Arts
14 நிமிட வாசிப்பு

ஈழத்தில் தொன்ம வழிபாட்டு மரபுகள்

February 5, 2024 | Ezhuna

ஈழநாடானது தமிழகத்திலிருந்து கடலால் பிரிக்கப்பட்ட நாடாக அமைகின்ற போதும், பண்டைக்காலந்தொட்டே தமிழர்களின் மரபுத் தொடர்ச்சியான பண்பாட்டுக் கூறுபாடுகளை உடைய மண்டலமாக காணப்பட்டு வருகிறது. தொல்காப்பியம் சுட்டும் பல இலக்கண விதிகள் இன்று தமிழகத்தில் வழக்கில் இல்லாத போதும் ஈழத்தில் அவை வழங்கப்பட்டு வருகின்றன. பண்பாட்டு வாழ்வியல்களின் அடிப்படையிலும் பண்டைத் தமிழரின் மரபுகள் பலவற்றை ஈழத்தில் காணவியலும். இந்நிலையின் தொடர்ச்சியாகவே பண்டைத் தமிழரின் சமயப் பண்பாட்டு மரபுகளையும் கருதலாம். அந்த வகையில், வடக்கே பருத்தித்துறைமுதல் தெற்கே தேவேந்திரமுனைவரை உள்ள தமிழ் மக்களிடமும், சிங்கள மக்களிடமும் காணப்படும் வழிபாட்டு முறைகளில் பண்டைத் தமிழ் நூல்களில் காணப்படும் வழிபாட்டு மரபுகளை ஆய்வுப் பரப்பாகக் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும், இலக்கணங்களிலும் காணப்படும் வழிபாட்டு மரபுகளில் இலங்கையில் இன்றளவும் வழங்கி வருகின்ற மரபுத் தொடர்ச்சியினை ஆராய்வதே ‘இலங்கையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள்‘ எனும் இத் தொடரின் நோக்கமாகும். இத் தொடர், இலங்கையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள் இன்றளவும் தொடர்கின்றன என்னும் கருதுகோளினை அடையும். 

இலங்கையும் தெற்காசியாவும் ஒருங்கிணைத்த பண்பாட்டு மண்டலமாகப் பெருங் கற்காலத்திற்கு முன்பிருந்தே விளங்கிவரும் நிலப்பரப்பாகும். இந்நிலப்பரப்பு மொழியாலும் நாகரிகத்தாலும் சமயங்களாலும் மெய்யியற் சிந்தனைகளாலும் ஒன்றனுக்கொன்று தொடர்பும் இணைப்பும் ஒத்தத்தன்மையும் கொண்டனவாக அமைகின்றன. மொழிநிலையில் தொல்காப்பியத்திற்கு முற்பட்டும் பிற்பட்டும் அதன் விதிகளுக்கு உட்பட்டனவாகவே ஈழமும் தமிழகமும் அமைகின்றன. சிங்கள மொழியின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் தமிழின் பங்களிப்பு என்பது மிகப்பெரியது. அதனையொத்த தன்மையினையே சமயப்பண்பாட்டு நிலையிலும் காணவியலும். மெய்யியல் கோட்பாடுகளின் தோற்றமும் பரவலும் தமிழகத்திலும் ஈழத்திலும் ஒத்த தன்மையுடையனகவே அமைந்திருந்தன. எல்லாவற்றினுக்கும் மேலாக அரசியற் கட்டமைவுகளுக்கு அப்பாற்பட்டுச் சான்றோர்களாலும் மக்களாலும் தமிழ்நாடுகளுள் ஒன்றாகவே ஈழமும் கருதப்பட்டது. இதனைச் சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பித்த தொல்காப்பியச் சேனாவரையர் உரை நூலின் வெளியீட்டு விளம்பரத்தாலும் உ.வே. சாமிநாதையரின் முன்னுரை குறிப்புகளாலும் அறியலாம். இவ்வொப்புமைகளின் அடிப்படையிலேயே பண்டைய தமிழரின் மெய்யியல் மரபுகளையும் தொன்மை வழிபாட்டுக் கூறுபாடுகளையும் ஆராய வேண்டியதாகின்றது.

