Arts
20 நிமிட வாசிப்பு

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு II

March 27, 2023 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

நாடுகாட்டுப் பரவணியில் கிடைக்கும் இரண்டு சுவையான தகவல்கள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று, குலக்கலப்பு மற்றையது குலமுரண்பாடுகள் பற்றிய தகவல்கள்.

இராசபக்ச முதலியாரின் குடும்பம் முதலில் தளவில்லில் குடியேறியபோது, வழியில் கண்டெடுத்த வேடக்குழந்தையை பறைநாச்சி என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்கள். சலவைத்தொழிலாளியினது மனைவி இறந்தபோது அந்தக் குழந்தையின் பரம்பரையே சலவைத்தொழிலாளர் வம்சம் தழைக்க உதவுகிறது.

ஏனெனில், கொள்ளை நோய்களின் தாக்கம், குடித்தொகை எண்ணிக்கை குறைவு முதலிய காரணங்களால் மக்கட்செல்வம் மிக அருமையானதாகக் கருதப்பட்ட காலம் அது. இந்தச் சின்னஞ்சிறு நூலிலேயே ‘பெண்சாதி’ இறந்துபோன இரு சம்பவங்களும் “வங்கி^சம் காலற்றுப்” (வம்சம் அழிந்து) போன இரு சம்பவங்களும் முக்கியமான நிகழ்வுகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன (பத்மநாதன் 1976:87,89). இக்காரணங்களால், மட்டக்களப்பில் வழக்கத்தில் இருந்த அதே மருமக்கட்தாயம் கடைப்பிடிக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைக்கும் நாடுகாட்டில் குலம்பெருகச் செய்யும் பெண் குழந்தைகள் அதிகமாகவே விரும்பப்பட்டிருக்கிறார்கள் என்று ஊகிக்கலாம்.

ஆனால், செல்லாப்பற்று வேடர் பரவர், சான்றார் (சாண்டார்) சமூகங்களில் பிள்ளைகளைத் திருடி விற்கத் தொடங்குகிறார்கள். தங்கள் வம்சக் குழந்தை நாடுகாட்டு உயர்குடும்பத்தின்  பணிக்குழாத்தில் இணைந்து கொண்டதையும் அங்கு பெண்குழந்தைகள் தேவைப்படுவதையும் உணர்ந்தே வேடர் வேறு சமூகங்களின் குழந்தைகளைக் சிறைப்பிடித்து வந்து விற்றிருக்கக்கூடும். அதற்கு உபகாரமாக இராசபக்^ச முதலியார் காங்குத்துப்பட்டித் துணி பரிசளிக்கிறார் என்பது, அந்தக் கடத்தல்களை நியாயப்படுத்தவேண்டிய தேவை அவர் பக்கம் இருந்தது என்பதையும் அவ்விற்பனையை அவர் தவிர்க்கமுடியாமல் ஏற்றுக்கொண்டார் என்பதையுமே காட்டுகிறது.

ஆனால் குழந்தைத் சிறைப்பிடித்தலை முடிவுகட்டவேண்டிய தேவையும் அவருக்கு எழுகிறது. பழைய நிலவுடைமைச் சமூகத்தின் ஒரு குழுத்தலைவராக வீற்றிருந்த அந்தமுதலியாருக்கு பாதிக்கப்பட்ட சமூகங்களிலிருந்து அத்தகைய அழுத்தங்கள் வந்திருப்பது நியாயமே. குழந்தைத் சிறைப்பிடித்தலுக்கு முடிவுகட்டுவதற்காக,  கண்டி அரசனால் தண்டிக்கப்பட்டு “கெங்கைக்கரையிலே தள்ளி” நாடுகடத்தப்பட்ட இரு பட்டாணியரை அழைத்து வந்து காவலுக்கு இருத்துகிறார்.

ஆனால் வேடர்களின் சமூக வகிபாகத்தை நாடுகாட்டு அதிகாரவர்க்கம் ஏற்று அங்கீகரித்திருந்தது என்பதற்கான குறிப்புகளும் ஆங்காங்கே கிடைக்கின்றன. வேடர்கள் ஏனைய சமூகங்களுக்கு மெழுகு, தேன் விற்பதையும் வயல்களில் வேலை செய்து கூலியாக நெற்கட்டுகளைப் பெற்றுச் சென்றதையும் பரவணிக்கல்வெட்டு விவரிக்கின்றது. அவர்களது ஊழியம், கக்கூசி வீடு கட்டுவதும் தட்டுவேலி கட்டுவதும். நெவில் கக்கூசி வீடு என்ற சொல்லை “தற்காலிகக்கட்டடம்” என்று மொழியாக்குகிறார். கக்கூசி என்பது இடச்சு Kakhuis இலிருந்து தமிழுக்கு வந்த திசைச்சொல். இன்றுள்ள மலசலகூடம் என்ற பொருள் அன்றி, நெவில் காலத்தில் அதற்கு வேறு பொருள் இருந்ததா என்பது தெரியவில்லை.

