Arts
7 நிமிட வாசிப்பு

வனவளமும் வன முகாமைத்துவமும்

September 13, 2022 | Ezhuna

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள் தொடர்பாக தெளிவுடுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு – கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.

நிலப்பயன்பாட்டின் அடிப்படையில் 1,888,607 ஹெக்டெயர் நிலப்பரப்பை கொண்ட வடக்கு -கிழக்கு மாகாணங்களில், வடமாகாணம் 889,007 ஹெக்டெயர் நிலப்பரப்பையும், கிழக்கு மாகாணம் 999,600 ஹெக்டெயர் நிலப்பரப்பையும் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் கிழக்கு மாகாணம் அதிக நிலப்பரப்பை கொண்டிருப்பதுடன், நீர்ப்பரப்பு என்ற வகையில் வடமாகாணத்தில் 8% சதவீதமும், கிழக்கு மாகாணத்தில் 6.35 சதவீதமுமாக மொத்தமாக இவ்விரு மாகாணங்களிலும் 14.35 சதவீதம் நீர்ப்பரப்பாகக் காணப்படுகின்றது. நிலப்பாவனையின் அடிப்படையில் வடமாகாணத்திலேயே அதிக காடுகள் காணப்படுகின்றன. 735,413.67 ஹெக்டெயர் அடர்காடுகள் இவ்விரு மாகாணங்களிலும் காணப்படுகின்றன. வடமாகாணத்தில் 459,129.67 ஹெக்டெயரிலும், கிழக்கில் 276,286 ஹெக்டெயரிலும் அடர்காடுகள் காணப்படுகின்றன. இவைதவிர மனிதப் பாவனைக்குட்பட்ட காணிகள் என்ற வகையில் வடக்கில் 75,749.79 ஹெக்டெயரிலும், கிழக்கில் 74,942 ஹெக்டெயருமாக மொத்தம் 179,031.38 ஹெக்டெயர் பரப்பில் காடுகள் காணப்படுகின்றன.

இலங்கையின் காடுகள்

காடுகளின் வளங்கள் இவ்விரு மாகாணங்களிலும் அதிகம் காணப்பட்டிருந்தாலும் அதனை வருமானம் தரும் வளமாகப் பாவிக்கும் தன்மை குறைவாகவே உள்ளது. காடுகளை பொருளாதார வளமாகக் கொண்ட மலேசியா, பர்மா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்தே இன்றைய சர்வதேசச் சந்தையின் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. எனினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காடுகள் பொதுக்காடுகளாக மட்டுமே காணப்படுகின்றன. வனபரிபாலன திணைக்களம் மற்றும் அரசமரக்கூட்டுத்தாபனம் ஆகிய இரு அரச அமைப்புக்கள் இதன் முகாமைத்துவத்துக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. வனபரிபாலன திணைக்களத்தின் பிரதான நோக்கம், காடுகளைப் பாதுகாத்து இயற்கை – பசுமைப் போர்வையை உறுதி செய்வதாக இருந்தப்போதும், மனிதப் பாவனைக்குத் தேவையான மரங்களை பெற்றுக்கொடுப்பதில் இது பாரிய பங்களிப்பை வழங்கவில்லை. உள்ளூரில் தேவைப்படும் மரங்களின் கேள்விக்காக மனிதர்கள் உருவாக்கிய மனிதக் காடுகளில் மரங்களை அறுப்பதற்கான அனுமதியினை பிரதேச செயலகங்கள் வழங்குகின்றன அல்லது பனை அபிவிருத்திச்சபை, தெங்கு அபிவிருத்திச்சபை என்பன வழங்குகின்றன. காட்டு மரங்கள் அறுப்பதற்கான அனுமதியை வனப்பாதுகாப்பு திணைக்களம் வழங்கி வருகின்றது.

