Arts
10 நிமிட வாசிப்பு

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு III

April 25, 2023 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

கல்மடுவிலுமிருக்கிறது இராசபக்கிச முதலியாருடைய மனுசர்கள் தான். அவர்கள் தானே மற்றும் வெளிகளெல்லாம் விரைத்துத் திண்டுகொண்டிருக்கிற நாளில் அப்படியே விரைத்துத் திண்டுகொண்டிருங்கோவென்று அவருடைய மனுசரை விட்டுப் போட்டு அவர் தளவில்லுக்குப் போய்க் குடியிருந்து கொண்டு அந்த வனம் ஏழுக்கும் முன்னீடு காபழு[1] அனுப்புகிறது வேடரிற் கரடியன் கம்மாஞ்சி[2]. அதன் பிறகு கந்தக் கம்மாஞ்சி – இவர்கள் முன்னீட்டுக் கம்மாஞ்சிமார், அதின்பிறகு கோவில்மேட்டுக்கு[3] அம்மாள் கொண்டு வந்தது ஆரென்றாற் சின்னத்தம்பிப்போடியென்கிறவன், மதுரைக்குப்போய் அங்கே வைத்துப் பணிவிடையாச்சுது. நானிங்கே இருக்க நீயங்கே போக வேண்டாமென்று அப்போ வோகொடைக் கல்லிலே[4] யிருந்தது, அம்புத்தெய்வம், கொம்புத்தெய்வம், வில்லுத்தெய்வம், அம்மானைத்தெய்வம், இதுகளையுங் கொண்டு அதுகளுக்குப் பூசை கட்டுகிறது. சிங்களக் கட்டாடியும் பெண்சாதியும் சிங்களப் பத்ததியுங்கூடக் கொண்டு வந்தார்கள். அதிலும் அந்தத் தெய்வத்தைப் பூசை பண்ணிக் கோவில் மேட்டிலே வைத்துக் கொண்டிருக்கிற காலத்தில் அந்தக் கோயிலுக்குப் பூசை செய்பவன் கட்டாடியாவெளியை விதைத்துத் திண்டு கொண்டுவருகிற காலத்தில் அவனுடைய பெண்சாதி ஒரு பெண்பிள்ளை பெற்ற இடத்தில் அவர்கள் இரண்டு பேருஞ் செத்துப் போனார்கள். அவருடைய[5] மகள் கந்தியென்கிற மனுதி தான் பிறகு பூசை செய்து கொண்டிருக்கிற காலம் அவவை மழுவெடுத்த செட்டிகளிலொருவன் கல்யாணம் முடித்துக்கொண்டிருந்தான்[6]. அதிலும் பிள்ளை பிறந்தது, அந்தப் பிறந்த வழிக்குத்தானே அந்தத் தெய்வத்தைக் கொடுத்துப் போட்டார்கள். அவர்கள் பூசை பண்ணுகிறபடியால் அவர்களுக்கு இராசபக்கிச முதலியார் கட்டாடியாவெளியை அம்மாளுக்குக் கொடுத்துப்போட்டார்.

அவர்களாண்டு அனுபவித்து வருகிற காலத்தில் அந்த வங்கிஷம் காலற்று[7]. அப்போ பட்டிமேட்டுக்கு இராக்கொண்டு[8] தெய்வத்தையுங் கொண்டு போய்க் கோவிலுங் கட்டிக்குடியிருந்தார்கள்.  அதின் பிறகு இராசபக்கிச முதலியார் அம்மன் தெரிசனம் பண்ண வந்தபோது இவர்களைக் காணவில்லை. தேடிப்பார்த்த போது பட்டிமேட்டில் இருக்கிறதாக அறிந்தார். இனியிவர்களைத் தேடப்படாதென்று காரைக்காட்டு வேளாளன்[9] கருணாகரக் கட்டாடியையும் அம்மன் அடையாளம் எடுத்துக்கொண்டு சனிக்கிழமை விசேஷ பூசை பண்ண வேணுமென்று ஒன்பது காபழுவுங்[10] கட்டி அவர் சனங்களை அனுப்பினர். அவர்களைக் கண்டவுடனே இதுவெல்லாம் வாங்கிக் காரைதீவுக் கோவிலில் வைத்துப்போட்டுத் தங்கள் குலதெய்வ அடையாளங்களும் எடுத்துக் கொண்டு போய்ப் படுகளச் சடங்கு செய்து அதில் அதிக புதினங்களைக் காண்பித்து அவர்களுக்கு அந்தத் தெய்வத்தையும் அவர் தாரை வார்த்துக்கொடுத்தார். கோவில்மேடும் கட்டாடியாவெளியுஞ் சிறுவனமும் என்றென்றுங் காரைதீவு[11] அம்மாளுக்கென்று இராசபக்கிச முதலியார் தாரைவார்த்துக் கொடுத்தார்.

