Arts
17 நிமிட வாசிப்பு

காலனித்துவ ஆட்சியாளர் விட்டுச்சென்றவையும் (Colonial legacy) பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஏற்பட்ட சமூக – பொருளாதார மாற்றங்களும்

August 28, 2022 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

வரலாற்று போக்குகளைப்  பற்றி பேசும்போது “அந்த காலம் போல இனிவருமா” என்று  பலர் சலித்துக்கொள்வது புதிய விடயம் அல்ல. சில நல்ல விடயங்கள் மறைந்து வருகின்றன என்பது உண்மைதான். அன்றிருந்த காடுகள், தெளிவான ஆற்றுநீர், தூயகாற்று போன்ற பலவற்றை இன்றைய தலைமுறை இழந்திருக்கிறது. சமூக  வாழ்க்கையில் கூட அன்பான குடும்ப உறவு, நாணயம், பெரியோரை மதித்தல் போன்ற நல்ல விழுமியங்கள் மறைந்து வருகின்றன. ஆயினும் கடந்த காலமே பொற்காலம் என்று அன்றிருந்த அனைத்தையும் கொண்டாட முடியுமா? நாம் கற்காலத்திற்கு  திரும்பமுடியுமா? வரலாறு முன்னோக்கி செல்கிறது. சமுதாயம் மேல்நோக்கி முன்னால் நகர்கிறது. இதனை இயங்கியல் ரீதியாக புரிந்துகொண்டு மேலும் இந்த சமூகத்தை முன்னோக்கி நகர்த்த முயலும் போக்கே முற்போக்கு எனப்படுகிறது. பின்னோக்கி வழிபட்டுக்கொண்டு வரலாற்றை பின்னோக்கி தள்ள முயலும் அத்தனை விடயங்களும் பிற்போக்கானவை எனப்படுகிறன. இதைத்தான் பாரதியார் இரத்தினச்  சுருக்கமாகவும் கேலியாகவும்  “பாட்டன் தோண்டிய கிணறு என்பதற்காக மூடன் உப்பு நீரை பருகுகிறான்” என்று கூறினார்.

புராதான இலங்கை

இலங்கையின் வரலாறும் அப்படித்தான். இலங்கை காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் வரும்போது அது ஒன்றும் பொன்கொழிக்கும் பூமியாக இருக்கவில்லை. நிலப்பிரபுத்துவ காலகட்டத்துக்கே உரிய, அடிக்கடி மாறுகின்ற எல்லைகளைக்கொண்ட,  இராச்சியங்களாகவும்  இராஜதானிகளாகவும்  பிளவுண்டு தமக்குள் யுத்தம் புரிந்துகொண்டிருந்த ஒரு தீவாகவே அது திகழ்ந்தது. வாளையும் வேலையும் அம்பையும் வில்லையும் ஆதாரமாகக்கொண்ட அக்காலத்துக்குரிய போர்முறை கூட இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியே இருந்தது.  சனத்தொகையும் மக்களின் தேவைகளும் குறைவாக இருந்தபடியால் இலங்கையின் இயற்கை வளம் காரணமாக நெல்லும் ஏனைய உணவு பொருட்களும் விளைந்ததால் பட்டினி சாவு அரிதாகவே இடம்பெற்றது.  ஆயினும் வறுமை என்பது உழைக்கும் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது.

இலங்கை நீண்டகாலம் பல்கலாச்சார நிலப்பிரத்துவ நாடாக திகழ்ந்துவந்தது. அந்த காலத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் – இலங்கை ஒரு குட்டி தீவாக இருந்த போதும் – இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட  தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் படி – எந்த நாட்டிலும் இல்லாத அளவு சிறப்பான இலங்கைக்கே உரித்தான புராதன நீர்ப்பாசன முறையை இலங்கை கொண்டிருந்தது.  இன்றளவும் பயன்படுத்தப்படுகின்ற இத்தகைய புராதன நீர்ப்பாசன முறையை வேறெந்த நாட்டிலும் காண முடியாது. இத்தகைய நிர்மாணத்துக்குரிய பொறியியல் நிபுணத்துவமும்,  அவற்றை உருவாக்க தேவையான கருவிகளை தயாரிக்கும் திறனும்  உள்நாட்டில் இருந்தது. அதேபோல இலங்கைக்கே உரிய சுதேச மருத்துவம் பிராந்திய தன்மையுடன் வளர்ந்துக்கொண்டிருந்தது.

