Arts
8 நிமிட வாசிப்பு

படித்த சமுதாயம் புதிய சிந்தனைகள்

July 13, 2022 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் நாட்டில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி காரணமாக கொழும்பை மையமாகக் கொண்ட தொழிலாளர் அமைப்புகள் உருவாகின. இதே காலப்பகுதியில் எழுச்சி அடைந்த பிரித்தானியக் காலனித்துவத்திற்கு எதிரான தேசிய எழுச்சியின் ஓர் அங்கமாகவே இது கருதப்பட்டது. தொழிலாளர் மத்தியிலான வாசிக்கும் அறிவு, அவர்களின் உரிமைகளை அறிந்து கொள்ளவும், அதனைப் பெற்றுக் கொள்ள குரல் கொடுக்கவும் அவர்களை தூண்டியது. ஏ. ஈ. குணசிங்க என்ற ஆரம்பகால தொழிலாளர் தலைவர், நகர்ப்புற தொழிலாளர்களான துறைமுக, ரயில்வே, டிராம்வே தபால் துறை, கரத்தை (வண்டியில்) இழுப்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள், அச்சுத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களை ஒன்று திரட்டி வெற்றிகரமான போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் முன்னெடுத்தார்.

ஏ. ஈ. குணசிங்க

இத்தகைய தொழிலாளர் எழுச்சிகள் எந்தவிதத்திலும் மலைநாட்டு தோட்டத் தொழிலாளர் மத்தியில் பரவிவிடக்கூடாது என்பதில் தோட்டத் துரைமார்கள் மிகுந்த கரிசனை எடுத்துக்கொண்டனர். அதன் முதல் நடவடிக்கையாக கல்வியறிவு இம் மக்களை சென்று அடைந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தனர். தோட்ட துரைமார்கள் சங்கத்தினர் இது தொடர்பாக தமது அங்கத்தினர்களுக்கு அறிவுறுத்தல் செய்து தொழிற்சங்கத்தினர் எவரும் மலைநாட்டு தோட்டங்களுக்கு ஊடுருவி விடாமல் கவனமாக பார்த்துக் கொண்டனர். எனினும் அவர்களால் சுமார் இரண்டு தசாப்த காலங்களுக்கே அவ்வாறு செய்ய முடிந்தது.

இக்காலம் உலகெங்கும் பல புரட்சிகளும் போராட்டங்களும் வெடித்து ஓங்கிக் குரலெடுத்த காலமாக கருதப்படுகின்றது. 1917 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ரஷ்ய சோசலிசப் புரட்சியே இவற்றில் மிகப் பிரதானமானது. இக்காலத்தில் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற கோஷம் உலகெங்கும் உரத்து ஒலித்தது. உலக தொழிலாளர் மத்தியில் அவர்கள் என்னென்ன விதத்தில் சுரண்டப்படுகிறார்கள், அவர்களது உரிமைகள் யாவை, ஏன் அவர்கள் முதலாளித்துவத்திற்கு எதிராகப் போராட வேண்டும்? போன்ற புரிந்துணர்வு நடவடிக்கைகள் தொழிலாளர் மத்தியில் அவர்களின் அமைப்புக்களாலும் அவற்றின் தலைவர்களும் முன்னெடுக்கப்பட்டன. இக்காலத்தில் (1925 முதல் 1927) சீனாவில் ஒரு தொழிலாளர் புரட்சி ஏற்பட்ட போதும் அது தோல்வியில் முடிந்தது.

இந்தியாவில், மகாத்மா காந்தியின் தலைமையில் உருவான ‘சுவராஜ்’ சுதந்திர இயக்கத்தில் விவசாய, பாட்டாளி வர்க்கத்தினருக்கும் உரிமை கொடு என அவர் வலியுறுத்தினார். பிரித்தானியாவில் தொழில் கட்சி உருவாக்கப்பட்டு அதன் தலைமையின் கீழ் பொது வேலைநிறுத்தம் ஒன்று (1926) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இவற்றின் பாதிப்புக்கள் பிரித்தானிய காலனித்துவ நாடான இலங்கையிலும் பிரதிபலித்தன.

