வதால், “இலங்கைச் சோனகர்” என்ற உத்தியோகபூர்வ இன அடையாளமே இத்தொடர் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது.

உசாத்துணை

  1. அருள் செல்வநாயகம், (1982). சீர்பாத குல வரலாறு, திருவருள் வெளியீடு.
  2. ஆரையம்பதி கந்தசுவாமி கோவில் பரிபாலனசபை, (1999), ஆரையூர்க்கந்தன்.
  3. காதிர், எம்.எச்.ஏ. (2001). கல்முனை வரலாறு, கல்முனை : ஃகா|சி மீரா முகைதீன் பதிப்பகம்.
  4. கோபால், வெ. (2012) வெல்லாவெளி வரலாறும் பண்பாடும், வெல்லாவெளி: வெல்லாவெளி கலைமகள் ம.வி பழைய மாணவர் ஒன்றியம்.
  5. சலீம், ஏ.ஆர்.எம். (1990). அக்கரைப்பற்று வரலாறு. அக்கரைப்பற்று: ஃகிரா பப்ளிகேசன்`ச்.
  6. சிவசண்முகம், ஞா. (2000). மட்டக்களப்பு குகன்குல முற்குகர் வரலாறும் மரபுகளும். மட்டக்களப்பு : விபுலம் வெளியீடு.
  7. சுலைமான், ல. (2015). இறக்காமம் வரலாறு சமூகம் வாழ்வியல். இறக்காமம்: அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளனம்.
  8. திருநாவுக்கரசு, அ. (பதிப்பு). (1998). தேரோட்டம். கொக்கட்டிச்சோலை : தான்தோன்றீச்சரர் ஆலய பரிபாலன சபை.
  9. துலாஞ்சனன், வி. (2020). “” “கோவேந்த வியாசம்: அமரர் திரு.நோர்மன் அன்ரன் கோவேந்தன் நினைவுமலர். 
  10. நவநாயகமூர்த்தி, நா. (1999). தம்பிலுவில் கண்ணகி வழிபாடு, பனங்காடு : வானதி வெளியீட்டகம்.
  11. பத்மநாதன், சி. (1994). இலங்கை இந்துக்கோவில்கள், கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
  12. ^சரீபுத்தீன், ஆ.மு. (2009). மருதமுனையின் வரலாறு. மருதமுனை : அன்னை வெளியீட்டகம்
  13. |சுனைதீன், அ.அ.லெ. (2009). கல்குடா மு`ச்லிம்கள் : ஒரு பூர்வீக வரலாற்றுக் குறிப்பு, இ.இ. : ^சுஃகா வெளியீட்டகம்.
  14. Nevill, H. (1887). “Nadukadu Record”. Taprobane (October 1887), pp. 137-141.
  15. Raghavan. M.D., (1953). “Ethnological Survey Of Ceylon No.7. A Kalvettu Of The Seerpadam Of The Eastern Province”, Spolia Zeylanica, Vol. 27, No. 1, pp.187-193.

இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம். 

தொடரும்.


8112 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)