Arts
8 நிமிட வாசிப்பு

அரசியலமைப்பில் கிடைத்த சமவுரிமை

December 8, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை இறுதியாக ஆட்சி செய்த அந்நியரான பிரித்தானியரிடமிருந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது, மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை பொறுத்தவரையில் அம் மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. முதலில் இந்திய வம்சாவழி மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டது. பின்னர், சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழர்களதும் தமிழ் பேசும் முஸ்லிம்களதும் மொழி உரிமை பறிக்கப்பட்டது. மேலும், பல இனவாதச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதன் மூலம், நாடு படுகுழியை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டது.

மலையக மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டபோது, அது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட தந்தை செல்வா என்று அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வ நாயகம் “இன்று மலையக தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்படுவதை நாம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தால், அடுத்து நமது உரிமைகளிலும் அவர்கள் கை வைக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.” என்று வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து கூறினார். அதைக் கேட்டு அவர்கள் எல்லோரும் மௌனமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் அன்று சொன்னது சிறிது காலத்திலேயே உண்மையானது. இலங்கை தமிழ் காங்கிரசைச் சேர்ந்த ஜி.ஜி. பொன்னம்பலம், மலையக மக்களின் பிரஜா உரிமையை பறித்த ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, அமைச்சர் பதவியை ஏற்று, ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் துரோகியான செயல் இக்காலத்திலேயே நிகழ்ந்தது.

நாட்டின் பிரதமர்களாக பதவி வகித்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா மற்றும் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியவர்கள் அதே இனவாதக் கொள்கையை கடைப்பிடித்து ஒட்டுமொத்த தமிழர்களின் மொழி உரிமையையும் தாய் மொழியில் கடமையாற்றும், தொழில் பார்க்கும் உரிமையையும் பறித்தார்கள். வடக்கு –  கிழக்கு மக்கள் கல்வி அறிவில் உயர் நிலையில் வளர்ச்சி அடைந்துள்ளார்கள் என்று கருதி, அவர்களது கல்வி அறிவை மட்டுப்படுத்துவதற்காக பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு தரப்படுத்தல் என்ற உயர் வெட்டுப்புள்ளி சட்ட விதிமுறைகளை கொண்டுவந்து அவர்கள் உயர்கல்வி பெறுவதனை தடுத்தார்கள். இலங்கையின் நிர்வாக சேவையை முற்றிலும் சிங்களமயமாக்கி இலங்கையின் சிறந்த தமிழ் நிர்வாக சேவை உத்தியோகத்தர்களை அந்த சேவையில் சேர முடியாமல் செய்தார்கள். நிர்வாக மொழி, சிங்கள மொழி மட்டுமே என்ற விதிமுறையை அமுலாக்கி, தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு அவர்களால் புரிந்து கொள்ள முடியாத சிங்கள மொழியில் சுற்றறிக்கைகளையும் கடிதங்களையும் அனுப்பினார்கள். தமிழ் பிரதேசத்தின் நீதிமன்றங்களிலும் நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற ஊழியர்கள், கட்சிக்காரர்கள் தமிழர்களாக இருந்த போதும் சிங்களத்தில் நீதி விசாரணைகளை நடத்தினார்கள். இவை எல்லாம் ஒன்று திரண்டு, நாட்டில் 30 ஆண்டு காலம் ஒரு கொடிய உள்நாட்டு யுத்தத்தை தோற்றுவித்தது. இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு அரசாங்கமும் அந்த அரசாங்கத்தை ஆதரிக்கும் மக்களும் அவர்களது மதத் தலைவர்களும் ஒரு போதும் இந்த நாட்டை முன்னேற இடமளிக்கப்போவதில்லை. அவர்களால் நாம் அனைவரும் ஒரு துயரமான இருட்டுக் குகைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. 

இந்த அட்டூழியங்களை செய்த பெருமை, சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரால் 1972 ஆம் ஆண்டு செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தையே சேரும். 1978 ஆம் ஆண்டு, ஜே.ஆர். ஜெயவர்த்தன, இதே அம்சங்களை உள்வாங்கி, நிறைவேற்று அதிகாரத்தை தன்னகத்தே கொண்ட சர்வாதிகார அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவந்தார்.

அந்த அரசியலமைப்பில் சில நல்ல அம்சங்களும் உள்வாங்கப்பட்டிருந்தன. அவற்றுள் அடிப்படை மனித உரிமைகள் பற்றிய அத்தியாயம் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிங்களம் மட்டும் என்ற கொள்கை மாற்றப்பட்டு வடக்கு கிழக்கிலும் மற்றும் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் தமிழை நிர்வாக மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் பயன்படுத்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழும் தேசிய மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. பௌத்த சமயத்துக்கு மேலதிகமாக ஏனைய சமயங்களும் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டது.

