Arts
15 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண அரசில் ஆட்சிபுரிந்த புவனேகபாகு வெளியிட்ட முருகப் பெருமானைக் குறிக்கும் அரிய நாணயங்கள்

August 16, 2023 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

யாழ்ப்பாண அரசு கால நாணயங்கள் பற்றி ஆராய்ந்த பலரும் அவர்கள் சேது என்ற மங்கல மொழி பொறித்த நாணயங்களை மட்டுமே வெளியிட்டனர் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் எமது தொல்லியல் ஆய்வின்போது கண்டுபிடித்த நாணயங்களில் இருந்து யாழ்ப்பாண மன்னர்கள் சேது மொழி பொறித்த நாணயங்களுடன் கந்தன், ஆறுமுகன் ஆகிய பெயர்கள் பொறித்த நாணயங்களையும் வெளியிட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. வடஇலங்கையில் இவ்வகை நாணயங்கள் பிறராலும் கண்டுபிடிக்கப்பட்டமைக்கு அல்லது சேகரிக்கப்பட்டமைக்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. 1982 இல் நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் இவ்வகை நாணயங்கள் சிலவற்றை ஈவ்லின் இரத்தினம் ஆய்வு நிறுவத்தின் சேகரிப்பில் இருந்ததைப் பார்த்துள்ளேன். அவை பேராசிரியர் இந்திரபாலாவின் சேகரிப்பாக இருக்கவேண்டும். அண்மையில் இந்நாணயங்கள் தொடர்பான எனது ஆய்வுக் கட்டுரையைப் படித்த தென்னிலங்கை நாணயவியல் அறிஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் நகைக்கடையொன்றில் இருந்து வாங்கியதாகக் கூறி இந்நாணயங்களின் புகைப்படங்களை அனுப்பியிருந்தார். இவற்றை நோக்கும் போது இந்நாணயங்கள் வடஇலங்கையில் புழக்கத்தில் இருந்தன என்பது மேலும் தெரியவருகின்றது.

sethu coins 2

இந்நாணயங்களின் எடை, வடிவமைப்பு, அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள சின்னங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இருவகையாகப் பிரிக்க முடிகின்றது. அவற்றுள் முதலாவது வகை, நாணயத்தில் இடப்புறம் பார்த்த நிலையில் உள்ள மயில் சின்னம். ஏனைய நாணயங்களில் மயிலின் வாயில் பாம்புச் சின்னம் காணப்படுகின்றது. ஆனால் இந்நாணயத்தில் உள்ள சின்னம் பாம்பு உருவத்திலிருந்து சற்று வேறுபட்ட உருவமாகக் காணப்படுகின்றது. மயிலுக்கு மேலே விளிம்பை ஒட்டியவாறு பிறைச்சந்திரன், சூரியன் என்பன காணப்படுகின்றன. நாணயத்தின் பின்புறத்தில் வேல் சின்னத்துடன் தமிழில் ‘கந்'(தன்) என்ற பெயர் காணப்படுகின்றது. இதன் கீழ், கால்களைக் குறிக்கும் இரு கோடுகள் காணப்படுகின்றன. இரண்டாவது வகை நாணயத்தில் உள்ள மயில், இடப்புறம் பார்த்த நிலையில் காணப்படுவதுடன் அதன் வாயில் காணப்படும் பாம்பும் தெளிவாகத் தெரிகின்றது. நாணயத்தின் பின்புறத்தில் ‘ஆ’ என்ற எழுத்துக் காணப்படுகிறது. இதனுடன் இணைந்த நிலையில் முதலாவது நாணயத்தில் வருவது போல் மனித வடிவில் அமைந்த கால் உருவங்கள் காணப்படுகின்றன. இதற்கு இடது, வலது புறமாக முதலாவது நாணயத்தில் வரும் சின்னங்கள் காணப்படுகின்றன. இவ்வகை நாணயங்கள் வடஇலங்கையைத் தவிர இலங்கையின் ஏனைய பாகங்களிலோ தென்னிந்தியாவிலோ இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்நாணயங்களில், தமிழக அரசவம்சங்களால் வெளியிடப்பட்ட நாணயங்களில் முக்கிய சின்னமாக இடம்பெறும் அரச இலச்சினைகள் எவையும்  காணப்படவில்லை. இதனால் இந்நாணயங்கள் யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வெளியிடப்பட்டதெனக் கூறமுடியும். இக்கருத்தை உறுதிப்படுத்தும் மேலும் சில ஆதாரங்களும் காணப்படுகின்றன.  

