Arts
10 நிமிட வாசிப்பு

காலனித்துவத்தின் கோரமுகமும் இலங்கையில் அது பதித்த முத்திரைகளும்

June 5, 2023 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

இலங்கையில் வெளிக்காரணிகளின் தாக்கங்கள்

Zheng

அந்நியர் ஆட்சியும் வெளிநாடுகளின் செல்வாக்கும் இலங்கைக்கு புதிய விடயங்கள்  அல்ல. இலங்கை சிலசமயங்களில்  தென்னிந்திய மன்னர்களின் படையெடுப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இத்தகைய நிலப்பிரபுத்துவத்தால் யுத்தங்கள்   இனவாத ரீதியில் திரித்து விளக்கப்படுகின்றன. அது மாத்திரமல்ல 1411 இல் ஒருதடவை சீனக் கடற்படையின் தாக்குதலுக்கும் இலங்கை உள்ளானது.  அப்போது நீராவிக் கப்பல் இன்னும் புழக்கத்துக்குக்கு வராத சமயத்தில் ஒப்பரும் மிக்காரும் இல்லாதபடி பெரிய கடற்படையை மிங் வம்ச (Ming) ஆட்சியின் கீழ் சீனா கொண்டிருந்தது. அதன் வர்த்தகக் கப்பல்கள் இலங்கைக் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டது. இதனை அப்போதைய  இலங்கையின் கோட்டை மன்னன் அழகேஸ்வரா (அழகக்கோனாரா) தடுக்கவில்லை. இவ்விடத்தில் இராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதற்காக சீனக் கடற்படைத்தளபதி செங் (Zheng) மன்னனை சந்திக்க சென்றபோது அவனை தந்திரமாக சுற்றிவளைத்து கொல்வதற்கும் சீனக் கப்பல்களை கொள்ளையடிப்பதற்கும் அழகேஸ்வரா முயன்றான். அதனால் ஆத்திரமடைந்த  சீனக் கடற்படைத் தளபதி செங், கோட்டை மீது தாக்குதலை நடத்தி மன்னன்  அழகேஸ்வராவையும் அவனது குடும்பத்தினரையும் அரச பிரதானிகளையும் கைதுசெய்து சீனாவுக்கு – நான்ஜிங்கிற்கு – கொண்டு சென்று  யோங்கிள் பேரரசரிடம் (Yongle Emperor) ஒப்படைத்தான். சீன மன்னன் அவர்களை எச்சரித்து மன்னித்து விடுதலை செய்து இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட்டான். சீனாவுக்கு இலங்கையை  ஆக்கிரமிக்கும் எண்ணம் இருக்கவில்லை.

Yongle-Emperor

தென்னிந்தியாவுடனான உறவு

சிற்சில  குட்டி முஸ்லிம் அரசுகள் பேருவளை போன்ற பகுதிகளில் அவ்வப்போது தோன்றி மறைந்தாலும் கூட, இந்தியாவைப்போல் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி இலங்கையில் நிலவவில்லை. எனினும் முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவில் கோலோச்சிய காலத்தில் இங்கு இஸ்லாம் மதம் வேகமாகப்பரவியது என்பதை மறுப்பதற்கில்லை. அதேவிதமாக தென் இந்தியாவில் தமிழ் மன்னர்களின் பலம் அதிகரித்திருந்தபோது அதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலித்தது. உலகில் தோன்றிய முதலாவது மொழி இதுதான் என எவராலும் கூற முடியாது. எத்தனையோ மொழிகள் தோன்றி மறைந்திருக்கின்றன. இன்று  நிலைத்திருக்கின்ற உலகின் பழைய மொழியான தமிழ், தொடர்ச்சியாக பல்லாயிரம் ஆண்டுகள் இலங்கைக்கு அருகில் இருக்கும் இந்தியாவில்  மையம் கொண்டிருந்ததால் அதன் தொடர்ச்சி இலங்கையிலும் நீடித்தது. ஆயினும் இலங்கையில் காலனித்துவத்துக்கு முந்தைய காலப்பகுதில் இருந்த   அரசியல், பொருளாதார, சமூக, கலாசாரக்  கட்டமைப்புகள்  இலங்கைக்கே உரிய  தீவுத்  தன்மை கொண்டவையாக இருந்தன. இந்தியாவிலிருந்தும் பின்னர் சிறிதளவு அரேபியாவில் இருந்தும் வந்த அனைத்து விடயங்களும் இலங்கையை  செழுமைப்படுத்தியதுடன் இலங்கைத் தன்மையைப்பெற்றன. சிங்கள மொழியும், தமிழ் மொழியும், சைவமும், பெளத்தமும் பின்னர் இஸ்லாமும் இச்சின்னஞ் சிறிய  தீவில் பன்னெடுங்காலம் சக ஜீவனம் நடத்தின.

