Arts
15 நிமிட வாசிப்பு

நவீன உலகத்தின் உதயமும் இலங்கையின் நவீனத்துவமும் 1848 மாத்தளைக் கிளர்ச்சியும்

December 23, 2022 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

இதுவரை உலகம் கண்டிராத தார்ப் பாதைகள், புகையிரத வண்டிகள், நீராவிக் கப்பல்கள், தொலைத்தொடர்புச் சாதனங்கள் அனைத்துமே இக்காலத்துக்குரியவை. 1760 ஆம் ஆண்டு முதல் 1820 – 1840 வரை – அதற்குப்பின்னரும் – பிரித்தானியாவில் தொடர்ந்த இயந்திரக் கைத்தொழில் புரட்சியே உலகத்தை நவீன யுகத்துக்குக் கொண்டுவந்தது. 1820 இல் தான் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் லவுடன் மக்அடம் (Johon Loudon MacAdam) என்பவரால் முதற்தடவையாக பாதைகள் கற்களால் சமப்படுத்தப்பட்டு கற்தூள்களால் செப்பனிடும் ‘மெக்கடம் முறை’ அறிமுகப்படுத்தப்பட்டது. 1902 இல் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்னஸ்ட் குக்லில்மினட்டி (Earnest Guglielminetti) என்பவர்தான் முதற்தடவையாக தார்ப் பாதைகளை அமைத்தார். இவை ஆச்சரியப்படும் வகையில் இலங்கையில் விரைவாக அறிமுகம் செய்யப்பட்டன. 1804 இல் தான் உலகின் முதலாவது நீராவி புகையிரதமான பென் வை டாரன் “Pen-y-Darren” சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. 1808 இல் முதலாவது நீராவிக்கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது. 1857 இல் தான் முதலாவது பெற்றோலியக் கிணறு பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது. 1876 இல் தான் தொலைபேசி அலெக்சாந்தர் கிரகம் பெல் (Alexander Graham Bell) என்ற ஸ்கொட்லாந்துக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1885 இல் தான் பெற்றோலால் இயங்கும் முதலாவது மோட்டார்வண்டி உருவாக்கப்பட்டது. கக்லில்மோ மார்க்கோனி என்ற இத்தாலியரால் வானொலி 189 5இல் கண்டுபிடிக்கப்பட்டது. 1903 டிசெம்பர் 17ஆம் திகதி ரைட் சகோதரர்களின் விமானம் முதற்தடவையாக வானில் பறந்தது. நாடுகள் இணைக்கப்பட்டன. தேசிய இனங்களின் உருவாக்கம் துரிதமடைந்தது. இந்த நவீனத்துவம் இலங்கையில் பெருந்தோட்ட வளர்ச்சியோடு இணைந்திருந்தது.

1848 மாத்தளைக் கிளர்ச்சி – அன்று தொடங்கிய மாற்றங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி

1848 இல் மாத்தளைக் கிளர்ச்சி வெடித்தற்கான காரணத்தை ஆராய்வது அக்காலப்பகுதியில் ஏற்பட்டுக்கொண்டிருந்த அரசியல் சமூக பொருளாதர மாற்றங்களை ஓரளவுக்கு படம்பிடித்துக்காட்டும்.

