Arts
7 நிமிட வாசிப்பு

கதிரேசர் பெரியதம்பி: அமெரிக்காவில் மருத்துவ கலாநிதிப் பட்டம் (MD) பெற்ற முதல் இலங்கையர்

April 6, 2023 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

யாழ்ப்பாணத்தில் வசித்த மருத்துவர் கிறீனுக்கு 1865 ஆம் ஆண்டு 2 ஆவது பெண் குழந்தை கிடைத்தது. பத்து வயதிலே தாயை இழந்த கிறீன் சிறுவயது முதல் தன்னை அரவணைத்து வளர்த்த லூசி என்னும் மூத்த சகோதரியின் பெயரைத் தனது 2 ஆவது குழந்தைக்குச் சூட்டினார். இந்த ஆண்டு 88 வயதான தனது  தந்தை மசாசுசெட்சில் மறைந்த செய்தியை அமெரிக்காவிலிருந்து ஏறத்தாழ 3 மாதங்களுக்குப் பின்னர் கிடைத்த கடிதம் மூலம் கிறீன் அறிந்து கொண்டார். கிறீன் தனது சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் தந்தையின் இழப்புக் குறித்து ஆறுதல் வார்த்தைகளைக் கடிதத்திலே எழுதி அனுப்பினார்.

தந்தையின் மறைவுச் செய்தி கேட்டு கிறீன் தனது மூத்த சகோதரர் அன்ரூவுக்கு எழுதிய கடிதத்தில் இடம்பெற்ற அன்பின் மொழிகள் சில இவ்வாறிருந்தன:

”மாட்சிமை தாங்கிய  வணங்கத்தக்க ஒரு புதல்வன் பலவருடங்களாகத் தந்தைக்கு அருகேயிருந்து  பெருந்தன்மையோடும் கனிவோடும் ஆற்றிய அருந்தொண்டானது அளவிடற்கரியது. வட்டுக்கோட்டையிலே  தெருவோரம் நீண்ட தூரத்துக்கு பரவி நின்ற ஒரு ஆலமரத்தின் பரந்த அடிமரம் சிதைவடைந்து மண்ணிலே இருந்த பிடிப்பை விட்டபோது அதன் அருகே கிளைத்து வளர்ந்த 2 ஆவது தண்டு – விழுது – மரத்தை விழவிடாது காற்றிலே அசையும் கிளைகளைத் தாங்குவதைப் போன்றது தாங்கள் தந்தைக்கு அருகேயிருந்து ஆற்றிய பணி.”

மருத்துவர் ஜோசுவா இடன்போர்த்

pedeatamby

பெரியதம்பி என்னும் பெயருடைய ஜோசுவா இடன்போர்த் மருத்துவர் கிறீனது விருப்பத்துக்குரிய ஒரு மாணவர். தனது சிறந்த மாணவர்களில் ஒருவர் என்று இடன்போர்த்தைக் குறித்துப் பெருமையுடன் கிறீன் பாராட்டியுள்ளார்.

மருத்துவர் ஜோசுவா இடன்போர்த் ஆபத்துக்குதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணராகவும் (Resident Surgeon) சிரேஷ்ட டிஸ்பென்சராகவும் கடமையாற்றியவர்.  பின்னாளில் வவுனியா விளாங்குளத்திலும் மருத்துவராகக் கடமையாற்றினார். மருத்துவர் ஜோசுவா இடன்போர்த் கிறீனது வேண்டுகோளை ஏற்று துருவிதர் (Druitt) மற்றும் எறிக்சர் (Erichsen) ஆகியோரது சத்திரசிகிச்சைக் கலைநுட்ப நூல்களைத் தமிழாக்கம் செய்து தொகுத்த “இரண வைத்தியம்“ என்னும் நூலை கையெழுத்துப் பிரதியாக 1866 இல் உருவாக்கியிருந்தார். மருத்துவர் கிறீன், இடன்போர்த் செய்த தமிழாக்கத்தில் வேண்டிய திருத்தங்களைச் செய்து 504 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் அச்சுப்பிரதியை  1867 இல் மானிப்பாயிலுள்ள அச்சுக் கூடத்தில் பதிப்பித்து வெளியிட்டார்.

