Arts
12 நிமிட வாசிப்பு

18ம் நூற்றாண்டில் வட இலங்கையில் வேளாளர்கள் : யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சிக்கு முன்பும் பின்பும் – பகுதி 2

July 15, 2022 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

டச்சு அரசாங்கத்தின் இலங்கை ஆளுநரான யோன் சைமன்ஸ் 1704 ஆம் ஆண்டில், கரையார் சமூகப் பிரிவினரின் குறைகளைக் கேட்டறிந்தமை பற்றிக் குறிப்பிட்டோம். யோன் சைமனுக்கு அப்போது சாணார் என்ற இன்னொரு சமூகப் பிரிவினரும் தம் குறைகளை முறையீடு செய்திருந்தமை எமது கருத்தை வலுப்படுத்தும் இன்னொரு சான்றாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பழைய குடியேறிகளான வேளாளர்களுக்கு அடுத்த படிநிலையில் தாம் இருப்பதாக சாணார் கூறியிருப்பதானது சுவாரசியமான ஒரு தகவலாகும். இவர்கள் தென்னிந்தியாவின் மலபார் கரையில் இருந்து யாழ்ப்பாணத்தில் அதினாவரசன் என்ற தலைவனின் தலைமையில் வந்து குடியேறிய முன்னோர் வழிவந்தவர்கள் எனத் தம்மைக் கூறிக்கொண்டனர்.

சீவல் தொழில்

அதினாவரசன் யாழ்ப்பாண அரசர்களுக்கு முன்பே யாழ்ப்பாணத்திற்கு வந்தவனென்பதும் அவர்களின் கருத்தாகும். மலபாரின் சாணார்கள் தென்னை மரத்தில் கள்ளிறக்கும் தொழிலைச்செய்தனர். இலங்கை வந்த பின்னர் அவர்கள் பனைமரத்திலிருந்து கருப்பணியை (பதனீர்) பெற்று கருப்பட்டி உற்பத்தி செய்தல், பனம்பழத்தில் இருந்து பனாட்டு உற்பத்தி செய்தல் ஆகிய தொழில்களைச் செய்வதும், பனைவளத்தை ஆதாரமாகக் கொண்ட பல உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வது ஆகிய வழிகளில் தம் வாழ்க்கையைக் கொண்டு நடத்தினர். யாழ்ப்பாணத்தின் பழமையான குடும்பங்களின் நிர்வாக அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாய் வாழ்ந்த இவர்கள் நீண்ட காலம் எவ்வித வரிசெலுத்தும் கடப்பாடுகளும் அற்றவர்களாக வாழ்ந்து வந்தனர்.

