Arts
10 நிமிட வாசிப்பு

19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் சாதி

May 13, 2022 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

மொழிபெயர்ப்புக் கட்டுரை: க. அருமைநாயகம்

யாழ்ப்பாண மக்களின் பொருளாதார சமூக, சமய வாழ்க்கையில் சாதிமுறை முக்கிய பங்கினைப் பெற்றிருந்தது. அங்கு சாதிப் பிரிவுகள் பலவாக இருந்தன. உயர் சாதியான வேளாளர் முக்கிய வகிபாகத்தை பெற்றிருந்தனர். கோவியர், பள்ளர், நளவர் என்பன அடிமைச் சாதிகள் எனவும், அம்பட்டர், வண்ணார், கொல்லர், தச்சர், பறையர் ஆகியன குடிமைச்சாதிகள் எனவும் கருதப்பட்டன.

சாதிகள்  அகமணக் குழுக்களாகும். ஒரு சாதியினர் பிறசாதிகளுடன் சமபந்திபோசனம் வைத்துக்கொள்வதோ, விவாக உறவுகளை வைத்துக் கொள்வதோ கிடையாது. இவ்வழமைகள் சாதிகளின் சமய நம்பிக்கைகள் நோக்குகளிலும் வெளிப்பட்டன. ஒவ்வொரு சாதிக்கும் வழிபாட்டிற்குரிய வெவ்வேறு தெய்வங்கள் இருந்தன. தாம் வளர்க்கும் வீட்டு மிருகங்களுக்கு குறிசுடுதல் மூலம் சின்னங்களால் வேறுபடுத்தி அடையாளம் செய்தல், உடைகள், வழமைகள் என்பன சாதிக்குச் சாதி வேறுபட்டன.

போத்துகீசர், டச்சுக்காரர்காலம் (1505 – 1796)

போத்துக்கீசரும், டச்சுக்காரரும் யாழ்ப்பாண மக்களின் சாதி முறைமையிலும் வழக்கங்களிலும் தலையிடவில்லை. குறிப்பாக,  டச்சுக்காரர் ஆட்சியில் சாதிமுறை யாழ்ப்பாணத்தில் பலபடித்தரங்கள் கொண்டதாய் இறுக்கமடைந்தது. முன்பு மரபுவழமை என்ற வகையில் இருந்தவற்றை டச்சுக்காரர் தொகுத்துச் சட்டக்கோவை என்ற வடிவத்தை அளித்தனர். ஒவ்வொரு சாதியினதும் கடமைகள் என்ன, அவை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய சேவைகள் யாவை, உயர் சாதிகளுடன் குறிப்பாக வேளாளருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் போன்ற விதிமுறைகளை டச்சுக்காரர்  கோவைப்படுத்தினர். யாழ்ப்பாணத்தின் உடையார்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களையும் பிளக்காட் என்னும் கட்டளைகளையும் பார்த்தால் டச்சுக்காரரின் இந்த நடவடிக்கை பற்றிப் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, லோரன் பைல் (Lauren Pyl) என்னும் பெயருடைய டச்சு கவர்னர் வெளியிட்ட பிளக்காட் பின்வருமாறு பணிப்பு விடுத்தது.

சாதிய அடிப்படையிலான சில தொழில் பிரிப்புகள்

உடையணிதல் போன்ற விடயங்களில் தாழ்ந்த சாதியினர் உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் தம்மைப் பிறரில் இருந்து வேறுபடுத்தி அடையாளம் காட்டும் வகையில் உரிய உடையை அணிதல் வேண்டும். தலை முடியை வெட்டிவிடுவதோ, காதில் தோடுகள் அணிவதோ கூடாது. இதுபோன்ற கட்டளை தாழ்ந்த சாதியினர் மேற்கத்தேய பாணி உடையணிவதையும் தடுத்தது என்றே கருதலாம். சாதிப் பெயர்கள் அவற்றின் விதிமுறைகள் என்பன உத்தியோகப் பதவி நியமனக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட்டன. உதாரணமாக, வேளாளர் வேலாயிரர், யோன் ராமன்டன் மானிப்பாய் வாசி, மன்னார் பகுதியின் முதலாவது கணக்கப்பிள்ளையாக (Canne cappal) நியமிக்கப்படுகிறார் என்று 1761 ஆகஸ்ட் 10 ஆம் திகதிய நியமனக்  கடிதம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இங்கே வேலாயிரர்|, ராமன்டன் என்ற பெயர்கள் வேலாயுதர்| ராமநாதன் என்பவற்றின் திரிபாக இருக்கலாம்). உயர் சாதியினருக்கும் தாழ்ந்த சாதியினருக்குமிடையில் நீதி  நிருவாக விடயத்தில் பக்கச்சார்பு காட்டப்பட்டதை கவர்னர்களுக்கு கொடுக்கப்பட்ட  அறிவுறுத்தல்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். உயர் சாதியினரை அவர்களுக்குரிய மரியாதையோடு நடத்தும்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

போத்துக்கீசரும், டச்சுக்காரரும் இலங்கையை ஆட்சி செய்த போது தம்வருமானத்தை உயர்த்துவதிலேயே குறியாக இருந்தனர். ஆதலால் இருக்கும் சாதிமுறை நன்மைகளைக் கொடுத்தால், அதனை மாற்றுவதிலோ, அதில் தலையிடுவதிலோ அவர்கள் அக்கறை செலுத்தவில்லை. வருமானத்தை திறமையாக அறவிடுதலும் நிர்வகித்தலும் இருக்கும் முறையைத் தொடர்வதனால் சாத்தியமாகியது. அத்தோடு உயர் சாதியினரான சுதேசி உத்தியோகத்தர்களின் உதவியுடன் நாட்டை நிர்வகிப்பதில் விருப்பம் காட்டினர். சுதேசி அதிகாரிகளில் பெரும்பான்மையினர் உயர் சாதியினராவர். அவர்களின் சாதி விவகாரங்களில் தலையிடுவதோ, அவர்களின் அந்தஸ்தைக் குறைப்பதோ தமது நலன்களுக்குப் பாதகமானது என்பதை உணர்ந்தனர். அது தமக்கு ஆபத்தாகவும் முடியும் என்றும் கருதினர். மடப்பள்ளி என்னும் சாதியினரை பொறுப்பு வாய்ந்த பதவிகளில் நியமித்தபோது  தமது பதவிகள் அச்சாதியினருக்கு கிடைப்பதைக் கண்டு வேளாளர் சூழ்ச்சியிலும், கிளர்ச்சியிலும் ஈடுபட்டதற்கு உதாரணங்கள் உள்ளன.

