Arts
10 நிமிட வாசிப்பு

கீழைக்கரையும் அதன் புவிச்சரிதவியலும் I

August 24, 2022 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

கடந்த தொடரில், கீழைக்கரை என்ற நமது ஆய்வுப்பரப்பை சமூக, பொருளாதார, வரலாற்றுக் காரணிகளின் அடிப்படையில் வரையறுத்துக்கொண்டோம். இந்துமாக்கடலின் ஓரமாக, மூதூர் கொட்டியாற்றுக்குடாவில் தொடங்கி சுமார் 250 கி.மீ கிழக்கே நகரும் கீழைக்கரை, கூமுனையில் குமுக்கனாற்றில் முடிவடைகின்றது. அதன் வடக்கில் இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கையும், தெற்கே குமுக்கனாறும் எல்லைகளாக நீடிக்கின்றன. மொனராகல் மாவட்டத்தின் `சியம்|பலாண்டுவைக்கு அருகே சிங்களத்தில் |கோவிந்தஃகெல (Gōvinda hela) என்றும் ஆங்கிலத்தில் வெ`ச்|ட்மினி`ச்|டர் அ|பே (Westminister Abbey) என்றும் அழைக்கப்படும் கழிகாமமலை[1] கீழைக்கரைக்கு குறிப்பான தென்மேற்குப் புற எல்லையாக சொல்லப்படுவதுண்டு.  ஐரோப்பியக் குறிப்புகளில் விந்தனை மலைத்தொடர்களும் விந்தனைப் பெருங்காடும்[2] கிழக்கிலங்கையின் மேற்கு எல்லையாகச் சொல்லப்படுகின்றது. இவற்றைத் தவிர, கிழக்கு மாகாணத்துக்கும் ஊவா மாகாணத்துக்கும் எல்லையாக மேற்கே இன்று பாய்ந்துகொண்டிருப்பது மாதுரு ஓயா எனும் நட்டூர் ஆறு. 

கீழைக்கரையில் அடங்கும் நிர்வாகப் பிரிவுகளின் எல்லைகளும் முக்கியமான இடங்களும்

எனவே, இன்றைய நிர்வாகப் பிரிவுகளின் படி, திருக்கோணமலை மாவட்டத்தின் மூதூர், சேறுவில், வெருகல் பிரதேசங்களும், அம்பாறை மாவட்டத்தின் தெகியத்தகண்டி, தவிர்ந்த ஏனைய நிர்வாகப் பிரதேசங்களும் முழு மட்டக்களப்பு மாவட்டமும் கீழைக்கரையில் அடங்கும் (உரு 01). இந்த எல்லைகளின் அடிப்படையில், சுமார் 9000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட கீழைக்கரையானது, முழு இலங்கையின் பரப்பில் சுமார் 15%ஐ அடக்குகிறது. தமிழர், சோனகர், சிங்களவர் ஆகிய மூவினத்தார் இங்கு பரந்து வாழ்ந்துவருகின்றனர்.

கீழைக்கரையை, ஆய்வியல் நோக்கில் சமூக பண்பாட்டு அரசியல் காரணங்களைச் சுட்டிக்காட்டி இவ்வாறு வரையறுத்துக்கொள்ளும் போதும், கீழைக்கரைக்கு இயற்கையாகவே தனித்துவமான புவியியல் தரைத்தோற்ற அமைப்பு அமைந்திருக்கிறது என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். அந்த அமைப்பே இங்கு குடியேறிய பல்வேறு பண்பாடுகளையும் பல்வேறு மொழிகளையும் மதங்களையும் கொண்ட மக்களை ஒன்றுதிரட்டி, ஒற்றைப்பண்பாடாக மாற்றி இருக்கிறது.

