Arts
17 நிமிட வாசிப்பு

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் I

June 22, 2023 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

அது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி. ஈழத்துத் தமிழறிஞர்கள் நாடு, தேசியம், இனம் போன்ற விடயங்களில் உன்னிப்பாக கவனம் செலுத்திக்கொண்டிருந்த காலகட்டம். வட இலங்கையில் இருநூறாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிஞர் மத்தியில் வழக்கிலிருந்த யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமாலை, வையாபாடல் முதலிய பிராந்திய இலக்கியங்களை வைத்து, அப்போது வட இலங்கை வரலாற்றை எழுதும் முயற்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருந்தது. திருகோணமலை சார்ந்து கோணேசர் கல்வெட்டு, கைலாசபுராணம், கோணை அந்தாதி முதலிய நூல்கள் பதிப்பிக்கப்பட்டிருந்தன.

ஆனால் மட்டக்களப்பின் வரலாற்றைப் பொறுத்தவரை அத்தகைய .நூல்களோ ஏட்டுச்சுவடிகளோ அச்சிலோ ஏட்டிலோ எங்கும் பயிலவில்லை. அப்படி எ`ச்.ஓ.கனகரெத்தினம் அவர்கள் எழுதிய நூலும் (Canagaratnam 1921) ஆங்கிலத்தில் இருந்ததால் பொதுக்கவனத்தைப் பெறவில்லை.  இந்நிலையில், யாழ்ப்பாணம் காரைநகரில் பிறந்தவரும், மட்டுநகரில் வசித்துவந்தவருமான வித்துவான். எஃப்.எக்`ச்.சீ. நடராசா அவர்களுக்கு அரிதான ஏட்டுச்சுவடியொன்று கிடைத்தது. மட்டக்களப்பு சார்ந்த சில வரலாற்றுச் செய்திகள் அந்நூலில் பதிவாகியிருப்பதைக் கண்டு புளகாங்கிதமடைந்த அவர் அந்நூலை “மட்டக்களப்பு மான்மியம்” என்ற பெயரில் 1962இல் வெளியிட்டார். அது 1998இல் மட்டக்களப்பு மாவட்டக் கலாசாரப் பேரவையால் இரண்டாம் பதிப்பும் கண்டது.

history-of-batticaloa1

மட்டக்களப்பு மான்மியம் உரைநடையும் பாடல்களும் கலந்த ஒரு நூல். கலியுக ஆண்டுத்தொடரில் மட்டக்களப்பை ஆண்ட மன்னர்களின் வரிசை அதில் உரைநடையில் கூறப்பட, அவற்றில் சில விடயங்கள் தொடர்ந்து பிற்பாகத்தில் “கல்வெட்டு” என்ற பெயரில் தனித்தனிப் பாடல்களாகக் காணப்படுகின்றன. கல்வெட்டுப் பாடல்களில் வரலாறு மாத்திரமன்றி, சமூகங்கள், சமூகப்பிரிவுகள், சமுக வழமைகள், கோவில்கள் பற்றிய தகவல்களும் காணப்படுகின்றன. 

இப்படி வெளியான மட்டக்களப்பு மான்மியத்தை கிழக்கிலங்கையின் அறுதியும் இறுதியுமான நூலாகக் கொண்டு கீழைக்கரை அறிஞர்கள் கொண்டாடி வரலாயினர். இந்த மகிழ்ச்சி எதிரொலியை பண்டிதர் வீ.சீ.கந்தையாவின் மட்டக்களப்புத் தமிழகம் நூலில் (1964:22) காணலாம். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மட்டக்களப்பு மான்மியத்தில் சொல்லப்பட்ட தொன்மக்கதைகளை முடிந்தமுடிபான வரலாறாகக் கொண்டு ஆய்வுக்கட்டுரைகளும் கோவில் இலக்கியங்களும் படைக்கப்படலாயின (கந்தையா 1983, தனபாக்கியம் 1993).

ஆனால் அந்நூலில் குறிப்பிடப்பட்ட கால வரையறைகளின் மெய்த்தன்மை, அதில் தெரிவிக்கப்பட்ட செய்திகளை உறுதிப்படுத்தும் தொல்லியல் சான்றுகள் கிடையாமை முதலிய காரணிகளைக் கருத்தில் கொண்டு அதன் முழுமுற்றான நம்பகத்தன்மையில் சில அறிஞர்கள் ஐயம் கொள்ளலாயினர். இந்நூலை விரிவாக ஆராய்ந்து “மட்டக்களப்பு மான்மியம்: ஓர் ஆராய்ச்சி” எனும் நூலைப்படைத்த தனபாக்கியம் அவர்களும் தன் நூலில் இந்த சந்தேகத்தை ஆழமாகப் பதிவுசெய்திருக்கிறார் (1993:1-17). பேரா.சிபத்மநாதன் (2004) மற்றும் க.தங்கேசுவரியின் படைப்புகளிலும் (1993, 1995) இந்த சந்தேகம் சுட்டிக்காட்டப்படுவதைக் காணலாம்.