போத்துக்கீசரும், டச்சுக்காரரும் மரபாக இருந்து வந்த ஒரு முறையை ஏற்றுக்கொண்டு அதனைப் பேணி வளர்த்ததோடு அதற்கு சட்ட அந்தஸ்தையும் கொடுத்தார்கள். தாம் பாதுகாத்த அந்த முறையைப் பிரித்தானியருக்கு விட்டும் சென்றார்கள். சுதேசிகளை, நாகரிகமயப்படுத்தும் வேலை என்னும் வெள்ளையர்சுமை (White man’s burden) என்ற கருத்து அக்காலத்தில் தோன்றவில்லை. பிரித்தானிய ஆட்சியிலும் கூட அது பிந்தியே வந்தது. முற்பகுதியில் அக்கருத்து இருக்கவில்லை.

பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்ப காலம்

பிரித்தானியர் சாதிமுறையை தொடர அனுமதிப்பது தான் மக்களைத் திருப்திப்படுத்துவற்கு புத்தியான வழி எனக் கண்டனர். அவர்கள் இயற்றிய சட்டப் பிரமாணங்களும் உயர் சாதியினரின் நலன்களைப் பாதுகாப்பதில் தீவிரம் காட்டின. சாதிமுறையை நிலைபெறச் செய்ய உதவின. பிரித்தானியர் ஆட்சியின் தொடக்கக் காலத்தில் தாழ்ந்த சாதியினர் கலகம் செய்தப்போது பிரித்தானியர் சட்டங்களை இயற்றி அவர்களைக் கட்டுப்படுத்தினர். உயர்சாதியினருக்குப் பணிந்துபோகும்படி கேட்டுக் கொண்டனர். 1806 ஆம் ஆண்டின் 10ஆம் இலக்கக் கட்டளைச்சட்டம் பின்வருமாறு விதித்தது.

தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்த யாவரும் உயர் சாதியினர் எல்லோருக்கும் பண்டைய வழக்கங்களின்படி அவர்களுக்கு உரிய மரியாதைகளை கொடுக்க வேண்டும்.  கோவியர், நளவர், பள்ளர் ஆகிய பிரிவினர்க்கும் உயர்சாதியினருக்கும் உரிமைகள், சலுகைகள் தொடர்பாக எழும்பிரச்சினைகள் பிணக்குகள் என்பன இம்மாகாணங்களில் இருந்து வரும் வழக்கங்கள், நடைமுறைகளுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்படும். 

சாதிய பிரிப்பு

இது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த அடிமை முறை சாதிமுறை என்பனவற்றைப் பிரித்தானியர் சட்டப்படி ஏற்புடையதாக்கியதைக் காட்டுகிறது. அத்தோடு பொது ஆவணங்களில் உத்தியோகத்தர்களின் சாதியினை குறிப்பிடும் வழக்கத்தை தொடர்ந்தனர். வெவ்வேறு சாதி உத்தியோகத்தர்களுக்கு வெவ்வேறான சீருடைகளை அணிய பிரித்தானியர் கட்டளையிட்டனர். முதலியார்கள் சாதியடிப்படையில் நியமிக்கப்பட்டனர். கோல்புறுக் ஆணைக்குழுவினர் குறிப்பிட்டதுபோல் அரசாங்கம் உயர்சாதியினருடைய, குறிப்பாக வேளாளரின் சாதி அந்தஸ்து அனுமானங்களுக்கு ஆதரவு கொடுத்தனர். 

19 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இங்கிலாந்து நாட்டில் புதிய சிந்தனைகள் பல தோன்றின. மரபை ஆதாரமாகக் கொண்டு நிலை பெற்றிருந்த நிறுவனங்கள் பகுத்தறிவுக்கும் நியாயம், நீதிக்கும் பொருத்தமற்றனவாக இருந்தன. அவற்றின் வலிமையை  கேள்விக்குட்படுத்தும் மனிதவாயச் சிந்தனைகளும், கிறிஸ்தவ சமயச் சிந்தனைகளும் இக்காலத்தில் பிரித்தானிய சாம்ராச்சியத்தின் கீழிருந்த அடிமைமுறையை எதிர்த்தன. அவ்வாறே இந்தியாவில் நிலவிய சதி  என்னும் விதவைகளை இறந்த கணவனின் சிதையில் வைத்துக் எரிக்கும் வழக்கம், அங்கு வளர்ந்த காடைத்தனம், என்பனவற்றை கண்டித்தும் விதவைகளின் மறுமணத்தை ஆதரித்தும் சீர்திருத்த சிந்தனைகள் பரவின. இதன்பயனாக 1844 ஆம் ஆண்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

