Arts
9 நிமிட வாசிப்பு

பல ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க் கல்வெட்டு தம்பலகாமத்தில் மீளவும் கண்டுபிடிப்பு

March 31, 2023 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

1796 காலப்பகுதியில் திருகோணமலையின் ஆளுநராக இருந்த பன்-சென்டன் அவர்கள்  திருகோணமலைக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது தம்பலகாமம் வயல் வெளியில் நாட்டப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பார்வையிட்டதாகவும், அக்கல்வெட்டின் காலத்தையும், அதில் எழுதப்பட்ட வரலாற்று விடயங்களையும் அறிந்துகொள்வதற்கும், அங்கு வாழ்ந்த மக்கள் உதவ முன்வரவில்லை எனவும், தனது பயணக் குறிப்பில் பதிவுசெய்துள்ளார். இந்தக்கல்வெட்டை 1930 களில் பார்வையிட்ட பேராசிரியர் பரணவிதான அந்தக்கல்வெட்டின் முன்பக்கத்திலுள்ள 11 வரிகளைப் படியெடுத்து அது பற்றிய செய்தியை முதன் முறையாக வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் காணப்படும் தம்பலகாமம் கல்வெட்டின் மைப்பிரதி பேராசிரியர் பரணவிதாவினாலேயே எடுக்கப்பட்டதாகக் தெரியவருகின்றது. ஆயினும் இந்தக்கல்வெட்டு மைப்பிரதியில் உள்ள 11 வரிகளில் தெளிவாக உள்ள ஐந்து வரிகள் மட்டுமே ஓரளவிற்கு வாசிக்கப்பட்டிருந்ததால் தம்பலகாமம் பற்றிய வரலாற்றாய்வில் இந்தக்கல்வெட்டு முழுமை பெற்றிருக்கவில்லை. பிற்காலத்தில் தமிழ் அறிஞர்கள் சிலர் இந்தக்கல்வெட்டை நேரில் பார்வையிட்டுப் படியெடுக்க முயற்சித்தபோதும் குறித்த கல்வெட்டு தம்பலகாமம் வயல்வெளியில் காணப்படவில்லை. இதனால் அவர்களது ஆய்வுகளில் இந்தக்கல்வெட்டு மறைந்த அல்லது மறைக்கப்பட்ட கல்வெட்டாகவே பார்க்கப்பட்டு வந்தது.

தம்பலகாமத்தில்-கண்டுபிடிப்பட்ட-தமிழ்க்-கல்வெட்டு

இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்களை ஆவணப்படுத்துவதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டுவரும் தம்பலகாமத்தைச் சேர்ந்த வைத்திய கலாநிதி தங்கராசா ஜீவராஜ் அவர்கள் தமது குழுவைச் சேர்ந்த திரு. விஜயானந்தன் விஜயகுமார், வைரமுத்து பிரபாகர் ஆகியோரின் உதவியுடன் தம்பலகாமத்தில் இரு இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள கல்வெட்டுக்களை  ஆய்வுசெய்வதற்கு வருமாறு எம்மை அழைத்திருந்தார். அதன் பேரில் தொல்லியல் விரிவுரையாளர் திரு.கிரிகரன், தொல்லியல் இறுதி வருடமாணவர்களான திரு.கஜன் மற்றும் சுதர்சன் ஆகியோருடன் தம்பலகாமம் சென்றிருந்தோம். இவ்விடங்களுக்கு நேரில் சென்று ஆய்வுசெய்வதற்கான வசதிகளை வைத்திய கலாநிதி ஜீவராஜ், வரலாற்று ஆர்வலர் பிரபாகர் ஊடாகச் செய்திருந்ததால் ஒரே நாளில் இரு இடங்களிலும் உள்ள கல்வெட்டுக்களைப் பார்வையிட முடிந்தது. அவற்றுள் சில கல்வெட்டுக்கள் கட்டட அழிபாடுகளுடன் தம்பலகாமம் காட்டுப்பகுதியில் உள்ள ஆழமான ஆற்றில் புதைந்து காணப்படுகின்றன. இதனால் ஆற்றில் இறங்கி புதையுண்ட கல்வெட்டுக்களை வெளியே எடுத்துப் படிக்கமுடியவில்லை. ஆயினும் இந்த ஆறு வற்றிய காலத்தில் அந்தக்கல்வெட்டுக்களை வெளியே எடுத்துப் படியெடுத்துப்படிக்க முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.

