Arts
6 நிமிட வாசிப்பு

அழிந்துவரும் மரபுரிமைச் சின்னங்கள்

January 29, 2021 | Ezhuna

யாழ் நகரம் அதன் வரலாற்றுக் காலத்தில், அதன் நிர்வாக எல்லைகளுக்கும் அப்பால் பரந்துள்ள பிரதேசங்கள் தொடர்பிலும் பல்வேறு பொருளாதார, அரசியல், நிர்வாக, பண்பாட்டு வகிபாகங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாண நகர வரலாறு, அதன் மரபுரிமை சார் அம்சங்கள், ஐரோப்பியர் ஆட்சியில் யாழ். நகரின் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களின் திரட்டுகள் என்பனவற்றை உரிய ஆதாரங்களோடு ‘யாழ்ப்பாண நகரம் 400’ என்ற இத்தொடர் முன்வைக்கின்றது. 400 ஆண்டுகால யாழ்ப்பாணத்தின் வரலாறு, பண்பாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சார்ந்த கட்டுரைகளை இத்தொடர் கொண்டமைந்துள்ளது.

நவீன யாழ்ப்பாண நகரம் 400 ஆண்டுகள் பழமையானது. ஆனால், இன்றைய யாழ்ப்பாண நகருக்குள் இருக்கக்கூடிய பல இடங்களில் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனித நடவடிக்கைகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. சில வரலாற்றாளர்களின் கருத்துப்படி நல்லூர் இற்றைக்கு ஏறத்தாழ 750 ஆண்டுகள் முன்பிருந்தே யாழ்ப்பாண இராச்சியத்தின் தலை நகரமாக விளங்கியுள்ளது. அண்மையில் கிடைத்த அகழ்வாய்வுச் சான்றுகளின் அடிப்படையில், இன்றைய யாழ் கோட்டைப் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெளிநாட்டு வணிகத் தொடர்புகளுடன் கூடிய துறைமுகமும், நகரமும் இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தையும் வரலாற்றாளர்கள் சிலர் முன்வைத்துள்ளனர், ஆனாலும், இந்தப் பழமையை வெளிப்படுத்தக்கூடிய கட்டிடங்களோ வேறு அமைப்புக்களோ, அழிபாடுகளாகக்கூட யாழ்ப்பாண நகரப் பகுதிக்குள் இல்லை.  யாழ்ப்பாண நகரப் பகுதியின் வரலாற்றுக்குச் சான்றாக அமையக்கூடியதாக இன்று எஞ்சியுள்ள கட்டிடச் சான்றுகள் ஏறத்தாழ எல்லாமே போர்த்துக்கேயர் காலத்துக்கும் அதற்குப் பிந்திய காலத்துக்கும் உரியவை. மிகப் பெரும்பாலானவை, போர்த்துக்கேயர் காலத்துக்குப் பிற்பட்டவை. ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை எனினும், இவையும் நமது மரபுரிமைச் சின்னங்களே.  நமது வரலாற்றைக் கட்டமைப்பதில் இவற்றுக்கும் முக்கியமான பங்கு உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.

நல்லூர்க் கட்டிடங்கள்

மந்திரமனை சிதைவுகள்

நல்லூரில் பழைய தலைநகரப் பகுதியில், பல கோயில்களும், அரண்மனைகளும், அரச குடும்பத்தினரின் மாளிகைகளும் இருந்ததற்கு எழுத்துமூலச் சான்றுகள் உண்டு. ஆனால், சில காணிப் பெயர்களைத் தவிர, இவற்றுக்கான தடயங்கள் எதுவும் இன்று இல்லை. போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத் தொடக்கத்திலேயே இவை யாவும் அழிக்கப்பட்டுவிட்டன.  இப்பகுதியில் காணப்படும் சங்கிலித் தோப்பு வளைவு, மந்திரிமனை, சில கட்டிட அத்திவாரங்கள் போன்றவை தமிழரசர் காலத்துக்கு உரியவை என இன்றும் மக்களிற் சிலர் நம்பினாலும், அவை ஒல்லாந்தர் காலத்துக்கு உரியவை என்பதே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. யமுனாரிக் கேணி ஒருவேளை நல்லூர்க் காலத்தைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதையும்கூட உறுதியாக நிறுவுவதற்கு முறையான ஆய்வுகளின் அடிப்படையிலான கூடுதல் சான்றுகள் தேவைப்படுகின்றன.

