Arts
17 நிமிட வாசிப்பு

அரசாளும் தொழில் : மத ஒழுக்கமும் மண் பற்றும் – கலாநிதி சரத் அமுனுகம அவர்களின் ஆய்வுக் கட்டுரை ஒரு சுருக்க அறிமுகம் – பகுதி 2

August 24, 2023 | Ezhuna

‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத் தொடரில் நோக்கப்படும்.  கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜே. தம்பையா, எச். எல். செனவிரத்தின, கித்சிறிமலல் கொட, சரத் அமுனுகம, ஜயதேவ உயன்கொட, குமாரி ஜயவர்த்தன, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இலங்கையின் சமூக விஞ்ஞானிகளின் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் , ஹவ்வார்ட் றிஜின்ஸ், உர்மிலா பட்னிஸ், றிச்சார்ட் கொம்பிரிட்ஜ், யொனதன் ஸ்பென்சர் முதலிய இலங்கையரல்லாத ஆய்வாளர்களின் ஆய்வுகள் சிலவும் இந்தக் கட்டுரைத்தொடரில் விமர்சன நோக்கில் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

ஆங்கில மூலம் : கலாநிதி சரத் அமுனுகம

கத்தோலிக்க இயக்கத்திற்கு எதிர்ப்பு

இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களை ஈர்ப்பதற்கு கத்தோலிக்கமும், கிறீஸ்தவப் பிரிவுகளும் போட்டியிட்டன. இது பௌத்த பிக்குகளின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வை தோற்றுவித்தது. 1950 களில் பௌத்தர்கள் கத்தோலிக்க மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அக்காலத்தில் “Catholic Action” (கத்தோலிக்க இயக்கம்) என்ற அச்சுறுத்தல் பற்றிய பேச்சு அரசியலில் முதன்மை பெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி பௌத்தர்களின் பாதுகாவலன் என்ற வகிபாகத்தை அவ்வேளை ஏற்றுக் கொண்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் கத்தோலிக்க பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டன. அரச வைத்தியசாலைகளில் கன்னியாஸ்திரிகள் “நர்ஸ்” எனும் மருத்துவத் தாதியர் தொழில் செய்வது தடைசெய்யப்பட்டது. பௌத்தர்களுக்கு நிர்வாகத்துறையில் உயர் பதவிகள் வழங்கப்பட்டன. இராணுவத்தின் உயர் பதவிகளில் பௌத்தர்கள் நியமிக்கப்படனர். இவை போன்ற பல நடவடிக்கைகளை சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் அக்காலத்தில் மேற்கொண்டதை சரத் அமுனுகம எடுத்துக்காட்டுகிறார். 1972 இல் புதிய அரசியல் யாப்பு பௌத்தத்திற்கு முதன்மை இடம் வழங்கியமை இந் நடவடிக்கையின் உச்சமாக அமைந்தது.

சிறிலங்கா சுதந்திர கட்சி சென்ற பாதையில், ஐக்கிய தேசியக் கட்சியும் பௌத்த மதத்தின் காவலனாக செயற்படத் தொடங்கியது. 1977 பொதுத் தேர்தலின் பின்னர் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் “தர்மிஷ்ட சமுதாயத்தை” (Righteous Society) உருவாக்கப் போவதாக அறிவித்து, அரசியல் களத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு போட்டியாக பௌத்த நலன்களின் பாதுகாவலன் வகிபாகத்தை எடுத்துக் கொண்டது. ஆயினும் புதிய சூழலில் கத்தோலிக்கம் இருகோணங்களில் இருந்து பௌத்தத்திற்கு அச்சுறுத்தல் விடுத்ததென சரத் அமுனுகம குறிப்பிடுகிறார்.

  1. வடபகுதியில், மன்னார் போன்ற இடங்களில் கத்தோலிக்க குருமார் தமிழ்த் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
  2. கத்தோலிக்கத்தில் புதிதாக மேற்கிளம்பிய விடுதலை இறையியல் (Liberation Theology) தத்துவம் சமூக மட்டத்தில் செல்வாக்கைப் செலுத்தியது.