காலப்போக்கில் வேளாளர்கள் தமக்கு ஒரு அரசனை அனுப்பிவைக்கும்படி பாண்டிய அரசனை வேண்டியதற்கமைய, ஒரு கையை இழந்த பிராமணன் ஒருவனை பாண்டியன் அரசனாக அனுப்பி வைத்தான். அப்பிராமணன் பணமோ, பொருளோ இல்லாதவனாக வெறுங்கையோடு வந்தானாம். இதனால் அவ்வரசனைப் பராமரிப்பதற்காக சாணார் சாதியினர் மீது வரி விதிக்கப்படலாயிற்று. அவர்களின் உற்பத்திகளான பனாட்டு, கருப்பட்டி, பனங்கிழங்கு ஆகியன மீதும் வரி விதிக்கப்பட்டது. இப்பிராமணனுக்குப் பின்னர் ஆட்சியாளர்களாக இருந்த யாழ்ப்பாண அரசர்கள் சாணார்கள் மீது மேலும் பல வரிகளை விதித்தார்களாம். இதனைவிட சாணார்களை அவர்கள் செய்துவந்த தொழில்களின் அடிப்படையில் நான்கு உப பிரிவுகளாகப் பிரித்தார்கள் என்றும் முறையீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிராமணனுக்கு அடுத்து அரசனாக ஆட்சி செய்தவர், பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு செல்லும் தொழிலில் ஈடுபட்டவர்களை ‘வேலைப்பாட்டு சாணார்’ எனப்பெயரிட்டு தனிப்பிரிவாக்கியதோடு அவர்களிடம் மேலதிக வரியையும் அறவிடத் தொடங்கினான். அவன் சாணார்களில் இன்னொரு பிரிவினரை யானைகளைப் பராமரிக்கும் தொழிலைச் செய்யும்படி கட்டளையிட்டானாம். இப்பிரிவினர் ‘ஆனைப்பாகர் சாணார்’ எனப்பட்டனர். இன்னொரு பிரிவினரை இவ் அரசன் யானைகளைக் கட்டுவதற்கான கயிறுகளை உற்பத்தி செய்யும் வேலையைச் செய்யும்படி பணித்தான். இப்பிரிவினர் ‘கயிற்றுச்சாணார்’ எனப்பட்டனர். எஞ்சியிருந்த எல்லாச் சாணார்களும் கருப்பட்டி, பனாட்டு, பனங்கிழங்கு என்பனவற்றை வழங்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டனர். இப்பிரிவினர் ‘பனையேறிச் சாணார்’ என அழைக்கப்படலாயினர். இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள பனையேறிச் சாணார்களுக்கு அரசன் பொதுக்கட்டுமானப் பணிகளில் பலவித வேலைகளைச் செய்யும்படியும் கட்டளையிட்டானம். இவ்வாறான பலவித வரிகளின் சுமையால் அழுந்தியவர்களே யோன் சைமன்சிடம் முறையீடு செய்தவர்கள் என்பது தெளிவாகிறது.

இவ்விடத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் சாணார்கள் (பிற்காலத்தில் நளவர் என்று அழைக்கப்பட்டோர்) தமக்கு தனித்துவமானதும் சுதந்திரமானதுமான குடியேற்ற வரலாறு உண்டு என்பதை எடுத்துரைத்திருப்பதாகும். அவர்களின் வரிக் கடப்பாடு அரசுக்கும், ஆட்சியாளனான அரசனுக்கும் உரியதே அன்றி வேறு மேலாளர்கள் எவருக்கும் உரியதான கடப்பாடு அன்று. சாணார்களிடம் இம்முறையீட்டைச் செய்த காலத்தில் வெளிப்பட்ட தன்மானமும் சுய நம்பிக்கையும் பிற்காலத்தில் அவர்களிடம் இல்லாமல் போயிற்று. பொதுக் கட்டுமானப் பணிகள் சார்ந்த ஊழியத்தை செய்யும்படி அரசு இவர்களை நிர்ப்பந்தித்ததால் சுதந்திரமானவர்களாக, பனையேறும் தொழில் செய்து வந்த இச்சாதிப் பிரிவினர் பொதுப்பட்ட உடல் உழைப்பு வேலைகளைச் செய்யும் பிரிவினராக மாற்றம் பெற்றனர். இதனால் இவர்கள் விவசாயத் தொழில் அடிமை உழைப்பாளர்களாக இருந்த பள்ளர் சாதியின் நிலைக்கு ஒப்பானவர்கள் ஆயினர். பள்ளர்கள் வேளார்களோடு சேர்ந்து அடிமைகள் என்ற நிலையில் தென்னிந்தியாவில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்களாவர். யானை பிடிக்கும் வேலையில் சாணார் ஈடுபடுத்தப்பட்டமைக்கு அக்கால யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத் தேவைகள் காரணமாக இருந்தது. யானை வர்த்தகம் இலாபம் தருவதாக இருந்ததால் யாழ்ப்பாண அரசர்கள் அதனைப் பிடிப்பித்து ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டனர். அவர்களுக்குப் பின்னர் ஆட்சியாளர்களாக வந்த போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும் யானை வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்தின் சமூகக்கட்டமைப்பில் மடப்பள்ளிகள் முக்கியமான ஒரு சாதியாவர். மடப்பள்ளிகளின் தோற்றம் அவர்களின் குணஇயல்புகள் என்பன குறித்து தெளிவாக அறியமுடியவில்லை. நவீன யாழ்ப்பாணத்தில் மடப்பள்ளிகள் அடையாளம் தெரியாமல் மறைத்து விட்டனர் எனலாம். அவர்கள் வேளாளர்களுடன் ஒன்றிக்கலந்து, வேளாளர் சாதியின் எண்ணிக்கையையும், பலத்தையும் அதிகரிக்க உதவினர். 1827 இல் நடத்தப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 12,995 மடப்பள்ளிகள் இருந்துள்ளனர். அப்போது மடப்பள்ளிகள் யாழ்ப்பாணத்தின் சனத்தொகையின் 10 வீதம் ஆக இருந்தனர். மடப்பள்ளி என்ற சொல்லின் பொருள் உணர்த்துவது யாதெனில் மடப்பள்ளிகள், யாழ்ப்பாண அரசர் காலத்தில் அரண்மனைச் சேவகர்களாகவும் சமையல்காரர்களாகவும் பணியாற்றினர் என்பதாகும். யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியின் பின் அவர்கள் யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளிலும் சிதறி நில உடைமையாளர்களாக மாறினர். அவர்களது பராமரிப்புக்காக அரசனால் முன்னர் ஒதுக்கப்பட்ட நிலங்களைப் பயிரிடும் விவசாயிகளாயினர். 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் மடப்பள்ளிகள் செல்வாக்கு மிக்க சாதியாக விளங்கினர். மடப்பள்ளிகளுக்கும் வேளாளர்களுக்கும் இக்காலத்தில் நிர்வாகப் பதவிகளுக்கான நியமனங்களில் போட்டி ஏற்பட்டது.