இலங்கையின் இயற்கை வளமே ஒரு விதத்தில் இந்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது என்று கூறலாம். இப்படியான  இயற்கை வளம் மிக்க இன்னொரு நாட்டை உலகில் வேறெங்கும் காண்பதரிது.  உலகின் சொர்க்கப்புரி என்றும் இந்து சமுத்திரத்தின் முத்து என்றும் அறியப்பட்ட நாடு இது. 103 நதிகளையும், அதில் 16 ஜீவநதிகளையும் கொண்ட குட்டித்தீவு, நான்கு புறமும் மீன்வளம் மிக்க கடலால் சூழப்பட்ட ஒரு மிதக்கும் அழகு பூங்காவனம்; ஒரு பாலைவனமோ ஒரு பனிமலையோ இன்றி முழு நிலப்பரப்பின் ஒவ்வொரு அங்குலமும் விவசாயத்திற்கு உகந்ததான- இரு பருவகால மழையால் பச்சை புன்னகை பூக்கும் ஒரு செழிப்புமிக்க நாடு இது.

நிலவுடமை சமுதாயத்தை விபரிக்கும் படம்

கைத்தொழில் வளர்ச்சியே முன்னேற்றத்தின் அடையாளமாக மாறும்முன்னர் சிறந்த விவசாய நாடாக இது திகழ்ந்திருக்கிறது. புல்டோசர் அறிமுகம் செய்யப்படுமுன்னர் யானைகளை கொண்டே நாட்டில் பெரும்பாலான பணிகள் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் யானைக்கான ஏற்றுமதி சந்தையாக திகழ்ந்தது. மன்னார் முத்துக்குளிப்புக்கும்  மீன் பிடிப்புக்கும் பிரசித்தி பெற்று திகழ்ந்ததுடன் தென் இந்தியாவுடனான தொடர்புக்கான பாலமாகவும் இருந்தது. உலகில் தலை  சிறந்த இரத்தினக்கற்களும் கறுவாவும் ஏனைய வாசனை திரவியங்கள், மிளகு பாக்கு வெற்றிலை என்பனவும் மத்திய மலைநாட்டிலும் – மழை வீழ்ச்சியால் பயன்பெற்ற – ஏனைய பகுதிகளிலும் கிடைத்தன. இவற்றை அராபியரும் பின்னர் ஐரோப்பியரும் தேடிவந்தனர் எனவே இலங்கையர்கள் இவற்றை விற்பதற்கு வெளிநாட்டு சந்தைகளைத்தேடி அலையவேண்டிய தேவை  ஏற்படவில்லை. இதனால் கப்பல் கட்டுவதிலும் தூர கடல் பயணம் செய்வதிலும் இவர்கள் நாட்டம் செலுத்தவில்லை.

வாட்டும் குளிருக்கு வெப்பமூட்டும் ஆடைகள் இலங்கையருக்கு தேவைப்படவில்லை எனவே ஆடைத்தொழில் செழிக்கவில்லை.  ஐரோப்பியர்களின் வளர்ச்சிக்கு இவையாவும் பற்றாக்குறையாக இருந்ததும் அவற்றைத்தேடி ஆசியாவுக்கு ஆப்பிரிக்காவுக்கும் அலையவேண்டி இருந்தமையும் ஒரு பிரதான காரணமானது.

இவ்வாறு சுயத்தேவை பொருளாதாரத்தில் திருப்தி கொண்ட – சனத்தொகை குறைவான – விவசாய  நாடாக  இருந்த இலங்கை நாளடைவில் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்பவும்  நவீன தேவைகளின் உந்துதலாலும் ஜப்பான் போன்ற நாடுகளைப் போல படிப்படியாக முன்னேறி தனக்கேற்ற ஒரு ஆட்சிமுறையை உருவாக்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலைமை அதிகமாகவே காணப்பட்டது. அதற்கு  இந்து சமுத்திரத்தின் சர்வதேச கடல் பாதையில்  கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருப்பது கூடுதலான சாதகத்தன்மையை வழங்கியது. இதுவே இலங்கையை ஐரோப்பியர்கள் கைப்பற்றுவதற்கு பிரதான காரணமாகவும் மாறியது. அத்துடன் இந்திய துணைக்கண்டம் (அப்போது இன்றைய இந்தியாவும் பாகிஸ்தானும் பங்களாதேசும் பர்மாவும் இணைத்திருந்தன) இலங்கைக்கு அருகில் அமைந்திருந்தாலும், உலகின் தலை  சிறந்த  இயற்கை துறைமுகங்களில் ஒன்றான திருகோணமலை  துறைமுகம் இங்கு இருந்ததாலும், இந்திய துணைக்கண்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு  இலங்கையை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது காலனியல்வாதிகளுக்கு  அவசியமானதாக இருந்தது.   .

