Arts
35 நிமிட வாசிப்பு

போரினால் புலம்பெயர்ந்த சமூகங்களின் தாயகத்துடனான உறவு : பணம் அனுப்புதலும் பண்பாட்டு நடைமுறைகளும் – பகுதி 2

December 21, 2023 | Ezhuna

ஈழம் சார்ந்தும் ஈழப்பிரச்சினை சார்ந்தும் ஆங்கிலத்திலும் தமிழல்லாத பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2009 இற்கு பின்னர் வெளியாகிய அபுனைவு நூல்களை அவற்றின் சமூக – அரசியல் முக்கியத்துவம் கருதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு ‘திக்குகள் எட்டும்’ என்ற தொடர் வெளிவருகின்றது. இத்தொடரின் மூலம் தமிழ் சூழலுக்கு தமிழல்லாத பரப்பில் நடைபெறும் ஈழம் சார்ந்த வெளிப்பாடுகள் அறிமுகமாகும்.

சர்வேந்திராவின் கலாநிதி ஆய்வுக் கட்டுரைகளின் உள்ளடக்கம்

இந்த ஆய்வுத் தொகுப்பின் கோட்பாட்டு ரீதியான அடிப்படை என்பது டயஸ்போறா, நாடுகடந்த வாழ்வியல் என்பவையாகும். சிறுபான்மையினர், டயஸ்போறா, நாடுகடந்த வாழ்வியல் என்பன தொடர்பான பெரும்பாலான கல்வியியல் ஆய்வுகள் பெரும்பான்மை நோக்குநிலையில் வெளிவந்துள்ளன. இக்கட்டுரைகளில் சிறுபான்மை நோக்குநிலை ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே இவ்வாய்வின் முதன்மையான தனித்துவம். நாடு கடந்த வாழ்வியலின் பல்பரிமாணங்களைக் கொண்ட யதார்த்தங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

sarvendra

சர்வேந்திராவின் கலாநிதி ஆய்வு ஆறு ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டிருக்கின்றது. திக்குகள் எட்டும் தொடரின் கடந்த பகுதியானது அந்த ஆய்வின் அடித்தளம், ஆய்வுப்பொருள், பின்னணி குறித்த அறிமுகமாக அமைந்தது. இந்தப் பகுதி அவ்வாய்வுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆறு கட்டுரைகளின் பேசுபொருட்களைத் தனித்தனியாக அறிமுகம் செய்கின்றது. அவற்றில் நான்கு கட்டுரைகள் தாயகத்திற்குப் பணம் அனுப்புதல், நோக்கங்கள், வழிமுறைகள், விளைவுகள் தொடர்பானவை. இரண்டு கட்டுரைகள் தாயகம் சார்ந்த பண்பாட்டு நடைமுறைகள், பின்பற்றல்களோடு தொடர்புடையவை. 

பணம் அனுப்புதல் தொடர்பான கட்டுரைகள், பணம் அனுப்புதற் செயற்பாடுகள் ஊடான தாயகத்துடனான பொருளாதார உறவுகள், தொடர்புகளுக்கும் தமிழர்கள், சோமாலியர்களின் நோர்வே வாழ்க்கைக்குமிடையிலான சிக்கல்களைக் கையாள்கின்றன. இப்பிரச்சினைகள் தமிழர்கள், சோமாலியர்களின் தாயகத்துடனான பொருளாதார, நாடுகடந்த பிணைப்புகள் நோர்வேயில் அவர்களின் வாழ்விற் செலுத்தும் தாக்கத்திற்கிடையேயான தொடர்பினைக் கூட்டாக வெளிப்படுத்துகின்றன. பண்பாட்டு நடைமுறைகள் பற்றிய கட்டுரைகள், தமிழர்கள் மற்றும் சோமாலியர்களின் பண்பாட்டு ரீதியான தாயகத் தொடர்புகள் நோர்வேயில் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களை நாடுகடந்த பரிமாணங்களுடன் கையாள்கின்றன. 

கட்டுரை 1: 

பணம் அனுப்பும் நடைமுறைகள் மற்றும் நாடுகடந்த சமூக வெளிகள்

இக்கட்டுரை நோர்வே வாழ் தமிழர்கள், சோமாலியர்களின் பணம் அனுப்பும் நடைமுறைகள், நாடுகடந்த சமூக வெளிகள் எனும் தலைப்பிலானது. பணம் அனுப்புதலை ஐந்து வகைகளாகப் பகுத்து ஆராய்கின்றது. 

தூய பிறர்நலன் (நற்பண்பு, அர்ப்பணிப்பு மனநிலை), தூய சுயநலம்,  தூண்டப்பட்ட – அறிவூட்டப்பட்ட நலன் எனவாக பணம் அனுப்புவதற்கான உந்துதல்கள் மூன்று வகையினவாக வகுக்கப்படுகின்றன (Pure altruism, pure self interest, and tempered altruism and enlightened self interest).  இங்கே, தூய பிறர்நலன் என்பது தாயகத்தில் உள்ள குடும்பம், உறவினர், மக்கள் உட்பட்டவர்கள் மீதான புலம்பெயர்ந்தவரின் அக்கறையைக் குறிக்கிறது. தூய சுயநலம் என்பது தாயகத்தின் முதலீடுகள், முதலீடுகளைப் பராமரித்தல், தாயகம் திரும்புகின்ற எண்ணம் போன்ற கூறுகளை உள்ளடக்கியது. குடும்பம், அரசியல், நல்வாழ்வு, வலைப்பின்னல், அபிவிருத்தி என்ற நோக்குநிலைகளின் அடிப்படையில் பணம் அனுப்புதல் ஐந்து வகைப்படுகின்றன. 

குடும்ப வாழ்வாதாரத்திற்கான பணம் அனுப்புதல்

இது பல்வகைத் தேவைகளை உள்ளடக்கியது. வெளிநாட்டுக்குப் புலம்பெயர்வதற்கான செலவுக்காக வாங்கப்பட்ட கடனை அடைப்பது, குடும்ப உறுப்பினர்களின் மருத்துவம் – கல்வி – திருமணம் – மரணச்சடங்கு – வீடு கட்டுதல் – வேலை வாய்ப்புகளைப் பெறுகின்ற முயற்சிகள் என்பவற்றுக்கான செலவுகள் என அவை பல்வகைப்படுகின்றன. மேற்சொன்ன இந்நோக்கங்களிலான பணம் அனுப்புதல் சோமாலியர், தமிழர்கள் மத்தியில் வலுவான உந்துதலைக் கொண்டுள்ளது. ஏனெனில் இரு சமூகங்களும் கூட்டுக்குடும்ப வாழ்வு, பரந்த குடும்பப் பாரம்பரியத்தைக் கொண்டவையாகும். தமிழர்களைப் பொறுத்த மட்டில் புலப்பெயர்வுக்கான முகவர்ச் செலவுகள், தாயகத்திலுள்ள சகோதரிகளின் திருமணத்திற்கான சீதனச் செலவுகள், உறவினர்களுக்கான வாழ்வாதாரத்திற்காக பணம் அனுப்புதல் போன்ற நோக்கங்களும் முதன்மையானவை.