மேற்குறிப்பிட்ட இரு நாணயங்களில் ஒன்றில் மயில், வேல் சின்னத்தோடு ‘கந்’ என்ற பெயரும், மற்றையதில் இதே சின்னங்களுடன் ‘ஆ’ என்ற எழுத்தும் இடம் பெற்றுள்ளன. இரு நாணயங்களிலும் உள்ள மயிலின் தோற்ற அமைப்பு, சின்னங்களிடையே காணப்படும் ஒற்றுமைகள், நாணயங்களின் வடிவமைப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது இவை குறிப்பிட்ட காலப் பகுதியில் குறிப்பிட்ட ஒரு வம்சத்தால் அல்லது மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் என்பது தெரிகின்றது. இரு நாணயங்களிலும் மயில், வேல் ஆகியவை முக்கிய சின்னங்களாக இடம் பெற்றிருப்பதைக் கொண்டு, இந்நாணயங்களை வெளியிட்ட மன்னர்களும் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட மக்களும் முருகவழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது. சேது மொழி பொறித்த நாணயங்கள் வெளியிப்பட்ட காலத்திலும் யாழ்ப்பாண அரசில் முருகவழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்ததை எமது ஆய்வில் கண்டுபிடித்த நாணயங்கள் உறுதி செய்கின்றன. அந்நாணயங்களில் நந்திக்கு முன்னால் முருக வழிபாட்டை அடையாளப்படுத்தும் மயில் சின்னம், சிறிய வடிவமாகக் காணப்படுகின்றது. ஆனால் இந்நாணயங்களில் மயில் சின்னம், வேல் சின்னத்துடன் முக்கிய சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள ‘கந்’, ‘ஆ’  என்பவை கந்தன், ஆறுமுகன் ஆகிய தெய்வப் பெயர்களின் குறுக்கமாகக் காணப்படுகின்றன. அப்பெயர்கள் இறைவனின் தலைப்பாகத்தையும், கீழ் உள்ள பாகம் இறைவனின் உடற்பாகத்தையும் குறிக்கின்றன. இம்மரபில் நாணயங்கள் வெளியிடும் முறை இடைக்காலத் தென்னிந்தியாவிலும் இருந்துள்ளது. இதற்கு, சேரமன்னர் நாணயங்களில் பயன்படுத்திய ‘ச’ என்ற எழுத்தையும் (Mitchiner 1998 : 160 – 1) மூன்றாம் வல்லாள மன்னன் ஆட்சியில் (கி.பி.1292 – 1345) வெளியிட்ட நாணயங்களில் வரும் ‘ப’ என்ற எழுத்தையும் உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இங்கே ‘ஆ’ என்ற எழுத்திற்கும் ‘கந்’ என்ற பெயருக்கு கீழே நடுவில் உள்ள பகுதி, இறைவனின் இடுப்புடன் இணைந்த காற்பகுதியாகத் தோன்றுகின்றது. இதை ‘ஆ’ என்ற எழுத்துப் பொறித்த நாணயங்களில் தெளிவாகக் காணமுடிகின்றது. 