புலியந்தீவிலிருந்த வேடன் புலியனுக்கு, கந்தி என்பவளை மணமுடித்துக்கொடுப்பவர் இராசபக்ச முதலியார் தான். கரடியன் என்ற வேடன் வேடர்களில் முன்னிலை பெற்றிருந்ததையும், “எல்லாத்துக்கும் முன்னீடு வேடர் தான்” என்று பரவணிக்கல்வெட்டே ஓரிடத்தில் சொல்வதையும் அவர்களது சமூக ஏற்புக்கான ஆதாரங்களாகச் சொல்லலாம்.

மட்டக்களப்பின் புலியந்தீவு (இன்றைய புளியந்தீவு, மட்டுநகர்), கரடியனாறு முதலிய ஊர்ப்பெயர்களைப் புரிந்துகொள்ளவும், அங்கிருந்த வேடருக்கும் நாடுகாட்டுக்கும் தொடர்ச்சியான இருந்த உறவை ஊகிக்கவும் இந்நூல் உதவுகின்றது. இங்கு குறிப்பிடப்படும் “செல்லாப்பற்று” என்ற பெயரை சமூக உட்பிரிவின் பெயராகக் கொண்ட வேடர் சமூகத்தினர் இன்றும் கிரான் – சித்தாண்டிப் பகுதியில் வசித்துவருகிறார்கள். (பத்திநாதன், 2022).  இவர்கள் விந்தனையிலிருந்த செல்லாப்பற்று என்ற இடத்திலிருந்து இங்கு வந்திருக்கலாம். அல்லது செல்லாப்பற்று என்பது மேற்காக கரடியனாறு, புளியந்தீவு உட்பட மேற்காக விந்தனை வரை நீண்டிருந்த வேடரின் வாழ்விடத்துக்கு வழங்கப்பட்ட பெயராக இருக்கக்கூடும்.

பட்டம்கட்டின முதலிமார், பட்டம்கட்டாத முதலிமார், தலைமைக்காரப் போடிமார், இறைக்காரப்போடிமார் என்ற நான்கு அதிகாரப்பதவிகள் இந்நூலில் சொல்லப்படுகின்றன. முதலி என்பது கண்டி அரசு காலக் கௌரவப்பதவி. முதலிமார் அந்தக்கால சமூகத்தில் “நிலைமைதலைமை” பெற்றிருந்தனர் என்பது இந்நூலின் வேறோரிடத்தில் சொல்லப்படுகின்றது. நாடுகாட்டில் வாழ்ந்த பதின்மூன்று முதலிமாரில் ஒன்பது பேருக்குப் “பட்டம்கட்டி” கௌரவம் கொடுக்கப்பட்டிருந்தது. இவர்கள் கண்டி அரசில் முறைப்படி அனுமதி பெற்ற முதலிமாராக இருக்கக்கூடும். ஏனையோர் தங்கள் குலமுதன்மையால் அல்லது சமூகப் படிநிலையால் அல்லது மரபால் முதலியாராக மதிக்கப்பட்ட – ஆனால் அரச அங்கீகாரம் பெறாத முதலிமாராக இருக்கலாம்.

இவர்கள் நாடுகாடுப்பற்றை ஒன்றன்பின் ஒன்றாக ஆண்டார்களா, அல்லது சமகாலத்தில் ஆண்டார்களா என்று உறுதிபடக் கூறமுடியாதுள்ளது. இரா|சபக்^ச முதலியார் காலத்தில்  முன்பின்னாக நாடுகாட்டை ஆண்டவர்களா என்பதை ஊகிக்க முடியாதுள்ளது.

எனினும் பட்டங்கட்டின சூரியகாந்த முதலியாரின் மகன் அறுமக்குட்டிப்போடியும், பட்டங்கட்டாத அக்கரைப்பற்றுத் திருத்தின நிலைமையிறாளை முதலியாரும் இரா|சபக்`ச முதலியாரின் காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது, கமச்செய்கை ஆரம்பமான சம்பவம் விவரிக்கப்படும் இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே பெயர் குறிப்பிட்ட பதினால்வரும் இரா|சபக்^ச முதலியாரை அண்மித்து முன்பின்னாக வாழ்ந்தவர்கள் என்றே கொள்ளமுடிகின்றது.

முதலிமாருக்கு அடுத்த சமூக நிலையில் இருந்தவர்கள் தலைமைக்காரப்போடி என்போர். முதலிமார் நிலைமை – தலைமையைப் பெற்றிருக்க, இவர்கள் தலைமையை மட்டும் பெற்றிருக்கவேண்டும். இறைக்காரப்போடிமார் தலைமைப்பதவியைப் பெறாத ஆனால் நிலக்கிழார்களாக விளங்கிய போடிமார். பரவணிக்கல்வெட்டு தரும் பட்டியலை ஆராயும் போது, முதலிமாராக சிங்களவரே விளங்கியது தெரியவருகின்றது.