1950 களில் “கத்தோலிக்க” இயக்கம் என்ற அச்சுறுத்தல் கத்தோலிக்க உயர் பீடங்களில் இருந்து எழுந்தது. ஆனால் விடுதலை இறையியல் தத்துவம் இளம் தலைமுறைக் கத்தோலிக்க பாதிரிமாரிடமிருந்து எழுந்தது. தென்பகுதியின் கிராமம் ஒன்றில் வாழ்ந்த கத்தோலிக்க மதகுரு ஒருவரின் நடவடிக்கைகளை ஒரு கட்டுரை பின்வருமாறு விபரித்தது.

“ஏழை ஒருவனின் வீட்டில் கத்தோலிக்க மத குரு தங்கி இருக்கிறார்; சைக்கிளில் ஓடித் திரிகிறார். அவர் கிராமத்து பாடசாலையின் ஆசிரியராகவும் இருக்கிறார். பாடசாலைப் பிள்ளைகள் அவரைக் கண்டதும் மகிழ்ச்சி பொங்க வரவேற்கின்றனர். அவர் உடைகள், பாலுணவு, மருந்துகள் என்பவற்றைக் கொண்டு வந்து கொடுப்பதோடு கோழி வளர்ப்பதற்கான கோழிக்கூடுகளை பரிசளிக்கிறார்.”

இவ்வாறு விபரித்துச் செல்லும் கட்டுரையின் முடிவில் “இது வறிய மக்கள் மீதான சமய வேட்டையாடல் ஆகும். இவை நாட்டின் அமைதிக்கு வழி வகுக்குமா?” என்று வினா எழுப்புவதையும் இது பௌத்த உயர் தலைமைக் குரு ஒருவரால் எழுதப்பட்டதெனவும் சரத் அமுனுகம குறிப்பிடுகிறார். இளம் பௌத்த துறவிகளின் மனதில் கத்தோலிக்கம் உட்பட பிற மதங்களின் நடவடிக்கையால் பாதுகாப்பின்மை உணர்வு வலுப்பட்டு இருப்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார்.

அரசியல் அதிகாரத்தை பலாத்கார வழியில் பெறுதல்

மக்கள் விடுதலை முன்னணியின் 1971 ஆம் ஆண்டுக் கிளர்ச்சியும், 1987 – 89 காலத்தில் அது நடத்திய போராட்டமும் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகளே என்பதில் ஐயமில்லை. 1971 ஆம் ஆண்டின் கிளர்ச்சி பற்றி சமூகவியலாளர் கணநாத் ஒபயசேகர கூறியிருப்பதை சரத் அமுனுகம மேற்கோளாகத் தந்துள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு,

“1971 ஆண்டில் ஏற்பட்ட கிளர்ச்சி இளைஞர்கள் சமூகத்தின் கிளர்ச்சி என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விடயம். இந்தக் கிளர்ச்சியில் தீவிரமாக பங்குபற்றியோரில் பெரும்பான்மையினர் ஆண்கள். புள்ளி விபரங்களை ஆராய்ந்து பார்த்தால் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சியாளர்களில் பெரும்பான்மையினர் சிங்கள பௌத்தர்களாவர்.”

1971 கிளர்ச்சியில் பங்கேற்றவர்களின் சமூகப் பின்புலம் பற்றி கணநாத் கூறியிருப்பவை 1987-89 கிளர்ச்சியை இயக்கிய இளைஞர் கூட்டத்திற்கும் பொருத்தமானது என சரத் அமுனுகம கூறுகிறார். பௌத்த பிக்குகள் எதிர்கொண்ட இருதலைப்பொறிவாத நிலையை  (Dilemma) சரத் அமுனுகம நான்கு கோணங்களில் பகுப்பாய்வு செய்கிறார்.

  • ஜே.வி.பி (JVP) என்னும் மக்கள் விடுதலை முன்னணியும், பிக்குகளும்.
  • பிக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும்.
  • பிக்குகளின் அமைப்பான ‘சங்க’வின் வெவ்வேறு படிநிலைகளில் பலாத்காரம்  என்ற விடயம் நோக்கப்பட்டமையில் உள்ள வேறுபாடுகள் (Difference in Perception of Violence).
  • பிக்குகளும், உயிர்கொல்லி ஆயுதக் குழுக்களும் (Death Squads).

