Arts
11 நிமிட வாசிப்பு

வன்னிப் பெருநிலப்பரப்பில் மீண்டும் அரியதொரு தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு

December 15, 2022 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

வவுனியா வடக்கு பெரியமடுப் பகுதியைச் சேர்ந்த திருவாளர்களான த. சசிகரன், ப. செந்தூரன், வி. ஜெகதீஸ்வரன், இ. நகுலேஸ்வரன் மற்றும் வ. கிந்துஜன் ஆகியோர் அண்மையில் தமது நெற்காணிகளுக்கு காட்டு வழியூடாகச் சென்று வரும் போது அக்காட்டில் அழிவடைந்த சிறிய கேணிக்கு அருகிலுள்ள கற்தூண் ஒன்றை அடையாளம் கண்டனர். அக்கற்தூணில் புராதன எழுத்துக்கள் சில இருப்பதை அவதானித்த அவர்கள் அதுபற்றிய புகைப்படத்தை எமது தொல்லியல் பட்டதாரிகளான சுதர்சன் தம்பதியினருக்கு அனுப்பி வைத்தனர். அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட அவர்கள் அப்புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தனர். அப்புகைப்படத்தில் உள்ள எழுத்துக்கள் ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்குரியவை என்பதை உறுதிப்படுத்திய நாம் தொல்லியற் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், பிராந்திய தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்களான திரு. வ. மணிமாறன் மற்றும் பா. கபிலன் ஆகியோருடன் பெரியமடு பிரதேசத்திற்கு சென்றிருந்தோம். அங்கு சென்றபோது கல்வெட்டுகளை அடையாளம் கண்ட அன்பர்களும், திரு.சுதர்சன் குடும்பத்தினரும் கல்வெட்டு காணப்பட்ட இடத்திற்குச் செல்வதற்கான ஒழுங்குகளையும் செய்துதந்தனர்.

கோடலிபறிச்சான்-காட்டுபகுதியில்-தொல்லியல்-ஆய்வின்போது-2

இக்கல்வெட்டு வவுனியா வடக்கில் நெடுங்கேணியின் தென்னெல்லையில் உள்ள பெரியமடு பிரதேசத்தின் நயினாமடு கிரமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட கோடலிபறிச்சான் என்ற காட்டுப்பகுதியில் காணப்படுகின்றது. இவ்விடத்தை இங்குள்ள சிறிய நடைபாதையில் இருந்து அடர்ந்த காடுகள் ஊடாக நீண்டநேரக் கால்நடைப் பயணத்தின் பின்னரே அடையமுடிந்தது. இவ்விடத்திற்கு மிக அருகில் பாழடைந்த சிறிய கேணியொன்று காணப்படுகின்றது. அக்கேணியைச் சுற்றி பொழிந்த வெள்ளைக் கருங்கற் தூண்கள் நாட்டப்பட்டுள்ளன. இவை இங்கிருக்கும் கேணியின் தொன்மையையும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் புலப்படுத்துவதாக இருந்தன. இவ்விடத்தின் சுற்றாடலில் பாழடைந்த சில குளங்களும், சிறிய மண்மேடுகளும், அடர்ந்த காட்டுமரங்களுடன் சில புளியமரங்களும், இலுப்பை மரங்களும் காணப்படுகின்றன. அவற்றிடையே அரிதாக சில செங்கட்டிகளும், சிலவகை மட்பாண்ட ஓடுகளும் காணப்பட்டன. இவை முன்பொரு காலத்தில் இவ்விடங்களில் செறிவான மக்கள் குடியிருப்புகள் இருந்ததற்குச் சான்றாகும். ஆகவே இவ்வாதாரங்களின் பின்னணியிலேயே இக்கல்வெட்டின் வரலாற்று முக்கியத்துவத்தை ஆராய்ந்து பார்க்கவேண்டியுள்ளது.