அரசியல் நோக்கிலான பணம் அனுப்புதல்

அரசியல் நோக்கிலான பணம் அனுப்புதல் என்பது தாயகத்தில் அடிமட்ட அரசியல் அமைப்புகளை உருவாக்குவதற்கான நிதி ஆதரவிலிருந்து, அரசியற் போராட்டங்கள், ஆயுதப் போராட்டம் உட்பட சமாதான முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுத்தல், அரசியற் கட்சிகளின் தேர்தற் பிரச்சாரங்களுக்கான நிதியுதவிகள் என்பனவற்றைக் குறிக்கின்றது. அரசியல் நோக்கு நிலையிலான பொருளாதார, பொருட்கள் சார் உதவிகள் புலம்பெயர் சமூகங்களிடமிருந்து தாயக அரசியல் அமைப்புகள், நிறுவனங்கள் அல்லது வலைப்பின்னல்களுக்கு அனுப்பப்படுவதை இக்கட்டுரை ஆய்வுசெய்துள்ளது. பணம் அனுப்புதலைக் கறுப்பு – வெள்ளையாகக் கையாள முடியாது. தமிழில் காசு அனுப்புதல் – காசு கொடுத்தல் என்ற இரண்டு வெவ்வேறு சொல்லாடல்கள் வெவ்வேறு சூழமைவுகளைக் குறித்துக் கையாளப்படுகின்றன என்பதையும் கட்டுரை விளக்குகின்றது. 

Data Table 3

நல்வாழ்வுத் செயற்திட்டங்களுக்கான பணம் அனுப்புதல்

நல்வாழ்வுத் செயற்திட்டங்களுக்கான பணம் அனுப்புதல் என்பது குடும்பத் தேவைகளைத் தாண்டி, தாயகத்தின் பொதுவான சமூகநலன் சார்ந்த நோக்கங்களுக்காகப் பணம் அனுப்புவதைக் குறிக்கின்றது. இங்கு நலன் சார்ந்த எனும் சொல், மனிதாபிமான, புனர்வாழ்வு, அபிவிருத்தி உட்பட்ட பொதுநல அக்கறைகளைக் குறிக்கின்றது. 

தமிழர்களைப் பொறுத்தமட்டில், மூன்று மட்டங்களில் அல்லது நிலைகளில் நல்வாழ்வு நிதி அனுப்புதல் இடம்பெறுகின்றது. ஒன்று, தேசிய அல்லது பரந்த அளவிலானது (National or Macro-level). இந்த வகையிலான பணம் அனுப்புதல் தமிழர் தாயகத்தை மையமாகக் கொண்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், நோர்வே தமிழ் சுதாதார அமைப்பு போன்றன அத்தகைய நல்வாழ்வுத் திட்டங்கள் சார்ந்து இயங்கியவை. இரண்டாவது இடைநிலை (Meso-level) மட்டத்திலானது.  மாவட்ட, கிராம மட்டங்களிலான நலத்திட்டங்களைக் குறிக்கின்றது; உதாரணமாக பாடசாலைகள், கிராம நலத் திட்டங்கள். மூன்றாவது நுண்நிலை (Micro-level) மட்டத்திலானது. இது தாயகத்தில் முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் தனிநபர்களாக நேரடியாகப் பங்களிப்பினை வழங்குவதைக் குறிக்கின்றது. அது கூட்டுப் பங்களிப்பு வகைமைக்குள் சேராதது.

somalis

சோமாலியர்களைப் பொறுத்தமட்டில், முன்னரைவிட நலத்திட்டங்களுக்காகப் பணம் அனுப்புதல் கூடுதல் கவனத்திற்குரியதாக மாறியிருக்கின்றது. அவை அதிகரித்திருக்கின்றன. கல்வி, மருத்துவம் சார் நலவாழ்வுத் திட்டங்களுக்காகப் பணம் அனுப்புதல் முன்னுரிமைக்குரியதாக ஆகியிருக்கின்றது. 

வலையமைப்பு சார் பணம் அனுப்புதல் மற்றும் முதலீடு சார் பணம் அனுப்புதல் 

வலையமைப்பு சார்ந்த பணம் அனுப்புதல் என்பது அனுப்புபவரின் தனிப்பட்ட, சமூக, மதம் சார்ந்த நிறுவனங்கள் அல்லது அமைப்புகளின் பகுதி அல்லது முழுமையான தேவைகளை நிறைவேற்றும்பொருட்டு பணம் அனுப்புவதைக் குறிக்கின்றது. இந்தப் பணம், தனிப்பட்ட அல்லது கூட்டுப்பங்களிப்பாக அமையும். தமிழர்களின் நட்புறவுச் சங்கங்கள், கிராமம் மற்றும் பாடசாலை வலையமைப்புகள் இவ்வகைமைக்குள் அடங்குகின்றன. நட்புறவுச் சங்கங்களுக்கான பணம் அனுப்புதல் பெரும்பாலும் தனிப்பட்டவை. ஆனால் பாடசாலை, கிராம வலையமைப்புகள் பெரும்பாலும் கூட்டுத்திட்டத்தைச் சேர்ந்தவை. சோமாலியர்களிடையே, குலம் சார்ந்த வலையமைப்புகளுக்கூடாக பணம் அனுப்புதல் ஒழுங்கமைக்கப்படுவது வலையமைப்புச் சார்ந்த பணம் அனுப்புதலுக்கான உதாரணமாகக் காட்டப்படுகிறது. 

