Arts
10 நிமிட வாசிப்பு

இதயத்தில் ஓர் இடம் கேட்ட அமெரிக்க மிசனரிகள்

August 1, 2023 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

இன்று இலங்கையின் முதன்மைத் தேசிய மருத்துவமனையாக விளங்கும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலே வருடாந்தம் சிகிச்சை பெறும் நோயாளர்களது எண்ணிக்கையானது நாட்டிலுள்ள ஏனைய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரைவிட அதிகமாகும். ஆனால் இலங்கையில் ஐரோப்பிய மருத்துவம் அறிமுகமான 19 ஆம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில் யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக மருத்துவமனையிலே (யாழ். போதனா மருத்துவமனை) இலங்கையின் எந்த ஒரு மாகாண மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுவோரைவிட அதிகளவானோர் சிகிச்சை பெற்றனர். மருத்துவர் கிறீனும் அவரிடம் மருத்துவம் பயின்ற தமிழர்களும் வட பகுதியிலே ஐரோப்பிய மருத்துவத்தை மக்களிடையே பிரபல்யப்படுத்தி இருந்தமையே இதற்குக் காரணம்.  இதனால் அந்தக்காலப் பகுதியில் யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவி மருத்துவமனையில் அதிகளவானோர் சிகிச்சை பெற்றனர். 1872 ஆம் இந்த மருத்துவமனையில் 579 பேர் உள்ளக விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ள அதேவேளை 10,010 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை இலங்கையிலுள்ள ஏனைய மருத்துவமனைகளை விட அதிகமானதாகும்.

மருத்துவர் கிறீன் 1848 இல் மானிப்பாயில் ஆரம்பித்த மருத்துவ  பீடத்தை 1873 ஆம்  ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் திகதி அன்று  வண. ஹாஸ்ரிங்ஸ் (Rev. E.P.Hastings) அடிகளாரிடம் கையளித்தார். வண. ஹாஸ்ரிங்ஸ் அடிகளார் தனது இறுதிக்காலம் வரை யாழ்ப்பாணத்தில் கடமையாற்றி 1890 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

green 1

கிறீன் தனது சகோதரிகளுக்கு 1873 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி எழுதிய கடிதத்திலே தான் அமெரிக்காவுக்குத் திரும்பும் பயணத்தின்போது, தனது குடும்பத்துக்கு ஏதாவது எதிர்பாராத சம்பவம் நிகழும் பட்சத்தில் தனது சொத்துக்கள் அனைத்தையும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் மருத்துவப் பேராசிரியருக்குரிய பதவிநிலையை உருவாக்கப் பயன்படுத்துமாறு கேட்டிருந்தார். மார்ச் மாதம் 7 ஆம் திகதி அன்று கிறீன் தனது குடும்பத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ’ செரண்டிப் ’  என்ற பாய்க்கப்பலில் பயணத்தை மேற்கொண்டார்.  

கிறீன் கொழும்பில் சில வாரங்கள் தங்கியிருந்தார். பிரித்தானியாவின் குடியேற்றநாட்டு சத்திர சிகிச்சை வல்லுநராகவும் கொழும்பு மருத்துவபீடத்தின் முதலாவது அதிபராகவும் விளங்கிய மருத்துவர் ஜேம்ஸ் லூஸ்,  மார்ச் மாதம் 27 ஆம் திகதி அன்று கிறீனுக்கு எழுதிய கடிதத்தில் மருத்துவர் கிறீனதும் அமெரிக்க மிசனரிகளதும் பணியைப் பின்வருமாறு பாராட்டியிருந்தார் :

“ எனது உடல்நலக் குறைவு காரணமாக தங்களைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது.  தங்களுடையதைப் பிரதி செய்து உருவாக்கப்பட்ட எமது கொழும்பு மருத்துவமனையை தங்களுக்குச் சுற்றிக் காண்பித்திருப்பின் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். இலங்கைத் தீவின் மருத்துவக் கல்வியானது தங்களுக்கும்,  தங்களுக்கு முன் பணியாற்றியவர்களுக்கும் மிகவும் கடன்பட்டிருக்கிறது. தாங்கள் போலியான மருத்துவத்தின் அடித்தளத்தை அசைத்திருக்கிறீர்கள். இலங்கைத் தீவின் மக்களிடைய அறிவுக்கு ஏற்புடையதும் விஞ்ஞான பூர்வமானதுமான மேலைத்தேச மருத்துவத்தை அறிமுகப்படுத்தி அதனை அவர்கள் பின்பற்ற மேற்கொண்ட எமது முயற்சிகளுக்கு கடவுளுடைய கிருபை கிடைக்கும் என்று நான் திடமாக நம்புகின்றேன். தாங்கள் தமிழில் மருத்துவத்தை அறிமுகப்படுத்தி ஆற்றிய பணியானது தாங்கள் இங்கிருந்து சென்ற பின்னரும் நினைவு கூரப்படும். இந்தத் தீவின் சுதேச மக்களாகிய நாம் கிறித்துவத்தையும் நாகரிகத்தையும் விஞ்ஞானத்தையும் எம்மிடையே அறிமுகப்படுத்திய அமெரிக்க மிசனரிகளின் முயற்சிகளுக்கு கடமைப்பட்டிருக்கிறோம் ”