இந்தப் பின்னணியில் 2005ஆம் ஆண்டு வெளியான இரு நூல்கள், மட்டக்களப்பு மான்மியத்தை முற்றாக மறுவாசிப்புச் செய்யவேண்டிய தேவையை நிலைநாட்டியிருந்தன. முதலாவது வித்துவான் கமலநாதன் தம்பதியினரால் பதிப்பிக்கப்பட்ட “மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம்” எனும் நூல். கிட்டத்தட்ட மட்டக்களப்பு மான்மியத்தின் அதே உள்ளடக்கத்தைக் கொண்ட “மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம்” எனும் பெயர் கொண்ட மூன்று ஏட்டுச்சுவடிகள் தம்வசம் கிடைத்ததையும் மட்டக்களப்பு மான்மியத்தை நான்காவது பிரதியாகச் சேர்த்துக்கொண்டு அந்த நூலின் திருத்திய பதிப்பை தாங்கள் வெளியிடுவதாக அந்நூலின் பதிப்பாசிரியர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் (கமலநாதன் & கமலநாதன் 2005:viii).

மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் (மபூச) மட்டக்களப்பு மான்மியத்தின் விரிவான நூலாகவே இருந்தது. எனினும் மட்டக்களப்பு மான்மியத்தில் இல்லாத சில கல்வெட்டுப்பாடல்கள் இந்நூலில் இணைக்கப்பட்டிருந்தன. மேலும் மான்மியத்திலுள்ள சில உரைநடைப்பகுதிகளும் பாடற்பகுதிகளும் மான்மியத்தின் பதிப்பாசிரியரால் அல்லது அதன் மூலப்பிரதியை எழுதியவரால் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்ததையும் கமலநாதன் தம்பதியினரின் பதிப்பின் பாடபேத அடிக்குறிப்புகள் வழியே  ஊகிக்க முடிகின்றது.

நிலைமை இவ்வாறிருக்க, ஈழத்துப்பூராடனாராலும் கல்கிதாசனாலும் எழுதப்பட்டு அதே ஆண்டு வெளியிடப்பட்ட “மட்டக்களப்பு மாநில பண்டைய வரலாற்றுச்சுவடுகள்” என்ற நூல், மட்டக்களப்பு மான்மியம் மற்றும் மபூச.  இரண்டு நூல்களினதும் நம்பகத்தன்மையை முற்றாகக் கேள்விக்குள்ளாக்கியது (செல்வராசகோபால் & கனகசபாபதி 2005). ஈழத்துப் பூராடனாரின் கருத்துப்படி, ’மட்டக்களப்பு மான்மியமானது, தன் பாட்டனாரான செட்டிபாளையம் புலவர் திரு.கணபதிப்பிள்ளை என்பவரால் எழுதப்பட்ட நூல். மபூச  எழுதுவதற்காகப் பெறப்பட்டிருந்த பிரதிகள் அவரது ஏட்டைப் படியெடுத்து உருவானவை. எனவே மபூச அல்லது மட்டக்களப்பு மான்மியம் என்று அறியப்படும் நூல் காலத்தால் பிற்பட்டது. தன் பாட்டனாரின் கற்பனையில் உதித்த நூல். எனவே அந்நூலை ஒரு வரலாற்று நூலாகக் கொள்ளமுடியாது!’

history of batticaloa

ஈழத்துப் பூராடனார் சிறந்த தமிழறிஞர். மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தை முற்றாகத் தவிர்த்து விட்டு, வெவ்வேறு சான்றாதாரங்களைப் பயன்படுத்தி மட்டக்களப்பு வரலாற்றை எழுத முயன்றவர். வரலாற்றெழுத்தியலை முறைப்படி அறிந்தவரல்லர் என்பதால், அப்படி அவர் எழுத முயன்ற நூல், இன்றைய கீழைக்கரை நூல்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறவில்லையெனினும் பூர்வ சரித்திரத்திற்கு வெளியே கீழைக்கரையின் வரலாற்றை எழுத என்னென்ன சான்றாதாரங்களைப் பயன்படுத்த இயலும் என்பதைச் சுட்டிக்காட்டிய முதல் நூல்களுள் ஒன்று என்ற விதத்தில் விதந்து போற்றத்தக்கது.

ஆனால் மபூச.வின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் ஈழத்துப் பூராடனாரின் குரல், கீழைக்கரை அறிஞர் உலகால் அத்தனை பெரிதாகக் கண்டுகொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. கண்டுகொள்ளாமல் விடும் அளவுக்கு  அவரால் முன்வைக்கப்படும் சான்றுகள் அத்தனை எளிமையானவையும் அல்ல. மபூச. நூலை ஒரு வரலாற்றாதாரமாகப் பயன்படுத்தவேண்டுமெனில், முதலில் ஈழத்துப் பூராடனாரின்  ஆதாரபூர்வமான வாதங்களை முறியடிக்கவேண்டும். எனவே அந்நூல் நம்பகத்தன்மை கொண்டதா இல்லையா என்பதை முதலில் பார்ப்போம்.