நாடுகாட்டில் தனி அரசியல் அலகு உருவாவதன் பொருத்தமின்மையைக் கண்டுகொண்ட கண்டி மன்னன் இனி அங்கு “ஊழியபாழியம்” ஒன்றுமில்லை என ஆணையிடுகின்றான். அங்கு அவன் வழங்கிய மானியங்களும் வழிபாட்டிடங்களும் கைவிடப்பட்டு அங்கு குடியிருந்தோரில் பலர் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். ஆனால் பரவணிக்கல்வெட்டு சொல்வது போல் நாடுகாடு முற்றாகப் பாழடையவில்லை. 1816இலும் அங்கு 1041 பேர் வசித்து வந்திருக்கிறார்கள்.  இறக்காமம் (60 பேர்), வரிப்பத்தான்சேனை (70 பேர்), பனிச்சைவட்டவான் (-நிந்தவூர் 655 பேர்) என்பன அப்போதும் குறிப்பிடத்தக்க குடித்தொகைகளோடு   ஊர்கள் இருந்தன. (Census1816:121-122). இன்றும் அங்கு வதியும் சிங்கள – தமிழ் – மு`ச்லிம்களில் பெரும்பாலானோர் பழைய நாடுகாட்டு மக்களின் வாரிசுகளே.

நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டின் மூலத்திலிருந்து பிரதியெடுக்கப்பட்ட இரண்டுக்கும் குறையாத நாடுகாட்டுப் பரவணி ஏட்டுச்சுவடிகள் சில இன்றும் கீழைக்கரையில் தனியார் வசம் உள்ளன (தில்லைநாதன், 2009:32). பிரித்தானிய அரும்பொருளகத்தில் பேராசிரியர்.சி.பத்மநாதனுக்கு கிடைத்த கையெழுத்துப்பிரதியும் உள்ளது[1]. இவை அனைத்தும் பெறப்பட்டு பாடபேதங்கள் ஆராயப்பட்டு வெளியிடப்படும் நாடுகாட்டுப்பரவணிக் கல்வெட்டின் திருத்திய பதிப்பு முழுமையான ஒரு நூலாக அமையும். ஆனால் பேராசிரியர். சி. பத்மநாதனின் பிரதி பலதடவை மீள்பதிப்புக் கண்டுள்ளபோதும், நெவிலின் ஆங்கில மொழியாக்கப்பிரதி இதுவரை பொதுக்கவனத்துக்கு வரவில்லை என்பதும் நாடுகாட்டுப்பரவணிக் கல்வெட்டு பற்றி ஈழத்தமிழ்ப் புலமைச்சமூகம் பெரிதாக அறியவில்லை என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டு, பரவணிக் கல்வெட்டின் மூலவடிவம் இங்கு வெளியிடப்படுகின்றது.  

நெவிலின் ஆங்கில மொழியாக்கம் வாசிக்கப்பட்டு அதன் மூலத்தமிழ் வடிவம் ஊகிக்கப்பட்டு, அது பத்மநாதனின் பிரதியுடன் ஒப்பிடப்பட்ட பின்னரே, இப்பிரசுரம் வெளியாகின்றது. இதனால் இம்மூலவடிவம் கொண்டுள்ள தனித்துவங்கள் பல.  குறிப்பாக மூன்றைச் சொல்லலாம்.

முதலாவது, சோனகரின் ஏழு குடிகள் நாடுகாட்டுக்கு வந்ததை பத்மநாதன் கூறுமிடத்தில் அவரது பிரதியில் ஆறு குடிகளே குறிப்பிடப்பட்டுள்ளன. அல்லது அவருக்குக் கிடைத்த கையெழுத்துப்பிரதியில் ஒருகுடி தவறுதலாக விடுபட்டிருக்க வேண்டும். ஆனால் தவறவிடப்பட்ட “உசவீடு மீராலெவ்வைக் குடி” நெவிலின் மொழியாக்கத்தில் கிடைக்கின்றது.

இரண்டாவது, கண்டி மகாராசா வந்தபோது கஞ்சா வெட்டிய ஆண்டி “எல்லாரையும் கூட்டிப்போயச்சங்கூறினன்” என்று பத்மநாதன் வாசித்த ஓரிடத்தை நெவில் “[he] had shank blown” – “எல்லாரையும் கூட்டிப்போய்ச் சங்கூதினன்” என்று வாசித்து எழுதுகிறார். “போய் அச்சம் கூறினன்” என்பதும் “போய்ச் சங்கூதினன்” என்பதும் ஒத்த சொற்றொடர்கள். மூலப்பிரதிகள் கிடைக்காத நிலையில் இதில் எதை சரியென்பது?

கீழைக்கரையில் ஒரு தொன்மம் கிடைக்கின்றது. கண்டிராசா தூலசிங்கன் 1469ஆம் ஆண்டு மட்டக்களப்பு நாடு பார்க்க வந்தபோது அவனை வரவேற்று  ஒருவர் சங்கூதியபடி ஓடிவந்தார். சந்தோசமடைந்த இராசாவால் அவருக்கு வழங்கப்பட்ட வயல்வெளி சங்கோடிப்பற்று (அல்லது சங்கூதிப்பற்று) என்று அழைக்கப்பட்டது (சலீம், 1990:18). இந்தக் கதையைக்கொண்டு நெவிலின் வாசிப்பே திருத்தமானது என்று கொள்ளப்பட முடியும்.

