Arts
25 நிமிட வாசிப்பு

போரினால் புலம்பெயர்ந்த சமூகங்களின் தாயகத்துடனான உறவு : சர்வேந்திராவின் முனைவர் பட்ட ஆய்வு ஓர் அறிமுகம் – பகுதி 1

October 10, 2023 | Ezhuna

ஈழம் சார்ந்தும் ஈழப்பிரச்சினை சார்ந்தும் ஆங்கிலத்திலும் தமிழல்லாத பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2009 இற்கு பின்னர் வெளியாகிய அபுனைவு நூல்களை அவற்றின் சமூக – அரசியல் முக்கியத்துவம் கருதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு ‘திக்குகள் எட்டும்’ என்ற தொடர் வெளிவருகின்றது. இத்தொடரின் மூலம் தமிழ் சூழலுக்கு தமிழல்லாத பரப்பில் நடைபெறும் ஈழம் சார்ந்த வெளிப்பாடுகள் அறிமுகமாகும்.

இவ் ஆய்வின் (Homeland orientation of war-torn diasporas) ஆறு கட்டுரைகளில் நான்கு கட்டுரைகள்; பணம் அனுப்புதல் நோக்கங்கள், வழிமுறைகள், விளைவுகள் தொடர்பானவை. இரண்டு கட்டுரைகள்; தாயகம் சார்ந்த பண்பாட்டு நடைமுறைகள், பின்பற்றல்களோடு தொடர்புடையவை. பணம் அனுப்புதல் தொடர்பான கட்டுரைகள், பணம் அனுப்புதற் செயற்பாடுகள் ஊடான தாயகத்துடனான பொருளாதார உறவுகள்- தொடர்புகளையும்; தமிழர்கள், சோமாலியர்களின் நோர்வே வாழ்க்கையிலுள்ள சிக்கல்களைக் கையாள்கின்றன. பண்பாட்டு நடைமுறைகள் பற்றிய கட்டுரைகள், தமிழர்கள் மற்றும் சோமாலியர்களின் பண்பாட்டு ரீதியான தாயகத் தொடர்புகள் நோர்வேயில் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களை நாடுகடந்த பரிமாணங்களுடன் கையாள்கின்றன. 

sarvendra's book front page

ஆய்வாளரும் ஆய்வுப்பொருளும்

கலாநிதி சர்வேந்திரா தர்மலிங்கம் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் சமூக மானிடப்புவியியற் துறையிற் தனது கலாநிதி ஆய்வுக்கற்கைக்காக (PhD) 2011 இல் சமர்ப்பித்த 6 ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு (Article based PhD dissertation) இந்த நூல். Homeland Orientation of War-torn diasporas: Remittance and Cultural practices of Tamils and Somalis in Norway என்பது ஆய்வுத் தொகுப்பின் தலைப்பு. சர்வேந்திரா, கலாநிதி ஆய்வினைத் தொடர்ந்து புலப்பெயர்வு, நாடு கடந்த வாழ்வியல் (Migration and Transnationalism) துறையில் பின்-கலாநிதி ஆய்வினையும் (Post-doctoral research) நிறைவு செய்தவர். 1990 களின் ஆரம்பத்திலிருந்து 2000 களின் ஆரம்பம் வரை நோர்வே மற்றும் ஏனைய புலம்பெயர் நாடுகளின் தாயகம் நோக்கிய பல்வேறு சமூக நலன் சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் வளர்த்தெடுப்பதிலும் பங்களித்தவர். கலை, இலக்கியம், ஊடகத் தளங்களிலும் இயங்கியவர். தாயகத்தில் ஒரு ஊடகவியலாளராகவும் யாழ் பல்கலைக் கழகத்தில் சில காலம் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். நாடகம், அரங்கியல் துறைகளில் நீண்ட கால செயற்பாட்டு மற்றும் படைப்பாக அனுபவத்தினைக் கொண்டிருப்பவர். ’Forum Theatre – மக்கள் அரங்கு’ போன்ற கலைவடிவத்தினையும், அரங்க ஆற்றுகைகள், நாடகங்களையும் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருபவர். 

Sarvendra's book first page

இவ்வாய்வு நூல் போரினால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் சமூகங்களின் தாயகத்துடனான உறவு, நோர்வே வாழ் தமிழர்கள், சோமாலியர்களின் தாயகத்துடனான உறவு தொடர்பானது. இதில் தாயகத்திலுள்ள குடும்பங்கள், உறவினர் மற்றும் தாயகத்தின் சமூக – அரசியல் நோக்கங்களுக்காகப் பணம் அனுப்புதலும் – பின்பற்றுகின்ற தாயகம் சார்ந்த பண்பாட்டு நடைமுறைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் உள்ளடங்கியுள்ளளன. இதனைச் சற்று எளிமையாகச் சொல்வதானால், இந்த இரண்டு சமூகங்களின் புலம்பெயர்ந்த முதற்தலைமுறை தாயகத்துடன் எந்தவகையான பொருளாதார, பண்பாட்டு, சமூக, அரசியற் தொடர்புகளைப் பேணுகின்றது – அவற்றின் விளைவுகள் எவை – நோர்வே பெரும் சமூகத்துடனான இணைந்து வாழ்தலில் எத்தகைய தாக்கங்களை அவ்வாறான தாயக உறவு சார் நடைமுறைகளும் பின்பற்றல்களும் ஏற்படுத்துகின்றன என்ற விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்துகின்றன. 