முதலீடு சார் பணம் அனுப்புதல் என்பது மூலதனத் திரட்சி, சுய வேலைவாய்ப்பினை உருவாக்குதல், வணிக அபிவிருத்தி நோக்கங்களைக் கொண்டது. தமிழர்கள் தமது கிராமங்களில் நிலங்களை வாங்குவதிலும், கொழும்பில் வீடுகளை வாங்குவதிலும் முதலீடுகளைச் செய்துள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஏனைய நாடுகளிற் சொத்துகளை வாங்குவதிலும் முதலீடுகளைச் செய்துள்ளனர். பெரும்பாலானவை மூலதனத் திரட்சியை இலக்காகக் கொண்ட வீட்டுக் கொள்வனவில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

சோமாலியர்கள் அபிவிருத்தி சார் பணம் அனுப்புதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மூலதனத் திரட்சிக்கு மாறாக வணிக அபிவிருத்தி சார் முன்னெடுப்புகளில் கூடுதலாக ஈடுபட்டுள்ளனர். சோமாலியாவில் மட்டுமல்லாமல் அதன் அயல்நாடுகள், துபாயிலும் தொலைத்தொடர்புத் துறையில் முதலீடுகளை அதிகம் செய்துள்ளனர். சோமாலியர்களின் நிதி, வணிகச் செயற்பாடுகளுக்கான முதன்மை மையமாகத் துபாய் விளங்குகின்றது.

பணம் அனுப்பும் நோக்கங்களுக்குப் பின்னாலுள்ள உந்துதல்கள்

மேலும் இக்கட்டுரையானது பணம் அனுப்பும் நோக்கங்களுக்குப் பின்னாலுள்ள உந்துதல்கள் பற்றி ஆராய்கிறது. பணம் அனுப்பும் நடைமுறைகளின் வெவ்வேறு வகைமைகளை அடையாளப்படுத்துவதுடன் பணம் அனுப்பும் நடைமுறைகளுக்கும் நாடு கடந்த சமூக வெளிக்கும் இடையிலான பிணைப்புகளையும் விளக்குகின்றது. அகதிகளாக, தொழில் வாய்ப்பினூடாக, கல்வி வாய்ப்பினூடாக, குடும்ப மீளிணைவினூடாக போன்ற வெவ்வேறு பின்னணிகளிற் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இந்தக் கட்டுரைகளுக்கான நேர்காணல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

Data Table 2

பணம் அனுப்புதல், தமிழ் டயஸ்பொறாவின் நாடுகடந்த வாழ்வின் விளைவுகளில் முக்கிய இடத்தைப் பெறுகின்றது எனும் வகையில் அது அனுப்புநர், பெறுநர் வாழ்வில் கணிசமான தாக்கத்தைச் செலுத்துகின்றது. பெறுநர் தரப்பில் சமூக அசைவியக்கத்தின் மேம்பாட்டுக்கு உதவுகிறது. 1980 – 2009 வரையான நான்கு தசாப்த போர்க்கால வாழ்வாதாரத்திற்கு பணம் அனுப்புதல் பெரிதும் உதவியுள்ளது. பணம் அனுப்புதலானது அனுப்புநர்கள் நோர்வேயில் ஒரு புதிய வாழ்வைத் தகவமைத்துக் கொள்வதற்கு, அதன் நேர்மறை, எதிர்மறைத் தாக்கங்களினூடாகப் பங்களித்துள்ளமை பற்றிய புறநிலைகளும் இக்கட்டுரையிற் பதிவாகியுள்ளன. 

சோமாலியா இன்றுவரை ஒரு செயற்திறன் மிக்க அரசாக இல்லாத நிலையில் சோமாலிய மக்களினது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் பணம் அனுப்புதல் பங்காற்றிவருகின்றது. பணம் அனுப்பும் நடைமுறை இல்லாமலிருந்திருப்பின், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வன்முறை முரண்பாட்டுச் சூழலில் சோமாலிய மக்களின் பொருளாதார வாழ்வு பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருக்கும்.

இந்த வகையான பணம் அனுப்பும் நடைமுறைகள் பெரும்பாலும் நோர்வேயிலுள்ள முதற் தலைமுறை தமிழர்கள், சோமாலியர்களின் அக்கறைக்குரிய நடைமுறைகள். இப்புலம்பெயர் சமூகங்களின் இரண்டாம் தலைமுறை இந்த நடைமுறைகளைப் பின்பற்றித் தொடருமா என்பது இதிலுள்ள முக்கிய கேள்வியாகும். இரண்டாம் தலைமுறையினர் இதற்குக் குறைந்த முன்னுரிமையே கொடுப்பார்கள் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

முதற் தலைமுறை போன்று தார்மீக ரீதியான பிணைப்பு அவர்களிடம் இல்லை. தாயகத்துடனான பலவீனமான தொடர்பு, அவர்கள் நோர்வேயில் வளர்க்கப்படும் விதம் என்பன அதற்குரிய காரணிகளாகும். அவர்கள் பணம் அனுப்புவதைக் காட்டிலும் முதலீடு சார்ந்த முனைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளது. இரண்டாம் தலைமுறை தமிழர்கள், சோமாலியர்களின் பணம் அனுப்பும் நடைமுறைகள் பற்றிய மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் முன்மொழிகிறது அக்கட்டுரை.

ஈழத்தமிழர்கள் எனும் அரசியல் அடையாளத்தை வடிவமைக்கும் அம்சங்களாக மொழியும் இனத் தேசியமும் முதன்மையானவை. கலாச்சார ரீதியாகச் சமயம் முக்கிய பங்கு வகிக்கின்றது. மத வேறுபாடுகளுக்கு மத்தியிலும் பொதுவான சில கலாச்சார அம்சங்களும் உள்ளன. மேலும் நாடுகடந்த சமூகமாகத் தமிழர்களை எவ்வாறான கூட்டுத்தன்மை அமைப்பாக ஒருங்கிணைக்கின்றது என்ற விடயங்களும் பேசப்படுகின்றன. சோமாலியர்களை அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கும் அம்சங்களாக மதம் (இஸ்லாம்), இன அடையாளம் மற்றும் குலப்பின்னணி ஆகியன முதன்மை இடம் வகிக்கின்றன. 