இலங்கையின் இயல்பான வளர்ச்சி ஐரோப்பியர்களின் காலனித்துவ ஆக்கிரமிப்பால் தடைப்பட்டு ஒருவிதமான சார்பு முதலாளித்துவம் உருவானது. இலங்கை 1505 முதல் 1948 வரை 443 நீண்ட வருடங்கள் மூன்று மேற்கத்தைய நாடுகளின் காலனியாக கிடந்தது. முதலில் போர்த்துக்கேயர்  1505 முதல்  1658 வரை இலங்கையை  தமது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து நாட்டைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் 1658 முதல் 1796 வரை  தமது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். அதன்பின்னர் 1796 முதல் 1948 வரை ஆங்கிலேயரின் காலனித்துவ  பிடிக்குள் வந்தது

சார்பு முதலாளித்துவமும் – dependent capitalism-  காலனித்துவ நவீனத்துவமும் – Colonial Modernity – அறிமுகமாதல்.

போர்த்துகேயர் காலம்

போர்த்துகேயர் கால இலங்கை அரசுகள்

போர்த்துகேயர் தமது ஆட்சி காலத்தில் பெரும்பகுதியை  தமது ஆட்சியை நிலைநாட்டுவதிலேயே செலவிட வேண்டியிருந்தது. அவர்கள் இலங்கையில் காலடி எடுத்து வைக்கும்போது இலங்கையில்  கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என மூன்று பிரதான இராச்சியங்கள் இருந்தன. இந்த மூன்று இராச்சியங்களும் மேலும் பல சிற்றரசுகளாக பிரிந்திருந்தன. இவற்றையெல்லாம் கைப்பற்றுவது போர்த்துகேயரால் முடியாத காரியமாயிருந்தது. அவர்கள் முஸ்லீம் வணிகர்களது தாக்குதலுக்கும் மன்னர்கள் தலைமையிலான போர்களுக்கும் மாத்திரமல்ல பல்வேறு கிளர்ச்சிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அவர்களால் கண்டி இராச்சியத்தை கைப்பற்ற முடியவில்லை. யாழ்ப்பாண  இராச்சியத்தை 1619 ல் கைப்பற்றி தனியாக அதனை நிர்வாகம் செய்தனர். இது இலங்கை ஆட்சி முறையில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும். 

இதைத்தவிர போர்த்துகேயரின் பிரதான குறி இலங்கையின் கறுவாவாகும் . உலகின் தலை சிறந்த கறுவா இலங்கையில் தான் விளைந்தது. அது இயல்பாக காடுகளில் வளர்ந்தது. அப்போது அதனை பயிரிட முடியாதென்ற நம்பிக்கை நிலவியது. குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்படாத காலம் அது. ஐரோப்பாவில் மாமிசத்தை பேணி பாதுகாப்பதற்கு  கறுவா இன்றியமையாத மூலப்பொருளாக இருந்தது.  அப்போது கடலாதிக்கம் செலுத்திய அராபிய வர்த்தகர் கையில் இருந்த இவ்வியாபாரம் போர்த்துகேயர் வசமானது.

கறுவா பயிர்ச்செய்கை,  கறுவாத் தோட்டத்தை விபரிக்கும் படம்

இவர்களின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாணத்தில் புகையிலை உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரித்தது. மன்னர் காலத்தில் நிலவிய சாதி அடிப்படையிலான நிர்வாக கட்டமைப்பும் வேலைப்பிரிவினையும் அப்படியே தொடர்ந்தது. போர்த்துகேயர் காலத்தில் சட்டம் ஒழுங்கு முறைப்படுத்தப்படவில்லை கிளர்ச்சிகள் மூர்க்கமாக நசுக்கப்பட்டன. கிளர்ச்சி செய்த கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன பொதுவாகவே அவர்கள் மூர்க்கமாக நடந்து கொண்டனர். விகாரைகள் கோயில்கள் மசூதிகள் தகர்க்கப்பட்டன. பிற மத போதகர்கள் எதிரிகளாக பார்க்கப்பட்டனர். இலங்கையின் நீர்ப்பாசனங்கள் புறக்கணிக்கப்பட்டன. சிறிதளவு  பணப்புழக்கம் உண்டானது. பண்டமாற்று முறையுடன் காசுக்கு பொருள் வாங்கும் முறை அரும்புவிட தொடங்கியது.