இந்த புவியியல் சிறப்பம்சங்களில் இரண்டு மிகவும் முனைப்பானவை.  முதலாவது, மூதூரிலிருந்து பொத்துவிலூடாக கூமுனை வரை கணிசமான எண்ணிக்கையில் களப்புகளைக்  கொண்ட அதன் சமதரை அமைப்பு. இந்தச் சமதரை நிலத்தில் மிகச்சில இடங்களிலேயே மலைக்குன்றுகள் அமைந்திருக்கின்றன. இரண்டாவது சிறப்பு, இந்நிலப்பரப்பு முழுவதும் கடலுக்கு சமாந்தரமாக நிலத்தில் நீளவாக்கில் அமைந்துள்ள நீர்நிலைகள். இவை கடற்கரையிலிருந்து சுமார் 15 கிமீ நீளத்துக்குள்,  தொடர்ச்சியான, அல்லது சதுப்பு நிலங்களால் துண்டிக்கப்படுகின்ற, களப்புகளாக அல்லது நீர்ப்பரப்புகளாகக் காணப்படுகின்றன (Ranawella 2011:22-23). இந்த நீர்ப்பரப்புகளுக்கு ஊவா அல்லது விந்தனை மலைத்தொடர்களில் ஊற்றெடுக்கும் சிற்றாறுகள் மூலம் தொடர்ச்சியான நன்னீர் வரத்து கிடைக்கிறது.

கீழைக்கரையெங்கணும் தொன்மையான குளங்களும் கால்வாய்களும் பெருமளவில் காணப்படுகின்றன. எனவே வாழ்தகைமைக்கான குறைந்தபட்சத் தேவைகளை நிறைவேற்றியபடி, இங்கு ஒரு காலத்தில் அடர்ந்து செறிந்து வாழ்ந்த பெரும் குடித்தொகை ஒன்று காணப்பட்டிருக்க வேண்டும் (Brohier 1935:41). அது உண்மை என்பது போல், சிற்றாறுகளின் கரைகள், களப்புகளின் அயற்பகுதிகள் அவற்றினருகே அங்குமிங்கும் துண்டிக்கப்பட்டுள்ள மலைக்குன்றுச் சாரல்களிலேயே கீழைக்கரையின் தொல்நாகரிகம் உருவாகி வளர்ந்த பழங்குடியிருப்புகளை இன்று கண்டறியமுடிகின்றது.

சிற்றாறு, சதுப்புநிலங்களக் கொண்ட இந்த நீர்ப்பரப்புகளின் வலையானது, இந்நிலத்தின் போக்குவரத்திலும் பாதுகாப்பிலும் வியாபார அரசியல் பண்பாட்டு வளர்ச்சியிலும் இன்றியமையாத இடத்தை வகித்திருக்கின்றது. ஒல்லாந்தர் காலத்திலும் இந்த நீர்த்தொடர்பு வலை அறுபடாது நீடித்திருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

ஒரு டச்சுக் குறிப்பின் படி, அக்கரைப்பற்றுக்குத் தெற்கே ஒருவர் மரங்களையும் ஏனைய வணிகப்பொருட்களையும் ஒரு வள்ளத்தில் ஏற்றி (பெரிய களப்பு) ஆற்றில் நுழையும் போது, அவரால் (மாங்கேணிக் களப்பு) கொக்குவில் பளை வரை அவற்றை சுலபமாக எடுத்துச் செல்ல முடியும் (Ferguson 1998:173). அங்கிருந்து (பனிச்சங்கேணிக் களப்பு) சதுப்பு நிலங்களூடே படகை விடுத்தால், மகாவலி கங்கையின் கிளையாறான வெருகல் கங்கையை அடையலாம். அங்கிருந்து வடக்கே திருக்கோணமலைத் துறைமுகம் ஊடாக தமிழகத்துக்கோ, திரும்பி மகாவலி கங்கை வழியே நுழைந்து இலங்கை உள்நாட்டுக்குள்ளோ செல்வது மிக எளிமையான ஒரு வணிகப்பாதை.