கிறீன் குடும்பத்துடன் 1873 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி கொழும்பிலிருந்து இலண்டன் நோக்கி  ‘Good Hope’ என்ற கப்பலில் பயணமானார். போஸ்ரனிலுள்ள பிறதேசங்களுக்கு மிஷனரிகளை அனுப்புகின்ற சங்கம், கிறீன் இலங்கையை விட்டு நீங்கிய பின்னர் 20 ஆண்டுகளுக்கு மேலாக, மருத்துவ மிசனரிகள் எவரையும் இலங்கைக்கு அனுப்பவில்லை. கிறீன் யாழ்ப்பாணத்தில் உருவாக்கிய தமிழ் மருத்துவர்களே 1873 – 1893 வரையான காலப்பகுதியில் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.

சுயஸ் கால்வாய் ஊடான கடற்பயணம் (Opening of the Suez Canal)

suez canel 1

சுயஸ் கால்வாய் எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும். இது மத்தியதரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கிறது. 19330 கி.மீ. நீளமும் 300 மீ. அகலமும் கொண்ட இந்தக்கால்வாய் 1869 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி திறக்கப்பட்டது. இந்தக் கால்வாய் வெட்டப்பட்டமையால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான கப்பற்போக்குவரத்து மிக இலகுவானது. இதற்கு முன்பு  கப்பல்கள்  ஆபிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது. (2021.03.23 அன்று, ஏறத்தாழ 400 மீற்றர் நீளமான எவர் கிவ்வன் எனும் கொள்கலன் கப்பல் எகிப்தின் சுயஸ் கால்வாயில் தரை தட்டியதால் சில நாள்கள் சுயஸ் கால்வாய் ஊடான கப்பற்போக்குவரத்துத் தடைப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.)

ever given 1

1873 ஆம் ஆண்டு மருத்துவர் கிறீன் கொழும்பிலிருந்து பயணமான கப்பல் சுயஸ் கால்வாய் ஊடாகச் சென்றதால் 51 நாள்களில் இலண்டனைச் சென்றடைந்தார். சுயஸ் கால்வாய் திறக்கப்பட முன்னர் கிறீன் முதன்முதல் அமெரிக்காவிலிருந்து ஆபிரிக்கக் கண்டத்தைச் சுற்றி இலங்கைக்கு வந்த பயணம் ஏறத்தாழ நான்கரை மாதங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலண்டனில் 3 மாதங்கள் தங்கியிருந்த கிறீன் அங்கிருந்து புறப்பட்டு ஆகஸ்ட் 16 இல் நியூயோர்க் நகரை அடைந்தார்.

dictionary english 1

கிறீன் உடல்நலம் குன்றியிருந்த போதிலும் பிறதேசங்களுக்கு மிசனரிகளை அனுப்பும் அமெரிக்க மிசன் சங்கத்துக்கு 1873.11.13 அன்று அனுப்பிய கடிதத்தில் மீளவும் யாழ்ப்பாணம் சென்று சேவையாற்றும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். மருத்துவர் கிறீன் 1873.12.13 அன்று ABCFM இற்கு எழுதிய கடிதத்தில் டால்ரனின் மனித உடற்றொழிலியல் (Dalton’s Human Physiology), மற்றும் மருந்துப்பொருள் நூலும் மருத்துவச் சட்டவியலும் (Materia Medica and Medical Jurisprudence) முதலானவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பூரணப்படுத்தும் தனது பேரார்வத்தையும் தெரிவித்திருந்தார். இந்தக்காலப் பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து இவ்விருநூல்களினதும் தமிழ் மொழிபெயர்ப்பின் கையெழுத்துப் பிரதிகள் விரைவாக வந்து சேரும் என்ற எதிர்பார்ப்புடன் அவற்றைச் செவ்வைப்படுத்துவதில் கிறீன் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