நிலப்பிரபுத்துவ காலத்துக்கே உரிய  மன்னருக்கிடையிலான போர்கள் இங்கும் ஒரு போக்காக இருந்தபோதும் சில சமயங்களில்தான் அவை மதம்சார்ந்த, மொழிசார்ந்த யுத்தங்களாக இருந்தன. அதுவும் குறிப்பாக பெரும்பாலும் தென்னிந்தியப் படையெடுப்பின் போது மாத்திரம் தான்.  பெரும்பாலான இந்திய மன்னர்கள் இலங்கை மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் நண்பர்களாவும் உறவினர்களாவுமே இருந்து வந்துள்ளனர். அசோக மன்னன், இலங்கை மன்னனான தேவநம்பிய திஸ்ஸவுடன் நட்புறவு பாராட்டி அவன் மூலம் பௌத்தமதத்தை பரப்பியமை, பெளத்த, இந்து மத பிக்குகளும் குருக்களும், சேனாதிபதிகளும், சிற்பிகளும் கட்டடக் கலைஞர்களும் தென்னிந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு  இலங்கை மன்னர்களுக்கு சேவை செய்தமை,  வாரிசுரிமைப் போர்கள் வெடித்தபோதும் எதிரி மன்னனை வெற்றி கொள்வதற்கும் தென்னிந்திய மன்னர்களின் துணையை  நாடியமை, தென்னிந்திய மன்னர்களுக்கு போரின்போது துணையாக தமது படைகளை அனுப்பிய சந்தர்ப்பங்கள், தென்னிந்திய மன்னர்களின்  புதல்விகளை திருமணம்  செய்து கொண்டமை, மன்னர் வாரிசுகள் இல்லாத சமயத்தில் தென் இந்திய மன்னர்களை வரவழைத்து அவர்களுக்கு மகுடம் சூட்டியமை போன்ற பல்வேறு உதாரணங்களை இதற்கு சான்றாகக் கூறலாம்.  ஐரோப்பியர்கள் இலங்கையை ஆக்கிரமிக்கும்வரை இலங்கை மீதான வெளிக்காரணிகளின் செல்வாக்கு அனைத்துமே ஆசியத்  தன்மை கொண்டதாக இருந்தது.