கட்டுரை 2:

நோர்வேயிலுள்ள தமிழர், சோமாலியர்களின் நாடுகடந்த நடைமுறையாக ‘பணம் அனுப்புதல்’

இந்தக் கட்டுரை, முதற் தலைமுறைத் தமிழர், சோமாலியர்கள் தாயகத்திற் தமது குடும்பம், உறவினர்களுக்கு (தனிநபர்கள்) பணம் அனுப்புகின்ற நடைமுறைகள் பற்றிய ஆய்வினை முன்வைக்கின்றது. அத்தோடு பொருளாதார மூலதனம், சமூக மூலதனம், பண்பாட்டு மூலதனம், குறியீட்டு மூலதனம் ஆகியவை மீது எத்தகைய நேர்மறையானதும் எதிர்மறையானதுமான தாக்கங்களை அந்நடைமுறைகள் ஏற்படுத்துகின்றன என்பதையும் பேசுகின்றது. அனுப்புவோர் தரப்பில் ஏற்படக்கூடிய பதட்டங்களையும் குறிப்பிடுகின்றது. தாயகத்திலிருந்து பணம் கேட்டு வருகின்ற தொலைபேசி அழைப்புகள் நோர்வேயில் வாழ்வை அமைத்துக் கொள்வதில் முக்கியமான எதிர்மறைத் தாக்கத்தைச் செலுத்திய காரணிகளில் முதன்மையானது. அதிகாலைகளில் பெருந்தொகை பணம் கேட்டு ஊரிலிருந்து தொலைபேசி அழைப்பு வருமென்பது பலரை மிகப் பதட்டப்படுத்தும் விடயமாகும். அந்த அழைப்புகள், ஒரு வலுவான தார்மீக அம்சத்தை உள்ளடக்கியிருப்பன. அவை குடும்பம், பண்பாடு அதன் பாரம்பரியங்களோடு தொடர்புபட்டவை.

தமிழர், சோமாலியர்கள் ஆகிய இருதரப்பினரும் போர்த் தேசங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், பணம் அனுப்புதல் என்பது அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் காரணங்களால் உந்துதல் பெற்றவையாக உள்ளதை ஆய்வு வெளிப்படுத்துகின்றது. புலம்பெயர்ந்தோரின் பணம் அனுப்புதல் நடைமுறையானது உலகளாவிய நிதிப் பரிவர்த்தனையின் கணிசமான பகுதியைக் கட்டமைத்துள்ளது. இது, பணம் அனுப்பப்படும் நாடுகளின் நிதிமூலத்தின் ஒரு முக்கிய பகுதியாகவும் விளங்குகின்றது. அதற்கும் அப்பால் உத்தியோகபூர்வ வெளிநாட்டு உதவிகளுக்கு அடுத்தபடியாக உலகளாவிய வறுமைக் குறைப்பிற்கும் பங்களிக்கின்றது. மேற்சொன்ன அநுகூலங்களோடு ஆய்வாளர்களின் கரிசனைக்குரிய ஆய்வுப்பொருளாகவும் உள்ளது. இது உலகளாவிய அபிவிருத்திக்கு முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடியதா அல்லது உலகமயமாக்கலைச் சீர்குலைக்கும் அம்சமா என்ற ரீதியிலும் ஆய்வாளர்கள் மத்தியிற் கவனத்திற்குரியதாக உள்ளது. 1990 களில் புலப்பெயர்வு, நாடுகடந்த வாழ்வியல் பரந்த கவனத்தை ஈர்த்த அதேவேளை பணம் அனுப்புதல் நடைமுறையும் ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மத்தியிற் கவனத்திற்குரியதானது. 

அனுப்புபவரின் பார்வையில் ஆய்வு

அனுப்புபவரின் பார்வையில், குறிப்பாகப் புலம்பெயர்ந்த பணம் அனுப்புதல், செப்ரெம்பர் 11 இன் பின் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குரிய நடைமுறைகளில் ஒன்றாக நோக்கப்படுகின்றமை குறித்தும் பேசுகின்றது. அந்த வகையில் தாயகத்திற்குப் பணம் அனுப்பும் டயஸ்போறாக்கள் சந்தேகத்துடன் பார்க்கப்பட்ட சூழலும் நிலவியது. பணம் அனுப்புவதை பாதுகாப்புச் சிக்கலாக அர்த்தப்படுத்துவதையும், பணம் பெறுவோரின் சட்டபூர்வ தேவையையும் அனுப்புவோரின் சட்டபூர்வ உரிமையையும் குறைமதிப்புச் செய்வதாக விவாதிக்கப்படுவதையும் கட்டுரை குறிப்பிடுகின்றது. பாதுகாப்பு அச்சுறுத்தல் சார்ந்த சித்தரிப்பு, போர் நடைபெறும் நாடுகளின் டயஸ்போறாக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பதட்டம் குறித்த எடுத்துக்காட்டுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. பணம் அனுப்புதல், அனுப்புவோரின் (நோர்வே) வாழ்வில், நேர்மறையானதும் எதிர்மறையானதுமான பல்வேறு தாக்கங்களைச் செலுத்துகின்றது. நோர்வேயில் தமது வாழ்வின் ஆரம்பக்கட்டத்தை உருவாக்குவதிலும் பின்னர் அதனை நிலைநிறுத்துவதிலும் அதிக சுமைகளையும் பொறுப்புகளையும் கொண்டதாகவும் ஆக்கியிருக்கின்றது.

tamils of norway

‘புகலிடக் கோரல்’ என்பது, அடிப்படையில் ஒரு பொருளாதார மூலதனத்தினைக் கோருகின்ற நடவடிக்கையாகும். பொருளாதார மூலதனத்தின் கொள்ளளவு, புலம்பெயரும் இடத்திற்கும் புலப்பெயர்வின் நிலைமைகளுக்கும் ஏற்ப மாறுபடும் என்ற போதிலும், பொருளாதார மூலதனத்தை ஏற்படுத்தாமல் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாடு கடந்து புலம்பெயர முடியாது. நாடுகளின் எல்லைகள் வழியாக மக்களைக் கடத்துவது ஒரு வணிகச் செயற்பாடாக நிறுவப்பட்டுள்ளதோடு, மிகவும் இலாபகரமான செயலாகவும் காணப்படுகின்றது. கடத்தல் வலைப்பின்னல்கள் மூலம் புகலிட நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் செலுத்தவேண்டியிருந்த பயணத் தொகை மிக அதிகமானவை. போர் காரணமாக புகலிடக் கோரிக்கையாளர்களாகப் புலம்பெயர்ந்த பெரும்பாலான தமிழர்கள், சோமாலியர்களின் நிலைமையும் இதுதான். அதாவது கடத்தல் வலையமைப்புகளின் முகவர்கள் மூலம் புகலிட நாடுகளுக்கு வந்தடைந்தவர்கள், பயணத்திற்கான பெருந்தொகை நிதியினைக் கடனாகப் பெற்று வந்தவர்கள். அந்தக் கடன் மீளளிப்பிற்காக அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. 

