Arts
21 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 5

October 11, 2023 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

நகரசபையினர் தாமே ஒரு வாசிகசாலையை ஆரம்பித்து நடத்தலாம் என்று கருதிய வேளையில் ஆர். சுப்பிரமணியம் அவர்கள் இந்நூலகத்தைப் பொறுப்பேற்று நடத்துமாறு பிரேரணை கொண்டு வந்தார். இவ்வாறாக, நூல் நிலைய பரிபாலன சங்கத்தின் காரியதரிசியாய் க.மு.செல்லப்பா அவர்கள் நகரசபைத் தலைவருக்கு 21-12-1934 இல் எழுதிய கடிதம் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

தலைவர்,
நகரசபை,
யாழ்ப்பாணம்.

ஐயா, தங்கள் சபையினர் எங்கள் நூல் நிலையத்தை பொறுப்பேற்று நடத்துதல் சம்பந்தமாக நிறைவேற்றிய பிரேரணையை எங்கள் காரிய நிர்வாக சபையினர் கருத்துடன் பரிசீலனை செய்து 01-01-1935 தொடக்கம், நூல் நிலையத்தை நகரசபையின் பொறுப்பில் ஒப்படைப்பதற்குத் தீர்மானித்து விசேட பொதுக்கூட்டத்தில் அனுமதி பெறுவதற்கு 20-12-34 இல் கூடினர். அக்கூட்டத்தில் நூல் நிலையத்தை குறித்த நாளில் ஒப்படைப்பதற்குத் தீர்மானித்தார்கள். இங்ஙனம் கையளிக்கும்போது இங்குள்ள நூல்கள், தளவாடங்கள் யாவற்றையும் உங்களிடம் ஒப்படைக்குமாறு எனக்குப் பணித்துள்ளார்கள். எனவே, தாங்கள் தயவு செய்து தங்கள் உத்தியோகத்தர் ஒருவரை நாளையோ அன்றி வருகின்ற திங்கட்கிழமையோ வந்து இவற்றைப் பொறுப்பேற்குமாறு பணிப்பீர்களாக. இடையில் விடுமுறை நாட்கள் வருவதால் இங்ஙனம் நாட்களை நான் குறிப்பிட்டுள்ளேன். எங்கள் நூலக சங்கத்தார் 31.12-1934 வரையுள்ள கடன் கொடுக்குமதி யாவற்றையும் தீர்த்து விட்டார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

இங்ஙனம் தங்கள் விசுவாசமுள்ள ஊழியன்,
க. மு. செல்லப்பா.

க.மு.செல்லப்பாவின் கடிதத்திற்கு மறுநாளே பதிலும் கிடைத்தது. 

இலக்கம் 2-98 நகரசபை அலுவலகம்,
யாழ்ப்பாணம்,
22-12-1934.

தாங்கள் 21-12-34 இல் எழுதிய கடிதத்தின் பிரகாரம் எங்கள் நகரசபை நூல்நிலையத்துக்கான செலவினை ஒதுக்கியுள்ளபடியால், அது 1-1-1935 முதல் உங்கள் நூல்நிலையத்தைப் பொறுப்பேற்கும் என்பதை அறியத் தருகிறேன். நகரசபைச் செயலாளரிடம் நூல் நிலையத்தை விடுமுறை நாட்களில் வசதிபோல பொறுப்பேற்கும் வண்ணம் பணித்துள்ளேன். ஆகவே, தாங்கள் அவரிடம் அறிவுறுத்த வேண்டியவற்றைக் கூறவும்.

இங்ஙனம் தங்கள் விசுவாசமுள்ள ஊழியன்
ஆர். ஆர். நல்லையா
தலைவர் நகரசபை,
யாழ்ப்பாணம்.

நூல் நிலையச் சங்கம் நடத்தி வந்த நூல் நிலையத்தை நகர சபையாரிடம் கையளித்தல் பற்றி மற்றுமொரு விசேடப் பொதுக் கூட்டம் யாழ் மத்திய கல்லூரியில்; 20.12 -1934 அன்று வண. கலாநிதி தம்பையா அவர்கள் தலைமையிற் கூடியது. தலைவர் அவர்களே நூலகத்தை நகரசபையிடம் கையளித்தல் வேண்டும் என்னும் பிரேரணையை நிறைவேற்றினர். 

