Arts
11 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண இராசதானிக் காலத்திற்குப் புதிய அடையாளம் : அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொன், வெள்ளி நாணயங்கள்

March 4, 2024 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட முதலாவது அரசாக நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண அரசு காணப்படுகின்றது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ஆட்சியில் இருந்த இவ்வரசின் ஆதிக்கத்துக்குள் வடஇலங்கையும் கிழக்கிலங்கையின் சில பாகங்களும், சில சந்தர்ப்பங்களில் தென்னிலங்கையும் உள்ளடங்கியிருந்தது. இவ்வாறு ஏறத்தாழ 350 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இவ்வரசின் வரலாற்றை அறிய உதவும் நம்பகரமான ஆதாரங்களில் ஒன்றாக  அவ்வரசு காலத்தில் வெளியிடப்பட்ட சேது மொழி பொறித்த நாணயங்கள் காணப்படுகின்றன. இவ்வரசை முதலில் தோற்றுவித்த ஆரியச் சக்கரவர்த்திகள் தமிழ் நாடு சேது தலத்துடன் கொண்டிருந்த தொடர்பை நினைவுபடுத்தி தாம் வெளியிட்ட நாணயங்களில் சேது என்ற மங்கல மொழியைப்  பொறித்தனர். இந்நாணயங்களை யாழ்ப்பாண மன்னர்களே வெளியிட்டனர் என்பதை முதலில் அடையாளப்படுத்திய பெருமை முதலியார் இராசநாயம் அவர்களுக்கு உரியதாகும். இந்நாணயங்களின் வடிவமைப்பு, அளவு, நிறை, அவற்றில் பொறிக்கப்பட்ட சின்னங்கள் என்பவற்றை அடிப்படையாகக்  கொண்டு ஆராய்ந்த பேராசிரியர் பத்மநாதன் இந்நாணயங்களை ஆறு வகைப்பட்டதாக  அடையாளப்படுத்தியுள்ளார். ஆனால் 1990 களின் பின்னர் சேது மொழி பொறித்த நாணயங்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்திருப்பதை ஆதாரமாகக் கொண்டு இவற்றை  பதினெட்டு வகையாகப் பார்க்க முடிகின்றது. 

jaffna old coins

யாழ்ப்பாண இராசதானி கால நாணயங்கள் பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள் பலரும் இவ்வரசு காலத்தில் சேது மொழி பொறித்த செப்பு நாணயங்கள் மட்டுமே வெளியிடப்பட்டதெனக் கூறி வந்துள்ளனர். ஆனால் சேது மொழியோடு கந்தன், ஆறுமுகன் ஆகிய கடவுளர் பெயரிலும் நாணயங்கள் வெளியிடப்பட்டதற்கு தற்போது உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் யாழ்ப்பாண இராசதானி கால நாணயங்கள் பற்றி விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் பத்மநாதன் இவ்வரசால் செப்பு நாணயங்களுடன் பொன் நாணயமும் வெளியிடப்பட்டது என்பதற்கு பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொன் நாணயத்தை ஆதாரமாகக் காட்டுகின்றார். இந்நிலையில், வடஇலங்கையில் பூநகரி வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது பொன்முலாம் பூசப்பட்ட இரண்டு சேது நாணயங்கள் (Gold Plate Coin) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வரலாற்றுப் பெறுமதியுடைய அரிய நாணயங்களாகக் காணப்பட்டதால் இவற்றின் உண்மைத் தன்மையை ஆய்வுகூடப் பரிசோதனையில் மேலும் உறுதிப்படுத்த கடந்த வாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடாதிபதி பேராசிரியர். ரவிராஜ் அவர்களின் உதவியை நாடிய போது அவர் உடனடியாகவே அவற்றை ஆய்வு செய்வதற்கு தனது பௌதிக துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி. சுதர்சினி, கலாநிதி. தணிகரூபன் ஆகியோரிடம் அப்பணியை ஒப்படைத்தார். அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இரண்டு நாட்களாகத் தமது துறையின் ஆய்வுகூடத்தில் பரிசோதித்து இரண்டு சேது நாணயங்களிலும் பொன் கலக்கப்பட்டதை உறுதிப்படுத்தியிருந்தனர். இதன் மூலம் யாழ்ப்பாண இராசதானியில் பொன் நாணயங்களும் புழக்கத்தில் இருந்த உண்மை மேலும் தெரியவந்துள்ளது.

jaffna old coins

யாழ்ப்பாண இராசதானி கால மன்னர்களில் சிலர் பொன் நாணயங்களுடன் வெள்ளி நாணயங்களையும் வெளியிட்டிருந்தனர் என்பதற்கு முதன் முறையாக ஆதாரம் கிடைத்துள்ளது. புத்தூர் விஸ்ணு வித்தியாலய அதிபராக இருந்த தி. சிவஞானம் அவர்கள் தமது மணல்திடல் கிராமத்தில் பண்டைய காலத் தொல்பொருள் சின்னங்கள் காணப்படுவதை பல தடைவைகள் என்னிடம் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அங்கு களவாய்வில் ஈடுபட்டிருந்த போது அங்கிருக்கும் வைரவர் ஆலயப் பூசகர் ஒருவர் தமது ஆலய உண்டியலில் அங்கு வசிக்கும் மக்களால் போடப்பட்ட செல்லாக் காசுகள் இருப்பதாகக் கூறினார். அதன் பேரில் அவ்வாலய உண்டியலைப் பரிசோதித்த போது அதற்குள் ஒரு சில பண்டைய நாணயங்களுடன் சேது மொழி பொறித்த மிக அழகான வெள்ளி நாணயம் ஒன்றும் காணப்பட்டது. இது ஒன்றே யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வெள்ளி நாணயமும் புழக்கத்தில் இருந்தமைக்கு கிடைத்துள்ள முதலாவது ஆதாரமாகும்.   