இது தவிர இதற்கு முன்பு திருக்கோயிலுக்குப் பரிவட்டம் வெளுக்கிற வண்ணாரில்லாத படிக்கு ஏழு வன்னியமாருங் கூடி இராசபக்கிச முதலியாரைக் கேட்க அப்போ அவர் தீவ[12] வண்ணானும் வீரவண்ணானும் குமானி வண்ணானும் ஆணும் பெண்ணுமாக மூன்று குடி கொடுத்தார். அதின் பிறகு இவர் செய்தியெல்லாங் கேள்விப்பட்டு அப்போ தான் மகராசா பட்டங்கட்டினது.

 பட்டங்கட்டின முதலிமார் ஒன்பது பேர். அதாவது

  1. இராசபக்கிச முதலியார்
  2. சிறிவர்த்தன முதலியார்
  3. சூரியகாந்த முதலியார்
  4. வணிகசேகர முதலியார்
  5. குடாவேத்திமை முதலியார்
  6. அதிகார முதலியார்
  7. தளவில் முதலியார்
  8. கனகரெட்டின முதலியார்
  9. வாய்க்காம[13] முதலியார் ஆக இந்த ஒன்பது முதலிமாரும் பட்டங்கட்டின முதலிமார்.

பட்டங் கட்டாத முதலிமார்:

  1. கல்மடு முதலியார்
  2. துணுகம்ப முதலியார்
  3. காளாஞ்சி அப்புகாமி
  4. அக்கரைப்பற்றுத் திருத்தின நிலமையிறாளை. இந்த நாலுபேரும் பட்டங்கட்டாத முதலிமார்.

அதின் பிறகு நாடுகாட்டுப் பகுதிக்குத் தலைமை செய்த போடிமார்:

  1. சின்னப் போடி
  2. மன்னிப்போடி
  3. கல்மடு முதலியார் மகன் மங்கலப்போடி
  4. வேலாப்போடி
  5. பத்திப்போடி
  6. செம்பகக் குட்டிப்போடி
  7. கண்ணாப்போடி, இந்த ஏழுபேரும் தலைமை செய்த போடிமார்.

இனியிறைக்காறப் போடிமார் :

  1. கண்ணாப்போடி
  2. சென்னஞ்சிப்போடி
  3. செட்டிப்போடி
  4. கதிர்காமப்போடி
  5. பரமகுட்டிப்போடி
  6. கல்மடு முதலியார் மகன்
  7. மன்னிப்போடி[14]
  8. மங்கலப்போடி
  9. கனகப்போடி
  10. முதலிக்குட்டிப்போடி
  11. கதிர்காமப்போடி, இந்தப் பதினெரு போடிமாரும் இறைகாறப் போடிமார்[15]. அந்தக்காலம் இவர்களுக்கு ஊழியம் என்னவானால் நக்கையில் விசாரைக்கு[16] ஊழியஞ் செய்கிறது. மொண்டிறாமவில்லிலிருக்கிற சனங்களுக்கு ஊழியம் என்னவானால் விசாரைக்கு மயிற்பீலி[17] கொடுத்துக்கொண்டு அந்த வெளிகளும் விரைத்துத் தின்றுகொண்டிருக்கிறது. வட்டிவிட்டியாவது விசாரைக்கு அரிசி குத்திக்கொடுக்கிறது. அந்த ஊரவர்கள் புரோசனத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறது. கள்ளியம்பத்தையாரென்கிறது விகாரை செய்கிற சிற்பக் கொல்லனிருந்து கொண்டு விரைத்து ஊதிபந் திண்டுகொண்டிருக்கிறது. விசாரைக்குச் சேவிக்கிற பறையனுக்குப் பொன்னம்வெளியும் பறையனோடை நின்று[18] அவனுக்குத்தான். அவறாணையென்கிறது முன் சிதம்பரகாமம்[19] – அதிலிருக்கிறது காரைக்காட்டு வெள்ளாளனிருக்கிறது.  கிளவியூரென்கிறது கந்தம்மை மகள் மாதி.  அவர்கள் பரவணி குறுணல்ப்புக்கை வாய்க்கால்.  செல்லம்மைக் கிழவி மாடு கட்டின இடம் பட்டியவத்தளை.