மபூச. நூலை 2005இல் எழுதிய கமலநாதன் தம்பதியினர் தங்கள் நூல் முன்னுரையில் இப்படிச் சொல்கிறார்கள்:

“…..மட்டக்களப்பு வரலாறு சம்பந்தமான இரண்டு சுவடிகளும், கையெழுத்துப் பிரதிகளும் எமக்குக் கிடைத்தன. இவற்றை ஒப்பிட்டு ஆராய்ந்தபோது பெரும்பாலும் இரண்டு வழியேடுகளையே இவை ஆதாரமாகக் கொண்டிருந்தமை எமக்கு விளங்கியது. இவற்றுள் கல்முனை, பாண்டிருப்பிலிருந்து கிடைத்த இரண்டு ஓலைச்சுவடிகளும், மகிழடித்தீவில் இருந்து கிடைத்த கையெழுத்துப் பிரதியுமே ஓரளவு பிழைகள் குறைந்தவை ஆகவும், விடயங்கள் கூடியனவாகவும் காணப்பட்டன. ஏனைய கையெழுத்துப் பிரதிகள் யாவும், இவற்றுள் ஒன்றினையே படியெடுத்து இருந்தன. எனவே அவற்றை நீக்கி விட்டோம். ஏற்கனவே அச்சுப்பிரதியாக வெளிவந்துள்ள, இலக்கியகலாநிதி மகாவித்துவான் அமரர் எவ்.எக்ஸ்.சி.நடராசா அவர்களின் மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூலும் இவைகளில் ஒன்றையே தழுவி அச்சிடப்பட்டது போலத் தென்பட்டதால், எமது ஒப்பீட்டுப் பணிக்கு இதனையும் சேர்த்துக் கொண்டோம்.

இந்த நான்கு பிரதிகளில் ஒன்றானதும், சற்று வித்தியாசமானதாகத் தோன்றியதும், பெரிய ஏடு (ஆ) என நாம் பெயர் சூட்டியதுமான [……] ஏட்டையும், அதிலும் சற்றுச் சிறியதான மற்றைய ஏட்டையும் (அ) எமக்குத் தந்துதவியவர் பாண்டிருப்பைச் சேர்ந்த திருமதி செல்வநாயகம் அவர்கள் ஆவார். மகிழடித்தீவை விலாசமாகக் கொண்ட திரு. க.கனகநாயகத்தின் கையெழுத்துப்பிரதியை [க] எமக்குப் பெற்றுக் கொடுத்தவர் வங்கி முகாமையாளர், திரு. கே.ஆறுமுகம் அவர்கள். […] விடய ஒழுங்கைப் பொறுத்தவரையில், சுவடி (அ), பிரதி (க) ஆகியவை, கூடிய பொருத்தப்பாடு உடையனவாக இருக்கின்றன. […..] மட்டக்களப்பு மான்மியம் என்ற அச்சுப்பிரதியிற் காணப்படும் முதலொன்பது பக்கங்களிலுள்ள விடயங்கள் ஏனைய ஏடுகளிலும் கையெழுத்துப் பிரதிகளிலுமில்லை. [……..] உரைநடைப் பகுதிகளைப் பொறுத்தவரையில், இவை பெரும்பாலும் எல்லாப் பிரதிகளிலும் ஒரே விதமாகச் செல்லுகின்றன. […..] கல்வெட்டுகளிலுங் கூட சில வேறுபாடுகள் உள்ளன. பிரதி (அ), (க) ஆகியவை மிகக் கூடுதலான கல்வெட்டுகளை உள்ளடக்கியுள்ளன.

சுவடி (ஆ) […..] முற்றுப் பெறாத நிலையில் இருக்கிறது. நாம் இவ்வோலைச் சுவடியைப் பார்த்த போது, சில வெற்று ஓலைகள் இறுதியில் இணைக்கப்பட்டிருந்தன. சுமார் இருபது வருடங்களுக்கு முன் மட்டக்களப்புப் பிரதேசத்தில் வீசிய சூறாவளியினால், இவ்வேட்டின் சில ஓலைகள் சிதைவுற்றன எனவும், அமரர் திரு.செல்வநாயகம் அவர்கள், சில ஓலைகளைப் பிரதி செய்தாலும் அவற்றை முடிக்கமுடியவில்லை எனவும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.” (கமலநாதன் & கமலநாதன் 2005: viii – ix)

ஆக, கமலநாதன் தம்பதியினரின் பதிப்பு நான்கு பிரதிகளின் பாடபேதங்களை ஆராய்ந்து வெளியிடப்பட்டிருக்கிறது. பாண்டிருப்பில் கிடைத்த “அ, ஆ” எனப் பெயர் சூட்டப்பட்ட முறையே  சிறியதும் பெரியதுமான ஏடுகள் இரண்டு. மூன்றாவது, மகிழடித்தீவில் கிடைத்த, “க” எனப் பெயர்சூட்டப்பட்ட ஒரு கையெழுத்துப்பிரதி. நான்காவது, எஃப்.எக்`ச்.சி.நடராசாவில் பதிப்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மான்மியம்.

சரி. இந்தப் பிரதிகள் மீதுஈழத்துப் பூராடனார் வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

“மகிழடித்தீவிற் கிடைத்த பிரதி மட்டக்களப்பு மான்மியம் அச்சுருவாகிய பின்னர் எழுதப்பட்டது என்றிருப்பதால் அதை ஆதாரமான முக்கிய சுவடியாக எடுத்தாள முடியாது [….] மட்டக்களப்பு மான்மிய உருவாக்கத்திற்கு உபயமீந்த மட்டக்களப்பு வரலாற்று ஏட்டுச்சுவடியைக் கொடுத்தவர் செட்டிபாளையம் இ. வ. கணபதிப்பிள்ளைப் புலவர் [….] அதை அவர் எங்கிருந்து பெற்றார் என்னும் உண்மையை அறிந்திருந்தவர் அவரே எனலாம். […] ஏனெனில் […] இதன் பிரதிகளோ அல்லது ஒத்த பொருள் கூறும் சுவடிகளோ கிடைத்தில என்பது நாம் அறிந்த உண்மை. […..]