1930 இல் மறைந்த அல்லது மறைக்கப்பட்ட அரிய தமிழ்க் கல்வெட்டு

இந்தக்கல்வெட்டு தம்பலகாமம் நாயன்மார்திடல், மாவிலாங்கடிபிள்ளையார் ஆலயத்தில் காணப்படுகின்றது. இந்தக்கல்வெட்டை இவ்வாலயத்தின் தலைவர் முத்துக்குமார் குணராசா அவர்கள் தம்பலகாமத்தில் தனியார் காணியில் இருந்து கண்டெடுத்து, தனது ஆலயத்தில் வைத்துப் பாதுகாத்து வருகின்றார். இதன் எழுத்தமைதியைக் கொண்டு இக்கல்வெட்டு இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு(கி.பி.12- 13ஆம் நூற்றாண்டில்) முன்னர் பொறிக்கப்பட்டதென்பதை உறுதிப்படுத்த முடிகின்றது. இதில் பொறிக்கப்பட்ட தெளிவான தமிழ்ச் சொற்களை வாசித்த போது இந்தக்கல்வெட்டையே இற்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையில் தம்பலகாமம் வயல் வெளியில்  ஆளுநர் பார்வையிட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

தம்பலகாமத்தில்-கண்டுபிடிப்பட்ட-தமிழ்க்-கல்வெட்டு-2-1

1930 களில் இந்தக்கல்வெட்டை படியெடுத்த பேராசிரியர் பரணவிதான கல்வெட்டின் முன்பக்கத்தில் மட்டும் 11 வரிகளில் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நாம்  கல்லின் பின்பக்கத்தை நன்கு துப்பரவுசெய்து பார்த்தபோது அதிலும்  11 வரிகளில் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. ஆயினும் இந்தக்கல்வெட்டு 1000 ஆண்டுகளுக்குமேல் வயல் வெளிகளிலும், தனியார் காணிகளிலும், வீடுகளிலும் சரியாகப் பாதுகாக்கப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்ததால் பல வரிவடிவங்கள் அழிவடைந்தும், தேய்வடைந்தும் காணப்படுகின்றன. இவற்றைக் கருத்திற் கொண்டு இந்தக்கல்வெட்டை பல்வேறு முறைகளில் படியெடுத்து தென்னாசியாவின் தலைசிறந்த கல்வெட்டறிஞர் பேராசிரியர் சுப்பராயலு மற்றும் சிரேஷ்ட கல்வெட்டறிஞர் கலாநிதி இராஜகோபால் ஆகியோருக்கு அனுப்பி அவர்களின் உதவியுடன் இந்தக்கல்வெட்டை ஓரளவிற்கு வாசிக்க முடிந்துள்ளது. அதன் வாசகம் பின்வருமாறு:

வரி:1 —-, 2 ———-மாதி, 3 ——, 4 யிரண் —-தி, 5 ருக்கோணமலை, 6 உடையான்நிச்ச, 7 யித்தஜகதப்பழூ,  8 கண்டன்சந்தி, 9 க்குநிலையாக ஜதரஸ, 10 தம்பலகாமஊ, 11 ரைநான்கெல், 12 லைக்குஉள்எல்லா, 13 வினியோ, 14 கங்கொள், 15 ளும்படிக்கு,16 ம்இதுக்கு, 17 மேற், பன்னி, 18 நான்ஒரு –,  19 —————, 20 –மாகில்நா, 21 –காகத்து,  22 க்கும்பிறந், வர்கள்

இக்கல்வெட்டில் இருந்து திருகோணமலை உடையாரின் வேண்டுகோளுக்கு இணங்க  ஜகதப்பகண்டன் (சந்தி)பெயரில் உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு (ஆலயப் பணிகளுக்கு) தம்பலகாம ஊரின் அனைத்து வரிகளும் (அனைத்துவினியோகமும்) வழங்கப்பட்ட செய்திகளையும், ஆணையையும் அறிந்துகொள்ளமுடிகின்றது. திருகோணமலை உடையாரின் தீர்மானத்திற்கு அமைவாக இந்தத்தானம் உருவாக்கப்பட்டதால் தம்பலகாம ஊரின் வரிகள் அந்த ஊரில் இருந்த ஆலயத்தின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்டதா அல்லது திருகோணமலையில் இருந்த ஆலயத்திற்கு வழங்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தமுடியவில்லை.  இந்தக்கல்வெட்டில் வாசிக்க முடியாதிருக்கும் சில வரிகள் எதிர்காலத்தில் வாசிக்கப்படும் போது இவ்வாலயம் எங்கிருந்ததென்ற உண்மைதெரியவரலாம்.