கோட்டாஞ்சேனையென்கிறது கண்டியில் மகாராசா தம்பனகுளிகைக்குக் கஞ்சா மரத்தைக் கடவெடுத்த படியால் அவன் கையை வெட்டிக் கெங்கைக் கரையிலே தள்ளிவிட அவன் வந்து பேராத்தங்கரையில்[20] ஒரு சேனை வெட்டிக்கொண்டிருக்கிற நாளையிற் கண்டி மகாராசா எழுந்தருளப்பண்ணி அவர் வந்தவிடத்திலே ஆண்டிகள் சோப்பிகள்[21] எல்லாரையுங் கூட்டிக்கொண்டு போய்ச் சங்கூதினன்[22]. அது ஆரென்று கேட்டார். அப்போ கஞ்சாமரம் வெட்டின ஆண்டியென்றார்கள். அப்போ என்னவேணுமென்று உத்தரவாச்சுது. அப்போ கோட்டாஞ்சேனையூருக்கு[23] உத்தரவு கிடைக்க வேணுமென்றான். அப்போ அந்த ஊருக்கும் வெளிக்குஞ் சீட்டுந் திருமுகமுங் கிடைத்தது,

அதுபோக சீத்தவாக்கை நகரிக்குப் போய் நிலமையிறாளையும் அவர் பெண்சாதியுஞ் சனங்களுமாக நாடுகாட்டுக்கு வர விந்தனையடிப் பாட்டாலே வந்தார்கள். வருகிறபோது செல்லாப்பற்று[24] வழிப்பாட்டிலே ஒரு வேடுவிச்சி பிள்ளையொன்று பெற்று மாவுங் கொடியுமறாமல் வழிப்பாட்டிற் போட்டுவிட்டுப் போயிற்றாள். அந்தப் பிள்ளையை இவர்கள் கண்டெடுத்துக் கொண்டுவந்து வளர்த்தார்கள். மறுபடி அந்த வேடுவிச்சி வந்து பார்த்தாள்; பிள்ளையைக் காணவில்லை. வழியிலே சனங்கள் அதிகமாய்ப் போக்குவரவு பண்ணியிருந்தது. அவர்கள் கொண்டு போய்விட்டார்கள் என்று தன்பாட்டிலே போய்விட்டாள்.

 அவர்கள் அந்தப் பிள்ளைக்குப் பறைநாச்சி[25] என்று பெயரிட்டு வளர்த்து முத்துவனுக்குக் கல்யாணஞ் செய்து கொடுக்கிறது. அவள் பதினாறு பெண்பிள்ளை பெற்றாள். அதிற் பதினைந்து பேருக்குங் கல்யாணஞ் செய்து கொடுத்து இளைய பிள்ளை சும்மாவிருந்தது. அப்போ இவர்களுடன் கூட வந்த வண்ணானுடைய பெண்சாதி செத்துப் போச்சுது. அவன்போய்ச் சும்மாவிருந்தான். அப்போ அவன்போய் ஆண்டவரே முறைப்பாடு சொல்லுகிறேன் அடியேன் என்றான் அது என்னவென்று கேட்க எனது பெண்சாதி செத்தபடியாற் கையினாலே குத்தியாக்கித் தின்றுகொண்டு வண்ணாண்மை செய்ய என்னால் முடியாதென்று சொன்னான். அப்போது அந்த வேடுவிச்சி பிள்ளை இளையபிள்ளையைக் கலியாணம் பண்ணிக் கொடுத்தான். அதிலும் பிள்ளை பெறுகிறது.[26] அதைச் செல்லாப்பற்று வேடர் கேட்டு வருஷந்தோறுஞ் சிறை பிடித்து விற்கத் தொடங்கினார்கள்.

அது பரவரிலும் மூண்டும் சாண்டாரிலும் மூண்டும்[27] அப்படிச் செய்த படியால் அந்த வேடருக்கு உபகாரம் பண்ண வேண்டுமென்று காங்குத்துப்பட்டி[28] பத்து முழமும் வாங்கி நாலு முழமும் மூண்டு முழமுமாகக் கிழித்து வேடருக்குத் கொடுத்தார்.

இராசபக்கிச முதலியார் அதின் பிறகு பெரியவாசலுக்குப் போனார். அப்பொழுது பட்டாணிகள் இரண்டு பேரென்றும் முகங் காட்டுகிறபோது ஆயுதம் வைத்துப்போட்டுப் போய் முகங்காட்டுவார்கள். அன்றைக்கு ஆயுதம் வையாதபடிக்குப் போய் முகங்காட்டினார்[29]. ஆனபடியாற் கெங்கைக் கரையிலே தள்ளிப்போட்டார். அப்போ இராசபக்கிச முதலியார் அவர்களைக் கொண்டுபோனாலிந்த வேடரின் பிரளிக்குக்[30] காவலுக்கு நல்லதென்று கூட்டிக்கொண்டு வந்துவிட்டார். கொண்டுவந்து பள்ள வேகாமத்தில்[31] வேடருக்குக் காவலாக வைத்தார். அவர்கள் பேரென்னவென்றாற் தெருவெட்டியன், நன்னாயன்.