தொகுப்பின் கட்டமைப்பும் ஆய்வுமுறைமையும்

இவ்வாய்வுத் தொகுப்பின் கட்டமைப்புப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவது பொருத்தமானது. போரினால் பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகளின் நோர்வேக்குப் புலம்பெயர்ந்த சமூகங்களான தமிழர்களும் சோமாலியர்களும் ஆய்வுப்பொருளாகத் தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. பணம் அனுப்புதல் மற்றும் தாயகம்சார் பண்பாட்டு நடைமுறைகளைக் கோட்பாட்டு ரீதியான கட்டமைப்பிற்குள் வைத்து அணுகுதல் தொடர்பான குறிப்புகள் உட்பட ஆய்வுக்கான அடித்தளம் விபரிக்கப்படுகின்றது. புலம்பெயர் சமூகம் (Diaspora) மற்றும் நாடுகடந்த வாழ்வியல் (Transnationalism) போன்ற சொல்லாடல்களுக்கான கல்வியியல் மற்றும் கோட்பாட்டு விளக்கம், நாடுகடந்த சமூகத் தளங்கள், நாடுகடந்த பண்பாட்டு நடைமுறைகள், நோர்வேயில் தமிழ் மற்றும் சோமாலியர்களின் புலப்பெயர்வு வரலாற்றுச் சுருக்கம், நோர்வேயில் அவர்களது வாழ்வியல்- சமூக அந்தஸ்து ஆகியவை தொடர்பான விபரிப்புகளும் ஆய்வுத்தொகுப்பின் அறிமுகப் பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Sarvendra book back cover

கையாளப்பட்ட ஆய்வுமுறைமை (Methodology) பற்றிய விபரமான குறிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆய்வுக் கேள்விகளை முன்வைத்து தமிழர் மற்றும் சோமாலியர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட விரிவான நேர்காணல்கள் மூலமான தகவல் சேகரிப்பும் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிநேர அவதானிப்புப் பங்கேற்புடனும் இக்கற்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது (Quality interviews with participant observation). ஆய்வுமுறை தொடர்பான விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை விபரிப்பது இக்கட்டுரைக்கு அவசியமற்றது என்று கருதுகின்றேன். முன்னெடுக்கப்பட்ட ஆய்வுமுறைமைகள் குறித்த விரிவான கல்வியியல் விளங்கங்கள் உள்ளன. அக்குறிப்புகளுக்குட் செல்லாமல் கட்டுரைகளின் உள்ளடக்கம், வெளிக்கொணரப்பட்டுள்ள தகவல், தரவு, வாழ்வியல், வரலாற்றுப் பிரதிபலிப்பு மற்றும் இவ்வாய்வுப் பெறுபேறுகளின் பயன்பாடுகள் குறித்துப் பகிர்வது ‘திக்குகள் எட்டும்’ தொடரின் தன்மைக்குப் பொருத்தமுடையது.

நேர்காணற் தரவுகளின் அறிவியல் நிலை, ஆய்வு அனுபவங்கள், தரவு சேகரிப்புச் செயல்முறை, பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வு முறைமையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட அம்சங்கள் இத்தொகுப்பின் முதற் பகுதியாகவும் இரண்டாம் பகுதியில், ஆறு கட்டுரைகளும் வரிசைக்கிரமமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வுத் தொகுப்புத் தொடர்பான எனது கட்டுரையை இரண்டு பகுதிகளாக அமைத்துள்ளேன். முதற்பகுதி ஆய்வின் அடித்தளம், ஆய்வுப்பொருள், பின்னணி குறித்த அறிமுகமாகவும், அடுத்த பகுதி ஆறு கட்டுரைகளின் அறிமுகமாகவும் அமைகின்றது.

கேள்விகள் – அறிவியல் நோக்குநிலைகள்

ஆய்வு என்பது அடிப்படையிற் கேள்விகளை முன்வைப்பதன் மூலம், தகவல்கள், தரவுகளைத் திரட்டுவதும் நிலைமைகளை விவாதிப்பதும் முடிவுகளை எட்டுவதுமாகும். இந்த ஆய்வு, ஆய்வுத்தலைப்புகளின் அடிப்படையில் தமிழர்கள் மற்றும் சோமாலியர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட நேர்காணல்களின் பெறுபேறுகளையும் ஏலவே கல்வியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளையும் மேற்கோளாகக் கொண்டுள்ளது. இதன் முதன்மைக் கேள்வி தமிழர்களினதும் சோமாலியர்களினதும் தாயகத்துடனான உறவு நோர்வேயில் அவர்களது வாழ்வில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதாகும். இரண்டு துணைக் கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன : 

  1. தாயகத்திற்குப் பணம் அனுப்புவதற்கு (பணப்பரிவர்த்தனை) எந்த வடிவங்களிலான வழிமுறைகள் கையாளப்படுகின்றன? பணம் அனுப்புதல், நோர்வேயில் அச்சமூகங்களின் வாழ்வில் எந்தவகையில் தாக்கம் செலுத்துகின்றன?
  2. தாயகம் சார்ந்த எந்தப் பண்பாட்டு நடைமுறைகளை அச்சமூகங்கள் நோர்வேயிலும் பின்பற்றுகின்றன. அவை எவ்வாறான தாக்கங்களை  வாழும் சூழலில் ஏற்படுத்துகின்றன.