1971 இல் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியில் பிக்குகளின் பங்கேற்பை விட, 1987-89 காலத்தில் அவர்களின் பங்களிப்பு அதிகரித்திருந்தது. 1983 இன் தமிழர் எதிர்ப்பு கலகத்தின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணியை அரசாங்கம் தடை செய்தது. அதன் தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஒழுங்கமைப்பு வேலைகளில் இளம் பிக்குகள் முக்கியமான இடத்தை பெற்றனர்.

பிக்குகளின் ஒழுங்கமைப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் 3 முன்னரங்கு அமைப்புகளில் (Fronts) பிக்குகள் முக்கிய இடத்தைப் பெற்றனர்.

  • பல்கலைக்கழக மாணவர்களும், உயர் வகுப்பு மாணவர்களும் கொண்ட மாணவர் அமைப்புகள்.
  • பௌத்த பிக்குகளின் அமைப்புகள்.
  • பெண்களின் அமைப்புகள்.

ஒவ்வொரு அமைப்பிற்கும் தனித்தனியான யாப்பு விதிகள் வகுக்கப்பட்டன. ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு உத்தியோகப் பதவிகள் இருந்தன; தனித்தனி வரவு செலவு திட்டம் இருந்தது. ஒவ்வொரு பிரிவினதும் பிரசுரப் பகுதியும் தனித்தவையாக இயங்கின.

மக்கள் விடுதலை முன்னணி ஐந்து வலயங்களைக் கொண்ட ஒழுங்கமைப்பைக் கொண்டிருந்தது.

  1. மேற்கு, சப்பிரகமுவ வலயம
  2. மத்திய வலயம்
  3. ரஜரட்ட வலயம்
  4. ஊவா – கிழக்கு வலயம்
  5. தெற்கு வலயம்.

வலயப் பிரிவுகளுக்குள் மாவட்டம், உபமாவட்டம் என பிரிவுகளும் இருந்தன. மக்கள் விடுதலை முன்னணியின் பிக்குகள் அமைப்பும் இவ்வாறான வலைப்பின்னல் அமைப்பைக் கொண்டதாய் செயற்பட்டதை சரத் அமுனுகம விபரிக்கிறார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பலாத்கார அரசியல் பாதையில் இளம் பிக்குகள் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதை சரத் அமுனுகம விரிவாக விளக்கிச் செல்கிறார். ஏறக்குறைய பன்னிரெண்டு பக்கங்களில் (பக்.265-276) விபரித்துக் கூறியிருப்பதை முழுமையாக இங்கு தருதல் சாத்தியமற்றது. இளம் பிக்குகளுக்கும் சங்க அமைப்பின் தலைமை பீடத்திற்கும் ஏற்பட்ட விரிசல் பற்றிய தகவல்கள் முக்கியமானவை. சங்கவின் தலைமைப் பீடம் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி என்று இரு பிரதான கட்சிகளின் ஆதரவாளர்களான பிக்குகளைக் கொண்டதாக இருந்தது. இதனால் இளம்பிக்குகள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்ததோடு அமையாது, சங்கவின் தலைமைப்பீடத்திற்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்தனர். இந்த நெருக்கடியை இக்கட்டுரை மிகவும் தெளிவான முறையில் விளக்கியுள்ளது. வாசகர்கள் ஆங்கில மொழியில் இதனை படித்தறிந்து கொள்ளுதல் பயனுடையது.

கட்டுரையின் இறுதியில் சரத் அமுனுகம அவர்கள் முடிவுரையாக கூறியிருக்கும் கருத்துக்கள் இளம் பிக்குகள் கிளர்ச்சிவாத மக்கள் விடுதலை முன்னணியின் பக்கம் சார்ந்ததன் விளைவுகளை சமூகவியல் நோக்கில் விளக்குவனவாக உள்ளன.