மரங்கள் வெட்டப்படும் போது, முதல் விளைவு பொருளாக மட்டுமே அது பாவனைக்குட்படுத்தப்படுகின்றது. அதனால், வெட்டப்பட்ட மரத்தின் பிரதான பாகம் மட்டுமே பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படுகின்றது. மீதமுள்ள அனைத்தும் அப்படியே விடப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி செயற்கை முறையிலான கன்வஸ் போன்ற மரங்களை இலங்கையில் தயாரிப்பது கிடையாது. இந்தச் செயற்கை மரங்கள் தயாரிக்கும் தொழிற்துறை மீது முதலீடும் அக்கறையும் செலுத்தப்படுமாயின், காட்டு வளத்தின் முறையான பாவனையை விரிவாக்க முடியும். முறைசார்ந்த காட்டுத்தொழில் முயற்சியை அபிவிருத்தி செய்யத் தவறுவதனால் தான், சட்டவிரோத காட்டுத் தொழிலில் பலர் ஈடுபடத் தூண்டப்படுகின்றனர். காடுகள் யாரும் தீண்டப்படாததாக பேணப்படவேண்டிய அதேநேரம் காட்டுவளத்தை பயன்படுத்தும் முகாமைத்துவமும் முறைப்படுத்தப்படல் வேண்டும். விறகு, பலகை, தேனீ வளர்ப்பு, வனஜீவராசிகளின் பாதுகாப்பும் பயன்பாடும் என்பன குறித்து ஒருங்கிணைந்த செயல்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு, மனிதக்காடுகள், மாற்றுத்தேவைக் காடுகள் என்பன பிரிக்கப்பட்டு, உருவாக்கப்படல் வேண்டும். காடுகள் இயற்கை காடுகளாக இருப்பினும் அதனை வெட்டுதல், மீள் நடுகை செய்தல், பாதைகள் அமைத்தல் போன்றவற்றை முறைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். சமூகக் காடாக்கல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், நிலங்களை வழங்கி இதுவரை பயன்பாட்டுக்குட்படுத்தாத வெளிகள், சதுப்புக்கள் உவர்நிலத் தொடர்களில் புதிய முதலீட்டு நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பிக்கலாம். இதற்காக நிலத்தைப் பெறுபவரிடமிருந்து வருட வரி ஒன்றை உள்ளூர் அதிகாரசபைகளுக்கு பெற்றுக் கொடுப்பதுடன், கூட்டு முயற்சிக் கம்பனிகளையும் பொறுப்பாக்கம் செய்து கொள்ளலாம்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலான கடற்கரைகளில் உவர் நீர் உட்புகுதல் காரணமாக செழிப்பற்ற நிலங்கள் அதிகரித்து வருவதுடன், பூகோள வெப்பமயமாதல் மூலம் கடல் நீர் மட்டமும் உயர்ந்து வருகின்றது. இதனால் உவராகுதல் என்பது ஒரு பாரதூரமான சூழலியல் பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. இந்தப் பிரச்சினையைக் குறைக்கும் பொருட்டு, சமூகக் காடாக்கல் நிகழ்ச்சித் திட்டத்தினை தனியார் முதலீட்டிலிருந்து உருவாக்கி கொள்வதோடு, அதனூடாக பங்களிப்புடன் கூடிய வளங்களை உருவாக்கி கொள்ளக் கூடியதாகவும் அமையும். கிழக்கு மாகாணத்தின் வனவள மூலங்களில் அம்பாறை மாவட்டத்திலேயே அதிக காடுகள் காணப்படுகின்றன. மொத்த மாவட்ட நிலப்பரப்பில் 34.47% பகுதிகள் காடுகளாகவே காணப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தின் 29.96 சதவீத நிலப்பரப்பு காடாகவே உள்ளது. மட்டக்களப்பு மாவட்டமே இம்மாகாணத்தில் ஆகக்குறைந்த காட்டுவளத்தை கொண்ட மாவட்டமாக காணப்படுகின்றது. இங்கு 14.96 சதவீத நிலப்பரப்பிலேயே காடுகளே காணப்படுகின்றன. கிழக்கில், அம்பாறை மாவட்டத்தின் உகண பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவான காடுகள் காணப்படுகின்றன. வடமாகாணத்தை பொறுத்தவரை முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவான காடுகள் காணப்படுகின்றன. இங்கு 178,721 ஹெக்டேயர் நிலப்பரப்பில் காடுகள் காணப்படுவதுடன், அடுத்து அதிகளவான காட்டுவளத்தை கொண்ட மாவட்டமாக மன்னார் விளங்குகின்றது. இங்கு 122,038 ஹெக்டெயர் காடுகளும், வவுனியா மாவட்டத்தில் 112,711 ஹெக்டெயரில் காட்டு வளமும் காணப்படுகின்றன. இந்த வகையில் வடக்கு மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 52 சதவீதமான நிலங்கள் காடுகளாகவே அமைந்துள்ளன.

மாறிவரும் காலநிலை மாற்றத்துக்கேற்ப உற்பத்தி மீதான தாக்கத்தை குறைத்துக் கொள்வதில் , பாதுகாப்பான பசுமைப் போர்வையை பெறுவது தொடர்பில் இலங்கை செய்து கொண்டுள்ள சர்வதேச சூழல் பாதுகாப்பு உடன்படிக்கைக்கமைய , காபன் நன்கொடையை (Carben Credit) பெற்றுக் கொள்வதற்கு மிகவும் உதவியளிக்கும் மாகாணங்களாக இவ்விரு மாகாணங்களுமே இருந்து வருகின்றன. இலங்கை, வெப்ப வலயத்தில் அமைந்துள்ள இயற்கை அழகு நிறைந்த தீவொன்றாகும். அத்துடன் பல்வேறான சூழல் அமைப்புக்களையும் பொதுவாகக் கொண்டிருப்பதுடன், சிறப்பான ,பாரியளவு எண்ணிக்கையினை கொண்ட உயிர்ப்பல்வகைமைத் தன்மையொன்றைக் கொண்ட (high Bio Diversity) நாடாகவும் காணப்படுகின்றது. உலகளாவிய நிலையில் உயிர்ப்பல்வகைமைத் தன்மையின்படி சிறப்பார்ந்த 36 பிரதேசங்களில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. எனினும் தற்காலத்தில் காணப்படும் மனித நடவடிக்கைகள் காரணமாக உயிர் வளங்கள் மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் போக்கினை கொண்ட நாடு எனவும் இலங்கை இனங்காணப்பட்டுள்ளது.