தமிழில் வெளிவந்த முதலாவது மேலைத்தேய சத்திரசிகிச்சை நூலாக இது கொள்ளப்படுகிறது.  இந்நூலுக்கு கிறீன் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூன்முகம் எழுதியிருந்தார். 150 வருடங்களுக்கு முன்னர் கிறீன் தமிழில் எழுதிய நூன்முகம்  அக்காலத் தமிழ் வசனநடையையும் ஐரோப்பிய மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த கிறீனது நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.

இரணவைத்திய நூலுக்கு மருத்துவர் கிறீன் எழுதிய நூன்முகம்:

இப் புத்தகத்தை மொழிபெயர்த்தவர், துருவிதர் என்னும் வைத்தியர் இயற்றிய இரணவைத்தியசாத்திரப் புத்தக ஒழுங்கின்படி இதை வரிசைப்படுத்தியிருக்கிறார். இதில் அடங்கிய காரியங்களைச் சேர்ப்பதற்கோ ஒரு புத்தகத்தோடு மாத்திரம் நில்லாமல் துருவிதர், எறிக்சர் என்பவர்கள் இயற்றிய புத்தகங்கள் இரண்டிலும் இருந்தெடுத்து அதிகமாகச் சேர்த்திருக்கிறார். இப்புத்தகம் தமிழ்ப்பாஷையில் இருக்கிறது. எவ்வளவு தேவையோ அவ்வளவாய்த் தமிழ்த்தேச வழக்கங்களுக்கும் ஏற்றதாக இருப்பது அவசியம் என்று எண்ணி, தன் சொந்த அப்பியாசத்தில் நல்லதென்று கண்ட சிலவற்றையும் இடைக்கிடை சேர்த்தார்.

surgery

இந்நூல் எளிதில் விளங்கும் பொருட்டுச் சரீர உறுப்புக்களையும் அவ்வவற்றின் தொழில்களையும் பற்றி முதலிற் சொல்லப்படும். அரும்பதங்கள் இந்நூலிறுதியில் விளக்கப்படும். இப்புத்தகம் ஐரோப்பிய இரணவைத்திய சாத்திரங்களைக் கற்றறிந்தவரின் கீழ் வைத்தியங் கற்கும் மாணாக்கருக்கு உபயோகமாகச் செய்யப்பட்டதாயிருந்தும், தமிழ்ப் பாஷையைக் கற்றறிந்த எவர்க்கும்   இது தெளிவாய் விளங்கும் என்பதே துணிவு.

இதில் வழங்கிய பரிபாசைச் சொற்களுள் தமிழ் அதிகம். அது ஒவ்வாதவிடத்து ஆரியமொழிகள் வரும். சில  இடங்களில் தமிழ் எழுத்தில் இங்கிலிஷ் மொழிகளும் வரும்.

திருவாளங்கோட்டில் இருக்கும் கனம் பொருந்திய லோ வைத்தியரும் மற்றுஞ் சிநேகிதரும் இதற்குச் செய்த அரிய உதவியை இதைப் பரிசோதித்து  அச்சிற் பதிப்பிக்கிறவர் அதிக நன்றியறிதலுடன் கீர்த்திக்கிறார். பில்லைதெல்பியா நகரிலுள்ள பிளாஞ்சர், லீயர் என்னும் தயாளர் இதிற் காணும் படங்களின் அச்சுக்களைக் கொடுத்ததுக்காக நன்றி சொல்வது தகும்.

நோயாளிக்கும் வைத்தியனுக்கும் திருச்சகாயரான இயேசுநாதர் இப்புத்தகத்தைத் தமிழ்ச் சனங்களுக்குக் கிருபையாய்  ஆசீர்வதிப்பாராக.

ச.பி.கி /யாழ்ப்பாணம், கஅ௬எ (1867)

மருத்துவர் இடன்போர்த் இரண வைத்தியத்தை தமிழில் மொழிமாற்றம் செய்தமை மருத்துவர் கிறீனுக்கு பேருவகையை ஏற்படுத்தியது. இடன்போர்த் அவர்களது திறமைக்கு மதிப்பளித்து அவருக்கு கௌரவ மருத்துவ கலாநிதி பட்டத்தை வழங்குவதற்கு வேண்டி கொலம்பிய பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சை வல்லுநர்கள் கல்லூரியின் அப்போதைய அதிபரான மருத்துவர் எட்வேட் டெலபில்ட்  அவர்களுக்கு கிறீன் விரிவான ஒரு கடிதம் வரைந்தார்.  