‘இது எழுதியது கலிகடந்து 5051 இல் வரும் விரோதி வருடம் கார்த்திகை மாதம் 09ந் திகதி குருவாரம். இந்தச் சுவடி எழுதியவர் இ.ப(வ).க.செ (இ.வ.கணபதிப்பிள்ளை செல்வநாயகம்)1 இந்த ஏட்டின் அன்னை எழுதியிவரிடத்திலிருக்குது’

என்று மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் இறுதிப்பக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்தச் சுவடியை எழுதியவர் புலவரின் மகன் என்றாகிறது. […] இன்னொரு சுவடியை வழங்கியவர் பாண்டிருப்பைச் சேர்ந்த திருமதி செல்வநாயகம் என்பவர் […]. இவர் புலவரின் மருமகள்! இந்த வரிசையைப் பார்க்கும்போது இவ்விரண்டு சுவடிகளும் புலவரிடம் இருந்த முற்றுப் பெற்ற சுவடியின் தொடக்கப் பிரதிகள் என்றாகிறது.” (செல்வராசகோபால் & கனகசபாபதி 2005: ௫௬ – ௫எ [56-57]).

ஈழத்துப் பூராடனாரின் வாதம், மட்டக்களப்பு மான்மியம் அச்சாவதற்கான மூலப்பிரதியை எஃப்.எக்`ச்.சி.நடராசா அவர்கள், செட்டிபாளையம் கணபதிப்பிள்ளைப் புலவரிடம் (விலைகொடுத்து!) வாங்கினார் என்பதாகும் (செல்வராசகோபால் & கனகசபாபதி 2005:௪௭ [47]). கல்முனையில் பெறப்பட்ட (அ), (ஆ) என்று பெயர் சூட்டப்பட்ட இரு சுவடிகளும் புலவரின் மகன் செல்வநாயகத்தால் எழுதப்பட்டவை. அவற்றை புலவரின் மருமகளான திருமதி செல்வநாயகமே தமக்கு வழங்கியதை கமலநாதன் தம்பதியினர் மபூச. நூலிலேயே குறிப்பிட்டுள்ளனர். எஞ்சுகின்ற (க) எனும் மகிழடித்தீவுப் பிரதி, மட்டக்களப்பு மான்மியம் அச்சுருப்பெற்ற பின்னரே கையெழுத்தில் எழுதப்பட்டிருப்பதால், அதன் மூலப்பிரதி சந்தேகிக்கத்தக்கது.

இப்படி முடிவுகட்டும் பூராடனார், எனவே கமலநாதன் தம்பதியினர் பாடபேதம் பார்த்த நான்குமே செட்டிபாளையம் புலவரின் ஒரே படைப்பின் நான்கு வெவ்வேறு வடிவங்கள் தான் என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்! அத்தோடு விடமாட்டேன் என்று இன்னும் வலுவான மூன்று சான்றுகளை சுட்டிக்காட்டுகிறார்.

முதலாவது, மபூச. 5ஆம் பக்கத்திலுள்ள ஒரு பந்தி அருட்சகோ. பிலிப்பு எழுதி 1915இல் அச்சில் வெளிவந்த “இலங்கைச் சரித்திரம்” என்ற நூலில் வரிக்கு வரி மாற்றமின்றி உள்ளது என்பதை கமலநாதன் தம்பதியினர் தங்கள் நூலின் அடிக்குறிப்பில் குறிப்பிடுகின்றனர் (2005:5). செட்டிபாளையம் புலவர் கற்றலில் ஆர்வம் கொண்டவர். அவர் அப்போது மட்டக்களப்புப் பள்ளிக்கூடங்களில் பாடநூலாக இருந்த மேற்படி வரிகளால் கவரப்பட்டு அவற்றைத் தன் ஏட்டுச்சுவடியில் எழுதியிருக்கவேண்டும் என்கிறார் பூராடனார்.

இரண்டு, இப்புலவர் எருவில் போரதீவுப்பற்று வன்னிமையின் அவையில் புலவராக இருந்ததால், பல்வேறு ஆலயங்களில் சேமிக்கப்பட்டிருந்த இரகசிய ஆவணங்களை அணுகும் வசதியும் இவருக்கு வாய்த்திருந்தது.