மத்திய இலவச நூல்நிலையத்தை நகரசபையிடம் ஒப்படைத்த பின்னர் 22-4-35 இல் டபிள்யூ டி. நைல்ஸ் அவர்கள் தலைமையில் ஒரு காரிய நிர்வாக சபைக் கூட்டம் நடைபெற்றது. அதற்குப் பின்னர் 31-5-1935 இல் தலைவர் நீதவான் ஸி. குமாரசுவாமி அவர்கள் தலைமையில் இறுதியான நிர்வாக சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சங்கத்தாரிடம் எஞ்சியிருந்த பணத்தைக் கிராமசபைகளின் வாசிகசாலைகளுக்குப் பகிர்ந்தளிக்கலாமா என்னும் விடயம் பேசப்பட்டது. திரு. என். சின்னத்தம்பி அவர்கள் 125 ரூபாவை கிராம சங்கங்களுக்குக் கொடுக்கலாம் எனப் பிரேரித்ததை க.மு.செல்லப்பா அவர்கள் ஆதரிக்கவே, பிரேரணை நிறைவேறியது. அதுவரை கௌரவ நூலகராகக் கடமையாற்றிய வி.எஸ். இராசரத்தினம் அவர்களுக்குப் பல மாதங்களுக்குப் பொதுவாக 75 ரூபாவை அலவன்சாகக் கொடுக்கலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக, தலைவர் வி. குமாரசாமி தங்கள் சங்கத்தைக் கலைக்கவேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பொதுச்சபை கூட்டப்பெற வேண்டும் என்றும் பிரேரித்த பிரேரணை செல்லப்பா அவர்கள் அனுமதித்ததும் ஏற்றுக் கொள்ளப்பெற்றது. இத்துடன், பொதுச்சபை பின்னர் கூட்டப் பெறாமலேயே காரிய நிர்வாக சபைக் கடைசிக் கூட்டத்தோடு 31.5-53 இல் நூல்நிலையச் சங்கம் கலைந்தது.

நகரசபையின் பொறுப்பில் இயங்கிய நூல் நிலையத்திற்கு அனுபவமும் பொறுப்பும் வாய்ந்த நூலகர் ஒருவர் உடனடியாகத் தேவையாயிருந்தது. முன்னர் கௌரவ நூலகராயிருந்த சி.எஸ். இராசரத்தினம், மெற்றிக்குலேசன் சித்தியடைந்திருந்தார். அவரே நேர்முகப் பரீட்சையின் பின் முதலாவது நூலகராகத் தெரியப்பெற்றார். அக் காலத்திலே சாதாரண பாடசாலை ஆசிரியரின் வேதனம் மாதம் 35 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் நூலகர் சி.எஸ். இராசரத்தினம், ரூபா 40 ஐ மாத வேதனமாகப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காலை ஏழுமணி தொடக்கம் மாலை ஏழுமணி வரை நூலகர் கடமை. நூலகர் தனியொருவராய் முழு நூலகத்தையும் நிர்வகித்தார்.

முன்னர் ஆஸ்பத்திரி வீதியில் விசாலமான கடையொன்றில் நடைபெற்றுவந்த நூலகம், நகரசபையார் பொறுப்பேற்றதும் வேறு இடத்திற்கு மாற்றப்பெற்றது. அந்நாளில் U.D.C என்னும் நகரசபை தனக்கே சொந்தமான கட்டடமோ நிலமோ இல்லாமல் யாழ்ப்பாணம் கச்சேரியில், ஒரு பகுதியில், நடைபெற்று வந்தது. இவ்வாறாக இடநெருக்கடியிருந்த வேளையில் நகர சபையார் நூலகத்துக்கு முக்கியத்துவமளித்து, பிரதான வீதியில், ஒரு சந்திக்கு அருகில், அபூபக்கர் கட்டடத்தில் விசாலமான முகப்புக் கடையொன்றை மாதம் 35 ரூபா வாடகைக்கு எடுத்தார்கள். அது விசாலமானதாக இருந்தபோதிலும், சந்தடியுள்ள சூழலில் அமைந்திருந்ததால் அமைதியான சூழலை தேடி வேறு இடத்துக்கு விரைவில் மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.