தொன்மை வழிபாட்டு மரபுகள் மெய்யியலினை அடிப்படையாகக் கொண்ட சடங்கியலின் வாயிலாக இன்றளவும் தொடர்வன. அவ்வகையில் ஈழத்துச் சடங்குகளில் தமிழ்நாடுகளுடனான பொதுத்தன்மைகளும் சிறப்புத் தன்மைகளும் நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்நாடுகள் சிலவற்றில் மருவிய வழிபாட்டு மரபுகள் இன்றளவும் ஈழத்தில் தொடர்வதினைக் காணலாம். ஒரு மொழிவழங்கும் பரந்துபட்ட நிலப்பரப்பில் ஒரு பண்பாட்டுக் கூறானது ஒரு பகுதியில் அருகிய நிலையிலும் பிறிதொரு பகுதியில் செறிந்தும் காணப்படுதல் என்பது இயல்பாகும். அவ்வகையிலேயே தமிழகத்தில் வழக்கில் இல்லாத ஈழத்தில் வழக்கிலுள்ள வழிபாட்டு மரபுகளைக் குறிப்பிடலாம். ஈழத்தில் வழங்கும் வழிபாட்டு மரபுகளை பின்வருவனவாக வகைமை செய்து கொள்ளலாம்.

  1. ஈழத்தில் மாத்திரமே வழங்கும் தொன்ம வழிபாட்டு மரபுகள்
  2. தமிழகத்திலும் ஈழத்திலும் வழங்கும் தொன்ம வழிபாட்டு மரபுகள்
  3. தமிழகத்தில் வழங்காத ஈழத்திலும் அயற்புலங்களிலும் வழங்கக்கூடிய வழிபாட்டு மரபுகள்
  4. இலங்கையில் சிங்களவரிடமும் தமிழரிடமும் வழங்கும் ஒத்த வழிபாட்டு மரபுகள்

இவ் வகைமைகள் ஒப்பீட்டு நிலையில் ஈழத்து வழிபாட்டு மரபின் தொன்மையினையும் தனித்தன்மையினையும் அறிதலுக்குத் துணை செய்வனவாக அமையும். 

இதில் பல உள்ளகத் தன்மைகளையும் நாம் ஆராய வேண்டியதாகின்றது. ஒரே வழிபாட்டு மரபில் ஒருமொழி வழங்கும் மக்களிடையே வைதீக மயமாக்கலின் தாக்கத்தால் ஒரு பகுதியின் தொல்மரபுகள் சிதைக்கப்பட்ட நிலையினையும் ஒரு பகுதியில் சிதையாத அம்மரபின் இன்றளவுமான தொடர்ச்சியினையும் ஈழத்து வழிபாட்டு மரபில் காணலாம். இவ்வழிபாட்டு மரபில் காணக்கூடிய மெய்யியல் அமைப்பினைக் குறித்தான ஆய்வுகள் இன்றியமையானவாகும். அதனை,

  • வழிபாட்டு மரபிலுள்ள மெய்யியல் கட்டமைப்பினை அறிதலின் வழி அதனது தொன்மக் கூறுகளை அறிதல்.
  • மெய்யியற் கூறுபாடுகள் சடங்கின் வழி தம்மைத் தகவமைத்துக் கொண்ட வரலாற்றினை அறிதல்.

என்பனவாக வகுக்கலாம்.

இம்மெய்யியல் அமைப்பினை நன்கு ஆராயும் போது அதனைப் பல்வேறு வகைமைகளாக மேலும் கைக்கொள்ளலாம்.

1. மெய்யியல் நிலையிலிருந்து உருவாகும் பெருஞ் சமயநிலை

2. சமயநிலையினை அடையாமல் மெய்யியற் கோட்பாடாகவே சடங்கியலின் வழி உள்நிற்றல் நிலை

3. அருகிய சமயநிலையிலிருந்து அயற்சமயங்களால் உள்வாங்கப்பட்ட மெய்யியற் கோட்பாடுகள்

4. மெய்யியற் கோட்பாட்டில் ஏற்பட்ட இணைப்புகளும் திரிபுகளும் அதன் அடிப்படைக் கோட்பாட்டு நிலையிலிருந்து தனித்து நிற்கின்ற நிலை

மெய்யியற் கோட்பாடுகளின் அமைப்பியலானது ஈழத்தின் வழிபாட்டு மரபில் பரந்து காணப்படும் வரலாற்று போக்குகளின் துணையுடனேயே வெளிப்படுவதினையும் காணலாம்.