குறித்த பேசுபொருள் அதன் பின்னணிகள் குறித்த முன்வைப்புகளுடன் மிக ஆழமாகவும் விரிவாகவும் அதேவேளை பல்பரிமாண நோக்குநிலைகள் பார்வைகளுடனும் விவாதிக்கப்படுகின்றன. கோட்பாட்டு ரீதியாகவும் விளக்கப்படுகின்றன. பல்வேறு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட வரைவிலக்கணங்கள், கூற்றுகள், ஆய்வுகள் மேற்கோள் காட்டப்படுகின்றன. இந்த ஆய்வின் முறைமை என்பது ஆய்வுக் கேள்விகளை அடிப்படையாகக் கொண்டது. திட்டமிடலும் வடிவமைப்பும் ஆய்வு முன்னெடுப்பும் 2007 – 2010 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு இவ்விரு சமூகங்கள் புலம்பெயர்ந்து வாழும் நோர்வே நிலைமைகளையே அதிகம் கவனப்படுத்தியுள்ளது. அச்சமூகங்களின் தாயக நிலைமைகளுக்குள் ஆழமாகச் செல்லவில்லை. அந்நாடுகளின் போர்ச்சூழல் காரணமாக ஆய்வாளருக்கு அந்நாடுகளுக்குச் சென்று கள ஆய்வுகளை முன்னெடுக்கின்ற வாய்ப்பு அமையவில்லை. ஆய்வு முன்னெடுக்கப்பட்ட காலத்தினை கருத்திற்கொண்டு இக்கட்டுரை வாசிக்கப்படவேண்டும். தகவல்களும் தரவுகளும் ஆய்வு வெளிவந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. 

தாயகத்திற்குப் பணம் அனுப்புதல் 

Remittance – புதிய நாட்டிற் குடியேறியவர்கள் அந்நாட்டிலிருந்து (புலம்பெயர் தேசத்திலிருந்து) தமது தாயகத்திற்குப் பணம் அல்லது பொருள் அனுப்புதலைக் குறிக்கின்ற சொல். இதற்குத் தமிழில் புழக்கத்திலுள்ள சொல் ‘காசு அனுப்புதல்’. 2009 இல் 316 பில்லியன் டொலர்கள் உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட உலகளாவிய அனுப்பப்பட்ட மொத்தத் தொகையெனப்படுகிறது.  பணத்தினைப் பெறும் உலகின் முதல் இருபது நாடுகளின் பட்டியலில் முதலாவதாக இந்தியாவும் இரண்டாவதாகச் சீனாவும் இருந்துள்ளன. ஆண்டொன்றுக்கு இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த இந்தியர்களால் அனுப்பப்படும் பணத்தின் மொத்தத் தொகை 49 பில்லியன் அமெரிக்க டொலர்களும் சீனாவிற்கு அதன் புலம்பெயர் மக்களால் அனுப்பப்படும் தொகை 48 பில்லியன் டொலர்களுமாகும். 

பணம் அனுப்புதல் மூன்று வகைகளை உள்ளடக்கியுள்ளன. அவை அபிவிருத்தி, பாதுகாப்பு, இணைந்து வாழ்தலுடன் தொடர்புபட்டுள்ளன. அபிவிருத்தி உறவு சார்ந்த பணம் அனுப்புதல் வறுமைக் குறைப்புடனும் பொருளாதார மற்றும் மனித வாழ்வின் வளர்ச்சிகளுடனும் தொடர்புடையது. இந்த நோக்கிலான பணம் அனுப்புதல், பெறுகின்ற (Receiver society) சமூகத்தில் ஒருவகைச் சமத்துவமின்மையை (ஏற்றத் தாழ்வினை) ஏற்படுத்தக்கூடியது. எல்லோருக்கும் வெளிநாடுகளில் உறவினர்கள் இருக்கமாட்டார்கள். அத்தோடு, பெறுகின்ற சமூகத்தில் சொந்தக்காலில் நிற்காத தங்குநிலைச் சமூகத்தைத் தோற்றுவிப்பதற்கும் வழிகோலக்கூடியது. 