நகரசபையினர், தமக்கென ஒரு பாரிய நகரசபை மண்டபத்தைக் கட்டி எழுப்பத் தொடங்கிய காலம் அது. யாழ்ப்பாண வாடி வீட்டுக்குத் தென்திசையில் சைவ வித்தியா விருத்திச் சங்க காரியாலயக் கட்டடத்தின் அருகில் உள்ள புத்தூர் மழவராயர் குடும்பத்தாருக்குச் சொந்தமான மாடிக் கட்டடத்தின் மேல் மண்டபத்தை, மாதம் அறுபத்தைந்து ரூபா வாடகைக்குப் பெற்றுக் கொண்டார்கள். அம்மண்டபம் பெரியதாகவும் இரண்டு அறைகளையும், நீளமான விறாந்தையையும் கொண்டதாய் நல்ல காற்றோட்டமும் பிறவசதிகளும் கொண்டிருந்தது. அம் மண்டபத்தில் 1936 ஆம் ஆண்டு முதல் நூலகம் நல்லமுறையில் இயங்கி வந்தது.

இரண்டு அறைகளிலும் பெரிய விறாந்தையிலும் பல மேசைகள் கதிரைகளுக்கிடையே நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பவற்றை நூற்றுக் கணக்கானோர் பயன்படுத்திவந்தனர். துரிதமாக வளர்ச்சியடைந்துவந்த அந்த நூலகத்தை தனியாளாக நிர்வகிப்பது இயலாத விடயமாயிற்று. எனவே, திரு. ஆர். சுப்பிரமணியம் என்பவர் நூலக உதவியாளராய் நியமிக்கப் பெற்றார்.

அக்காலத்தில் சங்க இலக்கியங்கள், புராண இதிகாசங்கள், வேதாந்த சித்தாந்த நூல்களே தமிழ்ப் பகுதியில் அதிகமாக இடம் பெற்றிருந்தனவென்றும், பத்திரிகைப் பகுதியில் கலைமகள், சித்தாந்தம், செந்தமிழ், ஆனந்தவிகடன், செந்தமிழ்ச் செல்வி, லோகோபகாரி முதலியன சிறப்பிடம் பெற்றிருந்தனவென்றும், ‘ஈழகேசரி” எல்லோர்க்கும் பெருவிருந்தாயிருந்தது என்றும் ஆங்கிலப் பகுதியில் இந்திய, ஐரோப்பிய ஆங்கில வரலாற்று நூல்களே முக்கிய இடம் பெற்றிருந்தனவென்றும், இன்னும் ஆங்கிலப் புலவர்களின் அரிய படைப்புகளும், தத்துவத்துறையில் வித்துவான்களுக்கே விளங்கக் கூடிய கடினமான பெருநூல்களும் இருந்தனவென்றும் அந்நூலகத்தின் ஆரம்பகால அங்கத்தவரான க.சி.குலரத்தினம் அவர்கள் தனது நூலில் குறிப்பிடுகிறார். இவரது அங்கத்துவ இலக்கம் 72 ஆகும். 