ஆசியாவின் வீழ்ச்சியும் ஐரோப்பாவின் எழுச்சியும்

போர்த்துகேயர் இலங்கையில் காலடி எடுத்துவைக்கும் போது கூட ஆசியாவே ஐரோப்பாவைவிட உயர்ந்தநிலையில் இருந்தது. ஐரோப்பாவில் கிரேக்க ரோம காலத்தை விட உயர்ந்தநிலையை ஆசியா வகித்தது. கிரேக்கத்தில் பகுத்தறிவுவாதமும் மதவாதமும் செல்வாக்கு செலுத்துவதற்கு முன்பே ஆசியாவில் அவை செல்வாக்குச் செலுத்தின. ஆயினும் ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பலர் இனவாத ரீதியில் வரலாற்றைச் சித்திரித்து எம்மை நம்பவைக்கின்றனர் ஐரோப்பிய மேலாதிக்கத்தின் தொடக்கம் கொலம்பஸின் பயணத்துடன் தொடங்கியது என்று மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது, எரிக் வுல்பின் Eric Wolfe “வரலாறு இல்லாத மக்கள்” என ஆசியர்களை வர்ணித்தார்.  எரிக் ஜோன்ஸ்(Eric Jones) டேவிட் லாண்டஸ்  (David Landes), மைக்கேல் மான் (Michael Mann) ஆகியோர் ‘மேற்கத்திய மேன்மைக்கு’ ஐரோப்பியர்களின் சிறிய குடும்ப அமைப்புமுறையை அடிப்படையாகக் கொண்ட உயர்ந்த ஐரோப்பிய கலாசாரமே இயந்திரமாக அமைந்தது என தம்பட்டமடிக்கின்றனர். கொலம்பசுக்குப் பிந்தைய சகாப்தம் பற்றிய பாரம்பரிய விளக்கங்களில், ஐரோப்பாவே உலக வரலாற்றின் மையமாகவும், “மேற்கத்திய நாகரிகத்தை” பரப்புவதற்காகவே அவர்கள் ஆசியாவுக்கு வந்தார்கள் எனவும் பரப்புரை செய்யப்படுகிறது.

உண்மையில் இந்த வணிக யுகத்தில் ஆசியாவின் ஐந்து பெரிய பேரரசுகள் எழுச்சியுற்றன.  அவையாவன: ஒட்டோமான்கள் Ottomans, (1300-1922); சஃபாபிட்கள் Safafids  (1501-1722); முகலாயர்கள் Mughals (1526-1757);  மிங் Ming (1368-1644) மற்றும் கியூங் Qing (1644-1911). புராதன ரோமா சாம்ராச்சியத்தை இவை விஞ்சின. இவற்றிற்கு வெகுகாலத்துக்கு முன்னரே கி.மு. 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னதாக தமிழகத்தை மையமாகக் கொண்டிருந்த சோழ வம்சப் பேரரசு  உலக வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த வம்சங்களில் ஒன்றாகும். இப் பெரிய, செழிப்பான பேரரசுகள் ஸ்திரத்தன்மை மற்றும் ஒப்பீட்டளவில் அமைதியை வழங்கின, இது மக்கள்தொகை வளர்ச்சியை எளிதாக்கியது மற்றும் உற்பத்தி உற்பத்தியின் அதிகரிப்புக்கு ஏற்றுமதி நன்மைகள் மற்றும் ஒப்பீட்டளவில் சுதந்திர வர்த்தகத்தின் மண்டலங்களை விரிவுபடுத்தியது. ஆசியாவிற்குள், இந்தியாவும் சீனாவும் முக்கியமான உற்பத்தி மையங்களாக இருந்தன.  பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இவ்விருநாடுகளும்  சாதகமான வர்த்தக நிலைகளை அனுபவித்த நாடுகளாகத் திகழ்ந்தன. உருளைக்கிழங்கு, மக்காச்சோளம் மற்றும் வேர்க்கடலை போன்ற லத்தீன் அமெரிக்கப் பயிர்களின் அறிமுகத்தால் இவ்விரு நாடுகளும்  பெரிதும் பயனடைந்தன.

உண்மையில் கூறுவதானால் ஆசியாவின் இயல்பான வளர்ச்சியும் கலாசார விழுமியங்களும் ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்பால் தடைப்பட்டும் திரிபடைந்தும் போயின. அதன் பின்னர் ஆசிய ஆபிரிக்க  நாடுகள் கொள்ளையடிக்கப்பட்டன, அவற்றின்  வளங்கள்  சூறையாடப்பட்டன. அது மாத்திரமல்ல ஆபிரிக்காவிலிருந்து கறுப்பர்கள் அடிமைகளாக பிடித்துச்செல்லப்பட்டார்கள். அடிமை முறை  ஒழிக்கப்பட்டதும் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் நவீன அடிமைகள் ஏமாற்றி கொண்டுசெல்லப்பட்டார்கள். வர்த்தக உரிமை, மத உரிமை,  ஜனநாயகம் என்ற பெயரில்தான் இத்தனை கொடுமைகளும் நடந்தேறின, இன்றும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.