Ceremony of hind widow with the body of her late husband

இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் அடிமை முறையை ஒழிப்பது இலகுவானதாக இருந்தது. உயர்சாதிகள் இதனைப் பற்றி அக்கறை காட்டவில்லை. அடிமை ஒழிப்புக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கவுமில்லை. மேற்கு இந்திய தீவுகள் போன்று பிரித்தானியர்களுக்கு யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட வகை நலன்கள் எதனையும் பாதுகாக்கும் தேவை இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் அடிமை முறையை ஒழிப்பதால் ஏதாவது பயிர் ஒன்றின் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை இருக்கவில்லை. விடுதலையளிக்கப்பட்ட அடிமைகள் வேலைகளிலும்,  பிற உயர்சாதிகளிலும் தங்கியிருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆகையால் அடிமை ஒழிப்பால் அடிமைச் சாதிகளுக்கு சமூக, பொருளாதார நன்மைகள் பெரிய அளவில் கிடைத்ததெனக் கூற முடியாது. யாழ்ப்பாணத்தின் குடிமைச்சாதிகளின் எண்ணிக்கை பதினெட்டு எனக் கூறப்படுகிறது. இச்சாதிகளுள் அம்பட்டர் வண்ணார் ஆகிய இருசாதிகளுக்கும் முக்கிய இடம் உள்ளது. ஏனெனில் வெள்ளாளர் சாதியினர் வீடுகளில் இவ்விருசாதிகளினதும் சேவை இல்லாமல் மங்கல, அமங்கலச் சடங்குகளை  நடத்த முடியாது. இவ்விரு சாதி ஆட்களும் பங்குபற்றாமல் நடத்தப்படும் விவாகம் சட்டமுறையானதன்று என்று கருதப்பட்டது. 1820 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இரு வழக்குகளில் (வழக்கு இலக்கம் 1.180 மற்றும் 1.103) அம்பட்டர், வண்ணார் என்ற இருவரும் சமூகமளிக்காது நடத்தப்பட்ட விவாகச் சடங்கு சட்டமுறையற்றது எனத் தீர்க்கப்பட்டது.

விநாயகர் கந்தர், எதிர் விநாயகர் முருகர் என்ற வழக்கில் விநாயகர் கந்தர் என்பவர் தன் சாதி பற்றி கீழ்நிலை நீதிமன்ற வழக்குத்தீர்ப்பில் சொல்லப்பட்டவை தவறானவை ஆதலால், தன்சாதி எது என்பது பற்றிய உண்மையை நீதிமன்று தெளிவாக்க வேண்டும் என்று கோரி மேன்முறையீடு செய்தார். வாதியின் தரப்பு வாதங்களைச் செவிமடுப்பதற்கு நீதிமன்றம் பொறுமையுடன் நீண்ட நேரம் செலவிட்ட பின்னர், நீதிமன்றால் கூறப்பட்ட சில கூற்றுக்களை உள்நோக்கற்றுச் சொல்லப்பட்டவை என்று குறிப்பிட்டு ரத்துச் செய்தது. தேசவழமைச் சட்டத்தின் பலத்தை இவை எடுத்துக் காட்டுவன. அக்காலத்தில் நீதிமன்றங்கள் சாதியின் இருப்பை கவனத்தில் எடுத்துக் கொண்டன என்பதை இத்தீர்ப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி

19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் சாதி தொடர்பாக அரசாங்கக் கொள்கை முன்னரை முற்றிலும் மாறுபட்ட ஒரு திருப்பமாக அமைந்தது. இது அக்காலத்தின் பொருளாதார சமூக சிந்தனை இம்மாற்றத்திற்கு தூண்டுதலாக இருந்தது. அரசாங்கம் முதலாளித்துவ சமூக அமைப்பை உருவாக்க முனைப்புக் கொண்டிருந்தது. சாதித் தடைகளை  அடிப்படையாக கொண்டு  சிலரை ஒதுக்கியும் விலக்கியும் வைப்பது உழைப்பாளரின் இடப்பெயர்வுக்கும் பெயர்ச்சிக்கும் தடையாக அமைவதோடு தாராண்மைவாத அரசின் வளர்ச்சியைத் தடுக்கும் எனக் கருதப்பட்டது. குறிப்பாக, அரசாங்கப் பதவி நியமனங்கள் சாதியடிப்படையில் வழங்கக்கூடாது அது முன்னேற்றத்திற்குத் தடை எனக் கருதப்பட்டது. கோல்புறூக், சாதி அடிப்படையில்  வேலை வழங்குவதற்கு எதிரான கருத்தை தெரிவித்தார். வேலை நியமனங்கள் ஒவ்வொருவரும் கல்வியை பெறும் வாய்ப்பை எந்தளவு பயன்படுத்திக் கொண்டனர் என்பதைப் பொறுத்தே இருக்க வேண்டும் என்றார். இரண்டாவது விடயம் அவர்கள்  மக்களிடம் வேரூன்றியுள்ள எதிர்ச்சார்புகளில் (Prejudices) இருந்து எந்தளவுக்கு விடுபட்டவராய் உள்ளார்கள் என்று பார்க்க வேண்டும். மூன்றாவதாக பதவிகளில் நியமிக்கப்படுவோர், சாதியடிப்படையிலான அநாவசியமான பேதங்களையும் அநீதியான வேறுபாடுகளையும் களைவதற்கு அரசாங்கத்தின் கருத்துக்களோடு ஒத்துப்போகக் கூடியவரா? என்பதைப் பார்க்க வேண்டும் என்று கூறினார். கோல்புறூக்கின் மேற்கூறிய நிலைப்பாடு அன்று வரை இருந்து வந்த போக்கில் இருந்து பிரித்தானிய அரசாங்கம் விலகிச் செல்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது என்பதைக் காட்டுகிறது. ஆகையால் சாதியை அடிப்படையாகக் கொண்ட கோரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாது புறக்கணிக்கத் தொடங்கியது. ராஜகாரிய முறையை அரசாங்கம் ஒழித்தமையால் தாழ்ந்த சாதியினர் தொழிலுக்காகச் சுதந்திரமாக பிற இடங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதன் பயனாக நீதிமன்றுகள் சாதியடிப்படையிலான கடப்பாடுகளை சார்ந்த கோரிக்கை மனுக்களை கேள்விக்குட்படுத்தின.  சாதி தொடர்பான விடயங்கள் நீதிமன்றங்களால் சட்ட நோக்கில் பார்க்கப்பட்டன. சாதிக்கடப்பாடுகள் பற்றிய பிணக்குகளை நீதிமன்றுகள் ஒப்பந்தம் என்ற சட்ட எண்ணக்கருவின் நோக்கில் அணுகின. தவசி கந்தன் எதிர் வயிரவன் கந்தனும் பிறரும் என்ற வழக்கில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டது. இவ்வழக்கின் எதிராளிகளான அம்பட்டர் ஒருவரும் வண்ணார் ஒருவரும் வழக்காளியின் வீட்டுக் குடிமைச்சேவகர் ஆவர். வழக்காளி தவசி கந்தன் தனது மகளிற்கு காதில் தோடு அணியும் சடங்கை ஒழுங்கு செய்திருந்தார். அந்தச் சடங்கில் எதிராளிகள் இருவரும் சட்டத்திற்கு மாறாக பங்குபற்ற மறுத்து விட்டனர்.

