Arts
13 நிமிட வாசிப்பு

வடக்குப் பிராந்தியத்தின் மழை வீழ்ச்சி அளவீட்டு முறைகளும் வானிலை அவதான நிலையங்களும்

March 1, 2024 | Ezhuna

ஒரு பிரதேசத்தின் பல்வேறு விடயங்களை கட்டமைப்பதில் அந்தப் பிரதேசத்தின் இயற்கை அம்சங்கள் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றன. குறிப்பாக ஒரு பிரதேசத்தின் காலநிலை சார்ந்த அம்சங்கள் அந்தப் பிரதேசத்தினுடைய இயற்கையையும் அந்த பிரதேசத்திற்குரிய பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும் கட்டமைப்பதில் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றது. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தினுடைய பல்வேறு வகைப்பட்ட விடயங்களை தீர்மானித்ததில் வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை மிகப்பெரிய செல்வாக்கினை பெற்றிருக்கின்றது. வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை சார்ந்த பாரம்பரிய அறிவியல் விடயங்களையும் நவீன விஞ்ஞான ரீதியிலான ஆய்வு சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கியதாக வடக்கு மாகாணத்தினுடைய காலநிலைப் பண்புகளை முழுமைப்படுத்தி வெளியிடுவதாக ‘பிராந்திய காலநிலையியல் : வடக்குப் பிராந்தியம், இலங்கை‘ எனும் தொடர் அமைகின்றது.

வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய முறையிலான மழை வீழ்ச்சி அவதானிப்பு முறைகள்

வடக்கு மாகாண மக்கள் மிக நீண்ட காலமாக மழை வீழ்ச்சி அவதானிப்பிற்கு என்று பல்வேறு வகைப்பட்ட உத்திகளை பயன்படுத்தி வந்துள்ளார்கள். அந்த அடிப்படையில் வடக்கு மாகாண மக்கள் பல்வேறு வகையிலான கருவிகளைப் பயன்படுத்தி அவதானிப்புகளை மேற்கொண்டு இருப்பதை அறிய முடிகின்றது. அவர்கள் பின்வரும் கருவிகளைப் பயன்படுத்தி மழை வீழ்ச்சி அவதானிப்புகளை மேற்கொண்டு உள்ளார்கள்.