இங்கு சொல்லப்படும் பெரிய களப்பின் தென் அந்தம் திருக்கோவில் மற்றும் வெருகல் கங்கைக்கு இடையிலான இன்றைய தரைவழி இடைத்தூரம் 150 கிமீ ஆகும். இந்த நீளத்தில் வணிகத்துக்கும் போக்குவரத்துக்கும் உதவிய ஒரு துண்டிக்கப்படாத நீர்ப்பாதை இருந்தது என்பது மிக முக்கியமான வரலாற்றுக் குறிப்புத் தான். கீழைக்கரையின் வரலாற்றைக் கட்டமைத்ததே இந்தப்பாதை தான் என்றால் அது மிகையாகாது. அம்பாறைப் பகுதியின் பழைய பெயராகச் சொல்லப்படும் “திகாமடுல்ல” அல்லது தீர்க்கவாபிமண்டலம் (பாலிமொழி: நீளமான வாவி மண்டலம்) என்ற பெயருக்கும், இந்த நீண்ட நீர்வழிப் பாதைக்கும் தொடர்பிருக்கிறதா என்பதை மேலும் ஆராயவேண்டும். இந்த நீர்வழிப்பாதையே தீர்க்கவாபி மண்டலத்தின் பெயருக்கான உண்மைக் காரணம் எனில், நாம் ஆராயும் “கீழைக்கரை” வெறுமனே பிற்கால வரையறை அல்ல; அது மிகத் தொன்மையான புவியியல் காரணத்தால் இயல்பாகவே உருவாகிவந்த ஒரு வரலாற்றுக்கால வரையறை தான் என்பது உறுதியாகின்றது.

எனவே கிழக்குக்கரையின் வரலாற்றுக்குள் நுழைய முன்னர், இந்தத் தனித்துவமான தரைத்தோற்றத்தை சற்று விரிவாகக் கற்கவேண்டிய தேவை இருக்கிறது. அதிலும் குறிப்பாக, சமதரை அமைப்பையும் நீர்ப்பின்னலையும் பார்த்தால் போதுமானது.

கீழைக்கரையின் சமதரை:

மில்லியன் கணக்கான வருடங்களாக புவியின் மேற்பரப்பு மீது படிந்த வண்டல் பாறைகளின் அடுக்குகளைத் தோண்டி ஆராய்வதன் மூலமும், ஒவ்வொரு பாறை அடுக்குகளின் மாதிரிகளை எடுத்து அவற்றிலுள்ள தாவர – விலங்குகளின் உயிர்ச்சுவடுகளை ஆராய்வதன் மூலமும், குறித்த தரை அடுக்குகளின் வயதைக் கணக்கிட முடியும்.  இந்த நிலவியல் கணக்கிடலின் படி, இலங்கையின் தரையானது,  இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ப்ரீகாம்|ப்ரியன் (Precambrian) காலத்தில்  அதாவது இற்றைக்கு 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருச்சிதைவடைந்து உண்டான பாறைப்படிவுகளாலானது இலங்கைத்தீவின் 90% பரப்பு. மீதி 10% மயோசீன் காலத்து (25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) உருவான சுண்ணப்படிவுகளால் ஆனதாகும் (Subrayamaniyam & Kuyanesathasan 2020:07). இந்த வரையறைகளின் படி, இலங்கைத்தீவின் நிலவியலானது  ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது (Cooray 1994; Chandrajith 2020:23-34). (உரு 02)

இலங்கையின் நிலவியல் பிரிவினை

1. தீவின் வட அந்தத்திலுள்ள சுண்ணப்பாறைகளைக் கொண்ட மயோசீன் நாற்புடைப் படிவுகள் (ம்யோ`சீன் க்வார்|ட்னரி `செடிமென்|ட்`ச்  Miocene Quaternary Sediments).

2. தீவின் வடகிழக்கிலிருந்து தென்மேற்கு வரை குறுக்காக நீண்டுள்ள பெலி|டிக் நை`ச் (pelitic gneiss), மெ|டாக்வார்ட்`சை|ட் (metaquartzite), மார்|பில் (marble), சார்னோகி|டிக் நை`ச் (charnockitic gneiss) முதலிய பாறைகளாலான உயர்நிலச் சிக்கல் (ஃகைலாண்ட் கொம்|ப்லக்`ச் – Highland Complex)

3. உயர்நிலச் சிக்கலின் கிழக்கும் தெற்கும் காணப்படும் மி|க்ம|டை|ட்`ச் (migmatites), |க்ரனை|டிக் நை`ச் (granitic gneiss), |க்ரனை|டொய்ட்`ச் (granitoids) பாறைகளாலான  வி`சயன் சிக்கல் (வி`சயன் கொம்|ப்லக்`ச் –  Vijayan Complex).