பானை விற்பனை செய்வோர்

சடங்கில் பங்குபற்ற வந்திருந்த வழக்காளியின் உறவினர்களும் நண்பர்களும் மேற்படி குடிமக்கள் இருவரும் இல்லாத சடங்கு வீட்டில் சாப்பிட மாட்டோம் என்று கூறியதோடு வழக்காளிக்கு நன்கொடையாக எதுவும் கொடுக்காமலே திரும்பினர். இதனால் வழக்காளிக்கு 1 பவுண் 4 சிலிங் பண நட்டம் ஏற்பட்டது. மாவட்ட நீதிமன்றம் எதிராளிகளை குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கியதோடு, நட்டத்தை செலுத்தும் படியும் உத்தரவிட்டது. இதற்கு எதிரான மேன்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் (சுப்பிரீம் கோர்ட்) மாவட்ட நீதிமன்றின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ரத்து செய்ய தீர்ப்பளித்தது. எதிராளிகள் குறித்த சடங்கில் பங்குபற்ற வேண்டும் என்ற விசேட ஒப்பந்தம் எதுவும் தரப்பினரிடையே இருக்கவில்லை. ஆதலால் அவர்களுக்கு பங்கு பற்ற வேண்டிய  ஒப்பந்தக் கடப்பாடு இருக்கவில்லை. நன்கொடை ஒருவர் தம் சுயவிருப்புப்படி கொடுப்பது. அதை அறவிட்டுக் கொள்வதற்குச் சட்டத்தில் இடம் இல்லை. ஆகையால் எதிராளிகள் நட்டஈடு கொடுக்கும் தேவை இருக்கவில்லை. நீதிமன்றின் இத்தீர்ப்பில் வெளிப்படும் சிந்தனை அதுவரை காலமும் இருந்த சிந்தனைப் போக்கில் இருந்து விலகிச் செல்வதாக இருந்தது. டச்சுக்காரர் போன்று அல்லாமல் ஆங்கிலேய அரசாங்க அதிபர்கள் சாதிமுறையை ஏற்றுக் கொள்ளாது நிராகரிக்கத் தொடங்கினர். நீண்டகாலமாக அரசாங்க அதிபராக இருந்த பீ.ஏ.டைக் என்பவர் சாதிவேறுபாடுகள் காரணமாக எழும் பிரச்சினைகள் பற்றி தனக்கு அறிக்கைகள் அனுப்ப வேண்டும் என்று விதானைமாருக்குக் கட்டளையிட்டார்.

கத்தோலிக்கர்களும், கிறிஸ்தவர்களும்

உரோமன் கத்தோலிக்கர், லூதர் மார்க்கத்தினர், புரட்டாஸ்தாந்திய கிறிஸ்தவர்கள் ஆகியோர் சாதிமுறையை எந்த உருவிலும் ஏற்றுக் கொள்வதை நிராகரித்தனர். புரட்டஸ்தாந்திய கிறிஸ்தவ மிசனரிகள் கருத்துப்படி தனிமனிதன் ஒருவனிடம் உலகியல் விடயங்களில் உயர்வு அடைவதற்கான ஆற்றல் உள்ளது என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. இதனை நிராகரிப்பது புரட்டஸ்தாந்து  அறக்கோட்பாட்டுக்கு மாறானது என்றனர். அமெரிக்க மிசனரிகளும் வெஸ்லியன் திருச்சபையினரும் இத்தகைய கருத்தை உடையவரே. அமெரிக்க மிசனரிகள் சாதிக்கு எதிரான முனைவு தங்கள் எதிரே உள்ள பணிகளில் முதன்மையானது என்ற கருத்தை வெளிப்படுத்தினர்.

மிசனரிகளின் மதமாற்றும் பணிக்கு சாதியமைப்பு தடையாகவும் இருந்தது. ஆரம்பகட்டத்தில் மிசனரிகள் உயர்சாதியினரின் நிர்ப்பந்தங்களிற்கும், அழுத்தங்களுக்கும் விட்டுக் கொடுத்தனர்.  ஆயினும் மிக விரைவிலேயே அவர்கள் நாம் அத்தகைய போக்கை தொடரமாட்டோம், சாதியத்தை சகித்துக் கொள்ளப்போவதில்லை என்பதை வெளிப்படுத்தினர். அமெரிக்க மிசனரிகள் தொடக்கத்தில் தமது விடுதியில் உயர் சாதி மாணவர்களுக்குத் தனியான சமையல்  அறையை வைத்திருந்தனர். இது வட்டுக்கோட்டைச் மிசனரிக்கு வெளியே இருந்தது. விரைவில் அதனை பாடசாலைவளவுக்கு மாற்றினர். இதுபோன்ற பிரச்சினைகள் தமிழ் மாவட்டங்களுக்கு மட்டும் உரியனவாக இருக்கவில்லை. தெற்கிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தன. மாட்டிறைச்சி உண்ணும் போதகரையும் யாழ்பாணத்தவர்கள் தீண்டத்தகாத சாதிக்குச் சமனாகவே கருதினர். கத்தோலிக்க மிசனரியும், லூதரன் மிசனரியும் சாதி தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இது அவர்கள் எதிர்நோக்கிய நெருக்கடியைப் புரிந்துகொள்ள உதவும். இவ்விரு  மிசனரிகளும் சமூகவிடயங்களில்  பழமைப் போக்குடையன. அவை தமது சொந்த விடயங்களிலேயே அதிகம் அக்கறை கொண்டிருந்தன. ஐரோப்பா போன்றே, உள்ளக திருச்சபை விடயங்களில் கவனம் செலுத்திய அவர்கள் சமூக அரசியல் சீர்திருத்தங்களில் அக்கறை கொள்ளவில்லை.