வேடுவர்கள் சகலருக்கும் முன்னீடு கரடியன்[32]. இவர்கள் ஊழியமென்னவென்றாற் கக்கூசி வீடு[33] கட்டுகிறது. தட்டுவேலி கட்டுகிறது, சுங்கத்துறையிற் சேவுக வயல்கட்டினால்[34] அந்தக் கங்காணம் பார்த்துக்கொண்டு சூடும் வைத்துப்போட்டு தலைக்கொரு கட்டு மடித்துக் கொண்டு போவார்கள்[35]. எல்லாத்துக்கும் முன்னீடு வேடர்தான்.

இந்த ஏழு வனத்துக்கும்[36] அதிகாரிமார் பரமன் அதிகாரி, மகன் கந்தன் அதிகாரி, மகன் கந்தக் கம்மாஞ்சி, மகன் வன்னியக் கம்மாஞ்சி. இப்படியிவர்கள் ஆண்டுகொண்டிருந்தார்கள். அக்கரைப்பற்று ஏழுவனத்துக்கும் முன்னீடு புலியனென்கிற வேடன். அவன் அக்கரைப்பற்றுக்குப் போற வழியிலே  புலியன்தீவு. அதிலிருந்துகொண்டு மெழுகு, தேன் சகலதும் எடுத்துக்கொண்டு அவருக்கும் முதலியாருக்கும் வாபிக்களத்துக்கும் அனுப்புகிறது. புலியந்தீவில் உலுவிசியென்கிற பறங்கிக்காறனும் இருக்கிறது. ஏழுவனத்துக்கும் காபழு[37] அனுப்பிக்கொண்டு இராசபக்கிச முதலியாரும் புவியன் என்கிற வேடனுக்குக் கந்தியென்கிறவளைக் கலியாணம் பண்ணிக்கொடுத்து புலியன்தீவிலிருக்கிறது.

இராசபக்கிச பதவியார் தளவில்லில் இருக்கிறபோது கல்லினாலே யுலாலை நாட்டியிருக்கும்[38], கல்லினாலேயுரல் மூன்று, கல்லினாலே கட்டில் மூன்று, வெள்ளை வெற்றிலைக் கொடியும் மூன்று. இப்படியாக அங்குமிங்குமாக[39] ஆண்டு கொண்டு வருகிற காலத்திற் பேராதனையப்பு பேய்களை விட்டுக் கொல்லுகிறது[40]. ஆகையால் ஏழு வன்னியமாரும் ஒன்பது முதலிமாருங் கூடிப் பேசிக்கொண்டார்கள் அவனைக் கொல்ல வேணுமென்று. அச்செய்தியை அந்தப் பேய்கள் கேட்டு வந்து பேராதனையப்புவுக்குச் சொன்னது. பேய்களை அப்போ பேராதனை அப்பு சொன்னான் அவர்கள் வந்து கொல்லமுன்னே நீங்கள் கொன்று போடுங்கோ என்று. சொல்லி முழுகி மாத்துமுடுத்துக் கொண்டு போய்க் காவலிலே படுத்தான்.

அப்போ அந்தச் செய்தியை இராசகுல தெய்வம் நாதனையில் வில்லைகட்டிச் சடங்கில் நின்று அறிந்து வில்லைச்சடங்கு அன்றைக்கு முடிந்து ஆனை வடிவாக[41] வந்து கோம்பாத்தைக் குடாவில் வந்து, வேலியை முறித்து அதிலுமொருபிடி வெள்ளாண்மை பிடுங்கித் தின்னாமற் போட்டுவிட்டு, அந்த வழிப்பாட்டால் போய் வட்டிவிட்டி வெளியில் வந்து  வேலியை முறித்து அதிலுமொருபிடி வெள்ளாண்மை பிடுங்கித் தின்னாமற் போட்டுவிட்டு, நெட்டிரும்வில் வெளியில் வந்து, வேலியை முறித்து அதிலுமொருபிடி வெள்ளாண்மை பிடுங்கித் தின்னாமற் போட்டுவிட்டு[42],  மறாட்டியாவெளி வேலியை முறித்துக்கொண்டு போய்ப் பேராதனையப்பு படுக்கிற அட்டாளையைப்[43] பிடுங்கிப்போட்டுப் பேராதனை அப்புவையும் அடித்துக் கொன்று போட்டு அட்டாளையை முறித்து அது தானே கொண்டுபோய்ப் புதைத்துப்போட்டு நின்றது. அந்த ஆனையைக் கொல்ல வேணுமென்று வன்னியமாரும்[44] முதலிமாருங் கூடி ஈட்டிக்காரர் 60 பேர். செல்லைக்காறர் 60 பேர் மந்துக்காறர் 60 பேர்  பொல்லுக்காறர் 60 பேர், வில்லுக்காறர் 60 பேர்[45] இப்படி யானையைக் கொல்லவிட்ட மனுசர் எல்லாரும் ஒருவருக்கொருவர் குத்திவெட்டிக் கொண்டு எல்லாரும் பட்டுப்போனார்கள். அந்தப் பேய் செய்த காரியத்தாற் பட்டார்கள். நாடுகாட்டிலுள்ள சனங்கள் எல்லாம் மாண்டு இறந்து போனார்கள்[46].