மரக்கால்

மரக்கால் என்பது மிக நீண்ட காலமாக, அதாவது கிறிஸ்துவிற்குப் பின் 1500 ஆம் ஆண்டுகளில் இருந்து, வடக்கு மாகாணத்தின் மக்கள் மழை வீழ்ச்சி அளவை அறிந்து கொள்வதற்கு பயன்படுத்திய முறைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. மரக்கால் என்பது மரத்திலான ஒரு அளவைசார் பாத்திரமாகும். பொதுவாக வடக்கு மாகாண மக்கள் சர்வதேச முறைகளிலான அளவீட்டு முறைமைகள் பயன்படுத்துவதற்கு முன்பதாகவே தங்களுடைய நாளாந்த மற்றும் வியாபாரத் தேவைகளுக்காக பல்வேறு வகைப்பட்ட அளவீட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். அந்த அடிப்படையில் மரக்கால் என்பதும் கொத்து என்பதும் புசல் என்பதும் பறை என்பதும் அவர்களுடைய அளவீட்டு முறைமைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. மரக்கால் என்பது மரத்தினாலான ஒரு குடுவை போன்ற பாத்திரமாகும். இந்தப் பாத்திரத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் பெய்கின்ற மழையின் அளவை அவதானித்து வந்துள்ளார்கள். குறிப்பாக நல்லூர் இராசதானிக் காலத்திலே அறிவு மிகுந்த அரசகுமாரர்களில் ஒருவராக விளங்கிய பரராஜசிங்கன் எழுதிய தன்னுடைய நூலில் இந்த மரக்கால் பற்றிய விடயங்களை குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப காலத்தில் நெல் போன்ற தானியங்களை அளவிடவே இந்தப் பாத்திரம் பயன்படுத்தப்பட்டது. எனினும் அதனைப் பயன்படுத்தியே அவர்கள் மழை வீழ்ச்சியையும் அளந்து உள்ளார்கள். இந்த முறை இலங்கையில் வடக்கு மாகாண தமிழர்களிடம் மட்டுமின்றி இந்தியாவினுடைய தமிழ்நாட்டு தமிழர்கள் குறிப்பாக இந்துக்கள் இடையேயும் மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த மரக்கால் முறையிலான மழை வீழ்ச்சியின் அவதானிப்பை வைத்துக்கொண்டு தங்களுடைய பிரதேசத்தின் மொத்த மழை வீழ்ச்சி அளவை அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்துக்களின் பஞ்சாங்கங்கள், குறிப்பாக திருக்கணித பஞ்சாங்கங்களும் வாக்கியப் பஞ்சாங்கங்களும் மரக்கால் முறையிலான மழை அளவையே குறிப்பிடுகின்றன. ஒரு மரக்கால் பாத்திரத்தில் முழுவதும் நிறைகின்ற அளவிற்கு மழைநீர் கிடைக்கும் பொழுது அதனை ஒரு மரக்கால் மழை என குறிப்பிடுகின்றார்கள். இந்த ஒரு மரக்கால் மழை என்பது கிட்டத்தட்ட சராசரியாக 300 மில்லி மீற்றர் மழைக்குச் சமமானதாகக் காணப்படுகின்றது. இதனால் தான் முன்னோர்கள் வடக்கு மாகாணத்தினுடைய மழையின் அளவை மரக்காலின் எண்ணிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். குறிப்பாக தமிழர்களுடைய நாளாந்த வாழ்விலும் இலக்கியங்களிலும் மூன்று மரக்கால் மற்றும் நான்கு மரக்கால் மழை என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. இன்றும் கூட தமிழ் மக்களின் பயன்பாட்டில் காணப்படுகின்ற, குறிப்பாக இந்துக்களின் பயன்பாட்டில் காணப்படுகின்ற பஞ்சாங்கங்களில் மழையின் அளவு இரண்டு மரக்கால், மூன்று மரக்கால் அல்லது நான்கு மரக்கால் எனக் குறிப்பிடப்படுவதன் காரணம், அந்த மரக்கால் அளவிலேயே அவர்களின் பண்டைய மழை வீழ்ச்சி அளவு அமைவு பெற்றமையே ஆகும். மரக்கால் என்பது எல்லா பிரதேசங்களிலும் பயன்படுத்தப்பட்டாலும் கூட பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் அவற்றின் அளவுகளில் சிறிய சிறிய வேறுபாடுகள் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. மரக்கால் என்ற பாத்திரத்திலே உள்ள சிறிய சிறிய வேறுபாடுகளால் மரக்கால் முறையிலான அவர்களுடைய அளவீட்டு முறையிலும் பிரதேசத்துக்கு பிரதேசம் சிறிய சிறிய வேறுபாடுகள் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மரக்கால் என்பது, தற்பொழுது நற்காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகின்ற ‘நிறைநாழி’ என்னும் செயற்பாட்டிற்கான ‘கொத்து’ பாத்திரத்தைப் போன்று இரண்டு மடங்கு பெரியதாக உள்ள பாத்திரமாகும். சில பிரதேசங்களில் மரக்காலின் வெளிப்பக்கம் வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய சிறிய உருவங்களைக் கொண்டிருப்பதையும் காணலாம். 