அபிவிருத்தி நோக்குநிலை 

அபிவிருத்தி நோக்கிலான பணம் அனுப்புதல் என்பது அடிப்படையில் குடும்பத்தின் நுகர்வு மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்கானது. அத்தோடு முதலீடு சார்ந்ததுமாகும். முதலீடு என்பது குடும்ப, சமூக முன்னேற்றத்திற்கான கூட்டுவிளைவுகளை உள்ளடக்கியிருக்கின்றது. அபிவிருத்தி நோக்கிலான பணம் அனுப்புதலானது, ஆய்வாளர்கள் மற்றும் கொள்கைவகுப்பாளர்களின் நேர்மறையான கவனத்தினை ஈர்த்துள்ளதாக இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நாவின் மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை அடைவதற்கான கருவிகளில் ஒன்றாக இது கருதப்பட்டிருக்கின்றது. அதனை, முறைசார் (Legal Methods) பணப்பரிவர்த்தனைப் பொறிமுறைகள் மூலம் அனுப்புவதை ஊக்கப்படுத்தும் முகமாக, நாடுகள் அனுப்புதற் கட்டணத்தைக் குறைத்திருந்தன. மிலேனியம் அபிவிருத்தி இலக்கு என்பது உலகில் வறுமையை எதிர்த்துப் போராடுவது தொடர்பான ஐ.நா.வின் செய்முறையாகும். மிலேனியம் இலக்குகள் 2015 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்படவேண்டிய எட்டு இலக்குகளைக் கொண்ட பிரகடனம். அனைத்து ஐநா உறுப்பு நாடுகளும் அப்பிரகடனத்தில் கையெழுத்திட்டன. இந்த இலக்குகள் 1990 களில் ஐ.நா.வின் அனுசரணையில் நடைபெற்ற பல உச்சிமாநாடுகளின் முன்மொழிவுத் தொகுப்பு. அவை தேசிய அரசுகள், ஐ.நா மற்றும் உலகில் வறுமையைக் குறைப்பதற்காகச் செயல்படும் பிற அமைப்புகளுக்கு முக்கியமான வழிகாட்டியாகவும் கருதப்பட்டன. பணம் பெறும் நாடுகளும் ‘வெளியிலிருந்து வருகின்ற தமது சொந்த மக்களின் நிதிவளம்’ என்ற கருதுகோளின் அடிப்படையில் இதனை ஊக்கப்படுத்துகின்றன. இரட்டைக் கடவுச்சீட்டு (குடியுரிமை) உட்பட்ட சிறப்புச் சலுகைகளை வழங்கி பணம் அனுப்புதல், முதலீடுகளை ஊக்குவிக்கின்றன.

பாதுகாப்பு நோக்குநிலை

‘செப்ரெம்பர் 11’ இற்குப் பின்னரான சூழமைவில் பணம் அனுப்புதல் நடைமுறைகள் ‘பாதுகாப்பு அக்கறைகள்’ எனும் கண்ணாடியூடாகப் பார்க்கப்பட்டன. அது உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு பங்களிக்கின்ற நடைமுறையாக அதிகம் கருதப்பட்டது. குறிப்பாக முறைசாரா (சட்டபூர்வமற்ற) வடிவங்கள் மீது அத்தகைய கவனக்குவிப்பு இருந்தது. முறைசாரா பணம் அனுப்புதல்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியான கண்காணிப்புப் பொறிமுறைகள் எதுவும் இல்லை. எனவே அவ்வாறு அனுப்பப்படும் பணம், முறைசார் பொறிமுறைகளுக்கூடாக அனுப்பப்படும் பணத்தினை விட அதிகமாக பயங்கரவாத மற்றும் குற்றவியல் குழுக்களுக்கு பயன்படும் வாய்ப்புகளைக் கொண்டிருந்தன என்று கருதப்பட்டன. சோமாலியர்கள் மத்தியிலுள்ள ஹவாலா (Havala) போன்ற முறைசாரா அனுப்புமுறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. Financial Action Task Force – FATF இற்கு அந்தப் பொறுப்புக் கொடுக்கப்பட்டது. இது பணமோசடி, பயங்கரவாதத்திற்கான நிதியுதவி உட்பட்டவற்றைக் கண்காணிக்கவும் தடுக்கவுமான உலகளாவிய நடவடிக்கைக் குழுவாகும். கறுப்புப்பணமாக்கல், பயங்கரவாதத்திற்கான நிதிதிரட்டல் சார்ந்த ஆய்வுகளையும் முன்னெடுக்கின்றது. இத்தகு நிதிசார் ஆபத்துகளைக் குறைப்பதற்கான உலகளாவிய தரநியமங்களை ஊக்குவிப்பதோடு, உலக நாடுகள் விளைவுத்தாக்கமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனவா என்பதையும் இந்தக் குழு மதிப்பிடுகிறது.