dictionary tamil 1

கிறீன் தனது ஆரோக்கியம் மேம்பட்டதும் யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் விருப்பை மீண்டும் ABCFM இற்கு கடிதம் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். அவ்வாறு யாழ்ப்பாணம் செல்லும் போது தனது மனைவியையும் உடன் அழைத்துச் செல்வது குறித்தும், அமெரிக்காவிலுள்ள தனது பிள்ளைகளைப் பராமரிக்குமாறும் ABCFM அமைப்பிடம் கேட்டுக் கொண்டார்.  மிசனரிகளின் பிள்ளைகளுக்கு முன்பும் இவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கிறீன் யாழ்ப்பாணத்தில் தான் மேற்கொண்ட மருத்துவப் பணி அனுபவத்தை எடின்பரோ மிசன் சங்கத்துக்கு ‘ மருத்துவ மறை பரப்புநர்கள் (Medical Missions)என்ற கட்டுரையாக வரைந்து 1874 இல் சமர்ப்பித்திருந்தார். மருத்துவர் கிறீனது கட்டுரை எடின்பரோ மிசனரியின் 1874 ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்த காலாண்டு இதழில் பிரசுரமாகியிருந்தது. இந்த இதழின் ஆசிரியர் பின்வரும் குறிப்பையும் வரைந்திருந்தார் :

“ மருத்துவர் கிறீன் இலங்கையில் ஆற்றிய மருத்துவ மிசன் பணி போன்று மருத்துவத் தொண்டாற்றிய எந்தவொரு மிசனரியையும் நம்காலத்தில் காண முடியாது. ஐரோப்பிய மருத்துவத்தின் நன்மையை அவர்களது தாய்மொழியில் (தமிழ்) வழங்கியதுடன்  மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சை நூல்களைத் தென்னிந்திய மொழியில் (தமிழ்) மொழிபெயர்த்தும்,  அவற்றைப் பதிப்பித்தும் பிறதேசத்தவர்களுக்கு (தமிழர்களுக்கு) மருத்துவத்தைக் கற்பித்தும், அவர்களை மருத்துவத் தூதர்களாக்கிய பெருந் தொண்டை கிறீனைப் போல் உலகில் எந்த மிசனரியும் செய்யவில்லை. ”

இதனை அமெரிக்க மிசனரிகளுக்கு ஐக்கிய இராச்சிய மிசனரிகள் வழங்கிய பாராட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இலங்கைக்கு வருகைந்த கிறித்துவ மிசனரிகள்

19 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு கிறித்துவ மறை பரப்பும் நோக்குடன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து பல மிசன்கள் வந்தன. 1804 இல் இலண்டன் மிசனும், 1812 பப்ரிஸ்ற் மிசனும், 1814 இல் வெஸ்லியன் மிசனும் வந்தன. 1816 இல் அமெரிக்க மிசனரியினர் வந்தனர். 1818 இல் இங்கிலாந்து சேர்ச் மிசனும் (CMS), 1840 இல் SPG சேர்ச்  மிசனும் வருகை தந்தன.

எல்லா மிசனரிகளும் இலங்கையின் அனைத்துப் பாகத்திலும் சமஅளவில் செயற்பட்ட போதும் அமெரிக்க மிசனரிகள் யாழ்ப்பாணத்தில் மட்டுமே பணிபுரிந்தனர். பிரித்தானிய அரசு அமெரிக்க மிசனரிகளை யாழ்ப்பாணத்தில் மட்டுமே பணியாற்ற அனுமதித்திருந்தது. இதனால் யாழ்ப்பாணத்தில் மட்டுமே அமெரிக்க மிசன் பாடசாலைகள் தாபிக்கப்பட்டன; அவை இன்றும் இயங்குகின்றன.

ஏனைய மிசனரிகளை விட அமெரிக்க மிசனரிகள் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.  இலங்கையைக் கைப்பற்றி ஆட்சிசெய்த ஐக்கிய இராச்சியத்திலிருந்தே மற்றைய மிசனரிகள் வந்திருந்தனர். இதனால் இவர்களுக்கு அரச அதிகாரத்தின் நேரடி உதவி கிடைத்தது. அமெரிக்க மிசனரிகளுக்கு அரச உதவி கிடைக்கவில்லை. அமெரிக்க மிசனரிகள் மட்டுமே கல்வியுடன் மருத்துவத்தையும் பரப்பி மருத்துவக் கல்லூரியை நிறுவி மேலைத்தேச மருத்துவத்தைப் போதித்தனர்.

பிரித்தானியர் நிலத்தைக் கைப்பற்றி அடிமைப்படுத்தினர். ஆனால் அமெரிக்க மிசனரிகள் தமிழர்களிடம் நிலத்தைக் கேட்கவில்லை.  மாறாக அவர்கள் யாழ்ப்பாண மக்களிடம் இதயத்திலே இயேசுக்கு ஓரிடம் கேட்டதாகக் கூறுவர். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7293 பார்வைகள்

About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)