இலங்கையிற் தமிழ்மக்களாலும் சிங்கள மக்களாலும் பின்பற்றப்படும் வழிபாட்டுப் பொதுமைகள் அதன் வரலாற்று மெய்யியற் கட்டமைப்பின் போக்கில் ஆராய்தல் என்பது இன்றியமையாதது. அவ்வகையில் ஈழத்தில் வழங்கும் தொன்மவழிபாட்டு மரபினைத் தொடர்ச்சியானதாகவும் தொடர்ச்சி திரிந்தனவாகவும் கொண்டு பார்க்க வேண்டியத்தாகின்றது. இவ்வாய்விலே கைக்கொள்ளும் வழிபாட்டு மரபுகளாக;

  • ஆசீவக வழிபாட்டு மரபு
  • கண்ணகி வழிபாட்டு மரபு
  • பூதராயர் வழிபாட்டு மரபு
  • எழுமங்கையர் வழிபாட்டு மரபு
  • நாகவழிபாட்டு மரபு
  • தென்புலத்தார் வழிபாட்டுமரபு
  • பெரியதம்பிரான் வழிபாட்டு மரபு
  • நாச்சிமார் வழிபாட்டு மரபு
  • முருகவழிபாட்டு மரபு

ஆகியன அமைகின்றன.

ஆசீவக வழிபாட்டு மரபு

இலங்கையில் பௌத்தம் வருவதற்கு முன்பிருந்தே விளங்கிய தொன்மரபாக ஆசீவக மரபினைக் கொள்ளலாம். மகாவம்சம் குறிப்பிடும் பண்டுகாபயன் பண்டுவாசுதேவன் முதலான மன்னர்கள் ஆசீவக சமயத்தினைச் சார்ந்தோர் என்பதற்கான பலசான்றுகள் காணப்படுகின்றன. இன்றைய நிலையிலும் தமிழ் மக்களின் வழிபாட்டு மரபிலும் சிங்கள மக்களின் வழிபாட்டு மரபிலும் பல ஆசீவக தொன்மக்கூறுகள் தென்படுவதைக் காணலாம்.

கண்ணகி வழிபாட்டு மரபு

தமிழ்ப் பண்பாட்டு மண்டலம் எங்கும் வழங்கிவரும் வழிபாட்டு மரபுகளில் ஒன்றாக ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டு விளங்குவது கண்ணகி வழிபாடாகும். சிலப்பதிகாரம் இயற்றப்படுதலுக்கு முன்பே கண்ணகி வழிபாடானது தமிழுலகெங்கும் நடைபெற்றமைக்குச் சிலப்பதிகாரத்திலும் அதற்கு முற்பட்டதான சங்க இலக்கியங்களிலும் சான்றுகள் உண்டு. சிலப்பதிகாரத்தில் ‘கொங்கச் செல்வி குடமலையாட்டி தென்தமிழ்ப்பாவை உலகிற்கெல்லாம் ஒருமாமணியாய் வந்த திருமாமணி ’ என வேட்டுவ வரியில் குறிப்பிடப்படும் கண்ணகியைக் குறித்த அடிகள், சிலப்பதிகார காலத்திற்கு முன்பே கொங்குப் பகுதியிலும் குடமலைநாடான மேற்குத் தொடரிலும் தென்கிழக்குப் பகுதியான ஈழத்திலும் கண்ணகி வழிபாடு பெருவழக்கில் வழங்கி வந்தமையினைக் குறிப்பதாகவே அமைகின்றது. கண்ணகி என்ற பெயர் வழக்கும் சிலப்பதிகார காலத்திற்கு முற்பட்டது என்பதினைச் சங்க இலக்கியத்தில் காணப்படும் கடையேழு வள்ளல்களில் ஒருவனான வழங்கும் பேகன் மனைவி கண்ணகி என்ற வழக்கின் வழியறியலாம். தமிழ்க் குடி அல்லாதோரும் கண்ணகி வழிபாட்டினைப் பின்பற்றுவோராயினர். சந்திரா என்பதான வழக்கில், துருவ நாட்டிலும் பத்தினிதெய்வம்  என்பதான வழிபாட்டு மரபாகச் சிங்கள மக்களாலும் கண்ணகி வழிபாடானது சிறந்து விளங்குகின்றமையினைக் காணலாம். கண்ணகி வழிபாட்டினை இரண்டு நிலைகளில் வகைமை செய்துகொள்ளலாம்.