இக்கல்வெட்டு ஒரே வெள்ளைக் கருங்கல்லில் பீடத்துடன் இணைந்ததாகச் செதுக்கப்பட்டு , இங்கிருக்கும் கேணிக்கு அருகில் நாட்டப்பட்டிருந்துள்ளது. ஆயினும் தற்போது அக்கல்வெட்டுப் பாகம் மூன்று துண்டங்களாக உடைந்து கேணிக்கு அருகிலேயே காணப்படுகின்றது. அவற்றுள் 70 செ.மீ உயரமும், 24 செ.மீ அகலமும் கொண்ட கல்வெட்டின் பீடம் தனித்துண்டாகக் காணப்படுகின்றது. இதற்கு அருகில் 164 செ.மீ உயரமும், 20 செ.மீ அகலும் கொண்ட எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ள கல்லின் பாகம் இன்னொரு துண்டமாகக் காணப்படுகின்றது. இக்கல்வெட்டில் மேற்பாகத்தில் மங்கலச் சொல்லுடன் தொடங்கியிருக்க வேண்டிய இரண்டு அல்லது மூன்று வரிகள் கொண்ட கல்வெட்டின் பாகம் உடைந்த அல்லது உடைக்கப்பட்ட நிலையில் உள்ளது. ஆயினும் அப்பாகத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 164 செ.மீ உயரம் கொண்ட கல்லின் நான்கு பக்கங்களில் ஏறத்தாழ 63 வரிகளில் எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன. 16 வரிகள் கொண்ட நான்காவது பக்கச் சாசனத்தின் (எழுத்துப் பொறிப்புகளில்) சில வரிகளின் எழுத்துக்கள் தேய்வடைந்து காணப்படுவதால் அவற்றைச் சரியாக வாசிக்க முடியவில்லை. அவ்வரிகளை மீண்டும் முறையாகப் படியெடுக்கும் போது இக்கல்வெட்டின் நான்கு பக்க சாசனங்களின் வாசிப்பும் முழுமைபெறலாம்.

இக்கல்வெட்டை அடர்ந்த காட்டினுள் மழையும், இருட்டும் தொடர்ந்த நிலையில் யானைகள் வந்துவிடுமோ என்ற அச்சத்துடன் குறுகிய நேரத்திலேயே படியெடுக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் இக்கல்வெட்டை அடையாளம் காட்ட உதவிய அன்பர்களின் கடின உழைப்பினாலும், அவர்கள் கொடுத்த தன்னம்பிக்கையாலும் எமது தொல்லியல் பட்டதாரிகளின் முழுமையான பங்களிப்புடன் இக்கல்வெட்டைப் படியெடுத்து முடிக்கப்பட்டமை இவ்விடத்தில் சிறப்பாக நினைவுகூரத்தக்கது. இவ்வாறு படியெடுக்கப்பட்டவற்றின் புகைப்படங்களை படிப்பதற்கும், அதுபற்றி கருத்துக்களை அறிவதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் எனது ஆசிரியர்களான பேராசிரியர் கா.இந்திரபாலா, பேராசிரியர் வை.சுப்பராயலு, பேராசிரியர் பொ.இரகுபதி, கலாநிதி. இராஜகோபால் ஆகியோருக்கு அனுப்பி வைத்தேன். அக்கல்வெட்டு படிகளை பேராசிரியர் வை.சுப்பராயலு, பேராசிரியர் பொ.இரகுபதி ஆகியோர் தனித்தனியாகப் படித்து எனக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் வாசிப்பையிட்டு பேராசிரியர் இந்திரபாலா அவர்களும் தனது திருப்தியை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியிருந்தார். அவர்களின் வாசிப்பின் முக்கிய அம்சங்களை இவ்விடத்தில் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.

ஜெயபாகு தேவரது பன்னிரண்டாவது ஆட்சியாண்டின் போது வடகரைநாட்டு மூன்று கை திரு வேளைக்காறர் பிரிவைச் சேர்ந்த மதிமான் பஞ்சரத்தெரிந்த வில்லிகள் என்ற படைப்பிரிவு வீரர்கள் இங்கிருந்த கோயிலின் அம்பலம்(மடம்) பொகொறோணி (சிறுகுளம்) கிணறு ஆகியவற்றின் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர் என்பதும், இவற்றைச் செய்தவன் மூவேந்தவேளான் என்ற பட்டம் கொண்ட அதிகாரி என்பதும் தெரியவருகின்றது. மேலும் இக்கல்வெட்டின் இரண்டாம், மூன்றாம் பக்கங்களில் இப்படைப்பிரிவில் இருந்த படைவீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒரே பெயர் பல படைவீரர்களுக்குரிய பெயர்களாகக் காணப்படுகின்றது. அப்பெயர்களாக:

