Arts
9 நிமிட வாசிப்பு

தமிழர் கிராமங்கள் மற்றும் காணிகள் பற்றிக் கூறும் அநுராதபுரம் கல் தோணிக் கல்வெட்டு

April 4, 2023 | Ezhuna

இலங்கைத் தமிழர்களுக்கு 2500 ஆண்டுகளுக்குக் குறையாத வரலாறு மற்றும் வழிபாட்டு பாரம்பரியம் உள்ளது. பண்டைய இலங்கைத் தமிழர் பற்றி இதுவரை பலரும் அறிந்திராத, இதுவரை வெளிச்சத்துக்கு வராத, அரிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக இலங்கையில் ‘பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர்’ எனும் இவ்வாய்வு அமைகிறது. இலங்கையில் வாழ்ந்த தமிழர் பற்றிய முக்கிய சான்றாக விளங்குவது 2300 ஆண்டுகளுக்கு முன்பு கற்குகைகளில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களாகும். இவ்வாறான ஐந்து பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் காணப்படுகின்றன. அந்த கல்வெட்டுக்களில் தமிழர்கள் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட விடயங்களை இக்கட்டுரைத்தொடர் வெளிப்படுத்துகின்றது. அத்தோடு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு வேலைத் திட்டத்தில், இலங்கையில் காணப்படும், 1500 பிராமிக் கல்வெட்டுகளை மீள்வாசிப்பு செய்ததன் பயனாக வெளிக்கொணரப்பட்ட பல்வேறு அம்சங்களை ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்துவதாகவும் இத்தொடர் அமைகிறது. இவ் ஆய்வில் தமிழர் பற்றி கூறும் மேலும் பல பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அத்துடன் சோழர் காலத்திற்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 600 சிங்களக் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து அவற்றிலும் தமிழர் பற்றிக் கூறப்பட்டுள்ள பல விபரங்கள் பற்றியும் இத்தொடர் கட்டுரை கூறுகிறது.

அநுராதபுரம் பண்டைய நகரில் உள்ள தூபராம தூபியின் கிழக்கில் உள்ள கல் தோணி (Stone-Canoe) என்றழைக்கப்படும் இடத்தில் இந்தக்கல்வெட்டு காணப்படுகிறது. அழகாகச் செதுக்கப்பட்ட கற்பலகை ஒன்றில் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக்கல்வெட்டு பொ. ஆ. 956 முதல் 972 வரை இலங்கையை ஆட்சி செய்த 4 ஆம் மகிந்தன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது.  

கற்பலகையில் 6 அடி 5 அங்குல நீளமும், 2 அடி 8 அங்குல அகலமும் கொண்ட மேற்பரப்பில் 49 வரிகளில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இந்தக்கற்பலகையில் கல்வெட்டு உள்ளதை அறியாத சிலர் இதன் நடுப்பகுதியில் பொருட்களை வைத்து அரைத்து அல்லது தேய்த்து உள்ளதால் 10ஆவது வரி முதல் 46ஆவது வரி வரை உள்ள 37 வரிகளின் நடுப்பகுதியில் இருந்த எழுத்துக்கள் முற்றாக அழிந்து வாசிக்க முடியாத அளவிற்கு சேதமாகி உள்ளன.

இந்தக்கல்வெட்டில் குறிப்பிட்ட சில கிராமங்கள் மற்றும் நிலங்களை நிர்வகித்தல் தொடர்பான விபரங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்தக்கிராமங்கள் மற்றும் நிலங்களின் வரி இங்குள்ள தலதா மாளிகையைப் பராமரிக்க வழங்கப்பட வேண்டும் எனும் செய்தியை கல்வெட்டு கூறுகிறது. இந்தக்கல்வெட்டு குணசேகர முதலியாரால் பிரதி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

கல்வெட்டில் 46ஆவது வரியில் தமிழர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கல்வெட்டில் அழிந்து போயுள்ள வரிகளில் கடைசி வரியாகும். எனவே இவ்வரியின் நடுப்பகுதியில் உள்ள சொற்கள் முற்றாக அழிந்து போயுள்ளன. அதில் வாசிக்கக் கூடிய சொற்கள் பின்வருமாறு,