சோமாலியாவும் ஈழத்தமிழர் தாயகமும் போர்ப் பிரதேசங்கள் என்ற வகையில் அங்கு நடைபெறும் ஆயுதப்போராட்டத்திற்கான நிதி வழங்குவோராகவும் கருதப்பட்டனர். தமிழர்கள் விடுதலைப்புலிகளுக்கும் சோமாலியர்கள் Al Shabaab உட்பட்ட இஸ்லாமிய ஆயுதக்குழுக்களுக்கு நிதி ஆதரவு வழங்கிவந்துள்ளனர். Al Shabaab அல்கைடாவுடன் தொடர்பைக் கொண்டிருந்ததாகச் சந்தேகம் நிலவியமையும் குறிப்பிடத்தக்கது. புலம்பெயர் நாடுகளிலிருந்து தாயகத்திற்குப் பணம் அனுப்புதல் மற்றும் பண்பாட்டுப் பின்பற்றல்கள் என்பவை அடிப்படையில் நுண்ணுணர்வு சார்ந்த விடயஙகள். குறிப்பாக தமிழர்கள் விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்குவதென்பது சர்ச்சைக்குரிய விடயமாகப் பார்க்கப்பட்டு வந்திருக்கின்றது. மேற்கு நாடுகளில் விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு. நோர்வேயிற் தடை இல்லாத போதும், அந்த விடயம் தமிழர்கள் மத்தியில் ‘சென்சிற்றி’வானது. சோமாலியர்களுக்கு ஹவாலா பொறிமுறை மூலம் பணம் அனுப்புதல் என்பது சென்சிற்றிவான விடயம். நோர்வேயில் ஹவாலா அனுப்புமுறை சட்டவிரோதமானது. 2001 மற்றும் 2008 இல் இந்த விவகாரம் தொடர்பாக நோர்வேயில் சோமாலிய சமூகம் மீது, அதாவது ஹவாலா பணப்பரிவர்த்தனையுடன் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பணம் பெறும் நாடுகளிலும் (Receiving countries) நிதிவரவு தொடர்பான கண்காணிப்புப் பொறிமுறை இல்லை. தோற்றுப்போன தேசங்களின் பட்டியலில் இருக்கக்கூடிய சோமாலியா போன்ற நாடுகள் பணப்பரிவர்த்தனை தொடர்பான கண்காணிப்பு உட்பட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளை கொண்டிருத்தல் எளிதல்ல. அரச மற்றும் சிவில் நிறுவனங்கள் சிதைவுற்ற நிலையில் பயங்கரவாத மற்றும் குற்றவியற் குழுக்களின் கைகளில் பணம் சென்றடைவதற்கான வாய்ப்புகளையும் அவை வழங்குகின்றன.

இணைந்து வாழ்தல் நோக்குநிலை

பணம் அனுப்புதல் நடைமுறை புலம்பெயர்ந்தவர்களின் இணைந்து வாழ்தல் தொடர்பாக இரண்டு கோணங்களிற் பார்க்கப்படுகின்றது. இதன் ஒரு பார்வை, தாயகம் தொடர்பான அக்கறையும் உறவுபேணலும் பெருஞ்சமூகத்துடனான இணைந்து வாழ்தலைப் பாதிக்கின்றது என்பதாகும்.  புலம்பெயர்ந்து வாழும் தேசத்தினைத் தமது தாயகமாகக் கருதுவதை விடுத்து, பிறந்த நாட்டுடன் இறுக்கமான பிணைப்பினைப் பேணுவதென்பது இணைவாக்கத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. 

ஆய்வில் முன்வைக்கப்படுகின்ற ஒரு உதாரணம்: நோர்வேயிற் குடியேறிய ஒருவர், குறைந்த வருமானம் ஈட்டுபவராக இருக்கின்றார். அதேவேளை அவர் தாயகத்திற்குப் பணம் அனுப்பும் போது, நோர்வேயில் அவருடைய வாழ்க்கைத் தரம் பாதிக்கின்றது. அவருடைய நுகர்வுக்கான நிதிவளம் (தாயகத்திற்குப் பணம் அனுப்பவேண்டியிருப்பதால்) கட்டுப்படுத்தப்படுகின்றது. குடும்பம் பாதிக்கப்படுகின்றது. கணவன்- மனைவிக்கிடையில், பெற்றோர் – பிள்ளைகளுக்கிடையில் ஒருவித முரண்பாட்டுச்சூழல் உருவாகுகின்றது. மட்டுமல்லாமல் இதில் வேறொரு சிக்கலும் தோன்றுகின்றது. பெருஞ்சமூக வாழ்க்கைத்தரத்திற்கு ஒப்பாக பிள்ளைகளின் தேவைகள் தொடர்பான (பிள்ளைகளின்) எதிர்பார்ப்பினை ஈடுகட்ட முடியாத நிலை பெற்றோருக்கு ஏற்படுகின்றது. இது ஒட்டுமொத்தமாக இணைவாக்கத்தினைப் பாதிப்பதோடு புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் மீது எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் நாடுகடந்த பணம் அனுப்புதல் நடைமுறைகள், உள்நாட்டு தேசிய கொள்கை வகுப்பாளர்களின் கவனத்திற்குரிய விவகாரமாகவும் இருக்கின்றது. 