      1.--இர  2. க்கன்  3. இரக்கன் 4. பெரியான்  5. இரக்கன் 6.புத்தை 7.நெட்டுர் 8.ஆதித்தந் 9.கொடி 10.சோழன் 11.சாத்தன் 12. கண்டந் 13.   கூத்தந் 14.  ஏறன் சு 15.   ந்தன் 16.  சாத்தன் 17. சாத்தி  18.     சாத்தன் 19. அம்மணி  20. சாத்தன்  21.இரக்கந் 22. கண்டந் 23.அம்பலம்    24. சோழன் அ  
25.ழுதி   ஆகிய பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டில் இருந்து அறியப்படும் வரலாற்றுச் செய்திகள் இடைக்கால வடஇலங்கையின் வரலாறு பொறுத்தும், தமிழர் வரலாறு பொறுத்தும் எழும் கேள்விகளுக்கு விடைகூறும் புதிய செய்திகளைத் தருவதாக இருக்கும். இக்கல்வெட்டில் வரும் ஜெயபாகு என்ற பெயரில் பொலநறுவை இராசதானி காலத்தில் மூன்று சிங்கள மன்னர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட ஆறு கல்வெட்டுகள் இதுவரை கிடைத்துள்ளன. இதேவேளை ஜெயபாகு என்ற பெயர் கொண்ட ஒருவனை பாளி, சிங்கள இலக்கியங்கள் தமிழ் மன்னன், தமிழ்ச் சிற்றரசன், பொலநறுவையில் கலிங்கமாகனுடன் இணைந்து ஆட்சிபுரிந்த துணையரசன் எனவும், அவனிடம் நாற்பதாயிரம் படைவீரர்கள் இருந்ததாகவும் கூறுகின்றன. ஆயினும் பாளி, சிங்கள இலக்கியங்கள் கூறும் ஜெயபாகுவும் கல்வெட்டில் வரும் ஜெயபாகு மன்னனும் ஒருவனா என்பது கல்வெட்டின் காலத்தைச் சரிவர வரையறுத்ததன் பின்னரே கூறமுடியும். இக்கல்வெட்டில் வடகரைநாடு பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. சிங்கள கல்வெட்டுகளிலும், பாளி, சிங்கள இலக்கியங்களிலும் வடஇலங்கை வடகர(வடகரை), படகர (ப/வ) என அழைக்கப்பட்டுள்ளது. ஆயினும் தமிழக கல்வெட்டுக்களில் வடகரைநாடு பற்றி பல குறிப்புகள் காணப்படுகின்றன. இதனால் இக்கல்வெட்டில் வரும் வடகரைநாடு என்பது எந்த நாட்டைக் குறிக்கின்றதென்பது ஆராயப்படவேண்டிய ஒன்றாகும்.

இக்கல்வெட்டு மதிமான் பஞ்சரத்தெரிந்த வில்லிகள் என்ற படைப்பிரிவு வீரர்கள் பற்றிக் கூறுகின்றது. மதிமான் பஞ்சரன் பற்றிய சில சான்றுகள் இடைக்கால இலங்கைக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ஆயினும் பேராசிரியர் சுப்பராயலு அவர்கள் இப்பெயர் கொண்ட படைப்பிரிவு தமிழகத்தில் இருந்ததற்கு சான்றுகள் இல்லையெனக் கூறுகின்றார். இதனால் இப்படைப்பிரிவை இலங்கைக்கு உரியதாகப் பார்க்க இடமுண்டு. இதை எதிர்கால ஆய்வுகள் மூலம் மேலும் உறுதிப்படுத்தவேண்டும். இன்று காடாகக் காணப்படும் கோடலிபறிச்சான் இற்றைக்கு 1000 க்கு முன்னரும் காடாக இருந்திருக்கும் எனக் கூறமுடியாது. ஏனெனில் இக்கல்வெட்டு இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்விடத்தில் கோயில் மடம், சிறுகுளம், கிணறு என்பன இருந்தன என்ற புதிய செய்தியைத் தருகின்றது. இவற்றில் இருந்து இங்கு இந்து ஆலயம் இருந்துள்ளமை உறுதியாகத் தெரிகின்றது. இக்கூற்றைத் தற்போது அழிவடைந்து காணப்படும் கேணியும், அதைச்சுற்றி பரவலாகக் காணப்படும் பொழிந்த வெள்ளைக் கருங்கற் தூண்களும், அருகிலே காணப்படும் உயர்ந்த மண்மேடுகளும் உறுதிசெய்கின்றன. அவ்விடங்களில் அகழ்வாய்வுகள் செய்யப்படுமானால் அந்த உண்மையை மேலும் உறுதி செய்யலாம்.