அவர்கள் காலத்தில் ஏற்பட்ட பிராதான மாற்றங்களில் ஒன்று ரோமன் கத்தோலிக்க மதம் தீவிரமாக  பரப்பப்பட்டமையாகும். கத்தோலிக்க மதமும்  போர்த்துகேய மொழியும் அரசின் சலுகைக்கும் உயர்  பதவிக்குமான தகைமைகளாக  இருந்தன. இவர்களின் காலத்தில் ஏற்பட்ட மற்றொரு முக்கிய மாற்றம் மிஷனரி பாடசாலைகள் உருவாக்கப்பட்டமையாகும்.

அரசாங்கத்தின் செலவில் இயங்கிய இவற்றில் போர்த்துக்கேய மொழியுடன் தாய்மொழியும் கணிதமும் கத்தோலிக்க மதமும் போதிக்கப்பட்டன. கத்தோலிக்க மதத்தை பரப்பும் மையமாக இவை திகழ்ந்ததுடன் தேவாலயங்களே இவற்றை மேற்பார்வை செய்தன. போர்த்துக்கேயருக்கும் சுதேசிகளுக்கும் இடையில் உருவான  கலப்பினமாக பறங்கியர் என்ற புதிய இனம் ஒன்று உருவானது. இவர்களால் பேணப்பட்ட போர்த்துக்கேய ‘பைலா’ பாடல்கள் இன்றும் சிங்கள பாடல்களில் ஒரு அம்சமாக திகழ்கிறது. இவர்கள் காலத்தில் தான் இலங்கையில் துப்பாக்கி அறிமுகமானது.

ஒல்லாந்தர்  காலம்

ஒல்லாந்தரது ஆட்சிப் பரம்பல்

போர்த்துக்கேயரின் துப்பாக்கியாலும் இரத்தத்தாலும் ஓரளவுக்கு ஒன்றிணைக்கப்பட்ட கரையோர பிரதேசத்தை ஒல்லாந்தர் கைப்பற்றியபோது யுத்த நிலைமையும் கிளர்ச்சிகளும் ஓரளவுக்கு ஓய்ந்து போயிருந்தன. பெரிதும் சிறிதுமான சில   கிளர்ச்சிகள் அவ்வப்போது வெடித்தபோதும் கூட கண்டி இராச்சியத்தோடு  பெரும்பாலும் சமாதானமாகவே போக முயன்றனர். இவர்கள் புரட்டஸ்தாந்து  மதத்தை ஆரம்பத்தில் தீவிரமாக பரப்பினாலும் பின்னர் அப்போக்கை தளர்த்தினர். பெளத்த பிக்குகளுக்கு ஆதரவு நல்கினர். போர்த்துகேயர் ஆரம்பித்த பாடசாலைகளை அதே விதத்தில்  தொடர்ந்தனர். தமது டச்சு  மொழியை பரப்ப பெரிதும் முயன்றாலும் அம்முயற்சியில் அவர்கள் வெற்றி பெறவில்லை. அதற்கு  ஒரு காரணம் போர்த்துகேய மொழி அரச தொடர்பு  மொழியாக அக்காலத்தில் நிலைப்பெற்றுவிட்டது. இவர்களும் போர்த்துக்கேயர்களைப்போலவே மன்னர் காலத்தில் நிலவிய அதே சாதிகட்டமைப்பையும் நிர்வாக முறையையும் சில மாற்றங்களோடு தொடர்ந்தனர். ஆயினும் இவர்களின் காலத்தில் நிர்வாகம் போர்த்துக்கேயர் காலத்தை விட ஒப்பீட்டளவில் சீராக நடைபெற்றது.

சிங்கள சாதியத்தை விபரிக்கும் படம்

ஒல்லாந்தர் காலத்தில் சிங்கள சமூகத்துக்குள் சாதியமைப்பில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டது.  அது கராவ, (மீனவ பின்புலம் கொண்டோர்) துராவ, (கள் இறக்கும்  பின்புலம் கொண்டோர்) சலாகம (கறுவா உரிப்போர்   பின்புலம் கொண்டோர்) ஆகிய மூன்று சாதியினர் முக்கியத்துவம் பெற்றமையாகும். இவர்கள் தென் இந்தியாவிலிருந்து சில நூற்றாண்டுக்கு முன்பிருந்து வந்து குடியேறியவர்களாவர். நாளடைவில்   இவர்கள் சிங்கள சமூகத்தால் உள்வாங்கப்பட்டுவிட்டனர். ஒல்லாந்தர் ஆட்சிசெய்த பகுதிகளில்  இலங்கை சிங்கள சமூகத்தில் உயர் சாதியினரான கொவிகமவினரின் ஆதிக்கத்திற்கு  சவால்விடும் அளவுக்கு ஆங்கிலேயர் காலத்தில் இவர்கள் உருவெடுத்திருந்தனர். சாதிபாகுபாட்டிலிருந்து விடுபடுவதற்காக கிறிஸ்த்தவர்களாக மாறி சலுகைப்பெற்றனர். இவர்களே நிலப்பிரபுத்துவத்தில் இருந்து ஆரம்ப முதலாளித்துவத்துக்கு முதலில் காலடி வைத்தவர்களாவர். 