4. உயர்நிலச்சிக்கலின் வடக்கும் மேற்கும் காணப்படும் மி|க்ம|டை|ட்`ச் (migmatites), |க்ரனை|டிக் நை`ச் (granitic gneiss), |க்ரனை|டொய்ட்`ச் (granitoids) பாறைகளாலான வன்னிச் சிக்கல் (Wanni Complex)

5. |பயோ|டை|ட் நை`ச் (biotite gneiss), ஃகோர்ன்|ப்லெண்ட் |பயோ|டை|ட் நை`ச் (hornblende-biotite gneiss) ஆகிய பாறைகளின் நீட்சிகளைக் கொண்ட பள்ளத்தாக்குகளாலான கடுகண்ணாவைச் சிக்கல்.

இவற்றில் கீழைக்கரையானது பெருமளவு வி`சயன் சிக்கலில் அடங்குகின்றது. சாதாரண மொழியில் கருங்கல் என்று அறியப்படும் மி|க்ம|டை|ட்`ச் (migmatites), |க்ரனை|டிக் நை`ச் (granitic gneiss), |க்ரனை|டொய்ட்`ச் (granitoids) முதலிய பாறைகளாலானது கீழைக்கரையின் தரை. சில இடங்களில் சிலிக்கேற்றுப் (Silicate – `சிலிகே|ட்) படிவும், தம்பிலுவில், பாணமை முதலிய இடங்களில் இல்மனைற்றுப் (Ilmenite – இல்மெனை|ட்) படிவும் கிடைக்கின்றது (கணபதிப்பிள்ளை 1980:33).

மிக்ம|டை|ட் (Migmatite), கருங்கல் (|க்ரனைட் – granite) படிவுகளால் ஆன கீழைக்கரை, கடல்மட்டத்திலிருந்து 10 மீற்றரைத் தாண்டாத உயரம் கொண்ட சமதரை ஆகும். இதில் ஆங்காங்கே நை`ச் (gneiss) வகைப் பாறைகளாலான சிறுசிறு குன்றுகள் காணப்படுவதுண்டு. இவற்றில் வெருகல் கல்லடி – ஈச்சிலம்பற்றுக் குன்றுகள், வாகரை கதிரவெளி – மதுரங்கேணிக் குன்றுகள், கிரான் பேரில்லாவெளிக் குன்றுத்தொடர்,  அக்கரைப்பற்று பொத்தானை – மொட்டையாகல் குன்றுகள், திருக்கோவில் சங்கமன்கண்டிக் குன்றுகள், கோமாரிக்குன்றுகள், பாணகை உகந்தைமலைக் குன்றுகள், என்பன குறிப்பிடத்தக்கவை.

ஊவாப்பீடபூமி நோக்கி அல்லது உயர்நிலச் சிக்கல் நோக்கி நகர நகர, இக்கற்பாறைகளின் உயரங்கள் அதிகரிக்கின்றன. எவ்வாறெனினும்  கீழைக்கரையானது இலங்கையின் அதிகிழக்கே உள்ள மிகவுயர்ந்த மலைகளான

658 மீ உயரமான நடுக்குடும்பி மலை[3] (சிங்களம்:  வாலிம்|பே ஃகெல [Wālimbehela], ஆங்கிலம்: ஃப்ரையர்`ச் ஃகூட் – Frair’s Hood) மற்றும் 558 மீ உயரமான கழிகாம மலை என்பவற்றுடன் வரம்பிடப்படுவதால், அந்நிலம் பெருமளவு சமதரையானது என்ற கருத்து உறுதிப்படுத்தப்படுகிறது.

கீழைக்கரையின் நீர்நிலைகள்:

கீழைக்கரையின் சமதரையில் பெருமளவு நீர்நிலைகள் காணப்படுகின்றன என்பதையும் அவை அமைத்த நீர்வலைப்பின்னல்கள் கடலுக்குச் சமாந்தரமாக நிலப்பகுதியில் நீண்டு செல்வதையும் முன்பும் குறிப்பிட்டிருந்தோம். இந்தத் தனித்துவமான நிலவியல் தோற்றப்பாட்டிற்கு என்ன காரணமாக இருக்கும்?