  1. பண்டைக்காலத்தில் கண்ணகி வழிபாடு பரவலாக்கம் பெற்றிருந்தமையும் அதன் தொடர்ச்சியும்
  2. கண்ணகி வழிபாட்டின் மருவு நிலைகள்
vattapalai kannaki amman

சங்ககாலத்திற்கு முற்பட்டுவந்த கண்ணகி வழிபாடானது சிலப்பதிகார காலத்தில் மீண்டும் புத்துணர்ச்சியும் பரவலாக்கமும் பெற்றெழுந்ததெனலாம். இதனைச் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழாவும் சாந்தியும் எடுத்த செய்தியைக் கூறும் பதிகத்தாலும் வஞ்சிக்காண்டத்து வரந்தரு கதையாலும் அறியலாம். அவ்வாறான பண்டைய வழிபாட்டு மரபின் தொடர்ச்சியினை இன்றளவும் தமிழகத்திலும் கேரளத்திலும் ஈழத்திலும் காணலாம். இம் மூவிடங்களில் கண்ணகி வழிபாடானது, பெருவழக்கில் இன்றளவும் முழுமையாக வழங்கும் பகுதியாக ஈழத்திலும், புராண கலப்பிற்கு உட்பட்ட நிலையில் அதன் தொன்மத் தொடர்ச்சியுடன் வழங்கும் பகுதியாக கேரளத்திலும், மருவிய நிலையில் தொன்மங்களைக் கொண்டனவாகக் கொங்குநாட்டிலும் காணப்படுகின்றது. 

பூதராயர் வழிபாட்டு மரபு

பண்டைய தனித்த வழிபாட்டு மரபுகள் பல கால வெள்ளத்தில் பெருஞ்சமயங்களின் உருவாக்கத்தில் புனைவுகள் பலவற்றினுக்கு உட்படுத்தப்பட்டுப் பெருஞ்சமயங்களுக்குள் ஒடுங்கிவிடுதலினைக் காணலாம். பெருஞ்சமயங்களுக்குள் ஒடுங்கிய நிலையிலும் அவற்றின் தனித்த மெய்யியல் அமைப்பானது அவற்றினைப் பிரித்து இனங்காணுதலுக்குப் பேருதவியாக அமையும். அவ்வகையில் பெருஞ்சமயக் கட்டமைப்பில் சைவசமயத்தில் ஒரு பகுதியாகவும் சிவ வடிவங்களில் ஒன்றாகவும் காணப்படும் பூதராயர் வழிபாடு திரிபடைந்துள்ளமையினை ஈழத்தில் காணலாம். பூதராயர் கோயில்கள் சிவபூதராயர் கோவில்களாகப் பெயர் மாற்றப்பட்டுள்ளமையினையும் காணலாம். ஆனால் சிவ வடிவங்கள் அறுபத்து நான்கில் எதனுள்ளும் பூதராயர் வடிவம் என்பது அடங்கவில்லை என்பதும் எண்ணத்தக்கதாம். ஈழத்தில் காணப்படும் பூதராயர் வழிபாட்டினுக்கும் துருவநாட்டில் காணப்படும் பூதராயர் வழிபாட்டிற்கும் பெரிதும் ஒப்புமை உள்ளமையினைக் காணலாம். பொருள்முதல்வாதக் கருத்தியலைக் கொண்டெழுந்த பூதவாதம் போன்ற மெய்யியற் சிந்தனை மரபின் வழிவந்த பூதராயர் வழிபாட்டு மரபுகள் கருத்து முதல்வாதச் சமயங்களில் உள்வாங்கப்பட்ட நிகழ்வினை அதன் மெய்யியல் தனித்தன்மைகளின் வழியும் வரலாற்றியல் போக்குகளின் வழியும் ஆராய்தல் என்பது இன்றியமையாததாகின்றது.