தென்னாசியாவில் இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரச இலட்சனைகளுடன் நாணயங்களை வெளியிடும் மரபு இருந்துள்ளது. இந்நாணயங்கள் பெருமளவுக்குச் செப்பு நாணயங்களாகவே காணப்பட்டன. ஆனால் அரசியல் பலம், பொருளாதார வளம் கொண்ட அரசுகள் செப்பு நாணயங்களுடன் வெள்ளி, பொன், பொன் முலாம் பூசப்பட்ட நாணயங்களையும் வெளியிட்டுள்ளன. இதற்கு இந்திய வரலாற்றில் பொற்காலம் என அழைக்கப்பட்ட குப்தர் காலத்திலும், தென்னாசியாவின் முதலாவது கடல்சார்ந்த பேரரசை உருவாக்கிய சோழர் காலத்திலும் வெளியிடப்பட்ட பொன், வெள்ளி, பொன் முலாம் பூசப்பட்ட நாணயங்களை உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இலங்கையிலும் கூட ஒன்றுபட்ட இலங்கையை உருவாக்கியவன் எனப் புகழப்படும் முதலாம் பராக்கிரமபாகு காலத்திலும் இவ்வகையான நாணயங்கள் வெளியிடப்பட்டதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. தற்போது யாழ்ப்பாண அரசு காலத்திலும் செப்பு நாணயங்களுடன் பொன், வெள்ளி நாணயங்களும் வெளியிடப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பது யாழ்ப்பாண இராசதானியின் ஆதிக்க பலத்தையும், அதன் பொருளாதார வளத்தையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இவ்விடத்தில் 15 ஆம் நூற்றாண்டு கால இலங்கை அரசியல் நிலை பற்றிக் கூறும் ‘நிகாயசங்கிரய’ என்ற சிங்கள நூல் இக்காலத்தில் ஆட்சியில் இருந்த கம்பளை, றைகம அரசுகளைக் காட்டிலும் யாழ்ப்பாண அரசு இராணுவ பலத்திலும், பொருளாதார வளத்திலும் மேலோங்கி இருந்ததாகவும், இதனால் யாழ்ப்பாண மன்னர்கள் மலைநாட்டிலுலிருந்தும், கீழ்நாட்டிலிருந்தும், ஒன்பது துறைமுகங்களில் இருந்து திறைபெற்றதாகவும் கூறுவதை மேற்கோள் காட்டலாம். இதை கோட்டகம என்ற இடத்தில் கிடைத்த யாழ்ப்பாண அரசு காலக் கல்வெட்டும், மடவல சிங்களச் சாசனமும் மறைமுகமாக உறுதிப்படுத்துகின்றன. இந்த வரலாற்று உண்மையை மேலும் உறுதிப்படுத்துவதாகவே யாழ்ப்பாண மன்னர்கள் வெளியிட்ட பொன், வெள்ளி நாணயங்களைப் பார்க்கலாம். 

jaffna old coins

இலங்கைத் தமிழரின் பண்டைய நாணயங்கள் பற்றி முகநூல்களில் வந்த செய்திகளைப் பார்த்த வரலாற்று ஆர்வலர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு இதுபோன்ற நாணயங்களைத் தாம் வைத்திருந்ததாகவும் அவற்றைத் தொலைத்துவிட்டதாகவும், வேறு சிலர் தம்மிடம் இருந்ததை தமது  வீடுகளில் தேடவேண்டும் எனவும், இன்னும் சிலர்  பொது மக்களிடம் விலைக்கு வாங்கிய நாணயங்களின் வரலாற்றுப் பெறுமதியை அறியாது அவற்றை உருக்கி ஆபரணங்கள் செய்ததாகவும் கூறிவருகின்றனர். வடஇலங்கையின் சில ஊர்களில் வசிக்கும் ஒரு சில மக்கள் மழை காலங்களில் வெளியே தெரியவரும் வரலாற்றுச் சின்னங்களைச் சேகரித்து பிறருக்கு விற்பனை செய்வதைக் காணமுடிகின்றது. ஆனால் இவை எமது பிரதேசத்தினதும், எம்மக்களினதும் விலைமதிக்க முடியாத ஒரு சொத்து. இவற்றை அருங்காட்சியகங்களிற்கு கொடுப்பதன் மூலம் இலங்கைத் தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்தும் பெரும் பணியைச் செய்தவர்களாவீர்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6916 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)