இங்கிருந்த ஆலய மடம், சிறுகுளம், கிணறு என்பன தமிழ்ப்படை வீரர்களுக்கு ஜீவிதமாக வழங்கப்பட்டமையும், அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை அப்படைவீரர்கள் ஏற்றுக் கொண்டமை பற்றியும் இக்கல்வெட்டுக் கூறுவது அதிமுக்கிய வரலாற்றுச் செய்தியாக உள்ளது. இவற்றில் இருந்து சோழர் ஆட்சியின் முடிவோடு வடஇலங்கை பொலநறுவையின் பண்பாட்டு வட்டத்தில் இருந்து படிப்படியாக விடுபட்டு வருவதை இச்செய்தி உணர்த்துவதாக உள்ளது. அண்மைக்காலங்களில் இலங்கைத் தமிழர் தொடர்பாக வெளிவந்த வரலாற்று நூல்களும், கல்வெட்டுகளின் கண்டுபிடிப்புக்களும் 1070 இல் சோழரின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரின் அரசியல், பண்பாட்டு வரலாறு தனிப்போக்குடன் தமிழ்ப் பிரதேசங்களில் படிப்படியாக வலுப்பெற்று வந்ததை வெளிப்படுத்துவதாக உள்ளன. இதற்கு உதாரணமாக சோழரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட சில சம்பவங்களை இவ்விடத்தில் குறிப்பிடலாம்.

சோழரை வெற்றி கொண்ட முதலாம் விஜயபாகு தனது அரசையும், பௌத்த மதத்தையும் பாதுகாக்க சோழர்காலப் படைவீரர்களிலேயே தங்கியிருந்தான். ஆயினும் அவன் சோழ நாட்டின் மீது படையெடுக்குமாறு அப்படைவீரர்களை வேண்டிய போது அதை ஏற்க மறுத்த தமிழ்ப்படைவீரர்கள் பொலநறுவை அரசின் மீது படையெடுத்து அவ்வரசை வெற்றி கொண்டனர். சூளவம்சம் இப்படைவீரர்கள் வடஇலங்கையில் உள்ள மகாதீர்த்த, மட்டிகாவட்டதீர்த்த ஆகிய இடங்களில் தங்கியிருந்தே இப்படையெடுப்புகளை மேற்கொண்டதாகக் கூறுகின்றது. அவற்றுள் மகாதீர்த்த என்ற இடம் மாதோட்டதுறைமுகத்தைக் குறிக்கின்றது. மட்டிகாவட்டதீர்த்த என்ற இடம் பாளி இலக்கியத்தில் முதன் முறையாகக் குறிப்பிடப்படுகின்றது. இவ்விடம் மாதோட்டத்திற்கு வடக்கே பூநகரிப்பிராந்தியத்தில் உள்ள மட்டுவில்நாடு என்ற இடமாக இருக்கலாம். இரண்டாம் இராதிராச சோழனது பல்லவராயன்பேட்டை மற்றும் திருவாலங்காடு சோழக் கல்வெட்டுகள் வடஇலங்கையில் மாதோட்டம், புலச்சேரி முதலான இடங்களுடன் மட்டிவால் என்ற இடத்தையும் சோழப் படைகள் வெற்றி கொண்டதாகக் கூறுகின்றது. கல்வெட்டில் கூறப்படும் மட்டிவால் தற்போது பேச்சு வழக்கில் உள்ள மட்டுவில் நாடாக இருக்கலாம். இவ்விடத்திலும் போத்துக்கேயர்காலக் கோட்டை கட்டப்பட்டதற்கு இவ்விடம் துறைமுக நகராக இருந்ததே முக்கிய காரணமாகும்.

அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் ஹோமாறன்கடவல (குமரன்கடவை) என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து 1215 இல் பொலநறுவையை வெற்றி கொண்டு ஆட்சிபுரிந்த கலிங்கமாகன் வடகலிங்கத்தில் இருந்தோ அல்லது மலேசியாவில் இருந்தோ படையெடுக்கவில்லை, மாறாக அவன் ஹோமாறன்கடவலவில் இருந்த சோழப்பிரதிநிதியால் அல்லது சோழப் படைத்தளபதியால் ஆட்சிக்கு அமர்த்தப்பட்டவன் என்ற புதிய செய்தி தெரியவந்துள்ளது. மேலும் 1070 இல் பொலநறுவையில் சோழர் ஆட்சி வீழ்ச்சியடைந்தாலும் அவர்களின் ஆதிக்கமும், நிர்வாக ஒழுங்கும் தமிழர் பிரதேசத்தில் ஐரோப்பியர் காலம்வரை தொடர்ந்தமையும் இக்கல்வெட்டால் அறியப்படும் புதிய சான்றாகும்.

