Arts
8 நிமிட வாசிப்பு

தமிழர் பற்றிக் குறிப்பிடும் பிற்காலக் கல்வெட்டுக்கள் (சோழர் காலத்திற்கு முன்பு)

January 13, 2023 | Ezhuna

இலங்கைத் தமிழர்களுக்கு 2500 ஆண்டுகளுக்குக் குறையாத வரலாறு மற்றும் வழிபாட்டு பாரம்பரியம் உள்ளது. பண்டைய இலங்கைத் தமிழர் பற்றி இதுவரை பலரும் அறிந்திராத, இதுவரை வெளிச்சத்துக்கு வராத, அரிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக இலங்கையில் ‘பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர்’ எனும் இவ்வாய்வு அமைகிறது. இலங்கையில் வாழ்ந்த தமிழர் பற்றிய முக்கிய சான்றாக விளங்குவது 2300 ஆண்டுகளுக்கு முன்பு கற்குகைகளில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களாகும். இவ்வாறான ஐந்து பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் காணப்படுகின்றன. அந்த கல்வெட்டுக்களில் தமிழர்கள் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட விடயங்களை இக்கட்டுரைத்தொடர் வெளிப்படுத்துகின்றது. அத்தோடு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு வேலைத் திட்டத்தில், இலங்கையில் காணப்படும், 1500 பிராமிக் கல்வெட்டுகளை மீள்வாசிப்பு செய்ததன் பயனாக வெளிக்கொணரப்பட்ட பல்வேறு அம்சங்களை ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்துவதாகவும் இத்தொடர் அமைகிறது. இவ் ஆய்வில் தமிழர் பற்றி கூறும் மேலும் பல பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அத்துடன் சோழர் காலத்திற்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 600 சிங்களக் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து அவற்றிலும் தமிழர் பற்றிக் கூறப்பட்டுள்ள பல விபரங்கள் பற்றியும் இத்தொடர் கட்டுரை கூறுகிறது.

இலங்கையில் பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5 ஆம் நூற்றாண்டு வரை பிராமிக் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டன. அதன் பின்பு அதாவது 6 ஆம், 7 ஆம் நூற்றாண்டுகளில் கல்வெட்டுக்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதன் பின்பு 8 ஆம், 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளிலே சில கல்வெட்டுக்கள் மட்டுமே பொறிக்கப்பட்டன. இவை தமிழ், சிங்களம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டன. இவ்வாறு எழுதப்பட்ட சிங்களக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் தமிழர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவை பற்றிய விபரங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

தமிழ் அதிகாரி பற்றி குறிப்பிடும் கிபிஸ்ஸ கல்வெட்டு

பொ. ஆ. 853 முதல் 887 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையை ஆட்சிசெய்த 2 ஆம் சேனன் காலத்தில் கிபிஸ்ஸ கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கல்வெட்டு சிகிரியாவின் தென்மேற்கில் 4 கி.மீ தூரத்தில் உள்ள கிபிஸ்ஸ என்னுமிடத்தில் உள்ள வாவல வெவ எனும் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் 1973 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்தக்கல்வெட்டு ஒரு தூணில் எழுதப்பட்டிருந்தது. அப்போது இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்த தூண் பல துண்டுகளாக உடைந்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

தூணின் மேல் பகுதியில் உள்ள இரண்டு துண்டுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றன. ஏனைய துண்டுகள் காணப்படவில்லை. ஒரு துண்டு 14 அங்குல உயரமும், 10 அங்குல சதுர வடிவமும் கொண்டது. அடுத்த துண்டு 12 அங்குல உயரமும், 10 அங்குல சதுர வடிவமும் கொண்டது. தூணின் நான்கு பக்கங்களிலும் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டிருந்த போதிலும் இரண்டு பக்கங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டுமே தெரிந்தன. பக்கம் A மற்றும் B ஆகியவற்றில் எழுத்துக்கள் காணப்பட்ட நிலையில் பக்கம் C மற்றும் D ஆகியவற்றில் உள்ள எழுத்துக்கள் அழிந்துவிட்டன.