மடப்பள்ளிகளை விட வேறு இரு சாதிப்பிரிவினரும் அரண்மனையினதும், கோவில்களினதும் நிர்வாகப் பதவிகளையும், சேவைக்கடமைகளையும் செய்து வந்தோராக இருந்து, யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியின் பின் கிராமங்களில் நிலவுடைமைச் சாதிகளாகச் சிதறிப் பரவினர். அவ்விரு சாதிகளுள் தனக்காரர் என்ற சாதியினர் அரசர்களால் தானமாக வழங்கப்பட்ட கோவில் நிலங்களின் பாதுகாவலர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருந்து வந்தனர். யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியின் பின்னர் கோவில்களின் புரவலர்களாக அரசன் இருந்த நிலைமாறியது. கோவில் சொத்துக்களான நிலங்களைக் கொண்டிருந்த கிராமங்களில், அந்நிலங்களைப் பயிரிடும் நிலவுடைமையாளர்களாக தனக்காரர் மாறினர். கோவில்களுக்குத் தானமாக அரசனால் கொடுக்கப்பட்ட காணிகள் வன்னிப் பகுதியிலும் இருந்தன. யாழ்ப்பாணத்திற்கு தெற்கே இருந்த இக்காணிகளை தனக்காரர் தமதாக்கிக் கொண்டு அதற்கு வரியாக வன்னிக்காட்டில் யானைகளைப் பிடித்து அரசனுக்குக் கொடுத்தனர்.


அகம்படியார் என்ற சமூகப் பிரிவினர் அரண்மனைச் சேவகர்களாகவும், அரசனின் மெய்ப்பாதுகாவலர்களாகவும் இருந்தனர். அவர்களின் சேவைக்காக காணிகள் வழங்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியின் பின்னர் அகம்படியாரும் முழுநேர விவசாயிகளாக தம் நிலங்களில் பயிர்ச் செய்கையை மேற்கொண்டனர். யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியின் பின்னர், யாழ்ப்பாணக் கிராமங்களில் பல்வேறு சாதிகள் காணிகளின் உடைமையாளர்களாகவும் பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களாகவும் சிதறிப் பரவி வாழ்ந்தனர். பல விவசாயச் சாதிகள் பரவலாக இருந்தமையால் வேளாளர் அதிகாரம் சமநிலையைப் பெற்றது.