“தெமெழ் கம் பிம் .. .. .. .. .. .. கஸ் கொல் ஹி பெர சிரித்”

அயிட்டிகெவாவ-தூண்-கல்வெட்டின்-படியெடுக்கப்பட்ட-பிரதி

இதன் பொருள், நான்கு பக்கங்களிலும் உள்ள தமிழர் கிராமங்கள் மற்றும் காணிகளில் அறவிடப்படும் வரிகள் முன்பிருந்த வழக்கத்தின்படி இதற்காக (தலதா மாளிகையின் பாராமரிப்புக்காக) ஒதுக்கப்பட வேண்டும் என்பதாகும்.      

தமிழ்ப் பெண் கூலித் தொழிலாளிகள் பற்றிய அயிட்டிகெவாவ தூண் கல்வெட்டு

அனுராதபுர நகரின் வடகிழக்கில் 40 கி.மீ தூரத்தில் அயிட்டி கெவாவ என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு ஒரு தூண் கல்வெட்டு காணப்படுகிறது.

1892 ஆம் ஆண்டு இந்தக்கல்வெட்டை எச்.சி.பி. பெல், மார்ட்டின் விக்ரமசிங்கே ஆகிய கல்வெட்டாய்வாளர்கள் ஆய்வு செய்து படி எடுத்தனர். தூணின் நான்கு பக்கங்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. A பக்கத்தில் 18 வரிகளில் எழுத்துக்களும் அவற்றின் கீழே வட்ட வடிவமும், பக்கம் B யில் 20 வரிகளில் எழுத்துக்களும் அவற்றின் கீழே நாயின் உருவமும், பக்கம் C யில் 17 வரிகளில் எழுத்துக்களும் அவற்றின் கீழே அரிவாள் வடிவமும், பக்கம் D யில் 10 வரிகளில் எழுத்துக்களும் அவற்றின் கீழே சூரியன், சந்திரன், காகம் ஆகியவற்றின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக்கல்வெட்டு பொ.ஆ. 898-914 காலப்பகுதியில் ஆட்சி செய்த 4ஆம் காசியப்பன் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்த ஒரு நிலத்திற்கு கொடுப்பனவு வழங்க படைத்தளபதிக்கு தலைமை அதிகாரி கட்டளையிட்டது  பற்றிய செய்தி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டின் B பக்கத்தில் 7,8,9 ஆகிய வரிகளில் தமிழர் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“லொஹொலுவில குலியெஹி ஆவு தெமழின் ஹெட்டிஹயின்..”

இதன் பொருள், லொஹொலுவில என்னுமிடத்தில் இருந்து வந்த தமிழ்ப் பெண்கூலித் தொழிலாளிகள் என்பதாகும்.

வேவல்கெட்டிய கற்பலகைக் கல்வெட்டின் முன்பக்க முழுமையான தோற்றம்

தமிழர் மடாலயம் பற்றிய வேவல்கெட்டிய கற்பலகைக் கல்வெட்டு

அனுராதபுரம் நகரின் வடகிழக்கில் 34 கி.மீ தூரத்தில் வேவல் கெட்டிய என்னுமிடம் அமைந்துள்ளது. மதவாச்சியில் இருந்து ஹொரவப்பொத்தானைக்கு செல்லும் வீதியில் 18 கி.மீ தூரத்தில் உள்ள ரத்மல் கஹவெவ சந்தியின் அருகில் இவ்விடம் காணப்படுகிறது. இங்கு அமைந்துள்ள வேவல்கெட்டிய குளத்தின் தென்மேற்குப் பக்கத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இந்தக்கல்வெட்டு காணப்படுகிறது.