சுவராஜ் இயக்கம் பிரகடனம்

இலங்கையில் பெருந்தோட்ட கைத்தொழிலின் வெற்றி காரணமாக பல தேசிய முதலாளிகள் (தனவந்தர்கள்) உருவாக்கியிருந்தனர். இவர்களின் பிள்ளைகள் இங்கிலாந்துக்குச் சென்று ஆங்கிலக் கல்வி பயின்று மருத்துவர்களாகவும், சட்டத்தரணிகளாகவும் (பாரிஸ்டர்), தொழில்துறை நிபுணர்களாகவும், புத்திஜீவிகளாகவும் உருவாக்கி இருந்தனர். இவர்கள் ஒரு பலமான மத்தியதர வர்க்கமாக தலை தூக்கி எழுச்சி பெற்றனர். இவர்கள் சுதேச மக்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு இலங்கை தேசிய (Ceylon National Congress) காங்கிரஸ் என்ற அமைப்பினை 1919 ஆம் ஆண்டு தோற்றுவித்தனர். இந்த அமைப்பு ஆரம்பத்தில் தொழிலாளர் பால் கரிசனை கொண்டிருந்தபோதும் பின்னர் அதனை கைவிட்டு முற்றிலும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதிலேயே கவனம் செலுத்தியது.

இதன்காரணமாக இக்காலத்தில் ஒரு முக்கிய அரசியல் தலைவராக உருவாகி இருந்த சேர். பொன். அருணாசலத்தின் முயற்சியால் சிலோன் தொழிலாளர் நலன்புரி அமைப்பு (Ceylon Workers Welfare league) இதே ஆண்டில் உருவாக்கப்பட்டது. அத்துடன் இந்த அமைப்பு தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் ஒன்பது அம்ச கோரிக்கை ஒன்றை உருவாக்கி அதனை இலங்கை தேசிய காங்கிரஸ் ஊடாக அங்கீகரிக்க செய்து பிரகடனப்படுத்தியது.

இந்தக் கோரிக்கையில்,
1. தொழிலில் ஈடுபடுவது என்பது ஒரு விதமான சமூக சேவை என்பதை அங்கீகரித்து அவர்களது ஊதியத்திலிருந்து உற்பத்தியை பெற்றுக் கொள்வதற்கு முன் அவர்களின் நலனில் அக்கறை செலுத்துதல் முதன்மையானது என்ற வகையில் தொழில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
2. தொழில் துறை தொடர்பான சட்டங்களில் குற்றவியல் தண்டனைகளை தொடர்பான அம்சங்களை அகற்றுதல்.
3. சிறு வயது தொழிலாளர்களை இல்லாமல் ஆக்குதல்.
4. குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்தல்.
5. வேலை நேரத்தை நிர்ணயம்செய்தல்.
6. ஒன்று கூடுதலுக்கான உரிமையை தொழிலாளருக்கு அளித்தல்.
7. ஆரோக்கியமான வேலை சூழலை உருவாக்குதல்.
8. அவர்களுக்கு ஓய்வும்பொழுதுபோக்கும் பெற்றுக்கொடுத்தல்.
9. பெண்களுக்கு கர்ப்ப கால நலன்களை உறுதி செய்தல் முதலான ஒன்பது அம்சங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இதனை தவிர நகர்புற தொழிலாளர்களை இணைக்கும் முயற்சியின் பொருட்டு இலங்கை சமூக சேவைகள் லீக் (Ceylon Social Services League) மற்றும் இலங்கை தொழிலாளர் சம்மேளனம் (Ceylon Workers Federation) ஆகிய அமைப்புகளும் தோற்றுவிக்கப்பட்டன. இவற்றை உருவாக்குவதில் சேர் பொன்னம்பலம் அருணாசலம், டி. பி. ஜயதிலக்க, மாட்டினஸ் சி. பெரேரா ஆகியோர் முன் நின்றனர்.

இந்தக்காலத்தில் கொழும்பை மையமாகக் கொண்ட பல தொழிலாளர் நலன் சார் நடவடிக்கைகள் இடம்பெற்ற போதும் இவை எதுவுமே மலைநாட்டு தோட்டத் தொழிலாளரை சென்றடையவில்லை. இதிலும் கூட ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் துறைமுகம், ரயில்வே, அச்சுத் தொழில், கரத்தை இழுப்பவர்கள், தபால்துறை, சலவைத்தொழிலாளர்கள் போன்ற தொழிலாளர்களில் 50 சதவீதமானவர்கள் இந்திய தொழிலாளர்களாகவே குறிப்பாக இந்திய வம்சாவழி தமிழ் தொழிலாளர்களாகவே இருந்தனர் என்பதுதான். எனினும் இக் காலத்தில் அமைக்கப்பட்ட தொழிலாளர் அமைப்புகள் வெறுமனே நலன்புரிச் சங்கங்களாகவும் அரசியல் உரிமை சார்ந்தனவாகவே இருந்தன. ஆனால் சேர். பொன். அருணாசலம் சிலோன் தேசிய காங்கிரஸ் ஊடாக தொழிலாளர் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார். 1919 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவ்வமைப்பின் மகாநாட்டில் உரை நிகழ்த்துகையில், அப்போது தேசிய அரசுப் பேரவையில் சமர்ப்பிக்கப் பட்டிருந்த புலம்பெயர் தொழிலாளர் மசோதா (The Immigrant Laborers Bill) தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது:- “மேற்படி மசோதா புலம்பெயர் தொழிலாளர்களை வெறுமனே பண்டப்பொருட்களாகவே கணிக்கின்றது. அதன் பிரகாரம் தொழிலாளர்கள் பண்டங்கள் போல் இறக்குமதி செய்யப்பட்டு முதலாளிகளிடம் கையளிக்கப்படுகிறார்கள். இந்தச் சட்டம் காட்டுமிராண்டித்தனமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. குடியியல் தவறுகளையும் குற்றவியல் தண்டனைகளாக அர்த்தப்படுத்தி ஆணுக்கும் பெண்ணுக்கும் கடூழிய சிறைத் தண்டனையும் தண்டப்பணமும் அறவிட வழி செய்கின்றது” எனவும் குறிப்பிட்டார்.