கைவினைப் பொருள்கள் செய்வோர்


விவசாய உற்பத்தி நடவடிக்கைகளோடு தொடர்பற்றதான, சுதந்திரமான சாதிக்குழுக்கள் பலவும் இருந்தன. கைவினைச் சாதிகள் சுதந்திரமானவையாக இருந்தன. இன்றுவரை இருந்து வருகின்றன. வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டோரின் சுதந்திரப்போக்கு மிகத் தெளிவாகத் தெரிந்தது. செட்டி வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்திலும்,தென்னிந்தியாவிலும் வாழ்விடத்தை உடையவர்களாக இருந்தனர். அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளும் அவ்வாறே இரு இடங்களிலும் தொடர்ந்தன. தெளிவான அடையாளங்கள் இல்லாத ‘பரதேசிகள்’ என்ற சமூகப் பிரிவினர் இருந்தனர். வெளியில் இருந்து வந்தவர்களும் பிறசாதிகள் எவற்றுடனும் தம்மை இணைத்து அடையாளப்படுத்த முடியாதவர்களும் பரதேசிகள் எனப்பட்டனர். போத்துக்கீச ஆவணம் ஒன்றின்படி, யாழ்ப்பாண அரசர்கள் மதுரையில் இருந்து படகர் (வடுகர்) என்ற பிரிவினரைக் கொண்டு வந்து, அவர்களுக்கு காணிகளைக் கொடுத்ததோடு, பரதேசி என்ற பெயரோடு, வேளாளர்களுடன் இணைத்துவிட்டதாக தெரிகிறது. ஆகையால் பரதேசிகள் வேளாளர்களுக்கு சமமான அந்தஸ்து உடையவர்களாகக் கருதப்பட்டனர். அதன் பின்னர் செல்வமும், செல்வாக்கும் மிக்க குடியேறிகள் பலரும் பரதேசிகளுடன் இணைந்து கொண்டனர்.

யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியும், அதற்குப் பிந்திய காலத்தின் காலனிய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளும் யாழ்ப்பாணத்தின் சாதிகளிடையிலான உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தின. வேளாளர்கள் சாதிப்படி நிலையின் உயர் நிலையில் இருந்தனர். ஆட்சியாளர்களும் வேளாளர்கள் சமூகப்படி நிலையில் உயர் இடத்தில் இருந்தமையை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆயினும் ஒரு சாதிப் பிரிவினரை மேலாதிக்கமுடையவர்களாய் ஏற்பதன் ஆபத்தும் ஆட்சியாளர்களால் உணரப்பட்டது. போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் பொருளாதாரம், சமூகம் என்ற நிலைகளில் புதிய கூறுகள் சிலவற்றைப் புகுத்தினர். இவை சமூகக் குழுக்கள் சில மேல்நிலைக்கு உயரவும், வேறு சில குழுக்கள் உயர் நிலையில் இருந்து குறைந்த நிலைக்கு தாழ்வதற்கும் காரணமாயின. வர்த்தகம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இந்து சமுத்திர வர்த்தகத்தின் பகுதியாக இணைந்து வளர்ச்சிபெற்றது. 17 ஆம் நூற்றாண்டின் முக்கிய வளர்ச்சிகளில் ஒன்றான இந்து சமுத்திர வர்த்தகம், வடஇலங்கையிலும் பொருளாதார நடவடிக்கைகள் சிலவற்றுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது.

ஒல்லாந்து கால தேவாலயம்


இப்புதிய பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திச் சில சமூகக் குழுக்கள் உயர்வடைந்தன. வேறு சில ஒப்பீட்டளவில் தாழ்வுற்றதை சமூகத் தளத்தில் கிறிஸ்தவம் பரவியமையும், மதமாற்றநடவடிக்கைகளும் முக்கியமான மாற்றமாகும். இவ்வாறு வெவ்வேறு காரணிகள், சிக்கலானதும், பல்திசை நோக்கியதுமான மாற்றங்களுக்கு வழிவகுத்தன. சமூகத்தில் சாதிக்குழுக்களுக்கான உறவுகளில் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக வேளாளர்கள் அல்லாத சாதிப்பிரிவினருக்கு காலனிய ஆட்சியாளர்கள் நிர்வாகப்பதவி நியமனங்களை வழங்கியதால் சாதி உறவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.


போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை ஒப்பீட்டளவில் குறுகிய காலமே (1619 – 1658) ஆட்சி செய்தனர். ஆயினும் இக்குறுகிய காலத்தில் (சுமார் 40 ஆண்டுகள்) அவர்கள் கிறிஸ்தவத்தை புகுத்தியமை முக்கிய சமூக மாற்றங்களுக்கான ஒரு காரணியாக அமைந்தது. கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட சமூகப் பிரிவுகளுக்குச் சில சலுகைகள் கிடைத்தன. கரையார் சாதியினரில் பெருந்தொகையானோர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினர் இவ்வாறு மதம் மாறியவர்கள் போர்த்துக்கேய அரசு அதிகாரத்திற்கு நெருக்கம் உடையவர்களாயினர்.

மடப்பள்ளி என்ற சாதியினரும் ஓரளவிற்கு கிறிஸ்தவத்தை ஏற்பவர்களாயினர். ஆனால் வேளாளர்கள் நிர்வாகப் பதவிகளில் தொடர்ந்து இருப்பதற்காக பெயரளவில் கிறிஸ்தவத்தை ஏற்றார்களே அல்லாமல் முழுமனதுடன் கிறிஸ்தவத்தை ஏற்காதவர்களாய், கிறிஸ்தவ மதபோதகர்களில் இருந்து தூர விலகியவர்களாய் வாழ்ந்தனர். இதன் விளைவாக கரையார், மடப்பள்ளி என்ற இரு சாதிப் பிரிவினரும் போர்த்துக்கேயரின் ஆதரவைப் பெற்றுக்கொண்ட சமூகப் பிரிவினர்களாய், கடலோடிகளாகவும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாயும் மாறிச் செல்வந்தர்கள் ஆயினர். போத்துக்கேயர் அச்சாதிகளைச் சேர்ந்தோருக்கு பிராந்திய நிர்வாகப் பதவிகளையும் கூட வழங்கினர், இருந்தபோதும் வேளாளர்களின் ஆதிக்கம் கிராமங்களில் வலுவுடையதாக இருந்து வந்தது. அவர்கள் பிராந்திய நிர்வாகப் பதவிகளையும் வகித்து வந்தனர், வரிவருமானத்தை அறவிடுபவர்களாகவும் வேளாளர்கள் இருந்தனர். இக்காரணத்தால் காலனிய அரசாங்கத்தால் வேளாளர்களை இலகுவில் புறக்கணிக்க முடியவில்லை. 1658ம் ஆண்டில் டச்சுக்காரரிடம் ஆட்சி அதிகாரம் கைமாறியது. அது வேளாளருக்குச் சாதகமானதாயிற்று. கரையார், மடப்பள்ளி என்னும் இரு சமூகப் பிரிவினரும் போர்த்துக்கேயருக்கு நெருக்கமுடையவர்களாக இருந்தமையால் டச்சு ஆட்சியில் அவர்கள் விரோதிகளாகப் பார்க்கப்படும் நிலை எழுந்தது.