கொங்காலே கொட பண்டா

பெருந்தோட்டத்தின் மின்னல் வேக வளர்ச்சியையும், அதன் மூலம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட காலனிய முதலாளித்துவத்தையும் கண்டிய இராச்சியத்தில் வாழ்ந்த சிங்கள மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களது சுதந்திரம் பறிபோவதாக அவர்கள் உணர்ந்தனர். முன்னரைப்போல சுதந்திரமாக தமது கால்நடைகளை வளர்க்கமுடியவில்லை. அவை கோப்பித் தோட்டங்களுக்குள் நுழைந்தால் ஒன்றில் சுடப்பட்டன, அல்லது பறிமுதல் செய்யப்பட்டன அல்லது அபராதம் விதிக்கப்பட்டது. முன்னர் அவர்கள் சேனைப்பயிர் செய்த இடங்கள் இல்லாமல் போயிருந்தன. அங்கெல்லாம் பெருந்தோட்டங்கள் பட்டுக் கம்பளம் விரித்தாற்போல் பரந்து விரிந்து கிடந்தன. 1818 கிளர்ச்சியின் பின்னர் அதுவரை கண்டியப் பிரதானிகளும் உள்ளூர்த் தலைவர்களுக்கும் இருந்த முக்கியத்துவம் குறைக்கப்பட்டு அவர்கள் இருந்த இடத்தில் வெள்ளையர்களும் அரசாங்க உத்தியோகஸ்தர்களும் இருப்பதால் அவர்கள் தமது சொந்த மண்ணில் அந்நியராக்கப்பட்டிருப்பதாகக் கருதினர். அவர்கள் இழக்கப்பட்ட கண்டிய மன்னராட்சிக்காக ஏங்கினார். 1818 இல் வில்பாவே என்ற வேடதாரி தன்னை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த துரைசாமி எனக்கூறிக்கொண்டு பாரிய கிளர்ச்சியைத் தூண்டியதைப்போல – 1818 கிளர்ச்சியின் பாதிப்பால்- அடிக்கடி கிளர்ச்சிகள் வெடித்தன.

1820 இல் இவ்வாறு பிந்தென்னயில் குமாரசுவாமி விமலதர்ம நரேந்திர சிங்க என்ற பெயரில் ஒரு வேடதாரி தோன்றி – தமது வேட்டை நிலங்கள் பறிக்கப்பட்ட ஆத்திரத்தில் இருந்த வேடுவர்களின் ஆதரவோடு – கிளர்ச்சி ஒன்றை உருவாக்க முயற்சித்தான். இம்முயற்சி சுலபமாக நசுக்கப்பட்டது. அவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அத்தண்டனை குறைக்கப்பட்டு அவன் மொரீசியஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டான். இதே விதமான சிறு கிளர்ச்சி ஒன்று 1823 இல் நுவரகலாவியவில் வெடித்தது. கோல்புரூக் – கேமரூன் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடத்திற்குப் பிறகு 1834 ஆம் ஆண்டு மற்றொரு கிளர்ச்சி வெடித்தது. முதலாவது அதிகாரியான மொல்லிகொடவும் துனுவில திசாவையும் கூட்டாக இதற்குத் தலைமை தாங்கினார். இவர்கள் ஒரு பர்மிய இளவரசனை அரியணையில் அமர்த்த திட்டமிட்டனர். இந்தத்தடவையும் பிரித்தானியரின் ஒத்துழைப்பாளர்களில் ஒருவரான மகாவலதென்ன காட்டிக்கொடுத்ததால் கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தகவல் கொடுத்தவருக்கு வெகுமதியாக கிளர்ச்சித் தலைவர்கள் வகித்த உயர் பதவிகள் வழங்கப்பட்டன. மற்றொரு சிறு கிளர்ச்சி 1843 இல் சந்திரகோட்ட உன்னன்சே தலைமையில் வெடித்தது. 1818 கிளர்ச்சியின் அளவு பாரியதாக இல்லாத போதும் கூட, இவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். 1848இல் வெடித்த மாத்தளைக் கிளர்ச்சி இவற்றைவிட தன்மையில் வேறுபட்டதாகவும், பலவிதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தீவிரமானதாகவும் இருந்தது.