இவரது இலங்கைத் தேசிய காங்கிரஸினது கடுமையான எதிர்ப்பின் காரணமாக 1921 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களே உருவாகி இருக்காத அந்த காலத்தில் மலைநாட்டு தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களின் சுதந்திரத்தை இராட்சதத் தனமாக கட்டுப்படுத்திய “துண்டு முறை” முற்றாக ஒழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அரசாங்கமும் தன் பங்குக்கு 1922 ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க இந்திய குடியகல்வுச் சட்டம் ஒன்றை நிறைவேற்றி, இலங்கையில் இருக்கின்ற இந்திய தொழிலாளர்களின் நலன்களை கவனித்துக்கொள்ள ஒரு முகவரையும் நியமித்தது. இதனைத் தொடர்ந்து 1923ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் குடிவரவு தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடு கட்டுப்பாட்டாளர் திணைக்களத்தை ஏற்படுத்திய போதும் அது 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் விசாரணையின் பின்னரே அமுலுக்கு வந்தது.

இதற்கிடையில் 1927ஆம் ஆண்டு இலங்கையில் கடமை புரிந்த இந்திய முகவர் (Agent) ரங்கநாதனின் கணிப்பீட்டினை அடிப்படையாகக் கொண்டு தோட்டத்தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி (Minimum Wage) கட்டளைச்சட்டம் கொண்டுவரப்பட்டு அதன்கீழ் சம்பளச் சபைகள் (Wages Board) உருவாக்கப்பட்டன. இவை தொழிலாளர்களை பொறுத்த வரையில் வரவேற்கத்தக்க முன்னேற்றங்களை கொண்டிருந்தபோதும் இந்த சம்பள சபைகளில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டவர்கள் பெரிய கங்காணிகள் ஆக இருந்ததால் அது வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி விட்டதாகவே போய்விட்டது.

இந்தியாவில் தீவிரமடைந்து இருந்த பிரித்தானியாவுக்கு எதிரான தீவிர சுதந்திரப்போராட்டக் காற்று இலங்கையிலும் பலமாக வீசியது. சேர். பொன்னம்பலம் ராமநாதன் தேசிய தலைவராக போற்றப்பட்ட காலம் அது. இந்திய சுதந்திர இயக்க தலைவர்களான மகாத்மா காந்தி , ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் இலங்கையிலும் புகழ்ந்து பேசப்பட்டனர். இவர்களின் பெரிய அளவிலான உருவப்படங்கள் சட்டகம் போடப் பட்டு, வீடுகளின் சுவர்களை அலங்கரித்தன. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடர்ச்சியாக கொழும்பிலும் மலை நாட்டின் பல பகுதிகளிலும் இந்திய – இலங்கை நட்புறவு சங்கங்கள் தோன்றின. இவற்றில் முக்கியமானவை இந்திய சங்கம் (Indian Association), அகில இலங்கை இந்திய இளைஞர் லீக் (All Ceylon Indian Youth league) என்பவற்றைக் குறிப்பிடலாம். விரைவில் இவை மத்திய, ஊவா, வட மாகாணங்களில் கிளைகளை அமைத்தன. ஆனால் அவை தோட்டத் தொழிலாளர்களின் உரிமை தொடர்பில் ஒருபோதும் குரல் கொடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இவர்கள் அரசியல் உரிமைகளுக்கான அமைப்புகளாக மட்டுமே தமது செயற்பாட்டை மட்டுப்படுத்திக் கொண்டனர்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4069 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)