போர்த்துக்கீசர் காலத்திலும், டச்சுக்காலத்திலும் திருச்சபை சாதிமுறையைச் சகித்துக்கொள்ளும் போக்கைக் கொண்டிருந்தது. அவர்கள் வெவ்வேறு சாதிகளுக்குத் தனித்தனியாக கோவில்களைத் தாபித்தனர். டச்சுக்காரர் சில சாதிகளை வெவ்வேறு இடங்களில் குடியேற்றினர்.

19 ஆம் நூற்றாண்டின் புரட்டஸ்தாந்திய மிசனரிகள் ஆங்கிலக் கல்வி, பைபிளைப் படிப்பித்தல் ஆகிய நடைமுறைகள் மூலம் சுதேசிகளிற்கு அறிவுச்சுடர் கொழுத்த  முயன்றனர். அறிவின் மூலமாக அவர்கள் தாமாகவே உணர்ந்து கிறிஸ்தவத்திற்கு மாறுவர் என எதிர்பார்த்தனர். சமயம் மாறியவர்களைச் சாதியைத் துறக்கும்படி வேண்டவில்லை. செரம்பூர் மிசனரிகள் இவ்வாறு கேட்டனர். அங்கு மிசனரிகள் தம் பாடசாலைகளில்  படிக்கும் மாணவர்கள், வகுப்பில் ஒன்றாக இருந்து கற்றல், பொதுக்கிணறுகளில் இருந்து குடிநீரைப் பெற்றுக் குடித்தல், உயர்சாதிப்பிள்ளைகளும், தாழ்ந்த சாதிப்பிள்ளைகளும் ஒன்றாக இருந்து உணவு அருந்துதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினர்.  மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஆசனங்களில் பேதம் இருக்கவில்லை. அக்காலத்தில் இந்நடைமுறைகள் புரட்சிகரமானவை என்று கூறத்தக்கனவாக இருந்தன. இதன் பயனாக இந்துக்களான பெற்றோர் தம் பிள்ளைகளைப் பாடசாலைகளில் இருந்து திருப்பி அழைத்துச் சென்றனர். மாணவர்களும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். சுதேசிய ஆசிரியர்களும் மாணவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஓரிடத்தில் அவர்கள் போட்டிப் பாடசாலையை ஆரம்பித்தனர்.

மிசனரிகள் மேற்கூறிய வகையான அழுத்தங்களுக்கு மசிந்து கொடுக்கவில்லை. எதிர்ப்புக்களும் நீண்ட காலத்திற்குத் தொடரப்பட முடியவில்லை. மாணவர்கள் விரைவில் வகுப்புக்களுக்குத் திரும்பினர். அவர்கள் சாதிச்சார்பு காரணமாக எதிர்த்துப் போராடும் மனநிலையில் இருக்கவில்லை. அவ்விதம் செய்தால் கல்வி பெறும் வாய்ப்பைத் தாம் இழப்போம் என்பதை உணர்ந்தனர். இந்தியாவைப் போன்று அல்லாமல் யாழ்ப்பாணத்தில் அன்று மிசனரிகள் ஆங்கிலக் கல்வியை ஆதரித்தனர். சுதேசப் பாடசாலைகளிலோ அல்லது அரசாங்கப் பாடசாலைகளிலோ அன்று தரமான கல்வியைப்பெற முடியவில்லை. ஆகையால் வரலாற்றில் முதல் தடவையாக உயர்சாதியினர் தம்வீட்டுக்கு வெளியே பொது இடத்தில் சாதி தொடர்பான அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொண்டனர்.

இந்துக்கள்

மிசனரிகளின் பங்களிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு அவர்களின் நடவடிக்கைகளை இந்துக்களின் நடவடிக்கைகளுடன் ஒப்பிடுதல் பயனுடையது மண்ணின் மைந்தர்களான, இந்துக்களில் உயர்சாதியினரோ அல்லது தாழ்ந்த சாதியினரோ கிறிஸ்தவர்கள் செய்த பங்களிப்புக்கு நிகராக குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதனையும் செய்யவில்லை. அவர்கள் மிசனரிகளுக்கு ஆதரவைக் கூட வழங்கவில்லை. இந்தியாவை நோக்கின்,  அங்கே உயர் சாதி இந்துக்கள் சாதி எதிர்ப்புக்குத் தலைமை தாங்கினர். ராம்மோகன் ராய் என்னும் பிரம்மசமாசத்(பிரம்ம சமாஜம்) தலைவர் இரகசிய சங்கத்தை நடத்திய பாபா பத்மன்ஜி, தாதோபா பதுரங் என்போரும் சாதியை எதிர்த்தனர். பிரமஹம்சசபை என்ற அமைப்பும் சாதி எதிர்ப்புக்கு ஆதரவு வழங்கியது. அது மட்டுமல்லாமல் சாதி எதிர்ச்சார்புகளுக்கு எதிராக தாமாகவே போராட்டம் நடத்தின. யாழ்ப்பாணத்தில் இந்து சமய இயங்கங்கள் இந்தியாவின் இயக்கங்கள் போன்று விரிவான தளத்தில் மக்கள் யாவரையும் உள்ளடக்கியதாய் அமையவில்லை. இந்தியாவின் இயக்கங்கள் சமயவிடயங்களில் மட்டும் தம்கவனத்தைக் குறுக்கிக் கொள்ளவில்லை. அவை சமூக நிறுவனக் கட்டமைப்புக்களான சாதிப் படித்தர அமைப்பு, பாலின சமத்துவமின்மை, தீண்டாமை போன்றவற்றை மறுசீரமைக்க முயன்றன.  இந்திய வழக்கங்கள் நிலைத்திருப்பதன் காரணம் இந்து சமயம் அவற்றுக்கு அங்கீகாரமும், ஆசீர்வாதமும் வழங்குவதுதான் என்றும் கூறினர். யாழ்ப்பாணத்தின் சீர்திருத்த வாதிகளிடம் அவ்வாறான எண்ணம் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தின் சமய சீர்திருத்தவாதிகள் மிசனரிகள் சாதிக் கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதாகக் குற்றம் சாட்டியதுடன், தங்கள் பிள்ளைகளை மிசனரிப் பாடசாலைகளுக்கு ஆங்கிலம் கற்பதற்கு அனுப்பிய பெற்றோர்களைக் கேலி செய்தனர். மிசனரிப் பாடசாலைகளுக்குச் சென்று ஆங்கிலம் கற்றோர் தம்மை உயர் சாதியினர் என்று கூறிக் கொள்ள அருகதையற்றோர் எனவும் அவர்கள் கண்டனம் செய்தனர்.