மாத்தளைக் கிளர்ச்சி சாராம்சத்தில் விவசாயிகளின் கிளர்ச்சியாக இருந்தபோதும் இதற்கு 1818 கிளர்ச்சியைப்போன்று உயர்குடிப் பிரபுக்கள் தலைமை கொடுக்கவில்லை. சாதாரண வகுப்பைச்சேர்ந்த, அதுவும் கண்டி பிரதேசத்தைப் பிறப்பிடமாக்கிக்கொள்ளாத இருவரே தலைமை தாங்கினார். அதற்கு ஒரு காரணம் 1818 கிளர்ச்சியில் ஈடுபட்ட உயர்குடிப் பிரபுக்களில் அநேகமானோர் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது நாடு கடத்தப்பட்டுவிட்டனர். எஞ்சிய ஒரு சில உயர்குடிப் பிரபுக்களும் பிரித்தானியருக்கு குற்றேவல் புரிந்தனர். மாத்தளைக் கிளர்ச்சிக்கு தலைமை தங்கிய இருவரான – கண்டி சிம்மாசனத்தின் வாரிசு என வேடமிட்ட – கொங்காலே கொட பண்டா பேலியகொடவில் பிறந்தவர். இவர் ஒரு முன்னாள் பொலிஸ் அதிகாரியாவார். அவரது தளபதியாகவும் பிரதம அமைச்சராகவும் பிரகடனப்படுத்தப்பட்ட புரண் அப்பு கடலோர நகரமான மொறட்டுவையில் பிறந்தவர். இவர்கள் இருவரும் கண்டிய பிரதேசத்தில் திருமணம் முடித்து அங்கு வாழ்ந்தனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட பெருந்தோட்டங்களைப் பாதுகாப்பதற்காகவும் அங்கு உருவாக்கப்பட்ட பாதைகளில் போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஆயிரக்கணக்கான யானைகள் படுகொலை செய்யப்பட்டன. ஏற்கனவே தமது மேய்ச்சல் நிலங்களையும் சேனைப்பயிர் செய்த தரிசு நிலங்களையும் இழந்து நின்ற பெளத்தர்களுக்கு தாம் வழிபாட்டு ஊர்வலங்களில் பயன்படுத்திய – தமது கலாசாரத்தோடும் உணர்வோடும் கலந்த – யானைகள் இவ்வாறு கொல்லப்பட்டமை அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள் பழக்கப்பட்டிருந்த நிலப்பிரபுத்துவ கட்டமைப்பு சிதைவதால் தமது அன்றாட வாழ்க்கையில் புதியமாற்றங்கள் இடையூறு செய்வதாக அவர்கள் உணர்ந்தனர்.

சாரய-தவறணைகள்

ஆங்கிலேயர்களின் மது வரிக் கொள்கை, குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில், கூடுதலான மதுக்கடைகளைத் திறப்பதை ஊக்குவித்தது. 1815 முதல் 1848 வரையிலான காலப்பகுதியில் 133 சாராய அல்லது கள்ளுத் தவறணைகள் கண்டிப் பெருந்தோட்டப் பகுதியில் மாத்திரம் திறக்கப்பட்டதால் கிராமத்து இளைஞர்களும் மதுபோதைக்கு அடிமையாகினர். இதனால் கண்டியச் சமூகம் அதிர்ச்சியடைந்தது. இந்த மதுக்கடைகள் பெரும்பாலும் கரையோரச் சிங்களவர்களுக்குச் சொந்தமாயிருந்தது. இவ்வாறு பெருந்தோட்டப் பகுதிகளில் சாராயத்தவறணைகளும் கள்ளு விற்பனை நிலையங்களும் பெருமளவில் திறப்பதற்கு தோட்டத் துரைமார், தேவையான நிலங்களை வழங்கி ஊக்குவித்தனர். தோட்டத்தொழிலாளர்கள் தமது அவல வாழ்நிலையை மறந்து கொத்தடிமைகளாக வாழவும் அவர்களது கடன் சுமை மேலும் அதிகரித்து தாம் வேலை செய்யும் தோட்டங்களையும் தம்மைக் கட்டுப்படுத்தும் கங்காணிமார்களையும் விட்டுச்செல்ல முடியாத நிலைமையையும் இது தோற்றுவித்தது. தோட்டத் துரைமார் சாராயத்தவறணைகளை ஊக்குவித்த காரணமும் இதுதான்.