மூன்று, சித்தமருத்துவம் மற்றும் மாந்திரீகத்தில் தேர்ந்திருந்த கணபதிப்பிள்ளை புலவருக்கு பல ஊர்களுக்குச் செல்லும் வாய்ப்பும், அவ்வூர்களில் நிலவிய கர்ணபரம்பரைக் கதைகளில் நல்ல அறிமுகமும் கிடைத்திருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்த கணபதிப்பிள்ளை புலவருக்கு தன் பகுதி வரலாறு சொல்வதற்கு நூலொன்று இல்லையே என்ற வருத்தம் இந்நூலை எழுதத் தூண்டியிருக்கும்.  எனவே தனது பகுதிக் கர்ண பரம்பரைக் கதைகளை வரலாறாகத் தானே எழுதினார். மரித்தோருக்கு நினைவுமலராக எழுதப்படும் “கல்வெட்டு”ப் பாடல்களை எழுதிக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்த புலவருக்கு “கல்வெட்டு”களை எழுதும் கவிவன்மை இப்படி வரலாற்றைப் பாட்டாக எழுத உதவியிருக்கின்றது. (செல்வராசகோபால் & கனகசபாபதி 2005: ௩௭ – ௭௨, ௧௨0 – ௧௩௮ [37-72,120-138]).

ஈழத்துப் பூராடனார் சொல்வதில் ஓரளவு உண்மை உள்ளது என்பதற்கு அச்சில் வெளிவந்த இரு நூல்களிலுமே அகச்சான்றுகள் உள்ளன. செட்டிபாளையம் கணபதிப்பிள்ளை புலவரிடமிருந்தே மட்டக்களப்பு மான்மியத்துக்கான மூல நூலைப் பெற்றதை எஃப்.எக்`ச்.சீ.நடராசா மறுக்கவில்லை (நடராசா 1998:iv). அருட்சகோதரர் பிலிப்புவின் நூலின் வசனங்கள் அச்சொட்டாக அமைந்திருப்பதால், மட்டக்களப்பு மான்மியம் அல்லது மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் என்று விளங்கும் நூலின் இன்றைய வடிவம் நிச்சயமாக 1915இற்குப் பிந்தையது என்பதும், அந்த இறுதிவடிவை உருவாக்கியதில் செட்டிபாளையம் கணபதிப்பிள்ளை புலவருக்கு பங்கு இருந்தது என்பதும் உறுதியாகின்றது.

ஆனால், ஈழத்துப் பூராடனார் வாதாடுவது போல் அந்நூல் முழுக்க முழுக்க செட்டிபாளையம் புலவரின் படைப்பு என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது. மபூச.இலுள்ள கணக்கற்ற தகவல்களின் தொகையே அந்நூலை ஒரே ஒருவர் யாத்திருக்க முடியாது என்பதற்கான அப்பட்டமான சான்று. மபூச.வின் செய்யுள்களில் பெரும்பாலானவை குலவழக்கங்கள், ஊர்மரபுகளுடன் தொடர்புடையவை. அவை மட்டக்களப்பெங்கணும் பல்வேறு கிராமங்களில் விளங்கிவந்தவை, இன்றும் விளங்கிவருபவை. அவை எங்கிருந்தோ தேடி எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கலாமே தவிர, ஒருவரால் இயற்றி இணைக்கப்பட்டிருக்க முடியாதவை. தானே போற்றுகின்ற அறிஞரே ஆனாலும், தன் பாட்டனாரால் இத்தகைய ஒரு நூலை முழுவதுமாக இயற்றியிருக்கமுடியுமா என்ற திகைப்பை பூராடனாரும் அடைவதை அவரது நூலில் காணலாம்2.

கடந்த நூற்றாண்டில் மட்டக்களப்புப் புலவரொருவர் இத்தனை பிரமாண்டமான தகவல்களைக் கொண்ட நூலைத் தனியாளாகப் படைத்தாரென்றால், அவர் தன் வாழ்வின் மிகப்பெரும் பகுதியை இதற்கென்றே செலவழித்திருக்க வேண்டும். ஊரூராய் அலைந்து திரிந்திருக்கவேண்டும். மிக்க்கடுமையாக உழைத்து அப்படி அவர் ஆக்கிய நூல் எத்தகைய தகவற்பிழையுமின்றி மிகக்கோர்வையாக எழுதப்பட்டிருக்கும். குறைந்தபட்சம் அவற்றில் ஒரு ஒருமையை ஏற்படுத்துவதற்கான முயற்சியாவது இடம்பெற்றிருக்கும். அத்தகைய ஒழுங்கொன்றை மபூச.இல் காண முடியவில்லை. அதை முதன்முறையாகப் படிக்கும் ஒருவர் அது அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடிக் கோர்க்கப்பட்ட பல விடயங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் என்ற எண்ணத்தையே வந்தடைவார்.

மபூச. நூலின் 133ஆம் பக்கத்தில்,

“இந்த ஏடு எழுதியது கலிகடந்து நாலாயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு (பொன்னெழுத்தில்), இடபமாதம் 22ம் திகதி திங்கட்கிழமை இந்தச் சரித்திர ஏடு கலிங்கர் குலத்து மக்களே பாவிக்க வேணும். முதன்மை என்பது இவர்களே. இருபாகை என்பது பிராமணர். இந்த ஏடு எழுதியவன் நான். கோட்டைக்கட்டு வட்டிபுட்டி ஊர் காலிங்கர் குலம். சித்தம்பலம் மாணிக்கம்பிள்ளை.” 3

என்ற வரிகள் காணப்படுகின்றன. கலிகடந்து 4950 என்பது 1849ஆம் ஆண்டு. இவ்வரிகளைப் பின்பற்றியே மபூச.வின் இறுதிப்பக்கத்தில் (ப.138) எழுதியவர் விவரங்கள் பதிவாகியிருப்பதால், இதை வேண்டுமென்றே திணிக்கப்பட்ட வரிகள் என்று கூறமுடியாது. (ஆ) எனும் பெரிய ஏட்டுப்பிரதியில் மட்டும் காணப்பட்ட இவ்வரிகள், கணபதிப்பிள்ளைப் புலவருக்குக் கிடைத்த மூல ஏட்டுச்சுவடியில் இருந்தவை என்பதை ஊகிக்கமுடிகின்றது.