யாழ்ப்பாண நகரசபை, காலக்கிரமத்தில் தனக்கெனவொரு பாரிய கட்டடத்தைக் கட்டிக் கொண்டது. அக்காலத்தில் நூலகம் பற்றிய புரிந்துணர்வு நகரசபையினரிடையே தளர்வுநிலையைக் கண்டிருந்தது. இது முன்னர் 1934 ஆம் ஆண்டு முதல் நூல் நிலையத்தின் முதுகெலும்பாய், உத்தியோகத்தராய்க் கடமையாற்றி வந்த திரு.சி. எஸ். இராசரத்தினம் அவர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. போதிய உதவியாட்கள் இல்லாமை அவருக்கு வேலையில் வெறுப்புத்தட்டியது. அவருக்கும் நகரசபை தலைவர், முன்னாள் நூல்நிலைய இணைச் செயலாளர் திரு. சி. பொன்னம்பலம் ஆகியோருக்கும் இடையே காரசாரமான கடிதப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இறுதியாக நூலகர் எழுதிய கடிதத்தில் தாம் ஒரு சிற்றூழியர் தரத்திற்குத் தள்ளி விடப்பட்டதாக மனம் நொந்து வேலைக்குப் போகாது விலகியிருந்தார். அவரது அளப்பெருஞ் சேவையை உளங்கொண்ட காரியதரிசி ‘சக்கடத்தார்” பாலசுப்பிரமணியம் நிலைமையைச் சமாளித்து அவர் சேவையினின்றும் ஒய்வு பெற்றதாக ஒழுங்கு செய்து, வேறொரு நூலகரை நியமிக்க வழிவகுத்தார். பன்னிரண்டு ஆண்டு காலம் லீவு எடுக்காமல் காலை தொடக்கம் மாலை வரை முழுநேர வேலை செய்து நூல்களைப் பேணிப் பாதுகாத்த இராசரத்தினம் அவர்களின் சேவை நகரசபை மேலிடத்தினால் ஈற்றில் கவனத்திலெடுக்கப்படவில்லை.

பழைய நூலகர் 12 ஆண்டு சேவையின் பின்னர் விலகிக் கொண்ட நிலையில், லண்டன் மெற்றிக்குலேசன் பரீட்சையில் சித்தி பெற்றிருந்த திரு.கந்தையா நாகரத்தினம் என்பவர் உணவுக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்து வேலையை துறந்து 1-2-1947 முதல் யாழ்ப்பாண நூலகத்தின் நூலகர் பதவியை ஏற்றார். 

நூலகத்துக்கு வந்த பெரியவர்களுடன் நட்புப் பாராட்டி வந்ததுடன், நூலக வளர்ச்சியிலும் கண்ணாயிருந்தார். திரு. சி.எஸ். பார் குமாரகுலசிங்கம் என்னும் பெரியாரோடு நன்கு பழகி, எங்கேயோ தெல்லிப்பழையில் ஒரு வீட்டில் முடங்கிக் கிடந்த பல அரிய நூல்களை (கலாநிதி ஐசாக் தம்பையா அவர்களின் தேட்டம் இது) நூலகத்துக்கு எடுப்பித்தவர் இவர். ஏறக்குறைய 6000 நூல்கள் அவரின் பெயரால் நூலகத்துக்குக் கிடைத்தன. இந் நூல்கள் பலவும் அவர் பெயரில் பெரிய அலுமாரிகளில் ‘கலாநிதி ஐசாக் தம்பையாவின் விருப்ப ஆவணம்” என்னும் பெயரில் (Dr. Isac Thambiah Bequeath) 1981 ஜுன் 01 ஆம் திகதி வரை தனிச்சேகரிப்புகளாகப் பேணப்பட்டிருந்தன.

இன்னும் இலங்கை வாழ் இந்தியர்கள் ஒன்றுசேர்ந்து, மகாத்மா காந்தியடிகளின் சத்தியசோதனை என்னும் தொடரில் அமைந்த பெருந்தொகையான நூல்களையும், வேறு இந்திய நூல்களையும் பெரிய கண்ணாடி அலுமாரியில் நிறைத்து, ‘இந்திய வர்த்தகர்களின் அன்பளிப்பு” என்ற தலைப்பில் வழங்கியிருந்தனர். 

சென்ற நூற்றாண்டிலே, 1865 ஆம் ஆண்டு முதல் கொழும்பு, கண்டி, காலி ஆகிய மூன்று நகரங்கள் மாத்திரமே முனிசிபாலிற்றி என்னும் மாநகர சபைகளாக இயங்கிவந்தன. யாழ்ப்பாணம் 1931 ஆம் ஆண்டு முதல் 1938 ஆம் ஆண்டுவரையும் யூ.டி.சி (Urban District Council) என்னும் சபையாகவும், 1938 முதல் 1949 வரையும் யூ.சி. (Urban Council ) நகரசபையாகவும் இயங்கியது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், 1-1-1949 முதல் மாநகர சபையாக (Municipal Council) தரமுயர்த்தப்பட்டது. 

சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் உலக நிலைமைகள் மாற்றமடைந்த வேளையில், இலங்கையின் நிலைமையும் மாறியாக வேண்டியிருந்தது. யாழ்ப்பாண மாநகரசபையிலும் இச்சிந்தனை மாற்றம் புதுவடிவம் கொண்டது. அன்றைய மேயராகவிருந்த சாம். சபாபதி அவர்கள், தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் அளவில் பரந்த நிலப்பரப்பில் பாரிய நூலகம் ஒன்று அமைதல் வேண்டும். அது யாழ்ப்பாணத்துக்கு மாத்திரமன்றி இலங்கை முழுவதுக்குமே பயன்தரும் அளவில் பாரிய அமைப்பில் இயங்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

அக்காலத்தில் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி முதல்வர் வணக்கத்திற்குரிய லோங் அடிகளார், யாழ்ப்பாணக் கச்சேரியில் காரியாதிகாரியாயிருந்த ரி. முருகேசம்பிள்ளை உள்ளிட்ட பலரும் மேயர் சாம் சபாபதியின் திட்டத்துக்கு உயிர் வடிவம் கொடுக்க முன்வந்தனர். நூலக வளர்ச்சியில் பூரண நம்பிக்கை கொண்ட யாழ்ப்பாணப் பிரமுகர்கள் பலரும் உற்சாகத்தோடு உதவுவதற்கு முன் வந்தவேளை, மேயர் சாம் சபாபதி 16-6-52 இல் ஒரு பகிரங்கக் கூட்டம் கூட்டிக் கலந்து பேசினார். பொது நூலகத்தைக் கட்டியெழுப்ப பல்லாயிரம் ரூபா தேவையாகும் என்றும், அதைத் திரட்டுவதற்கு ஒரு களியாட்ட விழா நடத்துவதோடு, அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பும் இடம் பெறுதல் நல்லதென்றும் பலரும் அபிப்பிராயம் தெரிவித்து, அதற்கு அமோக ஆதரவு தருவதாக கூறினார்கள்.

ஏற்கெனவே ‘காணிவல்” என்னும் களியாட்டு விழாவை நல்ல முறையில் நடத்திப் பெருவெற்றி கண்ட வண. லோங் சுவாமிகள் தாமும் தம் கல்லூரி ஆசிரியரும் முன்னின்று உதவுவதாக உறுதி கூறினார். அவர் அக்காலத்தில் கொழும்பிலிருந்த பல வெளிநாட்டுத் தூதுவர்களோடு நன்கு பழகியிருந்தவர். அவர்களது ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்ள அவரால் முடிந்தது.

மேயர் சாம் சபாபதி அவர்கள் கூட்டிய கூட்டத்தின் பயனாக ’யாழ்ப்பாண மத்திய நூல்நிலைய சபை’ என்னும் இயக்கம் உடனடியாக உருவாகியது. சபையின் தலைவராக நகர பிதா சாம் சபாபதி அவர்களும், உபதலைவராக வண. லோங் அடிகளாரும் தெரிவுசெய்யப்பட்டனர். 

லோங் சுவாமிகள் நூலக நிபுணர்கள் பலரைக் கண்டும், கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டும் ஆக்கபூர்வமான முன்னறிவைப் பரந்த அளவிற் பெற்றார்கள். டில்லிப் பல்கலைக்கழகத்து நூலகர் பேராசிரியர் கலாநிதி எஸ். ஆர். இரங்கநாதன் அவர்களை தஞ்சாவூரில் சந்தித்து, யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து அவரோடு நேரிற் கலந்துரையாடி ஆவன செய்வதற்குச் சுவாமிகள் ஒழுங்கு செய்தார்கள்.