இந்துப் பாடசாலைகளில் தாழ்ந்த சாதிப் பிள்ளைகளுக்கு படிப்பதற்கு அனுமதி கிடைத்தபோது மேற்குறித்த பின்னணியில் அவர்களது நிலை எத்தகையதாக இருந்தது என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம். 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் தாழ்ந்த சாதிப்பிள்ளைகளும் இந்துப் பாடசாலைகளில் அனுமதி பெற்றனரேனும் 1930களில் கூட அப்பிள்ளைகளுக்கு சம ஆசனம் வழங்குவதற்கு இந்துப் பாடசாலைகள் முன்வரவில்லை.  1929 ஆம் ஆண்டில் கல்வி விதிக்கோவையின் படி அரசாங்க உதவி பெறும் பாடசாலைகளில் சாதி முதலிய பேதங்கள் காட்டப்படக் கூடாது என அறிவிக்கப்பட்டது. இவ்விதி அமுல் செய்யப்படுவதை ஆசிரியர்கள் கூட எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான எதிர்ப்பு இயக்கத்தின்போது 15 பாடசாலைகள் எரிக்கப்பட்டன.  பாடசாலைகளில் இருந்து தம்பிள்ளைகளை உயர் சாதி இந்துக்கள் விலக்கிக் கொண்டதால் மாணவர் எண்ணிக்கை பல பாடசாலைகளில் வீழ்ச்சியுற்றது. அரசாங்க உதவி பெறாத பாடசாலைகள் கூட அமைக்கப்பட்டன.

சேர்.பி. அருணாசலம்  போன்றவர்களே சாதியை ஒழிக்க முடியாது என்று நம்பினார்கள். ஏனெனில் தன்சாதிக்குள்ளேயே திருமண உறவை  வைத்துக்கொள்ளுதல், தனது சாதியுடனேயே சமபந்திபோசனம் வைத்துக்கொள்ளல் என்ற இரண்டும் தனிப்பட்ட விடயங்கள். இதில் சட்டம் இயற்றி அரசாங்கம் தலையிடுதல்  இயலாத காரியம்  என்று அவர்கள் கருதினர். சாதியை ஒழிப்பதற்கு எதுவும் செய்யப்படவில்லை என்பது 1898 இல் சட்ட சபைக்கு ஒரு பிரதிநிதியாக டாக்டர்.றொக்வூட் என்ற வேளாளரை நியமித்த போது உறுதியாயிற்று. சட்டசபையின் படித்த இலங்கையர் பிரதிநிதித்துவத்திற்காக நடந்த தேர்தலில் சாதி ஒரு காரணியாகச் செயற்பட்டதென்றதொரு கதை கூட உலவிற்று.

மாற்றத்திற்கான மறைமுகக் காரணிகள் பலவும் செயற்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் பொதுத்துறை நியமங்களைச்செய்யும் போது சாதியடிப்படையிலான பாகுபாட்டைச் செய்வதில்லை என்ற முடிவுக்கு அரசாங்கம் வந்தது. அடிமை முறை ஒழிக்கப்பட்டதும் கட்டாய ஊழியம் இல்லாதொழிக்கப்பட்டதும்  தாழ்ந்த சாதியினர் தொழில் தேடிப் பிற இடங்களுக்குச் செல்வதற்கு வழிசெய்தது. தமது மரபுவழித் தொழில்களைக் கைவிட்டு நல்ல கூலியை உழைக்கக்  கூடிய  தொழில்களை தேடிச்செல்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அரசாங்க பொது வேலைப் பகுதியில் வீதியமைப்பு, மிசனரிப் பாடசாலைகளின் கட்டிடங்கள் கட்டுதல், போன்ற வேலைகள் காரணமாக கூலி உழைப்புக்கான கேள்வி அதிகரித்தது. தொழிலாளர்களின் கூலி ஐம்பது வீதத்தால் அதிகரித்தது. இக்காரணத்தினால் யாழ்ப்பாணத்தில் உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அதிகரித்தன. கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்வோரும், மட்பாண்டம் வனைவோர், இரும்பாயுதங்ளைச் செய்யும் கொல்லர், பொற்கொல்லர் ஆகியோரும் தம் உற்பத்திப் பொருட்களைப் பணத்திற்கு விற்பனை செய்தனர். இதனால் வேளாளரில் முழுமையாகத் தங்கியிருக்கும் நிலை ஓரளவிற்கு மாறியது. ஏனைய சாதியினரும் பொருள் பலம் உடையவர்களாகத் தலைநிமிர முடிந்தது. இதனால் அவர்கள் உள்ளத்தில் சுதந்திர உணர்வும் தாம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வும் தோன்றியது.