இது செய்தி மகராசா கேட்டு இந்தப் பகுதியிற் சனமெல்லாம் அழிந்து போச்சுதென்று இந்தப் பகுதிக்கு ஊழிய பாழியம் ஒருகாலமும் இல்லையென்று கோட்டாஞ்சேனைக்கும் பள்ளச்சேனைக்கும் பொதுவிலே கூளா மரத்திலும் இலுப்பை மரத்திலும் சங்குசக்கரம் வெட்டியிருக்கிறது. அந்த மரத்திலிந்தச் செய்தியறியவும் பெரியோர்கள் நாடுகாட்டுப் பூருவ பரவணி முற்றும். இதற்கு எப்போது(ம்?) வடக்கு நாதனையடிப்பா,[47] வேடர் குடியிருந்த தோட்டம். எழுவான்மூலை துலுக்கிமணல்[48], சங்கத்தான்பள்ளம், கருவேப்பங்காடு. தெற்கு கழிகாமத்து மலை. மேற்கு ஏழுவனமுட்பட கொலுசாப்பழை சுல்லக்கை ஆறு, குறுவழை ஆறு[49], இந்த நான்கு எல்லையும் ஆளப்பட்ட[50] பகுதியானது ஆண்டனுபவித்திருந்து பட்டங்கட்டின முதலிமார் ஒன்பது பேர், பட்டங்கட்டாத முதலிமார் நாலு பேர். தலைமை செய்த போடிமார் ஏழு பேர். இப்படிக்கு இந்தப் பகுதியாண்டிருந்தவர்கள் பூருவ பரவணி முற்றும்.

தொடரும்.

இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.