The-Great-Chola-Empire

ஐரோப்பாவிலே  கைத்தொழில் புரட்சி ஏற்படாமல் ஆசியாவில் அது வெடித்திருந்தால் உலகப்போக்கே மாறியிருக்கும் இதைவிட உயர்ந்த சகிப்புத்தன்மைகொண்ட நாகரிகம் தழைத்திருக்கும். ஆனால் ஆசியா நிலப்பிரபுத்துவ பிளவுகளால் மாத்திரமல்ல சாதி, மத, மொழிப் பூசல்களாலும் கூட செல்லரித்துபோய்க்கொண்டிருந்தது. ஐரோப்பா முழுவதும் ஒரே மதம் (கிறிஸ்துவமதம் – உட்பிளவுகள் இருந்தாலும் கூட) ஆதிக்கம் செலுத்தியது. அது நீண்டகாலம் போப்ஆண்டவர் தலைமையில் பகுத்தறிவையும் விஞ்ஞானத்தையும் மூர்க்கமாக தடுத்து வந்தது. அதில் 1500 களில் புரட்டஸ்தாந்து மதம் உடைவை ஏற்படுத்திய பின்னரே பகுத்தறிவுரீதியான சிந்தனையும்  விஞ்ஞானமும் வளர்ந்து கைத்தொழில் புரட்சி வெடிப்பதை சாத்தியமாக்கியது. இப்படியான ஒரு உடைவு ஆசியாவில் நடைபெறவில்லை. இங்கு மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட சக்திகள் மீதான அதீத நம்பிக்கையும் ஆழ வேரூன்றி நிலப்பிரபுத்துவ சமூகத்தை உடைத்துக்கொண்டு ஒரு முதலாளித்துவப் புரட்சிவெடிப்பதைத் தடை  செய்தது.  இவ்வாறு ஆசியாவின் எழுச்சிக்காலம் மாறி  தேக்க நிலையில் அது திண்டாடிக் கொண்டிருக்கும்போதுதான் ஐரோப்பாவில் முதலாளித்துவப் புரட்சி வெடித்தது. ஐரோப்பாவின் யுகம் தொடங்கியது. அதன் இராட்சத பலத்தின் முன்னால் செல்லரித்துப்போன  நிலப்பிரபுத்துவம் மெல்ல மெல்ல மண்டியிட நேர்ந்தது.

காலனித்துவத்தின் ஆரம்பகாலம் கொடுமைமிக்கதாய் இருந்தது.  போர்த்துகேயர் இலங்கையில் காலடி வைப்பதற்கு 13 வருடங்களுக்கு முன்னர் புதிய உலகான அமெரிக்காவில்  கொலம்பஸ் 1492 ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி காலடி பதித்து அமெரிக்காவை ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்திய பின்னர், அங்கு  படையெடுத்த ஐரோப்பியர், அங்கு வாழ்ந்த  வளர்ச்சி குன்றிய மக்கள் சமூகங்களைக் கொன்றுகுவித்து, அவர்களின்   பொன்னையும் வெள்ளியையும் கொள்ளை அடித்தனர். எஞ்சியோரை  அடிமைப்படுத்தி  வேலை வாங்கும் அவர்களது முயற்சி தோல்வியடைந்ததும்  பூர்வீகக்குடிகளின் பிணக்குவியல் மீது தமது வெள்ளைக் குடியேற்றங்களை நிறுவுவதும், கைப்பற்றிய ஆபிரிக்க நாடுகளில் இருந்து கறுப்பர்களை ஆடுமாடுகளைப்போல பிடித்துக்கொண்டு போய்,  அங்கெல்லாம் பெருந்தோட்டங்களை  உருவாக்கி அடிமைகளாக அவர்களிடம் குரூரமாக வேலைவாங்குவதும் அப்போதைய போக்காக இருந்தது.  நாளடைவில் இதன்மூலம்  அதீத  லாபம்தரும் முக்கோண வியாபாரம் (Transatlantic Slave Trade) ஒன்று உருவானது.  ஐரோப்பாவிலிருந்து ஆயுதங்களும், துணியும், வைனும் ஆபிரிக்க நாடுகளுக்கு கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அடிமைகளை அமெரிக்காவுக்கு ஏற்றிச்சென்று அங்கிருந்து சீனி, புகையிலை மற்றும் ஏனைய கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை ஐரோப்பாவுக்கு கொண்டுவரும் வர்த்தகம் இவ்வாறு தழைத்தோங்கியது. பிரித்தானியர் இலங்கையை கைப்பற்றி கோப்பிப் பெருந்தோட்டத்தை (1823) உருவாக்கிய 10 வார்டன்கள் கழித்த பின்னரே 1833 இல் பிரித்தானிய சாம்ராஜ்யத்தில் பழைய அடிமைமுறை ஒழிக்கப்பட்டது.