இதன் இன்னொரு பார்வை, சட்ட ரீதியான சிக்கல். அது புலம்பெயர்ந்தோர் வாழும் நாட்டின் தேசிய சட்டங்களுக்கு விசுவாசமாக இல்லாதிருத்தல் தொடர்பானது. பணம் அனுப்புதல் சார்ந்து சாத்தியமான மாற்றுவழிகளின் குறைபாடுகளினாலும் அனுப்புவோருக்கான வேறு அனுகூலங்கள் காரணமாகவும் பெரும்பாலும் முறைசாரா வழிகளினூடாகவே, அதாவது நோர்வேச் சட்டங்களை மீறிய வகையிலேயே அனுப்பப்படுகின்றன. சோமாலியர்களைப் பொறுத்தமட்டில் தாயகத்திற்குப் பணம் அனுப்புதல், அங்குள்ள குடும்ப உறவினர்களின் உயிர்வாழ்தலுக்கு இன்றியமையாதது. ஆனால் சட்டரீதியான பொறிமுறைகள், கட்டமைப்புகள் அவர்களிடத்தில் இல்லை. அவ்வாறான புறநிலை அவர்கள் சட்டத்தை மீறுவதற்கு நிர்ப்பந்திக்கின்றது. இது பல சோமாலியர்களை வாழும் நாட்டுக்கு விசுவாசமாகவிருத்தல் என்ற அம்சத்தில் முரண்களுக்கும் இணைவாக்கம் சார்ந்த சிக்கல்களுக்கும் உள்ளாக்குகின்றது. தமிழர்கள் மத்தியிலும் புலப்பெயர்வின் ஆரம்பம், தாயகத்திற் போர் தீவிரமாக இடம்பெற்ற காலங்களில் ‘உண்டியல்’ போன்ற முறைசாரா பணம் அனுப்புதல் நடைமுறை நிலவியுள்ளது.

நாடுகடந்த வாழ்வும் பண்பாட்டு நடைமுறைகளும்

தேசிய எல்லைகளைக் கடக்கும்போதும் நாடுகடந்த சமூகத்தளங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபடுத்தும் போதும் தாயகம் சார்ந்த ஒரு பண்பாட்டுச் செயற்பாட்டைப் பின்பற்றல், நாடுகடந்த பின்பற்றலாக மாறுகின்றது எனப்படுகின்றது. உதாரணமாகச் சோமாலியர்கள் நோர்வேயில் ‘நுனை’ (தியாகத்திருநாள்) கொண்டாடும்போது, அந்தக் கொண்டாட்டம் தொடர்பான தாயக அநுபவங்களைக் கற்பனை செய்துகொள்கின்றனர். ஆயினும் இந்த கற்பனை செய்து நினைவுகளை மீட்பதனூடு கொண்டாடப்படும் நிகழ்வுக்கு பணம் அனுப்புதல் போன்ற நேரடித்தொடர்பு தாயகத்துடன் இருப்பதில்லை. இங்கு கற்பனை தாயகத்துடனான பிணைப்பினை வலுப்படுத்துகிறது.  தமிழர்களைப் பொறுத்தவரையில் ஒரு வகை நிகழ்நேரக் கற்பனைப் பின்பற்றல் உதாரணமாக முன்வைக்கப்படுகின்றது. தமிழர்களிற் குறிப்பிடத்தக்கவர்கள், தமது கிராமத்துக் கோயிற் திருவிழாக்கள் நிகழும் அதே காலத்தில் தமது வீடுகளில் மரக்கறிச் சமையலுடன் விரதமிருக்கின்ற நடைமுறை உள்ளது. பண்பாட்டு நிகழ்வுகள் ஊடான நாடுகடந்த வாழ்வியலின் பரிமாணங்களும் இதிற் பேசப்படுகின்றன.

தமிழர் – சோமாலியர் புலப்பெயர்வின் வரலாறு

தமிழர்கள், சோமாலியர்களின் புலப்பெயர்வுக்கான பொதுவான காரணிகள், காலப்பகுதிகள் மற்றும் நோர்வேக்கான அவ்விரு சமூகங்களின் புலப்பெயர்வு வரலாற்றுச் சுருக்கக் குறிப்புகளும் இவ்வாய்வில் இடம்பெற்றுள்ளன. நோர்வேக்கான தமிழர்களின் புலப்பெயர்வு 1960 களின் பிற்பகுதியிற் தொடங்கியது. சிலோன் – நோர்வே (Cey-Nor) மீன்வள அபிவிருத்தித் திட்டமே தமிழர்களின் நோர்வே நோக்கிய புலப்பெயர்வுக்கான தொடக்கம். இது (Cey-Nor) முக்கியமான இரண்டு நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மற்றையது நோர்வேயின் ‘Folk high schools’ (Adult Education Center) கல்வி வாய்ப்புத் திட்டம்.

பின்-கொலனித்துவ இலங்கையின் யதார்த்தத்திலும் சிங்களம் மட்டும் சட்ட அமுலாக்கத்தின் பின்னணியிலும் தமிழர்களில் ஒரு பிரிவினர் தொழில் அகதிகளாக (Labour Migrants) பிரித்தானியாவிற்குச் சென்றனர். தனிச் சிங்களச் சட்டம்; எதிர்கால வேலைவாய்ப்புகளைத் தடுக்கும் ஒரு ஒடுக்குமுறைக் கருவியாகத் தமிழ் மக்களாற் பார்க்கப்பட்டது. 1975 இற்குப் பின் நோர்வேக்கான தமிழர்களின் புலப்பெயர்வு ஒரு கல்விசார் புலப்பெயர்வாக (Educational migrants) அமைந்தது. குறிப்பாக நோர்வேஜிய ‘Folkehøgskole’ எனப்படும் Folk high schools (Adult Education Center).