A பக்கத்தின் உச்சியில் சூரியன் வடிவமும் அதன் கீழே 13 வரிகளும் காணப்பட்டன. இவற்றில் 7 வரிகளில் மட்டுமே எழுத்துக்கள் காணப்பட்டன. 6, 7, 8, 9, 10, 13 ஆகிய வரிகளில் இருந்த எழுத்துக்கள் சிதைந்து விட்டன. B பக்கத்தின் உச்சியில் சந்திரன் வடிவமும், அதன் கீழே 10 வரிகளும் உள்ளன. இதில் 7 வரிகளில் மட்டும் எழுத்துக்கள் உள்ளன. 4, 5, 6 ஆம் வரிகளில் உள்ள எழுத்துக்கள் முற்றாக சிதைந்துள்ளன.

கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த சிங்கள எழுத்து வடிவத்தைக் கொண்டுள்ளன. இதில் மன்னனால் வழங்கப்பட்ட ஒரு நன்கொடை பற்றிய செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ சங்கபோ எனும் மன்னனின் 32 ஆவது ஆட்சி ஆண்டில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இவன் 2 ஆம் சேனன் என அடையாளம் காணப்பட்டுள்ளான். கல்வெட்டின் படியெடுக்கப்பட்ட படம் கிடைக்கவில்லை.

இக்கல்வெட்டின் A பக்கத்தில் 11 ஆம், 12 ஆம் வரிகளிலும்,  B பக்கத்தில் 1 ஆம், 2 ஆம் வரிகளில் தமிழர் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“இசா தெமழ அதிகார ..”
“பொதில் சோழியா ரதுன் வெதெர் மென்..”

இது “திறை பெறுவதற்காக சோழநாட்டின் ஆணையுடன் வந்த தமிழ் அதிகாரி” எனப் பொருள்படுகிறது. இத்தமிழ் அதிகாரியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் 13 ஆம் வரியில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் சிதைந்து காணப்படுகின்றன. எனவே இத்தமிழ் அதிகாரியின் பெயரைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

இந்தக்கல்வெட்டின் மூலம் இம்மன்னனின் காலத்தில் இலங்கை சோழநாட்டின் கீழ் இருந்து திறை செலுத்தி வந்துள்ளமை தெரிகிறது. இவ்விடயம் பற்றி இலங்கை வரலாற்றுக் குறிப்புகளில் சில விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

2 ஆம் சேனனின் மாமனே 1ஆம் சேனன். இவனுக்கு மகிந்தன், காசியப்பன், உதயன் எனும் மூன்று இளைய சகோதரர்கள் இருந்தனர். மன்னன் மூத்தவன் மகிந்தனை யுவராஜாவாக நியமித்தான். ஏனைய இருவரையும் பிராந்தியங்களுக்கு அதிபதிகளாக்கினான்.

இவனது ஆட்சியின் போது தென்னிந்தியாவில் இருந்து ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் எனும் பாண்டிய மன்னன் இலங்கைக்குப் படை எடுத்து வந்து, உத்தரதேசம் எனும் வட இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான். அங்கிருந்து அநுராதபுரம் நோக்கி படையெடுத்து வரும் போது, உத்தர தேசத்தில் இருந்த தமிழர்களும் பாண்டியப் படைகளுடன் இணைந்தனர். பெரும்படையோடு பாண்டியன் தலைநகர் நோக்கி வருவதை அறிந்த மன்னன் (1 ஆம் சேனன்) மலைய தேசம் எனும்  மலைநாட்டுக்கு  தப்பி ஓடினான்.

பாண்டியப் படைகளோடு போர் புரியச் சென்ற யுவராஜாவான சேனனின் முதலாவது சகோதரன் மகிந்தன் பாண்டியரின் பெரும் படையைக்கண்டு அஞ்சி சண்டையிட முடியாத நிலையில் தனது கழுத்தைத் தானே அறுத்துத் தற்கொலை செய்து கொண்டான்.

அதிபதியும் சேனனின் இரண்டாவது சகோதரனுமான காசியப்பன் பாண்டியப் படைகளோடு போரிட்டு வெல்லமுடியாத நிலையில் கொண்டி வட்ட என்னுமிடத்திற்குத் தப்பி ஓடினான். சேனனின் யுவராஜாவும், அதிபதியும் தோல்வியடைந்த நிலையில் ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபனின் பாண்டியப் படைகள் அனுராதபுரத்தைக் கைப்பற்றின.