மூன்றாவது, பத்மநாதன் பிரதியிலுள்ள “பைக்கிருக” என்ற சொல், இன்றைய மட்டக்களப்புத் தமிழில் வழக்கில் இல்லை. அச்சொல், இ`ச்லாமியத் துறவியைக் குறிப்பிடும் “ஃபக்கீர்” என்ற சொல்லின் தமிழாக்கம் என்பதைத் தெளிவுபடுத்துவது நெவிலின் மொழியாக்கம் தான் (Nevill:1887b).

நான்காவது, செல்லாப்பற்று வேடர் பிள்ளை சிறைப்பிடித்தமையைக் கூறுமிடத்தில், பத்மநாதன் பிரதியில் “அது பரவரில் மூண்டும் சாண்டாரில் மூண்டும்” என்று வருகின்றது. நெவில் பிரதியில் That custom exists among the Paravar also, and among the Sandar என்று வருகின்றது. எனவே இதன் மூலவடிவம்  “அது பரவரிலும் உண்டு சாண்டாரிலும் உண்டு”என்றே ஊகிக்க முடியும். இதில் எதைச் சரியென்று ஏற்பதென்று மயக்கம் ஏற்படுகின்றது.

நெவில் வாசிப்பின் படி, பிள்ளைகளை விலைக்கு விற்கும் வழக்கம் பரவரிடமும் சான்றாரிடமும் (சாண்டார்) இருக்கிறது. பத்மநாதன் வாசிப்பின் படி, வேடர்கள் பரவரிடமும் சான்றாரிடமும் (சாண்டார்) மூன்று மூன்று பிள்ளைகளை கைப்பற்றி விற்றார்கள். மூன்று இன்னோரிடத்திலும் மூண்டு என்றே வருவதால் பத்மநாதன் வாசிப்பே சரியானதாகக் கூடும். “வேடரின் பிரளிக்கு நல்லதென்று” இராசபக்கி^ச முதலியார் பட்டாணியரைப் பிடித்து வருவதால், வேடர் வேறு சமூகங்களில் குழந்தைகளை சிறையெடுத்து விற்றமையே காரணம் என்று ஊகிக்கமுடிகின்றது.

நாடுகாட்டுப் பரவணி

ஈசுர வரு^சம் தைமாதம் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உச்சிக்கு வர ஐந்தடி நீளமென்னச் சீத்தவாக்கை நகரியாலே தளவில்லுக்கு[2] வந்தது, சிப்பத்தையும் மூன்று படித்துக்[3] கொண்டு வந்தார்கள். அங்காலே வந்தது ஆரென்றால் நிலமையிறாளையும் அவருடைய பெண்சாதி கிரியெத்தனாவும் அவருடைய மகன் இராசபக்கி^ச முதலியாரும். அவருடன் பிறந்த லொக்கெத்தனாவும் அவ புரு^சன் காளாஞ்சி அப்புகாமியும் நடுவிலாள் குடா எத்தனாவும் இளையவள் குமாரெத்தனாவுமாக வந்தது.

அவர்கள் வருகிறபோது கொண்டு வந்தது அடியாளாரென்றால் கொம்பியும் முத்துவனும், வண்ணாரில் அத்திவரனும் வீரனென்கிறவனும் பெண்சாதியும், முத்துவனும் பெண்சாதியும், தட்டாரிற் செம்பனும் பெண்சாதியும், சங்கரவரிற்[4] குஞ்சனும் பெண்சாதியும், குண்ணறையரில்[5] வதனனும் பெண்சாதியும், ஒலியரிற் பத்தனும் பெண்சாதியுமாக இப்படி ஆணும் பெண்ணுமாகக் கொண்டு வந்தது.

அதுபோக அவர்கள் வரக்கே[6] கொண்டு வந்தது எருமைமாடு பசுமாடுகளுங் கொண்டு அதுகளிற் பாலுங் கறந்து கொண்டு பாலுக்கு உறையுங் கொண்டு வந்தார்கள். அவர்களின் மாட்டுக்குக் குறியென்னவென்றால்[7] விலங்கு சம்மட்டியும் பசும்பையும் பசும்பைக்குமேல் தாமரைப்பூவும் இரணையிளம்பிறையும்[8] கொழுக்குறியுமாக மாடு சாய்த்துக்கொண்டு வந்தார்கள். இவர்களுடைய பணிவிடையென்னவானாற் பணியவாசலுக்குப்[9] போய் இராசகுமாரனுக்குப் பால்கொடுத்து வளர்க்கிற பள்ளகொம்பை அதிகார வங்கி^சம்[10] கிரியெத்தனாவென்கிற மனுதியினுடைய பிள்ளையொன்று தவழுகிற பருவம். அந்தப் பிள்ளையை அடியாளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி விட்டுப் போட்டு பணியவாசலுக்கு இராசகுமாரனுக்குப் பால் கொடுக்கப் போன.