Climate change vulnerability index 2020

2020 ஆம் ஆண்டின் காலநிலை மாற்றங்களுக்கு உட்படுதல் பற்றிய குறியீட்டின்படி (Climate Change Vulnerability Index) இலங்கை உலகில் 6 ஆவது இடத்தினை வகிக்கிறது. இதன்படி இலங்கையானது சூழல் ரீதியில் முக்கியமான, உணர்வுமிக்க வலயமொன்றில் அமைந்துள்ள நாடென்பது தெளிவாகின்றது. இந்நாட்டின் சூழலியல் வளர்ச்சியில் வடக்கு -கிழக்கு மாகாணங்களே அதிகம் முன்னுரிமை பெற்றிருக்கின்றன. 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் வன அடர்த்தியை 30% உயர்த்திக் கொள்வது என்ற எண்ணத்துடன் நீரேந்துப் பிரதேசங்களை பாதுகாத்தல், வளிமண்டலத்தில் காபனீரொக்சைட்டை மட்டுப்படுத்தல், பூகோள வெப்பமடைதலை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மீது இலங்கை அதிக நாட்டம் கொண்டுள்ள நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படும் காடுகளின் தொழில்துறை மீது அதிக முதலீட்டை மேற்கொள்ளும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

கருங்காலி மரம்

குறிப்பாக இலங்கையின் முழுப்பரப்பிலும் 32 சதவீதமான வனப்போர்வையை விருத்தி செய்வதனூடாக, சர்வதேச ரீதியில் வழங்கப்படும் அந்நியச் செலாவணி வடிவிலான வருமானத்தை ஈட்டிக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்துடன் தாவர ஒளித்தொகுப்பின் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் மேலதிக காபனீரொட்சைட்டை உள்நாட்டு மற்றும் சர்வதேச காபன் சந்தையின் கேள்விக்கான ’காபன் கடன்’ (Carben Credit) திட்டத்துக்கமைய, விற்பதனால் நிதியினையும் திரட்டக்கூடியதாக இருக்கும். அதனை ஒரு திரட்டு நிதியாகப் பேணி ஒரு முறைசார் தொழிலாகவும் மாற்றக்கூடிய வாய்ப்புள்ளது. மரம் வளர்ப்பதனூடாக வளிமண்டலத்துக்கு காபனீரொட்சைட் செல்வதனை குறைத்தல், பச்சை வீட்டு விளைவுகளை குறைத்தல் என்பவற்றின் மூலம் இதற்கென சர்வதேச ரீதியாக நிறுவப்பட்டுள்ள காபன் கடன் நிதியிலிருந்தும் உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுகின்றது. வடக்கு – கிழக்கில் அதிகம் காணப்படும் மரங்கள் எரிதிறன் கூடிய சக்திவளமாக உள்ளன. குறிப்பாக பாலை, வீரை, முதிரை, கருங்காலி, வேம்பு, மலைவேம்பு, தேக்கு போன்ற மரங்கள் வளர்வதற்கான உள்ளார்ந்த கட்டமைப்பு இங்கு காணப்படுகின்றது. மரத்தேவை, எரிபொருள் தேவை எனும் இரண்டு முக்கியமான தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வளங்கள் வடக்கு – கிழக்கிலேயே அதிகளவில் காணப்படுகின்றன. வனப்பகுதிகளாக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்புக்கள் பலவற்றில் மரச்செறிவு குறைவாகக் காணப்படுவதும், காட்டு வளங்கள் முறையாக முகாமை செய்யப்படாமையும் எமது பாரிய குறைபாடாகவுள்ளன. அதேசமயம், காட்டு வளங்களின் தொழில்துறை மீது தனியார் மற்றும் குழு முறை முதலீட்டை வரவேற்று அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புக்களும் அதிகளவில் காணப்படுகின்றன.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

15080 பார்வைகள்

About the Author

அமரசிங்கம் கேதீஸ்வரன்

பொருளியல் துறையில் சிரேஷ்ட வளவாளராகவும், பயிற்றுனராகவும் செயற்பட்டு வருகின்ற அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இளமாணி மற்றும் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர் 2012ஆம் ஆண்டு ‘திட்டமிடல் மூல தத்துவங்கள்’ என்ற நூலினை வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)