மபூச நூலிலிருந்த தகவல்களை ஒத்த விடயங்கள் அடங்கிய ஏட்டுச்சுவடி கொக்கட்டிச்சோலைக் கோவிலிலிருந்து அம்பலாந்துறை பாலிப்போடி ஆசிரியரூடாகத் தனக்குக் கிடைத்ததை  எஃப்.எக்`ச்.சி.நடராசா குறிப்பிட்டுள்ளார் (1998:iv).  அவர் மாத்திரமன்றி, கொக்கட்டிச்சோலைக் கோவிலில் பேணப்பட்டுவந்த ஏடொன்று மபூச.விற்கு ஆதாரமாக அமைந்திருக்கக்கூடும் என்பதை மபூச. செட்டிபாளையம் கணபதிப்பிள்ளையின் படைப்பு என உரிமைகோரும் ஈழத்துப்பூராடனாரும் கூட ஏற்றுக்கொள்கிறார். இன்னொரு இடத்தில் பூராடனாரே “…..மட்டக்களப்பு வரலாற்று உபயமீந்த மட்டக்களப்பு சரித்திர ஏட்டுச்சுவடியை [……] அவர் [கணபதிப்பிள்ளைப்புலவர்] எங்கிருந்து பெற்றார் என்னும் உண்மையை அறிந்திருந்தவர் அவரே” (2005:௫௬ [56]) என்று கூறிக்கடந்து செல்வதால் புலவருக்கு மபூச.இற்கான மூல நூல் கிடைத்த இடம் கொக்கட்டிச்சோலைக் கோவில் தான் என்பது உறுதியாகின்றது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம், திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி கோவில் முதலிய மட்டக்களப்பின் திருப்படைக்கோவில்களில் அக்கோவில்கள் சார்ந்த வழமைகள், நம்பிக்கைகள், தொன்மைகள் தொடர்பான ஏட்டுச்சுவடிகள் எழுதப்பட்டு “திருப்படைப்பத்ததி”யாக பேணப்படுவது வழக்கம்4. இவை புனிதத்தன்மை மற்றும் பாதுகாப்பு நோக்குக் கருதி ஒரு கோவில் வழமைகள் இன்னொரு கோவிலில் பிரதியெடுக்கப்பட்டுப் பேணப்படுவதும், கோவில் நிர்வாகம் சார்ந்தோரிடம் இரகசியத்தன்மை கருதி பேணப்படுவதும் வழமை. கொக்கட்டிச்சோலையின் திருப்படைப் பத்ததியின் பிரதிகள் முதலைக்குடா க.தோ.சீனித்தம்பி அருணாச்சலம் என்பவரிடமும் காரைதீவு சிவசம்பு என்பவரிடமும் இருந்தன (தட்சணாமூர்த்தி 1992). திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் சார்ந்த ஏட்டுச்சுவடியொன்று அட்டப்பள்ளம் சி.கணபதிப்பிள்ளை எனும் அறிஞருக்குக் கிடைத்திருந்தமையையும் அச்சுவடியில் கிடைத்த அக்கோவில் பற்றிய வரலாற்றுத்தகவல்கள் பலவற்றை அவர் தன் “பூர்வீக சப்த`ச்தலங்கள்” நூலில் பதிவு செய்திருப்பதையும் காணலாம் (1979: 37 – 42).

அண்மையில் எண்ணிமப்படுத்தப்பட்டு நூலகம் ஆவணத்திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்டுள்ள “குடிமக்கள்  வரவு” எனும் ஏட்டுச்சுவடி (ஆ.இ), மபூச.வை ஒத்த நடையில், மட்டக்களப்பின் குலங்கள் பற்றிய தகவல்களைத் தருகின்ற நூலாக அமைந்திருக்கிறது. இவை எல்லாமே மபூச. முழுக்க முழுக்க கணபதிப்பிள்ளைப் புலவரின் படைப்பல்ல; அது ஒரு தொகுப்பு நூல் என்பதற்கான முதன்மையான சான்றுகளாக அமைந்துவிடுகின்றன.