இலங்கை 1505 முதல் 1948 வரை 443 நீண்ட வருடங்கள் மூன்று மேற்கத்தைய நாடுகளின் காலனியாகக் கிடந்தது. முதலில் போர்த்துக்கேயர்  1505 முதல்  1658 வரை இலங்கையை  தமது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து நாட்டைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் 1658 முதல் 1796 வரை  தமது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். திருகோணமலைத் துறைமுகம் 1796 இல் சில மாதங்கள் பிரெஞ்சுக் கட்டுப்பாட்டில் இருந்தது. 1796 முதல் 1948 வரை ஆங்கிலேயரின் காலனித்துவப்  பிடிக்குள் வந்தது. 1815 இல் பிரித்தானியர்கள் முழுத் தீவையும் கைப்பற்றும் வரை இலங்கையின் கரையோரப் பகுதிகள் மட்டுமே காலனித்துவப்படுத்தப்பட்டன.

இலங்கையில் ஐரோப்பிய காலனித்துவம்

COFFEE-CULTIVATION-IN-SRI-LANKA-1-1-1

ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல இலங்கைக்கு வெளிநாட்டு ஆக்கிரமிப்பும் சரி  வெளிக்காரணிகளின் ஊடுருவல்களும் சரி புதியவை அல்ல. ஆனால் இந்நாடு அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது, எம்மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்கள், அவர்களது உடமைகள் தீ வைக்கப்பட்டன போன்ற காரணத்தை ஒதுக்கிவிட்டு பார்த்தால் கூட, அவை அனைத்தும் ஏற்படுத்திய மாற்றங்களைவிட ஐரோப்பிய காலனித்துவவாதிகளின் ஆட்சி  ஏற்படுத்திய மாற்றங்கள் ஆழமானவை, அடிப்படையானவை, அளவிலும் குணாம்சத்திலும் பாரியவை. ஏனெனில், முதலாவதாக, எந்த ஒரு வெளிநாட்டு சக்தியும் இவ்வளவு நீண்டகாலம் இதற்கு முன்னர் இலங்கையை ஆட்சி செய்ததில்லை. இரண்டாவதாக, இலங்கையின் பெரும் நிலப்பரப்பை இதற்கு முன்னர் நிலையாக ஆட்சி செய்ததில்லை. மூன்றாவதாக, அனைத்துக்கும் மேலாக முற்றிலும் மாறுபட்ட (முதலாளித்துவ) பொருளாதார முறையையும், கிறிஸ்தவ மதத்தையும், மொழியையும், கலாசாரத்தையும், சட்டத்தையும், நிர்வாகமுறையும், ஆட்சிமுறையும் அறிமுகப்படுத்தி  இலங்கையின் அடிப்படைத் தன்மையையே  தலைகீழாக இது மாற்றிவிட்டது. 443 நீண்ட வருடங்கள் நிகழ்ந்த இம்மாற்றங்கள் 152 வருட  பிரிட்டிஷ் ஆட்சியின் (1796-1948) கீழ்தான் துரிதம் பெற்றன.  அளவிலும் குணாம்சத்திலும் இவை பாரிய தாக்கங்களை ஏற்படுத்தின. இன்றைய தலைமுறை காணுகின்ற குறை அபிவிருத்தி – நவீனத்துவமாகட்டும் இன்று  நாம்   முகம்கொடுக்கின்ற அரசியல் பொருளாதார  சமூக பிரச்சினைகளாகட்டும் அனைத்தினதும் மூலவேரை காலனித்துவ ஆட்சியில்தான் குறிப்பாக பிரித்தானிய காலனித்துவத்தில் தான் காணமுடியும். இத்தகைய  பாரிய மாற்றங்கள் பெருந்தோட்டப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே ஏற்படுத்தப்பட்டன.