collage-of-physician-surgeon

கிறீனது கடிதத்தை ஏற்று கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ வல்லுநர்கள் சத்திரசிகிச்சைக் கல்லூரி மருத்துவர் இடன்போர்த் அவர்களுக்கு மதிப்புறு மருத்துவ கலாநிதி (MD) பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. அமெரிக்க மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்துவ கலாநிதிப் பட்டத்தை பெற்ற முதலாவது இலங்கையர் கதிரேசர் பெரியதம்பி (Padeatamby) என்ற பெயரால் அறியப்பட்ட மருத்துவர்  ஜோசுவா இடன்போர்த் அவர்களே. இவர் கிறீனிடம் மருத்துவம் பயின்ற முதல் அணி (1848 – 1851) மாணவர்கள் மூவரில் ஒருவர். கிறீனது மாணவர்கள் என்ற புகழ்பெற்ற புகைப்படத்தில் உள்ள மருத்துவர்  ஜோசுவா இடன்போர்த் தவிர மற்றைய அனைவரும் கிறீனது 2ஆவது அணி (1850-1853) மாணவர்களே, என்பது இங்கு மீளவும் நினைவூட்டத்தக்கது.

மருத்துவர் கிறீனும் கொலம்பியா மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சை வல்லுநர்கள் கல்லூரியிலே மருத்துவ கலாநிதிப் பட்டத்தை பெற்றவர். 1767  இல் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியின் பெயர் 2017 இல் கொலம்பிய பல்கலைக்கழக வஜலோஸ் மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சை வல்லுநர்கள் கல்லூரி என்று பெயர் மாற்றப்பட்டது.

மருத்துவர் கிறீனது 7 ஆவது அணி மாணவர்கள் (1867 -1870)

யாழ்ப்பாணத்திலிருந்து 1867 இல் வெளிவந்த உதயதாரகை பத்திரிகையில் தமிழ்மொழி மூலமான 2 ஆவது அணி மருத்துவ மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டது. மருத்துவம் பயில 36 பேர் விண்ணப்பித்தனர். 24 பேர்  அனுமதிப் பரீட்சைக்குத் தோற்றினர். 13 பேர் மருத்துவம் பயிலத் தகுதிபெற்றனர். இருவர் பயிற்சிக் காலத்தில் வெளியேறினர்.அந்த அணியில் இடம்பெற்றிருந்தோர் விபரம்-

  1. ஏ. அப்பாப்பிள்ளை
  2. ஏ. அப்புக்குட்டி
  3. ஆறுமுகம்
  4. எஸ். சரவணமுத்து
  5. வி. சீனிவாசகம்
  6. எஸ். சாமிநாதர்
  7. எஸ். கந்தவனம்
  8. எட்வேட் லோவல்
  9. வி. வன்னித்தம்பி
  10. விசுவநாதன்
  11. எஸ். வினாசித்தம்பி

பேர்சிவல் ஒக்லண்ட் டைக்கின் மறைவு

சேர். பேர்சிவல் ஒக்லண்ட் டைக் அவர்களது சிந்தனையில் 1850 இல் உருவான யாழ். போதனா மருத்துவமனையை நாடி, இன்று வடபகுதியிலிருந்து மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திலிருந்தும் புத்தளம், சிலாபம்  முதலான இடங்களிலிருந்தும் பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர்.  யாழ்ப்பாண மக்களால் நேசிக்கப்பட்ட மருத்துவர் கிறீனும் அரச அதிபர் டைக்கும் நல்ல நண்பர்களாக விளங்கினர். 1867.10.09 அன்று டைக்கின் மறைவின் போது அஞ்சலி நிகழ்வில் 2 ஆவதாக இரங்கலுரையாற்றுவதற்காக மருத்துவர் கிறீன்  அழைக்கப்பட்டார். ஒக்லண்ட் டைக்கின் பூதவுடல் சுண்டிக்குழியிலுள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

1867 ஆம் ஆண்டு மானிப்பாயிலுள்ள டிஸ்பென்சரியில் 1316 பேருக்கும் யாழ். நகரிலிருந்த ஆபத்துக்கு உதவி வைத்தியசாலையில் 5887 பேருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7982 பார்வைகள்

About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (13)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)