ஆட்டுக்கல்

ஆட்டுக்கல் என்பது கருங்கல்லினால் செய்யப்பட்ட தானியப்பொருள் அரைப்பதற்காக தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு அரைக்கும் முறையாகும். இந்த ஆட்டுக்கல் என்பது கருங்கல்லினால் செய்யப்பட்ட ஒரு குடுவை போன்ற அமைப்பையும் கையினால் பொருளை அரைப்பதற்கான ஒரு குழவி ஒன்றையும் கொண்டு அமைந்திருக்கும். பண்டைய காலங்களில் தமிழ் மக்களின் வீடுகளில் பிரதானமான சமையல் கருவியாக மூன்று பொருட்கள் இடம்பெற்றிருக்கும். அம்மி மற்றும் குழவி, உரல் மற்றும் உலக்கை, ஆட்டுக்கல்லும் அதனோடு இணைந்த குழவியும் என்பனவையே அவை. இந்த ஆட்டுக்கல் என்பது பண்டைய தமிழர்கள் வீட்டு முற்றத்தில் வைத்திருந்த ஒரு பொருளாகவே காணப்படுகின்றது. ஒரு வட்டமான கருங்கல்லுக்குள் மையப் பகுதியில் குழிபோன்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். பண்டைய காலங்களில் இந்த ஆட்டுக்கல்லின் குழியையும் நமது முன்னோர்கள் மழைவீழ்ச்சியை அளவீடு செய்வதற்கான ஒரு அளவுகோலாக அல்லது கருவியாக பயன்படுத்தி இருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் முற்றத்தில் காணப்படுகின்ற ஆட்டுக்கல்லின் குழியை நிரப்புகின்ற அளவிற்கு மழை பொழிந்தால் அது ஒரு ஆட்டுக்கல் மழை எனக் குறிப்பிடுவார்கள். இது நவீன காலத்தில் 150 மில்லி மீற்றருக்குச் சமமான அளவிற்கு, சில சமயங்களில் ஆட்டுக்கல்லின் அளவைப் பொறுத்து, 125 மில்லி மீற்றருக்குச் சமமான அளவிலும் அமைந்திருப்பதைக் குறிப்பிடலாம். ஆட்டுக்கல்லின் குழிக்குள் விழுகின்ற மழையின் அளவை அவர்கள் ஆரம்பத்தில் கணிப்பீடு செய்து அந்த கணிப்பீட்டின் அடிப்படையில் மழையை அளவிட்டு அறிந்து உள்ளார்கள். பெரும்பாலான இடங்களில் முற்றத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற ஆட்டுக்கல்லில் பெய்திருக்கின்ற மழையை அடிப்படையாக வைத்துக் கொண்டே அவர்கள் மாரிகாலங்களில் குறிப்பாக இரண்டாவது இடைப்பருவ காலத்திலும், வடகீழ்ப் பருவக் காற்று காலத்திலும் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தார்கள். ஒரு ஆட்டுக்கல் மழையைப் பெற்றதன் பின்னர் தங்களுடைய நிலத்தைப் பண்படுத்துகின்ற அல்லது விதைப்புச் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்ற நடவடிக்கைகளை அவர்கள் செய்தார்கள். 

வேறு முறைகள்

வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் மிக நீண்ட காலமாக மழையின் அளவை அளவீடு செய்வதற்கு, தங்களுடைய வீட்டின் திண்ணைச் சுவரையும் தாங்கள் பயன்படுத்திய பின் வெளியே வைக்கும் தேங்காய் சிரட்டையையும் தங்களுடைய வீட்டு சூழலில் காணப்படுகின்ற மரங்களின் உயரத்தில் உள்ள முக்கியமான அடையாளங்களையும் பயன்படுத்தியுள்ளார்கள். இதன் மூலம் அவர்கள் கிடைக்கின்ற மழையை அளவீடு செய்து தங்களுடைய திட்டமிடல்களுக்காகப் பயன்படுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வானிலை அவதான நிலையங்கள்