பலர் கல்விக்கும் வேலைக்குமிடையிலான தெரிவை மேற்கொள்வதிற் சிக்கல்களை எதிர்கொண்டனர். பலர் தமது கடும் முயற்சியால் கல்வி, வேலை ஆகிய இரண்டையும் சமாளித்து முன்னேறியுமுள்ளனர். தாயகத்தின் குடும்பத் தேவை மேலோங்கியிருந்த சூழலிற் கல்வியைத் தவிர்த்தவர்களும் உளர். பணம் அனுப்புதல் நடைமுறையின் எதிர்காலம் குறித்த நிலைமைகள், வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்படுகின்றது. இரண்டு நாடுகளிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பணம் அனுப்புதல் நடைமுறைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படுகின்றது. 

பணம் அனுப்புதல் பற்றிய ஆய்வுகள் கணிசமாக அதிகரித்து வந்தாலும், அது சார்ந்த பெரும்பாலான இலக்கியங்கள் பெறுநர் தரப்பில் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தே அதிகம் கவனம் செலுத்துகின்றன; அனுப்புவோர் தரப்பு சார்ந்து அல்ல. அனுப்புநர் தரப்பின் உந்துதல்கள் குறித்துக் கவனம் செலுத்தப்படினும், அனுப்புநர் தரப்பு மீது இந்நடைமுறையினால் ஏற்படும் தாக்கங்கள் பெரிதும் கவனம் பெறாதவையாகவே இருந்துள்ளன. அந்த வகையில் இக்கட்டுரை நோர்வேயில் முதற் தலைமுறை தமிழர்கள், சோமாலியர்களின் பணம் அனுப்பும் நடைமுறையை அனுப்புநர் நிலைப்பட்ட பார்வையிற் பகுப்பாய்வு செய்கிறது. குறிப்பாக குடும்பம் சார்ந்த பணம் அனுப்புதல், அவை அனுப்புநர் தரப்பின் குடும்பங்கள், தனிநபர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த வெளிப்பாடுகளிற் கவனம் செலுத்துகிறது.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவினால் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையில் தீவிர மாற்றத்தின் காரணமாக முதலீடு சார்ந்த பணம் அனுப்புவதற்கான அழைப்புகள் அதிகரித்துள்ளன. ஆயினும் சிறிலங்கா அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் முரண்பாடு காரணமாக அபிவிருத்தி சார்ந்த அழைப்புகள் இன்னும் அதிக கவனத்தைப் பெறவில்லை.

சோமாலியாவில் போர் முரண்பாடுகள் தொடர்கின்ற நிலையில் பணம் அனுப்புதலுக்கான தேவைகள் தொடர்கின்றன. நோர்வேயில் உள்ள தமிழர்கள், சோமாலியர்களின் பணம் அனுப்பும் நடைமுறைகளின் எதிர்காலம் என்பது தாயகங்களுடனான அவர்களின் உணர்வுபூர்வமான தொடர்புகள், நோர்வேயில் கிட்டக்கூடிய வளங்கள், அனுபவங்களிற் தங்கியுள்ளது என நிறுவுகின்றது அக்கட்டுரை.

கட்டுரை 3:

காசாதாரம் எப்படி உருவாக்கப்படுகின்றது? – மூலோபாயங்களும் தாயகம் சார் காசாதார வழிமுறைகளின் வகிபாகமும்

அனுப்புவதற்கான காசாதாரம் எவ்வாறு உருவாகுகின்றது, அதற்குத் தமிழர், சோமாலியர்கள் கைக்கொள்ளும் மூலோபாயம், வழிமுறைகள் எவை என்பற்றை ஆராய்கின்றது இக்கட்டுரை. தமது சேமிப்பு அளவிற்கு அதிகமாக இரண்டு சமூகங்களும் பல மூலோபாயங்களைக் கைக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வருமானத்தைக் கூட்டுதல், செலவுகளைக் கணிசமாகக் குறைத்தல், முறைசார்- முறைசாராக் கடன்களைப் பெறுதல் போன்ற வழிமுறைகளைக் கண்டடைய வேண்டியவர்களாக இரு சமூகங்களும் இருந்தன. தாயகத்தில் வழக்கத்திலுள்ள சுழற்சிமுறைச் சேமிப்பு, வட்டி, சீட்டுப் போன்ற திட்டங்களுக்கு ஊடாக அனுப்புவதற்கான தொகையினைக் கண்டடைந்தனர். பணம் அனுப்பவேண்டிய தேவைகள் பல் வகைப்பட்டனவாக உள்ளன. அதேபோல் அனுப்புவழிகளும் பலவாகும். அனுப்புவதற்கான தொகையினைக் கண்டடையும் வழிமுறைகளும் பலவாகும். 

சோமாலியர்களும் தமிழர்களும் தாயகத்திற்கு அனுப்புவதற்கான காசாதாரத்தை நோர்வே, தாயகத்தில் நிலவும் வழிமுறைகளுக்கு ஏற்ப கைக்கொண்டாலும் தாயகத்தின் வழிமுறைகளே அதிகம் செல்வாக்குச் செலுத்தின. அவ்வழிமுறைகள் நம்பிக்கை, தொடர்பு, வலைப்பின்னல், சமூக கூட்டுப்பண்பியல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டமை அவற்றின் வெற்றிகரமான செல்வாக்கிற்குக் காரணிகளாகும்.

அனுப்புவதற்கான காசாதாரத்தை உருவாக்கும் வழிமுறைகளாக உடலுழைப்பினால் கிட்டும் வருமானம், அரச உதவிப்பணம் (வாழ்வாதாரத்திற்கான சமூக உதவித் தொகை), அரச நிதியங்களிலிருந்து பெறப்படும் கடன் (உதாரணம் கல்வி உதவித்தொகை), தாயக வழக்கங்களைச் சேர்ந்த சேமிப்பு, கடன் வழிமுறைகள் (தமிழர்: வட்டி, சீட்டு, சோமாலியர்: Hagbad, Ayauto) என்பவை விளங்குகின்றன.

சட்டத்திற்கு உட்பட்டும் புறம்பாகவும் மேலதிக வேலைகளைப் பலர் செய்துள்ளனர். அதன் மூலம் முறைசாரா வருமான ஈட்டல்களுக்கும் சிலர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். செலவுகளைக் குறைத்தல் என்பது நோர்வேயில் பலருக்குக் கடினமான தெரிவு. குடும்ப, சமூக நிலைகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்ப அவ்விடயங்களைக் கையாண்டிருக்கின்றனர். 