நூலகத்திற்குப் பொருத்தமான இடத்தை தெரிவுசெய்யும் பொருட்டு, அரசாங்க நகர் நிர்மாண நிபுணர் திரு. வீரசிங்கா என்பவரை அழைத்தனர். நகர் நிர்மாண நிபுணர் யாழ்ப்பாணத்துக்கு வந்து பல்வேறு இடங்களையும் நன்கு ஆராய்ந்து முனியப்பர் கோயிலுக்குக் கிழக்கில் இருந்த முற்றவெளியையே உரிய இடம் என பரிந்துரைத்தார். இதனைக் கட்டடக்கலை நிபுணர் நரசிம்மனும் ஏற்றுக்கொண்டார். முற்றவெளியின் ஒரு பகுதியை நகரசபை இழந்தாலும் நூலகம் வளர்ந்தால் போதும் எனச் சபையினர் சம்மதித்தனர். இந்த இடத்துக்குத் தெருக்கள் வசதியாக இருந்தமையும் மேலதிக அகலிப்புக்குப் போதிய நிலம் வசதியாக இருந்தமையும், நூலகத்தை அவ்விடத்தில் நிறுவக் காரணமாகவிருந்தது. 

Rev.Fr. Long

நகரபிதா சாம் சபாபதி அவர்கள் உடனடியாகக் கட்டட வேலையை ஆரம்பித்தல் வேண்டும் எனக் கூறியதும், சுபவேளையொன்றில்; சைவாசார முறைப்படி அத்திவாரம் வெட்டிப் பத்திரிப்பு வரை கட்டியபின் அடிக்கல் நாட்டுவிழா 29-3-1954 ஆம் நாள் நடைபெற்றது. நூல்நிலையச் சங்கத் தலைவர் மாநகரசபை முதல்வர் சாம் சபாபதி அவர்கள், வணக்கத்துக்குரிய தந்தை லோங் அடிகளார் அவர்கள், மாட்சிமை தங்கிய பிரித்தானிய தானிகர் சேர் செசில் சையெஸ் அவர்கள், மாட்சிமை தங்கிய அமெரிக்கத் தூதுவர் ர். நு. பிலிப் குறோவ் அவர்கள், மாட்சிமை தங்கிய இந்தியத் தூதுவரின் முதற் செயலாளர் ஸ்ரீ சித்தார்த்த சாரி அவர்கள் ஆகிய ஐவரும் அடிக்கற்களைத் திரை நீக்கம் செய்து வைத்தார்கள்.

அடிக்கல் நாட்டு விழாவின்போது அமெரிக்க உதவியாக Asia Foundation நிதியத்தின் 22,000 டொலர் கிடைத்தது. அது அக்காலத்து இலங்கை நாணய மதிப்பில் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாவாகத் திரண்டது. இந்தியாவின் நன்கொடையாக சித்தார்த்த சாரி 10,000 ரூபா உதவினார். இவ்வேளையில் யாழ்ப்பாண நூலகம் மழவராயர் கட்டட மாடியிலேயே நல்ல முறையில் வளர்ந்து வந்தது. இலங்கையில் வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரின் காரியாலயங்களிலிருந்து அவர்களது பிரசுரங்கள் தொடர்ச்சியாக வந்து சேர்ந்தன.

யாழ்ப்பாணத்துப் பொதுசன நூல்நிலையக் கட்டடத்தை வடிவமைத்த கட்டடக்கலை நிபுணர் நரசிம்மன் அவர்கள் தமிழ்ப் பண்பாடு, இந்துப் பண்பாடு, நவீன பொறியியல் அமைப்பு முதலியவற்றை மனதிற் கொண்டு அதனை ஒரு அறிவாலயமாக வடிவமைத்தார். அன்று முதல் இன்றுவரை நூலகத்தினுள் பாத அணிகளுடன் எவரும் பிரவேசிப்பதில்லை. நரசிம்மன் நிர்மாணித்த கட்டடத்தைப் பொருளாதார வசதி கருதிப் பகுதி பகுதியாகவும் கட்டி நிறைவேற்றலாம் என மாநகரசபை முடிவுசெய்தது. அதன் வரைபடம் போதிய விளக்கம் தராவிட்டாலும் எனக் கருதிய அவர், அதன் மாதிரி அமைப்பை (Model) அழகுறச் செய்து 16-10-1953 இல் நகரசபையிடம் தந்திருந்தார். 