இவ்விடத்திற்கு 1875 ஆம் ஆண்டு சென்ற டாக்டர். கோல்ட் ஸ்மித் இங்கு ஒரு கற்பலகையில் கல்வெட்டு உள்ளதாகத் தகவல் வெளியிட்டார். அதன் பின்பு 1883 ஆம் ஆண்டு டாக்டர். எட்வர்ட் முல்லர் இந்தக்கல்வெட்டை ஆராய்ந்து, பிரதி எடுத்து அதன் விபரங்களைச் சுருக்கமாக வெளியிட்டார். 1891 ஆம் ஆண்டு எச்.சி.பி.பெல் இந்தக்கல்வெட்டை நன்கு ஆராய்ந்து அதன் முழு விபரங்களை ரோயல் ஆசியா கழகத்தின் அறிக்கையில் வெளியிட்டார்.

இந்தக்கல்வெட்டு ஆறு அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட கற்பலகையில் 45 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரியின் கீழே கோடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு எழுதப்பட்டுள்ள கற்பலகை நிலத்தில் புதைந்து சற்று சரிவான நிலையில் காணப்படுகிறது. கல்வெட்டைச் சுற்றி இரும்புக் கம்பிவேலி அடைக்கப்பட்டு, அதன் மேற்பகுதியில் கூரை போடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

வேவல்கெட்டிய-கற்பலகைக்-கல்வெட்டு-1

இந்தக்கல்வெட்டு பொ. ஆ. 946-954 காலப்பகுதியில் ஆட்சிசெய்த 4 ஆம் உதயன் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட ஒரு ஊருக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு பற்றியும், இங்கு குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கொடுக்க வேண்டிய தண்டனை மற்றும் தண்டப்பணம் ஆகியவை பற்றியும், எந்தெந்த அதிகாரிகள் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது பற்றியும் மன்னன் இட்ட கட்டளை கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் 7 ஆம் வரியில் தமிழர் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அதன் விபரம் பின்வருமாறு:

“தெமெழ் வெகர் பமனியென் தச கமத் எகக்க..”

கல்வெட்டில் தமிழர் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும்“தெமழ் வெஹர்” எனும் சொல் உட்பட இவ்வரிகளுக்கான மொழிபெயர்ப்பை இந்தக் கல்வெட்டுக்களைப் பதிவு செய்த கல்வெட்டாய்வாளர் மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்கள் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

 “Touching the Dasa-gam from amongst the endowments to Demel Vehara (Tamil Monastery) at Kibi-Nilam in Angam kuliya in the Northern Quarter, each headmen of these villages) as well as those headmen and householders who have given security for kibi-gam shall ascertain (the facts) when in any spot within these (district) murder or robbery with violence has been committed.”

கல்வெட்டின்-பின்பக்க-தோற்றம்-1

இதன் பொருள், அங்கம் குழியவில் உள்ள கிபி நிலம் என்னுமிடத்தில் உள்ள தமிழர் மடாலயத்திற்கு இடைப்பட்ட பத்து ஊர்களில் உள்ள அதிகாரிகள் இவ்வூர்களில் கொலைகள் மற்றும் கொள்ளைகள் ஆகியவற்றில் இருந்து ஊர்களைப் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதில் “தெமழ் வெஹர்” எனும் சொற்களுக்கு “தமிழர்  மடாலயம்” எனப் பொருள் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக்கல்வெட்டின் மூலம் தமிழர் மடாலயங்களை அமைத்து சமயப் பணி செய்துள்ளமை தெரிகிறது. இது தமிழர் அமைத்த சைவ சமய மடாலயமாக அல்லது பெளத்தப் பள்ளியாக இருக்கலாம்.

அரச சேவையில் இருந்த தமிழர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் பற்றிய  பொலநறுவை நிஸ்ஸங்கமல்ல ராஜசபை மண்டபத் தூண் கல்வெட்டு

பொலநறுவையில் உள்ள தோப்பாவெவ (பராக்கிரம சமுத்திரம்) குளத்தின் அணைக்கட்டின் அருகில் உள்ள நிஸ்ஸங்க மல்லனின் ராஜசபை மண்டபத்தின் அருகில் இந்தக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இரண்டு துண்டுகளாக உடைந்த ஒரு தூணில் இந்தக்கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது.