நேர்காணலிற் பங்கேற்ற ஒரு தமிழரின் பகிர்வு இப்படி அமைந்துள்ளது:

“தாயகத்தில் எனது உறவுகளுக்கு உதவுவதற்காக எனது செலவுகளைக் குறைக்க வேண்டியிருந்தது. அங்கு எனது சகோதரியின் பிள்ளைகள் பாணுக்குப் போராடிக் கொண்டிருக்கையில் இங்கு என் பிள்ளைகளுக்கு நான் கேக் கொடுக்க முடியாது. எமது உறவுகளுக்கு உதவுவது எமது கடமை என்பதை என் பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்துவேன்.”

இப்படியாக தமிழர்கள், சோமாலியர்களிற் பலர் நேர்காணல்களில் பகிர்ந்த அனுபவக்கூற்றுகள் ஆய்வுக் கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன. பணம் அனுப்புதல் என்பது சோமாலியர், தமிழர்களின் நாளாந்த வாழ்வின் பதட்டங்கள், சங்கடங்களின் ஒரு பகுதியாக இருந்துள்ளது என்பதை இத்தகையை கூற்றுகள் வெளிப்படுத்துகின்றன. இதனால் இரண்டு வகையான முடிவுகளையும் பலர் எடுத்துள்ளனர். அதாவது சிலர் தமது நோர்வே வாழ்வின் தேவைகளைத் தியாகம் செய்து தாயகத்திற்கு அனுப்புவதற்குரிய பணத்தினை ஒதுக்கியுள்ளனர். சிலர் அப்படிச் செய்யாமல், நோர்வேயில் தமது பிள்ளைகள், குடும்பத்தின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

கடன்களைப் பெறுவதற்குரிய மூலோபாயங்கள்

நோர்வே நாட்டின் வங்கி, கடன் நிறுவனங்களில் கடன் பெறுவது, வீடுகளை மீள் அடகுவைப்பதன் மூலம் கடன் பெறுதல் என்பன கடன்களைப் பெறுவதற்குரிய மூலோபாயங்களாக உள்ளன. இதில் தமிழர்களுக்கும் சோமாலியர்களுக்கம் பாரிய வேறுபாடு உண்டு. தமிழர்கள் சாத்தியமான வழிமுறைகளில் கடன்களைப் பெற்றுத்  தாயகத்திற்கு அனுப்புவதோடு அவற்றை வட்டியுடன் தவணைமுறையில் மீளளிப்பர். சோமாலியர்கள் மத நம்பிக்கை காரணமாக வங்கிக்கடன் பெறுவதை விரும்புவதில்லை. வட்டிக்குக் கடன் பெறுவது அவர்களின் சமய நம்பிக்கைப்படி ஈடுபடக்கூடாத செயல். அது ‘ஹராம்’ எனச் சித்தரிக்கப்படுகிறது. பல சோமாலியர்கள் சொந்தமாக வீடு வாங்குவதில்லை. ஏனெனில் வீடு கொள்வனவு என்பது வங்கிக்கடனில் பெரிதும் தங்கியுள்ள நடவடிக்கை. எல்லோரும் அல்ல; பல சோமாலியர்கள் நோர்வேயின் நிதிச்சந்தை நடைமுறைகளை ஏற்றுப் பின்பற்றத் தொடங்கியுள்ளமையும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 

கட்டுரை 4:

‘பின்-செப்ரெம்பர் 11’ சட்ட ரீதியான ஒழுங்குமுறைகள்: சோமாலியர்களின் இக்கட்டு நிலை

பின்-செப்ரெம்பர் 11, ஹவாலா (சோமாலியர்களின் பண அனுப்பற் பொறிமுறை) முறைமை மீதான கட்டுப்பாடுகள், நோர்வேயில் சோமாலியர்களின் நிலை என்பன பற்றிப் பேசுகின்றது இக்கட்டுரை. செப்டம்பர் 11 இற்குப் பின்னான சர்வதேச – தேசிய சட்டங்களில் பாதுகாப்பு பற்றி விரிவாக்கம் பெற்ற கருத்தானது, சோமாலிய பணம் அனுப்பும் நிறுவனங்களையும் சோமாலிய புலம்பெயர் சமூகங்கள் உறவினர்களுக்கான பொருளாதார உதவியாக நிதி, குடும்பத்திற்கான கடமைகளை நிறைவேற்றும் முனைப்புகளையும் எவ்வாறு பாதித்தது என்பதை ஆய்வு செய்கின்றது. செப்டம்பர் 11 இற்குப் பின்னர் முனைப்புப் பெற்ற ஹவாலா முறைமையிலான பணப் பரிமாற்றத்தின் மீதான முறைப்படுத்தற் செயற்பாடு பற்றியும் அம்முறைப்படுத்தலின் போதான சோமாலிய ஹவாலா நிறுவனங்களின் அனுபவங்கள் பற்றியும் விவாதிக்கப்படுகின்றது. முறைசாரா பணப் பரிமாற்ற முறையை முறைப்படுத்துவதற்கான நோர்வேயின் நடவடிக்கைகள் மீது விசேட கவனம் செலுத்தப்படுகிறது.

Data Table 1

இக்கட்டுரை, நோர்வேயில் உள்ள புலம்பெயர்ந்த சோமாலியர்கள் சோமாலியாவுக்கு பணம் அனுப்புவதையும் அது சோமாலியப் பொருளாதார அசைவியக்கத்தில் செலுத்தும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது. பணம் அனுப்புவதன் முக்கியத்துவத்தை விவாதித்து, ஹவாலாவின் முறைசாரா பணம் அனுப்பும் நடைமுறையை ஒழுங்குபடுத்தும் பொருட்டு சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Action Task Force – FATF) எடுத்த நடவடிக்கைகளையும் எடுத்துரைக்கிறது. FATF இன் எதிர்பார்ப்புகளை நெருங்குவதற்கு ஏதுவாக  சோமாலிய பணப் பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆதரவாக சோமாலியாவுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) மேற்கொண்ட தலையீட்டினையும் பேசுகிறது. UNDP இன் செயற்பாடானது, முறைசாரா பணம் அனுப்பும் வழிகள் தொடர்பான சர்வதேச அரசாங்கங்களின் அச்சங்களை நீக்குவதற்கும், சோமாலிய மக்களின் முறையான பணப் பரிமாற்றத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், ஏற்றுக்கொள்ளக்கூடிய குறைந்தபட்ச சட்டக் கட்டமைப்பிற்கு இணங்க, சோமாலியப் பணம் அனுப்பும் நிறுவனங்கள் தம்மை மாற்றத்திற்கு உட்படுத்த உதவுவதாகும். பல நாடுகள் ஹவாலாவின் பொருத்தப்பாட்டினைப் புரிந்துகொண்டு இலகுவான சில கட்டுப்பாடுகளை விதித்தாலும், நோர்வே உட்பட சில நாடுகள் ஹவாலா நிறுவனங்கள் சார்ந்து இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. 