பொலநறுவை வீழ்ச்சியைத் தொடர்ந்து கலிங்கமாகன் அரசு வடஇலங்கையில் இருந்ததற்குப் பாளி சிங்கள இலக்கியங்களில் பல சான்றுகள் காணப்படுகின்றன. இவ்வரசின் தலைநகர் எது என்பதை இவ்விலக்கியங்கள் கூறாவிட்டாலும் அவனது படைநிலைகள், ஆதிக்கம் நிலவிய இடங்களாக புலத்திநகர (பொலநறுவை), கொட்டசார (திருகோணமலை கொட்டியாரம்) ஹந்கதலக (கந்தளாய்), காகலய, பதிமாவட்டம் (பதவியா), குருந்தி (குருந்தலூர், குருந்தலூர்மலை) மானாமத் (இவ்விடம் ஹோமாறன்கடவல கல்வெட்டில் கூறப்படும் மாநாமத்(து) நாடாக இருக்கலாம்), மகாதித்த (மாதோட்டம்), மன்னார (மன்னார்), புலச்சேரி, கோணா மாவட்டம் (கோணாவில்), மதுபதித்த (இலுப்பைக்கடவை?), சூறதித்த (ஊர்காவற்துறை), வலிகாம (இவ்விடம் மன்னார் அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம் என்ற இடமாக இருக்கலாம்). இவ்விடங்கள் கலிங்கமாகனுக்கு பின்னர் ஆட்சி புரிந்த சாவகன் காலத்திலும் அவன் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததை பாளி, சிங்கள இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்விடங்களில் பெரும்பாலானவை திருகோணமலை உள்ளிட்ட வடபகுதியில் காணப்படுகின்றன. அவ்விடங்களில் சாகவன் ஆட்சி நிலவியதை தமிழக புதுக்கோட்டை குடுமியாமலையில் உள்ள 1262ஆம் ஆண்டுக்குரிய பாண்டியக் கல்வெட்டும் உறுதிப்படுத்துகின்றது. கலிங்கமாகனுக்குப் பின்னர் இலங்கை மீது இரண்டாவது தடவையாகப் படையெடுத்த சாவகன் தென்னிந்தியாவிலிருந்து பாண்டிய, சோழப்படைகளுடன் மாதோட்டத்தில் வந்திறங்கி பதி (பதவியா), குருந்தி (குருந்தலூர்) ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்த மக்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு தம்பதேனிய அரசு மீது படையெடுத்தான் எனச் சூளவம்சம் கூறுகின்றது பேராசிரியர் இந்திரபாலா இவன் சுதந்திர மன்னனாக இருந்தே இப்படையெடுப்பை மேற்கொண்டான் எனக் கூறுகின்றார்.

மேலே கூறப்பட்ட வரலாற்றுச் செய்திகள் கோடலிபறிச்சான் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டின் வரலாற்று முக்கியத்துவம் பற்றிய சிறு அறிமுகமாகும். இக்கல்வெட்டு இலங்கைத் தமிழரின் அதிலும் குறிப்பாக வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழரின் இருப்பு, இடைக்கால அரசியல் வரலாறு, தமிழ் அரச உருவாக்கம், பண்பாடு மற்றும் இடப்பெயர் பற்றிய ஆய்வில் முக்கியத்துவம் பெற்றதாகக் காணப்படுகின்றது. ஆகவே இக்கல்வெட்டை ஆராய்வதற்கு பல்துறை சார்ந்த புலமையாளர்களின் பங்களிப்பு மிக அவசியமாகும். இவற்றைக் கருத்தில் கொண்டே இக்கல்வெட்டின் நான்காவது பக்கத்தில் தெளிவற்றுக் காணப்படும் சில வரிகளை மீண்டும் படியெடுத்ததன் பின்னர் பேராசிரியர் இந்திரபாலா, பேராசிரியர் சுப்பராயலு, பேராசிரியர் இரகுபதி மற்றும் கலாநிதி இராஜகோபால் ஆகியோரிடன் இணைந்து இக்கல்வெட்டின் வரலாற்று முக்கியத்துவத்தை முழுமையாகப் பதிவுசெய்ய உள்ளோம். அவற்றின் பெறுபேறுகள் இரு மொழிகளில் வெளியிடப்படும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

12909 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (18)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)