kailaayamaalai

இந்த இடத்தில், யாழ்ப்பாண அரசு காலத்தில் நல்லூரில் அமைக்கப்பட்ட கந்தன் ஆலயம் தொடர்பாக கைலாயமாலையில் வரும் குறிப்பை மேற்கூறப்பட்ட நாணயங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது இந்நாணயங்களை வெளியிட்ட மன்னன் யார் என்பது ஓரளவுக்குத் தெரியவரலாம். கைலாயமாலையில் வரும் தனிச் செய்யுள், நல்லூரில் கந்தன் ஆலயத்தையும் யாழ்ப்பாண நகரத்தையும் அமைத்தவன் புவனேகபாகு எனக் கூறுகின்றது. இச்செய்யுள் குறிக்கும் காலத்தைச் சக வருடம் எண்ணூற்றெழுபதாக எடுத்துக்கொண்டு, பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மந்திரி புவனேகபாகு காலத்தில் அரசும் கந்தன் ஆலயமும் தோன்றியதாக முதலியார் இராசநாயகம் அவர்கள் கூறுகின்றார். ஆனால் இக்கூற்றை ஏற்கக் கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைக்கவில்லை. இலங்கையில் புவனேகபாகு என்ற பெயரில் 7 மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களுள் 6 ஆம் பராக்கிரமபாகு தென்னிலங்கையில் ஆட்சி செய்த காலத்தில், அவன் வளர்ப்பு மகனாகிய சபுமால்குமரயா என்ற மலையாள இளவரசன், (செண்பகப்பெருமாள்) 1540 இல் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் புவனேகபாகு என்ற பெயருடன் ஆட்சிபுரிந்துள்ளான். இதை யாழ்ப்பாணத்தின் பிரதான வீதியில் கிடைத்த இவனது காலத் தமிழ்க் கல்வெட்டும் உறுதிப்படுத்துகின்றது. இக்கல்வெட்டு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருந்த தேநீர் சாலையில் வாசல் படியாகப் பயன்படுத்தப்பட்ட கற்தூணில் எழுதப்பட்டிருந்தது. 25 வரிகளில் பொறிக்கப்பட்ட  இக்கல்வெட்டில், 15 வரிகளே ஓரளவு தெளிவாகக்காணப்பட்டன. 1968 ஆம் ஆண்டு இலங்கைத் தொல்லியற்திணைக்களம் இக்கல்வெட்டைப் படியெடுத்திருந்தாலும், 1969 ஆம் ஆண்டு பேராசிரியர் இந்திரபாலா அவர்கள் மீளப்படியெடுத்து அவரால் வாசிக்கப்பட்டதன் பின்னரே இக்கல்வெட்டின் வரலாற்று முக்கியத்துவம் வெளிச்சத்திற்கு வந்தது. அக்கல்வெட்டிலிருந்து யாழ்ப்பாண வைபமாலை, கைலாயமாலை முதலான நூல்கள் குறிப்பிடும் புவனேகபாகு கி.பி.15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் ஆட்சிபுரிந்த செண்பகப்பெருமாள் என்பதும், அவனே கோட்டை மன்னன் ஆறாம் பராக்கிரமபாகுவின் பெயரில் இக்கல்வெட்டை வெளியிட்டான் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இக்கல்வெட்டு ஒரு கட்டிடத்தின் பாகமாக இருப்பதால் அது புவனேகபாகு கட்டிய நல்லூர் கந்தன் ஆலயமாக இருந்திருக்கலாம் எனப் பேராசிரியர் இந்திரபாலா கூறுகின்றார்.

இந்நாணயங்கள் சேதுமொழி பொறித்த நாணய மரபில் இருந்து வேறுபட்டு இருப்பதைக் கொண்டு யாழ்ப்பாண அரசை ஆட்சி புரிந்த செண்பகப்பெருமாளே இந்நாணயங்களை வெளியிட்டுள்ளான் என்ற முடிவுக்கு வரமுடிகின்றது. இம்முடிவைப் பொருத்தமானதெனக் கூறியுள்ள பேராசிரியர் பத்மநாதன் இந்நாணயங்களின் வரலாற்று முக்கியத்துவம் பற்றிய தனது கருத்தையும் அண்மைக்கால ஆய்வொன்றில் பின்வருமாறு கூறுகிறார்: 

‘கந்’ என்ற எழுத்துக்கள் கந்தசாமியினது பெயரையும், ‘ஆ’ என்ற எழுத்து ஆறுமுகசுவாமியினது பெயரையுங் குறிப்பனவாதல் வேண்டும். அவ்வாறாகில் இந்த நாணயங்கள் கந்தக் கடவுளின் பெயரால் வழங்கப்பட்டவை. அவற்றைச் செண்பகப்பெருமாள் வெளியிட்டான் என்று கொள்ள முடிகின்றது. ஆதியான கந்தசாமி கோயிலை அவனே அமைத்தான் என்பது பல நூற்றாண்டுகாலமாக நிலவி வரும் ஐதீகம் என்பது குறிப்பிடற்குரியது. இந்த அடிப்படையில் நோக்குமிடத்து யாழ்ப்பாண தேசத்தவரது சமய வழிபாட்டு மரபுகளுக்கும் மொழி வழக்கிற்கும் ஏற்றவகையிலேயே தனது பதவிக்கும் அதிகாரத்திற்கும் உரிய சின்னங்களை அமைத்துக் கொண்டான் என்பது தெளிவாகிறது. அது பிரமிக்கத்தக்கவொன்று. அது குடியாட்சி அரசியல்நெறி புரிந்துணர்வின் வழி ஏற்பட்ட நல்லெண்ணத்தின் அடையாளம். நல்லெண்ணத்திற்கு நல்லதொரு உதாரணம்”( பத்மநாதன், சி.2011).