எழுமங்கையர் வழிபாட்டு மரபு

உலகம் முழுமைக்குமான வழிபாட்டு மரபுகளில் கன்னித் தெய்வங்களின் வழிபாடுகளானது மிகவும் பழமை வாய்ந்தனவாகும். அவ்வகையில் மிகப்பழமையான வழிபாட்டு மரபாக அமைவது எழுமங்கை வழிபாட்டு மரபாகும். தமிழ் நாடுகள் ஒவ்வொன்றிலும் மாறுபட்ட பெயர்களில் இவ் வழிபாடானது வழங்கப்படுகின்றது. கொங்குப் பகுதியில் கன்னிமார் வழிபாடு என்றும் பெருங்கோவில்களில் சப்தமாதர்கள் என்றும் வழங்கப்படும் இவ்வழிபாடானது ஈழத்தில் எழுமங்கையர் வழிபாடென்றும் நாச்சிமார் வழிபாடென்றும் வழங்கப்படுகின்றமையினைக் காணலாம். இவ் வழிபாட்டு மரபில் இடம்பெறும் ஏழு தெய்வங்களில் உடல் உழைப்பு சார்ந்தவை வரந்தரு தெய்வங்களே. வரிசையான படிநிலையில் அமைந்த இவ்விறை மரபில் இறுதியாக அமைவது பிடாரியாகும். சிலப்பதிகாரத்தில் இவ் வெழுமங்கையர் வழிபாடுகள் குறித்த செய்திகள் காணப்படுகின்றமையினைக் காணலாம்.

நாகவழிபாட்டு மரபு

பண்டைத்தமிழரின் பழமையான வழிபாட்டு மரபுகளில் சிறப்பான நிலையில் இன்றளவும் தொடர்வனவாக உள்ள மரபு நாகவழிபாட்டு மரபாகும். தமிழ்நாடுகளை நாக நாடென்றும் தமிழர்களை நாகர்கள் என்றும் அழைக்கின்ற மரபு பண்டைக்காலம் தொட்டு இருந்து வருகின்றது எனலாம். இன்றளவும் தெலுங்கு மக்கள் தமிழர்களை அரவர் (நாகர்) என்றே அழைக்கின்றமையினைக் காணலாம். சிங்கள மக்களும் பாலி, சிங்கள நூல்களும் யாழ்ப்பாண குடாநாட்டினை நாக நாடென்றே குறிப்பிடக் காணலாம். புத்தரின் இலங்கை வருகையின்போது இங்கு நாகர்கள் வாழ்ந்தமை குறித்தான செய்திகளே காணப்படுகின்றன. மேற்கண்டவாறாகவே பிற வழிபாட்டு மரபுகளும் இவ்வாய்வினில் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனலாம்.

இப் பண்டைய நாகவழிபாட்டின் எச்சத்தினைப் பல்வேறு நிலைகளில் இன்றவும் ஈழத்திற் காணலாம். கத்திரி வெய்யிலினைக் குறிக்கும் காண்டாவனம் எனும் சொல் வழக்கும் நாகதீபம், நாகதீவு, நாகர்கோயில் என்பதான தலப்பெயர் வழக்குகளும் மக்கற் பெயர் வழக்குகளும் இதற்குச் சான்றுகளாகும்.

தென்புலத்தார் வழிபாடு

தம்குடியில் 1800 பீடுடன் வாழ்ந்து அருஞ்செயல்கள் பலபுரிந்து மறைந்த முன்னோர்களைத் தென்புலத்தார் என வழங்கி வழிபடுதல் என்பது பண்டைத் தமிழ் மரபாகும். இதனைப் புறநானூற்றின் ‘தென்புல வாழ்நர்க் கருங்கடனிறுக்கும் பொன்போற் புதல்வர்’ என்ற பாடலடிகளின் வழியும் ‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’ என்ற திருக்குறளின் வழியும் அறியலாம். பீடுடன் வாழ்ந்து செயலாற்றிய மறவருக்குக் கல்நட்டு தெய்வமாக வழிபட்டமைக்குப் புறப்பாடல் சான்றாகின்றது. வடக்கிலிருந்து உயிர் துறந்த கோப்பெருஞ் சோழனுக்கும் அவனது புலவோருக்கும் கல்நட்டு வழிபட்டமையைப் புறநானூறறின் 170 ஆம் புறப்பாடல் குறிப்பிடுகின்றன. பெண்களுக்கும் கல்நட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டமையினை சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டத்தின் வழியறியலாம். இப் பண்டைய மரபின் தொடர்ச்சியை இன்றளவும் ஈழத்தில் காணலாம். முன்னோர் வழிபாட்டுக்குரிய தலங்கள் பல இன்றும் காணப்படுகின்றன. இவற்றில் பல  வைதீகமாக்கப்பட்ட நிலையிலும் அதன் பண்டைய தொன்மங்களை உடையனவாகவே விளங்குகின்றன.