பாலுங் கொடுத்துப்போட்டு வருகிற நேரமந்தப் பிள்ளையை அடியாள் தேடாமல் விட்ட படியால் அழுதழுது இருந்தது, அதையோ வத்தை[11] முகாந்திரங்கண்டு அந்தப் பிள்ளைக்கு வெள்ளிக் கரண்டகத்தைக்[12] கொடுத்துப் பழக்காட்டினன். அதை அவ கண்டு சோனகன் என் பிள்ளையைத் தொடலாமோவென்று[13] அந்தப் பிள்ளையையெடுத்தெறிந்து கொன்றுபோட்டு அந்தக் கோபத்தோடே பிறப்பட்டுத்தான் நாடுகாட்டு இறக்காமத்துக்கு வந்தது.

அவ வந்து முப்பது வரு^சத்துக்குப் பிறகுதான் பிலபவ வரு^சம் இராசபக்கி^ச முதலியாரும் அவருடைய சனங்களும் அவர் உடன்பிறந்தாள் இளமிப்பிள்ளையும்  எத்தனாவும் அவர் மருமகள் குமாரெத்தனாவும் முத்துவனென்கிற அடியானும் பெண்சாதியுமாக இறக்காமத்தில் வந்திருந்துகொண்டு உளாமுனை திருத்திக்கொண்டு இருந்து வருகிற காலத்தில், இராசபக்கி^ச முதலியாருடைய தங்கை குடா எத்தனாவும் அவ புரு^சனும் அடியானும் அடியாளும் கொஞ்சச் சனங்களுமாகப் போய்க் கருந்தெகிழங்கொடிக்காடு வெட்டி யூர்முனை திருத்திக்கொண்டு வீடுவாசல்களுங் கட்டிக்கொண்டு இருந்து வருகிற காலத்திற் பெரிய பட்டியில் மாடுங் கட்டிக்கொண்டு நிலமை தலைமையும் ஆண்டுகொண்டு இருந்து வருகிற காலத்தில் அக்கரைப்பற்று[14] நிலமையிறாளையும் காளாஞ்சி அப்புகாமியும் கண்டி மகாராசா ஆண்டவரிடத்திற்கு நகரிக்குப்[15] போய் நிலமை தலமையும் பெற்றுங்கொண்டு ஆண்டனுபவித்துக் கொண்டிருக்கிற போது அவர்கள் ஒக்கிலாக[16] வந்தார்கள் கோப்பி குடியார். அவர்களும் ஏவல் பணிவிடை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அதுபோக இறக்காமம் நாடுகாடு முத்துந்[17] திருத்திக்கொண்டு இருந்து இராசபக்கி^ச முதலியாரும் அவருடைய சனங்களும் மாடு கட்டுகிறது; பட்டியவத்தவளையிலும் வாடிமுனையிலும் மாடுகட்டுகிறது. முத்துவனென்கிற அடியான் அந்த மாடுசாய்த்த பாமங்கையிற் பால்முட்டியில் நெல்லு அள்ளிக்கொண்டு போய் அந்தப் பாமங்கையில் விரைத்தான். அது நல்லாய் விளைந்து புதிருமுண்டு போட்டு அதின் பின் இராசபக்கி^ச முதலியார் ஐந்துவெளி திருத்தி விரைத்தார். அதின் பிறகு இராசபக்கி^ச முதலியார் மருமகள் குமார எத்தனாவைக் கலியாணம் பண்ணிக்கொடுத்து வாடிமுனையிற் குடியிருத்தினார்.

அதிலிருந்து கொண்டு[18] விரைத்துத் தின்று கொண்டு வருகிறபோது – திருவீர சூர தம்பு லோக சங்காரனென்கிற[19] வன்னியவிராசாக்கள் ஏழுபேர் இந்தச் செய்தி கேட்டு எங்களுக்குமொரு வெளிவெட்டித் திருத்தித்தரவேணுமென்று இராசபக்கி^ச முதலியாரிடத்திற் கேட்டனுப்ப அப்போ அவர் வேடரைக்கொண்டு வெட்டுவித்துக் கொடுத்தது. மேட்டுவெளியும் பள்ளவெளியுமிந்த இரண்டு வெளியும் வன்னிய இராசாவுக்கே கொடுத்தார். இந்த இரண்டு வெளிக்கும் முன்னீடு வேடரிற் சக்கிளையன் என்கிற வேடன். இந்த வெளி திருத்தின பிறகு ஏழு வெளியும் விரைக்கிறது. அதின்பிறகு சுங்கத்துறைவெளி வெட்டித் திருத்தினது அவருக்குப் பாயிளைத்துக் கொடுக்கிற குண்ணறையன்[20].