ஒருவிதத்தில் இக்கிளர்ச்சி வெடிப்பதற்கு கோல்புரூக் சீர்திருத்தமும் ஒரு காரணமானது. கோல்புரூக் சீர்திருத்தத்தின் கீழ் நிர்வாகமுறை ஆங்கிலமயமாகியது. அது பழைய நிர்வாக முறைக்கு மாறுபட்டதாக இருந்தது. இது நிலப்பிரபுத்துவ நிர்வாக முறைக்கு மாத்திரமே பழக்கப்பட்டுப் போயிருந்த கண்டியச் சமூகத்துக்கு அந்நியமான ஒன்றாக இருந்தது. அதிலிருந்து தாம் ஒதுக்கப்படுவதாக கண்டியர்கள் உணர்ந்தனர். இந்த ஆத்திரம் தான் கிளர்ச்சியின்போது மாத்தளைக் கச்சேரியையும் நிர்வாக மையங்களையும் அவர்கள் குறிவைத்து தாக்கியதில் வெளிப்பட்டது. இவை அனைத்துக்கும் மேலாக 1846 இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியால் திணறிய பிரித்தானிய காலனிய அரசு அந்தப்பளுவை தமது காலனிகள் மீது சுமத்த முயன்றது. இதன் விளைவே மாத்தளைக் கிளர்ச்சி வெடிப்பதற்கான உடனடிக் காரணமானது

1846 இல் உலகப் பொருளாதார நெருக்கடி இலங்கையின் பெருந்தோட்ட வளர்ச்சியை தற்காலிகமாக ஆனால் கடுமையாகப் பாதித்தது. லண்டனில் கோப்பிக்கு கொடுக்கப்பட்ட விலை கிட்டத்தட்ட ஐந்தில் நான்கு பங்கு குறைந்தது. இப்போது இலங்கை காலனிய அரசாங்கம் பெரும்பாலும் கோப்பி ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானத்தில் தங்கி நின்றதால் நாட்டின் வரவு – செலவை சமப்படுத்த முடியாமல் திண்டாடியது. இலங்கைக்கு விக்டோரியா மகாராணியால் புதிதாக நியமிக்கப்பட்ட 35 வயது நிரம்பிய அனுபவமற்ற ஆள்பதியான விஸ்கவுண்ட் டொரிங்டன் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கினார். அவர் அப்போது பிரிட்டன் பிரதம மந்திரியாக இருந்த லோர்ட் ரஸ்ஸலின் உறவினர். இவரது நியமனம் ஓர் உறவுமுறைச் சலுகையாகக் (nepotism) கருதப்படுகிறது. அவருக்கிருந்த ஒரே தகைமை ஒரு ரயில்வே நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவர் என்பதுதான்.

COFFEE CULTIVATION IN SRI LANKA

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அவர் கடுமையான வரிகளை விதித்தார். அப்போது கண்டியர்கள் தமது உணவுக்கு மற்றுமொரு ஆதாரமாக வேட்டைத் தொழிலை நடத்திவந்தனர். அவர்களுக்கு துப்பாக்கியும் வேட்டை நாய்களும் மிகவும் அவசியமாக இருந்தன. அத்துடன் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு பெருந்தோட்டங்கள் உருவாகிவிட்டதால் வனவிலங்குகள் கிராமங்கள் மீது படையெடுத்தன. எனவே வனவிலங்குகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் அவர்களுக்குத் துப்பாக்கி தேவைப்பட்டது. ஆனால் ஆள்பதி டொரிங்டன் ஜூலை 1, 1848 ஆம் திகதி துப்பாக்கிகளுக்கும், நாய்களுக்கும் மாத்திரமல்ல, வண்டிகள், கடைகள் மீதும் வரிகள் விதித்தார். கண்டியர்களை மேலும் ஆத்திரப்படுத்திய ஏனைய நடவடிக்கைகளில் நில வரியும் (Land Tax) 1848 சாலைகள் கட்டளைச் சட்டம் (Road Ordinance) ஆகியவையும் அடங்கும். சாலைகள் கட்டளைச் சட்டம் இலவசக் கட்டாய உழைப்பை வழங்கும் இராஜகாரிய முறையை மீண்டும் உயிர்ப்பித்தது. இதன்படி, பாதை அமைப்பதில் ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஆறு நாட்கள் இலவச உழைப்பு அல்லது அதற்கு சமமான ரொக்கத்தைச் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்த வரிகள் கண்டிய விவசாயிகள் மீது பெரும் சுமையைச் சுமத்தியதுடன் அவர்களின் பாரம்பரியங்களையும் புறக்கணித்தது. எனவே இந்த அடக்குமுறை வரிகளுக்கு எதிராக வெகுஜன எழுச்சி ஒன்று சுயமாக உருவானது. அதற்குத் தலைமை கொடுக்க அரசர்களோ உயர்குலப் பிரபுக்களோ இருக்கவில்லை; முதல் தடவையாக தலைமைத்துவம் சாமானியர்களின் கைகளுக்குச் சென்றது.