நிலவியலாளர்களின் கருத்துப்படி, இரண்டு புவியியல் சம்பவங்கள் இதற்குக் காரணமாகின்றன. இற்றைக்கு 11,700 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கும் ஃகோலோசீன் காலத்தில் ஏற்பட்ட சடுதியான கடல்மட்ட உயர்வும் இற்றைக்கு முன் 22 – 24ஆம் ஆயிரமாண்டுகளில் ஏற்பட்ட “நாற்புடைக்குப் பிந்திய காலக் கடற்கோள்” (Late Quartenary Marine Transgression) நிகழ்வும் அவை (Katupotha & Fujiwara 1888:189, Weerakody 1992:02)

இற்றைக்கு 17,000 ஆண்டுகளுக்கு முன்னர், “ஃகோலோசீன்” (Holocene) என்று வரையறுக்கப்படும் புவிச்சரிதவியல் காலத்தின் ஆரம்பத்தில், உலகெங்கும் பனியுகம் முடிந்து சற்று வரண்ட காலநிலை நிலவியது. இக்காலத்தில் தற்போது உள்ளதிலும் பார்க்க, 10 முதல் 20 மீ கடல் மட்டம் தாழ்வாகக் காணப்பட்டது (Katupotha 1995).

களப்புகளின் புவிசரிதவியல் தோற்றம்

ஃகோலோசீன் காலத்தின் நடுப்பகுதியில், அதாவது இற்றைக்கு முன் சுமார் 6000 ஆண்டுகளில் கடல் மட்டம் சடுதியாக  உயர்ந்து, இன்றுள்ளதிலும் 2.5 மீ உயரமாகக் காணப்பட்டது. இதன்போது அப்போதிருந்த கரையோர வடிநிலப் பள்ளத்தாக்குகள் நீரில் மூழ்கின. சூழலும் வெப்பநிலையும் சாதகமாக இருந்தமையால், அவற்றில் பவளப்பாறைகள், முருகைக்கற்கள் பெருக்கமடையத்தொடங்கின. ஆனால், அடுத்த ஈராயிரம் ஆண்டுகளில் கடல் மட்டம் குறையத்தொடங்கியது. தாழ்வடிநிலங்களில் பெருகியிருந்த முருகைக்கற்பாறைத்தொடர்களும் சிப்பி சங்கு முதலிய ஓட்டு உயிரினங்களும்  உள்நாட்டு நன்னீர் ஆறுகளால் அடித்து வரப்பட்ட வண்டல் மண்ணில் புதைந்து  தேங்கத்தொடங்கின. கடற்காற்று, அலைத்தொழிற்பாட்டால் அவற்றின் மீது முருகைக்கல் படிவுகளும், மணலும் படிய அம்மேடு உயர்ந்து புதிய கரையை உருவாக்கலாயிற்று (உரு. 03). எனவே நீரில் மூழ்கியிருந்த பழைய வடிநிலங்கள் புதிய கரையால் கடலிலிருந்து துண்டிக்கப்பட்டு களப்புகள் உருவாகலாயின (silva et al, 2013:12-15; Ranasinghe et al, 2013:33-35).

உள்நாட்டு நன்னீர் சிற்றாறுகள் இக்களப்புகளில் தொடர்ச்சியாகக் கலந்ததால் அவற்றின் நீரின் உவர்த்தன்மை மாறுபடலாயிற்று. அத்துடன் உள்நாட்டு ஆறுகள் கொண்டுவந்து சேர்த்த வண்டல்மண் படிந்து இந்தக் களப்புகளின் ஆழம் குறைந்தது. தொடர்ச்சியான வண்டல்மண் படிவால், பல களப்புகள் சதுப்புநிலமாக மாற்றமடைந்து பின்னாளில் சேற்றுநிலமாக மாறியதுடன், இன்றுள்ள களப்புகளும் தொடர்ச்சியான சிற்றாற்றுப் படிவுகளால் அகலம் குறைந்து வருகின்றன. களப்புகள் சதுப்பாகி சேறுமண்டிய பின்னர், அவை விவசாயத்துக்குப் பொருத்தமான வயல்நிலங்களாக மாற்றமடைந்தன. இன்றுள்ள களப்புகளின் இடையேயுள்ள பல வயல் நிலங்கள், பழைய களப்புகள் அல்லது கடல்நீரேரிகள் என்பதை செய்மதி வரைபடங்களிலும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றது.