ஸ்ரீபுவனேகபாகு பெயரில் செண்பகப்பெருமாள் வெளியிட்ட நாணயங்கள்

அண்மைக்காலத்தில் வட இலங்கையில் மேற்கொள்ளப்பட தொல்லியல் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துப் பொறித்த நாணயங்கள் யாழ்ப்பாண அரசு பற்றிய ஆய்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்தவையாகக் காணப்படுகின்றன. அவற்றுள் நந்தி உருவம் பொறித்த நாணயங்களின் பின்பக்கத்தில், தேவநாகரி எழுத்துப் பொறிப்புள்ளவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. அவ்வெழுத்துக்களின் வரி வடிவமைப்பை நோக்கும் போது அவை மேலே குறிப்பிட்ட ஸ்ரீசாவக என்ற பெயர்களை ஒத்ததாகவே முதலில் தோன்றியது. ஆனால் 2017 இல் கட்டுக்கரைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் மேலும் இவ்வகையான நாணயங்கள் கிடைத்தன. அவற்றின் எழுத்துக்கள் இடையே சில வேறுபாடுகள் காணப்பட்டதனால் இவ்வெழுத்துக்களை வாசிப்பதில் புலமையுடைய தமிழகத் தொல்லியற் துறையின் ஓய்வு பெற்ற மூத்த கல்வெட்டு அறிஞரான கலாநிதி இராஜகோபால் அவர்களுக்கு அவற்றின் புகைப்படங்களை அனுப்பி வைத்தேன். அவர், மைசூர் சாசனவியலாளர் –  அறிஞர் கலாநிதி முனிரத்தினம் அவர்களுடன் இணைந்து, நாணயங்களில் உள்ள எழுத்துக்களை நந்தி நாகரி என அடையாளப்படுத்தி அதில் பொறிக்கப்பட்ட பெயரை ‘ஸ்ரீபுவனேகபாஹ_’ என வாசித்துள்ளார். இந்த வாசிப்பையே தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டுப் பேராசிரியரான இராஜவேலு அவர்களும் பொருத்தமானதென உறுதிப்படுத்தி உள்ளார். இலங்கை வரலாற்று ஆய்வாளர்களுக்கு நன்கு பரிச்சயமான ‘ஸ்ரீபுவனேகபாஹ_’ என்ற பெயரைத் தமிழக அறிஞர்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில், நாணயத்தில் உள்ள எழுத்துக்களை வைத்து இப்பெயர் வாசிக்கப்பட்டமை இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது.

Vaipavamaalai (2)

இந்நாணயங்களின் வடிவமைப்பு, நாணயத்தின் முன்பக்கத்தில் உள்ள நந்தியின் தோற்ற அமைப்பு, யாழ்ப்பாண அரசு கால வரலாற்றுப் பின்னணி என்பவற்றை வைத்துப் பார்க்கும் போது  இந்நாணயங்கள் யாழ்ப்பாண அரசு காலத்தில் வெளியிடப்பட்டதாகத் தோன்றுகின்றது. இதில் உள்ள பெயரை ‘ஸ்ரீபுவனேகபாஹ_’ என வாசித்துள்ளமை பொருத்தமாகவே தோன்றுகின்றது. ஏனெனில் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் கோட்டை மன்னன் ஆறாம் பராக்கிரமபாகு சார்பாக அவனின் வளர்ப்பு மகனும், மலையாள இளவரசனுமான செண்பகப்பெருமாள் யாழ்ப்பாண அரசின் மீது படையெடுத்தது பற்றி ‘கோகிலசந்தேஸய’ என்ற சிங்கள இலக்கியம் கூறுகின்றது. இவன் இலங்கை வரலாற்றில் செண்பகப்பெருமாள் என்ற பெயருடன் சபுமல்குமாரயா, புவனேகபாகு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டான். யாழ்ப்பாண அரசு தொடர்பாக, பிற்காலத்தில் எழுந்த யாழ்ப்பாண வைபவமாலையும், கயிலாயமாலையும் புவனேகபாகு என்னும் அமைச்சனே நல்லூர் நகரத்தையும் நல்லூர்கந்தசாமி கோவிலையும் கட்டுவித்தான் எனக் கூறுகின்றன. இதை நல்லூர் ஆலயத்தில் இன்றுவரை ஓதப்பட்டு வரும் கட்டியம் மேலும் உறுதிசெய்கின்றது. இவனே 1450 தொடக்கம் 1467 வரை யாழ்ப்பாண அரசில் ‘புவனேகபாஹ_’ என்ற பெயரில் ஆட்சி செய்த செண்பகப்பெருமாள் என்பதை பேராசிரியர் இந்திரபாலா அவர்கள் யாழ்ப்பாண பிரதான வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டின் மூலம் உறுதிசெய்துள்ளார். இக்கூற்றையே ‘புவனேகபாஹ_’ வெளியிட்ட நாணயங்கள் மேலும் உறுதிசெய்வதாகக் கூறலாம்.