இவர்களில் சலாகம சாதியினரின் துயர்தோய்ந்த வரலாறு ஒரு தனிக்கதை. இவர்கள் போர்த்துகேயர் காலத்திலும் கறுவா சேகரித்து உரிப்பவர்களாக சேவகம் புரிந்தாலும் ஒல்லாந்தர் காலத்தில் அடிமைகள் போல மலேரியா நுளம்பு மலிந்த காடுகளில் கறுவா சேகரித்து ‘இராஜகாரிய முறையின்கீழ்’ அவற்றை உரித்து அரசுக்கு ஒப்படைக்கும்  கடுமையான சாதிரீதியான ஊழியத்தை செய்தனர். ஒல்லாந்தரின் பிற்காலத்தில் இவர்களுக்கு  சில சலுகைகள் வழங்கப்பட்டன. இவர்கள் நிலத்துடனான பிணைப்பிலிருந்து விடுபட்ட ஒரு சமூகம் என்ற முறையிலே  பிற்கால ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நகர தொழிலாளர்களாகவும் வணிகர்களாகவும்  முதன் முதலில் பயன்பெற்றவர்கள் இவர்களே. ஆங்கிலேயர் காலத்தில்  இலங்கை பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தில்  அமரபுர நிகாயாவின்  பாத்திரம்  முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னர் சாதிபாகுபாட்டிலிருந்து விடுபடுவதற்காக கிறிஸ்த்தவர்களாக மாறிய இவர்கள்  எதிர்பார்த்த சாதிபாகுபாடு மாறாததால் பெருமளவில் பௌத்தராக மாறி இந்த இயக்கத்தின் முன்னணியில் திகழ்ந்தனர்.

கறுவா பொதிசெய்யும் இலங்கையர்கள்

ஒல்லாந்தர் ஆட்சியின் போது போர்த்துகேயர் காலத்தை விடவும் கூடுதலான ஆரம்ப முதலாளித்துவ மாற்றங்கள் உண்டாக்கின. ரோமன் டச்சு சட்டமும் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டன. போர்த்துக்கேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருதார மணமுறையும் திருமணமும் கரையோர சமூகம் முழுவதும் பரவியது. ஒல்லாந்தரின் பெரும்பகுதி கடல் மட்டத்துக்கு கீழே இருக்கிறது. எனவே நீரோட்டத்தை கட்டுப்படுத்தவும் அவற்றைப் பயன்படுத்தவும் தேவையான் நிபுணத்துவம் அவர்களிடம் இருந்தது. கறுவா களனி பள்ளத்தாக்கின் காடுகளிலும் சிலாபம் முதல் வளவே கங்கை வரையிலான கோட்டை இராச்சியத்தின் கரையோரப் பகுதிகளிலும் செழித்து வளர்ந்தது. இங்கு கிடைக்கும் கறுவாவை நீர்வழியாக போக்குவரத்து செய்வது இலாபகரமானதாக இருந்ததால் தமது நிபுணத்துவத்தை பயன்படுத்தி  மூன்று கால்வாய்களை திறம்பட அமைத்தனர். அத்துடன் சில கைவிடப்பட்ட நீர்த்தேக்கங்களையும் புனருத்தாரணம் செய்தனர்.

அதுவரை  இயற்கையாக மாத்திரமே கறுவா விளையும் என்ற நம்பிக்கையை உடைத்து உலகின் முதலாவது கறுவா பெருந்தோட்டத்தை இலங்கையில் இவர்கள் வெற்றிகரமாக உருவாக்கினர்.  .இதனையடுத்து அவற்றை துறைமுகங்களுக்கு கொண்டுசெல்லும்  போக்குவரத்து வசதிகள்  உருவாக்கப்பட்டன. மாட்டு வண்டி பாதைகள் பல  உருவாகின.