நாச்சிமார் வழிபாடு

பெண்களைத் தெய்வமாக வழிபாடும் வழிபாட்டு மரபில் நாச்சிமார் வழிபாட்டு மரபும் ஒன்றாகும். பெண்களை தெய்வமாக வழிபடும் வழிபாட்டு மரபு சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டதாகும். இதனை வீரபத்தினி வழிபாட்டு மரபாகவும், பீடுடைப் பெண்களைத் தென்புலத்தார் வழிபாடாகக் கொண்டு அருள்தரும் தெய்வமாகவும் வழிபடும் மரபானது இன்றளவும் ஈழமெங்கும் காணப்படுவதாகின்றது. ஈழமெங்கும் வழங்கும் தாய்தெய்வ வழிபாட்டு மரபுகள் குறித்து ஆராய்வதினை இப் பகுதியாகக் கொள்ளலாம்.

முருகவழிபாட்டு மரபு

பண்டைத்தமிழரின் தொன்மையான வழிபாட்டு மரபுகளில் ஒன்றாக முருகவழிபாட்டினைக் குறிப்பிடலாம். தொல்காப்பியத்தில் ‘சேயோன் மேய மைவரை உலகமும்’ எனக் குறிப்பிடப்படுதலின் வழியும் திருமுருகாற்றுப்படையில் ‘கொற்றவை சிறுவ’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையாலும் குறிஞ்சிநிலத்தில் கொற்றவை வழிபாட்டின் தொடர்ச்சியாக முருக வழிபாடு எழுந்ததெனலாம். குறுத்தொகையில் முருகனுக்கு மரியறுத்துப் படையல் செய்த செய்தி காணப்படுகின்றது. ஈழநாடு முழுவதும் காணப்படும் முருகவழிபாடானது பல்வேறுபட்ட தன்மைகளை உடையதாக உள்ளமையினைக் காணலாம். வைதீக நிலையினுக்கு உட்படுத்தப்பட்ட முருகவழிபாட்டு முறைகள், தமிழ்த் தரப்பினை அடியொட்டிய முருகவழிபாடு, வேல்வணக்கத்திற்குரிய முருகவழிபாடு, வடமொழி மந்திரங்கள் சொல்லிவழிபடும் மரபு, எவ்வகை உருவமும் அற்ற திரையினை வழிபடும் மரபு, தமிழ் மந்திரங்களால் வழிபடும் மரபு, மந்திரங்கள் எதுவுமற்று வாய்கட்டி வழிபடும் மரபு என்பனவாக முருகவழிபாடுகள் அமைவதினைக் காணலாம். கோயில்களின் நிலையிலும் இம் மரபின் பல்வகை வகைமைகளைக் காணவியலும். அவ்வாறான முருகவழிபாட்டு மரபினை ஆராய்வதாக இப் பகுதி அமையும்.

Mandoor Murugan

பெரியதம்பிரான் வழிபாடு, அண்ணன்மார் வழிபாடு என்பதான வழிபாட்டு மரபுகள் தமிழ் குழுக்களிடையே நாட்டார் வழிபாட்டு மரபுகளாக இன்றளவும் தொடர்கின்றன. இவ்வாறான மரபுகள் குறித்தும் இந்தத் தொடரில் விளக்கப்படவுள்ளன.

தெற்காசியாவின் மிகப்பழமையான மெய்யியல் மரபுகளில் ஒன்றான, தமிழர்களின் சிந்தனைச் செல்வாக்கு மிகுந்த ஆசீவகமரபு குறித்தும் அவ் ஆசிவக மரபினுக்கும் இலங்கைக்குமான தொடர்புகள் குறித்தும் அடுத்த தொடரில் விரிவாக ஆராயலாம்.

தொடரும். 


6396 பார்வைகள்

About the Author

ஜெகநாதன் அரங்கராஜ்

முனைவர் ஜெ. அரங்கராஜ் யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்தவர். இவர் பழந்தமிழ் இலக்கியத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம் முதலான துறைகளில் தமது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சிங்கப்பூர்த் தமிழ்ப் பாடநூற்கள் குறித்தும் பண்டைத் தமிழர்களின் அயலகத் தொடர்புகள் குறித்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ‘செம்மொழித் தமிழ் இலக்கண, இலக்கிய மேற்கோள் அடைவு’ என்னும் இவரது நூல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் ஈழம், தமிழகம் என இரண்டு தலங்களிலும் ஆய்வு மேற்கொண்டுள்ள ஆய்வாளராக இவர் திகழ்கின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)