தொடரும்.

Bibliography

  1. Andre Gunder Frank,(1998)  ReOrient: Global Economy in the Asian Age (Berkeley, University of California Press.
  2. Carlton Hayes and Parker Moon,(1924)  Modern History (New York: Macmillan Company.
  3. De Silva, K.M (1981) A history of Sri Lanka, C Hurst & Co Publishers Ltd
  4. Dreyer, Edward L. (2007). Zheng He: China and the Oceans in the Early Ming Dynasty, 1405–1433. New York: Pearson Longman. ISBN 978-0-321-08443-9.
  5. Duyvendak, J. J. L. (1939). “The True Dates of the Chinese Maritime Expeditions in the Early Fifteenth Century”. T’oung Pao. 34 (5): 341–413. doi:10.1163/156853238X00171. JSTOR 4527170.
  6. Duyvendak, J. J. L. (1939). “The True Dates of the Chinese Maritime Expeditions in the Early Fifteenth Century”. T’oung Pao. 34 (5): 341–413. doi:10.1163/156853238X00171. JSTOR 4527170
  7. Emert, Phyllis (1995). Colonial triangular trade: an economy based on human misery. Carlisle, Massachusetts: Discovery Enterprises Ltd. ISBN 978-1-878668-48-6. OCLC 3284070
  8. Eric Jones,(1981) The European Miracle (Cambridge, England: Cambridge University Press.
  9. David Landes, (1999) The Wealth and Poverty of Nations: Why Some are Rich and Some are Poor (New York: W.W. Norton & Co.,
  10. Eric Wolfe, (1982) Europe and the People Without History (Berkeley. University of Cali- fornia Press,
  11. Holden Furber,(1951)  John Company at Work: A Study of European Expansion in India in the Late Eighteenth Century (Cambridge: Harvard University Press,
  12. Kenneth Pomeranz, (2000) The Great Divergenc: Europe, China, and the Making of the Modern World Economy (Prince- ton: Princeton University Press.
  13. Mendis, G.C. (2005)  Ceylon Under the British, Asian Educational Services.
  14. Merritt, J. E. (1960). “The Triangular Trade”. Business History. Informa UK Limited. 3 (1): 1–7. doi:10.1080/00076796000000012. ISSN 0007-6791. S2CID 15393064
  15. Michael Mann, (1986) The Sources of Social Power; Vol. 2, A History of Power from the Beginning to A.D. 1760, (Cambridge, England: Cambridge University Press,
  16. Morgan, Kenneth (2007). Slavery and the British Empire: From Africa to America. Oxford: Oxford University Press
  17. Philip S. Golub, (2004) “All the Riches of the East Restored.” Le Monde Diplomatique,
  18. Quoted in G. J. Resink,(1968)  Indonesia’s History Between the Myths: Essays in Legal History and Historical Theory (The Hague: W. van Hoeve Publishers Ltd.,
  19. Wong. R. Bin (1997)  China Transformed: Historical Change and the Limits of European Experience (Ithaca: Cornell University Press.

ஒலிவடிவில் கேட்க

20709 பார்வைகள்

About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)