கல்வி வாய்ப்பிற்கூடாகப் ஒரு பிரிவினர் புலம்பெயர்ந்தனர். அத்தோடு குறிப்பிட்ட சிறு எண்ணிக்கையிலான தமிழ் மாணவர்கள், நோர்வேஜியப் பல்கலைக் கழகங்களில் நேரடி அனுமதிபெற்று உயர்கல்வி வாய்ப்புடன் புலம்பெயர்ந்தனர். 1971 இன் சிறிலங்கா அரசின் கல்வித்தரப்படுத்தல் அதற்கான அரசியற் பின்னணியாக அமைந்தது. இவ்வாறாக 1986 வரையான கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் தொழில் மற்றும் கல்விசார் புலப்பெயர்வு ஊடாகக் கிட்டத்தட்ட 1000 வரையானவர்கள் நோர்வேக்குப் புலம்பெயர்ந்தனர்.

1980 களின் நடு மற்றும் இறுதிப்பகுதியில் 1983 ஜூலைக் கலவரங்களின் விளைவான புலப்பெயர்வு, அரசியற் காரணங்களின் பின்னணியில் நிகழ்கின்றது. அதனைத் தொடர்ந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த நிலையில் அகதிகளாகவும் அரசியற் புகலிடம் கோருபவர்களாகவும் (Asylum seekers and political immigrants) தமிழர்களின் புலப்பெயர்வு நிகழ்கின்றது. போர் காரணமாகப் புலம்பெயர்ந்த இந்தப்பிரிவினரே, தமிழ் டயஸ்போறாவின் உலகளாவிய பரம்பலுக்குரிய பெரும்பான்மையாக உள்ளனர். நோர்வேக்கான தமிழ்ப் புலப்பெயர்விற் பெரும்பான்மையும் அத்தகைய பின்னணியைக் கொண்டதே. அதன் தொடர்ச்சியாக குடும்ப மீள் இணைவு (Family reunion settlers) அமைகின்றது. அதாவது நோர்வேக்கு முதற்கூறப்பட்ட வெவ்வேறு காலகட்டங்களில், குறிப்பாக அகதிகளாகவும் அரசியற் காரணிகளால் புலம்பெயர்ந்தவர்கள், தமது குடும்பத்தினரை நோர்வேக்கு அழைத்த காலகட்டம் அமைகின்றது.

சோமாலியர்களின் நோர்வேக்கான புலப்பெயர்வு 1970 களின் இறுதியிற் தொடங்குகின்றது. மீன்வளப் பின்னணிகொண்ட சிலரே அக்காலப்பகுதியில் புலம்பெயருகின்றனர். சோமாலியர்களைப் பொறுத்தமட்டில் தொழில் மற்றும் கல்விசார் நோக்கங்கள் அவர்களின் நோர்வேக்கான புலப்பெயர்வு வரலாற்றின் அங்கமாக இருக்கவில்லை. 1987 இற்கு முன்னர் 59 சோமாலிய மக்களே நோர்வேக்கு புலம்பெயர்ந்துள்ளனர். அகதிகளாகவும் புகலிடக் கோரிக்கையாளர்களாகவுமே முதன்மையாக அச்சமூகத்தினரின் புலப்பெயர்வு வகைப்படுகின்றது. அகதிகளாகவும் புகலிடக் கோரிக்கையாளர்களாகவும் சோமாலியர்களின் பெருவாரியான புலப்பெயர்வு  1980 இன் பிற்பகுதியில் வட சோமாலியாவின் பல பகுதிகளிலிருந்து (தற்போதைய சோமாலிலாண்ட்) தொடங்கியது. சைட் பார்றே (Siad Barre) தலைமையிலான அரசாங்கம், சோமாலிய தேசிய இயக்கம் (Somali National Movement – SNM) மற்றும் சோமாலி சால்வேஷன் ஜனநாயக முன்னணி (Salvation Democratic Front -SSDF) தலைமையிலான கிளர்ச்சியை முறியடிக்கும் திட்டத்துடன் இராணுவத் தாக்குதலைத் தொடங்கியமை இப்புலப்பெயர்வுக்கான காரணி.

பெருஞ்சமூகத்தின் அபிப்பிராயம்

தமிழர்களின் நோர்வேயிய சமூகத்துடனான இணைந்து வாழ்தல் சார்ந்து ஊடகங்களில் நல்ல அபிப்பிராயம் நிலவிவந்துள்ளது. முன்னுதாரணமான புலம்பெயர் சமூகமென்ற பொதுவான சித்தரிப்பும் உள்ளது. இணைந்து வாழ்தல் சார்ந்து குறைபாடான சிக்கலான சமூகமென்ற சித்தரிப்பே சோமாலியர்கள் பற்றிய ஊடகக் கருத்தாக இருந்துள்ளது. இந்த ஒற்றைத்தன்மையான சித்தரிப்புக்கு (Stereotype) சில அடிப்படைகள் உள்ளன. பெண்களுக்கான ‘கத்னா’ (பெண்ணுறுப்பு விருத்தசேதனம் – Female circumcision), வெற்றிலை போன்ற ஓர் இலையை மெல்லும் பழக்கம், வேலை செய்வோர் விகிதம் குறைவு, அரசின் சமூக உதவிப் பணத்தில் தங்கியிருத்தல் போன்றவை சார்ந்த சோமாலியர்கள் மீதான கணிப்பு அவர்களைப் பல சந்தர்ப்பங்களில் அவமானமாக உணர வைக்கின்ற விடயங்களாக இருந்திருக்கின்றன.