முடி திருத்துவோர்

வெவ்வேறு சாதிகளும் உடையணிந்த முறையிலும், திருமணம் மரணம் முதலிய சடங்குகளை நடத்திய முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. தாழ்ந்த சாதியினர் தமது மரண ஊர்வலத்தில் மேளம் அடித்தல், பிணத்தை எரித்தல் ஆகிய வழங்கங்களைப் புகுத்தினர். இது உயர்சாதியினருக்கு எரிச்சலை ஊட்டியது. அவர்கள் மூர்க்கத்தனமான எதிர்ப்பில் ஈடுபட்டபொழுது, கலவரங்கள் வெடித்தன. அமைதி குலைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இத்தகைய கலவரங்கள் அரசாங்க  நிர்வாகத்திற்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தின. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டிலும் 1950கள் வரை அரசாங்க அதிபர்களின் அறிக்கைகளில் இவ்வாறான சாதி அடக்கு முறைப்பிரச்சினை பற்றிக்  குறிப்பிட்டுள்ளது.

முன்னர் குறிப்பிட்டது போல் வெவ்வேறு சாதிக்குழுக்கள் செய்து வந்த தொழில்களில் மாற்றங்கள் ஏற்பட்டுவந்தன. பறையர்கள் சவக்குழிகள் வெட்டுதல், பிணத்தைச் சுடுதல், ஆகிய வேலைகளைச் செய்வதைக் கைவிட்டனர். கோவியர், நளவர், பள்ளர் இவ்வேலைகளைச் செய்யலாயினர், மரபுவழக்கப்படி மேசன் வேலையை கல்தச்சர் செய்து வந்தனர். பின்னர் இத்தொழிலுக்கு உயர்ந்த கூலி வழங்கப்பட்ட போது கோவியர், நளவர், பள்ளர் ஆகியோர் இவ்வேலையை விரும்பி செய்யத் தொடங்கினர். ஆயினும் உயர்சாதியினர், தாழ்ந்த சாதியினருக்கு என விதிக்கப்பட்டிருந்த தொழில்களை செய்ய முன்வரவில்லை. அவர்கள் உயர் தொழில்களையும் எழுதுவினைஞர் தொழிலையும் நாடிச் சென்றனர்.

கல்வி முன்னேற்றமும் நாகரிக வளர்ச்சியும் சாதிமுறையின் அழிவுக்கு வழிவகுக்கும் என சிலர் நம்பினர். கிறிஸ்தவ மிசனரிகள் இக்கருத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு அமைய நடைமுறையில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்பதனால் அவர்களின் பணியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுதல் ஆகாது. அவர்கள் உண்மையான விசுவாசத்தோடு பணியாற்றினார்கள். ஆனால் அவர்கள் பிரச்சினையினைச் சரியாக  மதிப்பீடு செய்யத்தவறிவிட்டார்கள். சாதிய எதிர்ச்சார்புகளுக்கும் அதன் தீங்குகளுக்கும் நிவாரணமாக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளூர் மக்களின் பரந்த ஆதரவைப் பெறவில்லை.

மேற்குமுறைக் கல்வி தனது முழுமையான தாக்கத்தை ஏற்படுத்திய யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியம் நீடித்தது. விவேகானந்தர் கூறியது போல் சாதி சமயத்தின் அங்கமன்று கௌதம புத்தர் தொடக்கம் ராஜ ராம் மோகன் ராய் வரை கிளர்ச்சிவாதிகள் சாதியை சமயத்தின் ஓர் அங்கமாகப் பார்த்தனர். இது தவறு என்றே தெரிகிறது. கிறிஸ்தவ மிசனரிகளும், இதே தவறையே செய்தனர். கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களே சாதியின் பிடியில் இருந்து மீளமுடியாதவர்களாயினர். பௌத்தம் சாதிக்கு எதிரான கொள்கை உடையதேனும், அங்கும் சாதி இருந்தது. இருப்பினும் எதிர்ச்சார்புகளும், தீங்குகளும் பௌத்தத்தில் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தன.

முதலாளித்துவத்திற்கு முந்திய நிலமானிய முறையின் படித்தர அமைப்பு சாதியை நிலைபெறச் செய்தது. 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்கள் பொருளாதாரக் கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. மக்களின் சிந்தனையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழவில்லை. யாழ்ப்பாணத்தவர்களுக்கு அரசாங்க சேவை ஒரு தொழில் துறையின் இயல்புகளைப் பெற்றிருந்தது. ஆயினும் இருக்கும் நிலைமைகளில் முன்னேற்றத்தை  இது ஏற்படுத்தவில்லை. புதிதாகத் தாம் பெற்றுக்கொண்ட அந்தஸ்தையும் தகுதியையும் நிலைபேறுடையதாக்குவதற்கு இவர்கள் அரசாங்கசேவையைப் பயன்படுத்தினர். மேற்கு நாட்டவரைப் பாவனை செய்தனர். பணம் குவிந்தது, அந்தஸ்தை காப்பாற்றும் வகையிலான திருமணங்களை செய்து கொள்வது, சமூகக் குழுக்களின் கலப்பிற்கு வழிவகுத்திருக்கும்.  ஆயினும் யாழ்ப்பாணம் ஒரு சிறிய பிரதேசமாகையால் இத்தகைய கலப்பு ஏற்படவில்லை. குடும்பப் பிணைப்புக்கள் மிகவும் பலமாக இருந்தன. இந்த முறைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தவர்கள் சாதியில் இருந்து விலக்கி வைக்கப்படும் நிலை தோன்றியிருக்கும். அது புதுச்சாதியொன்றை உருவாக்கியிருக்கும்.  யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே சென்ற பொழுது உயர்சாதியினர் பிற சாதியினருடன் சேர்ந்து பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஊருக்குத் திரும்பியப்போது அவர்கள் பழைய வழமைகளை  இறுகப் பற்றிக்கொண்டனர்.