அடிக்குறிப்புகள்

  1. இச்சொல்லை காபழு, கா….., காப்பூ என்று வெவ்வேறு இடங்களில் எழுதுகிறார் பத்மநாதன், இச்சொற்கள் இன்றைய மட்டக்களப்புத் தமிழில் வழக்கில் இல்லை. அவற்றை pingos, காவுதடி என்று மொழிபெயர்க்கிறார் நெவில். அடிக்குறிப்புகள் 10, 37ஐக் காண்க.
  2. காடியன் கம்மாஞ்சி (பத்மநாதன்), Karadiyan Kamanchi (நெவில்)
  3. இறக்காமம் அருகே இருந்த கோயில்மேடு என்றோர் இடம் 1815 குடித்தொகைக் கணக்கெடுப்பில் காட்டப்பட்டிருக்கிறது (Census, 1816:121). பொற்புறாவாக வந்த நாகமங்கலையம்மன் (கண்ணகி) தம்பிலுவில்லிலும் பின்னர் இறக்காமம் வெருகங்குடா வெளியிலும் கோவில் கொண்டதாகப் பாடுகிறது பொற்புறாவந்த காவியம் (கணபதிப்பிள்ளை, 1971). கோவில்மேடே வெருகங்குடா  வெளி ஆகலாம். இறக்காமக் குளத்தினருகே ஒரு பாழடைந்த அம்மன் கோவில் அமைந்திருந்ததாக மரபுரைகள் நிலவுகின்றன.
  4. வோறாகாடைக் கல் (பத்மநாதன்), Bogoda (நெவில்) வேகம்பற்றில் |போ|கொட எனும் ஓரிடம் இருந்தது.
  5. சின்னத்தம்பிப்போடி
  6. பட்டிமேடு பொற்புறா வந்த காவியத்தின் படி, நாகமங்கலையம்மனின் பூசகியாக இருந்த பெண்ணை மழவராயன் குலத்தில் வந்த மங்கலப்போடி என்பவர் மணந்தார்.  மழுவரசன் என்றும் பாடம்.
  7. வம்சம் முடிந்துபோனது. எனவே மழுவெடுத்த செட்டியினர் பெருமளவு வசித்து வந்த அக்கரைப்பற்று பட்டிமேட்டுப் பகுதிக்கு அக்கோவிலை இடமாற்றினர். அப்பகுதியில் மழவராயர், மழுவரசன் என்ற பெயர்களைக் கொண்ட இரு குலத்தினர் இன்று வாழ்கின்றனர். பட்டிமேட்டுக்கு அருகேயுள்ள பனங்காட்டில் பெருமளவு வசிக்கும் மழவராயர்  சமூகத்தினருக்கு “பட்டிமோட்டார்” என்ற செல்லப்பெயர் உள்ளது.
  8. இரவில் கொண்டுபோய் வைத்து கோவில் கட்டப்பட்டது. அவ்விடத்தில் முன்பே கண்ணகிக்கு சடங்கு செய்து வந்திருக்கக்கூடும். ஒப்பிடுக. பொற்புறா வந்த காவியம்.
  9. Karaikadu Vellalan (Nevill) காரைக்காட்டில் வேளாளன் (பத்மநாதன்).  காரைக்காட்டு வேளாளர் அல்லது கார்காத்த வேளாளர், இவர்கள்  இறக்காமம் அருகே சிதம்பரகாமம் அல்லது அவறாணை என்ற ஊரில் வசித்துவந்தார்கள் (பார்க்க: அடிக்குறிப்பு 19).  வேளாளர் குலத்தின் ஒரு உட்பிரிவினரான காரைக்காட்டார் மட்டக்களப்பில் வசித்ததை பூர்வசரித்திரம் சொல்கின்றது (கமலநாதன் & கமலநாதன், 2005:91).
  10. ஒன்பது கா….வுங் (பத்மநாதன்), with nine pingo loads [of necessaries] (Nevill) அடிக்குறிப்புகள் 1, 36ஐப் பார்க்க.
  11. காலந்தீவு (பத்மநாதன்). Kārativu Amman (Nevill)
  12. அரதிவர (பத்மநாதன்), Theva (Nevill)
  13. வேகாம அல்லது வாவிகாம.
  14. நெவிலின் பிரதியில் மணிப்போடி என்று இடம்பெற்றிருக்கிறது. மன்னிப்போடி என்பதே சரியாகக்கூடும்.
  15. தலைமைப்போடிமாருக்கும் இறைக்காரப்போடிமாருக்கும் என்ன பதவி வித்தியாசம் என்று தெரியவில்லை. நெவிலின் கருத்துப்படி, தலைமைப்போடிமார், நாடுகாடுப்பற்றுக்குத் தலைமை வகித்தவர்கள். இறைக்காரப் போடிமார் நிலச்சுவாந்தர்கள்.
  16. தீகவாபி விகாரம். புத்தபிரானின் நகம் வைக்கப்பட்டதால் நக்கை. விசாரை என்பது விகாரைக்கான தமிழ்ப்பதம்.
  17. மயிற்பீலி எனுஞ்சொல் பத்மநாதன் பிரதியில் இல்லை.
  18. பறையனோடையிலிருந்து பொன்னம்வெளி வரை என்று பொருள்.
  19. அவறாணையின் பழைய பெயர் சிதம்பரகாமம் என்று பொருள். பார்க்க. அடிக்குறிப்பு 9. “முன்” என்று சொல்லப்படுவதால், மட்டக்களப்பில் காரைக்காட்டு வேளாளரின் பூர்விகக் குடியிருப்பு சிதம்பரகாமம் ஆகலாம். இந்தவிடத்தில் பத்மநாதன் பிரதியில் தவறுதலாக கிழவியூர் அச்சிடப்பட்டிருக்கிறது. அவறாணை இன்று அம்பாறை – கல்முனை நெடுஞ்சாலையில் பழைய வளத்தாப்பிட்டிக்கும் புதிய வளத்தாப்பிட்டிக்குமிடையே வயல்வெளியாகக் காட்சியளிக்கிறது (தகவல்: செல்வராசா பிரதீப், 31)
  20. பேராறு என்பது அம்பாரைக்கு மேற்கே கல்லோயாவிலிருந்து பிரிந்து மூவாங்கல், கல்மடு ஊர்களூடாகப் பாய்ந்து குடுவில் நடுப்பிட்டியில்  மீண்டும் கல்லோயாவுடன் கலக்கும் கல்மடு ஆற்றின் பழையபெயர். கல்லோயா முன்பு சாவாறு என்றும், கல்மடு ஆற்றுடன் இறக்காமத்தில் கலக்கும் எக்கலாறு முன்பு சேனையாறு என்றும் அழைக்கப்பட்டன (சுலைமான், 2015: 54-55). கல்லோயாத்திட்டத்திற்கு முன்னர் பேராறே கல்லாற்றின் பிரதான கிளையாக இருந்தது என்பதை அவ்வாறுகளின் பெயர்களான பேராறு, சாவாறு என்பன சுட்டிக்காட்டுகின்றன.  
  21. ஆண்டிகள் – சன்னியாசிகள், சோப்பிகள் – நாடோடிகள்
  22. “போய் அச்சம் கூறினன்” (பத்மநாதன்) Shank blown “போய்ச் சங்கூதினன்”  (Nevill).
  23. கோட்டாஞ்சேனை என்ற ஓரூர் இடச்சு வரைபடமொன்றில், இன்றைய அம்பாரை நகருக்கு அருகே குறிக்கப்பட்டுள்ளது.
  24. மட்டக்களப்பின் வேடர் குல வம்சாவளியினரிடையே சித்தாண்டி முதல் கிரான் பேரில்லாவெளி வரையான பகுதியில் வாழ்வோரை “செல்லாப்பற்றுக் குடி” என்று அழைக்கும் வழக்கம் உண்டு. (பத்திநாதன் 2022) விந்தனையிலிருந்த செல்லாப்பற்றிலிருந்து அம்மக்கள் அங்கு வந்து குடியேறியிருக்கக்கூடும்.