ஒல்லாந்தர் கறுவா ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெருமளவு தங்கியிருந்தாலும்  ஏனைய  காசுப்பயிர் உற்பத்தியிலும் ஆர்வம் காட்டினர். மிளகு பாக்கு கோப்பி என்பன இவற்றுள் முக்கிய இடத்தை வகித்தன. இவை தோட்ட பயிர்செய்கையாக மேற்க்கொள்ளப்பட்டன. அதிலும் கோப்பி மூலம் கிடைத்த ஏற்றுமதி வருமானம் கணிசமானதாக இருந்தது.1782ல் ஜாவாவின் கோப்பி போட்டியிட தொடங்கும் வரை அராபியரின்  கோப்பியோடு இலங்கை  கோப்பி  வெற்றிகரமாக போட்டியிட்டது. அத்துடன் நெல் உற்பத்தியையும்  பெருந்தோட்ட முறையில் மேற்கொள்வதற்கு முயன்ற இவர்கள் அந்நோக்கத்திற்காக நிலத்தை ஒதுக்கி தென் இந்தியாவில்  இருந்து  சுமார் மூவாயிரம் விவசாய தொழிலாளர்களை வரவழைத்தனர். ஆயினும் அம்முயற்சி வெற்றிபெறவில்லை அவ்விவசாய தொழிலாளர்கள் என்னவானார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் கறுவா பெருந்தோட்டங்களில் உள்வாங்கப்பட்டிருக்கலாம் என்பதே ஊகமாக உள்ளது.

இவர்களின் காலத்தில் நிலம் விற்பனைப் பண்டமாக சிலப்பகுதிகளில் மாறிக்கொண்டிருந்தது. தென்னை, பனை, கள் வியாபாரம் மற்றொரு தொழிலாக வளர்ந்தது. யாழ்ப்பாணத்தில் புகையிலை தோட்டப்பயிராக வளர்க்கப்பட்டு ஏற்றுமதி வருவாய் தரும் ஒரு தொழிலாக மாறியிருந்தது. அத்துடன் யானை விற்பனைக்கான பிரதான சந்தையாகவும் உருவாகியிருந்தது. தென் இந்தியாவுக்கு அருகில் இருந்ததால் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தின் மற்றொரு முக்கிய மையமாக மன்னர் மாறியது.

கண்டி  இராச்சியம் கரையோர பகுதிகளைப்போல் முதலாளித்துவ அம்சங்களுக்கு பரிச்சயமில்லாமல் கண்டிக்கே உரிய தன்மைகொண்ட நிலபிரபுத்துவ சமூகமாகவே இருந்தது. இது பெளத்த மதத்தின் காவலனாக செயற்பட்டதுடன் போர்த்துகேயரினால் அச்சுறுத்தலுக்குள்ளான முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்து அதனால் பயன் பெற்றது. முஸ்லிம்களின் வியாபார திறனை அது பயன்படுத்திக்கொண்டதுடன் அவர்களை மலையகத்தின் பிரதான கால்வாய்களிலும் கிழக்கு மாகாணத்திலும் குடியேற்றி  போர்த்துகேயரிடமிருந்தும் பின்னர் ஒல்லாந்தர் காலத்திலும் இடம்பெற்ற படையெடுப்புகளை முறியடிப்பதில் இவர்களது பங்களிப்பைப் பெற்றுக்கொண்டது. கிறிஸ்துவ மதம் இங்கு காலனித்துவத்தின் மற்றொரு காவலரணாக சந்தேகத்துடன்  பார்க்கப்பட்டதால் கிறிஸ்துவ மதம் இங்கு குறிப்பிடத்தக்களவில் வளரவில்லை. கண்டிய சமூகத்தில் சாதி ஆழவேரூன்றியிருந்தது. இங்கு செல்வாக்குமிக்க நீண்ட பாரம்பரியம் கொண்ட உயர்குல குடும்பங்களின் ஆதிக்கம் நிலவியது. உதாரணமாக கண்டி பிரதானிகளில் ஒருவனாக இருந்த எகலபொலவின் குடும்பம்  150 வருடங்களுக்கு முன்பிருந்தே செல்வாக்கு செலுத்திவந்தது.