இந்தக்கல்வெட்டு திருகோணமலை மாவட்டத்தின் அதிலும் சிறப்பாக தம்பலகாமத்தின் இடைக்கால வரலாற்றுக்கு நம்பகத்தன்மையுடைய புதிய சில ஆதாரங்களைத் தருவதாக உள்ளது. தம்பலகாமம் பிராந்தியத்திற்கு 2500 முற்பட்ட வரலாறு உண்டு. அதை அப்பிராந்தியத்தில் பரவலாகக் காணப்படும் ஆதியிரும்புக்கால குடியிருப்புகளும், பெருங்கற்கால ஈமச் சின்னங்களும் உறுதிசெய்கின்றன. இப்பிராந்தியம் பண்டுதொட்டு திருகோணமலைக் கோணேஸ்வரர் ஆலயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததற்கு பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. அந்தத்தொடர்பின் காரணமாகவே 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டபோது அவ்வாலயத்தை நினைவுபடுத்தி தம்பலகாமத்தில் 17ஆம் நூற்றாண்டில்  ஆதிகோணநாயகர் ஆலயம் அமைக்கப்படக் காரணமாகும். இவ்விடத்தில் தற்காலத்தில் தம்பலகாமம் என அழைக்கப்படும் பிராந்தியம் கல்வெட்டில் தம்பலகாம ஊர் எனக் கூறப்பட்டிருப்பதில் இருந்து இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னரே  இப்பிராந்தியம் தமிழரின் பூர்வீக இடமாக இருந்ததை இந்தக்கல்வெட்டு உறுதிசெய்கின்றது. ஆதிகால, இடைக்கால வரலாற்று இலக்கியங்களில் திருகோணமலையும், அங்குள்ள துறைமுகமும் கோகர்ணம், கோகர்ண பட்டினம், திரிகூடகிரி, கோணமலை என அழைக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் இந்தக்கல்வெட்டில் இப்பிராந்தியம் திருகோணமலை எனக் குறிப்பிடப்பட்டதிலிருந்து கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தப்பெயர் வழக்கில் இருந்ததற்கு இந்தக்கல்வெட்டு மேலுமொரு சான்றாகக் காணப்படுகின்றது.

இந்தக்கல்வெட்டு திருகோணமலை உடையார் பற்றிக் கூறுகின்றது. சாசன வழக்கில் உடையார் என்றசொல் அரசனை அல்லது பெருநிலக்கிழாரான அரச பிரதிநிதியைக் குறிப்பதாகப் பேராசிரியர் பத்மநாதன் கூறுகின்றார். இவற்றிலிருந்து 12 ஆம் அல்லது 13 ஆம் நூற்றாண்டில் திருகோணமலைப் பிராந்தியம் அரசனின் அல்லது அரசபிரதிநிதியின் அதிகாரத்திற்கு உட்பட்ட இடமாகக் இருந்ததெனக் கூறலாம். இக்கல்வெட்டு திருகோணமலை உடையாரின் வேண்டுகோளுக்கு இணங்க தம்பலகாம ஊரில்  ஜகதப்பகண்டன் பெயரில் தானம் உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றது. ஜகதப்ப கண்டன் என்பது இருவேறுபட்ட பொருளில் அமைந்தபெயர்களாகும். ஜகதப்ப என்ற பெயர்  அரசன் அல்லது போர் வீரனின் விருதுப் பெயரைக் குறிக்கின்றது. கண்டன் என்பது போர் வீரனைக் குறிக்கும் சொல்லாகும். இவற்றில் இருந்து ஜகதப்பகண்டனை தம்பலகாமத்தில் இருந்த அரசனாக அல்லது படைத் தலைவனாகக் கருத இடமுண்டு.