  25. பறைநாச்சி (பத்மநாதன்), Paara Nachi (Nevill). வழியில் கண்டெடுத்ததால், நெவில் பாற – வழி என்று பொருள்கொண்டு பாற நாச்சி என்கிறார்.
  26. பெரு(கு)கிறது (பத்மநாதன்), Children were born to these (Nevill). பெருகிறது என்பது பெறுகிறது என்பதன் கொச்சைவழக்கு என்று கொள்வதே பொருத்தம். ‘கு’ சேர்த்து பொருள்கொள்ளத் தேவையில்லை.
  27. பத்மநாதன் பிரதி. நெவில் பிரதியில் That custom exists among the Paravar also, and among the Sandar.  “அது பரவரிலும் உண்டு சாண்டாரிலும் உண்டு” நெவில் வாசிப்பின் படி, பிள்ளைகளை விலைக்கு விற்கும் வழக்கம் பரவரிடமும் சாண்டாரிடமும் இருக்கிறது. பத்மநாதன் வாசிப்பின் படி, வேடர்கள் பரவரிடமும் சாண்டாரிடமும் மூன்று மூன்று பிள்ளைகளைத் திருடி விற்றார்கள். மூன்று இன்னோரிடத்திலும் மூண்டு என்றே வருவதால் பத்மநாதன் வாசிப்பே சரியானதாகக் கூடும்.
  28. Broad Cloth (Nevill). அகலமான துணி
  29. அரசனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுதமின்றி மன்னனைச் சந்திக்கவேண்டுமென்று விதி இருந்திருக்கிறது போலும்.
  30. புரளி. கொச்சைவழக்கு. வேடர் பிள்ளைகளைக் கவர்ந்து விற்றமையால் ஏற்பட்ட குழப்பம் என்பது உறுதிப்படுகிறது.
  31. கீழ்ப்பகுதி. உசர வேகாமத்தின் மறுபுறம்.
  32. காடியன் (பத்மநாதன்), Karadiyan (Nevill). ஒப்பிடுக: கரடியனாறு ஊர்ப்பெயர்.
  33. Temporary buildings (Nevill). கக்கூசி என்பது இடச்சு Kakhuis இலிருந்து தமிழுக்கு வந்த திசைச்சொல். இதை தற்காலிகக் கட்டடம் என்று நெவில் மொழியாக்கும் காரணம் தெரியவில்லை.
  34. If they erected a dam for Sevuka Vayal at Sungathurai (Nevill).
  35. சேவுகவயற்கட்டில் வேளாண்மை பார்ப்போருக்கு வயல் காவலிலும் சூடுவைத்தலிலும் உதவி கூலியாக ஆளுக்கொரு நெல் கட்டு வாங்கிச் செல்வார்கள்.
  36. இந்நூல் முழுவதும் ஏழுவனம் என்ற சொல் வருகிறது. ஏழுவனம் என்ற சொல்லை, மட்டக்களப்பு ஏழு பகுதியில் மக்கள் வாழாத வனப்பகுதி என்று பொருள்கொள்ளலாம். ஏழு பகுதியில் அக்கரைப்பற்றுப் பகுதியிலிருந்த  “அக்கரைப்பற்று ஏழுவனத்தில்” உருவான புதிய குடியிருப்பே நாடுகாடு.
  37. காப்பூ (பத்மநாதன்), pingos (Nevill). அடிக்குறிப்பு 1, 10ஐக் காண்க.
  38. கல்லினாலே யுராலை நாட்டியிருக்கும் (பத்மநாதன்), kallil nale ulalai natti irukkum, the crossbars of the gate were of stone, evidently a mistake in rendering uluwahal a ulalai. (Nevill) கதவின் சட்டகம் கல்லாலானது என்கிறார் நெவில்.
  39. கல்மடுவிலும் தளவில்லிலும்
  40. Peratheni Appu used to send the Pey (devil) to kill (people). (Nevill) பத்மநாதன் வாசிப்பில் இராசபக்கிஷ முதலியார் கொல்லப்பட்டார் என்றும் நெவில் வாசிப்பில் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் வருகிறது.
  41. இணை வடிவாக (பத்மநாதன்), in the form of an Elephant (Nevill)
  42. அந்த வழிப்பாட்டால் போய்….…தின்னாமற் போட்டுவிட்டு என்பது வரையான வரி பத்மநாதன் பிரதியில் இல்லை. going along the road, bursting through the fence of Vatti-vitti Velli, taking up one bunch of the crop, and throwing it away outside without eating it; bursting through the fence of Nettaram Vil Velli, and taking one bunch of the crop and throwing it away without eating it. (Nevill)
  43. அட்டாளை – உயரமான காவற்பரண்
  44. “வன்னியமாரும்” பத்மநாதன் பிரதியில் இல்லை.
  45. sixty spearmen, sixty (shellai) javelin armed men, sixty noosemen, sixty clubmen, sixty bowmen (Nevill). வேல்வீரர்கள், ஈட்டிவீரர்கள், கயிற்றுவீரர்கள், தண்டவீரர்கள், வில்வீரர்கள். படைவீரர்களாக இருக்கக்கூடும்.
  46. பேராதனை அப்புவை இராசபக்கிஷ முதலியார்க்கு எதிரான அரசவம்சமென இனங்காணும் நெவில், அவர்கள் இருவரும் இறந்தபின்னர் அடுத்த ஆட்சியுரிமை யாருக்கென்பதில் ஒருவரோடொருவர் பொருது நாடுகாட்டில் அத்தனைபேரும் இறந்தார்கள் என்று ஊகிக்கிறார்.
  47. The road to Natheni ( Nevill) நாதனைக்குச் செல்லும் வீதி.
  48. On the East Mulai-tudukhi-tiv manal (the “ breastshaking sand” literally, really the Mula Tuduwa sand banks (Nevill) தவறான வாசிப்பும் மொழிபெயர்ப்பும்.  எழுவான்மூலை – கிழக்குத்திசை. துலுக்கித்தீவு மணல் ஆகலாம்.
  49. நாடுகாட்டுப்பரவணி சிங்களத்திலிருந்து மொழியாக்கிய நூல் என்பதால், பல சொற்களை நெவில்  மீளச் சிங்கள மயமாக்கி கூறுகிறார். உதாரணமாக புலியந்தீவு – கொட்டியாதுவ, சங்கத்தான்பள்ளம் – சங்கயபல்லம், கருவேப்பங்கேணி – கலுகொசொம்கெ_லே. புலியந்தீவு சிங்களத்தில் புலியந்துவ என்று அழைக்கப்பட்டிருக்கிறதேயன்றி, நெவில் கூறுவது போல் கொட்டியாதுவ என்று அழைக்கப்படவில்லை. எனவே மூலச் சிங்களப்பிரதி கிடைக்காத வரையில் இவற்றை அவரது தனிப்பட்ட மொழியாக்கம் என்றே கொள்ளவேண்டும்.
  50. ஆழப்பட்ட, திருத்தப்பட்டுள்ளது.