இந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய கொங்காலே கொட பண்டாவும், புரண் அப்புவும், அவர்களது ஆதரவாளர்களும் 1848 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி, வரலாற்று சிறப்புமிக்க தம்புள்ளை விகாரையில் திரண்டனர். தம்புள்ளையின் பிரதான பிக்குவான வண. கிரநேகம தேரர் கொங்கலேகொட பண்டாவுக்கு “ஸ்ரீ விக்கிரம சுப சர்வ சித்தி ராஜசிங்க” என்ற பட்டத்தை சூடி ஆசீர்வதித்தார். அதே தினம் கொங்கலேகொட பண்டா தனது சகோதரனான தினேஷ் என்பவரை ஏழு கோரளைக்கு சிற்றரசனாக நியமித்தான்.

அதன் பின்னர் தம்புள்ளையில் இருந்து கண்டி நோக்கிப் புறப்பட்ட கிளர்ச்சியாளர்கள் மாத்தளைக் கச்சேரி உள்ளிட்ட அரச கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி சில வரி ஆவணங்களை அழித்தனர். 1818 கிளர்ச்சியைப்போல பெரியளவு மக்கள் ஆதரவுடன் கண்டிப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் இக்கிளர்ச்சி நடைபெறவில்லை. எனினும் 1818 இன் பின்னர் இடம்பெற்ற பெரிய கிளர்ச்சி இதுதான். மாத்தளை, கண்டி, குருநாகல் ஆகிய பகுதிகளில் – சில இடங்களில் கிளர்ச்சி தீவிரத்தன்மை கொண்டதாக இருந்தது.

கவர்னர் டொரிங்டன், மார்ஷல் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி நான்கு நாட்களுக்குள் கிளர்ச்சியை நசுக்கிவிட்டார். இவ்வளவு விரைவாக கிளர்ச்சியை அடக்க முடிந்தமைக்கு கொழும்போடு கண்டியை இணைக்கும் பாதையும் அவற்றோடு கண்டிப் பிரதேசங்களின் ஏனைய பகுதிகளை இணைக்கும் பாதைகளும் அமைக்கப்பட்டிருந்தமை ஒரு முக்கிய காரணமாகும். சிறைபிடிக்கப்பட்ட கிளர்ச்சியாளர்களில் 18 பேர் தூக்கிலிட்டப்பட்டனர், 28பேர் நாடுகடத்தப்பட்டனர், 66பேருக்கு கசையடி வழங்கப்பட்டது. இவர்களில் கிளர்ச்சித் தலைவர்களும் அடங்குவர். அவர்கள் துணிவுடன் மரணதண்டனைக்கு முகம் கொடுத்து பேசிய வசனங்கள் இன்றும் மக்கள் மனதில் வீரத்தை விதைப்பதாக இருக்கின்றன.