ஐரோப்பியர் நகரக் கட்டிடங்கள்

யாழ்ப்பாணம் கோட்டை

இன்று யாழ்ப்பாண நகர எல்லைக்குள் காணக்கூடிய மிகப் பழைய கட்டிடமாகக் கருதத் தக்கது யாழ்ப்பாணக் கோட்டையே. இன்றைய வடிவத்தில் இது ஒல்லாந்தரால் கட்டப்பட்டது. ஆனால், அண்மைக் கால மீளமைப்பின்போது போர்த்துக்கேயர் காலக் கோட்டையின் சில பகுதிகளையும் அங்கே கண்டுபிடித்துள்ளனர். சில பத்தாண்டுகள் முன்பு வரை நல்ல நிலையில் இருந்த கோட்டை அரண்களும், சிலுவை வடிவத் தேவாலயம் உள்ளிட்ட, உள்ளேயிருந்த கட்டிடங்களும் உள்நாட்டுப் போர்க் காலத்தில் பெரும் சேதங்களுக்கு உள்ளாயின. அரண்கள் மீளமைக்கப்பட்டாலும், உள்ளேயிருந்த கட்டிடங்கள் முற்றாகவே அழிந்தது ஒரு பேரிழப்பாகும். பறங்கித்தெருப் பகுதியில் இருந்த ஒல்லாந்தர் கால வீடுகள் பலவும், கிட்டங்கிகள் போன்ற சில கட்டிடங்களும் போர்க் காலக் குண்டுகளுக்குப் பலியாகிவிட்டன.

பிரித்தானியர் காலத்தைச் சேர்ந்த பழைய கச்சேரி, நீதிமன்றக் கட்டிடங்கள், வாடிவீடு, பெரியகடைச் சந்தை, பாடசாலைக் கட்டிடங்கள், போன்ற ஒரு நூற்றாண்டுக்கு மேல் பழமையான பல கட்டிடங்களும் இக்காலப் பகுதியில் அழிந்துவிட்டன. போர்க் காலத்து அழிவுகள் நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. ஆனால், நமது அசட்டையாலும், விழிப்புணர்வு இன்மையாலும், அறிவீனத்தாலும், பல மரபுரிமைச் சின்னங்களும் அழிக்கப்பட்டது வருந்தத் தக்கது.

உள்ளூர் மரபுரிமைக் கட்டிடங்கள்

யாழ்ப்பாண நகரத்தின் மிகப் பழைய வணிகப் பகுதிகளுள் ஒன்று சிவன் கோயிலுக்குத் தெற்கேயுள்ள காங்கேசந்துறை வீதிப் பகுதியாகும். இதன் பழமைக்கும், பண்பாட்டு வெளிப்பாட்டுக்கும் அடிப்படையாக அமைவது இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ள கட்டிடங்களின் முகப்புக்களே. அண்மையில், வீதி அகலிப்பு என்ற பெயரில் இப்பழமையான முகப்புக்களைச் சீவி அகற்றியாகிவிட்டது.

ஆவுரோஞ்சிக் கல்

நூற்றாண்டுகளுக்கு முந்திய நமது மூதாதையரின் வாழ்க்கை முறையின் வெளிப்பாடுகளாக அமைந்த பல கட்டமைப்புக்கள் இற்றைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்புவரைகூட ஓரளவு நல்ல நிலையில் காணப்பட்டன. எடுத்துக்காட்டாகத் தெருவோர மடங்களைக் குறிப்பிடலாம். இம்மடங்கள், இளைப்பறுவதற்கான ஒரு கட்டிடம், வழிபாட்டுக்கான சிறிய கோயில்கள், கிணறு அல்லது கேணி, தண்ணீர்த் தொட்டி, சுமைதாங்கி, ஆவுரோஞ்சிக் கல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு தொகுதியாகக் காணப்பட்டன. இவ்வாறான மடங்கள் நகரப் பகுதிக்குள், கந்தர்மடம், அரியாலை, நல்லூர், ஓட்டுமடம் ஆகிய பகுதிகளில் இருந்ததாகத் தெரிகின்றது. ஆனைக்கோட்டையில் அண்மைக் காலம் வரை இருந்த ஆறுகால் மடம் எளிமையான இவ்வகை மடங்களுக்கு நல்லதொரு மாதிரியாகும் இடித்து அழிக்கப்பட்ட இது பின்னர் மீளக் கட்டப்பட்டாலும், இதன் பழைய சூழலும், அமைப்பும் பேணப்படவில்லை. நல்லூர் அரசடி வீதியில், சற்று வேறுபட்ட அமைப்பில்  இருந்த இன்னொரு மடம் செல்லப்பிள்ளையார் மடம் ஆகும். இதையும் அண்மைக் காலத்தில் இடித்து அழித்துவிட்டோம்.