அடிப்படையில் இந்த பொதுவெளி மற்றும் ஊடக அபிப்பிராயத்தைக் கட்டமைப்பதற்கான முக்கிய குறிகாட்டி என்பது தொழிற்சந்தைப் பங்கேற்பின் அளவுதான். சோமாலியர்களின் தொழிற்சந்தைப் பங்கேற்பின் குறைபாடு அவர்கள் பற்றிய எதிர்மறை அபிப்பிராயத்தைக் கட்டமைத்துள்ளமைக்கான பிரதான காரணிகளில் ஒன்று. தரவுகளின் படி சோமாலியர்களை விட தமிழர்களின் பொருளாதார நிலை மேம்பட்ட நிலையிலுள்ளது. இதற்கான காரணிகள், இரு சமூகங்களும் நோர்வேயில் வாழ்ந்த காலத்திலுள்ள அளவு வித்தியாசமாகும்.

தமிழர்களின் தாயகத்துடனான பிணைப்பும் பேணலும் நோர்வேஜிய பெருஞ்சமூகத்தின் மத்தியில் நன்கு அறியப்பட்ட விடயம். ஆனால் அந்த விடயம் பெருஞ்சமூகப் பொதுவெளியில் எதிர்மறையான சித்தரிப்புகளுக்கு உட்படவில்லை. இணைந்து வாழ்தலுக்குத் தடையாக முன்வைக்கப்படவில்லை. தொழிற்சந்தையில் தமிழர்களின் பங்கேற்பு அதிகம் என்பதும் சொந்த வீடுகளைப் பெரும்பான்மையான தமிழர்கள் கொண்டிருப்பதுவும் இதற்கான முக்கிய காரணங்கள். தாயக உறவுப் பேணலுடன் சமாந்தரமாக, நோர்வேயில் வெற்றிகரமான வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும் என்பதற்கான உதாரணமாக சொல்லப்பட்ட ஆய்வு ஒன்று 2006 இல் வெளிவந்திருந்தமையை ( Øivind Fuglerud and Engebrigtsen, 2006) மேற்கோள் காட்டிய குறிப்பு இதில் இடம்பெற்றிருக்கின்றது. 

நோர்வே உட்பட்ட மேற்குநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த சோமாலியர்கள் தமது தாயகத்துடன் இறுக்கமான தொடர்புகளைப் பேணுகின்றனர். அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு, மற்றும் மதம் சார்ந்த தளங்களில் அத்தொடர்பு பேணல்கள் நிகழுகின்றன. சோமாலியர்களைப் பொறுத்தவரையில், நோர்வேயில் அவர்களது சமூக நிறுவன ஒழுங்கமைப்பிலும் சரி, வாழ்வை ஒழுங்கமைப்பதிலும் சரி மதமும் குலப்பின்னணியும் (Clan) முக்கிய பங்கு வகிக்கின்றன. வெளிநாட்டுச் சமூகங்கள் தொடர்பான ஒற்றைப்பார்வை அணுகுமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற போதும், சோமாலியர்கள் மெதுவாக தம்மை ஒரு வலுவான புலம்பெயர் சமூகமாக நிலைநிறுத்திவருகின்ற புறநிலைகள் குறித்தும் விபரிக்கப்படுகின்றன. முறைசாரா பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் சிலர் 2001, 2002 காலப்பகுதிகளிற் கைதுசெய்யப்பட்ட போது அதனை அவர்கள் எதிர்கொண்ட விதம் ஒரு சமூகமாக நோர்வேயில் அவர்களின் வளர்ச்சியை நிரூபித்தது. அந்த விவகாரத்தின் போது எதிர்ப்பு, எதிர்வினை மூலம் பொது அபிப்பிராயத்திற்குச் சவால்விடும் வண்ணம் அதனை அவர்கள் எதிர்கொண்டனர். நோர்வேஜிய அரசியற் கட்சிகளிலும் அவர்களின் பங்கற்பு அதிகரித்து வருகின்றது. 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9542 பார்வைகள்

About the Author

சிவராஜா ரூபன்

ரூபன் சிவராஜா அவர்கள் 1993 ஆம் ஆண்டு சிறுவனாக இருக்கும்போது ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தார். தற்போது கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் ஊடகம் ஆகிய தளங்களில் இவர் செயற்பட்டு வருவதுடன் அரசியல், சமூகம், கலை, இலக்கியம் சார்ந்தும் எழுதி வருகிறார். ஈழம், தமிழகம், மற்றும் புலம்பெயர் ஊடகங்கள், இதழ்களில் இவரது எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.

'எதிர்ப்பரசியல்', 'அதிகார நலனும் அரசியல் நகர்வும்' (உலக அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு), 'எழுதிக் கடக்கின்ற தூரம்' (கவிதைத் தொகுப்பு), 'கலைப்பேச்சு' (திரை நூல் அரங்கு) என்பன இவரது படைப்புகளாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)