உசாத்துணை

  1. கணபதிப்பிள்ளை, சி. (1971). மகாமாரித் தேவி திவ்விய கரணி, யாழ்ப்பாணம்:விவேகானந்தா அச்சகம்.
  2. கமலநாதன், சா.இ. கமலநாதன், கமலா. (2005). மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், கொழும்பு – சென்னை:குமரன் புத்தக இல்லம்.
  3. சுலைமான், ல. (2015). இறக்காமம் வரலாறு சமூகம் வாழ்வியல். இறக்காமம்: அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளனம்.
  4. பத்திநாதன், க. (2022). கடலோர வேட்டுவ சமூகங்களுள் காணப்படும் குடிவழமைகள். எழுநா, https://ezhunaonline.com/இலிருந்து மீள்விக்கப்பட்டது.
  5. பத்மநாதன், சி. (1976). நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு. மட்டக்களப்பு மகாநாடு நினைவு மலர், மட்டக்களப்பு: அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற மட்டக்களப்பு மகாநாட்டு அமைப்புக்குழு. பப. 82-90.
  6. Census (1816). Return of the Population of the Maritime Districts of Ceylon. Colombo: The Government Press.
  7. Nevill, H. (1887a). “Nadukadu Record”. Taprobanian (August 1887), pp. 128.
  8. Nevill, H. (1887b). “Nadukadu Record”. Taprobanin (October 1887), pp. 137-141.


ஒலிவடிவில் கேட்க

7982 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)