கிழக்கிலங்கையில் உள்ளூர் செவிவழிச் செய்திகளை, கல்வெட்டு, காவியம், அகவல், திருப்படைப்பத்ததி என்ற பெயர்களில் செய்யுள்களாக எழுதிக் கோவில்களில் பேணும் வழக்கம் நிலவி வந்திருக்கிறது என்பதை இத்தகவல்களால் உறுதிசெய்யலாம். இப்படி கோவில்களுக்கு வெளியே கிடைத்த, அல்லது இத்தகைய கோவில்களில் சேமிக்கப்பட்டிருந்து எவ்வாறோ வெளியே சென்றுவிட்ட களுதேவாலயக் கல்வெட்டு (பத்மநாதன் 1994:166-184), துறைநீலாவணை சீர்பாதச் செப்பேடு (செல்வநாயகம் 1982:60 – 65) , குகன்முறை அகவல் (சிவசண்முகம் 2000:1-3) முதலிய இலக்கியங்கள் வெவ்வேறு இடங்களில் நூலுருப்பெற்றுப் பதிவாகியிருக்கின்றன. கமலநாதன் தம்பதியினரே, தங்களுக்குக் கிடைத்த பூர்வ சரித்திர ஏட்டுப்பிரதியிலிருந்த அன்பிலாலந்துறைச் சரித்திரம், அயோத்திகாசி பூர்வ சரித்திரம், கலிங்கதேசச் சரித்திரம்  முதலியவற்றை “பொருட்பொருத்தம் கருதி தவிர்த்து விட்டோம்” என்று சொல்கிறார்கள் (2005:135).  

ஆக, ஈழத்துப்பூராடனார் கூறுவது போலன்றி, மட்டக்களப்பு மான்மியமோ மட்டக்களப்புப் பூர்வ சரித்திரமோ முழுக்க முழுக்க செட்டிபாளையம் கணபதிப்பிள்ளை புலவரின் படைப்பு அல்ல என்பது தெளிவாகின்றது. கொக்கட்டிச்சோலைக் கோவிலை மையமாக வைத்த ஏடொன்றை ஆதாரமாக வைத்தே அந்நூல் எழுதப்பட்டுள்ளது என்பதையும் அந்நூலை முழுவதும் புலவரின் கற்பனை என்று ஒதுக்கிவிடமுடியாது  என்பதும் உறுதியாகின்றது. என்றால் உண்மையிலேயே அந்நூலில் கணபதிப்பிள்ளைப் புலவரின் பிற்சேர்க்கைகள் ஒன்றுமே இல்லையா? ஈழத்துப் பூராடனாரின் வலுவான மறுப்புகளை அலட்சியமாகப் புறந்தள்ளிவிடலாமா?

தொடரும்.

அடிகுறிப்பு

1.இ.ப.க.செ என்றுள்ள பெயர்ச்சுருக்கத்தை இ.வ.க.செ என்று பூராடனார் வாசிக்கிறார். ஏட்டைப் படிப்பதிலோ எழுதுவதிலோ சில தவறுகள் நிகழக்கூடும். ஆனால் மூலச்சுவடிகள் இன்று நமக்குக் கிடைக்காத நிலையில், “இ.ப.க.செ” என்றிருப்பதை “இ.வ.க.செ” என்று வாசித்து அதை இ.வ.கணப்பதிப்பிள்ளை செல்வநாயகம் என்று பூராடனார் வலிந்து பொருள்கொள்கிறாரா என்பதை உறுதிப்படுத்தமுடியவில்லை.

2. “…ஒரு வரலாற்று நூலைப் படைப்பதற்கு இவருக்கு மேலே சொன்னவற்றை விட வேறு ஏதாவது ஞானம் இருந்ததா என்பது நம்மிடையே எழும் ஒரு வினா..இவருக்குப் பள்ளியில் வரலாறு புவியியல் கற்ற அனுபவங் கிடையாது. அதுமட்டுமல்ல அவரது காலத்தில் யாழ்ப்பாண வைபவமாலை எனும் ஒரு சில வரலாற்றுப் புத்தகங்களே கிடைத்தற்குரியனவாக இருந்தன. ஆயினும் இவரால் இப்படி ஒரு நூலை எப்படிப் படைத்திருக்க முடியும். முடியவே முடியாது. ஆகவே மட்டக் களப்பு மான்மியம் ஒரு பழைய ஏட்டுச் சுவடிதான் என்று பல அறிஞர்கள மெச்சுகின்றனர். இத்தகைய பொருட்பொதிவுள்ளள இந்தப் படைப்பை புலவர் எப்படி எழுதத் துணிந்தார் அதற்கு அடித்தளமிட்ட காரணிகள் யாவை….” ப. ௪௪ [44]

3. கலிகடந்து 4950 என்ற ஆண்டு பொது ஆண்டு 1849இற்குச் சமனானது. இடபமாதம் என்றால் வைகாசி. 1849இல் தமிழ் வைகாசி மாதம் 22ஆம் திகதிக்குச் சமனான யூன் 03ஆம் திகதி வருவது, ஞாயிற்றுக்கிழமை. தமிழ் மாதங்களை ஆங்கில மாதங்களுக்குச் சமனாகச் சொல்லும் வழக்கப்படி வைகாசி 22 என்பதை மே 22 என்று கொண்டால் அது செவ்வாய்க்கிழமை வருகிறது. எனவே திங்கட்கிழமை என்ற கணக்கு தவறானது. இது மேலதிக ஆய்வுக்குரிய விடயமாகும்.

இந்தத் தொடரின் ஆசிரியன் பழைய மண்முனைப்பற்று, எருவிற்பற்று, போரதீவுப்பற்று ஆகிய இடங்களில் விசாரித்தவரை, வட்டிபுட்டி, கோட்டைக்கட்டு என்ற ஊர் இருந்ததாகத் தகவலில்லை. அவ்வூர் மறைந்துவிட்டதா, அல்லது மட்டக்களப்பின் வேறு பகுதிகளில் இருந்ததா, என்பதைத் தேடவேண்டும். அப்படி ஓர் ஊர் உண்மையில் இருக்கவே இல்லையெனில் நமது மேலுள்ள முடிவுகளை மீள்பரிசீலனை செய்தே ஆகவேண்டும். 

4. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்திற்கென தனிப்பட்ட வகையில் திருப்படைப் பத்ததியொன்று உண்டு. தனிப்பட்ட ஒரு தொகுப்பு வடிவமே இத்திருப்படைப் பத்ததி ஆகும். ஆலயம் உருவாகிய காலந் தொடக்கம் ஒல்லாந்தர் காலம் வரை மட்டக்களப்பு இராச்சியத்தை ஆண்ட அரசர்கள், அவர்கள் காலம் ஆலயத்திற்குச் செய்த சேவைகள் வழங்கிய மானியங்கள், அரனூழியம் செய்வதற்கு மக்களை வகுத்த முறைகள் குடியேற்றம், குலவிருது என்பவைகளைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறப்படுகின்றன. இத்திருப்படைப் பத்ததியையே திரு.எவ்.எக்ஸ்.சி.நடராசா அவர்கள் மட்டக்களப்பு மான்மியம் என்ற நூலில்  அச்சேற்றியுள்ளார். பத்ததியிலுள்ள சில முக்கியமான விடயங்கள் அவர்கள் பதிப்பித்த நூலில் இடம்பெறவில்லை. அவற்றை வைத்திருப்பவர்கரும் மனமுவந்து கொடுத்த உதவுவதற்கு விரும்புவதில்லை, அதனால் ஆலயத்தில் வரன் முறையே ஒழுங்கான முறையில் ஆராய்வதற்கு இடம்கொடுப்பதில்லை. (தட்சணாமூர்த்தி 1992:1-2).

[திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆ]லயத்திற்குரிய திருப்படைப்பத்ததி இருபாதை முதன்மையாயிருந்த (தேசத்து முதன்மை) செல்லையா வன்னியனார் காலத்தின் பின் காணப்படவில்லை. அது வேண்டுமென்று மறைக்கப்பட்டிருத்தல் வேண்டும். அப்பத்ததி கிடைக்கப் பெறின் மட்டுமே பல உண்மை நிகழ்ச்சிகள் உலகுக்கு வெளிவரலாம் (தட்சணாமூர்த்தி 1992:61).

உசாத்துணைகள்

  1. கணபதிப்பிள்ளை, சி. (1979). பூர்விக சப்த`ச்தலங்கள், அட்டப்பள்ளம்.
  2. கந்தையா, வீ.சீ. (1964). மட்டக்களப்புத் தமிழகம். குரும்பசிட்டி, யாழ்ப்பாணம்: ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம்.
  3. ……………………………………. . (1983). மட்டக்களப்பு சைவக்கோவில்கள், பாகம் 1, மட்டக்களப்பு:பிரதேச அபிவிருத்தி, இந்து சமய, இந்து கலாசார, தமிழ் அலுவல்கள் அமைச்சு,
  4. கமலநாதன், சா.இ., கமலநாதன், க. (2005). மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், கொழும்பு – சென்னை:குமரன் புத்தக இல்லம்.
  5. குடிமக்கள் வரவு. (ஆ.இ). நூலக எண் S0163. நூலகம் வலைத்தளம். https://noolaham.orgஇலிருந்து மீள்விக்கப்பட்டது.
  6. சிவசண்முகம், ஞா. (2000). மட்டக்களப்புக் குகன்குல முற்குகர் வரலாறும் மரபுகளும். மட்டக்களப்பு : விபுலம் வெளியீடு.
  7. செல்வநாயகம், அ. (1982). சீர்பாத குல வரலாறு. திருவருள் வெளியீடு
  8. செல்வராசகோபால், க.தா, கனகசபாபதி, எ`ச்.பி. (2005). மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டை வரலாற்று அடிச்சுவடுகள், பாகம் 02 டொரண்டோ (கனடா): நிழல் வெளியீடு
  9. தங்கே`ச்வரி, க. (1993). குளக்கோட்டன் தரிசனம், ஆரையம்பதி – காத்தான்குடி : அன்பு வெளியீடு.
  10. ………………………………………… (1994). கலிங்க மாகோன் வரலாறு, ஆரையம்பதி: அன்பு வெளியீடு.
  11. தட்சணாமூர்த்தி, சி. (1992). கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம், காரைதீவு. (தட்டச்சுப்பிரதி).
  12. தனபாக்கியம், கு. (1993). மட்டக்களப்பு மான்மியம் ஒரு ஆராய்ச்சி. மட்டக்களப்பு.
  13. நடராசா, எஃப்.எக்`ச்.சீ. (1998). மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு: மாவட்ட கலாசார பேரவை.
  14. பத்மநாதன், சி. (1994). இலங்கையின் இந்துக் கோயில்கள், கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். 
  15. …………………………….. (2004). ஈழத்து இலக்கியமும் வரலாறும், கொழும்பு – சென்னை : குமரன் புத்தக இல்லம்.
  16. Canagaratnam, S.O. (1921). The Monograph of Batticaloa District of Eastern Province, Ceylon, Colombo: H.R.Cottle Government Printer.
இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.


ஒலிவடிவில் கேட்க

8385 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)