அதின் பிறகு அவருடைய அடியான் வலிப்பத்தன்சேனை[21] வெட்டிக்கொண்டிருந்து வலிப்பத்தனிலிருந்துகொண்டு பத்திப்போடி பள்ளவெளியோடே ஒரு இறையாகக்[22] கொடுக்கிறது இரண்டு வெளிக்கும் உசரவேகாமம்[23] வெட்டித் திருத்தினது முதலிக்குட்டிப்போடி. கடவத்தை வெளி வெட்டித் திருத்தினது சூரியகாந்த முதலியார் மகன் அறுமக்குட்டிப்போடி, திவிளானை வெளி வெட்டித் திருத்தினது சென்னாஞ்சிப்போடி, கல்மடு முதலியாரின் மகன் மணிப்போடி[24] பொத்தானை வெளி வெட்டித் திருத்தினது, வேலாப்போடியார் சீயான் கந்திப்போடி மராட்டியாவெளி[25], வம்மியடி வயல் வெட்டித் திருத்தினது பேராதனையப்பு, பேய்களைக்[26] கொண்டு வெட்டித் திருத்தினது. நெட்டிரும்வில் திருத்தினது மங்கலப்போடி. கொன்றைவட்டான் அரசடிப்பற்றுத் திருத்தினது பத்திப்போடி,

இப்படியவர்கள் வெட்டித் திருத்திக் குடியிருக்கும் நாளில் அந்த நாளில் அந்த வெளிக்கு அந்தச் சனங்கள் சகலரும் நின்று விரைத்து ஆண்டனுபவிக்கும் வேளையில் இவர்களொக்கிலாக வந்த சோனகர்கள் ஆரென்றாற் பொன்னாச்சி குடியான் அவக்கனும்[27] அவனுடைய சனங்களும் வந்தார்கள். அதின் பிறகு உசவீடு மீராலெவ்வைக் குடியார்.[28] வரிசைநாச்சி குடியார். அதின் பிறகு முகாந்திரநாச்சி குடியார். அதின்பிறகு மாலைகட்டி குடியார். அதின் பிறகு கிணிக்கருடன் குடியார். அதின்பிறகு பணிய வீட்டுக் குடியார். இந்த ஏழு குடிக்கும் முன்னீடு பொன்னாச்சி குடியார்.

இந்த ஏழு குடியும் வந்து அவர்கள் சொற்கீழமைந்து நடந்துவருகிற காலத்திற் கண்டியில் மகாராசா மட்டக்களப்பு நாடு பார்க்கவும் விகாரைகள் பார்க்கவும் எழுந்தருளி வருகிற காலத்தில் முதலிமாருங்கூட வந்தார்கள். சோனகரும் போய் விண்ணப்பஞ் செய்தார்கள். அப்போ இராசா குதிரைக்கு முன்னே ஓடத்தக்கவர்கள் ஆரென்று கேட்டார். எல்லாரும் பேசாமலிருந்தார்கள். அப்போ அவக்கன் நான் ஒடுவேனென்றான். ஓடச்சொல்லி ஓடினவிடத்திற் குதிரைக்கு முன்னாக விழுந்திட்டான். அப்போ முகத்திலே துவாய்ச்சீலை போட்டுச் சிரித்து உனக்கென்ன வேணுமென்று கேட்டார். அப்போ அவக்கன் நாயடியேனுக்கு வயிற்று வளப்புக்கொன்றுமில்லை என்று சொல்லச் சுங்கத்துறை முத்தட்டு ஒன்றுக்குச் சீட்டுந் திருமுகமுங் கொடுத்தார். அதின்பிறகு இரட்டை வரிசை முதலியார் அவக்கனுக்குத் திருக்கோவிலில் ஒரு திருவேட்டைப்பானை கொடுத்தார்.[29]

அதன்பிறகு பட்டிப்பளைக்குப் போய்ப் பருத்திக்காவில் இரும்பு ஒளிச்சுக்கொண்டு வந்து சிங்காரவத்தையிலிருக்கிற ஏழு வன்னிய இராசாக்களிடத்திலும் வெளிப்பட்டான்[30]. அப்போ அவர்கள் தான் பொன்னாயமுங்[31] கொடுத்து அவக்கனுக்கு அணுக்கன் வெளியுங் கொடுத்து இந்த ஏழு குடிக்கும் முன்னீடு கொடுத்தார்கள். அதின் பிறகு கண்டியில் மகாராசா நகர சோதனைக்குப் பைக்கிருக[32] கோலமாகப் புறப்பட்டுப் பைக்கிருகசேனைப்பள்ளியில்[33] வந்திருந்தார். அப்போ அந்தப் பள்ளியில் மோதீன் அவர்களுக்கு உபகாரங் கொடுத்தான். அவன் மெத்த வழிபட்டபடியால் மாயக்காலிமலை வழியிற் பெருங்கிளாக் கொடியை மந்திரவாளினாலே வெட்டிப்போட்டு நகரிக்குப் போய் வட்டேறெழுதி வரவிடுத்தார் [34]. வரிப்பத்தன்சேனைப் பள்ளிக்குப் பத்திப்போடிவெளியாலே யொரு இலவிசங் கொடுக்கச் சொல்லிப்போட இராசபக்கி^ச முதலியார் கொடுத்துப் போட்டார்.