அதன் பின் பாண்டிய மன்னனுக்கு இலங்கை மன்னன் சேனன் பெருந்தொகைப் பணத்தை திறையாகச் செலுத்திய பின் பொலநறுவையில் இருந்து ஆட்சி செய்து வந்தான். பொ. ஆ. 853 ல் இவனது ஆட்சி நிறைவு பெற்றது. அதன் பின் இவனது மருமகன் 2 ஆம் சேனன் எனும் பெயரில் பொலநறுவையில் இருந்து ஆட்சி செய்தான். இவனது காலத்தில் தான் மேலே குறிப்பிட்டுள்ள கல்வெட்டுப் பொறிக்கப்பட்டது. இந்தக்கல்வெட்டின்படி 2 ஆம் சேனன் காலத்திலும்,  தமிழருக்கு இலங்கை திறை செலுத்தி வந்துள்ளமை தெரிய வருகிறது. முன்பு பாண்டிய மன்னனுக்கு, பின்பு சோழ மன்னனுக்கு.

நாச்சதூவ-கல்வெட்டு

இவன் காலத்தில் இன்னுமோர் முக்கியமான சம்பவம் நடந்தமை பற்றிய குறிப்புகளும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. 2 ஆம் சேனன் காலத்தில், பாண்டிய மன்னனான ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபனுடன் முரண்பட்ட அவனது மகனான வரகுண பாண்டியன் 2 ஆம் சேனனின் உதவியை நாடி இலங்கைக்கு வந்து, இலங்கைப் படைகளின் உதவியுடன் பாண்டிய நாட்டிற்குச் சென்று தனது தந்தையைத் தோற்கடித்து பாண்டிய நாட்டைக் கைப்பற்றி ஆண்டதாக வரலாறு கூறுகிறது.

தமிழ் அதிகாரி எலித்தன் பற்றி குறிப்பிடும் நாச்சதூவ தூண் கல்வெட்டு

2 ஆம் சேனன் காலத்தில் (பொ. ஆ. 853 முதல் 887 வரை) பொறிக்கப்பட்ட நாச்சதூவ கல்வெட்டிலும் தமிழர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அநுராதபுரத்தின் தென்கிழக்கில் 15 கி.மீ தூரத்தில் நாச்சதூவ குளம் அமைந்துள்ளது. இக்குளத்தின் அருகில் உள்ள நாச்சதூவ கிராமத்தில் 1911 ஆம் ஆண்டு இக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. தற்போது இது அநுராதபுரம் தொல்பொருள் காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. 5 அடி உயரமும், ஒரு பக்கம் 8 அங்குலமும், அடுத்த பக்கம் 7 அங்குலமும் அகலம் கொண்ட சதுர வடிவுடைய கற்தூணில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தூணின் நான்கு பக்கங்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

தூணின் A பக்கத்தின் உச்சியில் சூரியன் வடிவமும், அடியில் ஆலவட்டத்தின் வடிவமும் இவற்றின் நடுவில் 15 வரிகளில் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. B பக்கத்திலும், C பக்கத்திலும் தலா 19 வரிகளில் எழுத்துக்களும், பக்கம் D யில் 20 வரிகளில் எழுத்துக்களும், அவற்றின் அடிப்பகுதியில் காகத்தின் வடிவமும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்தக்கல்வெட்டில் குறிப்பிட்ட ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு மன்னனால் வழங்கப்பட்ட மானியம் மற்றும் நிலம் ஆகியவை பற்றிய செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. மன்னனின் 32 ஆவது ஆட்சி ஆண்டில் இது எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டின் B பக்கத்தில் 3 ஆம், 4 ஆம், 5 ஆம் வரிகளில் தமிழ் அதிகாரி பற்றி பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

“கலி இசா தெமழ அதிகார ஹெலித்த ..”

இக்கல்வெட்டிலும் தமிழ் அதிகாரி ஒருவரைப் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வரிகளுக்குக் கீழே உள்ள 6ஆவது வரியில் உள்ள நான்கு எழுத்துக்களில் இரண்டு எழுத்துக்கள் முற்றாகச் சிதைந்து காணப்படுகின்றன. எனவே இருக்கும் எழுத்துக்களை வைத்து கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் அதிகாரியின் பெயர் எலித்தன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தமிழ் அதிகாரியும் மேலே குறிப்பிட்டுள்ள பாண்டிய மன்னனான ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபனின் திறை அறவிடும் அதிகாரியாக இருக்க வேண்டும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

12311 பார்வைகள்

About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)