இந்தக்கல்வெட்டின் சமகால இலங்கை அரசியல் வரலாற்றைக் கூறும் பாளி, சிங்கள இலக்கியங்கள் கலிங்கமாகனது ஆட்சியில் சிங்கள, பௌத்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் பொலநறுவை இராசதானியும், சிங்கள மக்களும் தெற்கு நோக்கி நகர்ந்த போது வட இலங்கையில் கலிங்கமாகன் தலைமையிலான அரசு தோன்றியதாகக் கூறுகின்றன. இவனது அரசின் தலைநகர் எங்கிருந்ததென்பதை இவ்விலக்கியங்கள் கூறவில்லை. ஆயினும் அவனது படைகள் நிலைகொண்டிருந்த இடங்கள், நிர்வாக ஒழுங்குகள் பற்றிக் கூறுகின்றன. அவற்றுள் திருகோணமலைப் பிராந்தியத்தில் உள்ள கோகர்ணம், கந்தளாய், கட்டுக்குளம் கொட்டியாரம் ஆகிய இடங்களில் கலிங்கமாகன் படைகள் நிலைகொண்டிருந்ததாகக் கூறப்பட்டிருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம் கலிங்கமாகன் ஆட்சியோடு கிழக்கிலங்கையில் வன்னிமைகளின் ஆட்சி தோன்றியதாகக் கூறுகின்றது. கோணேஸ்வரர் கல்வெட்டு முதலான தமிழ் இலக்கியங்களும், ஒல்லாந்தர் கால ஆவணங்களும் திருகோணமலைப்பற்று, கட்டுக்குளப்பற்று, கொட்டியாரப் பற்று மற்றும் தம்பலகாமப் பற்று முதலான  வன்னிமைகளின் ஆட்சிபற்றிக் கூறுகின்றன. இங்கே கல்வெட்டில் கூறப்படும் தம்பலகாமத்து ஜகதப்ப கண்டனை  அரசனாக அல்லது படைத்தலைவனாகக் கொள்ளுமிடத்து இந்தக்கல்வெட்டு வடக்கில் கலிங்கமாகனின் ஆதிக்கம் இருந்தற்கான முதலாவது நம்பத்தகுந்த ஆதாரம் என்ற சிறப்பைபெறும். எதிர்காலத்தில் இந்தக்கல்வெட்டுப் பற்றிய விரிவான ஆய்வுகள் இந்தக்கருத்தை உறுதிசெய்யலாம்.

ஆய்வாளர்கள்

இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் கல்வெட்டுக்கள் நம்பகத்தன்மை உடைய சான்றுகளாகும். இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களில் அதிக எண்ணிக்கையிலானவை திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அந்தக்கல்வெட்டுக்களை  ஒன்றுசேர ஆவணப்படுத்தி குறிப்பிட்ட ஒரு இடத்தில் பாதுகாக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஆயினும் திருகோணமலை மக்களிடையே தமது பிரதேசத்தின் வரலாற்றுச் சின்னங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தவேண்டும் என்ற விழிப்புணர்வு 1960 களில் இருந்து தோன்றியதாக வரலாறுகளில் காணமுடியும். அதைச் சமகாலத்தில் முன்னெடுத்துச் செல்லும் துடிப்புள்ள இளைஞர்களில் ஒருவராக வைத்திய கலாநிதி ஜீவராஜ் அவர்களைப் பார்க்கின்றேன். இதற்கு இவரின் தந்தை திரு. தங்கராசா, பேரன் அமரர் வேலாயுதம் ஆகியோர் ஆதிகோணநாயகர் கோயிலின் மரபுவழிஅறங்காவலர்கள். இவர்கள் பத்திரிகை, கலை, இலக்கிய, வரலாறு ஆகிய பணிகளால் தமிழ் அறிஞர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள். இந்தப்பின்புலத்தின் வழி வந்த யாழ், பல்கலைக்கழகம் உருவாக்கிய வைத்தியகலாநிதி ஜீவராஜூம்,அவரின் சகோதரியான தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதியும் சமகாலத்தில் தமக்குரிய கடமைகளுக்கு அப்பால் தம்பலகாமத்தின் வரலாற்றுச் சின்னங்களைக் கண்டறித்து ஆவணப்படுத்தும் பணிகளில் கடுமையாக உழைத்துவருவது இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வுக்குப்  புது வழிகாட்டுவதாக உள்ளது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

13208 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)