கட்டட வேலையை உடனடியாகத் தொடங்குவதானால் குறைந்தது ஐந்து லட்சம் ரூபாவாவது கையிருப்பில் வேண்டும் எனக் கருதிய நகரபிதா சாம் சபாபதி அவர்கள், லோங் சுவாமிகள் முதலான அனுபவசாலிகளின் ஆலோசனையின் பேரில் முன்னர் தீர்மானித்திருந்தபடி களியாட்டு விழாக்களை (காணிவல்) வைப்பதற்கு ஒழுங்குகள் செய்தார். நூலக வளர்ச்சிக்காக யாழ் விநோத காணிவல் விழாக்கள் நகரத்தில் நான்கு முறைகள் நடைபெற்றன. முதலில் 1952 ஆம் ஆண்டிலும், இரண்டாம் முறை 1954 ஆம் ஆண்டிலும், மூன்றாம் முறை 1959 ஆம் ஆண்டிலும், பின்னர் நான்காவது தடவையாக 1963 ஆம் ஆண்டிலும் களியாட்ட விழாக்கள் நடைபெற்றன.

நகரபிதா சாம் சபாபதி அவர்களின் சிந்தையில் உதித்து நடைபெற்ற வேறொரு வருவாய் வழி அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பாகும். கவர்ச்சிகரமான பெரும் பரிசுகளாக மூன்று புதிய கார்கள் பரிசுப் பொருள்களாக அறிவிக்கப்பட்டன. வொக்ஸ்ஹோல் கார், பியட் கார், கெசெல் கார் என மூன்று பரிசுகளையும் பெரு வர்த்தகர்கள் மூவர் பரிசுப்பொருட்களாக வழங்கினார்கள். 

29-3-1954 அன்று அடிக்கல் நாட்டிய யாழ்ப்பாண முதல் மேயர் சாம். ஏ.சபாபதி அவர்களின் பதவிக்காலத்தில் நூலகக் கட்டடம் கட்டி முடிக்கப்பெறவில்லை. புத்தூர் மழவராயர் கட்டத்திலேயே நூலகம் தொடர்ந்தும் இயங்கிவந்தது.  இந்நிலையில்; 17-10.1958 தொடக்கம் உத்தேச நூலகம் ‘யாழ்ப்பாண பொதுசன நூல்நிலையம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. 

காலத்துக்குக் காலம் பதவிக்கு வந்த நகர பிதாக்களுள் திரு. அல்பிரட் தங்கராசா துரையப்பா அவர்களும் ஒருவர். அவர் யாழ்ப்பாண மாநகரை அழகுபடுத்தவும், விளையாட்டரங்கை விசாலித்துப் பெரிதாக்கவும், நூலகத்தைக் கட்டியெழுப்பவும், போக்குவரத்துப் பாதைகளை இருவழிச் சாலையாக்கவும், நவீன சந்தை அமைக்கவும் பல திட்டங்களை வகுத்தார்.

மத்திய இலவச வாசிகசாலையும் நூல்நிலையமும், யாழ்ப்பாண பொதுசன நூல்நிலையம் எனப் பெயர் மாற்றத்துக்குள்ளான காலத்திலே அல்பிறெட் துரையப்பா அவர்கள் நகரபிதா என்ற முறையில் நூலக காரிய நிர்வாகக் குழுவின் தலைவராகவும் இருந்தார். நூலகக் கட்டட வளர்ச்சிக்கான முயற்சியில் தம் முன்னோர் காட்டிய வழியைப் பின்பற்றி 1959 ஆம் ஆண்டில் மூன்றாவது யாழ் விநோத காணிவல் விழாவை  இவரே ஒழுங்கு செய்திருந்தார். அதை அம்பலாங்கொட பொலஸ் சில்வா என்பவர் ஒப்பந்தஞ் செய்து நடத்தினார். அது மாநகரசபை நடத்திய மூன்றாவது பெரு விழாவாகும். காணிவல் விழா முடிந்ததும், நூலக கட்டட வேலையை வேகமாக நடத்தி நில மண்டபத்தின் ஒரு பகுதியை ஓரளவுக்குக் கட்டி நிறைவேற்றினார்.