மாத்தளையில் வீர புரன் அப்புவுக்கு நினைவுச் சின்னம்

கவர்னர் டொரிங்டன் 1849 ஒக்டோபர் 09 இல் லண்டனில் இருந்த காலனிகளுக்கான வெளியுறவுத்துறை செயலாளரான ஏர்ல் கிரேவுக்கு – தனது மூர்க்கமான நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக எழுதிய கடிதத்தில்: “புரண் அப்புவின் கடைசி வார்த்தைகளை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். அவர் கைகளை உயர்த்தி, ‘என்னைப் போன்ற அரை டஜன் பேர் தலைமை தாங்கியிருந்தால், கண்டி மாகாணத்தில் ஒரு வெள்ளைக்காரன் கூட வாழ்ந்திருக்க மாட்டான்’ எனக்கூறினார். இது உண்மைதான். அப்படிப்பட்ட தலைவர்கள் இருந்திருந்தால், சந்தேகமில்லாமல் ஒரு காலத்தில் நாட்டை இழந்திருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இக்கிளர்ச்சியின் போதும் அதற்கு பின்னரும் சில பிரித்தானியப் புத்திஜீவிகள் வகித்த பாத்திரத்தை இங்கு குறிப்பிடவேண்டும். அதில் இருவர் மிக முக்கியமானவர்கள். ஒருவர் ஐரிஷ்காரரான கலாநிதி கிறிஸ்தோபர் எலியட் (Dr. Christopher Elliott). கொழும்பு ஒப்சேவர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான இவர் பொரல்லையில் வசித்தார். இவர் கவர்னர் டொரிங்டன் திணித்த வரிகளை எதிர்த்தும் அதனால் கண்டியருக்கு ஏற்பட்ட துன்பங்களையும் அவமானங்களையும் தனது பத்திரிகையில் கட்டுரைகள் வெளியிட்டு வந்தார். இவரைப்போலவே அப்போது பத்திரிகைத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஏ. எம். பெர்குசன் அதற்கெதிராக குரல் கொடுத்தார். கிளர்ச்சி வெடித்தபோது, கலாநிதி எலியட் மேலும் ஒருபடி மேலேபோய் பொரல்லையில் அதற்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். கிளர்ச்சி நசுக்கப்பட்ட பின்னர் அது நசுக்கப்பட்ட விதத்துக்கெதிராக இவ்விருவரும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தனர். இவர்களோடு ரிச்சர்ட் மோர்கன், லாரன்ஸ் ஒலிபான்ட் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

இவர்களின் முயற்சி காரணமாக லண்டனில் இவ்விடயம் பேசப்பட்டது. கவர்னர் டொரிங்டனால் விடயத்தை மூடி மறைக்க முடியவில்லை. குறிப்பாக கண்டி சிம்மாசனத்தின் வாரிசு என வேடமிட்ட கொங்கலேகொட பண்டாவுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக சவுக்கால் அடித்ததற்கும், தம்புள்ளையின் தலைமை பிக்கு வண. கிரநேகம தேரரை காவியாடையுடன் தூக்கிலிட்டதற்கும் எதிர்ப்புக் கிளம்பியது. இதன் பயனாக விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கவர்னர் டொரிங்டன் 1850இல் இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்பட்டார்.

மாத்தளைக் கிளர்ச்சியின் போது காணப்பட்ட குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விடயம் யாதெனில், தமிழ்த் தோட்டத்தொழிலாளர் எவரும் தாக்கப்படவில்லை என்பதுதான். மாத்தளைக் கிளர்ச்சியின் போது ’தோட்டத்தொழிலாளர்கள் தமது உயிருக்கு அஞ்சி ஓடிவிடுவார்களோ இனி இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் வரமாட்டார்களோ?’ என தோட்டத் துரைமார் அச்சம் கொண்டனர். ஆனால் அந்த அச்சம் தமிழ்த் தோட்டத் தொழிலாளர் வெளிப்படுத்திய தைரியத்தின் முன்னால் அர்த்தமற்றதாகிவிட்டது. கிளர்ச்சியாளர்களின் இலக்கு பிரித்தானியர்களாவே இருந்தனர். அவர்கள் தாக்கிய இலக்குகள் பெரும்பாலும் கச்சேரி, சிறைச்சாலை, பிரித்தானிய உத்தியோகஸ்தர்களின் வாசஸ்தலங்கள் என்பனவாகவே இருந்தன. சில தோட்டங்களில் துரைமாரின் பங்களாக்கள் சேதமாக்கப்பட்டன. அதற்குக்குக்காரணம் அப்போது அரச அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் தோட்டத்துரைமார் செயலாற்றினார். உதாரணமாக ஹெர்பர்ட் மட்டொக் என்ற பிரித்தானியர் முன்னர் இராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாகக் கடமையாற்றிவர். இவர் இளைப்பாறிய பின்னர் மாத்தளையில் ஒரு தோட்டத்தில் தோட்டத் துரையாகப் பணிபுரிந்தார். இக் கிளர்ச்சியை நசுக்குவதற்கு ஆலோசனை வழங்கியவர்களில் முக்கியமான ஒருவர். இவரது கோப்பி சேமிப்பு நிலையம் கிளர்ச்சியாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறுதான் மிகச்சில தேர்ந்தெடுக்கப்பட்ட தோட்டங்கள் தாக்கப்பட்டன என கே. எம். டி சில்வா குறிப்பிடுகிறார். கண்டியச் சிங்களவர் மத்தியில் பெருந்தோட்டத்தின் வேகமான வளர்ச்சி அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த அதிருப்திகள் பொங்கியெழும் ஆத்திரத்தை தொடுமளவுக்கு வளர்ந்திருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தாக்கப்பட்ட ஒரு சில தோட்டங்களில் கூட தொழிலாளர்கள் அச்சம் கொள்ளவில்லை, தைரியமாக முகம்கொடுத்தனர் என விசாரணைக்குழு முன்னிலையில் கண்டி பொலிஸ் அத்தியட்சகர் துணுவிலவும் கண்டி மாஜிஸ்திரேட் ஹன்னாவும் சாட்சியமளித்தனர். அனைத்தையும் விட கிளர்ச்சியாளர்கள் தமது இலக்கில் மிகத்தெளிவாக இருந்தனர். அவர்கள் கிளர்ச்சியின்போது ‘எமது மன்னர் உங்களுக்கு எந்தத்தீங்கும் விளைவிக்க மாட்டார். அவர் ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கு காணிகள் வழங்கப்படும். நீங்கள் எம்மோடு ஒன்று சேருங்கள்’ என்ற கையெழுத்துப் பிரசுரங்கள் தோட்ட தொழிலாளர் மத்தியில் விநியோகிக்கப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது.