 ஸ்ரீ விக்ரமராஜசிங்கன்

அரசனே பெளத்தமதத்தின் பாதுகாவலனாகவும் அதிகார ஏணியின் உச்சத்திலும் இருந்தான். கண்டிய பிரதானிகளைக் கொண்ட  ஆலோசகர்சபை அதற்கடுத்த நிலையில் இருந்தது. இவர்கள் ஏகமனதாக வழங்கும் ஆலோசனைகளுக்கு அரசன் கட்டுப்படுவது சம்பிரதாயமாக இருந்தது. பொதுவாகவே கண்டிய பிரதானிகள் குடும்ப சச்சரவு, தனிப்பட்ட பகை, காழ்ப்புணர்ச்சி அகம்பாவ போட்டி போன்ற காரணங்களால் பிளவுண்டிருந்தனர். 1739 முதல்  1815 வரை 76 ஆண்டுகள்  கண்டியை ஆட்சி செய்தவர்கள் தெலுங்கு – நாயக்க வம்சத்தவராவர். இவர்கள்  பெளத்த மதத்தை சிரத்தையுடன் பின்பற்றினர். இவர்களது அரசசபை மொழி தமிழாகவே இருந்தது. 1815ல் வஞ்சனையால் பிரித்தானியர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றியபோது அதனை ஆட்சி செய்த கடைசி இலங்கை மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின்  இயற்பெயர் கண்ணுசாமி. கண்டியை ஆட்சி செய்த கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க நாயக்க மன்னன் காலத்தில் தான்  இன்றும் விமர்சையாக கொண்டாடப்படும் எசல பெரஹெர அறிமுகப்படுத்தப்பட்டது. கண்டி இராச்சியத்தில் முன்னர் மன்னனுக்கு எதிரான கிளர்ச்சிகள் அவ்வப்போது வெடித்தாலும் நாயக்கர் மன்னர் ஆட்சிக்காலத்தில் அமைதியே நிலவியது  – கடைசிமன்னன் விக்ரமசிங்க  காலத்தில் மாத்திரமே குழப்பநிலை நிலவியது.

புராதன நீர்ப்பாசன சிறு நாகரிகம் தழைத்த நுவரகலாவிய என்றழைக்கப்படும் பகுதியும் கண்டி இராச்சியத்துக்குரியதாய் இருந்தாலும் அது பெரும்பாலும் கைவிடப்பட்ட மக்கள் குடியேற்றம் குறைவாகியிருந்த வறிய பிரதேசமாக இருந்தது. கண்டி இராச்சியம் ஒன்பது நிர்வாக பிரிவுகளாக (Rata)  பிரிக்கப்பட்டிருந்தது. அவை  கண்டி தலைநகரை சுற்றிலும் இருந்த மலைபகுதியிலும்  பீடபூமிகளிலும் பரவி கிடந்தன. இவை செழிப்பானவையாக இருந்தன. இதனைவிட வளம் குன்றிய பரந்த பகுதிகள் பல திசவினிகளாக பிரிக்கப்பட்டிருந்தன இவற்றுள் மலைநாட்டில் இருந்த உலப்பன  உடபலாத்த  ஆகிய இரண்டைத்தவிர ஏனையவை தாழ் நிலத்தில் ஒல்லாந்தரின் எல்லை வரை சென்றன. நிர்வாக அலகுகளில் மாத்தளை (நான்கு கோறளை) ஊவா (ஏழு கோறளை) என்பன மிகவும் மதிப்புக்குரியவையாக திகழ்ந்தன. கண்டி மன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்த வன்னி பகுதிகள் வன்னிய பிரதானிகளால் நிர்வகிக்கப்பட்டு மன்னனுக்கு திறை  செலுத்தப்பட்டது. இன்றைய நுவரெலிய மாவட்டத்தின் பெரும்பகுதிகள் மனித குடியேற்றம் இல்லாமலே இருந்தது. இங்கிருந்த அடர்ந்த காடுகளிலிருந்து பெரும்பாலான நதிகள் உற்பத்தியானதால் அவை பாதுகாக்கப்பட்டன. சில சமயங்களில் மன்னர்கள் அங்கு வேட்டைக்கு செல்வதுண்டு. ஆயினும் கடும் குளிர் காரணமாக அங்கு அன்று மனிதர்கள் வாழமுடியாமல் இருந்தது.

இதில் முக்கிய விடயம் என்னவென்றால் போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையை ஆண்டபோது ஐரோப்பாவில் கைத்தொழில் புரட்சி இன்னும் வெடித்திருக்கவில்லை. எனவே அவர்கள் காலத்தில்  கைத்தொழில் – முதலாளித்துவ பொருளாதார மாற்றங்கள் பாரிய அளவில் ஏற்படவில்லை. அவர்கள் வர்த்தக முதலாளித்துவ காலகட்டத்துக்குரியவராக இருந்தனர். ஒல்லாந்தரின் ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் ஐரோப்பாவிலே கைத்தொழில் புரட்சி நடைபெற்றிருந்தாலும் அதன் பாதிப்பு இலங்கையில் குறைவாகவே   இருந்தது. எனவே இலங்கையில் விளையும்  வாசனைத்திரவியங்களை, குறிப்பாக கறுவாவை, ஏற்றுமதி செய்வதே இவர்களது பிரதான குறியாக இருந்தது. ஆயினும் அன்றைய மேற்கத்தைய முதலாளித்துவத்தின் ஆரம்ப விதைகளை இவர்களே விதைத்தார்கள்.