பழைய நூலக கட்டிடத்தில் ஏற்பட்ட இடநெருக்கடி காரணமாக, தரைத்தளத்தில் முன் பகுதி பூர்த்தியாக்கப்பட்டு, உடனடியாகப் புதிய கட்டத்திற் குடி புகுவதற்கான ஒழுங்குகளை வெகுவிரைவில் நிறைவேற்றியதும் 11-10-1959 இல் திறப்பு விழா நடைபெற்றது. பூரணத்துவமடையாத புதிய கட்டிடத்திற் குடிபுகுந்த காலத்தில் நூலகத்தில் ஏறக்குறைய 16,000 நூல்கள் இருந்தன. தமிழ்-ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வெளிவந்த சஞ்சிகைகள், பலவாக இருந்தன. அக்காலத்தில் ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் வெளிவந்த வாராந்த, மாதாந்த, முத்திங்கள் சஞ்சிகைகள் ஏறக்குறைய 150 தலைப்புகளில் வந்து பெருவிருந்தளித்தன.

Jaffna library documentation

நூலகத்தில் பழைய நூல்கள் பல கிடைக்கப்பெற்றிருந்தன. ஒல்லாந்தர் காலத்து இலங்கை வரலாறு 1672 ஆம் ஆண்டளவில் பதிப்பிக்கப்பெற்ற பிலிப்புஸ் போல்டியஸ் என்பவரால் எழுதிப் பதிப்பிக்கப் பெற்றது. அவருக்கு முன் 1660 ஆம் ஆண்டளவில் கண்டி மன்னரால் சிறை வைக்கப்பட்ட றோபட் நொக்ஸ் எழுதிய இலங்கை வரலாறும் அரிய நூலாகும். இவை முதற்பதிப்பு என்ற பெருமையையும் பெற்றிருந்தன. பொதுசன நூலகத்துக்குப் பெருமதிப்புக் கொடுத்த மிகப்பழைய நூலொன்று கத்தோலிக்கப் பெரியவர்களைப் பற்றிய வரலாறாகும். இது தமிழில் எழுதப் பெற்றது. நூலின் முகப்புத் தலையங்கம் ஸ்பானிய மொழியில் எழுதப்பெற்றது. 1586 ஆம் ஆண்டில் வெளியான பழைமை வாய்ந்த நூல் இது. இத்தகைய 600 நூல்கள் வரை நூலகத்தில் இரவல் வழங்கப்படாமல் பாதுகாக்கப்பட்டுவந்தன. இவற்றுள் தொல்காப்பியத்துக்குரிய உரைகள், பெரிய புராணத்துக்கு ஆறுமுகத் தம்பிரானின் உரை, சேர். அருணாசலம் தயாரித்த அறிக்கைகள், அவர் பேசிய பேச்சுகள், மொழி பெயர்ப்புகள் யாவும் வரிசையாக இருந்தன. சேர். இராமநாதன் செய்த பகவத்கீதை விளக்கம், சித்தாந்தமயமான உரை நுட்பம், செந்தமிழ் இலக்கணம், லேடி இராமநாதன் எழுதிய இராமாயண மொழிபெயர்ப்புகள், மகாகவி பாரதியாரின் நண்பர் நெல்லையப்பரின் நூல்கள், சஞ்சிகைகள், கடலங்குடி நடேச சாத்தியாரின் ஜோதிட நூல்கள் என்பனவும் அடங்கியிருந்தன. இவை அனைத்தும் 1981 ஜுன் 1ம் திகதி தீக்கிரையாகிப் போயின. இங்கிருந்த அரிய நூல்கள் பற்றியும் அவற்றை அன்பளிப்புச் செய்தவர்கள் பற்றியும் விரிவான பதிவினை அமரர் கா.சி.குலரத்தினம் அவர்களின் ‘யாழ்ப்பாண நூல்நிலையம்: ஓர் ஆவணம்’ என்ற நூலில் காணலாம். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4524 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)