ஒரு நாட்டின் ‘பிரஜைக்கு’ வழங்கப்பட்ட அதே அந்தஸ்து ‘நபர்’ என்பவர்களுக்கும் வழங்கப்பட்டமை இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மற்றுமொரு வரவேற்கத்தக்க அம்சம். பிரஜைகள் அல்லாத நபர்களுக்கும் கூட சுயமான சிந்தனைக்கான சுதந்திரம், மதச் சுதந்திரம், மனசாட்சியை பின்பற்றுவதற்கான சுதந்திரம் என்பன வழங்கப்பட்டன. பொது இடங்களில், உணவு விடுதிகளில், வணக்க ஸ்தலங்களில் யாவருக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டது. சித்திரவதை, அதீத தண்டனை வழங்கப்படுதல், சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் கைது செய்யப்படுதல், முறையான சட்ட நடைமுறைகளால் அன்றி நீதி விசாரணைக்கு உட்படுத்துவது போன்றன தடை செய்யப்பட்டது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் குற்றவாளியாக இனங்காணப்படும் வரையில், சந்தேக நபர்கள் என்று அழைக்கப்படும் வகையில் அவர்களுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டது. இனம், மதம், மொழி, சாதி, பால், கொண்டிருக்கும் அரசியல் கருத்து,  பிறந்த இடம் என்பவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுதல் இடம்பெறலாகாது என்பவற்றோடு பேச்சு சுதந்திரம், கருத்து ஒன்றை வெளியிடுவதற்கான சுதந்திரம், அமைதியான ஒன்று கூடலுக்கான சுதந்திரம், விரும்பிய கட்சியில் அங்கம் வகிப்பதற்கான சுதந்திரம், தான் சார்ந்திருக்கும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கான சுதந்திரம், சட்டபூர்வமான தொழில் ஒன்றில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் என்பனவும் மேற்படி அரசியலமைப்புச் சட்டத்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன.

1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு சட்டத்தில் மலையக தமிழ் மக்களுக்கு சாதகமான மற்றுமொரு அம்சம் காணப்பட்டது. பிரஜா உரிமைச் சட்டத்தில் ‘வம்சாவழி பிரஜைகள்’ மற்றும் ‘பதிவு பிரஜைகள்’ என்ற இரண்டு ஏற்பாடுகள் இல்லாமல் செய்யப்பட்டது. இதன் காரணமாக மலையக மக்கள் மத்தியில் காணப்பட்ட ‘நாடற்றவர்கள்’ என்ற நிலை இல்லாதொழிக்கப்பட்டது. ‘இந்திய வம்சாவழி பிரஜைகள்’ மற்றும் ‘பதிவு பிரஜைகள்’ ஆகிய இரண்டு பிரிவுகளும் இல்லாமலாக்கப்பட்டு, மலையக மக்கள் ஏனைய பிரஜைகளுக்கு சமமானவர்கள் ஆக்கப்பட்டார்கள்.

எனினும் இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு மேலும் 10 ஆண்டுகள் காலக்கெடு ஒதுக்கப்பட்டது. இந்த பத்து ஆண்டுகளுக்குள் மக்களின் தலைவர்கள் கலந்துரையாடி, நாட்டில் பிறந்த சகலருக்கும் சமமான பிரஜைகள் என்ற அந்தஸ்து கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதில் உடன்பாடு ஒன்றை எட்டினர். அதன் பிரகாரம், 1988 ஆம் ஆண்டுடன் இந்தப் பிரச்சனை முற்றுப் பெற்றுவிடும் என்று முத்தாய்ப்பு வைக்கப்பட்டது. அதன் பின்னரே இந்திய வம்சாவழி மலையக தமிழ் மக்கள் அனைவரும் நாட்டின் ஏனைய பிரஜைகளுடன் சமமான அந்தஸ்துக்கு கொண்டுவரப்பட்டு தேசிய நீரோட்டத்திலும் தேசிய அரசியலிலும் பங்குபெற அனுமதிக்கப்பட்டனர்.

இந்த அந்தஸ்து மாற்றம் மலையகத் தமிழ் மக்களை பல வழிகளில் தலைநிமிர வைத்தது. 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இவர்களில் கணிசமான தொகையினரால் வாக்களிக்க முடிந்தது. ஆனால் அவர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பில் தலைவர் தொண்டமானுக்கும் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்களுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையின் பிரகாரம், 1978 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் சட்டம் திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டு, மலையக தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உண்டாக்கப்பட்டது. அதனை அடுத்து அட்டன், டிக்கோயா நகர சபை, தலவாகொல்ல, அம்பேகமுக பிரதேச சபை, நுவரெலியா போன்ற பகுதிகளில் மலையகத்தவர்கள் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொண்டனர். இதற்கு மேலதிகமாக கொழும்பு, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை ஆகிய பகுதிகளின் மாவட்ட அபிவிருத்தி சபைகளிலும் இவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. மக்கள் செறிந்து வாழ்ந்த பல பிரதேச சபைகளில் இவர்களின் பிரதிநிதிகள், சபையின் உப தலைவர்களாக செயல்பட அனுமதிக்கப்பட்டனர் என்பது இம்மக்கள் இந்த நாட்டின் அரசியலில் ஆழக் கால் பதிக்கத் தொடங்கிவிட்டனர் என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4459 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)