இனி, இந்தக் கீழைக்கரையின் நீர்வலைப்பின்னல்களை இரண்டு பிரிவாகப் பார்க்கலாம். முதலாவது களப்புகள். இரண்டாவது அக்களப்புகளில் கலக்கும், அல்லது கடலில் நேரடியாகக் கலக்கும் சிற்றாறுகள்.

களப்புகள்:

களப்புகள் (அல்லது காயல், ஆங்கிலம்: Lagoon – ல|கூன்) ஒடுங்கிய நிலப்பரப்பால் கடல் அல்லது பெரிய நீர்நிலையொன்றிலிருந்து பிரிக்கப்பட்டு தனிப்படுத்தப்பட்ட ஆழங்குறைந்த நீர்நிலைகள் ஆகும். இவற்றுக்குள் பெரும்பாலும் ஆறுகளோ ஓடைகளோ திறப்பதில்லை (Silva et al 2013; Probert 2017:277-312). ஆனால் கீழைக்கரையில் காணப்படுபவை வெறும் களப்புகள் அல்ல; அவை  நன்னீர் ஆறுகளின்  தொடர்ச்சியான நீர்வரத்தைக் கொண்ட கடலோடு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் திறக்கும் உவர்த்தன்மையான நீர்நிலைகள். களப்புகளின் வரைவிலக்கணத்திலிருந்து மாறுபட்ட இவற்றை  ஆங்கிலத்தில் “Estuary – எ`ச்|டுவரி” என்று அழைப்பர். மட்டக்களப்புத் தமிழில் இவை “கரைச்சை” என்று அழைக்கப்படுகின்றன. கிழக்கிலங்கையிலுள்ள களப்புகள் யாவும், உண்மையில் கரைச்சைகளே. ல|கூன், எ`ச்|டுவரி என்ற சொற்கள் ஆங்கில அறிவியல் கட்டுரைகளிலும் ஒத்தகருத்துச் சொற்களாகப் பயன்படுவதால், சிலர் இரண்டும் இணைந்த Estuarine Lagoon – எ`ச்|டுவரைன் ல|கூன் எனும் பதத்தைப் பயன்படுத்துவது வழக்கம். இதைத் தமிழில் ‘கரைச்சைக் களப்பு’ என்று கூறலாம்.

கீழைக்கரையின் கரைச்சைக் களப்புகளில் ஊவா மலைத்தொடரில் ஊற்றெடுக்கும் ஏராளமான ஆறுகள் திறந்துகொள்கின்றன. இக்கரைச்சைகள் கடலுடன் மிகச்சிறிய மணல் திட்டுக்கள் மூலமே பிரிக்கப்பட்டுள்ளதால், வெள்ளப்பெருக்குக் காலத்தில், இயற்கையாக அல்லது செயற்கையாக இந்தத் திட்டுக்கள் திறக்கப்படுவதன் மூலம் கடலில் மேலதிக நீர் வடிகின்றது. கோடை காலத்தில் இவை மீண்டும் கடற்காற்று – கடலலை இயக்கத்தால் மூடிக்கொள்கின்ற போது, களப்பு நீர் உவர்த்தன்மை அடைகின்றது. இவற்றின் உவர்த்தன்மை கோடை காலம் உச்சமடைந்து களப்புகளின் நீர் வற்றும் வைகாசி, ஆணி மாதங்களில் அதிகரிக்கின்றது. ஏனைய காலங்களில் இக்களப்பு நீர், குடிநீராகவும் சில இடங்களில் விவசாயப் பாய்ச்சல் நீராகவும் கூட பயன்பட்டுள்ளது. சில இடங்களில் கரைச்சைகளை கீழைக்கரை மக்கள் “ஆறு” என்று அழைப்பதற்கு, இவற்றின் நன்னீர்த் தன்மையே காரணமாகும்.

இவ்வாறு ஓராண்டு காலத்துக்குள் கரைச்சையின் நீர் உவர்த்தன்மை மாறுபடுவதால்,  உவர்நீர் சகிப்புமையுடைய நன்னீர் தாவர மற்றும் விலங்கினங்களே  இக்களப்பு ஈரநிலங்களில் காணப்படுகின்றன.  கண்டல் தாவரங்களையும் நீர்வாழ் விலங்கினங்கள் செறிவான சதுப்புநிலங்களும் இக்களப்புகளை அண்டிக் காணப்படுகின்றன.