1658 செப்டம்பரில் டச்சுக்காரருக்கு எதிராகக் கலகம் செய்தவர்களான கரையார், மடப்பள்ளி சமூகப் பிரிவுகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு பகிரங்கமாகக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் கரையார், மடப்பள்ளி ஆகிய இரு சமூகப் பிரிவினரும் தாம் போத்துக்சேயருக்கு எதிரானவர்கள் என்பதை வெளிப்படுத்தியமை, வேளாளர்களுக்குச் சாதகமாக அமைந்தது. நிர்வாகப் பதவிகளில் ஏற்பட்டிருந்த போட்டி வேளார்களுக்கு சாதமாகத் திரும்பியது. டச்சுக்காரர் ஆட்சியைக் கைப்பற்றியதும், வருமானவரி ஆகியனவற்றை அறவிடும் நிர்வாக அமைப்பை விரைந்துபலப்படுத்தினர். நிர்வாகப் பதவிகளை ஏற்கனவே வகித்து வந்த வேளாளர் குடும்பங்களுக்கு டச்சுக்காரர் தொடர்ந்து நிர்வாகப் பதவிகளைக் கொடுத்தனர். பெயரளவில் கத்தோலிக்கர்களாக இருந்துவந்த வேளாளர்களின் தலைமைக்காரர்களில் பலர், புரட்டஸ்தாந்திய கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டு புதிய ஆட்சியாளர்களின் விசுவாசம் மிக்க சேவகர்களாயினர், போர்த்துக்கேயரிடமிருந்து டச்சுக்காரர்களுக்கு அதிகாரம் கைமாறியதால், பிற சமூகக்குழுக்களைவிட வேளார்கள் உயர்நிலையைப் பெற்றனர்.


டச்சு ஆட்சியின் போது வேளாள அதிகாரிகளுக்கும், டச்சுகாரர்களுக்கும் இடையே விரிசல்கள் விரைவிலேயே தோன்றின. நிர்வாகப் பதவிகளில் இருந்து வந்த வேளாளர் குடும்பங்களின் செல்வாக்கு அதிகரிப்பதையும், அவர்கள் யாழ்ப்பாணப் பகுதியின் பலம்மிக்க ஒரு சமூகப்பிரிவாக மாறுவதையும் டச்சுக்காரர் விரும்பவில்லை. நிர்வாகப் பதவிகள் ஊடாக வேளாளர்கள், தம்பொருளாதார பலத்தை வலுப்படுத்திச் செல்வந்தர்களாயினர். சட்டப்படியான வழியிலும், சட்டமுறையற்ற வழியிலும் வேளாளர்கள் காணிகளின் உடைமையாளர்களாக, தமது காணிச் சொத்துக்களின் அளவைப் பெருக்கிக் கொண்டனர். காணிகளின் உடைமையாளர்கள் சேவைத் தொழில்களைச் செய்தோரை அடிமைவேலை செய்வோராக ஆக்கிக் கொண்டனர். இதற்கு சட்ட முறையற்ற வழிகளையும் கையாண்டனர். அரசின் ஊழியர்களாக இருந்த அவர்கள் தமது காணிகளில் பயிரிடும் உழைப்பாளர்களாக மாற்றினர். இதனால் அரசின் அடிமைகளாக இருந்தோர், நில உடைமையாளர்களான தனிநபர்களின் அடிமைகள் ஆக்கப்பட்டனர். இதனை டச்சுக்காரர் அறிந்து கொண்டபோதும், பழைய நிலையை மீளக்கொண்டு வருவதற்குத் தேவையான தரவுகளை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குரிய நிர்வாகப் பொறிமுறையும் அவர்களிடம் இருக்கவில்லை. ஒவ்வொரு கிராமத்தினதும் காணி உடைமைகள் பற்றிய விபரங்களைப் பதிவு செய்தல், காணிகளுக்குரிய வரிகள், காணியோடு இணைந்த சேவைக் கடப்பாடுகள் என்பன பற்றிய பதிவுகளை செய்தல் வேளாளர்களின் சட்டமுறையற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் ஒரு வழிமுறையாக இருந்தது. 1674 ஆம் ஆண்டில் டச்சுக்காரர் யாழ்ப்பாணத்தின் நான்கு பிரிவுகளிலும் காணிப் பதிவு வேலைகளை ஆரம்பித்தனர்.

குறிப்பு : ‘Social History of a Dominant Caste Society: The Vellalar of North Ceylon (Sri Lanka) in the 18th Century, Social History of a Dominant Caste Society: The Vellalar of North Ceylon (Sri Lanka) in the 18th Century’, என்ற தலைப்பில் 1981 ஆம் ஆண்டு Indian Economic and Social History Review, xviii(3 and 4): 377-391 என்னும் இதழில் சின்னப்பா அரசரத்தினத்தால்  எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6604 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (13)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)