உள்ளூர்ப் பிரதானிகளின் ஆதரவு இல்லாமல் மக்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை என்ற முக்கியமான அரசியல் பாடத்தை 1848 ஆம் ஆண்டு எழுச்சி ஆங்கிலேயர்களுக்கு கற்பித்தது என்று அசோக பண்டாரகே கூறுகிறார். அதன் பின்னர் ஆங்கிலேயர்களின் நிர்வாகக் கொள்கையிலும் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டது. 1818 கிளர்ச்சியின் பின்னர் முக்கிய பிரதானிகளுக்கு மரண தண்டனை வழங்கிய தவறை உணர்ந்து, அவர்களது சந்ததியினரைத் தேடிப்பிடித்து அவர்களை மாகாண நிர்வாகத்தில் மிக நெருக்கமாக இணைத்துக்கொண்டனர். அவர்களது குடும்பத்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பெருமளவு நிலம் அவர்களிடம் திருப்பிக்கொடுக்கப்பட்டது. அவற்றைப் பெருந்தோட்டங்களாக உருவாக்கி நிர்வகிக்கும் பொறுப்பை ஏஜென்சி ஹவுஸிடம் அவர்கள் ஒப்படைத்தனர். இது ஏற்படுத்திய தாக்கத்தை பின்னர் நாம் பார்க்கலாம்.