உலகை மாற்றிய கைத்தொழில் புரட்சி 1760 ன் பின்னரே பிரித்தானியாவில் நடைப் பெற்றது. 1765ல் ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தார். 1804ல் தான்  நீராவியால் இயங்கும் முதலாவது புகையிரதம் ஓடியது. 1885ல் தான் வானொலி கண்டுபிடிக்கப்பட்டது.  1886 ல் தான் முதலாவது கார் அறிமுகப்படுத்தப்பட்டது. நவீன தார் பாதைகள் 1834 ம் ஆண்டு முதல் தான் போடப்பட்டன. 1903ல் தான் முதலாவது விமானம் பறந்தது.

பிரித்தானியர் இலங்கையை தமது காலனித்துவ பிடிக்குள் 1796ல்  கொண்டுவந்தபோது அவர்களே உலகில் மிகவும் முன்னேறிய உற்பத்திமுறையைக் கொண்டிருந்தனர். சூரியன் அஸ்தமிக்காத  அவர்களது விரிந்த சாம்ராஜ்யம் உதயமாகிக்கொண்டிருந்தது. ஆனால் இலங்கையோ இன்னும் பின்தங்கிய – நிலப்பிரபுத்துவ – சுயதேவை பொருளாதாரத்தையே  கொண்டிருந்தது. இந்தியாவில் காணப்பட்ட முன்னோடி – தொழில்மயமாக்கப்பட்ட முகலாய வங்காளம் (Proto-industrialized Mughal Bengal) போன்ற  ஆரம்ப முதலாளித்துவ வளர்ச்சி இங்கு காணப்படவில்லை. பிரித்தானியர் கண்டியை 1815 ல் கைப்பற்றி முழு இலங்கையையும் ஒரே ஆட்சியின்  கீழ் கொண்டுவந்த  பின்னர்தான் இலங்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

தொடரும்…

உசாத்துணை நூல்கள்

  1. Abesinghe T.B.H. POrtugues Rule in Ceylon 1594 -1612 (Colombo 1966)
  2. Abeysinghe, Tikiri Jaffna under the Portuguese. Colombo, 2005,. ISBN 955-1131-70-1.
  3. Arasaratnam S. Dutch Power in Ceylon, 1658-1687 (Amsterdam, 1958)
  4. Channa Wicremasekera, Kandy at War. Sri Lanka: Vijitha Yapa Publications, 2004. ISBN 955-8095-52-4
  5. Dewaraja L.S. A Study of the  Political and Social Structure of the Kandyan Kingdom of Ceylon, 1707-1760 (Colombo 1972)
  6. Gaston Pereira C. Kandy fights the Portuguese. Sri Lanka: Vijitha Yapa Publications, July 2007. ISBN 978-955-1266-77-6
  7. Gnanaprakasar, Swamy A Critical History of Jaffna (review of Yalpana Vaipava Malai). New Delhi: Asian Educational Services. 2003. ISBN 81-206-1686-3.
  8. Goonewardane K.W. The Foundation of Dutch Power in Ceylon (Amsterdam 1958)
  9. Kanapathipillai V. Dutch Rule in Maritime Ceylon 1766-1976 ((Unpublished PH.D.Thesis, University of London, 1969)
  10. Kunarasa, K The Jaffna Dynasty. Johor Bahru: Dynasty of Jaffna King’s Historical Society. , 2003, ISBN 955-8455-00-8.
  11. Michael Roberts, Sinhala Consciousness in the Kandyan Period. Sri Lanka: Vijitha Yapa Publications, 2004. ISBN 955-8095-31-1,
  12. Perera, S.G., A History of Ceylon for Schools – The Portuguese and the Dutch Periods 1505 -1795, (Colombo: Associated Newspapers of Ceylon Ltd., 1932)
  13. Silva C.R.de. The Portuguese in Celon 1617-1638 (Colombo, 1972)
  14. Silva, K. M. de.  A History of Sri Lanka, University of California Press  1981. ISBN 0-520-04320-0.
  15. Somaratne G.P.V. Political History of the Kingdom of Kotte (Colombo 1975)
  16. Tennent, Sir James Emerson, Christianity in Ceylon ( New Delhi: Asian Educational Services, 1998)
  17. Weeraratna Senaka, Repression of Buddhism in Sri Lanka by the Portuguese 1505-1658, http://www.vgweb.org/unethicalconversion/port_rep.htm
  18. Wickremesekera S.B.W. The Social and Political Organisation of the Kandyan Kingdom (Unpublished M.A.Thesis, University of London, 1961)
  19. Winius G.D. The Fatal History of Portuguese Ceylon (Cambridge 1971)


ஒலிவடிவில் கேட்க

43680 பார்வைகள்

About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)