கட்டுரை 5:

நோர்வேயில் இணைவாக்கம்: நாடுகடந்த வாழ்வியல் சூழமைவில் கலாச்சார இணைவாக்கத்தின் பரிமாணங்கள் 

‘நோர்வேயில் இணைந்து வாழ்தலை நோக்கி: நாடுகடந்த சூழலில் கலாச்சார ஒருங்கிணைப்பின் இயக்கவியல்’ எனும் தலைப்பினைக் கொண்டுள்ளது இத்தொகுப்பின் ஐந்தாவது கட்டுரை. இந்தக் கட்டுரை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதற் பகுதி நோர்வேஜியச் சூழமைவில் சிறுபான்மையினரின் இணைவாக்கச் சிக்கல்களையும் ஆய்விற்கான கோட்பாடு சார் வரையறையையும் முன்வைக்கின்றது. இரண்டாவது பகுதி பெருஞ்சமூகத்தின் கலாச்சார வெளிக்குள் சிறுபான்மை கலாச்சார நடைமுறைகளின் இணைவாக்கத்தினை ஆராய்கிறது. தமிழர்கள் மற்றும் சோமாலியர்களின் கலாச்சார நடைமுறைகளின் வெவ்வேறு பகுப்பாய்வுப் பரிமாணங்களை அடையாளம் காண முயற்சிக்கிறது. அத்தோடு இந்த நடைமுறைகளைச் சூழவுள்ள பெருஞ்சமூகத்தின் கலாச்சார வெளியில் நிலவும் ஏற்றுக்கொள்ளல், பதட்டங்கள் பற்றியும் விவாதிக்கிறது.

மூன்றாம் பகுதியானது, பெரும்பான்மை, சிறுபான்மையினருக்கிடையிலான கலாச்சார சகிப்புச் சார்ந்த திறந்த தன்மை, மூடு தன்மைப் பரிமாணங்களை ஆராய்வதனூடாக கலாச்சார ஒருங்கிணைப்புக்கான மாதிரியை முன்மொழிகிறது. பெரும்பான்மை கலாச்சார வெளிக்குள் சிறுபான்மையினரின் தாயகம் சார் கலாச்சார நடைமுறைகளின் ஒருங்கிணைவு பற்றியும் நோர்வேயின் பெரும்பான்மை, சிறுபான்மையினருக்கிடையிலான கலாச்சார நடைமுறைகளின் பரஸ்பர (ஒன்றுடனொன்று) ஒத்திசைவின் இயக்கவியலையும் நோக்குகிறது. நோர்வேயில் வாழும் தமிழ், சோமாலிய முதற் தலைமுறையினரின் கலாச்சார நடைமுறைகள் எடுத்துக்காட்டுகளாகக் கையாளப்பட்டுள்ளன. 

தமிழர்கள், சோமாலியர்களின் தாயகம் சார்ந்த கலாச்சார நடைமுறைகளைப் பற்றி விவாதிக்கையில், அவற்றின் பல்வேறு பரிமாணங்கள் அடையாளம் காட்டப்படுகின்றன. அதாவது நாளாந்தம் பின்பற்றப்படுகின்ற – அவ்வப்போது பின்பற்றப்படுகின்ற – தனிப்பட்ட ரீதியல், சமூகக்கூட்டாகப் பின்பற்றப்படுகின்ற –  வலுவான – வலுக்குறைந்த – வெளித்தெரிகின்ற – வெளித்தெரியாத – புலப்படுகின்ற – புலப்படாத போன்ற பின்பற்றப்படுகின்ற நடைமுறைகளின் பல்பரிமாணங்கள் பேசப்படுகின்றன. 

கலாச்சார நடைமுறைகளைப் பின்பற்றும் போது தாயகத்து நிகழ்வுகள் பற்றிய ‘நிகழ்நேர கற்பனை’ அம்சத்தினையும் இக்கட்டுரை கவனப்படுத்தியுள்ளது. சிறுபான்மையினரின் குறிப்பிட்ட சில கலாச்சார நடைமுறைகள் பெரும்பான்மைப் பொதுவெளியில் அதிகமாகக் புலப்படுகின்றன. அவை பெரும்பான்மையினரிடையே வெவ்வேறு கவனத்தினையும் ஈர்க்கின்றன. அவர்கள் மத்தியிற் சில நடைமுறைகள் அதிகம் அறியப்பட்டவையாகவும் ஏனைய சில அம்சங்கள் பெரிதாக அறியப்படாதனவாகவும் உள்ளன. கூடுதலாகப் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும் பெரும்பான்மையினரிடையே அதிக கவனத்தைப் பெறுவதாகவும் சொல்லிவிட முடியாது. சில நடைமுறைகள் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. சில ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மை, சிறுபான்மையினருக்கு இடையிலான கலாச்சார ஒத்திசைவு, அவர்களின் கலாச்சார நடைமுறைகளின் நிலைகளை மதிப்பிடுவதன் மூலம் விவாதிக்கப்படுகின்றது.  விழுமியங்கள், சட்டப்பூர்வ நியதிகள் சார்ந்த வேறுபாடுகளுக்கு மத்தியில், பெரும்பான்மை சமூகம் சிறுபான்மையினரின் சில நடைமுறைகளை ஏற்றுக்கொள்கிறது; சிலவற்றோடு முரண்படுகிறது. அதேவேளை சிறுபான்மை சமூகங்களும் நோர்வேஜிய பெருஞ்சமூகத்தின் சில விழுமியங்களை ஏற்றுக்கொள்கின்ற வெளியைக் கொண்டிருக்கின்றன; சிலவற்றை ஏற்க மறுக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், கலாச்சார இணைவாக்கத்தினைச் சாத்தியப்படுத்தக்கூடிய பல சூழமைவுகளையும் மூலோபாயங்களையும் கட்டுரை பரிந்துரைக்கிறது. 