உசாத்துணை

  1. Ameer Ali, A. C. L.  (1972) “Peasant Coffee in Ceylon during the 19th Century.” Ceylon Journal of Historical and Social Studies (new series) 2.
  2. Bandarage Asoka (1982) The Establishment and Consolidation of the Plantation Economy in Sri Lanka, Bulletin of Concerned Asian Scholars. Vol.14 No.3
  3. Bayly,  C.A. (2003) The birth of the modern world, 1780-1914: global connections and comparisons (Oxford, 2003) Ceylon: rebellion report, 1849, TNA, CO 882/1
  4. Dawood  Nawaz  (1960) ‘Tea and Poverty – Plantations and the Political Economy of Sri Lanka, Kalpana Printing House, New Delhi, India
  5. De Silva K.M. (1965) Social policy and missionary organization in Ceylon 1840 to 1855, Published for the Royal Commonwealth Society, Longmans. London
  6. Ellman, A. O.; Ratnaweera, D. De S.; Silva, K.T.; Wickremasinghe, G. (January 1976). Land Settlement in Sri Lanka 1840-1975: A Review of the Major Writings on the Subject, Colombo, Sri Lanka: Agrarian Research and Training Institute
  7. Fr. Perear. S.G. (1951) A history of Ceylon’. The associated Newspapers of Ceylon Ltd.
  8. Gunasekara, U. A.(1959) , ‘Land Tanure in the Kandyan Provinces of Ceylon’, B.Litt. thesis (Oxford University.
  9. Hayley, F. A. (1923, A Treatise on the Laws and Customs of the Sinhalese Including the Portions still Surviving under the Name Kandyan Law (Colombo).
  10. Lennox A.Mills, Ceylon under British Rule 1795-1932,
  11. Lorna Dewaraja, (1972) The Kandyan kingdom of Ceylon, 1707-1760 (Colombo)
  12. Meyer, É.  (1992) “‘Enclave’ Plantations, ‘Hemmed-In’ Villages and Dualistic Representations in Colonial Ceylon,” in Plantations, Peasants and Proletarians in Colonial Asia. Special Issue of Journal of Peasant Studies, Vol. 19, No. 3+4, ed. E. V. Daniel, H. Bernstein, and T. Brass (London).
  13. Moldrich Donovan (1990), Bitter Berry Bondage – The Nineteenth Century Coffee Workers of Sri Lanka, Co-ordinating Secretariat of Plantation Areas, Kandy, Sri Lanka.
  14. Peebles Patrick, (1976) Land use abd Population Growth on Colonial Ceylon’ Contribution to Asian Studies.
  15. Ralph Pieris,  (1957)’Society and Ideology in Ceylon during a “Time of Troubles”, 1796-1850
  16. Ralph Pieris, (1956) Sinhalese social organization: the Kandyan period (Colombo)
  17. Roberts, M. W.  (1966) “Indian Estate Labour in Ceylon during the Coffee Period (1830-1880)— Part I,” The Indian Economic and Social History Review 3
  18. Roberts, M. W. (1973) “Land Problems and Policies, c. 1832 to c. 1900.” In University of Ceylon History of Ceylon (UCHC). Vol. III: From the Beginning of the Nineteenth Century to 1948, ed. K. M. De Silva, pp. 119-45. Peradeniya: Ceylon University Press.
  19. Snodgrass, D. R. Ceylon. An Export Economy in Transition. Homewood, Ill: Richard D. Irwin, 1966.
  20. Statement of Mahalle Unnanse, TNA, CO 54/137
  21. Taylor Miles (2000)  ‘The 1848 revolutions and the British Empire’ , Past & Present, Volume 166, Issue 1, February 2000, https://doi.org/10.1093/past/166.1.146
  22. ‘The late insurrection in Ceylon’, in Illustrated London News, 17 August 1850
  23. “The Evictions under the Paddy Tax, and their Impact on the Peasantry of Walapane, 1882- 1885.” Ceylon Journal of Historical and Social Studies 10 (1967)
  24. Torrington to Grey, 17 April 1849, in De Silva, Letters on Ceylon.
  25. Webb, J. L. A. Tropical Pioneers. Human Agency and Ecological Change in the Highlands of Sri Lanka, 1800-1900. Athens: Ohio University Press, 2002.
  26. Wenzlhuemer, R  (1969)“Land Sales under the Paddy Tax in British Ceylon.” Vidyodaya Journal of Arts, Science and Letters, 2.

Webs:

27. Dr. K. D. G. Wimalaratne, Director, National Archives Gongale Goda Banda (1809-1849) : The leader of the 1848 rebellion, http://www.lankalibrary.com/geo/gongalegoda.htm

28. Tyronne Fernando, Veera Puran Appu: stood up against the might of British Empire, http://www.lankalibrary.com/geo/puran_appu.htm

29. Wilson James. Reappropriation, Resistance, And British Autocracy In Sri Lanka, 1820-1850* Sidney Sussex College, University of Cambridge, https://aspace.repository.cam.ac.uk/bitstream/handle/1810/253804/Wilson%202016%20Historical%20Journal.pdf?sequence=1&isAllowed=y

தொடரும்.


12740 பார்வைகள்

About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)