வெருகலிலுள்ள உல்லைக்களிக் களப்பு, வாகரையிலுள்ள பனிச்சங்கேணி உப்பாற்றுக் களப்பு, பாசிக்குடாவில் திறக்கும் வாழைச்சேனைக் களப்பு, புது முகத்துவாரம், கல்லாறு ஆகிய இடங்களில் கடற்கழிமுகங்களைக் கொண்ட மட்டக்களப்பு வாவி என்பன கீழைக்கரையின் வடபுறக் கரச்சைகளாகும். இவை நிலவியலில் “வடகிழக்குக் களப்பு வலயமாகக்” கருதப்படுகிறது. அக்கரைப்பற்றுப் பெரிய களப்பிலிருந்து, குமுக்கனாற்றின் அருகே உள்ள கிரிக்குளக் களப்பு வரையான பதினான்கு களப்புகளும் கீழைக்கரையின் தென்புறத்தில் அமைந்துள்ள கரைச்சைகள். இவை கிழக்கு வலயக் களப்புகள்.

கிழக்கு வலயக் களப்புகளில் தெற்கு நோக்கிச் செல்லச் செல்ல அங்குள்ள களப்புகளின் பரப்பளவுகள் குறைகின்றன. அவை இலங்கைத்தீவின் முப்பரிமாண அமைப்பில் பிறைவடிவக் கரையில் அமைந்திருப்பதால்,  கடலலை, கடற்காற்று என்பவற்றின் நேரடியான பாதிப்பின்றிக் காணப்படுகின்றன. ஏனைய களப்புகளில் கடற்காற்றின் மற்றும் பருவப்பெயர்ச்சிக் காற்றின் நேரடித் தாக்கத்தால் அவற்றின் பரப்பளவுகள் அதிகரித்துக் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. (Silva et al 2013:21).

(தொடரும்)

அடிக்குறிப்புகள்

[1] இன்று சிதைந்து வாசிக்கமுடியாதுள்ள திருக்கோவில் கல்வெட்டில் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலுக்குரிய நிலத்தின் மேற்கு எல்லையாக கழிகாமமலை என்ற சொல் காணப்படுவதாக வாய்மொழி மூலம் சொல்லப்பட்டு வருகிறது. நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டின் படி, மட்டக்களப்பின் மேற்குப்புற நாடுகாட்டுப்பகுதியின் தென் எல்லை கழிகாமமலை. பார்க்க. பத்மநாதன் 1976:90, கணபதிப்பிள்ளை, 1981:39-40

[2] விந்தனை என்பது இன்றைய மகியங்கனை. அங்கிருந்து கிழக்குக் கரையோரம் வரை பெருங்காடும் அங்கு வேடர்களும் வசித்து வந்தார்கள். விந்தனைக் காட்டின் கிழக்குப்புறம்  வேடர்களும் அங்கு பின்னாளில் குடியேறிய தமிழரும் சிங்களவரும்  வாழ்ந்த குடியிருப்புகள் “விந்தனைப்பற்று” என்ற பெயரில் மட்டக்களப்பின் ஒரு நிர்வாக அலகாக நீடித்து வந்தன. அது கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் விந்தனைப்பற்று கிழக்கு, விந்தனைப்பற்று மேற்கு என்று இரு நிர்வாக அலகுகளாக பிரிக்கப்பட்டது. 1961ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டத்தின் தோற்றத்துடன், அவை முறையே மகா ஓயா, பதியத்தலாவை என்ற பெயர் மாற்றங்களைச் சந்தித்தன.