உசாத்துணை

  1. கமலநாதன், சா.இ. கமலநாதன், கமலா. (2005). மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், கொழும்பு – சென்னை:குமரன் புத்தக இல்லம்.
  2. சலீம், ஏ.ஆர்.எம். (1990). அக்கரைப்பற்று வரலாறு. அக்கரைப்பற்று: /கிரா பப்ளிகேசன்`ச்.
  3. தில்லைநாதன், சா. (2009). மட்டக்களப்புத் தமிழர் பண்பாட்டு மரபுகள். கொழும்பு – சென்னை: குமரன் புத்தக இல்லம்.
  4. துலாஞ்சனன், வி. (2021). மட்டுக்களப்பு எட்டுப்பகுதி. தம்பிலுவில்:நூலாசிரியர்.
  5. பத்திநாதன், க. (2022). கடலோர வேட்டுவ சமூகங்களுள் காணப்படும் குடிவழமைகள். எழுநா, https://ezhunaonline.com/இலிருந்து மீள்விக்கப்பட்டது.
  6. பத்மநாதன், சி. (1976). நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு. மட்டக்களப்பு மகாநாடு நினைவு மலர், மட்டக்களப்பு: அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற மட்டக்களப்பு மகாநாட்டு அமைப்புக்குழு. பப. 82-90.
  7. Census (1816). Return of the Population of the Maritime Districts of Ceylon. Colombo: The Government Press.
  8. Nevill, H. (1887a). “Nadukadu Record”. Taprobanian (August 1887), pp. 128.
  9. Nevill, H. (1887b). “Nadukadu Record”. Taprobanin (October 1887), pp. 137-141.
  10. Sessional Papers XV, (1959). Report of the Delimitation Commission, Colombo: Government Publications Bureau.

அடிகுறிப்பு

[1] தகவல்: எழுத்தாளர் முகம்மட் சாக்கீர்

[2] தளவில் என்ற ஊர், இன்றைய அம்பாரை கல்மடு ஊருக்கு தென்மேற்கே அமைந்திருந்ததாக இடச்சு வரைபடம் ஒன்று காண்பிக்கிறது. இவ்வூர் இங்குராணையை அண்மித்து அமைந்திருக்கக் கூடும்.

[3] அகராதிப் பொருளில் சிப்பம் என்றால் பொதி அல்லது புகையிலை மூட்டை. பயணத்தில் இருந்தவர்கள் மூன்று சிப்பம் தூக்கி வந்திருக்கலாம். ஆனால், இவர்கள் சிப்பத்தை ‘படித்துக்’ கொண்டு வருவதன் அர்த்தம் புரியவில்லை. மடித்து என்பதன் எழுத்துப்பிழையா என்பதும் தெரியவில்லை. நெவில் சிப்பம் என்பதை – three (Sibadu) songs “மூன்று (சிபடு) பாடல்கள்” என்று மொழியாக்குகிறார்.

[4] பதநீர் வடித்து சர்க்கரை செய்யும் வகும்புறா சமூகத்தவர்

[5] பாயிழைக்கும் சமூகத்தவர். அடிக்குறிப்பு   (20)ஐப் பார்க்க

[6] வரும் போது. பேச்சுவழக்கு (பே.வ)

[7] தங்கள் குலம், குல உட்பிரிவுகளைப் பொறுத்து, மாடுகளை அடையாளப்படுத்துவதற்காக சூடான கம்பிகளால் “குறிசுடுவது” பழைய வழக்கம்.

[8] இரட்டைப்பிறைகள்

[9] பணியவாசல் (கீழ் வாசல்) – அந்தப்புரம். பெரியவாசல் என்பது அரண்மனை.  ஒப்பிடுக சிங்களம் : Mahavāsala, மஃகவா`சல = மகாவாசல்.

[10] வம்சம், பே.வ.

[11]  Watta Muhandiram (நெவில்). ஓவத்தை முகாந்திரம் என்பதே  பொருத்தம். ஓவத்தை கேகாலை மாவனெல்லைக்கு அருகே உள்ள பழைமைவாய்ந்த மு`ச்லீம் ஊர்.

[12] செம்பு.

[13] இதை உயர்குடிச் சிங்களவரிடமிருந்த தீண்டாமை வழக்கம் என்று ஊகிப்பார் நெவில் (Nevill:1887a).

[14] அக்கரைப்பற்று என்ற சொல் பத்மநாதனின் பிரதியில் இல்லை.

[15] நகரி என்ற தமிழ்ச்சொல் சிங்களத்தில் நுவர என்று ஆகும். கண்டியின் சிங்களப்பெயர் மஃகநுவர. பெருநகரம். மாநகரி.

[16] பே.வ. அருகாக

[17] முற்றும். (பே.வ)

[18] நாடுகாட்டுப் பகுதியில் புதிதாக நெற்செய்கை அறிமுகமாகி பெரிய அளவில் செய்யப்பட ஆரம்பித்ததை இனிவரும் பகுதி சொல்கிறது.