1990 இற்கு முன், வடக்குப் பிராந்தியத்தில் பல வானிலை ஆய்வு நிலையங்கள் செயற்பட்டன. பல வானிலைக் கூறுகள் அவதானிக்கப்பட்டு அளவிடப்பட்டன. முப்பது வருடகால உள்நாட்டுப் போர் காரணமாக உரிய திணைக்களங்களால் சிலவற்றைச் சரியாகச் செயற்படுத்த முடியவில்லை. அவற்றில் சில மூடப்பட்டன. மற்றவை வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன. இந்தச் சூழ்நிலையின் காரணமாக மழைவீழ்ச்சி, வெப்பநிலை, காற்று, ஈரப்பதம், வளிமண்டல அழுத்தம் மற்றும் ஆவியாதல் போன்ற பல வானிலை அளவுருக்கள் சில ஆண்டுகளாக இந்த நிலையங்களில் சிலவற்றில் அளவிடப்படவில்லை. 1990 இற்கு முன்னர் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் பல வானிலை, மழைவீழ்ச்சி அவதானிப்பு நிலையங்கள் செயற்பட்டன. அக்கராயன்குளம், அகத்திமுறிப்பு, ஆண்டான்குளம், அம்பலப்பெருமாள்குளம், சாவகச்சேரி, செட்டிகுளம், நெடுந்தீவு, ஆனையிறவு, இரணைமடு, இயக்கச்சி, வட்டுக்கோட்டை, திருநெல்வேலி, காங்கேசன்துறை, கனகராயன்குளம், கணுக்கேணி, கிளிநொச்சி, நொச்சிக்குளம், கோண்டாவில், குடத்தனை, மடு, மாங்குளம், மன்னார், மறிச்சுக்கட்டி, மிருசுவில், முல்லைத்தீவு, மூளாய், முருங்கன், முத்தயன்கட்டு, நயினாதீவு, நெடுங்கேணி, ஓமந்தை, பளை, புங்குடுதீவு, ஊர்காவற்றுறை, பரந்தன், பல்லவராயன்கட்டு, புளியங்குளம், பறையனாலங்குளம், தலைமன்னார், தொண்டைமானாறு, வவுனியா, வவுனிக்குளம் மற்றும் வேப்பங்குளம் போன்ற இடங்களில் இந்த நிலையங்கள் இயங்கின. இவற்றின் இடஞ்சார்ந்த பரம்பல் ஒழுங்காக இல்லை. மேலும் இவற்றில் பெரும்பாலானவை மழை அளவிடும் நிலையங்களாகும். யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் மட்டுமே விவசாய வானிலை நிலையங்கள் அமைந்துள்ளன.

Image 3

வடக்கு மாகணத்தின் மழைவீழ்ச்சி அளவீட்டு மற்று வானிலை அவதான நிலையங்களின் புவியியல் அமைவிட விபரமும் தொடங்கப்பட்ட ஆண்டுகளும்.

chart Geo
மூலம்: வளிமண்டலவியல் திணைக்களம்-2023

புலிகளின் காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் வானிலைக் கண்காணிப்பு