கட்டுரை 6: 

‘வீடு செய்யும்’ முயற்சியில் தாயகம் சார்ந்த கலாச்சாரப் பின்பற்றுதல்கள்

இக்கட்டுரையானது நோர்வேயில் உள்ள தமிழர்கள், சோமாலியர்களின் தாயகம் சார்ந்த கலாச்சார நடைமுறைகள் மூலம் தாயகத்து வீட்டினை இங்கு ‘அமைத்துக் கொள்ளும்’ (Homemaking process) செயல்முறையைப் புரிந்துகொள்ள முயற்சித்துள்ளது. வீடு என்பது, அதற்குரிய அர்த்தத்தைச் சேர்ப்பதன் ஊடாகவும் வெளியை உருவாக்குவதன் ஊடாகவும், இடம் சார்ந்ததாகவும் சமூக அலகாகவும் இக்கட்டுரையில் விளிக்கப்படுகிறது. 

வீடென்பது ‘சௌகரியமான வெளியை உருவாக்குவது’ என்ற நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டு, அத்தகு சௌகரியமான வெளியை உருவாக்குவதற்கான முயற்சிகளை தாயகத்து வீட்டினை (நோர்வேயில்) அமைத்துக் கொள்வதென்று (Homemaking) வரையறை செய்கின்றது. நோர்வேயிற் தமது இடத்தினை (வெளியினை) சௌகரியமாக்குவதற்கு ஏதுவாக தமிழர்களும் சோமாலியர்களும் தாயகம் சார்ந்த கலாச்சார நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதோடு அந்நடைமுறைகள் வீடு ஆக்குதற் செயல்முறையின் அங்கமாகுகின்றது எனவும் இக்கட்டுரை விவாதிக்கின்றது. நாடுகடந்த உறவுகளை வீடு ஆக்குதலின் நிரப்புகையாகவும் முன்வைக்கின்றது. 

முதற் தலைமுறை தமிழர்கள், சோமாலியர்கள் மத்தியில் வீடு (Home), தாயகம் (Homeland) என்பன பற்றி நிலவும் வேறுபாட்டையும் கட்டுரை கவனப்படுத்துகிறது. முதற் தலைமுறைத் தமிழர்கள், சோமாலியர்கள் தங்கள் பூர்வீக நாடு என்ற உணர்வுபூர்வமான பிணைப்பினைக் கொண்டிருக்கின்ற இடத்தினை, அதாவது, தாம் எங்கிருந்து புலம்பெயர்ந்தார்களோ அதனைத் தமது தாயகமாக அடையாளப்படுத்துகிறார்கள். ஆனால் நடைமுறையில், நோர்வேயில் வாழ்க்கைச் சூழல் மிகவும் வசதியானது, தாயகத்தில் அவர்கள் கற்பனை செய்ததை விட எளிதானது என்று பலர் எண்ணுகின்றார்கள். அதேவேளை நோர்வேயுடன் ஒரு பிணைப்பினையும் அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அந்தவகையில் நோர்வே அவர்களுடைய உப தாயகமாக ஆகியுள்ளது. நோர்வேயைத் தாயகமாக வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஏற்பு இல்லாவிட்டாலும் நோர்வேயுடன் ஏற்படுத்திக்கொண்ட பிணைப்பின் ஊடாக ஒரு சுமூகத்தை அவர்கள் கண்டடைந்து கொள்கின்றனர் என விபரிக்கின்றது.

பிரதிபலிப்பு

ஆறு கட்டுரைகளைக் கொண்ட இந்த ஆய்வுத் தொகுப்பின் கோட்பாட்டு ரீதியான அடிப்படை என்பது டயஸ்போறா மற்றும் நாடுகடந்த வாழ்வியல் என்பவையாகும். அவை தாயகத்துடனான புலம்பெயர் சமூகங்களின் உறவு, நாடுகடந்த பின்பற்றுதல்களை அடிப்படைகளாகக் கொண்டு அணுகப்பட்டுள்ளளன. முதற் தலைமுறையைச் சேர்ந்த நோர்வே வாழ் தமிழர், சோமாலியர்கள் நோர்வேயிற் தமது வாழ்வை ஒழுங்கமைத்துக் கொள்வதில் அவர்களுடைய தாயகம் சார்ந்த பொருளாதார, கலாச்சார அம்சங்கள் கணிசமான பங்கினை வகித்துள்ளன என்பது இதன் முதன்மையான முடிவு அல்லது நிறுவுதலாக உள்ளது. அதேவேளை பூர்வீகத் தாயகத்துடனான அவர்களின் பிணைப்பு நோர்வேயில் அவர்களது இணைவாக்கத்திற்குத் தடையாக அமையவில்லை எனவும் வாதிடுகின்றது. ஆய்வின் பெறுபேறுகள், நடைமுறைகள், கோட்பாடுகள் ஊடாக அவை நிறுவப்படுகின்றன. 

தமிழர், சோமாலியர் ஆகிய இரண்டு சமூகங்களும் தாயகத்தில் தமது குடும்பங்களைத் தாண்டி தத்தமது பூர்வீக தேசங்களின் அரசியல், அபிவிருத்தி, கூட்டு வாழ்வாதார நோக்கங்களுக்கு நிதிப்பங்களிப்புகளைச் செய்து வருபவர்கள். இத்தகைய சூழமைவில் பணம் அனுப்புதல் நடைமுறை குறித்த ஆய்வு, சமூகங்கள் மத்தியிற் புரிதலுக்கும், கல்வியியல் அறிவூட்டலுக்கும் பங்களிக்கக்கூடியது. தாயக உறவு, பணம் அனுப்புதல், அதிலுள்ள முரண்பாடுகள் குறித்த பரிமாணங்களை வெளிப்படுத்தல் எனும் அளவில் இந்த ஆய்வு முக்கியமான பங்களிப்பாகவும் அமைகின்றது. 

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

7059 பார்வைகள்

About the Author

சிவராஜா ரூபன்

ரூபன் சிவராஜா அவர்கள் 1993 ஆம் ஆண்டு சிறுவனாக இருக்கும்போது ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தார். தற்போது கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் ஊடகம் ஆகிய தளங்களில் இவர் செயற்பட்டு வருவதுடன் அரசியல், சமூகம், கலை, இலக்கியம் சார்ந்தும் எழுதி வருகிறார். ஈழம், தமிழகம், மற்றும் புலம்பெயர் ஊடகங்கள், இதழ்களில் இவரது எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.

'எதிர்ப்பரசியல்', 'அதிகார நலனும் அரசியல் நகர்வும்' (உலக அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு), 'எழுதிக் கடக்கின்ற தூரம்' (கவிதைத் தொகுப்பு), 'கலைப்பேச்சு' (திரை நூல் அரங்கு) என்பன இவரது படைப்புகளாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)