தெருவோர மடங்கள் தவிரச் சந்தைகளுக்கு அருகாமையில் தொலைவிலிருந்து வரும் வணிகர்களும், மக்களும் களைப்பாறிச் செல்வதற்காகவும் மடங்களையும், சத்திரங்களையும் அமைத்திருந்தனர். இவற்றுள் பெரியகடைப் பகுதியில் அமைந்திருந்த கங்கா சத்திரம் சிறப்பானது. இதைப் பாதுகாத்திருக்க வேண்டியவர்கள் அந்தக் கடமையைச் செய்யவில்லை என்பது வருத்ததுக்கு உரியது. யாழ்ப்பாணத்துப் பண்பாட்டு வரலாற்றை வெளிக்காட்டக்கூடிய, நூற்றாண்டுப் பழமை வாய்ந்த சமய வழிபாட்டுக் கட்டிடங்கள் அல்லது அவற்றின் பழமையான கூறுகள், விரிவாக்கம் அல்லது திருத்த வேலைகளின்போது தொடர்ந்து அழிக்கப்படுகின்றன.

சாதாரண மக்களின் வாழ்வியல் வரலாற்றை எடுத்துக் காட்டுபவை அவர்கள் கட்டிய வீடுகள். யாழ்ப்பாண நகரத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருந்த வீடுகள், பொதுவாக மக்களின் வாழ்வியல் வரலாற்றுச் சான்றுகளாக அமைவது மட்டுமன்றி, அப்பகுதிகளுக்கிடையே காணப்பட்ட பண்பாட்டு வேறுபாடுகளையும், தனித்துவமான வரலாற்றுப் போக்குகளையும் வெளிக்காட்ட வல்லவை. இவ்வாறான வீடுகளும் இன்று மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. எஞ்சியிருப்பவையும் விரைவில் அழிந்துவிடக் கூடிய சூழலே காணப்படுகின்றது.  

நமது கடமை

கடந்த காலத்தில் எங்களுடைய வரலாற்றை ஆவணப்படுத்தி வைக்காததற்காக நமது முன்னோர்கள் மீது நாம் குறை சொல்வதுண்டு. ஆனால், நமது முன்னோர்கள் கட்டி நம்மிடம் விட்டுச் சென்ற நமது மரபுரிமை சார்ந்த கட்டிடங்களை அல்லது அவை பற்றிய அறிவுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதையும் சிந்திக்க வேண்டும். இன்று எஞ்சியுள்ள மரபுரிமைக் கட்டிடங்களையாவது முடிந்தவரை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு நாம் கையளிக்கவேண்டும்.

எல்லாப் பழைய கட்டிடங்களையும் பாதுகாத்து வைத்திருப்பது சாத்தியமாகாது என்பது உண்மையே. ஆனாலும், சிலவற்றையாவது அவற்றின் தனித்துவம் மாறாது பேணிப் பாதுகாப்பது அவசியம். அதேவேளை, இப்படியான எல்லாக் கட்டிடங்களையும் அளவு வரைபடங்களூடாகவும், ஒளிப்படங்கள், நிகழ்படங்களாகவும் ஆவணப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியம். நகரில் உள்ள பொது அமைப்புக்கள் தத்தமது பகுதிகளில் உள்ள இவ்வாறான வீடுகளையும் பிற கட்டிடங்களையும் ஆவணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கலாம் .

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

14716 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (22)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)