செண்பகப்பெருமாள் கோட்டை மன்னன் சார்பாக, யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் ‘புவனேகபாஹ_’ என்ற பெயருடன் ஆட்சி செய்த போதும், அவன் தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த தமிழ் மக்களின் மத நம்பிக்கைகளையும், பண்பாட்டையும் பெரிதும் அனுசரித்து ஆட்சி செய்த மன்னனாகவே காணப்படுகின்றான். இதனை இவன் வெளியிட்ட தமிழ்க் கல்வெட்டும் கந்தன், ஆறுமுகன் பெயரில் வெளியிட்ட நாணயங்களும் உறுதிசெய்கின்றன.  மேலும், யாழ்ப்பாண இராசதானியைத் தோற்றுவித்த, பாண்டியரின் படைத்தளபதிகளான ஆரியச்சக்கரவர்த்திகளின் அரச இலச்சினையாக நாணயங்களில் பயன்படுத்திய நந்தியை, ‘புவநேகபாஹ_’ தனது நாணயங்களிலும் பயன்படுத்தியதன் மூலம் இது மேலும் உறுதியாகின்றது. ஆயினும் சேது மொழி பொறித்த நாணயங்களுக்கும் ‘புவனேகபாஹ_’ வெளியிட்ட நாணயங்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. அந்த வேறுபாடுகள் இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய நாணய மரபை நினைவுபடுத்துவதாகவே உள்ளன. ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்கள் அறிமுகப்படுத்திய நாணயங்களில் நந்திக்கு கீழே ‘சேது’ என்ற மங்கல மொழி காணப்படுகின்றது. ஆனால் ‘புவனேகபாகபாஹ_’ வெளியிட்ட நாணயங்களில் சேது மொழிக்குப் பதிலாக நந்திக்கு கீழே மங்கலத்தைக் குறிக்கும், மூன்று கோடுகளால் வடிவமைக்கப்பட்ட பீடம் காணப்படுகின்றது. இப்பீடம் இலங்கையில் தமிழ் – சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் காணப்படும் தனித்துவமான அம்சமாகும். அம்மரபு யாழ்ப்பாண இராசதானி காலத்திலும் தொடர்ந்ததற்கு ‘புவனேகபாஹ_’ வெளியிட்ட நாணயங்களை ஆதாரமாகக்  கொள்ளலாம்.

coins of bhuvanekabahu

சேது மொழி பொறித்த எல்லா நாணயங்களிலும் படுத்திருக்கும் நந்தி வலப்பக்கம் பார்த்த நிலையிலேயே காணப்படுகின்றது. ஆனால் ‘புவனேகபாஹ_’ வெளியிட்ட நாணயங்களில் உள்ள நந்தி வலப்பக்கமாக மட்டுமன்றி இடப்பக்கமாகவும் பார்த்த நிலையில் காணப்படுகின்றது. இம்மரபு யாழ்ப்பாண இராசதானிக்கு முன்னர், வடஇலங்கையில் இருந்த அரசுகளால் வெளியிடப்பட்ட நாணயங்களிலும் காணப்படுகின்றது. இதனால் இம்மரபை ‘புவனேகபாஹ_’  தான் வெளியிட்ட நாணயங்களிலும் பின்பற்றியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. சேது மொழி பொறித்த நாணயங்கள் தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ‘புவனேகபாஹ_’ நாணயம் வடமொழியில் வெளியிடப்பட்டுள்ளது. சமகாலத்தில் தென்னாசியாவில், கல்வெட்டுக்கள் சுதேச மொழியில் வெளியிட்டாலும் நாணயங்களை வடமொழியில் வெளியிடும் மரபே பெரும்பாலும் காணப்பட்டது. இதற்கு, பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுக்களைத் தமிழில் வெளியிட்ட சோழர், நாணயங்களை வடமொழியில் வெளியிட்டதை உதாரணமாகக் காட்டலாம். இவர்களைப் பின்பற்றியே சிங்கள மன்னர்களும் கல்வெட்டுக்களைச் சிங்கள மொழியில் வெளியிட்டபோதும் நாணயங்களை வடமொழியில் வெளியிட்டுள்ளனர். இதற்கு, நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் வடமொழி பொது மொழியாக இருந்ததே காரணம் என அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த நோக்கத்திலேயே ‘புவனேகபாஹ_’ வும் தனது நாணயங்களை வடமொழியில் வெளியிட்டான் எனக் கருத இடமுண்டு.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11128 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)