19 ஆம் நூற்றாண்டின் முடிவில் யாழ்ப்பாணத்திற்கு நவீனத்துவம் வந்து சேரவில்லை. கண்டிய மாகாணங்களைப் போன்று வெளியாட்களின் வரவால் சமூக அமைப்பில் மாற்றங்கள் யாழ்ப்பாணத்தில் ஏற்படவில்லை. யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அபிவிருத்தி முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. மலாயாவில் இருந்தும், தொடுவாய் குடியிருப்பக்களில் இருந்தும், பர்மா, இந்தியா, கொழும்பு போன்ற இடங்களில் இருந்தும்  தன் கிராமத்திற்குத் திரும்பி வந்த யாழ்ப்பாணத்தவர் தம் கிராமமே தமது பலமான நிலைக்களம் என்பதை உணர்ந்தனர். தம்சாதியையும் அந்தஸ்தையும் உறுதியாகப் பற்றி நின்றனர்.

தாழ்ந்த சாதியினர் இடையிடையே தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளிப்படுத்தினரேனும் தம்மை ஓரணியில் திரட்டிக்கொண்டு சாதிப் பாரபட்சத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடக் கூடிய திறத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. அதாவது உயர்சாதியினருக்கு எதிராகக் கிளர்ந்தெழவில்லை. இருந்தப்போதும் சாதிமுறைமையில்  குறிப்பிடத்தக்க தாக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது. அது நிலைகுலைந்து ஓரளவு நெகிழ்ச்சியடைந்திருந்தது, சேர்.பி.அருணாசலம் 1901 சனத்தொகை அறிக்கையில் கூறியிருப்பது  இதனை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. தாழ்ந்த சாதியினரின் போராட்டங்களுக்குப் பின்னால்  உள்ள பலம்மிக்க சக்தியினை வேளாளர் கண்டுகொள்ள வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அரசியல் குழப்பங்கள் சின்னஞ்சிறு விடயங்களை ஒட்டி எழலாம். ஆயினும் உண்மையில்  அவை சிறிய விடயங்கள் அல்ல என்று அரிஸ்டாட்டில் கூறினார்.  சாதியின் உண்மையான இலட்சியம் எது என்பது மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். உயர் சாதி என்பதன் இருப்பின் நியாயத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். உயர்சாதி உயர் லட்சியங்களை உடையது. அவர்களிடம் உயர்ந்த ஆன்மீக  அறிவுசார் பண்பாடு உள்ளது. கடமை மீது பற்றும் அவர்களுக்கு உண்டு. சாதியில் குறைந்தவரை விட உயர்சாதியினரிடம் இப்பண்புகள் நிறையவே உள்ளன. ஆகையால் தம் பண்புக்கேற்ப நடத்தையில் அவர் மேம்பட்டு நிற்காவிடினும், மாற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொள்ளாவிடினும் சலுகைபெற்ற உயர்சாதியின் வீழ்ச்சி வெகு தூரத்தில் இல்லை.

ஒரு பெருமை மிக்க இனத்தை

கட்டியெழுப்புவதே பணி.

வீண் பெருமை பேசுவதோ

முட்டாள் தனமாக நடந்து கொள்வதோ

வேண்டப்படாதவை.

இருபதாம் நூற்றாண்டு இலங்கையின் அனுபவப்பதிவுகள் (Twentieth Century Impressions of Ceylon) என்ற நூலின் ஆசிரியர் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பின்வருமாறு குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட யாழ்ப்பாணம் இன்று எவ்வளவோ மாறிவிட்டது. பணம் எல்லா மட்டங்களிலும் புரள்கிறது. அதனால் சனங்கள் மத்தியில் சுதந்திர உணர்வு பரவிச் செறிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் அரசாங்க அதிபர் ஒருவரால் எழுதப்பட்ட வருடாந்த நிர்வாக அறிக்கையில் சாதி என்ற விடயம் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் பந்தி வருமாறு.

யாழ்ப்பாணச் சுதேசிகள் சமூகத்தில் பெருமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பழமை மனப்பான்மையுடையோர் இதையிட்டு தமது அதிருப்தியையும் விசனத்தையும் வெளிப்படுத்துகின்றனர். தாழ்ந்த சாதி என அழைக்கப்படுவோரில் பலர் பணக்காரர்களாகின்றனர். அவர்களிடம் சொத்துக்கள் சேருகின்றன. இதனால் அவர்களுள் பலர் இயல்பாகவே பழைய வழங்கங்களைப் பின்பற்ற மறுக்கின்றனர். ஆபரணங்களை அணிதல், வண்டிகளில் அமர்ந்து பிரயாணம் செய்தல், திருமணங்களின் போதும் பிற வைபவங்களிலும் மேள வாத்தியங்களை முழக்குதல் போன்றவற்றுக்கு இருந்து வந்த தடைகளை அவர்கள் மீறுகின்றனர். நளவர்கள், கோவியர்கள் என்ற இரு சாதியிலும் இருந்து பலர் கிறிஸ்தவத்திற்கு மாறுகின்றனர். அவர்களின் அடுத்த நடவடிக்கை ஆபரணங்களைப் பூண்டு வேளாளாரின் நடை உடைபாவனைகளைத் தாமும் பின்பற்றுவதுதான் என்பது வேளாளர்களுக்கு நன்கு தெரியும். இதனால் அற்பத்தனமான முறையில் துன்புறுத்தல்களைச் செய்தல், சச்சரவுகளைக் கிளப்புதல், போன்றனவும் நீதிமன்ற வழக்குகள், பொலிஸ் மூலம் வழக்குத்தொடுத்தல் போன்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன. பலசந்தர்ப்பங்களில் கலவரங்களும், இரத்தக் களரியும் கூட ஏற்படுகின்றன.|

குறிப்பு : ‘Caste in Jaffna in the 19th Century’ என்ற தலைப்பில் 2000 ஆம் ஆண்டு Politics and Life in Our Times, Vol. 11, pp. 1699-1709. (Colombo: Une Art Pvt) எனும் நூலில்  க. அருமைநாயகம் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

21294 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (17)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)