[3] கிழக்கிலங்கையில் மூன்று குடும்பிமலைகள் உள்ளன. மட்டக்களப்பு  கிரான் பேரில்லாவெளியில் சிங்களத்தில் தொப்பிகல என்றும் ஆங்கிலத்தில் Baron’s Cap என்றும் அழைக்கப்படும் குடும்பிமலை ஒன்று. அம்பாரை உகந்தமலைக்கு அருகே தமிழில் குடும்பிமலை என்றும் சிங்களத்தில் குடும்பிகல என்றும் அழைக்கப்படும் மலை இன்னொன்று. மூன்றாவது குடும்பிமலை என்று தமிழிலும் ஆங்கிலத்தில் Friar’s Hood என்றும் சிங்களத்தில் வாலிம்பஃகெல என்றும் அழைக்கப்படும் இம்மலை. பெயர்க்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக இவை தமிழில் முறையே வட குடும்பிமலை, தென்குடும்பிமலை, நடுக்குடும்பி மலை என்ற பெயரில் இங்கு அடையாளப்படுத்தப்படுகின்றன.

உசாத்துணைகள்:
  • கணபதிப்பிள்ளை, கே. (1980). மட்டக்களப்பு மாநிலத்தின் பழைய புவியியல் வரலாறும் இடப்பெயர்களும். மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும் நூலில், நடராசா, எஃப்.எக்`ச்.`சி (பதிப்பு). மட்டக்களப்பு : இந்து வாலிபர் முன்னணி.
  • கணபதிப்பிள்ளை, சி. (1981). பூர்வீக சப்த ஸ்தலங்கள், அட்டப்பள்ளம்: நூலாசிரியர்.
  • பத்மநாதன், சி. (1976). நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு. மட்டக்களப்பு மகாநாடு நினைவு மலர், மட்டக்களப்பு: அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற மட்டக்களப்பு மகாநாட்டு அமைப்புக்குழு. பப. 82-90.
  • Brohier, R.L. (1935). Ancient Irrigation Works in Ceylon, Part III, Colombo: Ceylon Government Press.
  • Chandrajith, R. (2020). Geology and Geomorphology. in Ranjith .B.M (Ed.). The Soils of Sri Lanka. (World Soils Book Series).  Switzerland: Springer Cham.
  • Cooray, P.G. (1994). The Precambrian of Sri Lanka: A Historical View.  Precambrian Research, 66(1-4), pp. 3-18.
  • Department of Meteorology, (2022). Climate of Sri Lanka, Retrieved from: http://www.meteo.gov.lk/index.php?option=com_content&view=article&id=94&Itemid=310&lang=en&lang=en
  • Ferguson, D. (1998). The Earliest Dutch Visits to Ceylon. New Delhi _ Madras: Asian Educational Services.
  • Katupotha, J.; Fujiwara, K. (1988). Holocene Sea-Level Change On The Southwest And South Coasts Of Sri Lanka. Palaeogeography, Palaeoclimate, Palaeoecology Journal v 68(2-4), pp. 189-203.
  • Katupotha, J. (1995). Evolution and the geological significance of Holocene emerged shell beds on the southern coastal zone of Sri Lanka. Journal of Coastal Research, 11 (4), pp. 1042-1061.
  • Probert, P.K. (2017). Marine Conservation. Cambridge (UK): Cambridge University Press.
  • Ranasinghe, P.N., Ortiz, J.D., Moore, A.L., McAdoo, B., Wells, N., Siriwardana, C.H.E.R., Wijesundara, D.T.D.S. (2013). Mid–Late Holocene coastal environmental changes in southeastern Sri Lanka: New evidence for sea level variations in southern Bay of Bengal. Quaternary International, 298, pp. 20–36.
  • Ranawella, S. (2011). History of the Kingdom of Rohana (From the Earliest Times to 1500 AC). Colombo: Ministry of Higher Education & Department of Archeology.
  • Silva, E. I. L., Katupotha, J., Amarasinghe, O., Manthrithilake, H., Ariyaratna, R. 2013. Lagoons of Sri Lanka: from the origins to the present. Colombo: International Water Management Institute.
  • Subrayamaniyam, H.P., Kuyanesathasan, K. (2020). Geology Of Sri Lanka: Mineral Resources And Soils. Repository BNTU. 551:6-11. Retrieved From: https://rep.bntu.by/bitstream/handle/data/75669/6-11.pdf?sequence=1Weerakkody, U. 1988. Mid-Holocene sea level changes in Sri Lanka. Journal of Natural Science Council, Sri Lanka 16(1):23-37.  
இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.


ஒலிவடிவில் கேட்க

13663 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)