[19] இது ஏழு வன்னியர்களின் பட்டமாகக் கூடும். மட்டக்களப்பில் ஏழு பகுதிகள் இருந்தன என்று வழிவழியாகச் சொல்லப்பட்டு வருகிறது. அக்கரைப்பற்று, சம்மாந்துறைப்பற்று, பாணகைப்பற்று, எருவிற்பற்று, போரதீவுப்பற்று, மண்முனைப்பற்று, ஏறாவூர்ப்பற்று என்பன அவை. அவற்றுடன் புதிதாக உருவான நாடுகாட்டுப்பற்றும் சேர்த்து சொந்தம் கொண்டாடிய திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலுக்கு “மட்டக்களப்பு எட்டுப்பகுதிக் கோவில்” என்றோர் சிறப்புப் பெயர் இருந்தது (துலாஞ்சனன் 2021). சங்காரன் என்று முடியும் பெயரை வேறு விதத்தில் விளக்கலாம். சங்காரனை ஒத்து சங்கரி என்று முடியும் பெயர் கொண்ட வன்னிய அரசர்கள் போரதீவிலும் பழுகாமத்திலும் வாழ்ந்திருந்தார்கள். தம்பிலுவில் கல்வெட்டில் சிவஞான சங்கரர் என்பவரின் கோவிலுக்கு வோவில் குளம் தானமளிக்கப்பட்டது சொல்லப்படுகிறது. சிவஞான சங்கரரின் கோவில் என்ற பதத்தை ‘தம்பிலுவில்லில் முன்பு இருந்த சிவன் கோவில்’ என்று பொருள் கொள்ள முடியாது என்றால், சிவஞான சங்கரன் என்பது திருக்கோவிலைப் பரிபாலித்த மட்டக்களப்பு வன்னியனின் பெயர் என்றாகும்.

[20] அடிக்குறிப்பு (4)ஐப் பார்க்க. குண்ணறையன் திருத்தியது சுங்கத்துறைவெளி அல்ல; அடுத்து வரும் வலிப்பத்தன்சேனை என்று மொழிபெயர்த்திருக்கிறார் நெவில்.

[21] இன்றைய வரிப்பத்தான்சேனை

[22] இறை – குத்தகை

[23] இன்றைய உகணைப்பகுதி. உசர என்றால் உயர் அல்லது மேற்பகுதி வேகாமம். சிங்களத்தில் “உட வேவ்கம”  வேகாமம் என்பது சிங்கள வெவ்கம என்பதன் திரிபு. இது தமிழில் வாய்க்காமம் என்றும் ஆகும். (=வாவிகாமம், நீர்நிலை சூழ்ந்த ஊர்). நாடுகாடு என்பது இறக்காமத்துக்கான பெயராகச் சுருங்கிய பிற்காலத்தில் அம்பாரையின் சிங்களப் பகுதிகள் வேகம்பற்று என்று அழைக்கப்பட்டன.  உசர வேகாமத்தின் மறுபுறம் பள்ளவேகாமம் இருந்தது.

[24] “கல்மடு முதலியாரின் மகன் மணிப்போடி” என்ற தொடர் பத்மநாதனின் பிரதியில் இல்லை.

[25] மராட்டியாவெளி பத்மநாதன் பிரதியில் இல்லை. சீயான் – கொள்ளுப்பேரன்.

[26] நெவிலின் கருத்துப்படி நெசவு செய்யும் சாலியர் குலத்தவரே இங்கு வரும் “பேய்”கள்

[27] அபூபக்கர் என்பதன் தமிழ் மரூஉ.

[28] Usavidu Meralevvai kudi. (Nevill) இக்குடி பத்மநாதனின் பிரதியில் இல்லை.

[29] After that Rata Varusai Muthaliyar gave Awakan one Thiru-vedai-panai at Thiru Kowil. கண்டிராசனோடு வந்த ஒரு முதலியாரால் அவக்கனுக்குக் கொடுக்கப்பட்ட திருவேட்டைப்பானையானது, புதிதாகக் குடிவந்த அவக்கன் உள்ளிட்ட சோனகக்குடியினர் உத்தியோகபூர்வமாக உள்ளூர்க் குடிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டதன் அடையாளமாகும்.

[30] பருத்திக்கா – பருத்திமூட்டையைச் சுமந்து வந்த காவுதடி. வன்னிய இராசர் கோரிய இரும்பை பருத்திமூட்டையில் மறைத்து எடுத்துவந்து அவக்கன் கொடுத்ததாகப் பொருள். சிங்காரவத்தை – நிந்தவூர் அட்டப்பள்ளம்.

[31] gold weapons (நெவில்) பொன்னாயுதம். பொன்னாயம் (பத்மநாதன்). பொன்னாயம் என்பது பொன்னுக்கான பணம் ஆகலாம்,

[32] ஃபக்கீர் அல்லது இ`ச்லாமியத் துறவி மாறுவேடம். புளியந்தீவில் கோட்டை அமைப்பதற்காக போர்த்துக்கேயரின் ஒற்றனொருவன் பக்கீர் மாறுவேடத்திலேயே இங்கு வந்ததை ஒரு போர்த்துக்கேயக் குறிப்பு சொல்லும்.

[33] பக்கிரிச்சேனைப்பள்ளி காரைதீவில் அமைந்திருந்தது.

[34] இ-ள்: மாறுவேடத்திலிருந்த கண்டி அரசர் முகைதீனின் விருந்துபசாரத்தில் மகிழ்ந்து மாயக்கல்லிமலைப் பாதையில் கிளாக்கொடி (Carissa carandas) மூலம் எல்லை  வகுத்து, கண்டிக்குச் சென்றபின் பக்கீர்ச்சேனைப் பள்ளிக்கென மானியம் அளித்தார்.

இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலைஇங்கு காணலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7371 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)