இந்தக்கல்வெட்டின் உடைந்த இரண்டு துண்டுகளும் பொருத்தப்பட்டு தற்போது அநுராதபுரம் தொல்பொருள் காட்சிச்சாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தூணின் பீடமும், தலைப்பகுதியும் உடைந்து விட்டன. எஞ்சிய தூண் 5 அடி 9 அங்குல உயரமும், ஒரு பக்கம் 11 அங்குல அகலமும், அடுத்த பக்கம் 8 அங்குல அகலமும் கொண்ட சதுரத் தூண் வடிவில் காணப்படுகிறது.

பொலநறுவை நிஸ்ஸங்க மல்ல ராஜசபை மண்டபத் தூண் கல்வெட்டின் படியெடுக்கப்பட்ட பிரதி

தூணின் நான்கு பக்கங்களிலும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. A பக்கத்தில் 27 வரிகளிலும், B பக்கத்தில் 29 வரிகளிலும், C பக்கத்தில் 30 வரிகளிலும், D பக்கத்தில் 28 வரிகளிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்தக்கல்வெட்டு பொ. ஆ. 914-923 வரை ஆட்சி செய்த 5ஆம் காசியப்பன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தக்கல்வெட்டில் சில நிலங்கள் தொடர்பான பிணக்குகளைத் தீர்ப்பது தொடர்பான விபரங்கள் கூறப்பட்டுள்ளன. கல்வெட்டின் A பக்கத்தின் 22 ஆம், 23 ஆம் வரிகளில் தமிழர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பற்றிய விபரங்கள் பின்வருமாறு,

“கொட்கெமெ தெமெழ் கெபெல்ல இசா மகருக்கேயே கேமபூர் கடவர் இசா மெஹி

இதன் பொருள், “இந்தக் கிராமத்தில் தமிழரின் நிலங்கள் அல்லது  வயல் நிலங்கள் ஆகியவற்றில் பிணக்குகள் ஏற்பட்டால் சபையின் தலைவர் அல்லது அவரின் பிள்ளைகள் அதில் தலையிட்டு பிணக்குகளைத் தீர்த்து வைத்தல் வேண்டும்” என்பதாகும்.

இந்தக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் “தெமெழ் கபல்ல” எனும் தமிழரின் நிலங்கள் பற்றிய விளக்கத்தினை கல்வெட்டாய்வாளர் மார்ட்டின் விக்ரமசிங்க பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“Demelat valademin, With this phrase may be compaired Demel Kinigam in EZ-Vol.ii p.52, gama Demel kaballa in a pillar Inscription from Polonnaruva and Demela kaballa in a pillar in the Colombo Museum. From a ‘Tamil kaballa’ there appears that there were lands set apart for the Tamils, probably those in the King’s service.

பொலநறுவையில்-புராதன-நகரில்-உள்ள-நிஸ்ஸங்க-மல்லனின்-ராஜசபை-மண்டபத்தின்-தோற்றம்-2

அதாவது, பொலநறுவை தூண் கல்வெட்டிலும், கொழும்பு தொல் பொருள்காட்சிச்சாலை தூண் கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் “தெமெழ் கபல்ல” எனும் சொற்பதத்தை “தெமெலத் வலதெமின்”, “தெமெழ் கினிகம்”ஆகிய சொற்றொடருடன் ஒப்பிடலாம். இது அரசரின் சேவையில் இருந்த தமிழர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் எனப் பொருள்படுகிறது.

இந்தக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலப்பகுதியில் அரசரின் சேவைப் பணிகளில் தமிழர்கள் பலர் இருந்துள்ளனர் என்பதும், அவர்களுக்கு அரசனால் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதும், இந்த நிலங்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏதாவது ஏற்பட்டால் அவை இதற்கென அரசனால் நியமிக்கப்பட்டிருக்கும் சபையினரால் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதும் இந்தக்கல்வெட்டின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும்  விடயமாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9451 பார்வைகள்

About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)