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள பல அரச வானிலை நிலையங்கள் 1990 களில் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக செயற்படவில்லை. இந்த நிலை இருந்தபோதிலும், 1990 களின் முற்பகுதியில் இருந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முறைசாரா முழு அளவிலான ஆட்சி முறையைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பினர் பல மழைவீழ்ச்சி நிலையங்களை உருவாக்கி அவற்றை திறம்பட இயக்கினர். விவசாய மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காகவும் பொது முடிவுகளை எடுப்பதற்காகவும் புலிகளின் விமானப்படையாக இருந்த வான்புலிகளின் பாதுகாப்பு நோக்கத்திற்காகவும் இந்த வானிலை அவதானிப்பு நிலையங்களில் வானிலை அளவீடு மற்றும் கண்காணிப்பு என்பன செய்யப்பட்டன. முன்னர் இயங்காத நிலையங்களுக்கு மேலதிகமாக, காலநிலை அவதானிப்புக்காக விடுதலைப் புலிகள் சில புதிய நிலையங்களை நிறுவினர். விடுதலைப் புலிகள் தமது பகுதியில் காலநிலை அவதானிப்புக்காக நவீன உபகரணங்களை அறிமுகப்படுத்தியிருந்தனர். புதிதாக நிறுவப்பட்ட மையங்களில் வானிலைக் கூறுகளை அளவிடுவதற்கான முழுத் தானியங்கிக் கருவிகள் இருந்தன. வானிலைக் கண்காணிப்பின் ஒரு பகுதியாக, வானிலைக் கண்காணிப்பு உபகரணங்கள் மூலம் தரவுகளைப் பெற்று வான்புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்தனர். அந்த வகையில்  முல்லைத்தீவு, மாங்குளம், துணுக்காய், செம்மலை, நட்டாங்கண்டல், நாச்சிக்குடா, இரணைமடு, பரந்தன், விசுவமடு, புதுக்குடியிருப்பு, கனகராயன்குளம், இலுப்பைக்கடவை போன்ற பல இடங்களில் அவர்கள் அதிகபட்ச குறைந்தபட்ச வெப்பமானி, ஈரமான மற்றும் உலர்  வெப்பமானி, அகச்சிவப்பு வெப்பமானி, தானியங்கி மழைமானி, ஈரப்பதமானி, அமுக்கமானி, ரேடார் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி அவதானிப்புகளை மேற்கொண்டனர். மேலும், தமிழீழ நிர்வாக சேவையின் கீழ் வானிலைத் தரவுகளைச் செயலாக்குவதற்கும் சேமிப்பதற்கும் மத்திய ஒருங்கிணைப்பு மையத்தை கிளிநொச்சி பாரதிபுரத்தில் நிறுவியிருந்தனர். இந்த நிலையங்களுக்கு மேலதிகமாக புலிகளின் பொருளாதார அபிவிருத்தித் திணைக்களம் (தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்), பிராந்தியத்தில் உள்ள பல குளங்களை நிர்வகித்த இடங்களில் மழை மற்றும் பிற வானிலைக் கூறுகளை அளவிட்டது.

புலிகளினால் நிர்வகிக்கப்பட்ட வானிலை அவதானிப்பு நிலையம்

கிளிநொச்சியில் அமைந்த வானிலை அவதான நிலையத்தின் தலைமை அலுவலகத்தில் விடுதலைப் புலிகள் தரவு மையத்தை நிலைநிறுத்தி, பொதுவான நோக்கங்களுக்காக தரவுகளை வழங்கியிருந்தனர். எவரும் பொருத்தமான ஆவணத்துடன் தரவை இலவசமாகப் பெற முடிந்தது. நிலப்பரப்பு வானிலை நிலையங்களைத் தவிர மருதங்கேணி, சாளை, முல்லைத்தீவு மற்றும் நாச்சிக்குடா ஆகிய இடங்களில் கடல் வானிலை கண்காணிப்பு மையங்களையும் (OWOS) இயக்கியுள்ளனர். ஆனால் அந்த நிலையங்களில் அளவீடு செய்யப்பட்ட தரவுகளும் தகவல்களும் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாக, கடல்சார் வானிலை கண்காணிப்பு நிலையங்கள் கடல் பாதுகாப்பு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4108 பார்வைகள்

About the Author

நாகமுத்து பிரதீபராஜா

கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார். காலநிலையியலில் தனது கலாநிதி பட்டத்தினை பூர்த்தி செய்த பிரதீபராஜா காலநிலையியல் தொடர்பான பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை பற்றியும் பொதுவான காலநிலை அம்சங்கள் தொடர்பாகவும் 07 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 40 இற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரித்துள்ளார். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, வடக்கு மாகாணத்தினுடைய வானிலை தொடர்பான இவரது எதிர்வு கூறல்களை பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)