1. இலங்கை நெருக்கடி பற்றி எழுதியவர்கள் பலர், சிங்கள பௌத்த துறவிகளின் அமைப்பான ‘சங்க’வை ஒருமைத் தன்மையுடைய கட்டுக்கோப்பான அமைப்பாகச் சித்தரித்துள்ளனர். இதனை இனக்குழும அரசியல் என்பன தொடர்பான தெளிவான கொள்கையுடையதும், ஒருமித்த குரலில் பேசும் தன்மையுடையதுமான அமைப்பாக காட்ட முனைந்துள்ளனர். யதார்த்தத்தில் உண்மைநிலை வேறானது. சங்கவைச் சேர்ந்த துறவிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு அமைப்புகளில் சேர்ந்து செயற்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான நிகழ்ச்சி நிரல்கள் உள்ளன.

2. சிங்கள மக்கள் பௌத்தத்தின் காவலர்கள் என்ற கருத்து துறவிகள் மனதில் ஆழப்பதிந்துள்ளது. அவர்கள் பௌத்தத்தின் எதிரிகளை எதிர்கொள்வதற்கு பலாத்காரத்தைக் கருவியாக பயன்படுத்துவதை நியாயப்படுத்தும் மனப்போக்கை வெளிப்படுத்துகிறார்கள். பௌத்தத்தின் அடிப்படையான நெறிமுறைகளுக்கு எதிரானது பலாத்காரம் என்பதைத் தெரிந்திருந்தும் அவர்கள் அதனை நியாயப்படுத்துகிறார்கள். பாளி நூல்களில் பௌத்த சங்க அமைப்புக்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான பிணைப்புப் பற்றி கூறப்பட்டுள்ளதை துறவிகள் முன்னுதாரணமாக கொள்கின்றனர்.

3. பிக்குகளுக்கு வழங்கப்படும் கல்வியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. குறிப்பாக பிரிவேனாக்களிலும், பல்கலைக்கழகங்களிலும் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி, மரபு வழியாக பிக்குகள் பெற்று வந்த கல்விக்கு மாறுபட்டது. சங்கவிற்கு ஆட்சேர்ப்பு செய்யும் முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தக் காரணங்களால் கிளர்ச்சிவாதத்திலும், சமூகம் சார் விடயங்களிலும் அக்கறை கொண்ட இளம் பிக்குகள் சங்க அமைப்பில் சேர்ந்து கொள்கிறார்கள். இதனால் மக்கள் விடுதலை முன்னணிக்கான ஆதரவுத் தளம் அதிகரித்து செல்கிறது. அரசு கிளர்ச்சியை அடக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டபோது கிளர்ச்சியின் ஆதரவாளர்களான பிக்குகள் மீதும் வன்முறை பிரயோகிக்கப்பட்டது. இவ்வேளை வன்முறையை வன்முறையால் எதிர்கொள்வதென்ற நடைமுறை அரசியல் (Real Politic) நியாயத்தை பிக்குகளும் எதிர்கொண்டனர்.

4. சமூகப் புரட்சியில் (Social Revolution) பற்றும் நம்பிக்கையும் உடையவர்களாக விளங்கும் இளம் பிக்குகள் மக்கள் விடுதலை முன்னணி பலாத்காரத்தை பிரயோகிப்பதை ஆதரித்தனர். அதுமட்டுமல்லாமல் தமது துவராடையை களைந்துவிட்டு துப்பாக்கியை ஏந்தவும் இளம்பிக்குகள் முன்வந்தனர். கிளர்ச்சிவாதப் பிக்குவை சுயநலமற்றவராகவும், சமூக உளவியல் விடயங்களில் மக்கள் நலன் நோக்கில் தலையீடு செய்பவராகவும் கருதும் பௌத்த தத்துவ நோக்காக இதனை விளக்கலாம்.

5. பௌத்த துறவிகள் சமூக யதார்த்தத்தை (Social Reality) பௌத்த குறியீடுகள் மூலம் புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதைக் காணமுடிகிறது. சமய சார்பற்ற விடயங்களான இனக்குழுமம் (Ethnicity), ஜனநாயகம், புரட்சியும் வன்முறையும் போன்ற கருத்தாக்கங்களை அவற்றின் சமூக அரசியல் பின்புலத்தில் புரிந்து கொள்வதற்கு பதிலாக பௌத்த குறியீட்டியல் (Buddhist Symbolism) ஊடாக புரிந்துகொள்வதற்குத் துறவிகள் பழக்கப்பட்டுள்ளனர். இது சமூக அரசியல் நிலமைகளை சமயப் பண்பாட்டின் வழி புரிவதும் ஆகும். அரசு அதிகாரத்தை எதிர்கொண்டவர்களான வாரியப்பொல, குடஹாபொல போன்ற பிக்குகளை உதாரண புருஷர்களாக கொண்டு அரசு – சமய உறவு பற்றி விளக்கம் கூற முனைவதை உதாரணமாக குறிப்பிடலாம். பொதுவுடைமை என்ற அரசியல் சிந்தனையை, புத்தர் போதித்த துறவிகளின் குழு வாழ்க்கையின் விழுமியங்களை உதாரணம் காட்டி புரிந்துகொள்ள முனைகின்றனர். துறவிகள் தனியுடைமை என எவற்றையும் வைத்திருப்பதில்லை, தானமாகக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்ணுதல் ஆகியன பொதுவுடமைக்கு எடுத்துக்காட்டுகளாக கூறப்பட்டுள்ளன. இவ்வாறான விளக்கங்கள் சமகால அரசியல் சமூக பிரச்சினைகளை மிகை எளிமைப்படுத்திப் பார்த்தல் (Over Simplification) என்ற தவறுக்கு இடம் தருவதாக அமைகிறது.

6. புரட்சிகர அரசியலுக்கு துறவிகள் பிரவேசித்ததன் விளைவுகள் சங்க அமைப்பின் மதிப்பை குறைப்பதாக அமைந்தது. பிக்குகளின் கவர்ச்சி ஆளுமை இதனால் தேய்வுற்றது. பிக்குகளை கைது செய்தல், அவர்களின் துவராடையை களைந்து அவமானப்படுத்துதல், ஆயுதப் படைகளால் சுட்டுக் கொல்லப்படுதல் என்பன பிக்குகளின் கௌரவத்தைப் பாதிப்பனவாக அமைந்தன. 1987-89 கால அரசியல் குழப்பங்கள் பௌத்த பிக்குகளின் அரசியல் பிரவேசத்தின் பின் விளைவுகளை எடுத்துக்காட்டுவனவாய் அமைந்தன.

கலாநிதி சரத் அமுனுகம

sarath amunugama autobiography

இவர் இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராவார். இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகத்தில் சமூகவியலை சிறப்புப் பாடமாக கற்று பட்டம் பெற்ற இவர், அப்பல்கலைக்கழகத்தில் சமூக மானிடவியல் விரிவுரையாளராக முதலில் கடமையாற்றினார். பின்னர் சிவில் சேவையில் இணைந்து கொண்ட இவர், அமைச்சுச் செயலாளர் வரை பதவி உயர்வுகளைப் பெற்றுச் செல்வாக்கு மிக்க அதிகாரியாக விளங்கினார். ஏறக்குறைய 20 ஆண்டுகள் அரசு சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுக் கொண்டு அரசியல்வாதியாகி நிதியமைச்சு, கல்வி அமைச்சு, வெளிநாட்டு முதலீடும் பொது நிர்வாகமும் ஆகிய அமைச்சுக்களின் அமைச்சராக கடமையாற்றினார். இவர் பாரிஸ் நகரின் ‘ECOLE DES HAUTE ETUDES EN SCIENCE SOCIALE’ இல் மானிடவியல் கலாநிதிப் பட்டத்தை பெற்றார்.

இவர் தமது சுயசரிதையை இருபாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் முதலாம் பாகம் The Kandy man என்ற தலைப்பில் பிறப்பு முதல் அமைச்சுச் செயலாளராக உயர்ச்சி பெற்ற 1939-1977 கால வாழ்க்கை வரலாற்று நினைவுகளைப் பதிவு செய்வது.

BUDDHAPUTRA AND BUMIPUTRA? DILEMMAS OF MODERN SINHALA BUDDHIST MONKS IN RELATION TO ETHNIC AND POLITICAL CONFLICT எனும் கட்டுரை DREAMS OF CHANGE : LAND LABOUR & CONFLICT IN SRILANKA (2018) என்னும் நூலின் 7 ஆம் அத்தியாயமாக (பக்கம் 243 – 280) அமைந்துள்ளது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5967 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)